Thursday, April 14, 2011

கணையாழி திங்களிதழ் வெளியீடு

சிற்றிதழ் வரிசையில் முக்கிய இடம் வகிக்கும் கணையாழி கடந்த சில ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. மூத்த வாசகர்கள் பலருக்கும் இதில் வருத்தம். ஏனெனில் அதன் பாரம்பரியம் அந்த மாதிரி. சக்திகளை ஒன்று திரட்டி ஏசுநாதர் உயிர்த்தெழுந்தது போல கணையாழியும் மெருகேற்றப்பட்டு புதுப் பொலிவுடன் வெளிவருகிறது என்ற செய்தி பலரைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி அளித்தது. திங்களிதழின் வெளியீட்டு விழா தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14-04-2011) சென்னை தி நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது. இதழின் பிரதியை எழுத்தாளர் ஜெயகாந்தன் வெளியிட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்திரா பார்த்தசாரதியின் தலைமையில் விழா நடைபெற்றது. சுவாமிநாதன், தமன் பிரகாஷ், பாலகிருஷ்ணன் (Rtd I.A.S), ஓவியர் ட்ராஸ்கி மருது, நடிகர் நாசர், கவிஞர் நா.முத்துகுமார் மற்றும் குட்டி ரேவதி ஆகியோர் இதழின் சிறப்பு குறித்தும் தனித்தன்மை குறித்தும் உரையாற்றினார்கள்.

"தில்லியில் 1965-ல் கஸ்தூரிரங்கன் கணையாழியை தொடங்கும் போது அரசியல் இதழாகத்தான் இருந்தது. பிறகு நான், அசோகமித்ரன், சுஜாதா போன்றோர் சேர்ந்தபிறகு அது இலக்கிய இதழாக மாற்றம் அடைந்தது" என்று ஆரம்பம் முதல் இதழின் வளர்ச்சி பற்றியும், கை மாறியது பற்றியும் இந்திரா பார்த்தசாரதி சுருக்கமாகப் பேசினார். கடைசியாக "இப்போதுள்ள இதழ்களில் ஒரு சிறுகதைக்கு மேல் பிரசுரமாவதில்லை. குறுநாவல்களைப் பார்க்க முடிவதில்லை. நீண்ட நாவல்களுக்கான இடமும் இல்லாமலே இருக்கிறது. இது போன்ற குறைகளைப் போக்கும் வகையில் கணையாழி இதழ் இருக்கும். கணையாழிக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு" என்று பகிர்ந்துகொண்டார். அதுபோலவே புத்திதழின் பொறுப்பாசிரியராகவும் தனது பொறுப்பை ஏற்றுள்ளார்.

"கணையாழி என்பதை அணிகலன் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அது நம்பிக்கையின் அடையாளம் என்பதற்கான சான்றுகள் நிறையவே இருக்கிறது. கஸ்தூரி ரங்கன் இதழினை டெல்லியில் ஆரம்பித்தபோது இந்திரா பார்த்தசாரதி கணையாழியின் அடையாளமாக இருந்திருக்கிறார். தனது இல்லத்தின் முகவரியையே இதழின் அலுவலக முகவரியாக பயன்படுத்திக்கொள்ள சமதித்ததுடன், ஆசிரியராகவும் இருந்து சிறப்பித்திருக்கிறார். கணையாழியின் வளர்ச்சியில் இபா-வின் அக்கறை என்றுமே தனித் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கிறது என்பதை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த இதழின் மூலம் முகம் தெரியாத பலருக்கும் முகவரி கிடைத்திருக்கிறது. ஒருமுறை நடந்த கணையாழி ஆண்டுவிழாவில் சுஜாதா ஒரு கவிதையை வாசித்தார். இதை எழுதிய கவிஞர் இங்குகூட அமர்ந்திருக்கலாம் என்று சொல்லியபோது மெலிந்த தேகம் கொண்ட ஒருவர் எழுந்து நின்றார். உடனே அவரை மேடைக்கு அழைத்து ஆயிரம் ரூபாயை பரிசளித்தனர். பணத்தை வாங்கியவர் எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார். இதென்ன பரிசுத் தொகையைக் கூடவா ஏமாற்றுவார்கள்? இவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறாரே! என்று யோசனைகள் சென்ற பொழுது 500 ரூபாயை எண்ணி கணையாழிக்கே அன்பளிப்பாக திருப்பிக் கொடுத்து விட்டார். அவர்தான் நா முத்துக்குமார் என்றபோது கரகோஷம் அரங்கின் எட்டு திசையிலும் எதிரொலித்தது. கவிஞரும் இதயத்தில் கைவைத்து மரியாதையைப் பெற்றுக் கொண்டார். கணையாழி எப்போதும் ஒருவருடைய கைகளிலேயே இருப்பதில்லை. கை மாறிக்கொண்டே இருக்கும். இந்த இதழ் சரியானவர்களின் கைகளில் தான் சேர்ந்திருக்கிறது என்ற நிம்மதி எங்களுக்கிருக்கிறது. பல இதழ்கள் தமிழில் வெளிவருகின்றன. அவற்றுக்கு மத்தியில் தடைபட்டிருந்த கணையாழி மீண்டும் வெளிவருவது அவசியம்தானா? என்ற கேள்வி எழலாம். ஒரு விதையைப் போட்டவுடனே முளைத்து விடுவதில்லை. முளைவிட சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. அது போல்தான் இதுவும். கணையாழி விதையின் உறக்க காலத்தில் இருந்து இப்போது முளைத்திருக்கிறது. மீண்டும் விருட்சமாக வளரும்" என்று ம. ராஜேந்திரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக கமலஹாசனுக்கு முன்னோடி சகலகலா வல்லவரும், பல்துறை வித்தகருமான, சத்திய சீலர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. (இதனை ஹரன்பிரசன்னா படிக்க நேர்ந்தால் போராளி, மூதறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, எழுத்தாளர் இத்யாதி என்று சேர்த்துப் படிக்கவும்). ஓயாத தேர்தல் வேலைகளுக்கும், பாராட்டு நிகழ்ச்சிகளுக்கும் மத்தியில் இலக்கியத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். இலக்கிய நண்பர் ஜெயகாந்தனை மகிழ்விப்பதற்காக பாராட்டுக் கடிதத்தை அனுப்பியிருப்பாரோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. கலைஞரின் கரகரப்பில்லாத குரலாக ஒலித்தவர் நா சுவாமிநாதன் என்று நினைக்கிறேன்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ரெ பாலகிருஷ்ணன் I.A.S - கணையாழி குறித்தும், அதற்கு வாசகனாக இருந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார். "கணையாழியைக் கண்டெடுத்த நிர்வாகிகள், கைப்பிடித்த தாளாளர்கள், கண்டுபிடிக்கப்பட்ட படைப்பாளிகள் என மூன்று வகைகளில் கணையாழியைக் குறிப்பிடலாம். இடையில் வெளியீடு நின்றபோது எங்களுக்குள் ஒரு குற்றவுணர்வு எழுந்தது. அது இப்போது நிவர்த்தியாகி உள்ளது. இது போன்ற இதழுக்கு வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்" என்றார். மேலும் இணைய ஊடகத்தில் கணையாழியின் இருப்பை வளர்க்க வேண்டிய அவசியத்தை அழுத்தமாகப் பேசிவிட்டுச் சென்றார். சிறிது காலத்தில் கணையாழியின் இணையப் பக்கங்கள் வாசிக்கக் கிடைக்கலாம் என்று அவர் பேசியதிலிருந்து நம்புகிறேன்.

"பாம்பு தன்னுடைய தோலை உரிப்பதுபோல, மனிதனின் அதிகாரத்தையும், ஆளுமையையும் காலம் உரித்துவிடுகிறது. எஞ்சி இருப்பது மனிதனின் உணர்வு மட்டுமே. அவற்றின் சாரமாகத்தான் இதுபோன்ற சிற்றிதழ்களைப் பார்க்கத் தோன்றுகிறது." என்று கவிஞர் குட்டிரேவதியும் அவருடைய கருத்துக்களை முன்வைத்தார். மூத்த ஓவியர்களான தட்சிணா மூர்த்தி, ஆதி மூலம், பாஸ்கர் போன்றவர்களின் மூலம் கிடைத்த சிற்றிதழ் அறிமுகமும், முயற்சியின் அடிப்படையில் ஓவியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்தியதை பற்றியும் ட்ராஸ்கி மருது பகிர்ந்துகொண்டார். "ஆரம்ப நிலையில் இருந்த எனக்கு எப்படி வாய்ப்பளித்தார்களோ அதேபோல இளம் ஓவியர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமையை வெளிக்கொணரும் செயலை கணையாழி செய்யவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அடுத்ததாக நா முத்துக்குமார் சுஜாதாவை நன்றியுடன் நினைவுகூர்ந்து முகவரியையும், பரவலான கவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த கவிதையை வாசித்தார்.

தூர் - நா முத்துக்குமார்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

அடுத்ததாக நாசர் பேச அழைக்கப்பட்டபோது நேரம் கழித்து வந்ததற்கான வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். "விழா துவங்கி நன்றாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென வந்து சலசலப்பை ஏற்படுத்துவார்கள்" என்ற குற்றச்சாட்டு எப்பொழுதுமே நடிகர்கள் மீது இருக்கிறது. அந்த கெட்டப் பெயரை வாங்கக்கூடாது என்பதற்காகவே எந்த விழாவிற்கு அழைத்தாலும் சீக்கிரம் சென்றுவிடுவேன். இன்றுகூட சரியான நேரத்தில்தான் கிளம்பினேன். சென்னையின் Traffic பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னுடைய வீடு வளசரவாக்கத்தில் இருக்கிறது. சாலையின் ஒருபுறம் சுவர் வேறு எழுப்பி அடைத்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக அதற்கான காரணத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாலையை சுற்றிக் கொண்டு வந்ததில் கொஞ்சம் நேரமானது. மீண்டும் அந்த தடுப்புச் சுவரை கடக்கும்பொழுது காவி உடையில் ஒருவர் எகிறிக் குதித்தார். சிறிது நேரத்தில் வெள்ளை உடையணிந்த ஒருவரும் எகிறிக் குதித்தார். தலையில் குல்லாவேறு அணிந்திருந்தார். அவர்களின் மீது மோதிவிடக் கூடாது என்ற கவனுத்துடன் சென்றபோது ஒருவரின் இருசக்கர வாகனம் முன்னாள் வந்து நின்றது. என்மீது தவறில்லை என்றாலும் சண்டைக்கு வந்தார். அவரிடம் பேசியதில் கொஞ்ச நேரம் வீணானது. இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாளாம். அதன் காரணமாக ஆங்காங்கு கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அதுவும் வாகன நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது. இதுமாதிரி விழாக்கள் அம்பேத்கருக்கே பிடிக்குமா என்று தெரியவில்லை? இதற்கிடையில் தமிழ்ப் புத்தாண்டு குறித்த வாழ்த்துச் செய்திகளும் குறுஞ்செய்தியாக வந்துக் குவிகிறது. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழிகளில் இதுவும் ஒன்றா என்று தெரியவில்லை. அந்தக் குறுஞ்செய்திகளை யாருக்கு அனுப்புவது என்றும் தெரியவில்லை.

"டேய் பொய் சொல்லாதடா. பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காது" என்று அம்மா சொல்லிச் சொல்லி வளர்த்தாள். அப்பாவிற்கு சும்மா இருந்தால் பிடிக்காது. ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். "எரும்பப் பாருடா. கொஞ்ச நேரம் சும்மா இருக்குதா? அந்த மாதிரி இருக்கணும்" என்று ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார். அப்பா, நகைக்கு மெருகேற்றும் வேலையை செய்ததால் தண்ணீர் ஏராளமாகத் தேவைப்படும். எனவே தண்ணீர் சேகரிக்கும் வேலையைத் தான் கொடுப்பார். பள்ளியிலும் "டேய் நல்லா படிங்கடா. அப்பத்தான் வாழ்க்கையில முன்னுக்கு வர முடியும்" என்று ஆசிரியர்கள் வழிநடத்துவார்கள். இந்த ஒழுக்கத்திற்கு நிகரான பண்பை இலக்கியமும் எனக்கு கற்றுக் கொடுத்தது. சினிமாவில் வாய்ப்புத் தேடிய ஆரம்பத்தில், கையில் கணையாழியை சுற்றி வைத்துக்கொண்டு மேதாவி என்பதுபோல அலைந்திருக்கிறேன். படிப்பவர்களின் அடையாளமாக இதுபோன்ற சிற்றிதழ்கள் இருந்திருக்கிறது. நான் சார்ந்த சினிமாத் துறையிலுள்ள குறையையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

என்னிடம் வாய்ப்புகேட்டு வருபவர்களிடம் ஏதாவது புத்தகம் கொடுத்து, முழுவதும் படித்துவிட்டு ஒருவாரம் கழித்து வந்து சந்திக்குமாறு சொல்லுவேன். அப்படிதான் ஒருவருக்கு ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பையும், நாவலையும் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் சொல்லிய பதில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"இதெல்லாம் யாருசார் படிப்பாங்க. மைன்ட் மாறிடும் சார்" என்றார்.

"மைன்ட் மாறினா நல்லதுதானே. படிங்க"-ன்னு சொன்னேன்.

"போங்க சார். வேற ஏதாச்சும் புக்ஸ் இருந்தா கொடுங்க சார்" என்றார்.

"சரி... நாளைக்கு வந்து வாருங்கள்" என்று திருப்பி அனுப்பினேன். அதே புத்தகத்தின் முன் அட்டை, பின் அட்டை, பதிப்பகத்தின் முகவரி என்று எல்லாவற்றையும் நீக்கிவிட்டு அவரிடம் கொடுத்தனுப்பினேன். அந்த கால புத்தகங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தாளரின் பெயர் இருக்காது. ஒருவாரம் கொடுத்து படித்துவிட்டு வருமாறு சொல்லியிருந்தேன். ஐந்தே நாட்களில் அவரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.

"எவன் சார் இந்தக் கதைகளை எழுதியது. ஒவ்வொருக் கதையையும் ஒரு படமா எடுக்கலாம் போல" என்றார்.

"டேய்... நீ யாரப் படிச்சா மைன்ட் மாறிடும்னு சொன்னியோ அவரோட புத்தகங்கள் தான் அது" என்றேன். அது எப்படி காதால் கேட்கும் விஷயத்தை வைத்து, மற்றவர்கள் சொல்லுவதை வைத்து ஒரு புத்தகத்தை மதிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே இளைஞர் நிறைய வாசித்து, இன்றைக்கு சினிமா எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்பது வேறு விஷம். என்றாலும் சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள். எனவே மன மாற்றத்தைக் கொண்டு வர இது போன்ற இதழ்கள் அவசியம். வாய்ப்புத் தேடிய காலத்தில் கணையாழியை எப்படி சுருட்டி வைத்துக் கொண்டு சென்றேனோ, அதேபோல நாளைக்கு சூட்டிங்க்கிற்கு செல்லலாம்" என்று உரையை நிறைவு செய்தபோது உற்சாகமான கைதட்டலைப் பெற்றார்.

"கணையாழியில் நான் எழுதியது இல்லை. ஆனால், என்னைப் பற்றிகணையாழியில் எழுதி இருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் தொடாத விஷயமே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். பேசிப்பேசி அலுத்துவிட்டது. எனவே விலகி நின்று அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கத் தோன்றுகிறது. எழுதி எழுதியும் அலுத்துவிட்டது. எனவே அடுத்தவர்கள் எழுதுவதை வாசிப்பதில் விருப்பம் அதிகமாகிறது. தடைப்பட்டிருந்த கணையாழி இதழ் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியே. இதன் மூலம் பல வாசகர்களின் ஏக்கத்தை நண்பர்கள் தீர்த்துவிட்டனர். இதுவரை இல்லாத சிறப்பு கணையாழிக்கு வரும். இது என்னைக் கூட எழுத வைக்கும்" என்று சொல்லி ஜெயகாந்தன் நிறுத்தியபோது அரங்கம் அதிர்ந்தது.

கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் சேது சொக்கலிங்கம் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.

நீண்ட நாட்களுக்குப்பின் மலேசிய நண்பர் விக்னேஸ்வரன் gtalk-ல் பேசினார். அவரிடம் கணையாழி வருவது குறித்து தெரியப்படுத்தினேன்.

"மகிழ்ச்சியே... இருந்தாலும் கடைசி பக்கங்கள் இருக்காதே நண்பா" என்றார்.

அவரைப் போன்ற தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு கணையாழியானது, கடைசி பக்கத்திற்கு முன்பக்கத்துடன் முடிந்துவிடும் என்பதும் நிதர்சனமே...

சந்தா விவரம்:

ஆண்டு சந்தா - 220 ரூ (இந்தியா) - 30 யூ எஸ் டாலர் (வெளிநாடு)
இரண்டு ஆண்டு சந்தா - 440 ரூ (இந்தியா) - 50 யூ எஸ் டாலர் (வெளிநாடு)
ஆயுள் சந்தா - ரூ 5000 (இந்தியா) - 300 யூ எஸ் டாலர்.

தொடர்பிற்கு: kanaiyazhi2011@gmail.com

முகவரி:
கவிதா பப்ளிகேஷன்ஸ்,
மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,
தியாகராயநகர், சென்னை - 17
தொலைபேசி: 2436 4243, 2432 2177

8 comments:

 1. //அடுத்ததாக கமலஹாசனுக்கு முன்னோடி சகலகலா வல்லவரும், பல்துறை வித்தகருமான, சத்திய சீலர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.//

  செமிக்குமாய்யா இந்தப் புகழாரம்???

  ReplyDelete
 2. சிறப்பான தொகுப்பு நண்பரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. //(இதனை ஹரன்பிரசன்னா படிக்க நேர்ந்தால் போராளி, மூதறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, எழுத்தாளர் இத்யாதி என்று சேர்த்துப் படிக்கவும்//

  அதான பாத்தேன்.

  கணையாழியின் கடைசிப் பக்கங்கள் மட்டுமே இதுவரை வாசித்திருக்கிறேன். இப்போது கணையாழியையே படிக்க ஒரு வாய்ப்பு.

  ReplyDelete
 4. /-- செமிக்குமாய்யா இந்தப் புகழாரம்??? --/

  செமிக்கும்ன்னுதான் செய்யறோம். ஆலகால விஷம் மாதிரி தொண்டையோட புடிச்சி நிருத்திடுரீன்களே.

  :-)))

  ReplyDelete
 5. உங்கள் மின்னஞ்சல் கண்டேன், நன்றி கிருஷ்ண பிரபு. கணையாழி புகைப்படம் எங்கள் தினமணி புகைப்படக் கலைஞர் கணேஷ் எடுத்தது.

  ReplyDelete
 6. புகைப்படக் கலைஞர் கணேஷிடம் என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடுங்கள் மபா. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திக்கலாம்.

  :-)

  ReplyDelete
 7. சிறப்பான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. நன்றி கிருஷ்ண பிரபு. உங்கள் எழுத்து லாவகமாக ரசிக்கும் படி இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது சிந்திப்போம்.
  அன்புடன்
  -தோழன் மபா

  ReplyDelete