Tuesday, January 19, 2010

கிழக்கு மொட்டை மாடியில் - பா ராகவன்

ஒருநாள் எழுத்தாளர் பா ராகவனின் இணைய தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். 'ஒரு முக்கிய அறிவிப்பு' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அரசியல், தீவிரவாதம் என்று எழுதிக் கொண்டிருப்பதால் கொலை மிரட்டல் வந்திருக்குமோ என்று நினைத்தேன். அதைவிடப் பெரிய பயங்கரம்.

Jan-17 2010
ல் Non Fiction Writing தொடர்பான நுணுக்கங்களைச் சொல்லித்தர ஒருநாள் வகுப்பு நடத்தப் போவதாகவும், கிழக்குக்கு எழுத விரும்புகிற புதிய நண்பர்கள் சிலரையும் அழைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். விருப்பமும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் முன்கூட்டி பதிவு செய்யும்படிக் கேட்டிருந்தார். எந்தவித யோசனையும் இல்லாமல் என்னை அழைக்குமாறு அவருக்குத் தெரிவித்திருந்தேன். அதன்படி என்னை அழைத்திருந்தார்.

விடிகாலை 5.00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொண்டேன். ஹாப்பி... இன்று முதல் ஹாப்பி என்ற பாடல் எங்கோ கேட்டது. முக்கியமான தருணங்களில் பாடலின் ஒரு வரி மட்டுமே மறுபடியும் மறுபடியும் எனக்குக் கேட்கும். இந்த முறை முழுப்பாடலும் கேட்டது. அடடே... மேலான நிலையை அடைந்துவிட்டோமோ! என்று நினைத்தேன். குளித்து முடித்து பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றதும் தான் தெரிந்தது எம் ஜி ஆரின் 93-ஆவது பிறந்த நாளாம். புகைப்படத்திற்கு மாலை போட்டிருந்தார்கள். கிழக்கில் இன்னும் வெளுக்கவில்லை. இருள் திட்டிற்கும் பனிப் புகைக்கும் நடுவில் புரட்சித் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

சரியான நேரத்தில் பேருந்து கிடைத்து 8 30 மணிக்கெல்லாம் எல்டாம்ஸ் சாலையில் இருந்தேன். கிழக்கு பதிப்பகத்திற்கு செல்லும் வழியில் அருள் மிகு பாலசுப்பிரமணியன் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதும் கோவிலுக்குள் செல்ல நினைப்பேன். பர பரப்பான வேலையுடன் செல்வதால் முடியாமல் போகும் அல்லது கோவில் பூட்டி இருக்கும். ஞாயிற்றுக் கிழமை என்பதால் 4 நபர்கள் மட்டுமே இருந்தனர். இரண்டு பசுக்களும் கோவிலினுள் இருந்தன. மென்மையான அமைதி அகமும் புறமும் பரவிக்கொண்டிருந்தது. அதே பரவசத்தில் எல்லா விக்ரகங்களையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியில் வந்தேன். வந்த வேலை தானே முக்கியம். நியூ ஹரிசான் மீடியா -வின் முன் அலுவலகத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்.

"நீங்க
தான் முதல் ஆள்" என்றார்கள்.

ஆரம்பத்தில் யாரு First வராங்கன்னு பார்க்கக் கூடாது. கடைசியில யாரு First வராங்கன்னு தான் பார்க்கணும். ஒரு ஹீரோ சொல்லி இருக்காரு.
கன்னத்தில் போட்டுக்கோங்கோன்னு சொல்ல நினைத்தேன். சிறிது நேரத்தில் இன்னொருவரும் வந்து சேர்ந்தார். என்னை பற்றிக் கேட்டார். சொல்வதற்குப் பெரிதாக என்ன இருக்கிறது. அவரைப் பற்றி விசாரித்தேன். எழுத்தாளர் CSK என்றார் (http://www.writercsk.com). அவர் எழுதிய சந்திரயான் கூட கிழக்கு வெளியிட்டுள்ளது. கொஞ்ச நேரத்தில் பத்ரி வந்து எங்களை உள்ளே அழைத்தார். அதன் பிறகு வந்த அநேகரும் ஒரு விதத்தில் எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளராகத் தான் இருந்தனர். என்னைத் தவிர.

பிடித்த எழுத்தாளரை நேரில் சந்திப்பது சங்கடமான சந்தோசம் என்று சேரல் அடிக்கடி கூறுவான். அந்த உணர்வுடனே காத்துக் கொண்டிருந்தேன். பா ரா அருகில் வந்ததும் 'ஹாய்' என்று பெரிய குரலெடுத்துக் கத்தினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

சரியாக 9.30-க்கு பாராவும் பத்ரியும் எங்களை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர். பா ராவிற்கு கடந்த சில நாட்களாக மலேரியாவாம். பேசக் கூட முடியவில்லை. அதைக் கூட பொருட்படுத்தாமல் மதியவம் வரை எங்களுடன் உரையாடினார். ரமணன், CSK, சுரேஷ் கண்ணன், சிவாராமன், யுவ கிருஷ்ணா, பிரதீப், ஆதிஷா, பிரதீப் குமார் ஆகிய பதிவர்களும், சுஜாதா, வைதேகி, பாலு சத்யா போன்ற கிழக்கின் நண்பர்களும் உடன் இருந்தனர்.

உரையாடலில் பின்வரும் விஷயங்களைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு வந்து விரிவாகப் பேசினார்:

1. கதையல்லாத எழுத்தில் உள்ள சவால்கள்
2. தகவல்களைப் பெறுவது எப்படி?
3. ஒரு புத்தகத்தை எவ்வாறு யோசிக்க வேண்டும்?
4. அத்தியாயங்களை எப்படி வகுக்க வேண்டும்?
5. சுவாரசியம் என்பது என்ன?
6. என்னென்ன துறைகள் சார்ந்து எழுதலாம்?
7. புத்தக எழுத்துக்கான அடிப்படை வாசிப்புகள் எவை எவை?
8. புத்தகத்தின் அளவைத் தீர்மானிப்பது எப்படி?
9. பேரா பிரிக்கும் கலை
10. பிழையின்றி எழுத என்ன செய்யலாம்?
11. எழுதுவது என்னும் பணி சார்ந்த சில உபயோகக் குறிப்புகள்.

சாதாரணமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார். முதலில் அறிமுகம் செய்து கொள்ளலாமே என்று பத்ரி கூறவும் முதல் ஆளாக நான் எழுந்து கொண்டேன்.

இந்த Formality எல்லாம் வேண்டாம். சும்மா உட்கார்ந்து கொண்டே சொல்லுங்கள் என்றார் பாரா.
அறிமுகப் படலத்திற்குப் பின் மறுபடியும் தொடர்ந்தார்.

'குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை' -
தெய்வப் புலவன்

விளக்கம்: ஒருவன் ஆத்மா சித்தியுடன் தன்னிடம் உள்ளதைக் கொண்டு ஒரு காரியத்தை செய்தான் என்றால் மலையின் மீதேறி யாணைப் போர் காண்பது போல தெளிவாகச் செய்யலாம்.

புத்தகம் எழுத உட்காரும் பொழுது, எழுத்தின் கருப்பொருளைப் பற்றிய சந்தேக மனப்பான்மை இருக்கக் கூடாது. அது சம்மந்தமாக நிறைய வாசிக்க வேண்டும். வாசிக்கும் பொழுதே உபயோகமான நல்ல குறிப்புகளை ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்புகளை எடுத்துவிட்டோமே என்று எல்லாவற்றையும் பயன்படுத்தக் கூடாது. தேவையானவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஒரு சொல்லைக் கூட வாசகனுக்குக் கொடுக்கக்கூடாது.

மேலும் தொழில் முறையாக எழுத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிலுள்ள சவால்கள், மற்றவர்களிடமிருந்து தனித்தன்மையை எப்படி ஏற்படுத்திக் கொள்வது, சொல்லவரும் விஷயத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்வது, தகவல்களைத் திரட்டும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் (தயவு செய்து விக்கிபீடியா உபயோகிக்காதீங்க, பல தகவல்களும் தவறானவை), அத்யாயங்கள் பிரிப்பது எப்படி என்று அடுக்கிக் கொண்டே போனார்.

புத்தகம் எழுதுவதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. அத்யாயம் அத்யாயமாக எழுதுவது ஒரு முறை. ஒரே மூச்சாக உட்கார்ந்து எழுதுவது இன்னொரு முறை. எங்களுடைய அலுவலகத்தில் 10- நாட்களில் ஒரு புத்தகத்தை முடித்திருக்கிறோம். 2 நாட்களில் கூட புத்தகத்தை முடித்திருக்கிறோம். அந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

புத்தகம் எழுதுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குமா என்று கேட்கக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது. பாலகனாகிய என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

கடைசியாக 'எழுதுவது என்னும் பணி சார்ந்த சில உபயோகக் குறிப்புகள்' - பற்றி பேசும் போது முக்கியமான ஒரு விஷயம் கூறினார். உங்களுடைய எழுத்தில் குறையிருந்து, அதை யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிச்சிக்கோங்கோ. அந்த மாதிரி ஒருத்தர் கிடைக்கிறதே அபூர்வம். மேலும் எழுதும் போது நிறைய தண்ணீர் குடியுங்கள். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உரையாடலை நிறைவு செய்தார்.

சரி... யார் யாரெல்லாம் புத்தகம் எழுதுகிறீர்கள்? என்று பாராவும், பத்ரியும் வந்திருந்தவர்களைப் பார்த்தனர்.

ஐயா, நான் கல்லூரி படிக்கும் பொழுது முதலாமாண்டு பாடத்தை இரண்டாமாண்டிலும், இரண்டாமாண்டு படத்தை மூன்றாமாண்டிலும், மூன்றாமாண்டு பாடத்தை கல்லூரியிலிருந்து வெளிவந்த பின்பும் முடித்தவன். ஒரு பதிவை எழுதுவதற்கே இங்கு தகிகின தோம் போடுகிறேன். புத்தகம் என்றால் தலையே சுற்றுவது போல் இருக்கிறது. உங்களுடைய வேகம் எனக்கு சரிவராது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

இந்த வருடம் என்னுடைய ராசிக்கு குருபகவான் முதல் ஆறு மாதத்திற்கு நல்லது செய்வாராம். ஆனால் என்னைச்சுற்றி உள்ளவர்களுக்கு கஷ்டம் தானாம். ஐயோ இதைக் கேட்கலையே... பா ரா, பத்ரி, பைத்தியக்காரன், பிச்சைப்பாத்திரம், லக்கிலுக், ஆதிஷா ல்லோரும் என்னைச்சுற்றி அமர்ந்திருந்தனர்.

ஹ ஹ
ஹா... பார்க்கலாம், எனக்கு நல்லது நடக்கிறதா என்று!!!...

5 comments:

  1. அருமைங்க. கடைசில முடிச்ச விதம் ஹாஹா. :))

    ReplyDelete
  2. நல்ல பதிவு....

    ReplyDelete
  3. உங்களுக்கு நல்லது நடக்கும்னுதான் தோணுது ;))))))

    சிறப்பான பகிர்தலுக்கு நன்றி க்ருஷ்ணா

    ReplyDelete
  4. //உங்களுக்கு நல்லது நடக்கும்னுதான் தோணுது ;))))))//

    அதேதான்.. வாழ்த்துகள் நண்பா..

    ReplyDelete