கடந்த வருடம் முழுவதும் எழுத்தாளர்களால் நிரம்பி வழிந்த கேணி சந்திப்பு, இந்த வருடம் இசைத் துறையில் பங்காற்றி வரும் முக்கியமானவர்களை சந்திக்க இருக்கிறது. அதன் தொடக்கமாக செப்டம்பர் 19-ஆம் தேதி சேர்ந்திசை நடத்துனர் திரு அகஸ்டின் பால் அவர்களும், Sep -19 MB ஸ்ரீநிவாஸ் அவர்களின் பிறந்த தினம் என்பதால் சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவினரும் கலந்து கொண்டார்கள். சேர்ந்திசையை இந்தியப் பாரம்பரிய இசையுடன் கலந்து வழங்கியவர்களில் MBS முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகஸ்டின் பால் உரையாடலைத் தொடங்கி வைத்தார். வந்திருந்த அனைவரையும் எழுந்து நின்று 'வணக்கம்... வணக்கம்...' என்று குழுவாகச் சொல்ல வைத்தார். எல்லோரும் சேர்ந்து எழுப்பிய ஒழுங்கில்லாத குரல்கள் இங்கும் அங்கும் ஒலித்தன. சேர்ந்திசைக் குழுவினரையும் எங்களுடன் சேர்ந்து கொள்ளச் சொன்னார். choir music-ல் பயிற்சி பெற்ற ஆண்களும் பெண்களும் தனித் தனியாகச் சேர்ந்து எங்களுடைய குரலுக்கு உயிரும் வடிவமும் கொடுத்தார்கள். 'வணக்கம்' என்ற சொல் தன்னுடைய உன்னத நிலையை அடைந்து நிலைபெற்று பின் தேய்ந்தது.
சேர்ந்திசை என்பது என்ன? - என்பதற்கு எளிமையான விளக்கம் கொடுத்தார்.
கோவிலில் இந்துக்கள் கூடுகிறார்கள். வேத ஸ்தோத்திரங்கள் பாடுகிறார்கள். மடாலயத்தில் கிருத்துவர்கள் கூடுகிறார்கள். வேதகாம தோத்திரங்களை பாடுகிறார்கள். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுகிறார்கள். மந்திரம் ஓதுகிறார்கள். வாழ்விடங்களுக்குத் திரும்பி அவர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் அல்லவா அதுபோலத் தான் சேர்ந்திசையும். ஒன்றுக்கும் மேற்பட்ட தனித் தன்மையான மனிதக் குரல்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியோ, ஒன்றின் இடையில் ஒன்றை ஊடுருவவிட்டோ, ஒரே நேரத்தில் சேர்த்தோ பயன்படுத்தி ஓர் இசை வடிவத்தை அமைப்பதுதான் சேர்ந்திசை. மேற்கத்திய சேர்ந்திசைத் தொகுப்புகளின் சிறு வடிவங்களை ஒவ்வொன்றாக ஒலிக்க வைத்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சேர்ந்திசை என்பது கூட்டமாக கும்மியடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழ்ப் பாடல்களில் 'ஹம்மிங்'கிற்காக மட்டுமே பயன்படுத்தும் கூட்டு ஒலிகள் தனி வகையான செவ்வியல் என்று தெரிய வந்தபொழுது ஆச்சர்யமாக இருந்தது. அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிகழ்ச்சியைக் காண 60 டாலர் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்க வேண்டி இருக்குமாம். சென்னையில் மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடக்குமாம். அனுமதி இலவசம் என்பது கூடுதல் தகவல்.
மெலடி (Linear), ரிதம் (Cyclic), ஹார்மனி (Vertical) என்ற வடிவங்கள் இசையில் இருக்கிறது. சேர்ந்திசை ஹார்மனியைச் சார்ந்தது. இதில் பல டெக்னிக் இருக்கிறது. முக்கியமாக ஹோமொஃபோனிக் (எல்லோரும் சேர்ந்து பாடுவது) , போலிஃபோனிக் (குழுக் குழுவாக பிரிந்து பாடுவது) என்ற இரண்டைச் சொல்லலாம். அதிலும் S1, S2, S3, HT, MT என்று குழுக் குழுவாக பிரித்து பாடுகிறார்கள். குரல் தன்மையின் அடிப்படையில் இவர்களைப் பிரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த டெக்னிகலான விஷயத்தை விளக்கும் பொருட்டு அகஸ்டின் பால் ஒலிபரப்பிய பாடல்கள் மயிர்கூச்செறிய வைத்தது. ஒரு பெண்ணின் குரல் கருவியின் இசையிலும், பட்சியின் குரலிலும் கூர்மையாக வெளிப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை யூத் கோயர்ஸ் கலைஞர்களின் முகத்தைப் பார்த்தேன். விஸ்வரூபத்தைக் கண்ட அர்ஜுனன் போல பரவச நிலையில் இருந்தார்கள். இந்தக் கோடியில் உள்ள கலைஞர்கள் அந்தக் கோடியிலுள்ள கலைஞர்களுடன் சந்தோஷத்தைக் கண்களாலேயே பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த டெக்னிகலான விஷயத்தை விளக்கும் பொருட்டு அகஸ்டின் பால் ஒலிபரப்பிய பாடல்கள் மயிர்கூச்செறிய வைத்தது. ஒரு பெண்ணின் குரல் கருவியின் இசையிலும், பட்சியின் குரலிலும் கூர்மையாக வெளிப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை யூத் கோயர்ஸ் கலைஞர்களின் முகத்தைப் பார்த்தேன். விஸ்வரூபத்தைக் கண்ட அர்ஜுனன் போல பரவச நிலையில் இருந்தார்கள். இந்தக் கோடியில் உள்ள கலைஞர்கள் அந்தக் கோடியிலுள்ள கலைஞர்களுடன் சந்தோஷத்தைக் கண்களாலேயே பகிர்ந்துகொண்டார்கள்.
முன்னதாக ஸ்கார்ப் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நான்கு நண்பர்கள் சேர்ந்து சில லட்சங்களை நன்கொடையாக வழங்கினார்கள். அதன் தலைவர் டாக்டர் தாரா பெற்றுக்கொண்டு நிறுவனத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சேர்ந்திசை கலைஞர் MB ஸ்ரீநிவாஸ் பற்றியும், அவருடைய மகன் கபீர் ஸ்ரீனிவாஸ் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள். அகஸ்டின் பால் பேசியதின் தொடர்ச்சியாக MB ஸ்ரீநிவாஸ் தொடங்கி வைத்த Madras Youth Choir கலைஞர்களின் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அவர்கள் பாடிய பாடல் இனிமையாக இருந்தது. பாரதியார் பாடல்களையும், தேசபக்தி பாடல்களையும் அனுபவித்துப் பாடினார்கள்.
சென்னை சேர்ந்திசைக் கலைஞர்களின் இசைத்தகடு வெளியீடு சமந்தமான நிகழ்ச்சி:
பள்ளு பாடுவோமே
இந்த இசையைப் பற்றிய மற்றுமொரு பதிவு:
சுகானுபவம்
எழுத்தாளர் ச தமிழ்செல்வன் கேணி பற்றி எழுதிய பதிவு:
இசை என்னும் துன்ப வெள்ளம்
பாடியவர்களில் ஒருவரை எங்கோ பார்த்த ஞாபகம். மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன். "யாருங்க அது?" என்று உறுத்திய நபரைக் காண்பித்து கேணி நண்பர் சிவாவிடம் கேட்டேன்.
"மே மாதம் படத்துல ஹீரோயினிக்கு அப்பாவா நடிச்சாரே அவருங்க" என்றார்.
சினிமா இயக்குனர் வேலு பிரபாகரனிடம் துணை இயக்குனராக இருப்பவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். பதிவர் அ மு சையதின் திருமணத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே புறப்பட வேண்டி இருந்தது. அருகில் அமர்ந்திருந்த எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
Chennai Youth Choir - கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள். பொழுது சாய்வதைக் கண்டு காகங்கள் கரைந்து கொண்டிருந்தது. கேணி தொடங்கியதிலிருந்து பக்கத்து வீட்டுத் தண்ணீர் தொட்டி நிறைந்து அருவி போல கொட்டிக் கொண்டிருந்தது. அந்த சப்தமும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. ஓரிரு பட்சிகளும் தங்களுடைய பங்கிற்குக் குரலெழுப்பி குதூகலித்துக் கொண்டிருந்தன. அணில்கள் கிளைக்குக்கிளை தாவி விளையாடிக் கொண்டிருந்தன.
இசைக் கலைஞனின் வாசிப்புக்கு மயங்கி அவன் பின்னால் சென்று ஆற்றில் விழுந்த எலியைப் போல, சொந்த வேலைகளின் நெருக்குதலுக்கு உட்பட்டு சென்னை சாலையின் பரபரப்பில் விழுந்தேன். சீறிப் பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் செவிச் சவ்வைக் கவ்வியது.
வேற என்ன சொல்றது, நீ வாழ்றடா கிருஷ்ணா..... என்ஜாய்
ReplyDelete:-)
எழுத்தாளர் கூட்டம் இல்லையென்றதும், சுருதி குறைந்தது. வேறு வேலைப் பார்க்க சென்றுவிட்டேன்.ஆனால் உன் அனுபவத்தைப் பார்த்ததும்,மிஸ் செய்துவிட்டேன் என்றே தோன்றுகிறது. கூட்டம் குறைந்தால்,ஞானி வேறு கூட்டத்தை நிறுத்தி விடுவேனென்று மிரட்டியிருக்கிறார்.இனிமேல் எதுவானாலும் விடக்கூடாது. மற்றபடி மக்கள் கூட்டம் எப்படி?
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeletethanks
mrknaughty
click here to enjoy the life
மிக நல்ல பதிவு.இந்தக் கலைஞர்கள் அந்தக்கலைஞர்களைத் தரிசித்துக் கண்களால் பரிமாறிக்கொண்டதை அழகாகப் பதிவு செய்து விட்டீர்கள்.நானும் அதை கவனித்தாலும் என் பதிவில் குறிப்பிடும்போது தவற விட்டேன்.நீங்கள் நிறைவாகச் செய்துவிட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சியாக இருந்தது -அந்த ஒரு வரியை வாசித்தபோது.
ReplyDeleteவாங்க தமிழ்ச்செல்வன்,
ReplyDeleteவருகைக்கும், கருத்துகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி... நீண்ட நாட்கள் கழித்து உங்களை கேணியில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.