Tuesday, December 28, 2010

வாட்டர் - விதவைகள் தினம்

உலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகிறது. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம்.

"ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம்" என்று ஐநா அறிவித்துள்ளது.

கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.

"காதுகுத்து, குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன்" போன்ற தெய்வ காரியங்களுக்கு குழந்தையின் தலையை மழிப்பது வழக்கம். குழந்தையைக் குதூகலப்படுத்த நாலு வரி பாடல் உண்டு.

"மொட்ட பாப்பாத்தி
ரொட்டி சுட்டாளாம்...
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாளாம்....
காசு பத்தலையாம்
என்ன பண்ணாலாம்?"
..............................
'கட காறன பாத்து கண்ணடிச்சாளாம்...'

பெரியவர்கள் சிரித்து, குழந்தையையும் சிரமப்படுத்தி சிரிக்கவைக்க இந்தப் பாடலை பலமுறை நான் கேட்டதுண்டு. இங்கு கடைசி வரி காட்சிப் படுத்தும் படிமம் வாழ்க்கையை இழந்தவள் மீதான தரக்குறைவான பகடி.

தீபா மேத்தா இயக்கிய "வாட்டர்" திரைப்படம் சமூகத்தால் விதவைகள் எவ்வாறு இந்தியாவில் புறக்கணிக்கப் பட்டார்கள் என்பதை விவாதிக்கும் முக்கியமான படம். பல லட்ச ரூபாய் பொருட் செலவில் கங்கைக் கரையில் தொடங்கிய படப்பிடிப்பு, சில மத அமைப்புகளின் எதிர்ப்பால் மேலும் தொடர முடியாமல் முடங்கியுள்ளது. நட்டப்பட்டு நாடு திரும்பிய தீபா மேத்தாவின் தொடர் முயற்சியால், ரகசியமாக இலங்கையில் படப்பிடிப்பை துவங்கி 2005-ல் வெளிவந்து கனடா நாட்டின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.

“A widow should be long suffering until death, self-restrained and chaste. A virtuous woman who remains chaste when her husband has died goes to heaven. A woman who is unfaithful to her husband is reborn in the womb of a jackal.” From the Laws of Manu, Chapter 5 Verse 156-161, Dharamshastras என்ற மனுசாஸ்திர வரிகளுடன் படம் துவங்குகிறது.



கங்கைக் கரையினில் 1930-களில் அமைந்த கதைக்களம். சுய்யா என்ற 7 வயதுச் சிறுமி மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்படுகிறாள். கரும்பை சுவைக்கும் அவளின் மீது ஒரு மனிதனின் பாதம் படுகிறது. கரும்பின் ஒரு முனையால் எரிச்சலுடன் பாதத்தை தட்டிவிடுகிறாள். அது அவளுடைய இறந்த கணவனின் பாதம் என்று தெரியாத வயது. சில நொடிகளில் மறையும் காட்சி என்றாலும் (பிணத்தின் கால், கரும்பு, சுவைக்கும் பெண்) அற்புதமான மறைமுகக் குறியீடு.

அக்கரையில் பிணங்கள் எரிய படகில் பயணம் ஆகிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் சுய்யாவைத் தட்டி எழுப்பி அலங்காரத்தைக் கலைக்கிறார்கள். தலை மழிக்கப்பட்டு விதவைகள் காப்பகத்தில் திணிக்கப் படுகிறாள். கதவு இழுத்து அடைக்கப்படுகிறது. அன்றிலிருந்து சிறுமியின் சந்தோஷங்களும் மறுக்கப்படுகிறது.

மதுமிதா என்ற கிழவியின் கட்டுப்பாட்டில் விடுதி இயங்குகிறது. அவளின் முன்பு சுய்யா நிறுத்தப்படுகிறாள். அவளிடமிருந்து தப்பித்து ஓட நினைத்த சிறுமி விடுதியைப் புரட்டிப் போடுகிறாள். ஓடிக் கலைத்து சகுந்தலா என்ற நடுத்தர வயதைத் தொட்ட விதவையிடம் தஞ்சம் அடைகிறாள். சந்தனம் அரைக்கும் அவள் சுய்யாவின் தலையில் குளிர்ச்சி ஏற்படத் தடவுகிறாள்.

கல்யாணி என்ற இளம் விதவையுடன் மேலும் பல கிழவிகள் சாகும் வரை அந்த விடுதியில் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். காலு என்ற நாயுடனும் கிருஷ்ண வழிபாட்டிலும் பகலைக் கடத்தும் கல்யாணி, இரவில் விபச்சாரத்தில் திணிக்கப்படுகிறாள். அவள் தான் விடுதியின் வாடகைக்கும், ஒரு வேலை உணவுக்கும் மூலதனம். குலாபி என்ற திருநங்கை மூலம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடுகிறாள் மதுமிதா. சகுந்தலாவும் தீவிர பக்தி உடையவள். நடுத்தர வயதைக் கடந்தவள். தனது சந்தேகங்களை மந்திரம் ஓதும் ப்ரோகிதரிடம் கேட்டு தெரிந்துகொள்வாள்.

குருஜி விதவைகள் தங்களுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளலாம்?

"இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறலாம் அல்லது ஆசைகளை துறந்துவிட்டு வாழலாம் அல்லது குடும்பம் சம்மதிக்குமெனில் இறந்தவனுடைய சகோதரனை மணந்துகொண்டு வாழலாம்" என்று மனுதர்மம் கூறுகிறது. ஆனால் விதவைகள் சுதந்திரமாக வாழலாம் என்று இப்போது சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.

"அப்படியெனில் அந்த சட்டத்தைப் பற்றி எங்களுக்கு ஏன் யாரும் தெரியப்படுத்தவில்லை?" என்று அப்பாவித்தனமாக சகுந்தலா கேட்கிறாள்.

எங்களுக்குப் பயன்படாத சட்டத்தை நாங்கள் ஏன் கவனிக்கப் போகிறோம் என்ற குருஜியின் வார்த்தையை விக்கித்து கேட்கிறாள் சகுந்தலா.


கல்கத்தாவில் வக்கீல் படிப்பை முடித்து விட்டு சொந்த ஊரான ராவல்பூருக்குத் திரும்புகிறான் நாராயண். காந்தியக் கொள்கையில் தீவிர நம்பிக்கை உடையவன். தற்செயலாக கங்கைக் கரையில் கல்யாணியை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொண்டு திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். இது தெரிந்த மதுமிதா கல்யாணியை சிறை வைக்கிறாள். அந்த ஆத்திரத்தில் மதுமிதா வளர்த்த 'மித்து' என்ற கிளியை சுய்யா கொன்று விடுகிறாள்.

தாய் தந்தையரை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறான் நாராயன். சகுந்தலாவின் துணிச்சலான முடிவால் கல்யாணி விடுவிக்கப் படுகிறாள். விடுதியை விட்டு வெளியேறும் கல்யாணி நாராயணனுடன் செல்கிறாள். வீட்டை நெருங்கும் சமயத்தில் அவனுடைய தந்தையின் பெயர் கேட்கிறாள். பெயரைக் கேட்டதும் படகை வந்த திசைக்கே திருப்பச் சொல்கிறாள். அதற்கான காரணத்தை நாராயன் கேட்க, "உன்னுடைய தந்தையிடம் கேள்" என்று சொல்லிவிட்டு விடுதிக்கே போகிறாள். மதுமிதா அவளை சேர்க்காததால் கங்கையில் சென்று விழுந்துவிடுகிறாள்.

திருநங்கை குலாபி மூலம் கல்யாணியின் இடத்தை நிரப்ப சுய்யாவை பயன்படுத்துகிறாள் விடுதித் தலைவி. இது தெரியாத சகுந்தலா அவளை பல இடங்களில் தேடுகிறாள். சுய்யா இருக்குமிடம் தெரிந்துகொண்டு காப்பாற்ற ஓடுகிறாள் சகுந்தலா. அதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. மயங்கிய நிலையில் இருக்கும் சூயாவை தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறாள். வழியில் எல்லோரும் காந்தியைப் பார்க்க ஓடுகிறார்கள். சகுந்தலாவும் அங்கு சென்று தியானத்தில் அமர்கிறாள். ரயில் புறப்படும் சமயத்தில் சுய்யாவை காந்தியிடம் கொடுக்க ஓடுகிறாள். அதே ரயிலில் நாராயணும் இருக்க அவனிடம் சேர்பிக்கிறாள். அதனுடன் சுபம்.

நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தாலும் குறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சகுந்தலாவாக நடித்த சீமா பிஸ்வாஸ், சுய்யாவாக நடித்த சரளா, விடுதித் தலைவி மதுமிதா, குந்தி ஆகிய பாத்திரங்களை ஏற்றவர்கள் நிறைவாக செய்திருக்கிறார்கள். கல்யாணி மற்றும் நாராயன் கதாப்பாத்திரத்தில் வந்த லீசா ரே மற்றும் ஜான் அப்ரஹாம் நடிப்பு படு மோசம். தேவையில்லாத பாடல்கள் (AR ரகுமான்) படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. அதை சரிகட்டும் விதமாக பின்னணி இசை (மைக்கேல் தன்னா) அமைந்துள்ளது.

படத்தின் ஜீவனே இந்தக் கதாப்பாத்திரங்களில் தான் இருக்கிறது. இயக்குனர் கவனம் எடுத்து கையாண்டிருக்கலாம். அதே போல நாராயன் முதன் முதலாக காதல் சொல்ல வரும் இடத்தில் ஜீவனே இல்லை. விதவையை மணக்க இருப்பதாக தாயிடம் சொல்லும் இடத்திலும் சொதப்பி இருக்கிறார்கள். தாயும் மகனும் முட்டிக்கொள்ளும் படி எடுத்திருந்தால் உச்ச காட்சியாக அமைந்திருக்கும்.

கோவத்தில் கிளியை சிறுமி கொள்வதாக எடுத்ததற்கு பதில், வானில் பறக்கவிட்டிருக்கலாம். விடுபட்ட கிளி மீண்டும் விடுதிக்கே வந்துவிடுவதாகவோ அல்லது இறைகிடைக்காமல் கங்கைக் கரையில் ஒதுங்கும் படியோ காண்பித்திருந்தால் அழகிய குறியீடாக அமைந்திருக்கும். பறவை பறந்து எங்கோ சென்றிருந்தாலும் விதவைகளின் சுதந்திரம் தொடங்கியதற்கான ஆரம்பக் குறியீடாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

சுயாவைத் தவிர மற்ற அனைவரும் முதியவர்கள் என்பது நெருடலாகவே இருந்தது. இன்னும் ஓரிரு சிறுமிகளை கதாப்பாத்திரங்களாக்கி, அவர்கள் விடுதி வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது போல காண்பித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி இருந்தால் தண்ணீர் தெளிவாகவும், சுவையாகவும் இருந்திருக்கும். அதற்கான பலனும் கிடைத்திருக்கும்.

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மீது ஏறிவா
மல்லிகைப் பூ கொண்டுவா

- நிலவின் முகம் குழந்தையின் முகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? புரட்சியின் முகமாக இருக்கக் கூடாதா? நில்லாமல் ஓடி, மலைமீது பூ எடுப்பவர்கள் மறுமலர்ச்சிக்காக எடுக்கக் கூடாதா?

2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 35 மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதாக ஒன்றும் உயர்ந்துவிடவில்லை. அவர்களின் நிலை மாறி சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய 'விதவைகள் தினம்' போதுமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, December 23, 2010

டிராவலர்ஸ் & மெஜிஷியன்ஸ் - நோர்பு

இளஞ்சூரியன் மலையில் இறங்கி உஷ்ணத்தைப் பரப்பி, குளிர்ச்சியை உறிஞ்சக் கூடிய அழகிய பூடான் கிராம். 'தொந்டுப்' இளநிலை அரசு ஊழியராக அங்கே வேலை பார்க்கிறான். அமெரிக்க மோகம் நாட்டின் எந்த மூளையையும் விட்டு வைப்பதில்லையே!. வேலையை உதறிவிட்டு, தன் கனவு பூமியான அமெரிக்கா செல்ல விரும்புகிறான். அதற்காக தன்னுடைய நண்பனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான். நாட்கள் நத்தை நகர்வதைப் போல உணர்கிறான். ஒவ்வொரு நாளும் தபால் நிலையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகிறான். எதிர்பார்த்த கடிதம் ஒருநாள் அவனுக்கு வந்துசேர்கிறது.

அதில் 'இன்னும் மூன்று நாளில் தலைநகர் திம்புவில் இருக்கும் தூதரக அலுவலகத்தில் இருக்க வேண்டும்' என்று எழுதியிருக்கிறது.

திருவிழா துவங்குவதால் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று பொய் சொல்லி, மேலதிகாரியிடம் விடுமுறை வாங்குகிறான். அமெரிக்கா செல்லப்போகும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான் தொந்டுப்.

"இங்கே என்ன இருக்கு? கேளிக்கைக்கு இடமில்லை, ஓட்டல் இல்லை, இணக்கமாகப் பழக அழகான பெண்கள் இல்லை" என்று தோழனிடம் சொல்லிவிட்டுத் தனது உடைமைகளுடன் கிளம்புகிறான். எதிரே புதுமனைப் புகுவிழாவிற்கான ஊர்வலம் நடக்கிறது. போகும் வழியில் கிராமத்துப் பெண் வழிமறித்து "நீண்ட தொலைவு போறீங்களே... எப்படி சும்மா அனுப்புறது? கொஞ்சம் இருங்க..." என்று பன்னீர் வத்தல்களைத் தருகிறாள். அதை வங்கிக் கொண்டு பேருந்துக்காக நடக்கிறான். வழியில் தென்படும் ஓடையில் வத்தல்களை வீசி எறிந்துவிட்டுச் செல்கிறான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கடைசி பேருந்து கிளம்பிச் செல்கிறது. வேறு வாகனத்தில் ஏறிப் போய்விடலாம் என்று பாதையோரம் நிற்கிறான். அப்போது ஆப்பிள் விற்கும் வயோதிகன் கூடையுடன் வருகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு புத்த துறவியும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்.

துறவி எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அதற்கு 'தொந்டுப்' சிடுசிடுவென பதில் சொல்கிறான். அவன் பொறுமை இல்லாமல் தவிப்பதைப் பார்க்கும் துறவி "எதற்காவது நாம் காத்திருக்க நேர்ந்தால், உணர்வுகளின் எல்லைக்கு சென்றுவிடுகிறோம்" என்ற புத்த போதனையை மேற்கோள்காட்டுகிறார். மௌனியாக இருக்கும் கிழவனையும், பேசிக்கொண்டே இருக்கும் துறவியையும் தொந்டுப் தவிர்க்கப் பார்க்கிறான். மெல்ல இருட்டத் துவங்குகிறது. வேறு வழியின்றி, மூவரும் சாலையோரம் தங்குகிறார்கள். துறவி அங்கேயே அடுப்பை மூட்டி சூப் தயாரித்துத் தருகிறார். இரவின் நெருக்கத்தில் ''எங்கே போகிறாய்?'' என்று துறவி கேட்கிறார்.

"ரொம்ப தூரத்தில் இருக்கும் கனவு பூமிக்கு!..."

"அப்படியெனில் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் விழித்துப் பார்க்கும் பொழுது உனக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகலாம்" என்று துறவி சொல்கிறார். அப்படியே கனவு பூமி பற்றிய கதை ஒன்றை சொல்லத் துவங்குகிறார்.

'ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்த ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தாஷி. இளையவன் கர்மா. மூத்தவனுக்கு மந்திர தந்திரங்கள் கற்றுக் கொடுக்க விரும்பி, ஒரு குருவிடம் அனுப்பினார்கள். தாஷியோ பகல்கனவு காண்பவன். சரியான சோம்பேறி. சதா நேரமும் பெண்களைப் பற்றியும், சிற்றின்பங்கள் பற்றியும் நினைப்பவன். கர்மாவோ அதிபுத்திசாலி. மதிய உணவைக் கொடுக்க அண்ணனின் பள்ளிக்கு தினமும் போகிறான். ஒருநாள் மதிய இடைவேளையில், இருவரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். மூலிகை கலந்த மதுவை தாஷிக்குக் கொடுக்கிறான். மகிழ்ச்சியுடன் வாங்கிக் குடித்ததும் போதை ஏறிய நிலையில், புதிதாக வாங்கிய குதிரையில் சவாரிசெய்ய தாஷி புறப்படுகிறான். மிரண்டு ஓடிய குதிரை வெகுதூரம் பயணித்து, அடர்ந்த காட்டில் அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்கிறது. கீழே விழுந்து காயம்பட்ட தாஷி, அடர்ந்த காட்டுக்குள் நடந்து ஒரு வீடு இருப்பதைப் பார்த்துக் கதவைத் தட்டுகிறான்.

தாடி வைத்த முதியவர் கையில் விளக்குடன் கதவைத் திறக்கிறார். அவன் நிலைமையைப் பார்த்து, வீட்டில் தங்க அனுமதிக்கிறார்.தாஷி சோர்வுடன் படுக்கிறான்.வயோதிகருக்குப் பக்கத்தில் ஓர் இளம் பெண் படுத்திருப்பதை பார்க்கும் தாஷியின் மனம் சஞ்சலமடையத் தொடங்குகிறது. கதையைக் கேட்டவாறே தொந்டுப் தூங்கிவிடுகிறான்.

காலை விடிந்ததும் சாலையில் லாரி வருகிறது. அதில் மூவரும் ஏறிக் கொள்கிறார்கள். ஓரிடத்தில் அழகான பெண்ணும், அவளது தந்தையும் லாரியில் ஏறுகிறார்கள். பேசிக்கொண்டே பயணம் தொடர, ஆமை வேகத்தில் நகரும் லாரி பழுதாகி நிற்கிறது. எல்லோரும் இறங்குகிறார்கள். அனைவரையும் அமர்த்திக்கொண்டு துறவி மீண்டும் கதையைத் தொடங்குகிறார்.

சப்தம் கேட்டு கண்விழிக்கும் தாஷி, ஜன்னல் வழியாக இளம் பெண்ணைப் பார்க்கிறான். அவள் துணி நெய்து கொண்டிருக்கிறாள். அவள் கிழவரின் மனைவி 'தேகி' என்று தெரிகிறது. காலை உணவு பரிமாறும்போது அவளை முதன்முறையாகப் பார்க்கிறான். இருவருக்குள்ளும் வேதிமாற்றம் நிகழ்கிறது. அவர்கள் இருவரையும் முதியவர் சந்தேகத்துடன் பார்க்கிறார். சாப்பாடு முடிந்ததும், அவனை அழைத்துச் சென்று போகவேண்டிய திசையைக் காட்டிவிட்டு வீடு திரும்புகிறார்.

லாரி சரிசெய்யப்பட்டு மீண்டும் புறப்படுகிறது. குறிப்பிட்ட தொலைவு சென்று ஒரு வளைவில் நிற்க - துறவி, தொந்டுப், ஆப்பிள் விற்கும் முதியவர், இளம்பெண் சோனம், அவளது அப்பா என எல்லோரும் லாரியிலிருந்து இறங்குகிறார்கள். சோனம், ஆப்பிளை நறுக்கி எல்லோருக்கும் சாப்பிடத் தருகிறாள். அங்கிருந்து ஒன்றாக நடக்கத் தொடங்குகிறார்கள். நீண்ட நேரம் நடந்து, ஓரிடத்தில் எல்லோரும் அமர்கிறார்கள்.

"உங்கள் மாதிரி இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை... நீங்க ஏன் அந்த நாட்டுக்குப் போறீங்க?" என்று பூனத்தின் அப்பா கேட்கிறார். "அந்த நாட்டவர்களுக்கு பூடான் எங்கிருக்கிறது என்பது கூட தெரியாது" என்று சோனம் சொல்கிறாள். "வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க!... தட்டு கழுவலாம், ஆப்பிள் பறிக்கலாம்..." என்று தொந்டுப் சொல்கிறான்.

"கனவு பூமிக்கு சென்று ஆப்பிள் பறிக்கப் போறேன்னு சொல்லு. ஆனால் தாஷி மாதிரி நீயும் தொலைஞ்சு போயிடாதே!'' என்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து கதையை சொல்லத் துவங்குகிறார்.

அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் மீண்டும் தேகியின் இடத்திற்கே வருகிறான் தாஷி. தேகியின் வீட்டில் சில நாட்கள் தங்குகிறான். துணியை நெய்து முடித்துவிட்டால், தாஷி சென்றுவிடுவான் என்று செய்யும் வேளையில் சுணக்கம் காட்டுகிறாள். நூல் செண்டையும் சிக்கலாக்கி விடுகிறாள். கிழவனுக்கு சந்தேகம் முற்றுகிறது. சுடுநீரில் குளிக்க கிழவன் பிரியப்படுகிறான். சூட்டின் இதத்தில் அதிக மது குடித்து கிழவன் மயங்கிவிடுகிறான். அதே இடத்தில் தேகி தனியாகக் குளித்துக் கொண்டிருக்க, தாஷி அவளை நோக்கி பூனை மாதிரி நடக்கிறான். அதனை தேகி ரகசியமாக ரசிக்கிறாள்.

"கிராமத்தில் இருந்தால் இளவயது பசங்களுடன் இவள் சென்றுவிடுவாள். அதனால்தான் இங்கு வந்து வாழ்கிறேன்." என்று தேகி இல்லாத சமயத்தில் தாஷியிடம் கிழவன் சொல்கிறார்.அதனைக்கேட்டு தாஷி சங்கடப்படுகிறான்.

கார் வரும் சத்தம் கேட்க கதையை துறவி நிறுத்துகிறார். வண்டி நிற்காமல் சென்றுவிட அங்கிருந்து நடந்து ஒரு மலை குகைக்குச் செல்கிறார்கள். அங்கு தியான புத்தரின் ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. இருட்டத் தொடங்கியதால் அங்கேயே தங்குகிறார்கள். சோனம் சமைக்கத் தொடங்குகிறாள். அவளுக்கு உதவுவது போல் தொந்டுப் அருகில் சென்று அமர்கிறான். இருவரும் அன்பாகப் பேசிக் கொண்டே சமைக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இரவு உறங்கும்பொழுது விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதையை சொல்லத் துவங்குகிறார் துறவி.

தாஷி,தேகி இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். அதனால் தேகி கர்ப்பமாகிறாள். 'இது அவருக்குத் தெரிந்தால் நாம் சாகவேண்டியதுதான். அவருடைய கத்தி மரத்தை மட்டும் வெட்டாது!' என்கிறாள். மதுவில் விஷம் கலந்து கிழவனைக் கொள்ள சதி செய்கிறார்கள். விறகு வெட்டிக்கொண்டு களைப்புடன் வரும் கிழவனுக்கு விஷம் கலந்த மதுவைக் கொடுக்கிறார்கள். கிழவனின் ஏங்கிய பார்வை தாஷியின் மேல் விழுகிறது.

சூரியக் கதிர்கள் பரவிய நேரம் தொந்டுப் கண்விழிக்கிறான். பஸ் வரும் சத்தம் கேட்டதும் துறவி ஓடிப்போய் நிறுத்துகிறார். "ஒரு ஆளுக்குதான் இடம் இருக்கு" என்கிறார் டிரைவர். "இரண்டு நாட்களாக ஒன்றாக பயணம் செய்கிறோம். திருவிழா வேறு வருகிறது.." என்று துறவி தயக்கத்துடன் கேட்கிறார்.

"அளவுக்கு அதிகமா ஏத்தினா போலீசுக்கு பதில் சொல்லணும்." என்று டிரைவர் கறாராக பேசுகிறார். எல்லோரும் தொந்துப்பை அனுப்ப நினைக்கிறார்கள். இன்னும் காத்திருந்தால் ஆப்பிள் எல்லாம் அழுகிவிடும். எனவே அவரை அனுப்பலாம் என்று கூடையை எடுத்துக்கொண்டு போய் வண்டியில் வைக்கிறான் தொந்டுப். வியாபாரி மிகவும் சந்தோஷப்படுகிறார்.

"இது கருணையா... இல்ல, வேறு ஏதாவதா?" என்று துறவி கிண்டலாகக் கேட்கிறார். திரும்பவும் அங்கிருந்து நடக்கத் துவங்குகிறார்கள். வழியில் சோனம் அமர்ந்துவிடுகிறாள். தொந்துப் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான்.

"ஏன், களைப்பா இருக்கா? நான் வேணும்னா உன் சுமையைத் தூக்கிட்டு வரவா?"

"இல்ல, நானே சமாளிச்சுக்கிறேன்!"

"ஏன் கவலையா இருக்கே?"

"ஒண்ணுமில்ல... அந்த ஆப்பிள் தாத்தாவை நினைச்சேன்!"

"ஏன்? அவரை மிஸ் பண்றோம்னு தோணுதா?"

"ஆமா!"

"நீ சந்திக்கும் எல்லோரையுமே இப்படித்தான் மிஸ் பண்றதா நினைப்பியா?'' என்று தொந்துப் புன்னகைக்கிறான். திரும்பவும் நடக்கத் துவங்கி ஓர் இடத்தில் சென்று உட்காருகிறார்கள். சோனத்தின் அப்பா கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார். இசைக்கருவியை மீட்டியவாறே துறவி சொல்லத் துவங்குகிறார்.

விஷம் அருந்திய கிழவன் மரண வேதனையில் துடிக்கிறான். உயிர் பிரிய நீண்ட நேரம் ஆவதால் தாஷிக்கும், தேகிக்கும் சண்டை வருகிறது. தேகியிடம் கோவப்பட்டு தாஷி சென்று விடுகிறான். அவனைக் கூவி அழைத்தவாறே தேகி ஓடி வருகிறாள். அவளை திரும்பிப் பார்க்காமல் வேகமாக தாஷி நடக்கிறான். தேகி அலறியவாறே ஓடும் நதியின் பாறை இடுக்கில் விழுகிறாள்.

தயங்கியவாரே குரல் வந்த திசையை நோக்கி தாஷி ஓடுகிறான். நதியில் அவளின் குருதி பார்த்து அழுகிறான். நீர் நிலையில் அவளின் முகம் தெரிகிறது. மதிய உணவுடன் சேர்த்து அருந்திய போதையில் அவனுடைய தம்பியிடம் "நான் கொலை செய்து விட்டேன்... நான் கொலைகாரன்..." என்று உளறுகிறான். அந்த குதிரைதான் என்னைக் கீழே தள்ளியது என்று கழுதையை காண்பிக்கிறான். கர்மா தாஷியை எழுப்பியவாறு வீட்டிற்கு புறப்படுகிறான்.

சாலையில் ஒரு சிறிய டிராக்டர் வருகிறது. அதில் இருவருக்குதான் இடமிருக்கிறது என்கிறார்கள்.. "நீங்க ரெண்டு பேரும் போங்க! அவர் சீக்கிரம் போகணும்ல?" என்று சோனத்தின் அப்பா சொல்ல,தொந்துப் மௌனமாக அவளைப் பார்க்கிறான். "அமெரிக்கா போற நேரம் வந்திருச்சு. வா! போகலாம்!" என்று துறவி எழுந்திருக்கிறார். வண்டி புறப்படுகிறது. பார்வையிலிருந்து மறையும் வரை, ஒருவருக்கொருவர் கையசைத்து விடைபெற்றுக் கொள்கிறார்கள்.

"நான் உனக்கு இன்னொரு கதை சொல்லவா?" என்று துறவி புன்னகைக்கிறார்.

"ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒருத்தர் அரசாங்க வேலை செய்தார். வேலையை விட்டுவிட்டு கனவு பூமி சென்று ஆப்பிள் பறிக்க புறப்பட்டார். ஆனால், போகும் வழியில் ஒரு அழகான பொண்ணைப் பார்த்தார்..." என்று சொல்லிக்கொண்டு போக...

தொந்டுப் சிரித்துக்கொண்டே, "அதனால அவரு அமெரிக்கா போறதையே மறந்துட்டாரு!" என்று சொல்லிப் புன்னகைக்கிறான். அழகிய மலைத் தொடர்களின் வழியே பயணம் தொடர படம் நிறைவடைகிறது.

ஒரு கழுதை எப்படி குதிரையாக தாசியின் கண்களுக்குத் தெரிந்ததோ? அப்படித்தான் நாமும் வாழ்கிறோம். கிராமத்தில் இருப்பவர்களுக்கு சென்னை செல்ல வேண்டும். சென்னையில் இருப்பவர்களுக்கு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எல்லோருக்கும் அந்த எண்ணம் கைகூடுவது இல்லை.

நந்தலாலா பாதிப்பில் பயணம் தொடர்புடைய இந்தப் படத்தைப் பார்த்தேன். நோர்புவின் திரைமொழி சிறப்பாக இருந்தது. எஸ்ரா இந்தப் படத்தைப் பற்றி அவருடைய பழைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே பார்த்தது. நீண்ட இடைவெளியில் மீண்டும் பார்க்க நேரம் கிடைத்தது.

அருமையான இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட அழகான படம்.

2003ல் வெளியாகி, உலகின் கவனத்தை ஈர்த்த இந்த பூட்டான் நாட்டுப் படத்தின் இயக்குநர் நோர்பு துறவியாக வாழ்வைத் துவங்கி சினிமா இயக்குனர் ஆனவர். வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் படத்தை வாங்கிப்பாருங்கள். பயணிகளும் மாயக்காரர்களும் ஓர் இனிய பயண அனுபவமாக இருக்கும்.

Monday, December 20, 2010

மர்மஸ்தான கீறல் - ஆஸ்மேன் செம்பேன்

மூலாடே(genital mutilation) என்பது பெண்களின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால் சேதப்படுத்தும் ஆப்ரிக்க பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கம். பெண்களை பரிசுத்தப்படுத்தும் கொடூரமான சடங்கு முறை. ஆண்களுக்கு செய்யப்படும் சுன்னத்(circumcise) போல ஒரு சடங்கு.திருமணத்திற்கு முன் பெண்குழந்தை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்யும் சடங்காகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்த சடங்கிற்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டதுதான் இந்தத் திரைப்படம்.

மேலும் திரைப்படத்தைப் பற்றி படிப்பதற்கு முன் உயிர்மையில் வெளியான இந்தக் கட்டுரையை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படித்துவிடுங்கள்: மறுக்கப்பட்ட பெண்மை>>

ஆப்ரிக்க தேசத்தின் எங்கோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தின் காலைப் பொழுது ரம்யமாகத் துவங்குகிறது. காலை சூரியன் கிராமத்தில் நுழையும் பொழுது வியாபாரப் பொருட்களை வண்டியில் சுமந்தவாறு ஒருவன் கிராமத்திற்கு வருகிறான். சிறுவர்கள் அவனுடைய ஒட்டைவண்டியை தள்ளி முன்னேற்றுகிறார்கள். மரநிழலில் அவன் வண்டியை நிறுத்துகிறான். அதற்கு எதிரே கிராமத்தின் மசூதி இருக்கிறது. கிராமவாசிகள் அங்குமிங்கும் ஓடி ஏதாவதொரு வேலை செய்தபடி இருக்கின்றனர். கோலே அவளுடைய வீட்டை பெருக்கிக் கொண்டிருக்கிறாள். மூலாடே சடங்கிலிருந்து தப்பித்த நான்கு சிறுமிகள் ஓடி வந்து அவளுடைய காலில் விழுகின்றனர். தன்னுடைய கணவனின் மூத்த மனைவியை கேட்டுக்கொண்டு சிறுமிகளுக்கு கோலே அடைக்கலம் கொடுக்கிறாள். சிறுமிகள் சடங்கிலிருந்து தப்பியதற்கு அடையாளமாக கொட்டுசத்தம் பின்னணியில் கேட்கிறது.

கோலேயின் கணவன் கஸீத்திற்கு மூன்று மனைவிகள். கோலே இரண்டாவது மனைவி. அன்று கஸீத் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறான். வீட்டின் வாசலில் காப்புக் கயிறு கட்டி சிறுமிகளைத் தன்னுடனே தங்கச் செய்கிறாள். தன்னைக் கேட்காமல் யாரும் சடங்கு முடியும் நாள் வரை வெளியில் செல்லக்கூடாது என்று ஆணையிடுகிறாள். இது தெரிந்து சடங்கை நிறைவேற்றும் பெண்கள் சிலர் கோலேவின் வீட்டின் முன்பு கூடி விவாதம் செய்கின்றனர். கோலே குழந்தைகளை அனுப்ப பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.

மதத்தின் நம்பிக்கைகளை அழிக்க சதி செய்வதாகக் கூறி கோலேவினை பஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள். ஊர்த்தலைவரின் மகன் இப்ராஹிமுக்கு கோலேவின் மகள் அம்சாத்தொவை நிச்சயத்திருப்பதால் அவர் அதிர்ச்சியடைகிறார். மேலும் மூலாடே செய்துகொள்ளாத அம்சாத்தொவிற்கு தனது மகனை கல்யாணம் செய்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்ராஹீம் பாரிசிலிருந்து ஊருக்குத் திரும்புகிறான். அவனுக்கு சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிக்கிறார்கள். சுத்தப்படுத்தும் சடங்கை முடிக்காததால் அவனை வரவேற்க அம்சாதோ செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள்.

சில நாட்களில் கஸீத் ஊருக்குத் திரும்புகிறார். வரும் வழியிலேயே அவனிடம் கோலேவின் செயல்களை ஊரார் சொல்கிறார்கள். கோவமுடன் வீட்டிற்கு வந்து மனைவிகளிடம் அவன் வாக்குவாதம் செய்கிறான். சிறுமிகளுடன் அம்சதொவிற்கும் மூலடே செய்யவேண்டும் என்று கோலேவினை வற்புறுத்துகிறான். அதற்கு அவள் மறுத்துவிடுகிறாள். இப்ராஹிமுக்கு 11 வயதான வேறொரு பெண்ணை கல்யாணம் முடிக்கப் பார்த்துவிடுகிறார்கள்.

ரேடியோ கேட்பதால் தான் பெண்கள் இப்படி நடக்கிறார்கள் என்று அவற்றைப் பறிக்கிறார்கள். பெண்கள் ரேடியோ கேட்பதற்கும் தடை விதிக்கிறார்கள். இதற்கு பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. இரவில் கூடி பெண்கள் அனைவரும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் காஸீத்-ன் அண்ணன் கோலேயின் வீட்டிற்கு வருகிறான். பிரச்சனை மேலும் வலுக்கிறது. மீண்டும் அவள் பஞ்சாயத்தின் முன் நிறுத்தப்படுகிறாள். மூலாடே செய்ய குழந்தைகளை விடுவிக்குமாறு சாட்டையால் காஸீத் மூர்க்கமாக அடிக்கிறான். பெண்கள் எல்லோரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். "இன்னும் வேகமாக அடி..." என்று ஆண்கள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். அவர்களுடன் சடங்கு செய்யும் பெண்களும் சேர்ந்து கொள்கிறார்கள். "எதுவும் பேசாமல் நில்... பொறுத்துக்கொண்டு நில்" என்று பெண்கள் அனைவரும் கோலேவிற்கு குரல் எழுப்புகின்றனர். கோலே வலியைப் பொறுத்துக்கொண்டு பிடிவாதமாக நிற்கிறாள். மரத்தடியில் வியாபாரம் செய்யும் கடைக்காரன் வந்து பிரம்பை வாங்கிக் கீழே போடுகிறான். காஸீத்ன் மற்ற இரண்டு மனைவிகள் கோலேவை கைத்தாங்களாக வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்குள் 4 சிறுமிகளில் ஒரு சிறுமியை அவளிடைய தாய் வந்து பொய் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அவளுக்கு மூலாடே செய்யும் பொழுது ரத்தப் போக்கு அதிகமாகி இறந்துவிடுகிறாள். அன்று இரவே கோலேவை சித்ரவதையிலிருந்து காப்பாற்றிய கடைக்காரனும் கொலை செய்யப்படுகிறான். சடங்கு நாள் முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்களுடைய அம்மக்கள் சந்தோஷத்துடன் வருகிறார்கள். குழந்தையைப் பறிகொடுத்தவள் மட்டும் அழுது புலம்புகிறாள். எல்லோரும் மசூதியை நோக்கிச் செல்கிறார்கள். இனி நாங்கள் யாருக்கும் மூலாடே செய்யப்போவதில்லை என்று கத்துகிறாள். ஆவலுடன் மற்ற பெண்களும் சேர்ந்துகொள்கிறார்கள். அந்த நேரம் பார்த்து சிவப்பு உடை அணிந்த சடங்கை நிறைவேற்றும் பெண்கள் வருகிறார்கள். பெண்களில் சிலர் கோலேவுடன் சேர்ந்துகொண்டு அவர்களிடமிருக்கும் துருப்பிடித்த கத்திகளையும், சடங்கு உடைகளையும் எரிந்து கொண்டிருக்கும் ரேடியோக் குவியலில் போடுகிறார்கள்.

"இது இஸ்லாத்தோட மத விரோதச் செயல்" என்று ஊர்த் தலைவர்கள் முறையிடுகிறார்கள்.

"சடங்கு செய்யாத லட்சக்கணக்கான பெண்கள் மெக்காவுக்கே போறதா மதத் தலைவர் ரேடியோவில் பேசனாரே" என்று அவர்களுக்கு கோலே பதில் சொல்கிறாள். பஞ்சாயத்துத் தலைவர்கள் வாயடைத்துப் போகிறார்கள். பெண்கள் அனைவரும் வெற்றி கோஷம் போடுகின்றனர். அம்சதோ கூட்டத்திலிருந்து விலகி தனியாகச் செல்கிறாள். தந்தையின் ஆணையை மீறி அவளையே மணக்கப் போவதாக இப்ராஹீம் அவளை நோக்கிச் செல்கிறான். குவிக்கப்பட்ட ரேடியோக்கள் எரிந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து எழும் கரும்புகை மசூதியின் உட்சியிலுள்ள வெள்ளை முட்டையையும் தாண்டி உயரே செல்கிறது. அடுத்த காட்சியில் ரேடியோவிற்கு பதில் டிவி ஆண்டனா முளைக்கிறது.

பெண்களின் மீதான அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுக்கும் இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2004-ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருது பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஆரம்ப சில காட்சிகள் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது: Moolaadé

இந்த படத்தை இயக்கிய "ஆஸ்மேன் செம்பேன்" ஆப்பிரிக்க சினிமாவின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அவரைப் பற்றிய கட்டுரை கீற்று தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. அந்த இணைப்பு கீழே உள்ளது.

ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை - ஆஸ்மேன் செம்பேன்

பின்குறிப்பு: இதே போன்ற கதையை Alice Walker என்பவர் ஆங்கிலத்தில் நாவலாக 90 களில் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

Monday, December 13, 2010

கேணி சந்திப்பு - வண்ணதாசன்

உச்சிக் கிளையில் இருக்கும் தேன்கூட்டைப் பார்த்திருக்கிறீர்களா? தேனடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வழவழப்பான தேனீக்கள் தான் எத்தனை அழகு! வெயிலில் மின்னும் அந்த கரிய நிறத்திற்கு ஈடுஇணை எது? ஞானியின் வீடும் இந்த மாதம், தேன்கூட்டைப் போலவே இருந்தது. வாசற்கதவை பிடித்துக் கொண்டும், ஜன்னல் சட்டத்தில் தொங்கிக்கொண்டும், வழிப்பாதையில் சம்மனமிட்டும், சமையல் மேடையில் உட்கார்ந்துகொண்டும் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ராணித் தேனிபோல வண்ணதாசன் வந்தமர்ந்தார்.

"ஒளியிலே தெரிவது" -என்ற புத்தக வெளியீட்டுடன் சந்திப்பு நடக்க இருக்கிறது. முதல் பிரதி யாரிடம் செல்கிறது என்பது வண்ணதாசன் தான் முடிவு செய்யவேண்டும் என்று அறிமுகவுரையுடன் இலக்கிய சந்திப்பை ஞாநி துவங்கி வைத்தார்.

வழி தெரியாமல் ஞாநியின் வீட்டைத் தேடியவாறு சாலையில் நடந்து வந்தேன். என்னை நோக்கி ஒரு நபர் வந்து "நீங்கள் கேணிக்குதானே செல்கிறீர்கள் என்னுடன் வாருங்கள்" என்று இங்கு அழைத்துக்கொண்டு வந்தார். இதிலிருந்து எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டுவதில்லை. வாசகர்கள் தான் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்பது புரிகிறது. அவர் பெயர் குமார் என்று நினைக்கிறேன். என்னுடைய வாசகராகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு முதல் பிரதியை கொடுக்க விரும்புகிறேன் என்றதும் பெருத்த கரகோஷம். நண்பர் குமார் பரவசம் கலந்த கூச்சத்துடன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை நாடக நடிகர் பாரதி மணியும், மூன்றாவது பிரதியை எழுத்தாளர் எஸ்ரா -வும் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கல்யாண்ஜி தனது உரையைத் தொடர்ந்தார்.

எனக்கு பேசத்தெரியாது அதனால் தான் எழுத ஆரம்பித்தேன். அதிகம் பேசாமல் உங்களுடன் இருந்துவிட்டுப் போகவே வந்துள்ளேன். எழுதுபவன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனக்கு எஸ்ரா மாதிரி பேசவராது. எழுதுபவன் எழுதினால் போதும் என்பது என் எண்ணம். ஆறு, குளம், ஏரி என்று எல்லா நீர்நிலைகளும் வற்றிக்கொண்டு வருகின்றன, தாமிரபரணியை பார்ப்பதற்கு மனம் வலிக்கிறது. கேணியின் அருகில் சந்திப்பு என்றதும் ஆர்வமுடன் வந்தேன். ஏனெனில் கிணற்றிற்கும் எனக்கும் சமந்தம் இருக்கிறது. வேலையில்லாத நாட்களில் என்னுடைய அண்ணன் வீட்டு பின்வாசலில் உள்ள கேணிக்கு அருகில் வரைந்துகொண்டும், எழுதிக் கொண்டும் இருந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. எழுதுபவனுக்கு ஞாபகங்கள் பெரிய சம்பத்து அல்லது அவஸ்த்தை.

சந்திப்பு உள்ளே நடப்பது ஏமாற்றமாக இருக்கிறது. வந்ததும் கேணி இருக்கும் இடத்தை சென்று பார்த்தேன். மக்கிய இலைகளும், பழுத்து விழுந்த சருகுகளும், சேரும் சகதியும் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அழுகின சருகும் அழகுதானே. சந்திப்பு பின்புறம் ஏற்பாடாகி இருந்தாலும் நீங்கள் ஆர்வமுடன் அங்கு அமர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். குறுக்கும் நெடுக்குமாக செல்லக்கூடிய பல வண்ணக் கொடிகளும், ஈரத் துணியின் வாடையும் கவரக்கூடிய விஷயங்களாக இருக்கிறது. கிரா பேசிய வார்த்தைகள் கேணிக்கு அருகில் உதிர்ந்து கிடக்கிறது. அவற்றை பொருக்கி எடுத்துச்செல்லவே வந்திருக்கிறேன். எல்லோரும் வருவதற்கு முன், இந்த அறையில் பத்தமடை பாயை விரித்திருந்தார்கள். எவ்வளவு அழகாக இருந்தது. அந்த கோரைப்பாயின் வாசனை கூட எனக்குத் தெரியும்.

1962 ஏப்ரல் மாத வெயில் காலத்தில் ஆரம்பித்து, இதோ இந்த குளிர் காலம் வரை நிறைய தூரம் வந்துவிட்டேன். முதன் முதலாக என்னுடைய படைப்பை வாசித்துவிட்டு நம்பிராஜன் என்ற வாசகர் வீடுதேடி வந்திருந்தார். அதிலிருந்து எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். முதலில் அஃகு பரந்தாமன் என்னுடைய படைப்பை வெளியிட்டார். இப்பொழுது சந்தியா நடராஜன் வரை எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். உண்மையில் அத்தனை தூரம் நெருங்கி இருக்கிறேன் அல்லது இன்னும் நெருங்க நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுப்பதை எடுத்துக் கொள்கிறேன். அதற்கு பதிலாக என்னிடம் இருப்பதை உங்களுக்குக் கொடுக்கிறேன். என்னிடம் இருப்பது எழுத்தாக இருக்கிறது. அதன் மூலம் உங்களிடம் நெருங்க விரும்புகிறேன்.

சில தினங்களுக்கு முன் ரமணாஸ்ரமம் சென்றிருந்தேன். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. என்னுடைய முதல் திருவண்ணாமலை பயணம் அதுதான். மழை சந்தோஷத்தையோ அல்லது துக்கத்தையோ நமக்குத் தருகிறது. பகுத்தறிய முடியாத உணர்வுடன் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தேன். அமைதியான இடம் இருட்டாக இருந்தது. என்னைச் சுற்றிலும் எல்லோரும் மெளனமாக இருக்கிறார்கள். இருள்திட்டில் எல்லாமே மெளனமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் நினைப்பதுபோல எல்லோருடையை மௌனத்தையும் நான் வாங்கிக்கொள்கிறேன். அதனால் நான் தான் அதிக மௌனியாக இருந்தேன். திடீரென்று மயிலின் குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சப்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. "ஆசிரமத்தின் அந்த மூலையில் மயில் இருக்கிறது, இந்த மூலையில் இருக்கிறது" என்று உடன் வந்தவர்கள் கூறினார்கள். மயில் சப்தம்தான் எனக்கு மயிலானது.

உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கு சந்தித்த எவ்வளவோ முகங்கள் நினைவிற்கு வந்து செல்கிறது. அதிலும் வயதானவர்களின் மௌனம் எத்தனை அழகுடையது. ஓவியனாக இருந்திருந்தால் அந்த முகங்களை வரைந்திருப்பேன். அனைவரையும் கடந்து வரும்பொழுது, ஒரு வயோதிக திபெத்திய மனிதர் வழியில் அமர்ந்திருந்தார். ஒரு நாகலிங்கப் பூவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கவனம் வேறெதிலும் செல்லவில்லை. மெளனமாக பூவையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையுமே பார்த்தவர்தான் அப்படி உட்கார்ந்திருக்க வேண்டும். அல்லது எதையுமே பார்க்காதவர் தான் அப்படி மௌனித்திருக்க வேண்டும். அவரை கடந்து செல்லும் பொழுது கையிலுள்ள பூவை என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு அவரை நெருங்கினேன். திபெத்திய மௌனியின் கையில் பூ இல்லை. யாரோ அவரிடமிருந்து வாங்கிச் சென்றிருக்க வேண்டும். அல்லது மௌனியே யாருக்காவது கொடுத்திருக்க வேண்டும். ஒரு ஜன்னல் ஓரத்தில் கூட பூவை அவர் வைத்திருக்கலாம். [இங்கு பேச்சு தடைப்பட்டு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். சுற்றிலும் மௌனம் நிலவியது.]

இந்த மௌனம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் வீட்டில் நிறைய ஜன்னல்கள் இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த வெளிச்சம் ஏதாவதொரு ஜன்னலில் கிடைக்கலாம். எனக்கு அதுபோன்ற வெளிச்சம் கிடைப்பதாகத் தெரியவில்லை.

ஒருநாள் காலை சாலையில் சென்றுகொண்டிருந்தேன். இருசக்கர வாகனத்தில் குழந்தையை அமர்த்திக் கொண்டு ஒரு பெண் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். சீருடை அணிந்த குழந்தைகள் வேறெதையும் பார்ப்பதில்லை. குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல செல்கிறார்கள். அவர் வண்டியை ஒட்டிக்கொண்டு செல்லவில்லை. தள்ளிக்கொண்டு சென்றார். வழியெல்லாம் பன்னீர்ப் பூக்கள் பரவிக் கிடந்தன. என்னைக் கடக்கும் பொழுது "எப்பா எவளோ பூ!" என்ற வார்த்தையை அந்தப் பெண்மணி உதிர்த்தார். அந்த வார்த்தைகளை யாருக்காக அவள் சொன்னால். என்னிடமா? குழந்தையிடமா? அல்லது அவளுக்கே சொல்லிக் கொண்டாளா?... அதுபோலத்தான் என்னுடைய எழுத்துக்களும்.

சென்னை, தூத்துக்குடி, பாபநாசம், திருநெல்வேலி என்று எத்தனையோ இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். அங்கெல்லாம் எத்தனையோ மனிதர்கள் என்னை பாதித்திருக்கிறார்கள். பாரம் சுமப்பவர்கள் எழுத்தாளர்களுக்கு நிறைய சொல்லுவார்கள். எழுத்தாளர்களின் முகம் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய வலியை தோழமையுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் எழுத ஓர் ஆயுள் போதாது. படித்த கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை.

என்னுடைய இளம்சூடான சாராயத்தை
அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள்
தயவுசெய்து வேறு
குவளைகளில் மாற்றிவிடாதீர்கள்
நுரைகள் உடைந்துவிடும்...

என்னுடைய படைப்புகளையும் இளம் சூடான சாராயம் போல கோப்பைகளில் தருகிறேன். தயவு செய்து அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஒருசில கேள்விகள்:

1. வண்ணதாசன் - பெயர்க்காரணம் சொல்லுங்களேன்?
வல்லிக்கண்ணன் அப்பாவிற்கு கடிதம் எழுதுவார். அவரின் மேல் மிகுந்த ஈடுபாடு எங்களுக்கு. அவரின் நினைவாக இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன். வேறெதுவும் இல்லை. முதலில் என்னுடைய அண்ணன் தான் இந்தப் பெயரில் எழுதினர். அவரிடமிருந்து நான் திருடிக்கொண்டேன். தொலைத்ததை இன்னும் அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.

2. கவிதைக்கு கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதுகிறீர்களே?
என்னுடைய பெயர் கல்யான் சி {தி.க. சிவசங்கரன்}. அதனை கல்யாண்ஜி என்று வைத்துக்கொண்டேன். வார்த்தை லயத்திற்காக அப்படி மாற்றிக் கொண்டேன்.

3. நீங்கள் கதை, கவிதை என இரண்டு தளங்களிலும் இயங்குகிறீர்கள். ஒரு சம்பவம் எப்படி கதையாகவோ கவிதையாகவோ உருப்பெறுகிறது?
இதற்கு முன் தீர்மானம் எதுவும் இல்லை. ஒருவரை திடீரெனப் பாடும் படிக்கேட்டால், அவருக்கு அடிக்கடி நினைவிற்கு வரும் பாடலைத் தானே பாடுவார். அப்படி இல்லாமல் யாராவது பாடும்படிக் கேட்டால் இந்தப் பாடலைத் தான் பாட வேண்டும் என்று முன் தீர்மானத்துடன் பாடுவதில்லையே. அதுபோலத்தான் எழுத்தும். உள்ளிருந்து தானாகவே வெளிவர வேண்டும். அது அந்த நேரத்தைப் பொறுத்தது.

4. விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
அந்த மாதிரி எதுவும் வருவதே இல்லையே...வந்தால் தானே அதைப் பற்றி சொல்ல முடியும்.

5. படைப்பாளிக்கு ஞானச்செருக்கு இருக்க வேண்டுமா?
ஞானம் இருப்பவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் சொல்லலாம். அவருக்கு இருக்கிறது. எனக்கு இல்லை.

6. உங்களுக்கு இணையப் பக்கங்கள் இருக்கிறதே... இணையத்தில் கிடைப்பதை வாசிக்கிறீர்களா?
சில பக்கங்களை அடிக்கடி வாசிப்பேன். எப்பொழுதாவது சில பக்கங்களுக்கு சென்று வந்துவிடுவேன். மற்றபடி இணையத்தில் தீவிரமாக இயங்க விருப்பமில்லை. நேரம் விரயம் ஆகிறது. அந்த நேரத்தில் ஒரு கதையை எழுதிவிடுவேன். 40 வருடங்களுக்கும் மேலாக எழுதிவிட்டேன். அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இணையம் கடந்த 10 வருடத்தில் வந்தது தானே. என்னுடைய பக்கங்களை வேறொருவர் பதிவிடுகிறார். நம்முடைய வேலையை மற்றவர் செய்தால் மகிழ்ச்சி தானே. செய்யட்டுமே. :-)

7. எது இலக்கியம்?
நீங்கள் எதை இலக்கியம் என்று நினைக்கிறீர்களோ அதுவே இலக்கியம்.

8. "மதினி, பெரியம்மா" போன்ற உறவுப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களே?
தயவு செய்து உறவுப் பெயர்களை சொல்லிப் பழகுங்கள். வார்த்தை பயன்படுத்த பயன்படுத்தத் தான் மொழி கூர்மை அடையும். கிரா, நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் போன்றவர்களை விடவா மொழிக்கு நான் செய்துவிட்டேன்.

இதைத் தவிர மேலும் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவையெல்லாம் அரசியல், பெண்ணியம், புரட்சி, நாட்டுநடப்பு, சினிமா பற்றிய தேவையில்லாத கேள்விகளாக இருந்தன. அவையெல்லாம் கல்யாண்ஜிக்கு சமந்தப்பட்ட கேள்விகளாகவும் எனக்குத் தெரியவில்லை. எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக கலந்துரையாடலை நிறைவு செய்தார்கள்.

எடுத்துச் சென்ற புத்தகத்தில் கல்யாண்ஜியிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன், எஸ்ரா, பாரதிமணி, சங்கர் நாராயணன், வேணுவனம் சுகா, பாலபாரதி, பட்டர் ஃபிளை சூர்யா, நிலா ரசிகன், வேல்கண்ணன், உழவன், அடலேறு, வெங்கட் ரமணன், முத்துச்சாமி, பிரபா, நடிகர் சார்லி, நடிகை பாத்திமா பாபு போன்ற பலரையும் சந்திப்பில் பார்க்க முடிந்தது. பலரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேணிக்கு வந்திருந்தார்கள்.

வண்ணதாசன் கேணி இலக்கிய சந்திப்பு - ஒலி வடிவில்

தொடர்புடைய இதர பதிவுகள்:
1. வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்! - பாலபாரதி

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3.
அடுத்த மாதம் கேணிக்கு தமிழிசை மற்றும் மரபு பற்றி சந்திப்பு நடைபெறும். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Friday, December 10, 2010

பாரதி திரைப்படம்

இன்று பாரதியின் 129-ஆவது பிறந்த நாள். சென்ற வருடம் அவருடைய பிறந்தநாளுக்கு கட்டுரைத் தொகுதிகளை வாங்கினேன். இது நாள் வரை ஒரு வார்த்தை கூட அந்த கட்டுரைகளிலிருந்து வாசிக்கவில்லை. நேற்று ராஜ் வீடியோஸ் சென்று அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய திரைப்பட குறுந்தகட்டை வாங்கினேன். எனவே இன்று காலை 'பாரதி' திரைப்படம் பார்ப்பதென தீர்மானித்தேன்.

பாரதியின் மரண ஊர்வலத்தில் படம் துவங்கியது. அந்த நேரத்தில் பாரதி மணி எழுதிய "நிகம்போத் தில்லி சுடுகாடு" நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் அவரே காட்சிகளில் வந்தார். பாரதியின் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார். உடன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள், சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழங்கள் ரவி, ஸ்ரீகாந்த் என்று எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

காணும் காட்சிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளும் படியாக இருந்தது தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் கேமராக் கண்களும். அதனை நேர்த்தியாக வெட்டி ஒட்டியிருந்த லெனின் மற்றும் VT விஜயனும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இசைஞானி இளையராஜாவின் இசை படைப்பிற்கு கனத்தையும், வலு சேர்ப்பதாகவும் இருக்கிறது. பசி உறக்கம் இல்லாமல் படத்தின் பாடல்களைக் கேட்கலாம்.


பாரதி போன்ற மகா கலைஞனின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது மிகுந்த சிரமத்திற்குரியது. இயக்குனர் ஞான ராஜசேகரன் சிறப்பாக செய்திருக்கிறார். திரைப்படத்தை மூன்று பேர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். அவர்களில் எழுத்தாளர் சுஜாதாவும் ஒருவர். அவர்களுக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இந்தத் திரைப்பட பாடல்களில் பாரதியின் கவிதைகள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது, மகாகவியின் மரணமும் தவறாக சொல்லப்பட்டிருக்கிறது, இசை அதீதமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று பாதகமாக ஒருசில விமர்சனங்களைப் படிக்க நேர்ந்தாலும் தமிழ்த் திரைப்படங்களில் இது முக்கியமான படம். 2000-ம் ஆண்டில் தேசிய விருது பெற்ற படம். படத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்த பலருக்கும் தேசிய விருது பெற்றுத் தந்த படம். திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கோடி வணக்கங்கள்.

திரைப்படத்தைப் பார்க்க கூகுளே வீடியோஸ் பக்கங்களுக்கு செல்லவும்:

பாரதி திரைப்படம்

Monday, December 6, 2010

நந்தலாலா - மிஸ்கின்

திரைக்கு வந்த மூன்றாவது நாள் 'நந்தலாலா' பார்ப்பதற்கு திரையரங்கு சென்றிருந்தேன். கூட்டமாக இருக்குமெனில் திரும்பிவிடலாம் என்று யோசித்தவாறே சென்றேன். படம் துவங்க 15 நிமிடங்கள் இருக்கிறது. டிக்கெட் கவுண்டரில் எனக்கு முன்பு இரண்டு நண்பர்கள் நின்றிருந்தனர். எனக்கு அடுத்தது யாருமே இல்லை. டிக்கெட் வாங்கிக்கொண்டு எனக்கான இருக்கைக்கு நகர்ந்தேன். 200-ற்கும் அதிக இருக்கைகள் கொண்ட அரங்கில் 35 நபர்கள் மட்டுமே இருட்டறையில் அமர்ந்தோம்.

நீரோட்டத்தின் வாகில் செல்லத் துடிக்கும் புற்களின் அசைவில் படம் துவங்குகிறது. அது கூட அந்திரே தர்கோவிஸ்கி சொலாரிஸின் படத்தில் இருந்து தழுவப்பட்டது என்று ஜெயமோகன் தளத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். படிக்க - புல் தண்ணீர் காட்சி.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது நல்லது. ஒரு சினிமா மாணவ நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் உலகப் படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் திணிக்கப்படுவதை அல்லது தழுவப்படுவதைப் பற்றி பேசினேன். உரிமம் இல்லாமல் இந்த மாதிரி வேலைகளை செய்வது ஒரு வகையில் அறிவுத் திருட்டு என்று காட்டமாகக் கூறினேன். சிரித்துக் கொண்டே பாலுமகேந்திரா இதைப் பற்றி பேசியதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

கர்னாடக சங்கீதம். பாரத நாட்டியம் என்று எந்த பாரம்பரியக் கலையை எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட ராகங்களை அல்லது நடனங்களை
த் தான் திரும்பத் திரும்ப மேடை ஏற்றுகிறார்கள். ஏற்கனவே இருப்பவைகளின் நகல்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது. "புதிதாக எந்த முயற்சியும் ஏன் செய்யவில்லை?" என்று யாரும் அவர்களைக் கேள்வி கேட்பதில்லை. சினிமாவை எடுத்துக்கொண்டால் இது போன்ற விமர்சனங்களைத் தவிர்க்க இயலாது.

பாலு மகேந்திராவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. ஒரு கர்நாடக சங்கீத வித்தாவான் ஓர் இசைக் கோர்வையை மேடையில் பாடுவதற்கு முன்... இந்த ராகத்தில் அமைந்தது... இன்னார் இயற்றியது... அதை இன்னார் மெருகேற்றினார்கள் என்று பட்டியலிட்டுவிட்டு ரசிகர்களுக்கு வழங்குகிறார்கள். திரைபடப் பாடல்கள் கூட இந்த ராகத்தில் அமைந்தது என்று இசையமைப்பாளர்களே சொல்லிவிடுகிறார்கள். சினிமா, இதுபோன்ற நாகரீகங்களிலிருந்து பல நேரங்களில் விலகி நிற்பது வருந்தத்தக்கது.

நந்தலாலா - கிகுஜிரோவின் தழுவல் என்பதை
தயாரிப்பில் இருக்கும் பொழுதே சினிமா விரும்பிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஜப்பானிய மொழியை விரும்பிப் படித்த பொழுது கிகுஜிரோ வாங்குவதற்காக பட்டர் ஃபிளை சூர்யாவைத் தொடர்பு கொண்டேன். "அடடே அந்தப் படமா...? அந்த கதையைத் தழுவி மிஷ்கின் தமிழில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மையா? இல்லையா? என்பது திரைக்கு வந்தால்தான் தெரியும்..." என்று பகிர்ந்து கொண்டார். மாயக்கோல் ஒன்று இருந்தால் சுரேஷ் கண்ணன், பட்டர் ஃபிளை சூர்யா போன்ற நண்பர்களின் முன்னாள் நீட்டி இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை மறக்கடிக்கச் செய்யலாம்.

கிகுஜிரோ - பட்டர்ஃபிளை சூர்யா

நீண்ட விடுப்பில், தனிமையில் வாடும் குழந்தை தொலைவிலுள்ள தாயைப் பார்க்க புறப்படுகிறான். அதற்கு மனைவி கேட்டுக் கொண்டதற்காக அறிமுகமில்லாத ஒருவன் துணைக்குச் செல்கிறான் (லாஜிக் உதைக்கிறது). அவன் ஓர் ஊதாரி. பயணத்தில் சந்திக்கும் இடர்களின் மூலம் அவர்களுக்கான பரஸ்பர அன்பு ஊற்றெடுக்கிறது. ஊதாரித்தனத்திலிருந்து விடுபட்டு பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறான். சிறுவனின் தாய் வாழும் ஊருக்கு அழைத்துச் செல்கிறான். நந்தலாலாவின் மையக்கருவும் இஃதே என்றாலும் தமிழுக்குத் தேவையான மசாலாக்கள் தேவையான அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலதிக விஷயங்கள் தான் மூலத்திலிருந்து விலகி இதனை தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக முன்னிறுத்தப் பார்க்கிறது.

எனக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு மீன்காரி மீன் விற்கக் கிளம்பினாளாம். பல ஊர்களுக்கும் சென்று பாதி மீன்களை விற்றுவிட்டாள். அவள் மறுபடியும் ஊருக்குத் திரும்புவதற்குள் மேகம் இருண்டு அடைமழை பொழிந்ததாம். செய்வதறியாது திகைத்து நின்றாளாம் மீன்காரி. அருகிலுள்ள ஒரு குடிசைக்குச் சென்று ஒதுங்க நினைத்தாளாம். அது பூ வியாபாரம் செய்பவளின் வீடு. அவளிடம் தயங்கித் தயங்கி "இன்றொரு நாள் உங்கள் குடிசையின் ஓரத்தில் தங்கிக் கொள்கிறேன். நாளை காலை விடிந்ததும் சென்றுவிடுகிறேன்" என்று வேண்டினாளாம்.

பூ தொடுப்பவள் இன்முகத்துடன் அவளை வரவேற்று "தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் நானும் தனியாகத்தான் இருக்கிறேன்" என்றாளாம்.
மீன்காரிக்கு இரவு உணவு பரிமாறி விட்டு தூங்குவதற்கு இடத்தைக் காட்டினாளாம்.

மீன்காரிக்குத் தூக்கமே வரவில்லையாம்.
புரண்டு புரண்டு படுத்தாளாம். விழித்துப் பார்த்தால் தலைமாட்டில் பூக்கூடைகள் இருந்ததாம். அதன் வாசனை அவளுக்குப் பிடிக்கவில்லை. வெளியில் சென்று ஓரமாக வைத்திருந்த மீன்கூடையை எடுத்து வந்து தலைமாட்டில் வைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாளாம் மீன்காரி. அழகான வண்ணப்பூக்களும், மலர்கள் நிறைந்த கூடைகள் இருந்தாலும் "கவிச்சிக் கூடையை சுமந்தவர்களுக்கு பூவாசம் பிடிக்குமா?" என்பது போல இருக்கிறது உலகப் படங்களை தழுவலாக எடுப்பது. நம்மிடம் இல்லாத கதைகளா? நம்மைச் சுற்றி நடக்காத கதைகளா? அவற்றில் ஒன்றை உள்வாங்கி திரைப்படம் எடுக்கலாமே?.

சுராவின் படைப்பு நேரடியாக ஹீப்ருவில் மொழிமாற்றம் செய்யப்பட்டால் மார்தட்டிக் கொள்கிறோம். 'யாவரும் நலமே' உரிமம் பெற்று ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டால் உச்சி குளிர்ந்து போகிறோம். நம் சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் அடுத்தவர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். நாம் கூட நாகரீகம் கருதி அடுத்தவர்களுக்கு அதைச் செய்யலாமே. கல்யாணப் பூசணியை தர்பூசணி என்று வார்த்தை ஜாலம் செய்ய வேண்டாமே!.

"தமிழ் சினிமாவை உலக அளவில் முன்னெடுத்துச் செல்ல உச்ச நடிகர்கள் முன்வர வேண்டும்" என்று மிஷ்கினை அருகில் வைத்துக் கொண்டு சாரு நிவேதிதா நடிகர் ரஜினிக்குக் கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை நானும் மிஷ்கினுக்கு வைக்கிறேன். ஒரு படைப்பின் மூலம் பாதிக்கப்பட்டால் "Inspired By" என்ற இரண்டு வார்த்தையை சேர்த்து உங்களுடைய படைப்புகளை விளம்பரப் படுத்தலாமே?

தொடர்புடைய இதரப் பதிவுகள்:

1.
நந்தலாலா: மிஷ்கினின் கூழாங்கற்கள்
2.
நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்
3.
பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... நந்தலாலா
4. நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ
5.
நந்தலாலா : வாழ்க்கையெனும் ஜீவநதி
6. நந்தலாலா – மூலமும் நகலும்
7. நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?
8. நந்தலாலா... உகுநீர் நெஞ்சு சுட

பின் குறிப்பு: சந்தேகமே இல்லை. கண்டிப்பாக இந்தப் படம் பல விருதுகளைப் பெரும். அந்த நேரத்தில் இயக்குனர் சந்திரன் பல வருடங்களுக்கு முன் தீராநதியில் கொடுத்த பேட்டியில் சொல்லியிருந்ததை நினைத்துக் கொள்வேன். அவரின் வார்த்தைகள்:

"சினிமா என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில், சினிமா என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்களால் நேர்ந்தேடுக்கப்பட்டு, தேசிய அளவில் சினிமாவுக்கான சிறந்த இயக்குனராக நான் தேர்ந்தெடுக்கப் பட்
டு விருது பெறுவதில் பெரிய அதிசயம் ஒன்றும் இல்லை. சாதனையும் இல்லை".