Tuesday, April 13, 2010

கேணி - ச. தமிழ்ச்செல்வன்

தாங்க முடியாத வெக்கையுடன் ஞானியின் வீட்டிற்குச் சென்றேன். முன்வாசலில் சிவராமன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் பேசிவிட்டு உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். மின்விசிறியிலிருந்து சுழன்று வந்த காற்று என் உடலில் பட்டுக் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகங்களை நண்பர்கள் மேசை மீது அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அனைத்துமே கதையல்லாத புத்தகங்களும், கட்டுரைகளுமாகவே இருந்தன. புத்தகங்களைக் கையிலெடுத்து ஒவ்வொன்றாகப் புரட்டிவிட்டு கேணிக்குச் சென்று அமர்ந்து கொண்டேன்.

ஞாநி, வழக்கத்தைவிட தாமதமாக கூட்டத்தைத் தொடங்கினார். வெயில் அதிகமாக இருப்பதால் நண்பர்களுக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து கூட்டத்தைத் தொடங்கியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் தனது சமவயது நண்பரான எழுத்தாளர் கேணியில் பங்கேற்பது தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி என்று தமிழ்ச்செல்வனைப் பேச அழைத்தார். மேலும் 'என் வாழ்க்கை என் எழுத்து' என்ற தலைப்பில் அவர் பேச இருப்பதாக அறிவித்தார்.

புனைவு எழுத ஆரம்பித்து, அதிலிருந்து விலகிச் சென்று அரசியல் மற்றும் சமகால நடப்புகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். 33 வருடத்தில் 32 புனைகதைகளை மட்டுமே எழுதி இருக்கிறேன். எண்ணிக்கைப் படி பார்த்தால் வருடத்திற்கு ஒன்று கூட எழுதவில்லை. 'எழுதினால் உலகத் தரத்தில் எழுத வேண்டும்' என்ற உந்துதல் கூட அதை மட்டுப்படுத்தியது என்று சொல்லலாம். பொதுவாக என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் எழுத்தாளராக வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏனெனில் குடும்பத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மதுரகவி பாஸ்கர்தாஸின் வழித்தோன்றலில் நானும் ஒருவன். என் அம்மா வழி தாத்தா தான் எழுத்தாளர். என்னுடைய வாழ்க்கையை நான் சொல்ல வேண்டியதே இல்லை. எல்லாவற்றையுமே எழுதிவிட்டேன். அப்பா வழி சொந்தங்கள் எல்லாம் பாமரர்கள். வாழ்க்கைச் சூழலில் எளிமையானவர்களும் கூட.

விருதுநகரில், சாத்தூர் வட்டத்தில் 'மேட்டுப்பட்டி' என்ற சிறு கிராமம் தான் எங்களுடைய ஊர். அப்பா திராவிட இயக்க ஆர்வலர். கிராம தலையாரியும் கூட. பள்ளி விடுமுறையில் என்னுடைய அம்மா வீட்டிற்கு போகும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். இரும்பாலான கல்லாப் பெட்டி, ரேடியோ போன்ற பல பொருட்கள் அங்கு இருக்கும். அந்த காலத்தில் பெரிய பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இவையெல்லாம் இருக்கும். புத்தகங்கள் வீடு முழுவதும் ஆங்காங்கு அடுக்காக இருக்கும். இவையெல்லாமே நாங்கள் ஏறி விளையாடக் கூடிய மற்றொரு பொருளாகவே பாவித்தோம். கிட்டப்பா மற்றும் சுந்தராம்பாளுடன் என்னுடைய தாத்தா எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை நடு ஹாலில் மாட்டியிருப்பார்கள். எவ்வளவுதான் பிரம்மிப்பாக இருந்தாலும் அது விருந்தாளி வீடுதான!. ஆகவே அந்நியமாகவே இருக்கும்.

மேட்டுப்பட்டி சூழலும், எனது குடும்ப வாழ்வும் எழுதுவதற்கான நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. அதில் முக்கியமானவன் சாத்தூரப்பன் என்ற இளவயது நண்பன். அவன் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவன். அவன மாதிரி ஒரு அறிவாளியை நான் பார்த்ததே இல்லை. என்னுடைய கற்பனைகளை விரித்தவன். அவனுக்குத் தெரியாத மரங்களின் பெயர்களே இல்லை. எல்லா மரத்தோட பெயரையும் சொல்லுவான். விளையாடிட்டே இருக்கும் பொழுது... "டேய் இன்னைக்கு மழை வரும்டான்னு" சொல்லுவான். அதே மாதிரி மழை வரும். இதெல்லாம் நாங்க ஒன்னாவது படிக்கும்போது நடந்தது. "டேய் நேத்து கனவுல பேயும் பிசாசும் சண்டை போட்டுக்குச்சிடா"-ன்னு சொல்ல ஆரம்பிப்பான்.

"நீ பயந்துட்டயாடான்னு?" கேட்போம்.

"தூக்கத்தைக் கெடுக்காதீங்க... த்த ச்சே ஓடிப்போங்கன்னு வெரட்டினேன்" என்பான். இதையெல்லாம் கேட்கும் எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும்.

"சரிடா... பேய்-ன்னா என்ன பிசாசு-ன்னா என்ன?"ன்னு கேட்போம்.

இதுகூட தெரியாதாடா!... பேயன்னா ஆம்பள, பிசாசுன்னா பொம்பள" ன்னு சொல்லுவான். இந்த மாதிரி எதையாவது சொல்லி எங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருப்பான். அவனைப் பற்றி நான் எங்கும் எழுதவில்லை. இனிமேல் தான் எழுதவேண்டும் என்று இருக்கிறேன்.

எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க. சின்ன வயசுலேயே விதவை ஆனவங்க. நான் பிறப்பதற்கு முன்பே அவங்களுடைய கணவன் தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்கப் போன இடத்துல வாந்திபேதி வந்து செத்துட்டாரு. அவங்க தன்னோட சோகக் கதைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி இருக்காங்க. அந்த அனுபவங்கள் கூட என்னுடைய படைப்பிற்கு தேவையான அனுபவங்களைக்கொடுத்திருக்கிறது.

அப்பா சர்வேயராக இருந்ததால் வேலை மாற்றலாகிக் கொண்டே இருக்கும். சண்முகம் என்ற பெயரில் சில புத்தகங்களைக் கூட எழுதியிருக்கிறார். எங்களுடைய படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தாத்தாவின் வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தாத்தாவிடம் எழுதிக் கொடுக்கச் சொல்வேன். போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளும் வாங்கி இருக்கிறேன். உண்மையில் பேச்சுப் போட்டிதான் என்னுடைய இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது. பள்ளி நாட்களில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஆங்கிலமும், கணக்கும் தான். இங்கிலீசுல பாஸ் பண்ணனும்னு வேண்டாத சாமி இல்ல. முதலில் வீரபத்திரன் கிட்ட வேண்டிக்கிட்டேன். அவரென்ன கத்திய வச்சிக்கிட்டு போஸ் கொடுக்கறாரு, அவரு சரிவர மாட்டாருன்னு விநாயகர் கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுவும் எப்படி... 108, 250-ன்னு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கிட்டேன். அப்பவும் ஃபெயில் ஆயிட்டேன். அப்புறமாதான் புரிஞ்சது விநாயகருக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு. பிறகு 3 மைல் தொலைவிலுள்ள நென்மேநி சர்ச்சுக்குச் போனேன். போனதுமே பள்ளிக் கூடம் மாதிரி முட்டிப் போட வச்சிட்டான். பரீச்சையைக் கண்டுபுடிச்சவன் கையிலக் கெடச்சா கொன்னுடணும்னு தோணும். ஏசுவிற்கும் இங்கிலீஷ் தெரியாது, ஹீப்ரு தான் தாய் மொழி என்பது வேறு விஷயம்.

மூணு வாரம் தொடர்ந்து போகவும், பாதிரியார் புதுசா இருக்கானேன்னு கண்டுபுடிச்சி சில புத்தகங்களை கொடுத்தாரு. அதுல ஆடு மேய்க்கிறத பத்தி விரிவா எழுதி இருந்தாங்க. இதத் தானடா ஊருக்காரப் பசங்க செய்யிறாங்கன்னு நெனச்சிக்கிட்டேன். பிறகு கடவுள் புண்ணியத்துல பக்கத்து வீட்டு அண்ணன் கூப்பிட்டு இங்லிஷும், கணக்கும் கற்றுக் கொடுத்து என்னைத் தேற்றினார். பொதுத் தேர்வுல என்னுடைய மாவட்டத்துலையே நாலாவதா வந்தேன்னா பார்த்துக்கோங்க. படிக்கிற பயலுன்னு பேரு கூட கெடச்சிடுச்சி. அதன் பிறகு கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நண்பர்கள் வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தேவதச்சன், அப்பாஸ், கௌரி ஷங்கர் போன்ற சீனியர் நண்பர்களும், கோ ராஜாராம் போன்ற ஆசிரியர்களும் எனக்கான முன்னோடிகளாக இருந்தார்கள்.

ஒரு வாசகனாக நா பார்த்தசாரதியின் தீவிர விசிறி நான். அவருடைய நாவலில் வரும் கதாப் பாத்திரங்களைப் போலவே உண்மை, நேர்மை, கண்ணியமாக வாழவேண்டும் என்று நினைப்பேன். கல்லூரி நாட்களில் நண்பர்களெல்லாம் குடிக்கும் பொழுது நான் மட்டும் நேராக வீட்டிற்குச் சென்று விடுவேன். அவருடைய படைப்புகள் என்னை தேச பக்தனாக மாற்றியது. அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்ந்தேன். சீன எல்லையில் வேலை. குளிரில் கை விரல்களெல்லாம் வீங்கியது. சமாளித்துக் கொண்டு காலம் தள்ளினேன். அப்போ லாண்டரியில் இருந்த ஒரு பொண்ணை வேறு லவ் பண்ணேன். வேலை பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே திரும்பினேன். லவ்வும் அதோட நின்னுடுச்சி.

பிறகு அறிவொளி இயக்கம், மக்கள் இயக்கம், தொழிற் சங்கம் என்று என்னுடைய களம் விரிந்தது. அறிவொளி இயக்கம் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று வேலை செய்யும் பொழுது கிடைத்த அனுபவங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. கிராமக் கல்வித் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சிறு கிராமம் ஒன்றிற்கு உரையாற்றச் சென்றிருந்தேன். "படிப்பது உங்களுக்கு நல்லதுதானே. உங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் நல்லா இருக்கும் இல்லையா?" என்று பேசி முடித்தேன்.

"அது சரி இவ்வளோ நாள் எங்க போயிருந்தீங்க"-ன்னு ஒரு பாட்டி எங்கிட்ட கேட்டாங்க. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். இந்த மாதிரி போன இடத்திலெல்லாம் கிராமத்திற்கு கிராமம் முகத்திலேயே அறைந்திருக்கிறார்கள். இப்போ உங்க முன்னாடி பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன கேள்வி கேட்கப் போறிங்களோ தெரியல.

களப்பனின்னு எங்கப் போனாலும் 'அடி' தான் கிடைத்தது. எங்க தப்பு நடக்குதுன்னே தெரியலை. மக்களைப் புரிஞ்சிக்கவே முடியலை. ஒரு முறை கிராமம் ஒன்றில் பேய்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "சரி... உனக்கு தைரியம் இருந்தா, வர வெள்ளிக் கிழமை தனியா வந்து, அந்த வேப்ப மரத்தடியில படுத்து தூங்கிட்டு காலைல உயிரோட போ. பேய் இல்லைன்னு ஒத்துக்கறேன். என்ன சொல்ற...!" என்று ஒரு பாட்டி சவால் விட்டாங்க.

"அது என்னமோ பாட்டி இந்த வேப்ப மரத்தடியில வேணும்னா பேயிருக்கலாம். எங்க ஊருல எல்லாம் இல்லை"-ன்னு சொன்னேன்.

தோழர்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் இதனால. என்ன இப்படி பண்ணிட்டிங்க. சவால் விட்டிருக்கலாம் இல்ல என்று கேட்டார்கள்.

நான் தனியா வரலாம், அங்க படுக்கலாம், எழுந்து போகலாம். ஆனா அந்த பாட்டி தோத்துடுவாங்க. நமக்கு என்ன முக்கியம் அவங்க ஜெயிக்கணும்.

அதன் பிறகு நாங்கள் அவர்களிடம் தோற்கத் துவங்கினோம். வேணுமுன்னே சில விடுகதைகளைப் போடுவாங்க. அவர்கள் பதில் சொல்லுவார்கள். பதிலுக்கு அவர்களும் விடுகதைப் போடுவார்கள். தோழர்களுக்கு விடை தெரிந்தாலும் தெரியாதுன்னு சொல்லி முழிப்பாங்க. எங்களைத் தோற்கடிக்கணும் என்றே அவர்களும் வரஆரம்பித்தார்கள். எங்களுடைய இலக்கை நேக்கி நாங்களும் செல்ல ஆரம்பித்தோம்.

வாழ்க்கையில் எது முக்கியம் என்று நினைக்கிறோமோ அது தான் நமக்குக் கிடைக்கும். அறிவொளி இயக்கம், சங்க வேலைகள் தான் முக்கியம் என்று சுற்றிக் கொண்டிருப்பதால் கதைகளை எழுத முடியவில்லை. என்னுடைய வீட்டிற்கு செல்லும் பொழுது கதைகள் எல்லாம் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, "என்ன கண்டுக்கவே மாட்டேங்குற" என்று என்னிடம் பேசுவது போல இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்தக் குரலுக்கு செவிசாய்க்கத் தானே வேண்டும்.

கிராம மக்களின் விவாதத்தின் போது தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றைச் சொல்லி உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் ஆரம்பமானது. இலக்கியம் தவிர்த்த நிறைய கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச்செல்வனும் சலிப்பில்லாமல் பதில் சொல்லி விவாதத்தைக் கொண்டு சென்றார். கூட்டம் முடிந்து கிளம்பும் போது கூட்டத்தில் பதிவர் மா சிவக்குமார் தென்பட்டார். சீன மொழி சமந்தமாக, நீண்ட நாட்களாக அவரைப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். "இப்போ நான் யாருக்கும் கற்றுத் தருவதில்லை" என்றார். நேரம் இருக்கும் பொழுது ஆபீசுக்கு வாங்க பேசலாம் என்று விசிடிங் கார்டை-ஐக் கொடுத்தார்.

அதன் பிறகு ஒருவரைச் சந்தித்தேன். பல முறை அவரைக் கேணியில் பார்த்திருக்கிறேன். தமிழ் இலக்கியம் படிப்பவராக இருக்கும் என்று நினைத்து பேச ஆரம்பித்தேன். madras university-ல் Phd (nanotechnology) படிக்கிறேன் என்றார். அவருடைய இலக்கிய ஆர்வம் ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ச்செல்வனை சந்தித்த ஆச்சர்யத்துடன் இது போன்ற ஆச்சர்யங்களையும் சேர்த்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தேன்.

கேணி சந்திப்பைப் பற்றிய ஊடகவியலாளர் பல பாரதியின் பதிவு:

கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது.
இடது சாரிகளைப் பற்றி நிறைய பேசினார். எனக்கு அரசியல் தெரியாததால் கவனமாக அதையெல்லாம் தவிர்த்திருக்கிறேன். ஆகவே நிறைய தகவல்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு.
3.
அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் பாமா வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

9 comments:

  1. நல்ல பதிவு... நானும் வந்திருந்தேன்.. உங்கள சந்திக்கணும்னு நினைத்திருந்தேன்.. முடியல...அடையாளம் கண்டு பிடிக்க முடியல :)

    ReplyDelete
  2. அன்புள்ள பிரபு:

    வழக்கம்போலவே அருமையான பதிவு. நாடகமானாலும், பொதுவிழாவானாலும், கேணியானாலும் ஞாநியை சந்திப்பது மிக மிக இன்பமூட்டும் அனுபவமாகவே இருக்கும். இந்தமுறை என் சகோதரியின் திருமணம் இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. ச. தமிழ்செல்வனின் எழுத்துக்கள் ஏராளமாக ஞாநியின் இணைத்தளத்தில் உள்ளன. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் கோணங்கியின் அண்ணன் என்று நினைக்கிறேன். கோணங்கி பற்றிய தகவல்களை அவர் ஒருவேளை சொல்லியிருந்தால் பதிவு செய்து இருந்திருக்கலாம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. @ பஸ்கி,
    நான் கேணிக்கு எப்பொழுதுமே அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவேன். ஆகவே அடுத்த முறை சந்திக்கும் பொழுது நேரில் பேசலாம்.

    @ பிரபா,

    தமிழ்ச்செல்வன் கோணங்கியைப் பற்றி ஒரு சில இடங்களில் பேசினார். ஆனால் ஆழமாக எதையும் பேசவில்லை. ஒரு இடத்தில் மட்டும் அவருடைய நேர்முகத்தைக் குறித்து யாரோ கேட்ட கேள்விக்கு கோணங்கியைப் பற்றி பின்வருமாறு பதில் சொன்னார்.

    "அவன் எதற்கு இப்படி எழுத வேண்டும். இப்பொழுது இருக்கும் வாசகர்களே படிப்பதற்குத் திணறும் பொழுது, இனி வரும் சந்ததிக்கு அவன் எழுதுவது புரியுமா என்று தெரியவில்லை" என்று தான் என்னுடைய பேட்டியில் சொல்லியிருந்தேன். அவர் எழுதுவது தவறு என்று சொன்னால் என்னை அடிக்க வந்துடுவான் என்றுகூறினார்.

    ஏன் வரலன்னு உனக்கு ஃபோன் பண்ணலாம்னு நினைத்தேன்.

    /--சகோதரியின் திருமணம்--/

    இதுதான் காரணமா! மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி bogy.in உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. கிருஷ்ணா,
    கேணி கூ ட்டதிலும் கலந்து , உங்கள் பதிவையும் கவனிப்பேன். அந்த கூட்டத்தின் சாரம்சத்தை நிச்சயம் உங்கள் பதிவில் கொண்டு வருவதை உணர்ந்திருக்கிறேன் . இந்த தடவை வரவியல்வில்லை என்ற குறையை உங்கள் கேணி பதிவு படித்து ஆசுவாசப் படுத்திகொண்டேன் .

    ReplyDelete
  6. கேணி சந்திப்புக்கு வராத குறையை திட்டிவாசல் மூலமாக நீங்கள் தீர்த்து வைத்துவிடுகிறீர்கள் கிருஷ்ணா, நன்றி.

    ReplyDelete
  7. @ ராம்,

    வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு வாருங்கள். எப்பவும் போல ஜமாச்சிடக்லாம்.

    @ சாரதா

    பின்னூட்டத்திற்கு நன்றி சாரதா.

    ReplyDelete
  8. சுவாரசியமான பதிவுகள்.. கேணி பற்றிய பதிவுகள் அனைத்துமே அருமை.. கூடத்திற்கு போகமலேயே அமர்ந்து கேட்டது போல.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Thanks for a lot for your comment madhan. Keep in touch...

    -krishna prabhu

    ReplyDelete