நான் வாழ்நாளிலேயே எப்போதும், எதற்கும் ஆசைப்பட்டு வளர்ந்தவனில்லை. ஏனெனில் நம்முடைய தாயின் கருவறையிலேயே எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி ஒரு அல்ப்ப ஆசை இருக்கிறதில்லையா?
சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்த “இலக்கியமும் சினிமாவும்” - இரண்டுநாள் கருத்தரங்கில் நடிகர் சிவக்குமார் இப்படிச் சொன்னார். காரணம்...
இந்திரா பார்த்தசாரதியின் ‘உச்சிவெயில்’ நாவல், ‘மறுபக்கம்’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது. அதில் சிவக்குமார் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த வருடத்தின் சிறந்த படமாக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட படம் அது. அப்படத்தில் நடித்ததற்காக, அவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிவக்குமாரின் பெயர் கடைசி வரையிலும் தேசியவிருதுக்கு (சிறந்த நடிகர்) முன்னிலையில் இருந்திருக்கிறது.
காலை 7. 00 மணிக்குக் கூட சிறந்த படம்: மறுபக்கம், சிறந்த நடிகர்: சிவக்குமார்.
7.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் சமயத்தில் சிறந்த படம்: மறுபக்கம், சிறந்த நடிகர்: ........................... - இன்னொருவரின் பெயர் இருக்கிறது.
அது வேறு யாருமில்லை ‘அமிதாபச்சன்’.
“... ச்சே.. நம்ம எதுக்குமே ஆசைப் பட்டதில்லையே... இதுக்குப் போயி அல்பத்தனமா ஆசைப் பட்டுட்டோமே... இனிமே இந்தமாதிரி எதுக்கும் ஆசைப் படக்கூடாது என்ற முடிவிற்கு வந்தேன்.” என்றார்.
விருதுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலும், அசிங்கங்களும் திரைபோட்டு மறைக்கப்பாட்டலும் என்றேனும் ஒருநாளில் வெளிவந்துதானே ஆக வேண்டும்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை “தனுஷ்” பெற்றார் என்று நாம் வேண்டுமெனில் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதே வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருதை “அப்புக்குட்டி” அழகர்சாமி குதிரை என்ற படத்தில் நடித்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆடுகளத்தில் ‘தனுஷ்’ முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கிறார் எனில், அழகர்சாமி குதிரையில் ‘அப்புக்குட்டி’ கதாநாயகன்.
இந்த விருது அறிவிப்பின் பின்னாலுள்ள உடல் அரசியல் மிக நுட்பமாக அவதானிக்க வேண்டிய ஒன்று. இங்குதான் அங்கீகரிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அல்லது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். நடிகராக சிவக்குமாருக்கு நிகழ்ந்ததும் அதுதான். தேசிய விருதுக் குழுவில் நடைபெறும் கூத்துக்களை நண்பர் பாரதி மணி (பல நேரங்களில் பல மனிதர்கள்) தன்னுடைய கட்டுரை ஒன்றில் எள்ளல் தன்மையில் பதிவு செய்திருப்பார். ‘பாரத ரத்னா’ விருது சிவாஜிக்குக் கிடைக்க வேண்டியது. எம்.ஜி.ஆருக்கு எப்படிக் கிடைத்தது என்பதின் ஆதாரமற்ற தகவலை நண்பர் தமிழ்மகன் தன்னுடைய கட்டுரை ஒன்றில் பகிர்ந்திருப்பார். நடிகர் முத்துராமனுக்குக் கிடைக்க வேண்டிய விருதினை – நடிகர் சிவாஜி தட்டிச் செல்ல எப்படிக் காய் நகர்த்தினார் என்பதை இயக்குனர் ஜெயபாரதி சமீபத்தில் வெளியிட்ட நூலொன்றில் குறிப்பிட்டுச் செல்கிறார்.
இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுவதும், காலம் கடந்து அங்கீகரிக்கப்படுவதும் ஏறக்குறைய ஒன்றுதான். பாடகி எஸ். ஜானகிக்கான பத்ம விருதினை அறிவித்தபோது, எஸ். ஜானகி ஏற்காமல் மறுத்தது மிக முக்கிய புத்திசாலித்தனமான செயல்பாடு. சமீபத்தில் ஓவியர் சீனிவாசனை சந்தித்தபோது சென்னை கவின்கலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர் தனது ஓவியப் படைப்பிற்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் என்ற விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் அவருக்கான வாழ்த்து தட்டியொன்றை வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த விருது இலக்கியத்திற்கான சாகித்ய அகாதமி விருதுக்கு நிகரான விருது. ஒரு நாளிதழாவது இதைப் பற்றி எழுதினார்களா தெரியவில்லை. சிவக்குமார் அடிப்படையில் ஓவியர் என்பதால் இந்த விஷயம் வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.
ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' வெளியானபோது போட்டோகிராஃபி மிக மோசம் என்று போகிறபோக்கில் ஆனந்த விகடன் இதழில் விமர்சனம் எழுதியிருந்தார்கள் என்பதை ஒளிப்பதிவாளர் நல்லுசாமி தெரியப்படுத்தினார். தேசிய விருதுக்கு இந்தப்படம் அனுப்பப் பட்டுள்ளது. விருதுக் குழுவில் இருந்தவருக்கு, அவள் அப்படித்தான் திரைப்படத்தைத் தவிர மற்ற எல்லா படத்தையும் போட்டுக் காண்பித்து இருக்கிறார்கள். எதேர்ச்சையாக இந்தப்படத்தைப் பத்தோடு பதின்னொன்றாக திரையிட்டபோது அந்த முக்கியமான மனிதர் வந்திருக்கிறார். "அடடே... இவ்வளோ நல்ல படமா இருக்குதே? இத எனக்கு ஏன் போட்டுக் காமிக்கல? கேமரா நல்லா வந்திருக்குதே... இதுக்கு அவர்ட் கொடுத்தா நல்லா இருக்குமே?" என்றாராம்.
ஏற்கனவே ஒருவரை சிறந்த போட்டோகிராஃபிக்காகத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளதை அவரிடம் தெரிவித்தார்களாம். "அப்படியெனில்... பிளாக் & வொய்ட் பிரிவுல - அந்த போட்டோகிராஃபருக்கு விருது கொடுத்துடலாம்னு..." சொல்லி, அந்த வருடத்திலிருந்து இரண்டு பிரிவுகளில் போட்டோகிராஃபிக்கான தேசிய விருது அறிவிக்கப்படுகிறதாம். ரொம்ப நாள் கழித்து இந்த விஷயத்தை யாரோ ஜூரிக் குழுவில் இருந்தவர் பின்னாளில் நல்லுசாமியிடம் தெரிவித்திருக்கிறார்.
"இன்னிக்கிதான் நேஷனல் அவர்ட் உண்மையிலேயே வாங்கினா போல இருக்குது..." என்றாராம் நல்லுசாமி.
பாருங்க, நம்மளோட மீடியா "பூர் போட்டோகிராஃபி" என்று எழுதிய படத்திற்கு, போடோகிராஃபிக்கான தேசிய விருது அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தான் ஒவ்வொருவருடமும் விகடன் மேடையில் சமூகத்தில் சிறந்த மாணிக்கங்களைத் தேர்ந்தெடுத்து "விகடன் விருது" கொடுக்கிறார்கள். இவர்கள் மாணி(க்கத்தில்)யில் எட்டி உதைக்க...
ஒருமுறை மிரணால் சென் சென்னை வந்திருக்கிறார். அவர் தங்கிய ஓட்டலில் இருந்த பணியாளரிடம் (வெயிட்டர்) கேட்டிருக்கிறார்: "சும்மா இருக்க வெறுப்பா இருக்குது... பக்கத்துல எதாச்சும் தியேட்டர்ல நல்ல படம் ஓடுதா?"
மிருணாள் சென்னைத் தெரிந்து கொண்டு சொன்னாரா? தெரியாமல் சொன்னாரா? என்று தெரியவில்லை "அவள் அப்படித்தான்னு ஒரு படம் வந்திருக்கு... ரொம்ப நல்லா இருக்கு..." என்றாராம்.
தியேட்டரில் கூட்டமே இல்லையாம். நம்முடைய பத்திரிகைகள் அப்படி விமர்சனம் எழுதி இருப்பார்கள் போல. மிருணாள் சென் முழுப்படத்தையும் பார்த்திருக்கிறார். மறுநாள் காலையில் பிரஸ்ஸை அழைத்திருக்கிறார். என்னவோ? ஏதோ? என்று இவர்களும் எல்லோரும் ஓடியிருக்கிறார்கள்.
"அவள் அப்படித்தான் - தமிழில் வந்துள்ள முக்கியமான படம். சத்யா ஜித்ரேயும், நானும் முயற்சி செய்வதை, இங்கும் முயற்சி செய்து பார்க்க ஆட்கள் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது." என்றாராம். நம்முடைய ஜனரஞ்சக ஊடக நண்பர்களுக்கு மெல்லுவதற்கு அவள் கிடைத்துவிட்டது. மிருணாள் சொல்லிவிட்டார் என்று "அவள் அப்படித்தான்" படக்குழுவினரைத் தேடி ஓடியிருக்கிறார்கள். ருத்ரையாவைத் துரத்து, நல்லுசாமியைத் துரத்து என்று ஓட்டப்பந்தையம் விளையாடி, முழுநீளப் பேட்டியை பிரசுரித்தார்களாம்.
அதன் பிறகு அவள் அப்படித்தான் நன்றாக ஓடி கல்லா கட்டியது வரலாறு. "அவள் அப்படித்தான்" படத்திற்கு நடந்தது, நல்லுசாமிக்கு நடந்தது எல்லோருக்கும் நடந்துவிடுமா என்ன? இங்கு எல்லாமே அரசியலாகவும் அழிச்சாட்டியங்களாகவும் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை, நடிகர் சிவக்குமார் கேணிக்கு வருகிறார் என்றதும் சாகித்ய அகாடமி நிகழ்வில் பகிர்ந்துகொண்ட போது வெளிப்படுத்திய அவரது ஆதங்கம் - பசுமரத்தாணி போல ஞாபகம் வருகிறது.
தங்கமீன்கள் படத்திற்கான ‘விஜய் (டிவி) அவார்ட்’ பெற்றுக்கொண்டு ‘இயக்குனர் ராம்’ ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். “ஒரு படம் சிறந்த படத்திற்கான விருதினைப் பெறுகிறது எனில், அதுலுள்ள எல்லாமே சிறப்பாகத் தானே இருக்க வேண்டும். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு, இசையமைப்பு என எல்லாமே சிறப்பாகத் தானே இருக்க வேண்டும். அப்படியெனில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்படும் படத்தில் வேலை செய்த மற்றவர்களுக்கு விருதுகள் ஏன் செல்வதில்லை. மற்ற பிரிவுகளின் விருதுகளானது வேறு படத்தில் வேலை செய்தவர்களுக்குக் கிடைக்கிறது. இதனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.” என்பதுபோல ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். நாம் என்ன செய்கிறோம்...? இந்தக் கேள்வியை எழுப்பிய ராமை வாட்ஸ் ஆப்பிலும், சமூக இணைய தளங்களிலும் துரத்து துரத்து என துரத்துகிறோம். “ஆமா... புத்திசாலி பெருசா கேக்க வந்துட்டாரு...” என்று நக்கல் அடிக்கிறோம். ‘தங்க மீன்கள்’ பற்றிய மாற்றுக் கருத்து நமக்கு இருக்கலாம். அந்தப் படைத்தைக் குப்பை என்று கூட விமர்சனம் செய்யலாம். ஆனால், ராம் எழுப்பிய கேள்வியை நாம் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். ராமிற்கு நாம் காது கொடுத்திருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிந்தே இந்த விஷயத்தை நாம் மழுங்கடித்து விட்டோம். தன்னுடைய பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வளர்ந்துவரும் எல்லா கலைஞர்களுக்கும், மக்களால் கவனிக்கப்படும் எல்லா கலைஞர்களுக்கும் விஜய் தொலைக்காட்சி ஏதேனும் ஒரு பிரிவில் விருது வழங்குகிறது என்பது கண்கூடான விஷயம்.
நடிகர் சிவக்குமார் நடிகர் மட்டும் இல்லையே. அடிப்படையில் ஓவியர். யோகாசனப் பிரியர், மேடை நாடக நடிகர். சினிமா நட்சத்திரம். பேச்சாளர், பிரபல ஹீரோக்களின் தந்தை. ‘அகரம்’ அறக்கட்டளையின் ஆலோசகர். கடந்த 60 ஆண்டுகால தமிழக நிகழ்வுகளை தெரிந்து வைத்திருப்பவர். நாளை நடக்கும் கேணி இலக்கிய சந்திப்பில் இவர் எதைப் பற்றி பேசக் கூடும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
எதைப் பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யமாகப் பேசக் கூடியவர். கேணி நிகழ்விற்கு அவசியம் வாருங்கள். சிவக்குமாருடன் உரையாடலாம். இளமையைத் தக்கவைக்கத் தெரிந்த மார்கண்டேயன் என்பதும், மனிதத்துடன் பழக்கக்கூடிய, அடுத்தவர்களை மதிக்கத்தெரிந்த அற்புதப் பிறவி என்றும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லையே...!
கேணி சந்திப்பு – ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று பத்திர்கையாளர் ஞாநி-யின் வீட்டில் ஏற்பாடாகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் யார் வேண்டுமேனிலும் வரலாம். அனுமதி இலவசம்.
முகவரி:
39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78.
அன்புடன் அழைப்பது - ஞாநி & பாஸ்கர் சக்தி.
No comments:
Post a Comment