Monday, January 11, 2010

கேணி சந்திப்பு - கவிஞர் சுகுமாரன்

முன் குறிப்பு: கவிதை வாசிப்பில் ச் சிறந்த கோமாளி நான்... கீழே இருக்கும் கவிதைகள் கேள்வி ஞானத்தில் எழுதியது. ஞாபகத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஏமாற்றி இருக்கிறேன். பதிவில் பயன்படுத்தியிருக்கும் கவிதைகள் யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். மாற்றிவிடுகிறேன்.நன்றி...

::::::::::::: ::::::::::::: ::::::::::::: ::::::::::::: :::::::::::::

Poet Sukumaran
நீண்ட நாட்களுக்கு முன்பு 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் சென்னை சிறுகதைப் பயிலரங்கம் நடந்தது. முதலில் உலகச் சிறுகதைகள் பற்றிப் பேச கவிஞர் சுகுமாரன் தான் ஏற்பாடாகியிருந்தது. அப்பொழுதே கோழியை அமுக்குவது போல் அமுக்கவேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் அவருடைய மொழி பெயர்ப்பில் மதில்கள் மற்றும் காளி நாடகம் ஆகிய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அந்த சந்திப்பில் மொழி பெயர்ப்பு சமந்தமான பல கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றிருந்தேன். கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போகவே அந்த இடத்தை 'சா. தேவதாஸ்' நிரப்பினார். கவிஞரை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தமாகவே இருந்தது.

25-12-2009 அன்று நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் சிவராமன் கவிஞர் சுகுமாரனை அறிமுகப்படுத்தினார். மூத்த ஆளுமை என்பதால் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. தயங்கித் தயங்கி அவருடன் உரையாடினேன். சகஜமான உரையாடலின் மூலம் நெருக்கமாகப் பேசினார். விழாநாள் என்பதால் அவருடன் விளக்கமாக உரையாட முடியவில்லை. கேணிக்கு வருகிறார் என்றதும், அன்று விட்டதை இன்று பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன்.

ஞானியின் வீட்டை நெருங்கியதும் இன்ப அதிர்ச்சி. சுகுமாரன் அவருடைய நண்பருடன் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
தூரத்தில் நின்றுகொண்டு "வணக்கம்" என்றேன். ஆமோதித்து சிரிக்கவும் அருகில் சென்றேன். 'காளி நாடகம்' புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அருகிலிருந்தவரைப் பார்த்து சிரித்தேன். தன்னுடைய பெயர் க. சீ. சிவக்குமார் என்று கூறினார். நானும் என்னுடைய பெயரைக் கூறினேன். 'நீங்கள் பதிவரா?' என்று சிவா கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு கவிஞரைப் பார்த்தேன்.

சுகுமார்ஜி, நீங்கள் பதிவுகளைப் படிப்பீர்களா?

எப்பவாவது நேரம் கிடைக்கும்பொழுது படிப்பேன்.

பதிவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சில பேர் நல்லா எழுதறாங்க. என்ன ஒன்னு நாலு பின்னூட்டம் வந்ததுமே... தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு வந்துவிட்டால் அவ்வளவுதான்.

நீங்கள் சிறுவயதில் எங்கு வளர்ந்தீர்கள் சுகுமார்ஜி....?

"அதைத்தானே உள்ள பேசப்போகிறோம். அப்போ கேட்டுக்கலாமே..." - என்று கூறவும் உன்னியின் சிறுகதைகளை சிலாகித்துப் பேசினேன். நீங்கள் உண்ணியைப் பார்க்கும் பொழுது என்னுடைய பாராட்டுக்களை சொல்லிவிடுங்கள். அப்படியே அவருக்கான ஒரு வாசகர் தமிழில் இருக்கிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அவர் சிறுகதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் கரு நன்றாக இருக்கிறது.

மலையாளம் பேசுவிங்களா? - என்று கேட்டார்.

அய்யய்யோ... சுத்தமா தெரியாது...

Can you sepak in English?

ரொம்ப நல்லா பேசமாட்டேன்... கொஞ்சம் கொஞ்சம்...

அதுபோதும், அவனும் ரொம்ப சுமாராத்தான் இங்கிலீஷ் பேசுவான் என்று உன்னிக்கு ஃபோன் செய்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

Unni, this is Krishna prabhu from Chennai. I red your short stories translated by the poet and well known writer Mr. Sugumaran. It is amazing man. You have done a wonderful job. Congratz. என்று அடுக்கிக் கொண்டே போனேன். அவரும் Thank you, Thank you...என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தக் குரலில் ஒரு படைப்பாளி மட்டுமே அனுபவிக்கக் கூடிய சந்தோஷத்தை உணர முடிந்தது.

I saw your E-Mail ID in the same book I suppose to think. So I will send an e-mail to you. Keep in touch with me...
என்றவுடன் Sure... Sure... என்றார்.

Take care... Bye Bye...
என்று பேசி முடிக்கவும் பாஸ்கர் சக்தி வந்து சேர்ந்தார். அனைவரும் உள்ளே சென்றோம்.

சென்ற வாரங்களில் ஞானிக்கு உடல் நிலை சரியில்லை தெரியுமா?

"இங்க வந்த பிறகுதான் தெரியும். இப்போ எப்படி இருக்காரு?" என்று கேட்டேன்.

ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டாரு. இப்போ உள்ளே தூங்கிட்டு இருக்காரு. இனிமேல்தான் எழுப்ப வேண்டும். நேரம் இருக்கிறதே என்று தரையில் அமர்ந்தார். சின்ன கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய சிறுகதைப் புத்தகங்களை வாங்கிவிட்டேன் சக்தி. இனிமேல் தான் வாசிக்க வேண்டும். அருகில் இருப்பவர் என்னை விட நன்றாக எழுதுவார் என்று அறிமுகப் படுத்தினார். அவர் வேறுயாருமில்லை அதே க. சீ. சிவக்குமார் தான். கன்னிவாடி - தமிழினி, உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - வம்சி, குனசித்தர்கள் - கிழக்கு, நீல வானம் இல்லாத ஊரே இல்லை - உயிரெழுத்து... ஆகியவை இவர் எழுதி சில புத்தகங்கள் என்று கூறினார். அவருடைய புத்தகங்களை இனிமேல் தான் தேடித் பி()டிக்க வேண்டும்.

ஞானிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கேணியைத் தொடங்கினார்கள். புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவாக இருக்கும் பொழுதுதான் இலக்கிய கூட்டத்திற்கான லட்சணம் கூடுகிறது என்று சுகுமாரனைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் நீண்ட உரையாற்றிவிட்டு கவிஞர் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.

"எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது... எதுவும் பேச பயமாக இருக்கிறது..." - என்ற கவிதையுடன் தனது பேச்சை ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்பு "எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தை 'பழனியப்பா ப்ரதெர்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'தி. ஜா' ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அருமையாக இருக்கும். யாராவது அவரிடம் ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிறில் புளியைக் கரைக்கும் என்று சொல்லியிருப்பார். குமுதம் டாட் காமில் வேலையிலிருக்கும் போதிலிருந்தே என்னை பேச அழைத்தார்கள். இங்கு தானே இருக்கப் போகிறேன் அடுத்த மாதம் வருகிறேனே என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது வசமாக மாட்டிக்கொண்டேன். எனக்கு வயிற்றில் புளி கரைகிறது. அந்த உணர்வுடன் தான் உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன்.

என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் தான் மூத்தவன். அப்பாவின் சகோதரி உதக மண்டலத்தின் வெலிங்ஸ்டன் என்ற இயற்கை சூழலில் இருந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னை எடுத்து வளர்த்தார்கள். சிறு வயதில் பெற்றோர்களைப் பிரிந்து வளரும் குழந்தைகள் ஒரு விதத்தில் தனிமையை உணர்கின்றன. நானும் அந்தத் தனிமையை உணர்ந்தேன். அந்தத் தனிமையை போக்கவும், என்னை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தவும் ஏதேனும் ஒரு விஷயம் தேவைப்பட்டது. அது கவிதை வாசிப்பாக அமைந்தது. கையில் கிடைக்கும் காகிதத்தில், அச்சில் உள்ள அனைத்தையுமே படிப்பேன்.

பள்ளியின் இறுதி வாழ்க்கை முடிவதற்குள் 500 செய்யுள் எழுதிவிட்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் செய்யுள் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதின் மூலம் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நான் கிறுக்கியதற்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பெண்கள் தான் அதிகம் பாராட்டினார்கள். அதனால் நானும் அக்காக்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். ஒரு முறை எனது பக்கத்து வீட்டு அக்கா கவிதைப் புத்தகம் ஒன்றை பரிசளித்தார்கள். அந்த சம்பவம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்ற நூல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அதில் எனக்குத் தேவையான இலக்கணத்தைக் கற்றுக்கொண்டேன்.

தமிழ் கவிதைகளையும், புத்தகங்களையும் விரும்பிப் படிப்பதால் என்னுடைய தமிழ் ஆசிரியர்களுக்கு நான் பிடித்த மாணவனாகியிருந்தேன். அவர்களும் எனக்கு பல விஷயங்களை விருப்பமுடன் கற்றுக் கொடுத்தார்கள். கவிதை என்று வரும் பொழுது நிறைய ஆதர்சனகள் இருந்தார்கள். வைதீஸ்வரன் மற்றும் தர்மு சிவராம் ஆகிய இருவரும் என்னை வெகுவாக பாதித்தார்கள். இருவரும் அவர்களுக்கான பாணியில் நன்றாக எழுதி தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிடித்திருந்ததால் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் உண்டாகியது. கடைசியாக யாரும் வேண்டாம் என்று எனக்கென ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட நம்முடைய கவிதை மரபில் விவசாயம், வைத்தியம், ஜோதிடம் என்று எல்லாமே கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பெரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதிதான் நான். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால். பாரம் என்று கூட சொல்லலாம். கவிதையில் ஒரு அனுபவம் இருக்கவேண்டும். இல்லையெனில் அது செய்தியாகிவிடும். உதாரணமாக...

யாது ஊரே யாவரும் கேளிர் - என்ற வரியைச் சொல்லும் போது அது ஒரு செய்தி மட்டுமே, அதற்கடுத்துள்ள வாசகம் தான் ஒரு அனுபவத்தைத் தருகிறது, ஒரு நிகழ்ச்சியை கண்முன் நிருத்துகிறது. அப்பொழுது தான் அந்தக் கோர்க்கப்பட்ட வாசகங்கள் கவிதைக்கான வடிவத்தைப் பெறுகிறது. இதுதான் கவிதைக்கும், செய்திக்கும் (Statement) உள்ள வித்யாசம். இரண்டுக்குமே பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அவைகள் தன்னுடைய மதிப்பை எப்பொழுதும் தக்கவைத்துக் கொள்ளும்.

மலையாளத்தில் கவிதை எழுதும் இரண்டு பேரின் பெயர்களைச் சொல்லி இருவரும் வெவ்வேறு தளத்தில் எழுதுபவர்கள். ஒருவர் மென்மையான விஷயங்களையும், இன்னொருவர் தவிப்புகளையும் மையமாக வைத்து எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரின் சில கூறுகளைக் கழித்துப் பார்த்தால், இரண்டு படைப்பாளிகளின் கவிதைகளும் ஒரே மாதிரி இருக்கும். யார் எழுதியது என்று வித்யாசம் காண முடியாது. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை.

அகவற்பா, வெண்பா, செய்யுள், மரபுக் கவிதை என பல வடிவங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது புதுக் கவிதைதான். புதுக் கவிதைகள் ஜனநாயகத்தைப் பிரகடனப் படுத்துவதாக நம்புகிறேன். அதனால் தான் அந்த வடிவத்தை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்புகிறேன் போலும்.

என்னைப் பொறுத்தவரை கவிதை மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அவைகளாவன 'வடிவம், மொழி மற்றும் உள்ளடக்கம்'. இந்த நிபந்தனைகள் புரியும் விதமாக நீண்ட விளக்கம் அளித்தார். முனைப்புடன் செயல்படும் பல கவிஞர்களுக்கும் இந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ சொல்ல வரும் விஷயத்தை படைப்பாளி சொல்லியபடியே வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள். கவிதைகள் அப்படி அல்ல. எழுதியவன் ஒன்றை நினைத்து எழுதுவான் படிப்பவர்கள் வேறு ஒரு அனுபவத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஒரே கவிதை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுவேறு அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சுதந்திரமும் கூட என்று சொல்லி அவர் எழுதிய "கையில் அள்ளிய நீர் " கவிதைக்கு வாசகர் அளித்த விளக்கத்தைக் கூறினார். நதியிலிருந்து ஒரு கை நீரை எடுக்கிறார். செடிகளுக்கு அளிக்கிறார். அதை மேகம் கொண்டு மழையாப் பொழிகிறது. அந்த நீரை எடுத்து மீண்டும் நதியில் கவிழ்க்கிறார்.இந்த அனுபவத்தை கவிதையாக சொல்கிறார்...

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?


-
இதை நான் சாதாரண அனுபவமாகத் தான் எழுதினேன். நதி என்பது பரமாத்மா... கையளவு தண்ணீர் ஜீவாத்மா... அது போக வேண்டிய இடம் சென்று கடைசியாக பரமாத்மாவிடமே திரும்பியது என்று சுழற்சியைக் கூறினார். அவருடைய யோசனையில் தவறில்லை. இந்த வார்த்தைகள் அவருடைய யோசனைக்குப் பொருந்துகிறது.

நான் திருவனத்தபுரம் தள்ளி இருக்கும் ஆணையடி என்ற இடத்தில் வசிக்கிறேன். ராஜாக்கள் காலத்தில் அங்கு தான் யானைகளைக் கட்டிப் போடுவார்களாம். அந்தப் புறமும் கூடவே இருக்கும். அங்கு ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் காரணத்தை அறிய எனக்கு ஆவல். ஒரு வயதானவரிடம் கேட்டேன்.

"நீ... சிறுபிள்ளை"
என்று கூறிச் சிரித்தார்.

பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்.

எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை கடைசிவரை அந்தப் பெரியவர் சொல்லவே இல்லை.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய முற்பட்டேன். கடைசி வரை அதற்கான காரணம் தெரியாமல் போனது. ஆகவே அந்த சம்பவத்தை வைத்து ஒரு கவிதை எழுதினேன். இறுதியாக அந்தக் கவிதையை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.கவிதை வாசிப்பினைத் தொடர்ந்து அவருடனான உரையாடல் நடைபெற்றது.

பல கேள்விகளும் கவிதையை சார்ந்தே இருந்ததால் பேசா மடந்தை போல் உட்கார்ந்திருந்தேன்.
நேரம் பார்த்து மொழி பெயர்ப்பு சமந்தப்பட்ட கேள்வி ஒன்றைக் கேட்டேன். அதற்கு கவிஞரும், ஞானியும் அவர்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்கள். அவருடைய மொழி பெயர்ப்பு மற்றும் கட்டுரை குறித்து யாரும் பேசாதது வருத்தமாக இருந்தது. ஒரு படைப்பாளி நம் முன் உரையாடுகிறார் என்றால், அவர் நமக்களித்த முக்கியமான படைப்புகளை ஞாபகப்படுத்தி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. மேலும் சுகுமாரனின் கவிதைகளை முன்வைத்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது சற்றே ஏமாற்றமாக இருந்தது.

கவிஞர் சுகுமாரின் வலைப்பூ முகவரி: vaalnilam.blogspot.com
விக்கிபீடியா: கவிஞர் சுகுமாரன்

சுகுமாரைப் பற்றிய கட்டுரைகள்:
1. உருமாற்றத்தின் ரகசியம்: பாவண்ணன்
2. கவிஞர் சுகுமாரன் - கவிதைத் திருவிழா 14 - அந்திமழை
3.
சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல படைப்பாளிகளை தூரத்திலிருந்தும், அருகில் சென்றும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் கவிஞர் வா மணிகண்டன் சுவாரஸ்யமான நண்பர். 10 நிமிடங்கள்அவருடன் பேசியதில் 25 கவிஞர்களின் பெயரை உச்சரித்தார். அவர்களில் சுகுமாரனின் பெயரும் ஒன்று. சுகுமாரனைப் பற்றி எழுதிய பதிவு: கவிஞர் சுகுமாரன்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்
தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.

2. உரையாடல் கவிதையை மையமாக வைத்து இருந்ததால்
சமயத்தில் கவனம் சிதறியது. ஆகவே தகவல் பிழைகள் ஏராளமாக இருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன்.
3. இங்கு பயன்படுத்தியிருக்கும் கவிதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் சரி செய்துவிடுகிறேன்.


4 comments:

  1. கிருஷ்ணா...

    பதிவுக்கு நன்றி.

    சுகுமாரனின் பூமியை வாசிக்கும் சிறுமி வாசித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான தொகுப்பு....காலத்தைக் கடந்தும் அவர் பெயர் சொல்லும்.

    'ஒவ்வொரு புத்தகமும்
    ஒவ்வொருவருக்கும்
    ஒவ்வொரு புத்தகமாவது
    எத்தனை இயல்பானது!'

    என்ன ஓர் ஆழம். இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வரிசையில் இருக்கின்றன. கண்களால் தழுவியே நகர்கிறேன் ஒவ்வொரு முறையும். ஏற்கனவே ஆரம்பித்த புத்தகங்களை முதலில் முடிக்க வேண்டும்.

    சிவராமன், ஒருமுறை கவிஞர் சுகுமாரன் அவர்களை அறிமுகப்படுத்தினார். வணக்கம் என்றேன். வணக்கம் என்றார். புன்னகைத்தேன் - தார். பின் விலகி அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டோம். ஆதர்சங்களைச் சந்திப்பதில் அழகான ஒரு சங்கடம் இருக்கிறது. அது அழகென்றாலும் அடிக்கடி நிகழ வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன் இப்போதெல்லாம்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. நன்றி கிருஷ்ணா. :)

    2000 வருஷ பாரம்பரியம் ஒரு சுமை கூடத்தான். இவர் மொழிபெயர்த்த கவிதை ஒண்ணு படிச்சிருக்கேன். பாப்லொ நெருதாவோடது.

    ReplyDelete
  3. கிருஷ்ண பிரபு, உங்கள் வாசிப்பு தாகமும் எழுத்தாளர்களைத் தேடித் தேடிச் சந்திக்கும் ஆர்வமும் மலைப்பாக இருக்கிறது. சம்பவங்களை அழகாக விவரிக்கிறீர்கள். மிக நன்றாக எழுதுகிறீர்கள்..

    யாவரும் கேளீர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். கேளிர் என்பதுதான் சரி. ஒருவேளை நீங்கள் அவசரத்தில் டைப் செய்திருக்கக் கூடும். மற்றபடி.. நேரம் கிடைத்தால் பேசுங்கள்.

    ReplyDelete
  4. தவறினை சுட்டியதற்கு மிக்க நன்றி தமிழ்... கண்டிப்பாக பேசலாம்...

    ReplyDelete