Thursday, December 23, 2010

டிராவலர்ஸ் & மெஜிஷியன்ஸ் - நோர்பு

இளஞ்சூரியன் மலையில் இறங்கி உஷ்ணத்தைப் பரப்பி, குளிர்ச்சியை உறிஞ்சக் கூடிய அழகிய பூடான் கிராம். 'தொந்டுப்' இளநிலை அரசு ஊழியராக அங்கே வேலை பார்க்கிறான். அமெரிக்க மோகம் நாட்டின் எந்த மூளையையும் விட்டு வைப்பதில்லையே!. வேலையை உதறிவிட்டு, தன் கனவு பூமியான அமெரிக்கா செல்ல விரும்புகிறான். அதற்காக தன்னுடைய நண்பனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான். நாட்கள் நத்தை நகர்வதைப் போல உணர்கிறான். ஒவ்வொரு நாளும் தபால் நிலையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகிறான். எதிர்பார்த்த கடிதம் ஒருநாள் அவனுக்கு வந்துசேர்கிறது.

அதில் 'இன்னும் மூன்று நாளில் தலைநகர் திம்புவில் இருக்கும் தூதரக அலுவலகத்தில் இருக்க வேண்டும்' என்று எழுதியிருக்கிறது.

திருவிழா துவங்குவதால் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று பொய் சொல்லி, மேலதிகாரியிடம் விடுமுறை வாங்குகிறான். அமெரிக்கா செல்லப்போகும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான் தொந்டுப்.

"இங்கே என்ன இருக்கு? கேளிக்கைக்கு இடமில்லை, ஓட்டல் இல்லை, இணக்கமாகப் பழக அழகான பெண்கள் இல்லை" என்று தோழனிடம் சொல்லிவிட்டுத் தனது உடைமைகளுடன் கிளம்புகிறான். எதிரே புதுமனைப் புகுவிழாவிற்கான ஊர்வலம் நடக்கிறது. போகும் வழியில் கிராமத்துப் பெண் வழிமறித்து "நீண்ட தொலைவு போறீங்களே... எப்படி சும்மா அனுப்புறது? கொஞ்சம் இருங்க..." என்று பன்னீர் வத்தல்களைத் தருகிறாள். அதை வங்கிக் கொண்டு பேருந்துக்காக நடக்கிறான். வழியில் தென்படும் ஓடையில் வத்தல்களை வீசி எறிந்துவிட்டுச் செல்கிறான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கடைசி பேருந்து கிளம்பிச் செல்கிறது. வேறு வாகனத்தில் ஏறிப் போய்விடலாம் என்று பாதையோரம் நிற்கிறான். அப்போது ஆப்பிள் விற்கும் வயோதிகன் கூடையுடன் வருகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு புத்த துறவியும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்.

துறவி எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அதற்கு 'தொந்டுப்' சிடுசிடுவென பதில் சொல்கிறான். அவன் பொறுமை இல்லாமல் தவிப்பதைப் பார்க்கும் துறவி "எதற்காவது நாம் காத்திருக்க நேர்ந்தால், உணர்வுகளின் எல்லைக்கு சென்றுவிடுகிறோம்" என்ற புத்த போதனையை மேற்கோள்காட்டுகிறார். மௌனியாக இருக்கும் கிழவனையும், பேசிக்கொண்டே இருக்கும் துறவியையும் தொந்டுப் தவிர்க்கப் பார்க்கிறான். மெல்ல இருட்டத் துவங்குகிறது. வேறு வழியின்றி, மூவரும் சாலையோரம் தங்குகிறார்கள். துறவி அங்கேயே அடுப்பை மூட்டி சூப் தயாரித்துத் தருகிறார். இரவின் நெருக்கத்தில் ''எங்கே போகிறாய்?'' என்று துறவி கேட்கிறார்.

"ரொம்ப தூரத்தில் இருக்கும் கனவு பூமிக்கு!..."

"அப்படியெனில் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் விழித்துப் பார்க்கும் பொழுது உனக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகலாம்" என்று துறவி சொல்கிறார். அப்படியே கனவு பூமி பற்றிய கதை ஒன்றை சொல்லத் துவங்குகிறார்.

'ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்த ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தாஷி. இளையவன் கர்மா. மூத்தவனுக்கு மந்திர தந்திரங்கள் கற்றுக் கொடுக்க விரும்பி, ஒரு குருவிடம் அனுப்பினார்கள். தாஷியோ பகல்கனவு காண்பவன். சரியான சோம்பேறி. சதா நேரமும் பெண்களைப் பற்றியும், சிற்றின்பங்கள் பற்றியும் நினைப்பவன். கர்மாவோ அதிபுத்திசாலி. மதிய உணவைக் கொடுக்க அண்ணனின் பள்ளிக்கு தினமும் போகிறான். ஒருநாள் மதிய இடைவேளையில், இருவரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். மூலிகை கலந்த மதுவை தாஷிக்குக் கொடுக்கிறான். மகிழ்ச்சியுடன் வாங்கிக் குடித்ததும் போதை ஏறிய நிலையில், புதிதாக வாங்கிய குதிரையில் சவாரிசெய்ய தாஷி புறப்படுகிறான். மிரண்டு ஓடிய குதிரை வெகுதூரம் பயணித்து, அடர்ந்த காட்டில் அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்கிறது. கீழே விழுந்து காயம்பட்ட தாஷி, அடர்ந்த காட்டுக்குள் நடந்து ஒரு வீடு இருப்பதைப் பார்த்துக் கதவைத் தட்டுகிறான்.

தாடி வைத்த முதியவர் கையில் விளக்குடன் கதவைத் திறக்கிறார். அவன் நிலைமையைப் பார்த்து, வீட்டில் தங்க அனுமதிக்கிறார்.தாஷி சோர்வுடன் படுக்கிறான்.வயோதிகருக்குப் பக்கத்தில் ஓர் இளம் பெண் படுத்திருப்பதை பார்க்கும் தாஷியின் மனம் சஞ்சலமடையத் தொடங்குகிறது. கதையைக் கேட்டவாறே தொந்டுப் தூங்கிவிடுகிறான்.

காலை விடிந்ததும் சாலையில் லாரி வருகிறது. அதில் மூவரும் ஏறிக் கொள்கிறார்கள். ஓரிடத்தில் அழகான பெண்ணும், அவளது தந்தையும் லாரியில் ஏறுகிறார்கள். பேசிக்கொண்டே பயணம் தொடர, ஆமை வேகத்தில் நகரும் லாரி பழுதாகி நிற்கிறது. எல்லோரும் இறங்குகிறார்கள். அனைவரையும் அமர்த்திக்கொண்டு துறவி மீண்டும் கதையைத் தொடங்குகிறார்.

சப்தம் கேட்டு கண்விழிக்கும் தாஷி, ஜன்னல் வழியாக இளம் பெண்ணைப் பார்க்கிறான். அவள் துணி நெய்து கொண்டிருக்கிறாள். அவள் கிழவரின் மனைவி 'தேகி' என்று தெரிகிறது. காலை உணவு பரிமாறும்போது அவளை முதன்முறையாகப் பார்க்கிறான். இருவருக்குள்ளும் வேதிமாற்றம் நிகழ்கிறது. அவர்கள் இருவரையும் முதியவர் சந்தேகத்துடன் பார்க்கிறார். சாப்பாடு முடிந்ததும், அவனை அழைத்துச் சென்று போகவேண்டிய திசையைக் காட்டிவிட்டு வீடு திரும்புகிறார்.

லாரி சரிசெய்யப்பட்டு மீண்டும் புறப்படுகிறது. குறிப்பிட்ட தொலைவு சென்று ஒரு வளைவில் நிற்க - துறவி, தொந்டுப், ஆப்பிள் விற்கும் முதியவர், இளம்பெண் சோனம், அவளது அப்பா என எல்லோரும் லாரியிலிருந்து இறங்குகிறார்கள். சோனம், ஆப்பிளை நறுக்கி எல்லோருக்கும் சாப்பிடத் தருகிறாள். அங்கிருந்து ஒன்றாக நடக்கத் தொடங்குகிறார்கள். நீண்ட நேரம் நடந்து, ஓரிடத்தில் எல்லோரும் அமர்கிறார்கள்.

"உங்கள் மாதிரி இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை... நீங்க ஏன் அந்த நாட்டுக்குப் போறீங்க?" என்று பூனத்தின் அப்பா கேட்கிறார். "அந்த நாட்டவர்களுக்கு பூடான் எங்கிருக்கிறது என்பது கூட தெரியாது" என்று சோனம் சொல்கிறாள். "வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க!... தட்டு கழுவலாம், ஆப்பிள் பறிக்கலாம்..." என்று தொந்டுப் சொல்கிறான்.

"கனவு பூமிக்கு சென்று ஆப்பிள் பறிக்கப் போறேன்னு சொல்லு. ஆனால் தாஷி மாதிரி நீயும் தொலைஞ்சு போயிடாதே!'' என்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து கதையை சொல்லத் துவங்குகிறார்.

அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் மீண்டும் தேகியின் இடத்திற்கே வருகிறான் தாஷி. தேகியின் வீட்டில் சில நாட்கள் தங்குகிறான். துணியை நெய்து முடித்துவிட்டால், தாஷி சென்றுவிடுவான் என்று செய்யும் வேளையில் சுணக்கம் காட்டுகிறாள். நூல் செண்டையும் சிக்கலாக்கி விடுகிறாள். கிழவனுக்கு சந்தேகம் முற்றுகிறது. சுடுநீரில் குளிக்க கிழவன் பிரியப்படுகிறான். சூட்டின் இதத்தில் அதிக மது குடித்து கிழவன் மயங்கிவிடுகிறான். அதே இடத்தில் தேகி தனியாகக் குளித்துக் கொண்டிருக்க, தாஷி அவளை நோக்கி பூனை மாதிரி நடக்கிறான். அதனை தேகி ரகசியமாக ரசிக்கிறாள்.

"கிராமத்தில் இருந்தால் இளவயது பசங்களுடன் இவள் சென்றுவிடுவாள். அதனால்தான் இங்கு வந்து வாழ்கிறேன்." என்று தேகி இல்லாத சமயத்தில் தாஷியிடம் கிழவன் சொல்கிறார்.அதனைக்கேட்டு தாஷி சங்கடப்படுகிறான்.

கார் வரும் சத்தம் கேட்க கதையை துறவி நிறுத்துகிறார். வண்டி நிற்காமல் சென்றுவிட அங்கிருந்து நடந்து ஒரு மலை குகைக்குச் செல்கிறார்கள். அங்கு தியான புத்தரின் ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. இருட்டத் தொடங்கியதால் அங்கேயே தங்குகிறார்கள். சோனம் சமைக்கத் தொடங்குகிறாள். அவளுக்கு உதவுவது போல் தொந்டுப் அருகில் சென்று அமர்கிறான். இருவரும் அன்பாகப் பேசிக் கொண்டே சமைக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இரவு உறங்கும்பொழுது விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதையை சொல்லத் துவங்குகிறார் துறவி.

தாஷி,தேகி இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். அதனால் தேகி கர்ப்பமாகிறாள். 'இது அவருக்குத் தெரிந்தால் நாம் சாகவேண்டியதுதான். அவருடைய கத்தி மரத்தை மட்டும் வெட்டாது!' என்கிறாள். மதுவில் விஷம் கலந்து கிழவனைக் கொள்ள சதி செய்கிறார்கள். விறகு வெட்டிக்கொண்டு களைப்புடன் வரும் கிழவனுக்கு விஷம் கலந்த மதுவைக் கொடுக்கிறார்கள். கிழவனின் ஏங்கிய பார்வை தாஷியின் மேல் விழுகிறது.

சூரியக் கதிர்கள் பரவிய நேரம் தொந்டுப் கண்விழிக்கிறான். பஸ் வரும் சத்தம் கேட்டதும் துறவி ஓடிப்போய் நிறுத்துகிறார். "ஒரு ஆளுக்குதான் இடம் இருக்கு" என்கிறார் டிரைவர். "இரண்டு நாட்களாக ஒன்றாக பயணம் செய்கிறோம். திருவிழா வேறு வருகிறது.." என்று துறவி தயக்கத்துடன் கேட்கிறார்.

"அளவுக்கு அதிகமா ஏத்தினா போலீசுக்கு பதில் சொல்லணும்." என்று டிரைவர் கறாராக பேசுகிறார். எல்லோரும் தொந்துப்பை அனுப்ப நினைக்கிறார்கள். இன்னும் காத்திருந்தால் ஆப்பிள் எல்லாம் அழுகிவிடும். எனவே அவரை அனுப்பலாம் என்று கூடையை எடுத்துக்கொண்டு போய் வண்டியில் வைக்கிறான் தொந்டுப். வியாபாரி மிகவும் சந்தோஷப்படுகிறார்.

"இது கருணையா... இல்ல, வேறு ஏதாவதா?" என்று துறவி கிண்டலாகக் கேட்கிறார். திரும்பவும் அங்கிருந்து நடக்கத் துவங்குகிறார்கள். வழியில் சோனம் அமர்ந்துவிடுகிறாள். தொந்துப் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான்.

"ஏன், களைப்பா இருக்கா? நான் வேணும்னா உன் சுமையைத் தூக்கிட்டு வரவா?"

"இல்ல, நானே சமாளிச்சுக்கிறேன்!"

"ஏன் கவலையா இருக்கே?"

"ஒண்ணுமில்ல... அந்த ஆப்பிள் தாத்தாவை நினைச்சேன்!"

"ஏன்? அவரை மிஸ் பண்றோம்னு தோணுதா?"

"ஆமா!"

"நீ சந்திக்கும் எல்லோரையுமே இப்படித்தான் மிஸ் பண்றதா நினைப்பியா?'' என்று தொந்துப் புன்னகைக்கிறான். திரும்பவும் நடக்கத் துவங்கி ஓர் இடத்தில் சென்று உட்காருகிறார்கள். சோனத்தின் அப்பா கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார். இசைக்கருவியை மீட்டியவாறே துறவி சொல்லத் துவங்குகிறார்.

விஷம் அருந்திய கிழவன் மரண வேதனையில் துடிக்கிறான். உயிர் பிரிய நீண்ட நேரம் ஆவதால் தாஷிக்கும், தேகிக்கும் சண்டை வருகிறது. தேகியிடம் கோவப்பட்டு தாஷி சென்று விடுகிறான். அவனைக் கூவி அழைத்தவாறே தேகி ஓடி வருகிறாள். அவளை திரும்பிப் பார்க்காமல் வேகமாக தாஷி நடக்கிறான். தேகி அலறியவாறே ஓடும் நதியின் பாறை இடுக்கில் விழுகிறாள்.

தயங்கியவாரே குரல் வந்த திசையை நோக்கி தாஷி ஓடுகிறான். நதியில் அவளின் குருதி பார்த்து அழுகிறான். நீர் நிலையில் அவளின் முகம் தெரிகிறது. மதிய உணவுடன் சேர்த்து அருந்திய போதையில் அவனுடைய தம்பியிடம் "நான் கொலை செய்து விட்டேன்... நான் கொலைகாரன்..." என்று உளறுகிறான். அந்த குதிரைதான் என்னைக் கீழே தள்ளியது என்று கழுதையை காண்பிக்கிறான். கர்மா தாஷியை எழுப்பியவாறு வீட்டிற்கு புறப்படுகிறான்.

சாலையில் ஒரு சிறிய டிராக்டர் வருகிறது. அதில் இருவருக்குதான் இடமிருக்கிறது என்கிறார்கள்.. "நீங்க ரெண்டு பேரும் போங்க! அவர் சீக்கிரம் போகணும்ல?" என்று சோனத்தின் அப்பா சொல்ல,தொந்துப் மௌனமாக அவளைப் பார்க்கிறான். "அமெரிக்கா போற நேரம் வந்திருச்சு. வா! போகலாம்!" என்று துறவி எழுந்திருக்கிறார். வண்டி புறப்படுகிறது. பார்வையிலிருந்து மறையும் வரை, ஒருவருக்கொருவர் கையசைத்து விடைபெற்றுக் கொள்கிறார்கள்.

"நான் உனக்கு இன்னொரு கதை சொல்லவா?" என்று துறவி புன்னகைக்கிறார்.

"ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒருத்தர் அரசாங்க வேலை செய்தார். வேலையை விட்டுவிட்டு கனவு பூமி சென்று ஆப்பிள் பறிக்க புறப்பட்டார். ஆனால், போகும் வழியில் ஒரு அழகான பொண்ணைப் பார்த்தார்..." என்று சொல்லிக்கொண்டு போக...

தொந்டுப் சிரித்துக்கொண்டே, "அதனால அவரு அமெரிக்கா போறதையே மறந்துட்டாரு!" என்று சொல்லிப் புன்னகைக்கிறான். அழகிய மலைத் தொடர்களின் வழியே பயணம் தொடர படம் நிறைவடைகிறது.

ஒரு கழுதை எப்படி குதிரையாக தாசியின் கண்களுக்குத் தெரிந்ததோ? அப்படித்தான் நாமும் வாழ்கிறோம். கிராமத்தில் இருப்பவர்களுக்கு சென்னை செல்ல வேண்டும். சென்னையில் இருப்பவர்களுக்கு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எல்லோருக்கும் அந்த எண்ணம் கைகூடுவது இல்லை.

நந்தலாலா பாதிப்பில் பயணம் தொடர்புடைய இந்தப் படத்தைப் பார்த்தேன். நோர்புவின் திரைமொழி சிறப்பாக இருந்தது. எஸ்ரா இந்தப் படத்தைப் பற்றி அவருடைய பழைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே பார்த்தது. நீண்ட இடைவெளியில் மீண்டும் பார்க்க நேரம் கிடைத்தது.

அருமையான இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட அழகான படம்.

2003ல் வெளியாகி, உலகின் கவனத்தை ஈர்த்த இந்த பூட்டான் நாட்டுப் படத்தின் இயக்குநர் நோர்பு துறவியாக வாழ்வைத் துவங்கி சினிமா இயக்குனர் ஆனவர். வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் படத்தை வாங்கிப்பாருங்கள். பயணிகளும் மாயக்காரர்களும் ஓர் இனிய பயண அனுபவமாக இருக்கும்.

No comments:

Post a Comment