இந்திய இளைஞர்களில் 18 முதல் 25 வயதுடைய 18 சதவீதத்தினருக்கு நீரிழிவு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. காரணம் நம்முடைய உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான். கிழங்கு, கார்போஹைட்றேட், இனிப்பு பானம் போன்றவற்றை அதிகமாக அன்றாட உணவில் பயன்படுத்துவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
தூங்கி எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் இரத்தத்தில் இருக்க வேண்டிய சக்கரையின் அளவு 70 முதல் 130 mg/dl. சாப்பிட்ட இரண்டுமணி நேரம் கழித்து இருக்க வேண்டிய அளவு 80 முதல் 140 mg/dl. குளுக்கோஸ் பானம் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எனக்கு இருப்பதோ 142 mg/dl. அதிகப்படியான 2mg/dl தான் என்னை இந்த பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றது.
ராணி மெய்யம்மை ஹாலில் 30-ற்கும் அதிகமான ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். சர்க்கரை குறைபாட்டைத் தடுக்கும் முறைகளையும், வந்துவிட்டால் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளையும் ஒவ்வொரு ஸ்டாலிலும் விளக்கப் படத்துடன் ஒட்டி இருந்தார்கள். அதில் குறிப்பிட்டிருந்த சில...
1. தினம் 30 முதல் 40 நிமிட நடை பயணம்.
2. சிரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல்
3. காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்
4. பழச்சாறு குடிக்காமல், முழு பழத்தையும் சாப்பிடுதல்
5. துரித உணவுகளைத் தவிர்த்தல்
6. சரியான இடைவெளியில் சாப்பிடுதல்
7. தினம் உடற்பயிற்சி செய்தல்
8. கீரை மற்றும் நார்சத்து உணவுகளை சாப்பிடுதல்
-என்று ஒரு பட்டியலையே சொல்கிறார்கள். வந்ததும் வருந்துவதைவிட, வருமுன் காப்பதே நல்லது என்பதால் அவர்கள் பரிந்துரைத்ததை அக்கறையுடன் பின்பற்றலாம் என்றிருக்கிறேன். நீரிழிவால் பதிக்கப்பட்ட கோரமான உடல்கூறு புகைப்படங்களை சில இடங்களில் ஒட்டி இருந்தார்கள். 'ஆவ்வ்வ்வவ் ...' என்றிருந்தது.
கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் 93 சதவீதத்தினர் முதியவர்கள். 7 சதவீதம் மட்டுமே இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களிலும் பாதி பேர் மருத்துவ மாணவிகள். சர்க்கரை குறைபாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களுக்கு இல்லையென்றே நினைக்கிறேன். அதனை சரிக்கட்ட இந்த மாதிரி கண்காட்சி அவசியம் தேவை. வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்..
No comments:
Post a Comment