Sunday, January 23, 2011

வள்ளுவன் கண்ட வாசுகி

தினமலர் ஆன்மீக மலரில் படித்த வரிகள். பிடித்திருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். பெண்ணடிமை தனமாகத் தெரிந்தாலும், அதனை மீறிய அதீதக் காதலும் தெரியத் தானே செய்கிறது.

பாட்டு ஒரே பாட்டு...பாட்டு ஒரே பாட்டு...

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குரல் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!.

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?.

அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல் பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறை சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், "சோறு சூடாக இருக்கிறது. விசுறு" என்றார்.

"பழைய சோறு எப்படி சுடும்?"

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்துவிட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவம் கொண்டிருந்தார். அந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

"நெருநெல் உளனொருவன் இன்றில்லை
எனும் பெருமை படைத்து இவ்வுலகு"

- என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை" என்பது இந்தக் குரலின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப் பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

"அடியிற்கிநியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ] ய்
என் தூங்கும் என்கண் இரவு"

-என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். அடியவனுக்கு இனியாளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்காதத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ? என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்த சம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

Monday, January 17, 2011

கவிதை சங்கமம், சென்னை

ஆறு மாதங்களுக்கு முன்பு, பச்சையப்பன் கல்லூரியின் மைதானத்திலுள்ள கல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வேலையை ராஜினாமா செய்வது பற்றி தீவிரமாக தனிமையில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் சிறுவர்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கால்பந்து. சிலர் ஹாக்கி. அவர்களுடைய உற்சாகக் குரல்களை விழுங்கியவாறு பறை மேள தப்பாட்ட கோஷம் என் காதில் கேட்டது. பெருங்கோஷம் வந்த திசையை நோக்கி நகர்ந்தேன். விடுதியில் தங்கிப் படிக்கும் கால்கள் மெலிந்த, வயிறு ஒட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சோதனை ஆட்டம் (ரிகர்சல்) ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான ஒரே பார்வையாளனாக அமர்ந்துகொண்டேன். நீண்ட நேர பயிற்சிக்குப் பின் ஓய்வெடுக்க வந்தார்கள். "எதற்காக இந்தப் பயிற்சி?" என்று கேட்டேன்.

"சில விழாக்கள் வருகிறது. அதற்காகப் பயிற்சி செய்கிறோம்." என்றார்கள்.

"எந்த விழா? எங்கு நடக்கிறது?" என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களுடைய படிப்பைப் பற்றி விசாரித்த பொழுது கணக்கியலும் கணினியியலும் வரலாறும் படிப்பதாகக் கூறினார்கள். அவர்கள் மீண்டும் பயிற்சிகுத் தயாரானதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

கடந்த ஞாயிறன்று கோயம்பேடு சென்றிருந்தேன். சென்னை சங்கமத்தில் அதே பறை மேள தப்பாட்ட ஒலி. கூட்டத்தோடு கூட்டமாக மையத்தை நோக்கி என்னுடைய பார்வையைச் செலுத்தினேன். கலைஞர்களில் இருவர் எனக்குத் தெரிந்தவர் போல இருந்தனர். ஆட்டம் முடிந்ததும் அருகில் சென்று கைகுலுக்கினேன். "உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்." என்றேன். அவர்களுடைய பெயர் சக்ரவர்த்தி மற்றும் குரு. வாலிப ரேகை ஓடக்கூடிய முகம்.

"ஞாபகம் இருக்கு. நாங்க பயிற்சி செய்யும் போது கல்லூரிக்கு வந்தீர்களே" என்றார்கள். சில சந்திப்புகளும் அதைத் தொடர்ந்த பின் சந்திப்புகளும் தற்செயலாக அமைந்துவிடுகிறது. சென்னை சங்கமம் நடத்தும் ஒரு நூறு கவிஞர்கள் பங்குபெற்ற கவிதை வாசிப்பிற்கு சென்றதும் அப்படித்தான். கட்டுரைகளுக்கே தகிகினதோம் போடுபவன். கவிதை என்பது அவ்வளவு சுலபத்தில் மண்டையில் ஏறாது. எனவேதான் என்னுடைய நண்பன் கூட "You are hard nut to crack" என்று எப்பொழுதும் வசைபாடுவான்.

விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழி உமாஷக்தி தொலைபேசி அழைப்பு விடுத்தார். ஆகவே செல்வதென முடிவு செய்தேன். தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நுழைந்ததும் கவிஞர் வேல்கண்ணனைப் பார்த்தேன். "எள்ளு வேணும்னா எண்ணையில பொறியலாம் எலிப்புழுக்கை எதுக்குயா பொறியனும்" என்பது போல என்னைப் பார்த்தார்.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே
கல்லாதான் பெற்றக் கவி...

என்றவாறு வான்கோழியாக வேடிக்கைப் பார்க்க வந்திருக்கேன். "பிரியாணி போட்டுரலாம்னு நெனச்சிடாதீக" என்றேன். முத்துச்சாமி, அடலேறு, அ மு சையது போன்ற கவிஞர்கள் முன் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். "இங்கிருந்தால் வேடிக்கைப் பார்க்க இயலாது" என்று கூறிக் கொண்டு பின்னால் சென்றேன். ச முத்துவேல், அகநாழிகை பொன் வாசுதேவன், தண்டோரா மணிஜி, நர்சிம் ஆகியோருடன் ஐக்யமானேன்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் கவிஞர் கலாப்ரியா வந்து சேர்ந்தார். முக்கியக் கவிஞர்களான ஈரோடு தமிழன்பன், ஞானக்கூத்தன் போன்றோரும் வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் கவிஞர் இளையபாரதி அனைவரையும் வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். ஒருவர் பின் ஒருவராக கவிதை வாசிக்கப் புறப்பட்டனர். அவர்களில் 'பாரதி' படத்தில் எட்டையபுரம் சமஸ்தான மகாராஜாவாக நடித்தவரும் அடக்கம். 24-வது நபர் கவிதை வாசிக்கும் பொழுது கனிமொழி சத்தமின்றி உள்ளே நுழைந்தார். புகைப்படக் கலைஞர்கள் மேடையைச் சுற்றி வலம் வந்தனர். அரங்க மேடையில் அவருக்கான பூங்கொத்தும், மரியாதையும் அளிக்கப்பட்டது.

ஊழலில் தொடர்புடையவர்கள் நடத்தும் சங்கம விழாவை புறக்கணிக்கிறேன் என்று கவிஞர் வா மணிகண்டன் திறந்த வெளியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதனினும் பார்க்க முக்கிய கலகத்தை ஒரு கவிஞர் (பெண்) உள்ளரங்கில் ஏற்படுத்தினார். இவருடைய கவிதையை மிகவும் ரசித்தேன். கனிமொழி கூட யதார்த்த உண்மை உணர்ந்து சிரித்தார். புலவர் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு பதவியில் இருப்பவர்களை புகழ்பாடும் கூட்டத்தினர் தலையில் ஒரு கொட்டு வைப்பது போல இருந்தது. அதன் பிறகு வாசிக்கப்பட்ட சில கவிதைகளில் பால்கனியில் நின்று கனிமொழி காற்று வாங்கினார். உணவு நாற்காலியில் தமிழச்சி தங்கபாண்டியன் வீற்றிருந்தார். சூரிய உதயத்தைப் புகழ்பாடும் கவிதைகளும் இருந்தது. சூரிய நமஸ்காரத்தைச் சொல்ல வேண்டுமா என்ன? ஐயோ... சூரிய பகவானை விட்டு விட்டோமே! தளபதிக்கும், தளபதியின் குஸ்தியாளிக்கும் கவிதைகளில் இட ஒதுக்கீடு இல்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கும்தான். இலக்கியம் ஓர் எல்லைக்குட்பட்டது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

நல்ல வேலை, சினிமா பாடல்கள் எழுதியே கவிஞர் என்றும் அரச கவிஞர் என்றும் பெயர் வாங்கிய யாரும் வரவில்லை. அரைமணி நேரத் துதிப்பாடல் கூடியிருக்கும். தனக்கான விழா எடுப்பதற்கே நேரம் போதவில்லை. வளரும் கவிஞர்களை வாழ்த்த, வழி நடத்த நேரம் இருக்குமா என்ன? யாரைச் சொல்லியும் குற்றமில்லை. தன்னைத் தானே வியாபாரப்படுத்திக் கொள்பவன் தானே கலியுக புத்திசாலி. இல்லையேல் வாரிசுகளை வியாபாரம் செய்தால் போகிறது. இதைச் சொன்னாள் நீங்கள் கோவிக்கக்கூடாது. ஒரு நல்ல காரியத்தைத் தொடங்க வேண்டுமெனில் வீட்டிலிருந்து தானே ஆரம்பிக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து வந்திருந்தவர்களுக்கு வணக்கம் கூறியவாறே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புறப்பட்டுச் சென்றார். செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதுபோல கவிதை வாசிப்பு தொடர்ந்து நடந்தது. "யோவ்... பசிக்குதுயா வெளிய போயி ஏதாவது சாப்பிட்டு வரலாம் வா" என்று முத்துவேலிடம் கூறினேன்.

"என் சொன்ன நண்ப... மரியாதைத் தேய..." என்றார்.

"யோவ்... காண்டு கலப்பாத... முதலில் ராகம் பாடுவதை நிறுத்தும். பசி காதை அடைக்குது" என்றேன்.

"அட என்னய்யா... ஒன்னும் தெரியாத ஆளா இருக்க. சிக்கன் பிரியாணி வந்து எறங்கி இருக்கு. கவிதை வாசிச்சா பண முடிப்பும் உண்டு" என்றார். நிலாரசிகனின் கவிதைத் தொகுப்பு கைகளில் இருந்தது. சில வரிகளை உருவி விடலாமா என்று யோசித்தேன்.

ஊரார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு காதலியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஊரைவிட்டு ஓடும் காதலன் போல முத்துவேலை இழுத்துக் கொண்டு பிரியாணி வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு ஓடி நீண்ட வரிசையில் கடைசியாக நின்றேன். சாப்பிட்டு முடித்தும் வெளியில் வந்தேன். நூறு கவிஞர்களில் ஒரு சிறுவன் காலையில் கவிதை வாசித்தான். குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியது. அவனை உற்சாகப்படுத்தக் கைகுலுக்கினேன். அவனுடைய ஆங்கில ஆசிரியர் மஷூக் ரஹ்மானை அறிமுகப் படுத்தினான். அவரும் ஒரு தமிழ் கவிஞர் (http://mashookrahman.com). மஷூக் தான் அவனை உற்சாகப்படுத்தி அழைத்து வந்திருந்தாராம்.

அவர் கவிஞர் என்பதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. AR ரஹ்மானுக்கு ஜோதா அக்பர் படத்தின் 'க்வாஜா எங்கள் க்வாஜா' என்ற பாடலை எழுதியவர் என்பதும் அல்ல. சினிமாவிற்கு பாடல் எழுதப் போவதில்லை என்ற முடிவெடுத்து இருக்கிறாராம். சூஃபி பற்றி நிறைய படிக்கப் போவதாகவும், கவிதை எழுதுவதில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினார். பார்க்க: யூடியூப் - மஷூக். இவர் வலைப்பதிவும் எழுதுகிறார் - கவிதை...கவிதை மட்டும்...

கவிதை வாசிப்பு மீண்டும் தொடங்கவும் உள்ளே சென்று அமர்ந்தேன். அருகில் ஒரு வாலிபர் 5 பக்க கவிதையை வைத்துக் கொண்டிருந்தார். பீதியுடன் அவரிடம் பேசினேன். MCA படித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாக விருப்பத்தின் பேரில் வேலை செய்கிறாராம். எதோ ஒரு அலைவரிசையில் அவருடைய குரல் தினமும் ஒலிக்கிறது. நேரம் எடுத்து அவர் பேசும் விஷயங்களைக் கேட்க வேண்டும். கருவறை என்ற கவிதைப் புத்தகம் வெளிவந்திருப்பதாகக் கூறினார். அவருடைய கவிதைக்கு அரங்கில் ஏக வரவேற்ப்பு இருந்தது.

ஈழக் கவிஞர் ஜெயபாரதி அவருடைய மனைவியுடன் வந்து கவிதை வாசித்துச் சென்றார். அவருடைய கவிதைகளில் இரண்டை வாசுகி ஜெயபாரதி இனிமையாகப் பாடினார். சென்னை சங்கமத்தின் இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது. இசையமைத்தவரின் பெயர் மறந்துவிட்டது. இதைச் சொல்வதற்கு என்னை எவ்வளவு திட்டினாலும் தகும்.

ச முத்துவேல், உமாஷக்தி, வேல்கண்ணன், முத்துச்சாமி, அடலேறு, அ மு சையது, பொன் வாசுதேவன், கார்த்திகா வாசுதேவன் போன்ற பல நண்பர்கள் கவிதை வாசிப்பதை நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நர்சிம் கவிதை வாசிக்க வந்து அவசர அலுவல் காரணமாக புறப்பட்டுச் சென்றார். நான்கு ஆண்டுகளில் 350 கவிஞர்கள் வாசித்த மொத்தக் கவிதையும் ஒரே தொகுப்பாக அச்சில் வர இருக்கிறது. அடுத்த புத்தகக் கண்காட்சியில் அதுவும் கிடைக்கும். சங்கமத்தை பகிரங்கமாகப் புறக்கணித்த பேரரச கவிகள் ரகசியமாக வாங்கிப் படிக்கலாம்.

வசைச் சொற்களுக்கான அகராதியை தொகுக்க யாராவது முன்வர வேண்டும் என்று கிரா சொல்லி இருக்கிறார்.கார்த்திகா வாசுதேவனிடம் கடைசி இருக்கையில் உட்கார்ந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த, என்னுடைய பாட்டி வயதில் உள்ள பெண்மணி முகத்தைத் திருப்பி "எதுக்கு டிஸ்டப் பண்றீங்க? சும்மா உட்கார முடியாதா?" என்றார். அமு சையதும், கார்த்திகாவும் என்னை சந்தேகத்துடன் பார்த்தனர். நீங்கள் என்னுடைய நண்பர்கள் தானே.? முதலில், நீங்க ரெண்டு பேரும் என்னை நம்ப வேண்டும். நான் ஒன்றும் கோபியர் கிருஷ்ணன் அல்ல என்றேன். இருவரும் சமாதானம் ஆயினர்.

பாட்டியிடம் முகத்தை நீட்டி "நான் ஒன்னும் செய்யலை" என்றேன்.

எங்களுடைய பேச்சைத் தொடர்ந்தோம். அந்தப் பெண்மணிக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை. மீண்டும் பின்பக்கம் முகத்தைத் திருப்பி "செருப்பால அடிப்பேன். கொஞ்சம் கூட மேனர்சே இல்லை. எதுக்கு டிஸ்டப் பண்றீங்க?" என்றார்கள். முன் நெற்றியில் விழுந்த நரைமுடி ஆக்ரோஷமாக காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. ஒருவனை செருப்பால் அடிப்பேன் என்று பொது இடத்தில் திட்டி, சரியான சாட்சிகள் இருப்பின், சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் குறைந்தது இரண்டு மாத சிறை தண்டனை உறுதி. இந்த விஷயம் அந்த பாட்டிக்குத் தெரியாத வரை பிரச்சனை இல்லை. தெரிந்தால் பாவம் குற்ற உணர்வில் சங்கடப்படுவார்.

"கார்த்திகா, கிராவோட அகராதிக்கு இவங்க ஒரு பெரிய களஞ்சியமா இருப்பாங்க போல. முகவரி வாங்கிக்கலாமா?" என்றேன். கடைசி கவிஞர் தன்னுடைய படைப்பை வாசித்து முடித்ததால் கூட்டம் கலைந்தது. எங்களுடைய வசைக் களஞ்சியமும் கூட்டத்துடன் கூட்டமாக சங்கமித்தது. சென்னை சங்கமத்தில் எல்லாம் சங்கமம்.

Thursday, January 13, 2011

கேணி இசை சந்திப்பு - மம்மது & அகிலா

இசைப் பண்டிதர் ஒருவர் குளித்து முடித்து, மூலவர் தரிசனம் செய்ய வீதி வழியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஆட்டு மந்தையை ஒட்டிக்கொண்டு ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் ஆடுகளை குரல் கொடுத்து ஒழுங்கு படுத்தினான் இடையச் சிறுவன். ஆடுகளின் நீச்சி வாடையும், புழுக்கையின் துர்நாற்றமும் பண்டிதரை மனம் கோணச் செய்தது. பூஜைக்குச் செல்லும் வேளையில் இதென்னடா சோதனை என்று சங்கடப்பட்டார் பண்டிதர். வீசிய காற்று இடையனின் அழுக்கான வேட்டியை மயில் தோகையென விரித்தது. இவையாவையும் தீட்டென முகம் சுளித்து ஒதுங்கிச் சென்றார் பண்டிதர். நேராக குளத்திற்குச் சென்று தலையில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று கடவுளிடம் மனமுருக வேண்டுகிறார்.

"அப்பனே, சதா சர்வகாலமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். காலம் தவறாமல் பூஜை செய்கிறேன். என்றாவது ஒரு நாள் கண்முன் காட்சியளிப்பாய் என்ற நம்பிக்கையில் எல்லா நிஷ்டைகளையும் தவறாமல் கடைபிடிக்கிறேன்" என்று உருகுகிறார்.

"......." சிலையென நின்றிருக்கிறார் எல்லாமானவர்.

பண்டிதரின் கண்களிலிருந்து குபுகுபுவென கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கண்களைத் துடைக்கும் நேரத்தில் ஒரு குரல் "குழந்தாய்" என்று கேட்கிறது. உணர்ச்சி நிலை மாறி ஆனந்தக் கண்ணீர் சுரக்கிறது. கண்களைத் துடைத்துக் கொண்டு குரல் வந்த திசையைப் பார்க்கிறார் பண்டிதர். எங்கும் அழகான கோவில் சிற்பங்கள். கோவிலில் சிலைதானே இருக்கும். "உன்னுடைய ஸ்தூலத்தைக் காண்பிக்கக் கூடாதா இறைவா?" என்று கெஞ்சுகிறார்.

"நான்தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டு உன் எதிரில் வந்தேனே. நீதான் விலகிச் சென்றாய்" என்ற குரல் மீண்டும் கேட்கிறது. தெருவீதியை நோக்கி ஓடோடிச் செல்கிறார் பண்டிதர். வீதியே மயான அமைதியில் இருக்கிறது. காற்று மட்டும் தம்புராவை மீட்டியது போல இசையுடன் செல்கிறது. அதனை ஸ்ருதியாக வைத்து உயிர் கசிய அங்கேயே ஒரு கீர்த்தனையைப் பாடுகிறார். இப்படித்தான் ராகங்களும் கீர்த்தனைகளும் உருவானதாக ஒரு நாட்டுப்புறக் கதை இருக்கிறது.

உணர்ச்சிக் கொந்தளிப்பு இசையாக வடிவம் பெரும்பொழுது "கர்நாட்டிக், ஹிந்துஸ்தானி, கஸல், தமிழிசை" என்ற பாகுபாடு இருக்கிறதா என்ன?. "ராகங்கள், கீர்த்தனைகள்" என்று வகை படுத்தப்படும் ஒலி வடிவங்கள் அனைத்தும் உணர்ச்சிகளின் உயிர்க் கீற்று. அனுபவங்களின் சாரம். உயிர் கசியப் பாடுவதால் தானே உலக மொழியாகிறது 'இசை'.

கேணி தமிழிசை சந்திப்பு வெறும் உரையாடலாக மட்டும் இல்லாமல், தமிழிசை ஆய்வாளர் மம்மதின் உரையாடலுடன் பாடகி அகிலாவின் ஒரு மணி நேர தமிழ்ப் பாடல்களுடன் இனிதே நடந்தது. மம்மது கணிதத்தில் பி.ஏ பட்டமும், தத்துவத்தில் எம்.ஏ. பட்டமும், இசையில் எம்.ஃபில் பட்டமும் பெற்றவர்.

"இன்னிசை டிரஸ்ட்" என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, அதன்மூலம் இசை மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறார். இசை பற்றிய வார்த்தைகளை பொருளுடன் அறிந்து கொள்ளும் வகையில் இசைப் பேரகராதி ஒன்றைத் தயாரித்துள்ளார். அதற்காக இந்த வருடத்தின் தமிழக அரசு வழங்கும் பாரதியார் விருது இவருக்குக் கிடைத்துள்ளது. இசையின் பல தளங்களிலும் இயங்கும் பன்முகம் கொண்டவர் நா மம்மது. நெடுஞ்சாலைத் துறையில் கணக்கராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று, தற்போது முழுநேர தமிழிசை ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தொல்காப்பிய மேற்கோளுடன் கேணி சந்திப்பைத் தொடங்கினார். படித்திருப்பீர்களே ஒற்றிசை நீடல், அளபிறந்து உயிர்த்தல். இசை என்பது Geometrical Progression என்றார்.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்காப்பியம்)

ஓர் எழுத்து எத்தனை மாத்திரைக் கொண்டு ஒலிக்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. உச்சபட்சமாக 3 மாத்திரை வரை ஒலிக்கலாம். இசையில் மட்டும் இந்த மரபை மீறி எழுத்து நீண்டு ஒலிக்கலாம் என்று அதற்கான உதாரணங்களைப் பாடிக் காண்பித்தார். இங்கு மரபு என்பது தொடர்ந்து வருமா? அல்லது மாற்றம் இருக்குமா? என்பதைப் பார்க்க வேண்டும். குரு சிஷ்யப் பரம்பரையில் மரபு தொடர்ந்து காப்பாற்றப்படும். கற்றுக் கொள்வது தொடர்ந்து மெருகேற்றப்படும். என்றாலும் தாழ்ப்பாள் போட்டு வைக்கும்போது உள்ளுக்குள் அழியும்.

கடந்த மாதம் பட்டமளிப்பு விழாவிற்காக கேரளாவிலுள்ள கோழிக்கோடு பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நடந்த கட்டுரை வாசிப்பில் 'வாமொழி வழக்கு' என்ற சுத்தமான தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை நம்மிடையே தற்போது புழக்கத்தில் இல்லை. 'வாய்மொழி வழக்கு' என்ற சொல்லை 'வாமொழி வழக்கு' என தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லை, 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கிராமியப் பாடலை மரபு மாறாமல் இன்றும் அவர்கள் தொடர்ந்து பழகி வருகிறார்கள். ஆய்வுக்காக சமீபத்தில் கூட நாங்கள் பதிவு செய்தோம். சடங்கு இசையை தொடர்ந்து அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். சடங்கு இசை என்பது இறை இசை அல்ல.

தமிழிசை வகையில் "பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், காவடிச் சிந்து, விழாப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நலுங்குப் பாடல்கள், செவ்வியல் இசை, திரையிசைப் பாடல்கள்" என்று பல பிரிவுகள் இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது கடினம். இந்த குறுகிய அவகாசத்தில் ஒரு துளியை வேண்டுமானால் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய இசை ஆய்வாளர் சம்பமூர்த்தி நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட புத்தகத்திற்கு "South Indian Music" என்று தான் பெயர் சூட்டியுள்ளார். கர்நாட்டிக் மியூசிக் என்று தனது புத்தகத்திற்கான தலைப்பாக அவர் தேர்வு செய்யவில்லை. ஒரு காலத்தில் விந்திய மலை முதல் குமரி வரை தமிழகமாகத் தானே இருந்தது. அதற்கான ஏராளமான குறிப்பு நம்மிடம் இருக்கிறது.

MS சுப்புலட்சுமி போன்ற மாபெரும் இசைக் கலைஞர்கள் இறந்துவிட்டால் கர்னாடக சங்கீதத்திற்கு மாபெரும் இழப்பு என்ற தலைப்பில் இரங்கல் செய்தி வரும். இந்த செயல் எனக்கு மிகுந்த மன வேதனையைத் தரும். ஏன்? அவர் தமிழ்ப் பாடல்களைப் பாடவில்லையா? தமிழிசை உலகிற்கு பேரிழப்பு என்று ஏன் குறிப்பிடுவதில்லை? அதற்கு பதில் "இசை உலகிற்கு மாபெரும் இழப்பு" என்று குறிப்பிடலாமே.

சில சந்தப் பாடல்களையும், திரை இசைப் பாடல்களையும் மம்மது பாடிக் காண்பித்து விளக்கம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பாடகி அகிலா தமிழ்ப் பாடல்களைப் பாட வந்தார். ஒரு ஸ்ருதிப் பெட்டியையும், ஒரே ஒரு பக்க வாத்தியத்தையும் வைத்துக் கொண்டு அருமையாக கச்சேரி செய்து முடித்தார். "பாரதியார், பாரதிதாசன், தணிகாச்சலம்" போன்றோருடைய பாடல்களைத் தேர்வு செய்து பாடினார். பக்க வாத்தியக் கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். "முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற சந்தத்தில் அமைந்த புரட்சிப் பாடல் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

மொழியா? இசையா? என்பது பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. பல நேரங்களில் மொழி ஊமையாகிறது. அதற்கினையாக பல நேரங்களில் இசை நரக வேதனையைத் தருகிறது. "கர்நாடிக் இசை, ஹிந்துஸ்தானி இசை, கஸல், வெஸ்டேர்ன் மியூசிக்" என்று இசைக்கு வட்டார சாயம் பூசுவதில் என்றுமே நாம் தயங்குவதில்லை. என்றாவது ஒரு நாள் மாபெரும் பிரளயம் வந்து பூலோகமே அழியலாம். அன்று பறவைகள் தான் வானில் பறந்து தப்பிக்கப் போகின்றன. 'கொண்டலாத்தி' என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் ஆசைத்தம்பி எழுதிய வரிகள் நினைவிற்கு வருகிறது.

ஒரு மொழியின் கடைசி மனிதன்
இறந்து போனான்

அந்த மொழியின் முதல் சொல்லைத்
தன் கூட்டில் அடைகாக்கிறது
ஒரு பறவை...

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. பிப்ரவரி 13 - 2011 அன்று நடக்கும் கேணி சந்திப்பில் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

Tuesday, January 4, 2011

திலீப்குமாருக்கு விளக்கு விருது

ஜனவரி 2, காலச்சுவடு புத்தக வெளியீட்டின் அதே நாளன்று அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நுாலக கட்டிடத்தின் ஒரு சிறு அரங்கில் விளக்கு விருது ஏற்பாடாகியிருந்தது. சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென் மற்றும் சின்ன அரயத்தி ஆகிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்த 'குளச்சல் மு யூசப்' விழாவிற்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்த்தேன். அவர் வராதது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. எனவே என்னுடைய முழுக் கவனமும் திலீப்குமார் மீது திரும்பியது. விழா தொடங்குவதற்கு முன்பே அவருடன் உரையாட நேர்ந்தது. அருகில் பாலபாரதி இருந்தார்.

"உங்களுக்கு விருது கிடைத்ததில் மிகுந்த சந்தோசம் திலிப்ஜி. அதைவிட சந்தோசம் புத்தக சந்தையில் உங்களுடைய கடவு சிறுகதைத் தொகுப்பு கிடைக்க இருப்பது" என்று வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டேன்.

"நன்றி.. இங்கே கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். புத்தகம் அச்சில் இருப்பதால் எடுத்துவர முடியவில்லை." என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது பாலபாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

"மும்பையில் இருக்கும் பொழுது, அம்பை உங்களைப் பற்றி உயர்வா சொல்லி இருக்காங்க சார். முதல் முறையா இப்போதான் நேரில் பார்க்கிறேன்."

"ஓ அப்படியா... ஸ்டைலுக்காக கறுப்புக் கண்ணாடி போட்டிருக்கேன்னு நெனைக்காதீங்க. கண் ஆபரேஷன் நடந்ததால வெளிச்சம் கண்ணைக் கூசுது. அதான்..." என்றபடி பாலபாரதியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அசோகமித்திரனின் அருகில் ஞாநி, விமலாதித்த மாமல்லன், வெளிரங்கராஜன், அழியாச்சுடர் ராம் போன்றோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். விழா ஏற்பாடாகியிருந்த அறை எங்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன், ராணுவ வீரர்களுக்கான மாலை சிற்றுண்டி ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியில் காத்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு தான் விளக்கு விழா தொடங்கியது. அங்கு நடைபெற்ற விழாவின் சுருக்கத்தை பொன் வாசுதேவன் நடத்திவரும் 'அகநாழிகை' சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தேன். ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிறது. இப்பொழுதுதான் வலையேற்ற முடிந்தது.

திலீப்குமாருக்கு விளக்கு விருது

எழுபதுகளின் இறுதிகளில் எழுதத் தொடங்கிய திலீப்குமார், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். முதல் சிறுகதையான 'தீர்வு' கணையாழியில் வெளியானதின் மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்றவர். இந்த முதல் சிறுகதை 1977-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றது. இவருடைய கதைகள் பெரும்பாலும் கோவை மற்றும் சென்னையை பின்புலமாகக் கொண்டவை. புலம் பெயர்ந்து வாழும் குஜராத்தியர்களின் அகச் சிக்கல்களையும், புறச் சிக்கல்களையும் துல்லியமாகத் தனது படைப்புகளில் பதிவு செய்தவர். எளிய சம்பவம் போலத் தோன்றும் இவருடைய கதைகள் கசப்பான யதார்த்தத்தையும், நகர வாழ்வின் நெருக்கடிகளையும் வசீகரமான நகைச்சுவை உணர்வுடன் நுட்பமாக அலசுபவை. பெண்களின் நிறைவேறாத ஆசைகளும் பாலியல் வேட்கைகளும், மரணத்தை எதிர்நோக்கும் முதியவர்களின் வெளிப்படுத்த முடியாத நிராசைகளும் இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன.

க்ரியா பதிப்பகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய திலீப் குமாரின் 'கடவு' என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது க்ரியாவில் கிடைக்கிறது. சிறந்த மொழிபெயர்ப்பாளர். 'Contemporary Tamil Short Fiction' EastWest Books பதிப்பாக 1999-ல் வெளிவந்துள்ளது. இதன் மறுபதிப்பு 'A Place to Live' என்ற தலைப்பில் 2004-ல் பெங்குவின் வெளியிட்டார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுப்பாக வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன அறிமுக நூலை 1982--ல் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் ஆர் சூடாமணியின் தேர்ந்தெடுத்த கதைகளை 'நாகலிங்க மரம்' என்ற தொகுதியாக சமீபத்தில் அடையாளம் பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்துள்ளார்.

இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், செக் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'கடிதம், நிகழக மறுத்த அற்புதம், கண்ணாடி' ஆகிய மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

நவீன தமிழ் இல்லக்கியம் குறித்து யேல், சிகாகோ, கலிஃபோர்னியா போன்ற பல்கலைக் கழகங்களிலும் ஃபிரான்சில் உள்ள INALCO ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றியிருக்கிறார்.

இவருடைய 35 ஆண்டுகால இலக்கிய ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, 2009 ஆம் ஆண்டிற்கான விளக்கு விருது திலீப் குமாருக்கு அறிவிக்கப்பட்டு, 02-01-2011 அன்று மாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த விருது அமெரிக்க வாழ் தமிழர்களின் கூட்டு அமைப்பின் மூலம், புதுமைப்பித்தன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழகப்படுகிறது. இவருக்கு முன்பு தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளான சி.சு செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாஸ், பூமணி, சி மணி, சே இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைதீஸ்வரன், விக்ரமாதித்யன் ஆகியோர் இவ்விருதினைப் பெற்றிருக்கின்றனர்.

எழுத்தாளர் வே சபாநாயகம், கவிஞர் சிபிச்செல்வன், பேராசிரியர் அ ராமசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்து 2009 ஆம் ஆண்டிற்கான விருதுக்குரிய படைப்பாளியாக திலீப்குமாரை தேர்வு செய்திருக்கின்றனர். விளக்கு விருது ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார்.

வெளி ரங்கராஜன் பேசியவை:

விளக்கு அமைப்பு பெரிய நிறுவனம் அல்ல. வெளிநாட்டு வாழ் இலக்கிய ஆர்வலர்கள் தொடங்கிய எளிய அமைப்பு. அரசாங்கத்தால் தகுதியுடைய மூத்த படைப்பாளிகள் பலர் புறக்கணிக்கப் படுகிறார்கள். மூத்த ஆளுமைகளுக்கே இதுதான் நிலைமை என்றால் வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளின் நிலை கவலைக்குரியது. இந்த நிலையில் உரிய படைப்பாளிகள் கவுரவிக்கப் படவேண்டும் என்ற ஆவலில் அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்டதுதான் விளக்கு அமைப்பு. இதுவரை பரிசு பெற்ற அனைவரும் தகுதியானவர்கள் தான் என்ற மன நிறைவு எங்களுக்கு இருக்கிறது. பாராட்டுச் சான்றிதழுடன் ரூபாய் 40,000/- ற்கான காசோலை வழங்கப்படுகிறது என்று திலீப் குமாரின் படைப்புகளைப் பற்றி பேசிவிட்டு அசோகமித்ரனை உரையாற்ற அழைத்தார்.

அசோகமித்ரன் பேசியவை:

நண்பர்களே இந்த சந்தர்ப்பத்தை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். விளக்கு அமைப்பிற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. உரியவர்களுக்குத் தான் விருது சென்று சேரும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக இயங்கும் சாகித்ய அகாடமி மீது இந்த நம்பிக்கை இருக்கிறதா என்றால் சொல்லுவதற்கில்லை. பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். விதி விளக்காக ஒருசில நல்ல படைப்பாளிகளுக்குக் கொடுத்திருப்பார்கள்.

விருது வழங்க வரணும்னு கூப்பிட்டப்போ சரின்னு சொல்லிட்டேன். ஆனால் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. மூன்று நாட்களாக ஆஸ்துமா தொல்லை. தொடர்ந்து மூக்கில் ஒழுகியது. இந்த நிலையில் விழாவுக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று யோசித்தேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ!. எனக்கு இருக்கிறது. விழா நாள் நெருங்கவும் பிரச்சனை சரியானது. மூக்கு ஒழுகிக் கொண்டே பேசினால் நன்றாகவா இருக்கும். இலக்கியக் கூட்டத்தில் மூக்கொழுகரதப் பத்திப் பேசறானேன்னு நெனைக்கக் கூடாது.

முதலில் விருதுகள் சரியானவர்களுக்குப் போகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த விருதை விட்டுவிடுங்கள். இதில் கூட இரண்டு நபர்கள் மீது எனக்கு அதிருப்தி இருக்கிறது. அதுகூட என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்ற எல்லோரும் விருதுக்குத் தகுதியுடையவர்கள் தான். அந்த வரிசையில் திலீப்குமாருக்கு கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

முதல் முறையாக திலீப்குமார் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். அதுவும் ராத்திரி 9 மணிக்கு. ஓர் எழுத்தாளனைப் பார்க்க வருவதற்கு அவர் தேர்ந்தெடுத்த நேரத்தைப் பாருங்கள். கையில் ஞானரதம் இருந்தது. அப்போ விசேஷமான இதழ் அது. அந்த காலத்திலெல்லாம் வீட்டு வாசலில் ஒருவரைப் பார்த்து, பேசிவிட்டு அப்படியே அனுப்பிவிட வசதி இருந்தது. இப்பொழுது போல இல்லை. ரொம்ப அழகாக நேர்த்தியான சஃபாரி உடை போட்டிருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவரைப் பார்த்த பொழுது, அந்த ஆடையின் சாயம் வெளுத்து அழுக்காக மாறியிருந்தது. சிறிது நாட்களில் அதுவும் கிழிந்திருந்தது.

ஒருமுறை சங்கர ராமசுப்ரமனியம் சிறுபத்திரிகை கொண்டுவந்திருந்தான். அவருடைய இலக்கிய நண்பருடன் சேர்ந்து நடத்திய ஆங்கிலப் பத்திரிகை. இந்த மாதிரி பத்திரிகைகளோட எனக்கு ரொம்ப பழக்கம் இருக்கு. 2 இஷ்யூ வரும் பிறகு நின்னு போயிடும். "ஆங்கிலம் ரொம்ப நல்லா தெரியும்னு சொல்ல மாட்டேன். ஆனால் உங்களை விட எனக்கு கொஞ்சம் அதிகமா தெரியும். தொடர்ந்து இதழ் வருவது நல்லதில்லை" ன்னு அபிப்ராயம் சொல்லிட்டேன்.

இப்பொழுதெல்லாம் எல்லாரும் கவிதை எழுதறாங்க. அதுல ஒன்னும் தப்பில்லே. ஆனால் அதைக் கொண்டுவந்து கொடுத்துப் படிக்க வேற சொல்றாங்க. உட்கார்ந்திருக்க நீங்க எல்லாம்கூட கவிதை எழுதறவன்களா இருக்கலாம். குறிப்பாக பெண்கள் நெறைய கவிதை எழுதறாங்க. ஆனா ஒரு பெண்ணாவது சிறுபத்திரிகை தொடங்குகிறாரா? எதை செய்யக் கூடாதென்று அவர்களுக்கு நல்லாத் தெரியும்.

பிறகு மைலாப்பூரில் ஒரு புத்தகக்கடை ஆரம்பித்தார். எந்த புத்தகம் வேணும்னாலும் திலீப் கிட்ட போனால் கண்டிப்பாகக் கிடைக்கும் என்னும் அளவிற்கு பெயர் எடுத்தார். பத்திரிகை மற்றும் இதழ்களுக்கென்றே தனியாக ஒரு பகுதி இருக்கும். ரெண்டாவது மாடியில் இருந்தது. அதையெல்லாம் வாங்குகிறோமோ? இல்லையோ?, அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம். ரெண்டு பத்திரிகை கொடுத்தவன் வந்து பாக்கும்போது ஒரு பத்திரிகை இருக்காது. அதற்கான பணத்தை இவர் தான் கொடுப்பாரு.

திலீப்குமாரின் கதைகள் தனி ராகம். ஆர்பாட்டமில்லாத நகைச்சுவை அவருக்கே உரித்தான தனிச் சிறப்பு. சில சிறுபத்ரிகைகளில் எழுதியவர்கள் அப்பத்ரிகைகள் நின்றவுடன் எழுதுவதையே கூட நிறுத்தியிருக்கிறார்கள். விதி விளக்காக ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் திலீப்குமார் முக்கியமானவர். எண்ணிக்கையில் இவருடைய கதைகள் அதிகமில்லாமல் இருக்கலாம். தனித்துவமான வடிவத்தால் அவையெல்லாம் விசேஷ நிலை பெறுகின்றன. இந்த விருது அவருக்கு சென்று சேருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி...

திலீப்குமார் பேசியவை

இந்த வெளிச்சம் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. எப்பொழுதுமே கூட்டத்தின் கடைசியில் இருக்க ஆசைப்படுபவன் நான். வாசக நண்பர்களை இந்த நேரத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பலரின் மீதும் விழுந்த வெளிச்சத்தின் சிறு பகுதி என்மீது விழுந்திருக்கிறது.

குடும்ப வறுமையின் காரணமாக சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடன் வேலை செய்த பெரியவர்கள் என்னைத் திட்டி, அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியாது. உள்ளுக்குள் கசப்பை வைத்துக் கொண்டுதான் அவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்கலான மனிதர்களுடன் வளர்ந்ததால் எனக்கு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போனது. பலருடைய தோல்வியில் தானே ஒருவனுடைய வெற்றி இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னுடைய முதலாளி சொகுசாக வாழ்வதற்கு அவரிடம் வேலை செய்த எல்லோரையும் சுரண்டினர். யாரையும் காயப்படுத்தாமல் வெற்றி பெறுவது எழுத்தில் மட்டும் தான் முடியும். அதனால் தான் எழுத ஆரம்பித்தேன். எழுதிய கதைகளை இதழ்களுக்கு அனுப்புகிறோம். சரியில்லை என்றால் திருப்பி அனுப்பிவிடப் போகிறார்கள். இதில் யாரையும் காயப்படுத்துவதற்கு இல்லையே.

அசோகமித்திரன் பேசியது எல்லாம் உண்மை. ஆண்டுகளை மட்டும் மாற்றி சொல்லிவிட்டார். ஒரு முறை அவரைப் பார்த்துவிட்டு வரும்பொழுது தற்செயலாக க்ரியா ராமகிருஷ்ணனைப் பார்க்க நேர்ந்தது. பேருந்தின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அப்படியே அவருடனான தொடர்பு நீண்டு க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு வேலை செய்தபோது பல எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அது என்னுடைய ஆர்வத்திற்கு பெரிதும் உதவியது.

என்னுடைய எழுத்தில் அசோகமித்ரனின் சாயல் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால் நான் எல்லோரையும் வாசித்தேன். ஆகவே எல்லோருடைய சாயலும் என்னுடைய எழுத்தில் இருக்கிறது. அவர்கள் தவறாகக் கூறுகிறார்கள்.

ஒருமுறை மலேசியக் கருத்தரங்கில் பேசுவதற்காக சென்றிருந்தேன். பலரும் கூடிய கருத்தரங்கு அது. பேசுபவர்களுடைய புகைப்படமும், அதன் கீழ் கொஞ்சம் எழுதுவதற்கான வெள்ளைத் தாளையும் நான்கு பக்க சுவரில் ஒட்டியிருந்தார்கள். என்னுடன் பேசிய அனைவருடைய புகைப்படத்திற்குக் கீழும் ஏதேதோ எழுதியிருந்தார்கள். எனக்கான இடத்தில் யாருமே எழுதவில்லை. ஒரே ஒரு பெண்மணி மட்டும் "மென்மை" என்ற வார்த்தையை மூன்று முறை எழுதி இருந்தார்கள். அதுவும் முதல் வார்த்தை பெரிதாகவும், அதற்கடுத்த வார்த்தை அதை விடச் சிறியதாகவும், கடைசி வார்த்தை மிகச் சிறியதாகவும் எழுதியிருந்தார்கள். தேடிக் கண்டுபிடித்து அவரிடம் காரணம் கேட்டேன்.

"நீங்கள் ரொம்ப மென்மையாகப் பேசினீர்கள். எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. அதனால் தான் அப்படி எழுதினேன்" என்றார்கள். இந்த மென்மையான சுபாவம் சிறுவயதில் இருந்தே இருப்பதால் மாற்ற முடியவில்லை. நண்பர்களையும், வாசகர்களையும் இந்த நேரத்தில் சந்திக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

அதைத் தொடர்ந்து கவிஞரும், நடுவர் குழு உறுப்பினருமான சிபிச்செல்வன் நன்றியுரை ஆற்றினார். அதில் "சென்ற வருடமே இந்த விருது திலீப் குமாருக்குக் கிடைத்திருக்க வேண்டியது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் விளக்கு விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்துவிட்டு, உடனே விருது பெற்றுக் கொள்வது நன்றாக இருக்காது என்பதைக் காரணம் காட்டி வாங்க மறுத்துவிட்டார். இந்த வருடம் விளக்கு விருதை அவருக்கு அளிப்பதில் இந்த அமைப்பு மகிழ்ச்சி கொள்கிறது. வாசகர்களும், நண்பர்களும் எங்களுடன் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி" என்றார்.

எழுத்தாளர்கள் சங்கர் ராமசுப்ரமணியம், விஜய மகேந்திரன், டைரக்டர் செந்தூரம் ரவி போன்றோர் திலீப்குமாரின் படைப்பு குறித்தும், அவருடனான தனிப்பட்ட உறவு குறித்தும் சில சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். எழுத்தாளர் ஞாநி, ராஜன்குறை, விமலாதித்த மாமல்லன், பாலபாரதி, பத்மா, சுபாஷினி, க்ரியா ராமகிருஷ்ணன், அழியாச்சுடர் ராம் போன்ற பலரும் விழாவில் கலந்துகொண்டார்கள்.

இதற்கு முன்பு இலக்கிய சிந்தனை, மத்திய அரசின் 'பாஷா பாரதி', ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்' ஆகிய முக்கியமான விருதுகளை திலீப்குமார் ஏற்கனவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: அகநாழிகை சிற்றிதழ்

Saturday, January 1, 2011

துயில் - எஸ்ரா புத்தக வெளியீடு

உறக்கம் என்பது உயிர்களுக்கு அத்யாவசியமான ஒன்று. தேவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்த காலயமணன் கூட விரும்பிக் கேட்ட வரம் துயில் தானே. இடைஞ்சல்கள் இல்லாத நீண்ட துயில் தானே. துயில் என்பது கண்களை மூடிக்கொண்டு உறங்குவது மட்டுமல்ல. இயற்கைக்கு நம்மை அற்பனிப்பது. இயற்கையுடன் இரண்டறக் கலப்பது. நாம் உணரா உம்மத்த நிலையின் நீட்சியை, அதே இயற்கை தானே விழிப்படையவும் செய்கிறது. நண்பர் நர்சிம்மின் வரிகளை இங்கு கடன்வாங்கிக் கொள்கிறேன்...

ஏதேனுமொரு பறவையின்
குரல் இருள்விரட்டித்
திறக்கின்றன தினத்தை

நேற்றைய பறவையின்
குரல் இப்படி இருக்கவில்லை
இன்று நேற்றைப் போல
கழியப்போவதில்லை
->> தீக்கடல் (கவிஞர் நர்சிம்) http://www.narsim.in/2010/03/blog-post_18.html

நேற்றும் இன்றும் வித்யாசம்படுவது இருக்கட்டும், அடுத்தடுத்த மணித்துளிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. வீட்டிலிருந்து புறப்படும்பொழுது ஆங்கிலப் புத்தாண்டின் மாலைநேரம் எஸ்ராவின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வதாகத்தான் இருக்கப்போகிறது என்று நினைத்தேன். அதையும் மீறி எஸ்ராவுடன் உரையாடும் களமாகவும் அந்த இனிய மாலை அமைந்தது.

வெளியீட்டு அரங்கில் நுழைந்தபோது உயிர்மை நண்பர்கள் புத்தகத்தை அடுக்கிக் கொண்டிருந்தனர். புத்தக வாசனை நாசியில் நுழைந்து ஏதோ செய்தது. தூக்கத்திலிருந்து எழுப்புகிறதா அல்லது தூக்க மயக்கத்தைத் தூண்டுகிறதா என்று பிரித்தறிய முடியாத நிலை. சிறிது நேரத்திற்கெல்லாம் எஸ்ரா அவருடைய நண்பர் திருமூர்த்தியுடன் வந்து சேர்ந்தார். அடுக்கியிருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்துத் தடவிப் பார்த்தார். புத்தகத்தின் முன் அட்டை ஒரு மரத்தின் கிளையில் நீண்ட இறகுகளை உடைய சேவல் உட்கார்ந்திருப்பது போல இருந்தது. அவரைச் சூழ்ந்து பல வாசகர்கள் நின்றிருந்தனர். அதில் நானும் ஒருவன்.

"புத்தாண்டு வாழ்த்துக்கள் எஸ்ரா. இந்த நாவல் என்ன சேவல் பற்றியதா?"

அப்படி இல்லை. உறக்கத்தை களைய வேண்டியதை சேவல் தானே அறிவிக்கிறது. சேவல் என்பது விடியலின் குறியீடு. அதனால் பயன்படுத்தி இருக்கிறோம். அட்டை வடிவமைப்பு ரொம்ப எளிமையா இருக்கணும்னு நெனச்சேன். அழகா வந்திருக்கு இல்ல.

எப்படி இந்த சேவல் ஓவியத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?

இது ஜப்பான் ஓவியர் வரைந்தது. அதனைக் கொஞ்சம் மாற்றி இறகுகளுடன் தலைமுடி இருப்பது போல சேர்த்துப் பயன்படுத்தி இருக்கிறோம்.

அப்போ, பயன்படுத்துவதற்கு அவருடைய சம்மதம் தேவைப்பட்டிருக்குமே?

இது 150 வருடத்திற்கு முந்திய படைப்பு. எந்த ஒரு படைப்பையும் 100 ஆண்டுகள் கழித்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 60 ஆண்டுகள் கழித்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அப்போ உங்களுடைய எழுத்தைக் கூடவா?

ஆமாம். காப்பீடு செய்தால் கொஞ்ச காலத்திற்கு நீட்டிக்க முடியும்.

சிறுகதை, நாவல், கட்டுரை எழுதுவதில் உள்ள சவால்கள் பற்றி சுற்றி இருந்தவர்கள் கேள்வி கேட்க பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு படைப்பின் ஆரம்பமும் முடிவும் தான் முக்கியம். நாம் எதையுமே முடிவு செய்ய இயலாது. ஒரு குரல் நமக்கு கேட்கும். அதுதான் முடிவு செய்யும். நெடுங்குருதி நாவல் எழுதி புத்தக அச்சுக்கு அனுப்பிவிட்டு ஒரு பயணத்திற்குக் கிளம்பினேன். பேருந்து பயணத்தில் ஓர் ஊரைக் கடக்கும் பொழுது மயில் சத்தம் கேட்டது. ஊருக்குள் "வா வா" என்று அழைப்பது போல இருந்தது. ஊர் திரும்பியதும் நெடுங்குருதி நாவலின் முடிவை மாற்றினேன்.

பேச்சு சுவாரஸ்யமாக சென்றபோது நடிகர் பாரதி மணி, இந்திரா பார்த்தசாரதி, மனுஷ்யபுத்திரன் என்று ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். பதிவர்கள் துளசிகோபால், நிலாரசிகன், நர்சிம், லக்கிலுக், அதிஷா, பிரபா போன்ற பலரைப் பார்க்க முடிந்தது. குறிப்பிட்டிருந்த நேரத்தையும் கடந்துதான் விழா ஆரம்பமானது. அரங்கின் கடைசி வரிசையில் சென்று நண்பர் சிவாவுடன் அமர்ந்து கொண்டேன். எனக்குப் பக்கத்து இருக்கையில் வேறுயாரும் இல்லை. சிறிது நேரத்தில் எழுத்தாளர் பாலபாரதி வந்து அமர்ந்தார்.

பாலபாரதியின் திருநெல்வேலி வட்டார மொழி ஆளை மயக்கக் கூடியது. "ஆம்லே... மாப்ளே..." இந்த மாதிரி வார்த்தைகள் அவ்வளவு சுலபத்தில் சென்னையில் கிடைப்பதில்லை. அவருடன் அளவளாவியபோது முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் எங்களைப் பார்த்து முறைத்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டோம். வாய்பொத்தி மௌனித்து தூரத்திலிருந்து மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்திரா பார்த்தசாரதி முதல் பிரதியை திருமூர்த்தி அவர்களுக்குக் கொடுத்தார். அதன் பிறகு மற்றவர்களும் அவர்களுக்கான பிரதியை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவராக நாவல் பற்றி பேச ஆரம்பித்தனர்.

எனக்குள் ஒரு குரல் கேட்க ஆரம்பித்தது. அந்தக் குரல் "களம்புடா..." என்று சொல்லும். உடனே பாலாவிடம் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தேன். உயிர்மை நண்பர் தனசேகர் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

"என்ன தனசேகர் இங்க இருக்கீங்க? ஏதாச்சும் பிரச்சனையா?"

"இல்லங்க... விழாவிற்கு வந்திருப்பவர்களுக்கு, டீ - சமோசா ஏற்பாடு பண்ணியிருந்தோம். எடுத்து வர பசங்களுக்கு சின்ன விபத்து. அதான்...."

"அடடா, பசங்களுக்கு பெரிய அசம்பாவிதம் எதுவும் இல்லையே..."

"கொஞ்சமா தேச்சிக்கிச்சாம். மத்தபடி எதுவும் இல்ல...டீ வேற எடத்துல சொல்லி இருக்கோம். அதான் இங்க இருக்கேன்."

"தாமதம் ஆவது ஒன்னும் பிரச்சனை இல்லையே தனா... Be cool" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். என்னுடைய நிம்மதியான உறக்கத்தைத் தேடி பயணமானேன். மீண்டும் நர்சிம்மின் கவிதையைக் கடன் வாங்கிக் கொள்கிறேன்.

நாளை அதிகாலை
எனக்கான
பறவையின் குரல்
என்னைத் திறக்கும்.