Friday, February 18, 2011

கேணி சந்திப்பு - இந்திரா பார்த்தசாரதி

பிப்ரவரி மாதம் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா கேணி சந்திப்பிற்கு வரப்போவதாக ஞாநி சொல்லியிருந்தார். சில காரணங்களால் டி.எம். கிருஷ்ணா வரமுடியாமல் போகவே தமிழின் மூத்த படைப்பாளி இந்திரா பார்த்தசாரதி வந்திருந்து இளம் வாசகர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 1975-ல் ஆங்கில பத்திரிகையின் நேர்முகத்திற்காக முதன் முதலில் இபா-வை சந்தித்க நேர்ந்த அனுபவங்களுடன், அவருடைய இலக்கிய பங்களிப்பை விரிவாகப் பேசி சந்திப்பினை தொடங்கி வைத்தார் ஞாநி.

கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், டில்லி யுனிவர்சிட்டியில் வைஷ்ண சித்தாந்தம் - ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்ற பொருளில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளிப் பருவத்தில் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவர். கல்லூரி நாட்களில் எழுத்தாளர் நகுலனின் ஒரு வருட அறைத் தோழர். டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக 1960-களில் பணியாற்றி வந்தவர். சிறுகதை, நாவல், நாடகம் என்று படைப்பிலக்கியத்தில் கிளைவிரித்துப் படர்ந்தவர். இவருடைய குருதிப்புனல் நாவல் 1978-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. சிறந்த நாடகங்களைப் படைத்தமைக்காக சங்கீத நாடக அகாடமி (2004) விருதினைப் பெற்றவர். இந்த இரண்டு அகாடமி விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி என்ற சிறப்பு இவருக்கு இருக்கிறது.

இவர் பத்மஸ்ரீ (2010) மற்றும் சரஸ்வதி சம்மான் விருது (1999), பாரதிய பாஷா பரிஷத் விருது (1996) தமிழக அரசு விருது (1980) கஸ்தூரி ஸ்ரீனிவாசன் விருது (1987) போன்ற முக்கியமான விருதுகளையும் பெற்றிருக்கிறார். கலைமாமணி விருதினை வேண்டாமென்று புறக்கணித்ததாக பாரதிமணியின் கட்டுரையில் படித்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய உச்சி வெயில் என்ற நாவல் படமாக்கப்பட்டு ஸ்வர்ண கமல் விருதை 1990இல் பெற்றுள்ளது. உச்சி வெயில் கதையை திரைப்படமாக்கிய சேதுமாதவனின் மகன் சந்தோஷ் 'நாயகன்' என்ற இபா-வின் சிறுகதையை குறும்படமாக்கி தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத் துறை இயக்குனராக சிலகாலம் பணிபுரிந்தவர். தனது மகனின் உதவியுடன் பச்சை அட்டை (Green Card) வாங்கிக்கொண்டு அமெரிக்காவில் குடியேறியவர். விரும்பும் பொழுது சென்னைக்கு வந்து சிலகாலம் தங்கிவிட்டுச் செல்கிறார். புத்தக வெளியீடுகளிலும், நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக இலக்கிய கூட்டங்களிலும் சமீப காலமாக இந்திரா பார்த்தசாரதியை பார்க்க முடிகிறது.

நடைபழகும் குழந்தை தத்தித் தத்தி தாவிக்கொண்டு வருவது போல வாசகர்கள் நிறைந்த கேணியின் அருகில் இபா வந்தமர்ந்தார். இலக்கிய கூட்டத்திற்காக இவ்வளவு நண்பர்கள் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. என்னுடைய முதல் நாடகத்தை(மழை) சென்னையில் மேடையேற்றிய ஞாநியும், டெல்லியில் மேடையேற்றிய பாரதி மணியும் அருகில் இருப்பது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

தன்னைத்தானே அடையாளம் கண்டு கொள்ளவோ அல்லது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவோ தான் எழுதுகிறோம். இந்த விஷயத்தில் எல்லோரையும் போலவே தான் நானும். முதலில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். கால ஓட்டத்தில் எழுத்தின் சாயல் மாறி வேறிடத்திற்கு வந்துவிட்டேன். இதில் என்னுடைய ஆசிரியர் தி ஜானகிராமனின் பங்கும் இருக்கிறது. ஒரு வகையில் அவரை முன்மாதிரியாகக் கொண்டும் வளர்ந்திருக்கிறேன். அதன் பின் ஆசிரியராகப் பணியாற்றி என்னுடைய மாணவர்களான ஆதவன், இடைவெளி சம்பத் போன்ற மாணவர்களும் பெரிதாக வந்திருக்கிறார்கள். ஒருமுறை சைவ சித்தாந்தம் பதிப்பகம் வெளியிட்ட 'சிலப்பதிகாரம்' என்ற புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிப்பகத்தாரிடமே விசாரித்ததில் புத்தகம் "out of print" என்றார்கள். ஒரு நல்ல புத்தகத்தின் நிலை இதுவாகத் தான் இருக்கிறது. இது நடந்தது 1952-களில். அந்த காலங்களிலேயே நிலைமை அதுதான். இப்பொழுதும் மாறியதாகத் தெரியவில்லை.

முதுநிலை படிக்கும் பொழுது நகுலனின் அறைத்தோழனாக இருந்திருக்கிறேன். அவரின் மூலம் ஏராளமான ஆங்கில இலக்கிய நூல்கள் அறிமுகமாகியது. ஆங்கிலத்தில் வாசிக்கப் பழக்கப்பட்டதே அவரிடம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் படிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வார். அதனைப் படித்திருக்கிறேன். பிற்பாடு அவருடைய படைப்புகளிலும் அந்த குறிப்புகளின் சாரத்தை உணர்ந்ததுண்டு. நகுலன் ஒரு தனிமை விரும்பி. கூட்டத்திலிருந்து விலகி இருக்கவே ஆசைப்படுவார். என்னை சந்திக்க ஏராளமான நண்பர்கள் வருவது அவருக்கு சங்கடமாக இருந்திருக்க வேண்டும். அடுத்த வருடம் அறையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நாங்கள் சேர்ந்து வசித்ததில்லை.

டெல்லியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் புதிதாக நாடகத் துறை ஆரம்பித்த போது அவர்களுடன் இணைந்துகொண்டேன். நாடகத்துறையின் இயக்குனராக என்னை நியமித்தார்கள். எனக்கு மற்ற படைப்புகளில் கவனம் செலுத்துவதைவிட நாடகத்தில் செயல்படுவது பிடித்திருக்கிறது.

பரதன் என்றால் நடிகன் என்று அர்த்தம். அவனுக்கு நூறு பிள்ளைகள் தேவலோகத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து நாடகம் போட்டார்கள். அதுவும் அரசியல் அங்கதத்துடன். அங்குள்ள ரிஷிகளுக்குக் கோவம் வந்தது. எப்பொழுதுமே ரிஷிகளுக்கு நகைச்சுவையை ரசிக்கத் தெரியாது. எல்லாவற்றையுமே தீவிரமாக அணுகக் கூடியவர்கள். எனவே நாடகம் போட்டவர்களுக்கு சாபம் கொடுத்தார்கள். "நீங்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியது. அங்கே நீங்கள் பிராமணர்களாக பிறந்தாலும் அதற்கான மதிப்பு உங்களுக்கு இருக்காது" என்று சபித்தார்கள். கவனித்துப் பார்த்தால் இதிலுள்ள நுண்ணரசியல் உங்களுக்கு புலப்படும். ஆகவே அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை. எல்லாமே அரசியல் தான்.

இலக்கியத்திற்கு மொழி இல்லை. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, ஜேர்மன் என்று எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். அவரவர் தாய் மொழியில் எழுதுவதே சிறப்பாக அமையும். ஒரு படைப்பை மொழிமாற்றம் செய்வதில் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது. 'உச்சி வெயில்' என்ற படமாக்கப்பட்ட என்னுடைய குறுநாவலான 'மறுபடியும்' என்ற படைப்பில் ஒரு வசனம் வரும். ஆங்கிலத்தில் மொழிமாற்றியபோது சரியாக வரவில்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.

"எந்தக் கடையில் பூ வாங்கினாலோ! அடுத்த வருஷமே வீட்டுக்கு வந்துட்டா..." - இந்த வார்த்தைகளை எந்த தொனியில் கூறினாலும், சொந்த மொழி கொடுக்கக் கூடிய அர்த்தத்தை வேறு எந்த மொழியாலும் கொடுக்க முடியாது.

ஒரு முறை தற்கால இலக்கியம் குறித்து ஆராய்ச்சி செய்ய ஒரு மாணவர் என்னிடம் வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை. புதுமைப்பித்தனைப் பற்றியும், அவருடைய கதைகள் பற்றிய கேள்விகளுக்குக் கூட சரியான பதில் இல்லை.நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன் ஒரு முக்கியமான ஆளுமை. அவரை படித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவர் என்னிடம் வரவில்லை. இறுதியில் அவர் தேர்வு செய்யப்பட்டு முனைவர் பட்டம் வாங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இது போல நிறைய பேர் வாங்கி இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பணியாற்றியபோதும் சில சுவாரஸ்யமான அனுபவங்கள் நேர்ந்ததுண்டு. வார்ஸா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதர்க்காக போலந்து சென்றேன். அப்பொழுது காலவரையற்ற ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் கூட கல்லூரிக்கு சென்று பாடம் நடத்தவில்லை. மாணவர்கள் என்னுடைய வீட்டிற்கே வந்து பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஏசுவின் தோழர்கள்.

தமிழை செம்மொழியாக்குகிறேன் என்று ஏதேதோ முயற்சி செய்தார்கள். உண்மையில் அதற்கான அவசியமே இல்லை. தமிழ் - செம்மொழி என்பதை மொழி வல்லுனர்கள் ஆமோதிக்கும் விஷயம். செம்மொழி ஆவதற்கு முன்பு வரை வெளிநாட்டிலுள்ள பல பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆய்வுத்துறை இருந்து நல்ல முறையில் செயல்பட்டது. செம்மொழியாக்கப்பட்ட பிறகு அவையெல்லாம் ஒவ்வொன்றாக காணாமல் போயின.

எழுதும் பொழுது வாசகனை முன்னிறுத்தி எழுதுவதில்லை. ஓர் அனுபவத்தை நேர்மையாக கொடுக்க முடிகிறதா என்று யோசிப்பேன். 70 வருட வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ள எவ்வளவோ அனுபவங்கள் இருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கலாம் என்றவாறு ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு பேசாமல் தான் கடந்து வந்த பாதையின் பசுமையான நினைவுகளையும், தமிழ் பேராசிரியராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கிடைத்த அனுபவங்களையும், இலக்கிய மற்றும் அரசியல் நிலைப்பாட்டையும் தாவித்தாவி கதம்பமாகப் பகிர்ந்து கொண்டார். இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவருடைய தன்மையில் பதில் கூறினார்.

இதுவரை எழுதிய மொத்த சிறுகதைகளும் (கிழக்கு), 17 நாவல்களும், 4 குறுநாவல் தொகுதிகளும், 15 நாடகங்களின் மொத்தத் தொகுப்பும் (கிழக்கு) விற்பனையில் கிடைக்கிறது. அவருடைய பல நாடகங்களும், நாவல்களும்வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இபா-வின் உரையாடல் ஒரே விழுமியத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கும் இங்கும் சென்றதால் எல்லாவற்றையும் ஞாபகம் இருத்தி எழுத இயலவில்லை. பி ஏ கிருஷ்ணன், இரா முருகன், அரவிந்தன், பாலபாரதி, அண்ணாகண்ணன், பாரதிதம்பி போன்ற பல எழுத்தாளர்களும் இந்த முறை கேணிக்கு வந்திருந்தார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

1. மலர்வனம் - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
2. அண்ணாகண்ணன் புகைப்படங்கள்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை தேடித்தேடி எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.