Monday, March 14, 2011

கேணியில் ட்ராஸ்கி மருது - 01

12-08-1953-ல் மதுரையில் இருக்கும் கோரிப்பாளையம் என்ற பகுதியில் ஓவியர் ட்ராஸ்கி மருது பிறந்தார். நவீன ஓவியத்தின் கூறுகளை ஆதிமூலம், தட்சிணா மூர்த்தி, நாகை பாஸ்கர் போன்றவர்களுக்குப் பின் வெகுஜனப் பத்திரிகையில் பயன்படுத்திய முன்னோடிகளில் மருதுவின் பங்கு தனிச்சிறப்பு நிறைந்தது. பள்ளி வாழ்க்கையை மதுரையிலும், அதன் பிறகு ஓவியத்தை பாடமாக எடுத்து சென்னை கலைக் கல்லூரியிலும் படித்தவர். ஓவிய பட்டயப் படிப்பில் 1976ஆம் ஆண்டு, முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1977-ஆம் ஆண்டு அதே கல்லூரியின் முதுநிலை பட்டயப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று 1978-ல் டெல்லியிலுள்ள Garhi Arts Studio -வில் சேர்ந்து வரைகலை பயிற்சி பெற்றவர். மத்திய அரசின் Weavers Service Center-ல் டெக்ஸ்டைல் டிசைனராக சிறிது காலம் பணியாற்றியவர். அனிமேஷன் துறையில் ஆர்வம் இருந்ததால் வேலையை ராஜினாமா செய்தவர்.

1980-களில் சினிமா போஸ்டர் டிசைனராகவும், 1990-களில் தமிழ், தெலுங்கு மற்றும் இதர தென்னிந்தியப் படங்களின் Special Effects & Digital Effects இயக்குனராகவும் பணியாற்றியவர். முதன் முதலில் கணினியைப் பயன்படுத்திய தமிழக ஓவியர்களில் ஒருவர். தமிழ்நாடு திரைப்பட இயக்கத்தைத் துவக்கியவர்களில் ஒருவர். அனிமேஷன் பயிலரங்குகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகளில் முனைப்புடன் செயல்படுபவர். தேவதை, நந்தலாலா போன்ற படங்களின் கலை இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர் என்று அவருடைய ஓவியம் சார்ந்த பன்முகத் தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த மாதக் கேணி சந்திப்பில் தன்னுடைய ஓவியம் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்.

காந்தியின் வார்தா ஆசிரமத்தில் சேர்வதற்காக என் தாத்தாவின் ஒரே வாரிசான அப்பா 14 வயதில் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார். சில மாதங்கள் கழித்து இந்த விவரம் தெரிந்த தமிழர் ஒருவர் வீட்டிற்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தியிருக்கிறார். அப்பாவையும் ரயிலில் ஏற்றி மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்.

அதன்பின் அவருக்கு இலங்கைப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பண்டார நாயக் ஆட்சி காலத்தில், தலைமறைவு வாழ்க்கை வாழ மதுரைக்கு வந்த ட்ராஸ்கியவாதிகளுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே என்னுடைய பெயரை 'ட்ராஸ்கி' என்று வைத்தார். 'மருது' என்பது குடும்பப் பெயர். குடும்பத்தின் ஒரே மகன் என்பதால் இயக்கவாதிகள் அவரை தீவிர அரசியலில் ஈடுபடுத்தவில்லை. கொல்வினார் டி சில்வா, என்.எம்.பெரேரா போன்றவர்களுடன் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை எல்லாம் நடத்தி இருக்கிறார். அப்பாவிற்கு பெரியார் மீது ஈடுபாடு இருந்தது. அதனால் பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிகை, திராவிட நாடு இவைகளெல்லாம் சிறுவயதிலேயே படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. புராண, இதிகாசங்களை கேலி செய்து வரும் சித்திரக் கதைகளை (Comics) ஆர்வத்துடன் படித்த ஞாபகம் பசுமையாக இருக்கிறது. சிறுகதை, நாவல், இலக்கியம் சார்ந்து கொஞ்சமாக படித்திருக்கிறேன்.

பிறந்த நாளுக்குக் கூட புத்தகங்களை பரிசாகக் கொடுப்பதை என் தந்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய நண்பர்களுக்கும் புத்தகங்களையே பரிசாகத் தருவார். சேகுவேராவின் வாழ்க்கை, தான்பரீனின் இயக்கம், மருது பாண்டியர்களின் புத்தகம் என பலவற்றையும் படிக்கக் கொடுப்பார். அவற்றில் ஓரியன்ட் லாங்மேன் தமிழில் வெளியிட்ட வீர சிவாஜி, மார்கபோலோ போன்றவை என்னை அதிகம் கவர்ந்தன. திப்பு சுல்தான், கான் சாஹிப், குஞ்ஞி மரக்காயர் போன்ற கலகக்காரர்களைப் பற்றியும் சிறுவயதிலேயே படிக்கக் கிடைத்தது. தாத்தா ஊரில் செல்வாக்குள்ள மனிதர் என்பதால் அப்பாவை கவுன்சிலர் பதவிக்கு நிற்குமாறு வற்புறுத்தினார்கள். சங்கரையா வருவதற்கு முன்பு அதற்கான வாய்ப்பிருந்தது. மேடைப் பேச்சு, கட்சிப் பணி, அரசியல் செயல்பாடு ஆகியவற்றில் அப்பாவிற்கு ஆர்வமில்லை என்பதால் மறுத்துவிட்டார்.

மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பாரதி புத்தக நிலையம் இருந்தது. அப்பாவின் நண்பரான சுவாமிநாதன் அதனை நடத்தி வந்தார். எனவே அப்பாவுடன் அங்கு செல்வது வழக்கம். விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் விருப்பமுடன் செல்வேன். இருவருக்குமே பெரிய மனிதர்களுடன் தொடர்பிருந்தது. அவர்களெல்லாம் மதுரைக்கு வரும்பொழுது கட்டிடத்தின் மேல்தளத்திலுள்ள அறையில் தான் தங்குவார்கள். ஜீவானந்தம், பாரதிதாசன் போன்றவர்கள் கூட தங்கியிருக்கிறார்கள். அங்குதான், "ஓவியம் வரைவது எப்படி?" போன்ற புத்தகங்களை படிக்கக் கிடைத்தது. மாலை முழுவதும் அங்குதான் இருப்போம். நான் ஆரம்பத்தில் இருந்து ஆங்கில வழிக் கல்வியில் படித்தேன். அப்பொழுது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஓர் அளவிற்கு மேல் ஆங்கில வழியில் படிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே தமிழ் வழிக் கல்விக்கு மாற்ற என்னுடைய மாமா யோசனை கூறினார். அதன்படியே தமிழ்வழிக் கல்விக்கு மாற்றிவிட்டார்கள்.

அந்நேரத்தில் சின்னம்மாவின் திருமணம் சென்னையில் நடந்தது. அதற்காக எல்லோரும் சென்றிருந்தோம். என்னுடைய குடும்பத்தினர் சினிமா துறையில் தொடர்புடையவர்கள். சின்னத் தாத்தா M S சோலைமலை பிரபல கதை வசனகர்த்தா. 'பாகப் பிரிவினை', 'பாவ மன்னிப்பு', 'பதிபக்தி' போன்ற வெற்றிப் படங்களின் வசனகர்த்தா அவர்தான். டைரக்டர் பீம்சிங் திருப்பதியிலிருந்து வந்தவர். அவருக்கு மதுரை, திருநெல்வேலி, தென்மாவட்டங்களின் வாழ்வியல் கலாச்சாரம் தெரியாது. அவருடைய படங்களில் அந்தந்த வட்டார வழக்கங்கள் தெளிவாக இருப்பதற்கு தாத்தாதான் காரணம். நடிகர் S S ராஜேந்திரன் (SSR) என்னுடைய பெரியப்பா மகன். SSR பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்கள் கூட எடுத்தார்.

திருவிளையாடல் படம் வெளிவந்த பின் சென்னை வர நேர்ந்தது. தாத்தாவின் மூலம் ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். படத்திற்காக போடப்பட்ட அரண்மனை போன்ற SetUp-ல் உலாவியது மறக்க முடியாத அனுபவம். எல்லோரும் ஷூட்டிங் பார்க்க சென்று விடுவார்கள். யாருமற்ற அரங்குகளில் தனியாக நின்று கொண்டிருப்பேன். இல்லாத ஒன்றை இருப்பது போல காண்பிக்கும் அந்த மேஜிக் என்னை மயக்கியது. அரண்மனை போன்ற பெரிய Setup-ல், பூப்போன்ற டிசைன்களைப் பேப்பரில் வரைந்து மொசைக் போல தரையில் ஒட்டியிருப்பார்கள். அவற்றை உரித்தெடுக்க கணுக்காலுக்கும் அதிகமாக தண்ணீரை ஊற்றி ஊற வைத்திருந்தார்கள். தண்ணீரில் நின்றுகொண்டு காலியான அரண்மனை சிம்மாசனங்களையும், இருக்கைகளையும் பார்ப்பதற்கு விநோதமாக இருந்தது. சிவாஜி விறகு விற்கும் வீதி போன்ற SetUp-ல் கூட தன்னந் தனியாக அலைந்திருக்கிறேன். சினிமா உருவாகும் இடத்தில் இருக்கிறோம் என்பது சிலிர்ப்பாக இருந்தது. இந்த அனுபவங்களே ஓவியம் சார்ந்த என்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

பள்ளி அளவிலான ஓவியப்போட்டி எங்கு நடந்தாலும் என்னுடைய பள்ளியின் சார்பாக கலந்துகொண்டு பரிசினை வாங்கிவருவது வழக்கமானது. அப்படி ஒருமுறை நடந்த போட்டியில் சென்னை ஓவியக் கல்லூரியில் இருந்து ஓர் ஆசிரியர் வந்திருந்தார். என்னுடைய வரையும் திறமையைப் பார்த்துவிட்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு ஆலோசனை கூறினார். எனக்குள் ஏற்கனவே இருந்த முடிவுக்கு அச்சாணி போல அது அமைந்தது. ஓவியக் கல்லூரியில் சேர எட்டாவது படித்திருந்தால் போதும். எனவே அதற்கு மேல் படிக்கமாட்டேன் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். வீட்டிற்கு தெரியாமல் சென்னைக் கல்லூரிக்கு விண்ணப்பமும் அனுப்பிவிட்டேன். அவர்களும் நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்ததால் நேர்முகத்திற்கு அந்த ஆண்டு செல்ல முடியவில்லை.


வேறு வழியில்லாமல் ஒன்பதாவது சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் National Geography-ல் அனிமேஷன் பற்றி வெளியான 27 பக்கக் கட்டுரையை வாசித்தேன். அதற்கு முன்புவரை அனிமேஷன் எப்படி செய்கிறார்கள் என்று தெரியாது. பின்னணியைத் தனியாகவும், அசையும் பிம்பங்களைத் தனியாகவும் வரைகிறார்கள் என்ற அடிப்படை உண்மைகளைக் கூட அதிலிருந்துதான் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் 101 Dalmatians படம் மதுரைக்கு வந்தது. பின்னணிக்காக ஒருமுறை, அனிமேஷனுக்காக ஒருமுறை, இயக்கத்திற்காக ஒருமுறை என்று ஒரே நாளின் நான்கு காட்சிகளை தொடர்ந்து பார்த்தேன். வீட்டில் என்னைக் காணாமல் தேடியிருக்கிறார்கள். மாமாதான் திரையரங்கிற்குச் சென்று பார்க்கச் சொல்லி இருக்கிறார். உறவினர்கள் வந்து அடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். புதுமைப் பித்தனையும் அந்த வயதில் தான் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய கதைகள் பிடித்திருந்ததால் தொடர்ந்து வாசித்தேன்.


இரண்டாவது முறை ஓவியக் கல்லூரியில் விண்ணப்பித்த போது, வீட்டில் அனுமதி பெற்று சென்னைக்குச் சென்றேன். ஆரம்பத்தில் அப்பா அனுப்புவதற்குத் தயங்கினார். ஓவியத்தைப் படித்தால் எதிர்காலத்தில் தேவையான அளவிற்கு பொருளீட்ட முடியுமா என்று யோசிக்கலானார். இந்தத் துறைக்கு இருக்கும் வரவேற்பும், வாய்ப்புகளும் சரியாகத் தெரியாததால் குழப்பத்துடனே இருந்தார். தாத்தாவின் சமாதானத்தின் பொருட்டாக மட்டுமே என்னை படிக்க அனுப்பினார். சென்னையில் தாத்தா இருந்த இரண்டு தெருக்கள் தள்ளி ஓவியர் சிற்பி தனபால் இருந்தார். அவர் எழுதிய 'உயிருள்ள படிப்பு' என்ற ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையை படித்திருக்கிறேன். ஓவியக் கல்லூரியில் தரப்படும் பயிற்ச்சிகள் குறித்து தெளிவாக அதில் எழுதியிருந்தார். ஓவியத்தை பாடமாக எடுத்துப் அந்தக் கட்டுரையும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. வரைந்திருந்த படங்களை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். அது RB பாஸ்கருக்கு திருமணம் முடிந்த இரண்டாம் நாள். ஆதிமூலம், கன்னியப்பன் போன்ற முக்கியமான ஓவியர்கள் அங்கிருந்தனர். படங்களை அவர்களிடம் கொடுத்து கருத்துக் கேட்டேன். எல்லோரும் பாராட்டினார்கள்.

கேணி ஓவியர் சந்திப்பு - ட்ராஸ்கி மருது - 02

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. அடுத்த மாதம் நடக்கும் கேணி சந்திப்பில், ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா I.A.S அல்லது கர்னாடக சங்கீத கலைஞர் T.M கிருஷ்ணா இவர்களில் யாரேனும் ஒருவர் பங்குகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.


அழகர்சாமியின் குதிரை - இசை வெளியீடு

முகப்புத்தகத்தில் (FaceBook) பாஸ்கர் சக்தியின் அழைப்பு:

நண்பர்களே!`அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். சத்யம் திரையரங்கில் வரும் புதன்கிழமை (16.03.11)மாலை 6.30 மணிக்கு...அவசியம் வாருங்கள்.

சிறுகதை எழுத்தாளராக பாஸ்கர் சக்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய "வேலப்பர் மலை, காளான், ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன், தக்ளி" போன்ற கதைகளின் வரிசையில் தேனீ சார்ந்த ஹாஸ்யக் கதையான "அழகர் சாமியின் குதிரை"யும் ரொம்பப் பிடிக்கும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்றவுடன் வியப்பு மேலிட்டது. அதே நேரத்தில் சந்தோஷமும் கூட. பல படங்களுக்கு வசனம் எழுதி இருந்தாலும், அவருடைய கதை திரைப்படமாவது இதுதான் முதல் முறை. இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார்.

நண்பர் வெங்கட்ராமனின் தொகுப்புகள் வலைப்பதிவில் முழுக்கதையும் படிக்கக் கிடைக்கிறது: அழகர் சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி


சில மாதங்களுக்கு முன், அவள் விகடனில் பாஸ்கர் சக்தியின் தாயார் பேட்டி கொடுத்திருந்தார்கள்.

"எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பான். கதை எழுதறேன்னு வேற சுத்திட்டு இருந்தான். அவனோட கதையை சினிமா எடுக்கறாங்கலாமே. சந்தோஷமா இருக்கு. அவனோட கதையே அவனை காப்பாத்திடுச்சு" என்று சொல்லி இருந்தார்கள். பேட்டியுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார்கள்.

அது எப்படி பாஸ்கர்? ஒண்ணுமே தெரியாத பச்ச கொழந்த மாதிரி மொகத்தை வச்சிக்கினு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறிங்க? என்று கேட்டிருந்தேன்.

"நம்ம மொகத்துல என்ன வாழுது!. எல்லாம் தேனி ஈஸ்வரின் கேமரா செய்யற விஷயம்" என்றார்.

அதே தேனி ஈஸ்வர் தான் இந்த படத்தின் மூலம், முதன் முறையாக ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன். இசைகூட இசைஞானிதான் கவனித்துக் கொள்கிறார். முக்கியமான பணிகளை தேனி மனிதர்களே கவனித்துக் கொள்வதால் மண்ணின் மனம் குறைவில்லாமல் வீசும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியே படம் திரைக்கு வரும் நாளையும்தான்.

இசை வெளியீட்டிற்கு தங்கையின் புருஷனுடன் செல்ல இருக்கிறேன். உள்ள விடலேன்னா என்ன பண்றது? நம்ம என்ன காட்டிற்கா போகப்போகிறோம். சத்யம் திரையரங்கிற்கு தானே. வர்றவங்க போறவங்கள வேடிக்கைப் பார்த்துட்டு வந்துட வேண்டியதுதான். இசை வெளியீட்டிற்கு இளையராஜா வருவதாக பாஸ்கர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்பொழுதே என் கால்கள் அரிக்கிறது.

:-)

பாஸ்கர் சக்தியின் சார்பாக "வருக... வருக..." என்று அடியோன் எல்லோரையும் வரவேற்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் விழாவில் தயக்கமில்லாமல் கலந்து கொள்ளலாம்.

நன்றி...

Friday, March 11, 2011

தியேட்டர் லேப் - 6வது ஆண்டு விழா

"தியேட்டர் லேப் வழங்கும் 'சப்தங்கள்' நாடகத்தில் பஷீராக நடிக்கப் போகிறேன். பம்மல் சம்மந்த முதலியாரின் 'சங்கீதப் பைத்தியம்' அதைத் தொடர்ந்து அரங்கேற இருக்கிறது. என்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்களேன்" என்று நாடக நடிகர் பாரதிமணி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பிடித்த எழுத்தாளரின் பாத்திரத்தில் மனதிற்குகந்த நண்பர் நடிப்பதைத் தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லா நாடகங்களும் மாலையில் தான் அரங்கேறும். இதுவோ காலை 10 மணிக்கு அரங்கேற இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி சரியான நேரத்திற்குச் சென்றிருந்தேன்.

நாடகம்: சப்தங்கள் (வைக்கம் முகமது பஷீர்)
தமிழில்: குளச்சல் மு யூசுப்

இருளின் அடர்த்தியில் நாடக மேடை தனித்திருந்தது. பட்டு போன்ற ரோமங்களைக் கொண்ட பூனையின் முதுகினைத் தடவுவதுபோல கால்களால் கீழ் தளத்தைத் தேய்த்தவாறு அரங்கின் கடைசி இருக்கைக்கு முன்னேறினேன். இருட்டுக்குப் பழகிய கண்களுக்கு மேடையுடைமைகள் (புத்தகங்கள், மதுக்கிண்ணம், Flask, சட்டி, ஜோல்னாபை) தென்பட்டது. யாருமற்ற மேடையின் அழகு சற்றே கூடியிருந்தது. நாடகம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பவா செலத்துரையின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இருபது நிமிடம் கழித்து திரையிடல் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. ஊன்றுகோலைப் பற்றியவாறு இருட்டின் நிழல் போல பாரதிமணி மேடையில் தோன்றினார்.

பஷீரின் படைப்புகளை நினைக்கும் பொழுது குளச்சல் மு யூசுப்பை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு முன் சிலர் மொழி பெயர்த்திருந்தாலும், மூலத்தின் சாயலைக் குலைக்காமல் ஞாயம் செய்தவர் யூசுப் தான். பஷீரின் தனித்தன்மையே அவருடைய வட்டார மொழியும், எளிமையும் தான். பெண்களின் வனப்பையும் அழகையும் படைப்பாளிகள் இலக்கியமாக்கினால், வாயுத் தொல்லையால் காற்றுப் பிரிவதை (குசு) சிறுகதையாக்கியவர் பஷீர். சப்தங்கள் அவருடைய படைப்புகளில் சற்றே வித்யாசமானது. இராணுவ வீரனின் ஊசலாடும் மனநிலையும், தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியுமே கதையின் மையக்கரு. பஷீருடனான உரையாடலில் காட்டருவிபோல் தன்னுடைய போக்கில் செல்லும் அவனுடைய பகிர்தலே கதையின் நீட்சி. கதை சொல்லலில் சிக்கலான நடையையும், முரணான வடிவத்தையும் பஷீர் பயன்படுத்தியிருப்பார்.

துர்நாற்றம் வீசும் உடலுடன் அழுக்கான உடையணிந்து இராணுவ வீரன் அறிமுகமாகிறான். அவனால் தண்ணீரில் குளிக்க முடியவில்லை. ஏனெனில் யுத்த ஞாபகங்களால் தண்ணீரை பூமியின் இரத்தம் என்று நம்புகிறான். நாற்சந்தியில் அனாதைக் குழந்தையாக பூசாரியால் கண்டெடுக்கப்படும் அவன், வளர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கிறான். யுத்தம் முடிந்ததும் போகும் இடம் தெரியாமல் உளவியல் சிதைவுடன் அலைகிறான். இருநாட்டு அரசியல் யுத்தத்தில் அப்பாவி வீரர்களைக் கொன்று குவித்தது அவன் மனதை அரிக்கிறது. போர் விமானத்தின் இரைச்சலும், குண்டு மழையும், யுத்தத்தின் வெப்பமும், மரண ஓலங்களும் அவனுக்கு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. மரணத்துடன் போராடும் நண்பனை கருணைக் கொலை செய்தது மனம் கூசச் செய்கிறது. அவனுடைய முதல் உடலுறவு ஆண் வேசியுடன் அமைந்துவிடுகிறது. பிறந்ததில் இருந்தே பெண்களின் வாசத்தை அறியாதவன். வனப்புடைய பெண்களை பார்க்க நேர்ந்தால் மனம் காமத்தின் இச்சையை சுரக்கிறது. இடையிடையே உரையாடல் தத்துவ ரீதியில் வளர்கிறது.

ஒரு வேசியை அவளுடைய பச்சிளங் குழந்தையுடன் சந்திக்கிறான். அவளை சல்லாபிக்க ஒருவன் அழைக்கிறான். மந்த மயக்கத்தில் மயங்கிக் கிடக்கும் இவனருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு பாழடைந்த கோவிலுக்கும் அவர்கள் செல்கிறார்கள். ஆயிரம் எறும்புகள் கடித்ததால் குழந்தை வீரிட்டு அழுகிறது. இராணுவ வீரன் குழந்தையைக் கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இச்சை தீர்ந்து இருப்பிடம் திரும்பும் வேசி குழந்தையைத் திருடுவதாக நினைத்து அவனுடைய மார்பில் எட்டி உதைக்கிறாள். பின்னால் உண்மையை உணர்ந்து பசியால் வாடும் அவனுக்கு கால் ரூபாயை வீசிவிட்டுச் செல்கிறாள். மனச் சோர்விலிருந்து தப்பிக்க தண்டவாளத்தில் தலை கொடுத்து தற்கொலை செய்ய நினைக்கிறான். அதுவும் தோல்வியில் முடிந்து தண்டவாளத்தை இரைச்சலுடன் கடந்து செல்கிறது ரயில் என்பது போல கதை முற்றுப் பெரும்.

நோயுற்ற மனநிலையின் முனகலும், காமத்தின் ஏக்கங்களும், தனிமையின் விகாரங்களும் தான் சப்தங்களாக நாவல் முழுதும் வெளிப்படுகிறது. முழுக் கதையின் பரிமாணத்தையும் வெளிப்படுத்தி நிகழ்த்துக் கலையை உச்ச அனுபவமாக மாற்றுவது சவால் நிறைந்த பணி. அந்த வகையில் பாரதி மணியின் நீண்ட கால அனுபவம் கவர்ச்சியாக இருந்தது. எள்ளலான கேள்விகளைக் கேட்கும் பொழுது அரங்கம் அதிர சிரிக்க வைத்தார். புரியும் படியான ஒரு சில மலையாள வசனங்களும், தமிழ் உச்சரிப்பின் லாவகமும், உடல் மொழியும் நாடகத்துடன் ஒன்ற வைத்தது.

இராணுவ வீரன் கதாப் பாத்திரத்தில் ஏறக்குறைய 10 நபர்கள் நடித்தனர். இந்த முயற்சி நாடகத்தின் இயல்பை சில இடங்களில் நீர்த்துப் போகச் செய்தது. "ஒரே பாத்திரத்தில் இத்தனை நபர்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன?" என்ற கேள்வி எழுந்தது.

"ஒவ்வொரு கலைஞருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அதற்கேற்ப அவர்களைப் பயன்படுத்துவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கிருக்கிறது. மற்றபடி வேறெந்தக் காரணமும் இல்லை" என்று C.H.ஜெயராவ் விவாதத்தின் போது பகிர்ந்துகொண்டார். இதற்கு முன் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் நடந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஆண் வேசியாக மேடையேறும் திருநங்கை ரம்யா வராத காரணத்தால் வேசியின் கதாப் பாத்திரத்தையும் சேர்த்து சபரி ஏற்றார். மேடையின் இண்டு இடுக்கு விடாமல் காமத்தைக் கொப்பளித்து சுழன்றாடினார். விளிம்பு நிலை சபலதாரிகளாக நடித்த இருவரும் மெச்சும்படி செய்திருந்தனர்.

சப்தங்கள் படித்து முடித்ததும் குளச்சல் மு யுசுப்பிற்கு தொலைபேசி இருந்தேன். உரையாடலின் சில பகுதிகள் தெளிவான உச்சரிப்பிலும், சில பகுதிகள் வட்டார வழக்கிலும் கலந்து இருக்கும். முதல் அத்தியாயத்தில் கூட இந்த வேறுபாட்டினைக் காண முடியும். நாவலின் இறுதிப் பகுதிகளான வேசியுடனான உரையாடலில் அதனைத் தெளிவாக கவனிக்க முடியும். அதனைக் குறிப்பிட்டு அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

"அதைத் தெரிந்தேதான் பஷீர் பயன்படுத்தி இருக்கிறார். மொழிபெயர்ப்பின் போது அதைப்பற்றி பலவாறு யோசித்தேன். சேலம், நாகர்கோவில், கோவை, சென்னை என்று பல வட்டார மொழிகளை தேர்வுசெய்து பார்த்தோம். இறுதியில் சென்னை மொழி இசைவுடன் இருந்ததால் பயன்படுத்திக் கொண்டோம். குறிப்பாக கடைசி மூன்று அத்யாயங்களில் சென்னை மொழியின் வீச்சு அதிகமாக இருக்கும்." என்று பகிர்ந்து கொண்டார். நாடகத்தில் கூட கடைசி பகுதி வெகு சிறப்பாக வந்திருந்தது. குழந்தையின் அழுகையையும், துப்பாக்கியின் வெடிச் சத்தத்தையும், ரயிலோசையையும் பின்னணியில் சேர்த்திருந்தால் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். மொத்தத்தில் சில குறைகளும், பல நிறைகளும் கொண்ட சப்தங்கள் நாடகம் பார்க்க வேண்டி ஒன்று. முழு நாடகத்தையும் வீடியோவில் பதிவு செய்தார்கள். சில நாட்களில் விற்பனைக்கும் கிடைக்கலாம். கதைக்கு வடிவம் கொடுத்து இயக்கியவர் C.H.ஜெயராவ். மணி பாரதி உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

நடிகர்கள்: பாரதிமணி / சபரி / அருண் / சுவாமி / ஜெய் ஆனந்த் /
மணி குட்டி / லிங்கேஷ் / ஜகதீஷ் / அவிதேஜ் / சுரேந்திரன் /
விஜய் அதித்யா / கார்த்திக் / ரம்யா / பிரபாத் / மரகதம் / மணிபாரதி / ரவி



சங்கீதப் பைத்தியம்

பம்மல் சமந்த முதலியார் நவீன தமிழ் நாடகங்களின் தந்தையாகக் கருதப்படுபவர். 'சுகுணா விலாஸ் சபா' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து 96 நாடகங்களை எழுதியவர். நகைச்சுவை, நையாண்டி, சமூக அரசியல் சாடல் போன்றவற்றை கருவாகக் கொண்ட இவரது நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

சங்கீதப் பைத்தியம் 75 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட முழு நீள நையாண்டி நாடகம். ஓர் அரசன், தன் தாயின் ஆத்மா சாந்தியடைய நாட்டு மக்கள் அனைவரும் சங்கீத மொழியில் பேச வேண்டும் என்று ஆணையிடுகிறான். மீறினால் அபராதம் செலுத்த வேண்டும். இந்த ஆணை நாட்டு மக்களிடையே பெருத்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வியாபாரத்திற்காக அந்நாட்டிற்கு வந்து சேர்பவர்கள் திணறுகிறார்கள். பூண்டு விற்பவர்கள் முதல், பூசாரி வரை செய்வதறியாது பாடிக்கொண்டே தவிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு சாமியார் பாடியவாறு அரசனின் சமஸ்தானத்திற்கு வந்து சேர்கிறான்.

இரண்டு அண்ணன் தம்பிகள் அவரை தரிசிக்கின்றனர். அவரிடம் இசையைக் கற்றுக்கொள்ள இருவரும் பிரியப்படுகின்றனர். தம்பியானவன் சாமியாரை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைக்கிறான். அவனுடைய உள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அண்ணனோ அவரைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அரச காவலன் அவர்களுடைய சண்டைக்கிடையில் வருகிறான். பாடிக்கொண்டே இருவரும் பிரச்னையை விளக்குகிறார்கள். தம்பியானவன் கையூட்டின் மூலம் தீர்ப்பை தனக்கு சாதகமாக்குகிறான். சாமியாரும் அவனுடன் செல்கிறான்.

தம்பியானவன், சந்தேக புத்தியில் சாமியாரை அடிக்கும் பொழுது மயங்கி விழுகிறார். சாமியார் இறந்துவிட்டதாக நினைத்து, பதறிப்போய் அண்ணனின் வீட்டில் கொண்டு சேர்க்கிறான். அண்ணனோ பயந்து தம்பி வீட்டில் கொண்டு போட்டுவிடுகிறான். இருவரும் சந்நியாசியைப் பந்தாடுகிறார்கள். பிரச்சனை அரசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மன்னனின் தலைமையில் விசாரணைக் குழு கூடுகிறது. தம்பியையும் அண்ணனையும் விசாரணைக் கூண்டில் நிறுத்துகிறார்கள். யாருக்கு தண்டனைக் கொடுக்கலாம் என்று வரும்பொழுது சந்நியாசி கண்விழிக்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு சொல்கிறார். அப்படியே இசையில் தான் பேச வேண்டும் என்ற ஆணையையும் சமயோஜிதமாக தடை செய்யச் சொல்கிறார். நாடகமும் இனிதே முடிகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் நடித்தவர்களும் முக்கியத்துவம் உணர்ந்து நடித்தார்கள். குறிப்பாக சாமியார் வேடமேற்ற கார்த்திக் அருமையாக நடித்தார். அவருடைய பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திய போது கரகோஷம் அரங்கையே அதிரச் செய்தது. நாடகத்தை இயக்கியவர் C.H.ஜெயராவ். சுரேந்திரன் உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

நிறைவுப் பகுதியாக சப்தங்கள் நாடகம் குறித்து மெகா சீரியல் இயக்குனர் திருச்செல்வன், இயக்குனர் மீரா கதிரவன், கவிஞர் குட்டி ரேவதி, சிறப்புக் குழந்தைகள் பயிற்சியாளர் ஜலாலுதீன் ஆகியோர் உரையாற்றினர். சங்கீதப் பைத்தியம் குறித்து நாடக ஆசிரியர் மற்றும் பேராசிரியர் அய்யாசாமி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நீண்டகால நாடக அனுபவங்களை பாரதி மணி பகிர்ந்து கொண்டார். ISSHINRYU கராடே மாணவர்களின் சாகச நிகழ்ச்சியுடன் THeatre Lab நடத்திய 6வது ஆண்டு விழா கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தொடர்புடைய பதிவு:

பஷீரின் கதைகளில் நானும் ஒரு காதலியாவது… - குட்டி ரேவதி



Tuesday, March 1, 2011

கவிதைப் பட்டறை - இரண்டாம் நாள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை 26-02-2011 முதல் 10-03-2011 வரை வழங்கும் பதிமூன்று நாள் கலை இலக்கியத் திருவிழா பிப்ரவரி 26-ல் துவங்கியது. முதல் நாள் அரசியல் நெடி அடிக்குமென்பதால் தவிர்த்திருந்தேன். இரண்டாம் நாள் ஞாயிறு என்பதால் சொந்த வேலை காரணமாக செல்ல இயலவில்லை. விழாவின் ஒரு பகுதியான கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை ஏற்கும் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான கவிதைப் பட்டறைக்கு அ மு சையதும் வருவதாகச் சொல்லி இருந்தான். ஆகவே சுவாரஸ்யத்துடன் கிளம்பினேன். மெரினா லைட் ஹவுஸ் - சாந்தோம் - சத்யா ஸ்டுடியோ வரை வாழை மரத் தோரணைகள் நம்மை வரவேற்றன. அடடே...! கலைவிழா என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். "என் பெயரன் திருமணத்திற்கு வருகை தரும்..." என்று அச்சடித்த ப்ளெக்ஸ் பேனர்களில் மருத்துவர் ஐயாவின் சிரித்த முகம் என்னை பாதித்தது. பேருந்தோ பொறுமையை சோதிக்குமாறு நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் சென்றது. காற்றில் வாழை இலைகள் வீசிக்கொண்டு ஆடின.

சிலப்பதிகாரத்தில் ஓர் இடம் வரும். கோவலனும் கண்ணகியும் மதுரை நகரத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள். மதிலின் மேலுள்ள கொடிகள் காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை, "இந்த நகரத்திற்கு வராதீர்கள். உங்களுக்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. எனவே திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்பது போல இளங்கோ அடிகள் வேறுமாதிரி உருவகப் படுத்தியிருப்பார். கொடியின் ஆன்மா கூடு விட்டு கூடு பாய்ந்து வாழையாக பேசுகிறதோ என்று தோன்றியது.

சத்யா ஸ்டுடியோவிற்கு 11 மணி சகிதம் சென்று சேர்ந்தேன். எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் நான்கு ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் இதய வலி காரணமாக சென்ற மாதத்தின் ஒருநாள் மருத்துவமனையில் சேர்ந்ததாக நாளேடுகளில் படித்தேன். காலஞ்சென்ற மாணவியின் சார்பாக அவர்களை வெள்ளைக் கொடியுடன் விசாரித்துவிட்டுச் செல்லலாமா என்று தோன்றியது. பொடி நடையாக, ஏசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தின் (Jesus Calls) அருகிலுள்ள இசைக் கல்லூரிக்குச் சென்று விழா அரங்கினைத் தேடிக் கொண்டிருந்தேன். நடுக்காட்டில் கயவர்களிடம் சிக்கிக்கொண்ட அபலையைப் போல அரங்கினைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினேன். சையது வந்து கதாநாயகன் போல விழா அரங்கிற்கு அழைத்துச் சென்றான். விழா துவங்கியதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியர் ட்ராஸ்கி மருது, எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் பார்வையாளரோடு பார்வையாளராக அமர்ந்திருந்தனர். யவனிகா ஸ்ரீராம் தாமதமாக வந்து இணைந்து கொண்டார். கவிஞர் தேவதேவன், யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேதன் ஆகியோரை கடைசி வரை காணக் கிடைக்கவில்லை.

கவிஞர் இளையபாரதியும், உமா சக்தியும் விழாவினைத் துவக்கி வைத்தார்கள். அப்துல் ரகுமானுக்கு பதில் விக்ரமாதித்யன் தலைமை உரையாற்றினார். சங்க இலக்கியத்தையும் கவிஞர்கள் அக்கறையுடன் தெரிந்து கொள்ள வேண்டும். எதுகை மோனை, ஓசை போன்ற விஷயங்களை விடமுடியாமல் தவித்த கவிஞர்களையும், உரைநடை வசனம் போன்றவற்றை மடக்கிப் போட்டு புதுப்பாதை வகுத்த கவிஞர்களையும், பிற்கால மரபினை தோளில் சுமந்த புதுமைப்பித்தன், கு ப ரா, பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்றவர்களுடைய பங்களிப்பையும், அதனைத் தொடர்ந்து கவிதையின் வடிவத்தை அடுத்த தளத்திற்கு முன்னகர்த்திய தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன் என்று பலரையும் பற்றி பேசினார். உயிரெழுத்து, காலச்சுவடு, உயிர்மை என்று அவரவர்களுக்கு வாசகர் வட்டம் இருக்கிறது. என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே நவீன கவிதையை படைப்பாளிகள் சொந்த செலவில் தான் கொண்டு வந்திருக்கிரார்கள். சுகுமாரனையே கூட உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சமீபத்திய சங்கர் ராமசுப்ரமணித்தின் புத்தகம் நிறைய செலவாகவில்லை என்று கேள்விப்பட்டேன். ஸ்ரீ நேசன் தென்காசியில் இருக்கிறார். அவருடைய புத்தகம் ஆழி வெளியீட்டில் வந்துள்ளது. அதனை தென்காசியில் வாங்க முடியாது. திருநெல்வேலியிலும் கிடைக்காது. சென்னைக்கு வந்தால் தான் வாங்க முடியும். இந்த நிலைமையில் தான் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவதற்கு முன்புகூட கிரியாவிற்கு சென்று கொண்டாலத்தி (ஆசைத்தம்பி) வாங்கிப் படித்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன். இதையெல்லாம் மீறித்தான் நவீன கவிதைத் தொகுப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று கவிதை குறித்தும், கவிஞர்களின் நிலை குறித்தும் விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து ட்ராஸ்கி மருது உரையாற்ற வந்தார்.

அடிப்படையில் ஒரு கவிஞனின் படைப்பு நிலைக்கு என்ன மனநிலை இருக்கிறதோ, அதே தளத்தில் தான் ஓவியனின் மனநிலையும் இருக்கிறது. 1960-70 களில் சிறு பத்திரிகை நண்பர்களுடன் இயங்கும் வாய்ப்பு ஓவியர் ஆதிமூலம், தட்சிணா மூர்த்தி, நாகை பாஸ்கர் போன்றவர்களின் மூலம் கிடைத்தது. அந்த காலத்தில் சிறுபத்திரிகை நடத்துவது கடினமான செயல். 'கணையாழி, கசடதபற' போன்ற இதழ்களை உதாரணத்திற்குச் சொல்லலாம். ஓவியம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்று ஆதிமூலம் போன்றவர்கள் வலியச் சென்று சிறுபத்திரிகையில் இணைந்து பணியாற்றினார்கள். அதுவரை தனித்து இயங்கிய ஓவிய (Painting) சூழல், ஒரு காலத்திற்குப் பிறகு எழுத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த காலத்தில் நானும் அவர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அப்பொழுது தனபால், கே மாதவன் போன்றவர்கள் கூட என்னுடன் நெருக்கமாக இருந்தார்கள். சுபமங்களா-வின் ஆரம்பம் முதல் கடைசி இதழ் வரை என்னுடைய ஓவியங்கள் தான் இருக்கும். இந்த சூழல் சிறுகதை, நாவல் கவிதை என்று இயங்கிய நண்பர்களுடனான தொடர்பிற்கு வழி வகுத்தது.

பாப்லோ மேகசின் வந்த பிறகு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அழகான ஓவியங்களுக்கு பதில் சிதைந்த ஓவியத்தை படைப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சிறுபத்ரிகையின் இந்தச் செயலை பெரிய பத்திரிகைகள் கிண்டலடித்தன. சிறு பத்திரிகையில் பணியாற்றிய நண்பர்கள் 80களின் ஆரம்பத்தில் வெகுஜன பத்திரிகைகளில் சேர்ந்தார்கள். பெரிய பத்திரிகைகள் தங்களுடைய நிலையிலிருந்து மாற வேண்டி இருந்தது. கிறுக்கல் ஓவியத்தில் கூட ஏதோ இருக்கிறது என்று வாசகர்களும் கவனிக்க ஆரம்பித்தார்கள். 30 வருடங்கள் தொடர்ந்து இயங்கியதால் தான் இந்நிலை சாத்தியமானது. அட்சரத்திலிருந்து தொடங்குவதைப் போலத்தான் இதையும் கருத வேண்டும்.

படைப்பை வாசித்துவிட்டு ஓவியத்தைப் பார்க்கிறார்கள். அல்லது ஓவியத்தைப் பார்த்துவிட்டு படிக்கிறார்கள். எனவே ஓவியத்துடன் தொடர்பு கொள்ள ஒரு சிறு பகுதியேனும் அதில் இருக்க வேண்டும். படைப்பிலிருந்து தனியாக எடுத்தாலும் ஓவியம் தனித்து இயங்க வேண்டும். எழுத்து சார்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் ஏராளமாக நினைவிலிருக்கின்றன. அவற்றை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் நன்றி...என உரையாடலை முடித்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அழகிய பெரியவன் மெல்லிய சாரல் போல பேச ஆரம்பித்தார். சாரல் மழையாகி சொட்டச் சொட்ட நனைத்தது. இலக்கியத்தில் மனதிற்கு நெருக்கமாக உரையாடுவது கவிதைதான். கவிதைக்குத் தடைகள் இல்லை. அவைகள் கொடுக்கக் கூடிய படிமங்களும், அனுபவங்களும் சொல்லில் அடங்காதவை. 3000 ஆண்டுகளான கவிதை மரபில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வெளிப்படுகிறது. அதில் பாணன், பறையன், துடியன், கடம்பன், இழிசினர் போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவையனைத்தும் மனதை உறுத்தும் அதே வேலையில் இவர்கள் தான் தொல்குடிகள், இவர்கள் இல்லையேல் சமூகம் இல்லை என்பதும் புலனாகிறது. 'யோனி பேதம்' போன்ற கடுமையான சொற்களைக் கூட சங்க இலக்கியத்தில் காண முடிகிறது என்று வரிகளையும், கவிதைகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார். மேலும் மொழிவிளையாட்டு மற்றும் தத்துவ விசாரணையில் எழுதுவதுதான் நவீனம் என்ற நிலை மாறி ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புழக்கத்தை பதிவு செய்யும் சமகால படைப்பாளிகளின் கவிதைகளை ஆங்காங்கு மேற்கோள்காட்டி தலித்திய களத்தில் அவருடைய நிலைப்பாடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

RainBow (101.4) பண்பலையில் 'கடைசி பென்ச்' நிகழ்ச்சி நடத்தும் கவிஞர் சரவணனுடன் கடைசி இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எங்களுடைய வரிசையில் நடுத்தர பெண் ஒருவர் மாணவர்கள் எழுதிய தேர்வுத் தாள்களை திருத்துவதுபோல எழுதிய வார்த்தைகளை சுழித்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் உரையாற்றுவார் என்றதும் சலனமில்லாமல் எழுந்து சென்றார்.

அடிமைத் தனத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் கருவியாகப் பயன்படும் பெண் கவிஞர்களின் படைப்புகள் சார்ந்த பார்வையை பேராசிரியர் பத்மாவதி முன்வைத்தார். அவருடைய பேச்சில் பிரெஞ்சு ஆளுமைகளான சாச்சு, பாத், சௌசௌ, பொடலங்கா, பெங்களூர் கத்திரிக்கா என்று வாயில் நுழையாத பல பெயர்களும் அடிபட்டன. போலவே பிராய்டின் சில கருத்துக்களையும் மேற்கோள்காட்டிப் பேசினார். பெண்கள் சார்ந்து முறையாக கவிதை எழுதியவர்களில் கனிமொழி முக்கியமானவர் என்று பதிவு செய்தார். தமிழச்சி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, வெண்ணிலா போன்றவர்களைத் தவிர்த்த பெயர்களை உச்சரிக்கத் தயங்கினார். சிலருடைய பெயரைத் தவிர்த்து கவிதையை மட்டும் வாசித்தார். மையங்களை உடைத்து வரலாறை மீட்டெடுக்க சில வார்த்தைகள் வீரியமாகப் பயன்படுத்தப் படுகிறது. "முலைகள், யோனி" போன்ற வார்த்தைகள் எதிர்வினையை முன்வைக்கத் தான். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்றார். குடிபோதையில் சுற்றித் திரிந்த ஒவையாரின் வரலாறு இன்குலாப் எழுதியிருப்பதாக பேச்சோடு பேச்சாக பகிந்துகொண்டார்.

மதிய உணவிற்குப் பிறகு யவனிகா ஸ்ரீராம் பேசினார். ௨௦௦௦ வருட தமிழ் மரபு இருந்தாலும், மருத்துவ குறிப்புகளைக் கூட கவிதையாக வைத்திருப்பது தமிழின் சிறப்பு. வேறு எந்த மொழியிலும் இத்தகைய சிறப்பைக் காண இயலாது. எழுதத் துவங்குவதுதான் கவிதையின் துவக்கம். ஆகவே தயக்கமில்லாமல் எழுதுங்கள். தரமானதா இல்லையா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். லட்சியவாதங்கள் தோற்றபோது தோன்றியவைதான் நவீனக் கவிதைகள். மரபிலிருந்து நவீனக் கவிதையின் புள்ளி எங்கு வேறுபடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும், மாணவர்களின் எழுச்சி இதற்கு ஆரம்பமாக இருந்திருக்கலாம். குழந்தைப் பருவத்தின் விளையாட்டுதான் கவிதைகள் ஆகிறது. சேட்டைகள் தான் கவிதைகளை உருவாக்குகிறது. சிறுவயதில் பார்த்த கட்சிகளின் துருப்பு பின்னாளில் படைப்பிற்கான வித்தாகிறது.

குழந்தைப் பருவத்தில் பார்த்த செம்பருத்தி பூவாகவும், வழிபாட்டுக்கான பொருளாகவும் மட்டுமே நமக்கு அர்த்தப்பட்டிருக்கும். பள்ளிக்கு செல்லும் பொழுது ஹைபிஸ்கஸ் ரோசா சைனான்சிஸ் என்று வேறு மாதிரி தெரியவரும். கல்லூரிக்கு சென்றதும் வேறு மாதிரி அர்த்தப்படும். ஒன்றைக் குறித்தான வேறுபட்ட அர்த்தங்கள் மனதை உருத்தும்பொழுது, பறவைப் பார்வையில் பார்க்கும்பொழுது படைப்பாக வெளிப்படுகிறது. மாங்காய் என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது உங்களுடைய வாயில் நீர் சுரக்கலாம். இல்லாத மாம்பழம் எப்படி இந்த அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது.. இங்கு மாங்காய் புளித்ததோ? வாய் புளித்ததோ? என்ற சொலவடைதான் ஞாபகம் வருகிறது என்ற நீண்ட சுவாரஸ்யமான உரையாற்றினார். கவிஞர்களான சக்தி ஜோதி, உமா ஷக்தி, உமா தேவி, பாண்டியன் செல்வன் போன்றோர் கவிதை வாசிப்புடன் விழா இனிதே முடிந்தது.

ஒரே குறை என்னவென்றால், விழா துவங்க தாமதமானதால் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைப் பட்டறை துவங்கும் முன்பே திரும்பிச் சென்றுவிட்டார். "கோவப்பட்டு சென்றுவிட்டாரா?" என்றால் எனக்குத் தெரியாது. சென்னையின் வாகன நெரிசல் சொல்வதற்கில்லை. இதில் பிரபலங்களின் பெயரன், கொள்ளுப் பெயரன் போன்றோருடைய கல்யாணம் நெரிசலை அதிகப் படுத்தியிருக்கலாம். பார்வையாளர்களும், இதர விருந்தினர்களும் தாமதமாக வருவதற்கு வேறு காரணம் தேவையில்லையே. இருந்தாலும் என்னுட்பட எல்லோரும் சிந்திக்க ஒரு விஷயம் இருக்கிறது. என் வயதிலும் இரண்டு மடங்கு வயோதிகரான கவிக்கோ எப்படி சீக்கிரம் வந்தார். கவிதை என்பது சிலருக்கு ஆர்வம். சிலருக்கோ இலக்கியம். ஒரு சிலருக்குத் தான் மூச்சு.



கோடிகளை விழுங்கும் கிரிகெட்

சில நாட்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவரின் குடும்ப விழாவிற்காக 3 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்தேன். நான் எங்கு சென்றாலும் கூடுமான வரையில் அழுக்கான உடையில் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, சாயம் போன உடையில் எண்ணெய் வழியும் முகத்துடன் நுழைவாயிலை கடக்க முயன்றேன். ஓட்டலின் காவலர் என்னை வழிமறித்தார். நண்பரோ எங்களை நோக்கி ஓடோடி வந்தார். காவலரிடம் சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார். இந்த நட்சத்திர உணவகம் புறம்போக்கு நிலத்தை தேவைக்கு அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக நாளேடுகளில் படித்திருந்ததை முன்னமே நண்பரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

"இத பாருடா... பொறம்போக்கு மாதிரி சுத்தறவனுக்கே பொறம்போக்கு நெலத்த சொந்தம் கொண்டாட முடியல. உள்ள நொழையவும் சிபாரிசு தேவைப் பட்றத எங்க கொண்டு சொல்ல?" என்றேன்.

"ரஜினி மாதிரி தத்துவம் புழிய ஆரம்பிச்சிட்டியா?" என்றான் நண்பன்.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு சார்ந்து இயங்கக் கூடிய பொது நிறுவனங்களும் சராசரி மக்களை கோமாளிகளாக்கவே செயல்படுகிறது. அந்த வகையில் கிரிக்கெட் தொடர்புடைய சமீபத்திய ரங்கராஜ் பாண்டேவின் கட்டுரை எனக்கு முக்கியமாகப் படுகிறது.

*கோடிகளை விழுங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்:தமிழக அரசுக்கு நோட்டீஸ்*

சென்னையின் மையப்பகுதியில் ஒரு கிரவுண்டு விலை என்ன என்பது தெரிந்தவர்களுக்கு, இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள, 347 கிரவுண்டு நிலத்தை, சொற்ப தொகைக்கு, ஆண்டு குத்தகையாக தாரை வார்த்திருக்கிறது தமிழக அரசு.

தலைநகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், உலகப் பிரசித்தம்; அதில் தான் பிரச்னையே. 1994 மற்றும் 95ம் ஆண்டுகளில், சேப்பாக்கத்தில் உள்ள, 347 கிரவுண்டு இடம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஒரு பகுதி 2015 ஆண்டு வரையும், மறுபகுதி 2025ம் ஆண்டு வரையும் விடப்பட்டுள்ளது.இந்த, 347 கிரவுண்டின் மொத்த குத்தகை தொகை, ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மட்டுமே. மாதக்கணக்கு பார்த்தால், 71 ஆயிரம் ரூபாய் தான். சென்னை அண்ணா சாலையில், இந்த தொகைக்கு, ஒரு கடை கூட வாடகைக்கு கிடைக்காது.இந்த விஷயம் நன்றாக தெரிந்தும், இவ்வளவு சொற்ப தொகைக்கு, 347 கிரவுண்டு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சரி, "பொதுநலனுக்கு தானே; போனால் போகிறது' என்றால், அதுவும் இல்லை என்றாகிறது. கிரிக்கெட் கிளப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் மைதானம், கிளப் ஹவுஸ், விருந்தினர் விடுதி, நீச்சல் குளம் மற்றும் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சங்கத்தின் உறுப்பினர்களோ, அவர்களோடு தொடர்பு உடையவர்களோ தவிர, சுத்துப்பட்டுப் பகுதிக்குள், ஒரு ஈ, காக்காய் கூட நுழைய முடியாது. சரி, உறுப்பினராகி விட்டால் போச்சு என்றால், அதற்கும் கட்டணம், லட்சங்களில் இருக்கிறது.

"அப்புறம் எங்கிருந்து பொதுநலன் வருகிறது' என கேள்வி எழுப்பியுள்ளார், இந்து மக்கள் கட்சியின் அமைப்பு செயலர் கண்ணன்.இவர் சார்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய் துறைச் செயலருக்கும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள வாலாஜா சாலை பகுதியின் வழிகாட்டி மதிப்பு, சதுரடிக்கு, 5,430 ரூபாய். சந்தை மதிப்பு ஒரு கிரவுண்டுக்கு, 5.2 கோடி ரூபாய்க்கு குறைவானதில்லை. இதை, 347 கிரவுண்டுக்கு கணக்கிட்டால், 1,800 கோடி ரூபாய். குத்தகைத் தொகை 7 சதவீதம் எனக் கொண்டால், தமிழக அரசுக்கு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் சேர்ந்து, ஆண்டுதோறும், 126 கோடி ரூபாய் தர வேண்டும்.அவ்வளவு வேண்டாம்... வழிகாட்டி மதிப்பீடையே எடுத்து கொண்டால் கூட, ஆண்டு குத்தகைத் தொகை, 31 கோடி ரூபாய் வர வேண்டும். கொடுப்பதோ, வெறும், 8.5 லட்ச ரூபாய் தான்.

இதில், வியப்புக்குரிய இன்னொரு அம்சம்: ஒரு பகுதி எட்டு லட்ச ரூபாய்க்கும், அதே அளவுள்ள இன்னொரு பகுதி, வெறும், 61 ஆயிரம் ரூபாய்க்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது தான். இதில் இருந்து, குத்தகைக்கு விடப்பட்டபோது, சந்தை மதிப்பும் சட்டை செய்யப்படவில்லை; வழிகாட்டி மதிப்பீடும் மதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.இதன் மூலம், தமிழக அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இச்சங்கங்கள் இரண்டும், லாபநோக்கில்லாமல் செயல்படும் சமூக சேவை நிறுவனங்களும் அல்ல.தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை, அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகள், ஐ.பி.எல்., போட்டிகள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் வருமானத்துக்கு குறைவில்லை. அத்தனையும் மக்கள் பணம்; இருப்பதும் மக்கள் இடம்.எனவே, சம்பந்தப்பட்ட இடத்துக்கு புது குத்தகைத் தொகையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். பழைய இழப்பை வசூலிக்க வேண்டும். அவர்கள் மறுத்தால், கிரிக்கெட் ஸ்டேடியத்தை தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய் துறைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதன் நகலை, கவர்னருக்கும் அனுப்பி உள்ளோம். உரிய பதில் வராவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

- ஆர்.ரங்கராஜ் பாண்டே

"ங்கோத்தா லாஸ்ட் ஓவர் போடறவன் எவ்வளோ பொறுப்பா இருக்கணும்? ங்கொம்மால இப்பிடி பண்ணிட்டானே?" என்று பள்ளிக்கு செல்லும் சிறுவன் முதல், கல்லூரிக்கு செல்லும் விடலையையும் சேர்த்து, அலுவலகத்திற்குச் செல்லும் இளைஞர்கள் துவங்கி, ஓய்வுபெற்ற மூத்தக்குடி வரை உதிர்க்கும் வார்த்தைகளை கதம்பமாகக் கேட்க முடிகிறது.

கிரிக்கெட் என்பது இந்தியா போன்ற நாடுகளில் பெரிய வர்த்தகம். அதை நம்பி லட்சக் கணக்கானவர்கள் பிழைக்கலாம். ஆனால் சராசரி மக்களால் 'சேரி' என்று அழைக்கக் கூடிய, கீழ் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழக்கூடிய மக்கள் வசிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட காலனிகள் சென்னையின் மையப்பகுதியில் இருக்கிறது. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லட்சக் கணக்கான குடும்பங்கள் தின வாழ்க்கையை மேற்கொள்கின்றன. அவற்றையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான குடியிருப்புகளை சென்னைக்கு வெளியில் அமைக்க அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தக் கூடிய எந்த அமைப்பையும் நான் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்துத்தான். என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாக செல்லக் கூடிய எதையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டிய கடமையை படித்தவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதிகளும், விளையாட்டு மைதானங்களும் புறநகர் பகுதிகளில் இருப்பினும் கேளிக்கைக்காகவும், பயிற்சிக்காகவும் சொகுசு வண்டிகளில் செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக எளிய மக்களை பந்தாட வேண்டாமே. ஒவ்வொரு பந்தையும் நுட்பமாக கவனித்து பகிரக்கூடிய நண்பர்கள் இதுபோன்ற விஷயங்களையும் பொதுவில் வைக்கலாமே?. தேவையான கவனிப்பை ஏற்படுத்தலாமே?

குறிப்பு: இந்தப் பதிவு கே வி ஆர், வானவில் கார்த்திக், கிழக்கு பத்ரி போன்ற கிரிகெட் பிரிய நண்பர்களுக்கு சமர்ப்பணம்...

நன்றி: தினமலர் நாளேடு.

Friday, February 18, 2011

கேணி சந்திப்பு - இந்திரா பார்த்தசாரதி

பிப்ரவரி மாதம் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா கேணி சந்திப்பிற்கு வரப்போவதாக ஞாநி சொல்லியிருந்தார். சில காரணங்களால் டி.எம். கிருஷ்ணா வரமுடியாமல் போகவே தமிழின் மூத்த படைப்பாளி இந்திரா பார்த்தசாரதி வந்திருந்து இளம் வாசகர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 1975-ல் ஆங்கில பத்திரிகையின் நேர்முகத்திற்காக முதன் முதலில் இபா-வை சந்தித்க நேர்ந்த அனுபவங்களுடன், அவருடைய இலக்கிய பங்களிப்பை விரிவாகப் பேசி சந்திப்பினை தொடங்கி வைத்தார் ஞாநி.

கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், டில்லி யுனிவர்சிட்டியில் வைஷ்ண சித்தாந்தம் - ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்ற பொருளில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளிப் பருவத்தில் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவர். கல்லூரி நாட்களில் எழுத்தாளர் நகுலனின் ஒரு வருட அறைத் தோழர். டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக 1960-களில் பணியாற்றி வந்தவர். சிறுகதை, நாவல், நாடகம் என்று படைப்பிலக்கியத்தில் கிளைவிரித்துப் படர்ந்தவர். இவருடைய குருதிப்புனல் நாவல் 1978-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. சிறந்த நாடகங்களைப் படைத்தமைக்காக சங்கீத நாடக அகாடமி (2004) விருதினைப் பெற்றவர். இந்த இரண்டு அகாடமி விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி என்ற சிறப்பு இவருக்கு இருக்கிறது.

இவர் பத்மஸ்ரீ (2010) மற்றும் சரஸ்வதி சம்மான் விருது (1999), பாரதிய பாஷா பரிஷத் விருது (1996) தமிழக அரசு விருது (1980) கஸ்தூரி ஸ்ரீனிவாசன் விருது (1987) போன்ற முக்கியமான விருதுகளையும் பெற்றிருக்கிறார். கலைமாமணி விருதினை வேண்டாமென்று புறக்கணித்ததாக பாரதிமணியின் கட்டுரையில் படித்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய உச்சி வெயில் என்ற நாவல் படமாக்கப்பட்டு ஸ்வர்ண கமல் விருதை 1990இல் பெற்றுள்ளது. உச்சி வெயில் கதையை திரைப்படமாக்கிய சேதுமாதவனின் மகன் சந்தோஷ் 'நாயகன்' என்ற இபா-வின் சிறுகதையை குறும்படமாக்கி தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத் துறை இயக்குனராக சிலகாலம் பணிபுரிந்தவர். தனது மகனின் உதவியுடன் பச்சை அட்டை (Green Card) வாங்கிக்கொண்டு அமெரிக்காவில் குடியேறியவர். விரும்பும் பொழுது சென்னைக்கு வந்து சிலகாலம் தங்கிவிட்டுச் செல்கிறார். புத்தக வெளியீடுகளிலும், நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக இலக்கிய கூட்டங்களிலும் சமீப காலமாக இந்திரா பார்த்தசாரதியை பார்க்க முடிகிறது.

நடைபழகும் குழந்தை தத்தித் தத்தி தாவிக்கொண்டு வருவது போல வாசகர்கள் நிறைந்த கேணியின் அருகில் இபா வந்தமர்ந்தார். இலக்கிய கூட்டத்திற்காக இவ்வளவு நண்பர்கள் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. என்னுடைய முதல் நாடகத்தை(மழை) சென்னையில் மேடையேற்றிய ஞாநியும், டெல்லியில் மேடையேற்றிய பாரதி மணியும் அருகில் இருப்பது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

தன்னைத்தானே அடையாளம் கண்டு கொள்ளவோ அல்லது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவோ தான் எழுதுகிறோம். இந்த விஷயத்தில் எல்லோரையும் போலவே தான் நானும். முதலில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். கால ஓட்டத்தில் எழுத்தின் சாயல் மாறி வேறிடத்திற்கு வந்துவிட்டேன். இதில் என்னுடைய ஆசிரியர் தி ஜானகிராமனின் பங்கும் இருக்கிறது. ஒரு வகையில் அவரை முன்மாதிரியாகக் கொண்டும் வளர்ந்திருக்கிறேன். அதன் பின் ஆசிரியராகப் பணியாற்றி என்னுடைய மாணவர்களான ஆதவன், இடைவெளி சம்பத் போன்ற மாணவர்களும் பெரிதாக வந்திருக்கிறார்கள். ஒருமுறை சைவ சித்தாந்தம் பதிப்பகம் வெளியிட்ட 'சிலப்பதிகாரம்' என்ற புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிப்பகத்தாரிடமே விசாரித்ததில் புத்தகம் "out of print" என்றார்கள். ஒரு நல்ல புத்தகத்தின் நிலை இதுவாகத் தான் இருக்கிறது. இது நடந்தது 1952-களில். அந்த காலங்களிலேயே நிலைமை அதுதான். இப்பொழுதும் மாறியதாகத் தெரியவில்லை.

முதுநிலை படிக்கும் பொழுது நகுலனின் அறைத்தோழனாக இருந்திருக்கிறேன். அவரின் மூலம் ஏராளமான ஆங்கில இலக்கிய நூல்கள் அறிமுகமாகியது. ஆங்கிலத்தில் வாசிக்கப் பழக்கப்பட்டதே அவரிடம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் படிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வார். அதனைப் படித்திருக்கிறேன். பிற்பாடு அவருடைய படைப்புகளிலும் அந்த குறிப்புகளின் சாரத்தை உணர்ந்ததுண்டு. நகுலன் ஒரு தனிமை விரும்பி. கூட்டத்திலிருந்து விலகி இருக்கவே ஆசைப்படுவார். என்னை சந்திக்க ஏராளமான நண்பர்கள் வருவது அவருக்கு சங்கடமாக இருந்திருக்க வேண்டும். அடுத்த வருடம் அறையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நாங்கள் சேர்ந்து வசித்ததில்லை.

டெல்லியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் புதிதாக நாடகத் துறை ஆரம்பித்த போது அவர்களுடன் இணைந்துகொண்டேன். நாடகத்துறையின் இயக்குனராக என்னை நியமித்தார்கள். எனக்கு மற்ற படைப்புகளில் கவனம் செலுத்துவதைவிட நாடகத்தில் செயல்படுவது பிடித்திருக்கிறது.

பரதன் என்றால் நடிகன் என்று அர்த்தம். அவனுக்கு நூறு பிள்ளைகள் தேவலோகத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து நாடகம் போட்டார்கள். அதுவும் அரசியல் அங்கதத்துடன். அங்குள்ள ரிஷிகளுக்குக் கோவம் வந்தது. எப்பொழுதுமே ரிஷிகளுக்கு நகைச்சுவையை ரசிக்கத் தெரியாது. எல்லாவற்றையுமே தீவிரமாக அணுகக் கூடியவர்கள். எனவே நாடகம் போட்டவர்களுக்கு சாபம் கொடுத்தார்கள். "நீங்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியது. அங்கே நீங்கள் பிராமணர்களாக பிறந்தாலும் அதற்கான மதிப்பு உங்களுக்கு இருக்காது" என்று சபித்தார்கள். கவனித்துப் பார்த்தால் இதிலுள்ள நுண்ணரசியல் உங்களுக்கு புலப்படும். ஆகவே அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை. எல்லாமே அரசியல் தான்.

இலக்கியத்திற்கு மொழி இல்லை. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, ஜேர்மன் என்று எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். அவரவர் தாய் மொழியில் எழுதுவதே சிறப்பாக அமையும். ஒரு படைப்பை மொழிமாற்றம் செய்வதில் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது. 'உச்சி வெயில்' என்ற படமாக்கப்பட்ட என்னுடைய குறுநாவலான 'மறுபடியும்' என்ற படைப்பில் ஒரு வசனம் வரும். ஆங்கிலத்தில் மொழிமாற்றியபோது சரியாக வரவில்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.

"எந்தக் கடையில் பூ வாங்கினாலோ! அடுத்த வருஷமே வீட்டுக்கு வந்துட்டா..." - இந்த வார்த்தைகளை எந்த தொனியில் கூறினாலும், சொந்த மொழி கொடுக்கக் கூடிய அர்த்தத்தை வேறு எந்த மொழியாலும் கொடுக்க முடியாது.

ஒரு முறை தற்கால இலக்கியம் குறித்து ஆராய்ச்சி செய்ய ஒரு மாணவர் என்னிடம் வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை. புதுமைப்பித்தனைப் பற்றியும், அவருடைய கதைகள் பற்றிய கேள்விகளுக்குக் கூட சரியான பதில் இல்லை.நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன் ஒரு முக்கியமான ஆளுமை. அவரை படித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவர் என்னிடம் வரவில்லை. இறுதியில் அவர் தேர்வு செய்யப்பட்டு முனைவர் பட்டம் வாங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இது போல நிறைய பேர் வாங்கி இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பணியாற்றியபோதும் சில சுவாரஸ்யமான அனுபவங்கள் நேர்ந்ததுண்டு. வார்ஸா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதர்க்காக போலந்து சென்றேன். அப்பொழுது காலவரையற்ற ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் கூட கல்லூரிக்கு சென்று பாடம் நடத்தவில்லை. மாணவர்கள் என்னுடைய வீட்டிற்கே வந்து பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஏசுவின் தோழர்கள்.

தமிழை செம்மொழியாக்குகிறேன் என்று ஏதேதோ முயற்சி செய்தார்கள். உண்மையில் அதற்கான அவசியமே இல்லை. தமிழ் - செம்மொழி என்பதை மொழி வல்லுனர்கள் ஆமோதிக்கும் விஷயம். செம்மொழி ஆவதற்கு முன்பு வரை வெளிநாட்டிலுள்ள பல பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆய்வுத்துறை இருந்து நல்ல முறையில் செயல்பட்டது. செம்மொழியாக்கப்பட்ட பிறகு அவையெல்லாம் ஒவ்வொன்றாக காணாமல் போயின.

எழுதும் பொழுது வாசகனை முன்னிறுத்தி எழுதுவதில்லை. ஓர் அனுபவத்தை நேர்மையாக கொடுக்க முடிகிறதா என்று யோசிப்பேன். 70 வருட வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ள எவ்வளவோ அனுபவங்கள் இருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கலாம் என்றவாறு ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு பேசாமல் தான் கடந்து வந்த பாதையின் பசுமையான நினைவுகளையும், தமிழ் பேராசிரியராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கிடைத்த அனுபவங்களையும், இலக்கிய மற்றும் அரசியல் நிலைப்பாட்டையும் தாவித்தாவி கதம்பமாகப் பகிர்ந்து கொண்டார். இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவருடைய தன்மையில் பதில் கூறினார்.

இதுவரை எழுதிய மொத்த சிறுகதைகளும் (கிழக்கு), 17 நாவல்களும், 4 குறுநாவல் தொகுதிகளும், 15 நாடகங்களின் மொத்தத் தொகுப்பும் (கிழக்கு) விற்பனையில் கிடைக்கிறது. அவருடைய பல நாடகங்களும், நாவல்களும்வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இபா-வின் உரையாடல் ஒரே விழுமியத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கும் இங்கும் சென்றதால் எல்லாவற்றையும் ஞாபகம் இருத்தி எழுத இயலவில்லை. பி ஏ கிருஷ்ணன், இரா முருகன், அரவிந்தன், பாலபாரதி, அண்ணாகண்ணன், பாரதிதம்பி போன்ற பல எழுத்தாளர்களும் இந்த முறை கேணிக்கு வந்திருந்தார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

1. மலர்வனம் - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
2. அண்ணாகண்ணன் புகைப்படங்கள்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை தேடித்தேடி எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.

Sunday, January 23, 2011

வள்ளுவன் கண்ட வாசுகி

தினமலர் ஆன்மீக மலரில் படித்த வரிகள். பிடித்திருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். பெண்ணடிமை தனமாகத் தெரிந்தாலும், அதனை மீறிய அதீதக் காதலும் தெரியத் தானே செய்கிறது.

பாட்டு ஒரே பாட்டு...பாட்டு ஒரே பாட்டு...

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குரல் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!.

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?.

அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல் பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறை சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், "சோறு சூடாக இருக்கிறது. விசுறு" என்றார்.

"பழைய சோறு எப்படி சுடும்?"

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்துவிட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவம் கொண்டிருந்தார். அந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

"நெருநெல் உளனொருவன் இன்றில்லை
எனும் பெருமை படைத்து இவ்வுலகு"

- என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை" என்பது இந்தக் குரலின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப் பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

"அடியிற்கிநியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ] ய்
என் தூங்கும் என்கண் இரவு"

-என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். அடியவனுக்கு இனியாளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்காதத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ? என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்த சம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!