Wednesday, April 29, 2015

தேர்வு – மேல் படிப்பு

பன்னிரண்டாவது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் - பரிச்சை எழுதி விட்டு – தேர்ச்சிக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். செல்பேசியிலும் அவரிடம் பேச நேர்ந்தது.

“சார், என்ஜினியரிங் படிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. எதாச்சும் ஆர்ட்ஸ் குரூப்பில் சேரலாம் என்றிருக்கிறேன்” என்றார்.

அது சரி... என்ன மாதிரியான ஸ்டூடன்ட். இவருடைய கெப்பேசிட்டி என்ன? என்று தெரிந்துகொள்ள – “ஸ்கூல்ல கடைசியா நடந்த எக்ஸ்ஸாம்ல எவ்வளோ மார்க் எடுத்து இருந்த?” என்றேன்.

“1075” என்றார்.

“சரி... பப்ளிக் எக்ஸ்சாம்ல எவ்வளோ எடுப்ப” என்று கேட்டேன்.

“1150க்கு மேல எதிர் பாக்குறேன்” என்றார்.

“தமிழ் or இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிச்சா என்ன ஸ்கோப் இருக்கும்” என்று கேட்கிறார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் மொழியை ஒழுங்காகப் படித்து, கணினி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தால் – ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்ய – வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. சரியான நபர்கள் இல்லாததால் சென்னை பல்கலைக் கழகத்தின் “தமிழ் கணினித் துறை”-யில் ஆட்கள் சேர்க்கப் படுவதில்லை. இந்த பாடப் பிரிவிற்கு சரியான வழிமுறை இல்லாததால் தமிழ் கம்ப்யூட்டிங் லிங்விஸ்டிக்ஸ் துறை நாதியற்று இருக்கிறது.

தமிழை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்க அதிக மதிப்பெண் பெரும் மாணவர் யாரேனும் முன் வருவார்களா என்ன? அப்படியே மாணவர் முன்வந்தாலும் பெற்றோர்கள் அனுமதிப்பார்களா என்ன? அப்படியே பெற்றோர்கள் பிள்ளையின் சொற்படி சேர்க்க நினைத்தாலும் சுற்றத்தார் சும்மா இருப்பார்களா என்ன?

“தமிழ் படிச்சா எங்க சார் வேல கெடைக்கப் போகுது?” என்பார்கள். (இந்த காலத்துல எந்த சப்ஜெக் படிச்சாதான் – படிப்புக்கேத்த வேலை கெடைக்குது.) கூகுள், யாகூ, சிஃபி போன்ற பன்னாட்டு இணைய சேவையை வழங்கும் நிறுவனங்களில் மொழி வல்லுனர்கள் நிச்சயம் தேவைப்படுகிறார்கள். கணினி அறிவும், மொழி சார்ந்த அறிவும் நிரம்பப் பெற்றிருந்தால் – தமிழ் படித்தவர்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களில் நிச்சயம் வேலை உண்டு. கூடவே ஜப்பனீஸ், சைனீஸ், கொரியன், ஜெர்மன், ப்ரெஞ் என ஏதேனும் ஒரு பன்னாட்டு மொழியைக் கற்றிருந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். மின்னிதழ்களில் முனைவர் பட்டம் பெற்ற அண்ணா கண்ணன் சிஃபி, யாகூ போன்ற நிறுவனங்களில் வேலை செய்தவர் தானே. மின்னிதழ் சார்ந்த முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டவருக்கே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது எனில், “கம்ப்யூட்டிங் லிங்விஸ்டிக்ஸ்” பிரிவுக்கு வாய்ப்புகள் இல்லாமலா இருக்கும்.

இந்த பாடப் பிரிவைத் தனித் துறையாக அரசு கல்லூரிகளில் துவங்கினால் அதில் அர்த்தம் இருக்காது. தமிழ்த் துறையைப் பொருத்தவரை வடிகட்டியதிலும் வடிகட்டிய சராசரிக்குக் கீழுள்ள மாணவர்கள் தான் சேர வருகிறார்கள். இதனை விடக் கொடுமை வேறெதுவும் இல்லை. முதுகலை தமிழ் படிக்க - கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பிரிவிலும், இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், கப்யூட்டார் அப்ளிகேஷன்ஸ் பிரிவிலும் படித்தவர்களுக்கு – ஒரு கோட்டாவை வழங்கலாம். நான் சேர்ந்துள்ள அரசு கல்லூரியில் விஜயன் என்றொரு தோழர் படித்தார். எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, தமிழ் முதுகலை படிக்க வந்திருந்தார். அவரும் ஆர்வத்துடன் தான் வந்திருந்தார். இடையிடையே அரசுப் பணிகளுக்கான தேர்வினை அடிக்கடி எழுதக் கூடியவர் அவர். கடந்த வாரத்தில் இந்திய அஞ்சல் துறைக்கான தேர்வில் வெற்றி பெற்றதால் – மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். இதுபோல எல்லோரும் ஆர்வத்துடன் வருவார்கள் என்று சொல்லுவதற்கு இல்லையே. ஒருசிலர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தமிழ் முக்கியப் பாடம் என்பதாலும் சேர்ந்து படிக்க வருகிறார்கள். சிலர் அரசு பள்ளிகளில் ஆசிரியப் பணியைப் பெறுவதற்கும் படிக்க வருகிறார்கள். ஆர்வத்துடனும், அடுத்தகட்ட ஆராய்ச்சி நோக்கிலும் படிக்க வருபவர்கள் மிகக் குறைவு தானே.

கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் பாடப் பிரிவுகளை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் கணினித் துறையில் செய்வதற்கு நிறையவே இருக்கிறது. தமிழ் துறை சார்ந்து ஆராய்ச்சிகள் செய்வதற்கு இவர்களிடம் நிறையவே விஷயங்கள் இருக்கும். ஆனால், நுட்பமான அரதப் பழசான விதிமுறைகள் இதற்கெல்லாம் குறுக்கே நின்றுவிடும். தமிழ் முதுகலைக்கு விண்ணப்பிக்கச் சென்றிருந்த போது, BCA படித்த (கம்யூனிஸ்ட் தோழர்) ராஜ்கமலையும் தமிழ் முதுகலைக்கு விண்ணப்பிக்குமாறு உடன் அழைத்துச் சென்றிருந்தேன். என் சொற்படி அவரும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், “BCA படித்தவர்கள் தமிழ் துறையில் சேர்த்துக்கொள்ளப் படுவதற்கு விதிமுறைகளில் அனுமதி இல்லை” என்றார்கள்.

மத்திய மொழிகளுக்கான நிறுவனம் இது போன்ற ஆய்வுகளுக்காகப் பற்பல கோடி ரூபாய்களை ஆராய்ச்சிக்காக ஒதுக்குகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்வரும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் தேசிய மொழிகள் எல்லாவறையும் கணினி சார்ந்து எழுத்துருவாக்கம் செய்யவும், அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி ஆராய்ச்சி செய்யவும் கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கீடு செய்கிறது. இந்தப் பணமும், ஆராய்ச்சியும் என்ன ஆகிறது என்றே தெரியவில்லை. செய்யக் கூடிய ஆராய்ச்சியும் தரமானவையா என்பதும் நமக்குத் தெரிய வருவதில்லை.

வேலை வாய்ப்பையும், அதன் பின்னாலுள்ள அரசியலையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் விதிமுறைகள் – துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் விதிமுறைகளை ஏன் தளர்த்திக் கொள்ளக் கூடாது. மத்திய மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் படித்தவர்கள் செய்வதற்கு நிறையவே இருக்கிறது. அது போன்ற வாய்ப்புகள் எல்லாம் ஒரு வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேற்கூறிய மத்திய மொழி நிறுவனத்தின் மானியம் அதற்கு உதாரணம். அரதப் பழசான தேவையற்ற விதிமுறைகளைத் தளர்த்தும் போது அல்லது ஒரு கோட்டாவை வழங்கி சயின்ஸ் பிரிவில் உள்ள மாணவர்களைத் தமிழ் படிக்க ஊக்குவிக்கும் பொழுது – செயலூக்கம் பெறக்கூடிய வகையில் ஆய்வுகளும் – மொழி சார்ந்த வளர்ச்சியும் தொழில்நுட்பம் சார்ந்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஐ.ஐ.டி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத் துறையுடன் “கம்ப்யூட்டர் லிங்விஸ்டிக்ஸ்” துறை உடன் சேர்ந்து உப துறையாகச் செயல்படுகிறது. சென்னை பல்கலைக் கழகத்தின் கணினி தமிழ்த் துறையே கவனிப்பாரற்றுக் கிடக்க, அரசு கல்லூரிகளில் நமக்கு ஒரு பாடமாக சடங்கிற்கு மட்டுமே இருப்பதை குற்றமாகச் சொல்லிவிட முடியாது.

தமிழ்த் துறை பேராசிரியராக வருவதற்கும் இளங்கலையில் தமிழ் படித்திருக்க வேண்டும் என்கிறார்கள். தமிழ் கணினி பாடத்தைத் தமிழ் பேராசிரியர் தான் முதுகலை மாணவர்களுக்கு எடுக்கிறார். ஒப்புக்கு ஏதோ எடுக்கிறோம் என்ற வகையில் தான் எடுக்கிறார். ஒண்ணு, கணினித் துறை பேராசிரியரை இந்த பாடத்திற்கு அனுப்ப வேண்டும். இல்லையேல், தமிழ்த்துறையிலேயே கணினி சார்ந்த இளங்கலை படித்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். சென்னைப் பல்கலையில் தமிழ்க் கணினி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களும், போஸ்ட் டாக்டரேட் செய்தவர்களும் கூட வேலை வாய்ப்பின்றிதான் இருகிறார்கள். எல்லா மொழியுமே கம்ப்யூட்டர், மொபைல் என்று பயன்படுத்தும் வசதிக்கு வந்திருக்கிறது. அரசாங்கமும் கணினி பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. அதற்கேற்ப துறைகளும் மாறிக்கொண்டு வர வேண்டாமா?

கம்ப்யூட்டர் பிரிவில் படித்த – நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு மாணவர் தமிழ் படிக்க ஆர்வத்துடன் முன் வருகிறார். கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இது போன்றவர்களுக்குப் போதிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பது ஒரு வகையில் சாபம். மாணவருக்கு அல்ல. தமிழுக்கு. இந்த சாபம் நீடிக்கும் வரையில் – கவிஞர் வைரமுத்துவின் மகன் – செல்பேசியில் பயன்படுத்துமாறு புதிய எழுத்துருவை வடிவமைத்திருக்கிறார் போன்ற செய்திகள் நமக்கு மலைப்பாகத் தான் தோன்றும். அந்த மலைப்பிலேயே நம் தினவை நாம் தீர்த்துக் கொள்ள வேண்டியது தன்.

கடந்த வருடம் 1 லட்சத்தி 30 ஆயிரம் என்ஜினியரிங் மாணவர்கள் – அரசு உறுதியளித்திருந்த படி உதவித்தொகை அளிக்காததால் – பருவத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது என்று செய்தியை 1 மாதத்திற்கு முந்திய நாளிதழில் காணக் கிடைத்தது. இவர்களில் முக்கால்வாசிப் பேர் தலித்துகள். குறைந்த சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைப் சேர்ந்த மாணவர்களும் இருக்கிறார்கள்.

நண்பர் பெ. முருகன் தன்னுடைய பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளைத் தவிர்த்து தமிழினை விருப்பப் பாடமாக எடுத்தவர். முருகன் பெற்றிருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு “தமிழ் பிரிவில் உன்னை சேர்த்துக் கொள்ளவே மாட்டேன். சயின்ஸ் பிரிவில் நீ என்ன கேக்குறையோ அந்த பிரிவில் சீட் கொடுக்கிறேன். உனக்கு ஒரு மாசம் டைம் கொடுக்கறேன். அதுக்குள்ளே யோசிச்சி நல்ல முடிவ எடு.” என்று அவரது கல்லூரி முதல்வர் சொல்லியிருக்கிறார். பெருமாள்முருகன் தமிழினை விருப்பப் பாடமாக எடுத்திருக்கிறார். விளக்கு விருது ஏற்றுக்கொண்ட விழாவில் அவர் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். இப்படி ஆர்வத்துடன் தமிழ் சார்ந்து இயங்க வந்தவர் பெருமாள்முருகன். படைப்பு, ஆய்வு என பங்காற்றியவரை “இனி எழுதமாட்டேன்...” என்று அவரிடம் ஓர் அரசு அலுவலர் முன்னிலையில் கையெழுத்திட வைத்திருக்கிறார்கள்.

சலபதி என்று நண்பர்கள் வட்டத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஆ.ரா. வெங்கடாசலபதி’ – சமூக வரலாற்று ஆய்வாளர்களில் மிக முக்கியமானவர். தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழ் எல்லைக்கு வெளியிலும் மரியாதையுடன் கவனிக்கப்படும் ஆய்வாளர்களில் ஒருவர். இளங்கலையில் B.Com பாடத்தைத் தேர்வு செய்தவர் என்று நினைக்கிறன். மறைமலை அடிகளார் நூலகத்தில் பகுதி நேர வேலை செய்துகொண்டே முதுகலையைத் தொலைதூர வகுப்பில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து வரலாற்றுத் துறையில் சேர்ந்து படித்தார். JNU-வில் தமிழ் பதிப்புகள் சார்ந்து முனைவர் பட்ட ஆராய்ச்சியை செய்தார். இப்பொழுது வரலாற்றுத் துறை பேராசிரியராக இருக்கிறார்.

“வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் பலரும் வரலாறு என்றால் என்னவென்றே தெரியாமல் இருகிறார்கள்” என்று தான் பேசும் மேடைகளில் சலபதி பகிரங்கமாகவே குற்றம் சாட்டும்பொழுது, ‘இந்த ஆணவம் சலபதிக்கு இருக்கக் கூடாது’ என்கிறார்கள். ஏன் இறுகக் கூடாது? திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருப்பதில் என்ன தவறிருக்கிறது?

பெருமாள்முருகன் போல, சலபதி போல ஆர்வத்துடன் பாடங்களைத் தேர்ந்தெடுக்க ஒருசில மாணவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எனினும் பெரும்பாலான மாணவர்கள் “இலக்கியம், வரலாறு, மண்ணியல், விலங்கியல், தாவரவியல், தத்துவம், உளவியல்” என பல்வேறு பிரிவுகளில் நல்ல மதிப்பெண் பெறுபவர்கள் கவனம் செலுத்துவதே இல்லை. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் வரலாற்றுத் துறையை எடுத்துப் படித்தால் “பணக்கார ஊட்டுப் புள்ள படிக்குது” என்கிறோம். ஆர்வத்துடன் படித்தால் யார் வேண்டுமெனிலும் படிக்கலாம். அதற்குத் தேவை தைரியம். அந்த தைரியம் பைத்தியக்காரத் தனமாகவும், திமிர் தனமாகவும் எல்லோருக்கும் படலம். உண்மையில் அது உள்ளுணர்வு.

“தமிழ் or இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிச்சா என்ன மாதிரி ஸ்கோப் இருக்கும்?” என்று கேட்ட நண்பருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சொல்லுவதைச் சொல்லிவிடுவோம். மற்றவற்றை அவரது உள்ளுணர்வே தீர்மானிக்கட்டும்.


Monday, April 27, 2015

வைரமுத்துவும் மனிதன் தான்


ஆரம்பத்திலேயே ஆன்டிசிபேஷன் பெயில் எடுத்துக் கொள்வதுபோல ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். பாடலாசிரியனாக வைரமுத்துவை எனக்கு மிகப் பிடிக்கும். கவிதைக்கும் எனக்கும் காத தூரம். ஆகவே, வைரமுத்துவின் கவிதைகளைப் பற்றிச் சொல்வதற்கில்லை. ‘கள்ளிக்காட்டு இதிகாச’த்தைப் புரட்டிவிட்டு – பீச்சாங்கையால் தூக்கி எறிந்ததும் உண்டு. திராபையிலும் திராபையான நாவல். இந்த நாவலை ‘சாகித்ய அகாதமி’ விருதுக்குத் தேர்ந்தெடுத்த புண்ணியவான்கள் யாரென்று தெரியவில்லை.

அந்த வருடத்தின் சாகித்ய விருது சரியான நாவலுக்குத் (கள்ளிக்காட்டு இதிகாசம்) தான் கிடைத்துள்ளது என வெங்கட் சாமிநாதன் வேறு திருக்கரங்களால் எழுதியிருந்தார். அப்படி என்னதான் இந்தப் படைப்பில் கண்டாரோ தெரியவில்லை! இந்நாவல் வெளியான சமீபத்திய வருடங்களில் தான் “ரத்த உறவு, கூள மாதாரி” போன்ற நாவல்களும் வெளிவந்திருகின்றன. இதுபோன்ற கிளாசிக் படைப்புகளை வைரமுத்துவின் பார்வைக்கு அவரது நண்பர் குழாம் எடுத்துச் செல்கின்றதா என்று தெரியவில்லை. இந்தக் கதையையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், வைரமுத்துவின் படைப்புகளைப் பெரிதாக நான் சிலாகித்துப் படித்ததில்லை. அவரால் எனக்கு ஆகப்போகும் காரியமும் எதுவும் இல்லை. இருந்தாலும் ஒருசில விஷயங்களைச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

காரணம் வேறொன்றும் இல்லை. தேனி கண்ணன் என்ற பத்திரிகையாளர் இளையராஜாவைத் தூக்கி வைத்தும், ராஜாவுடன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், வாலி போன்றோரை ஏத்தி வைத்தும் – வைரமுத்துவின் சுயநலத் தன்மையை சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியிருந்தார். நம் மக்கள் பரவலாகப் படித்து வைரமுத்துவை மேலும் மேலும் விமர்சனம் செய்து கொண்டிருகிறார்கள். பெண்கள் துவங்கி மது வரை கண்ணதாசனுக்கு இல்லாத பலவீனங்களா? அவற்றையெல்லாம் நம்மாட்கள் எவ்வளவோ பேசிவிட்டார்கள். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, அந்த கோலமயில் என்...” என்று எழுதிவிட்டுத் தானே சென்றிருக்கிறார். வைரமுத்து இது போன்ற விஷயங்களில் ஒழுக்கமானவர் என்பதும் இதே பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள் தானே!

“ஆதாயம் இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க மாட்டார். சுயநலவாதி, மற்றவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பார், இளையராஜாவிற்கு எதிராக 40 வடநாட்டு இசையமைப்பாளர்களை இறக்குமதி செய்தார், தனது மகன்களான மதன் கார்கி மற்றும் கபிலனுக்கு இளையராஜாவிடம் வாய்ப்புக் கொடுக்கச் சொல்கிறார். இத்தியாதி இத்தியாதி இத்தியாதி... புகழை விரும்பக் கூடியவர்...”

பணம் சம்பாதிக்கும் இயந்திரம் என்று நேரடியாகச் சொல்லவில்லை. அவ்வளவு தான். இந்தக் குறைகள் எல்லோரிடத்திலும் தானே இருக்கிறது. எல்லோரும் சுயநலத்துடன் தானே இருக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எல்லோரும் தானே ஆசைப்படுகிறோம். கார்த்திக் நடித்து வெளிவந்த “சகுனி” என்று நினைக்கிறன். அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில் வேறொரு நடிகர் நடித்து முழுப்படமும் எடுத்து முடித்திருக்கிறார்கள். அவரது நடிப்பு சரியில்லையென்று – திருப்தியாக இல்லையென்று - பிரகாஷ் ராஜிடம் பேசி மறுபடியும் ரீஷூட் செய்திருக்கிறார்கள். படம் வெளிவந்த சமயத்தில் பிரகாஷ் ராஜிடம் ஒரு கேள்வி முன்வைக்கப் படுகிறது:

“இன்னொருத்தர் நடிச்ச பாத்திரத்துல நீங்க நடிக்கறதால அவரோட வாய்ப்பு பரிபோகுது இல்லையா? ஒரு நடிகரா சக நடிகரோட வாய்ப்ப தட்டிப் பரிக்கலாமா?”

“நடிப்பு எனக்குத் தொழில். இங்க நான் செண்டிமெண்ட் பார்க்க முடியாது. அவரோட நடிப்பு சரியில்லன்னு தானே எங்கிட்ட வராங்க? நான் நடிச்சிக் கொடுக்குறேன், அதிலென்ன தப்பு இருக்குது” என்றார்.

நைச்சியமாகப் பேசி ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வைரமுத்து பெறுகிறார் எனில், அது வைரமுத்துவின் திறமை. இதனை எப்படி சக கவிஞர்களுக்குச் செய்யும் துரோகமாகப் பார்க்க முடியும். ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 100 படங்கள் இளையராஜா – வைரமுத்து ஆகிய இருவரும் பரபரப்பாக இருந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த எல்லா படங்களிலுமா வைரமுத்து பாடல்களை எழுதினார். எப்படா கிடைக்கும் வாய்ப்பு என்று வைரமுத்துவைத் தேனி கண்ணன் போட்டுத் தாக்கியிருக்கிறார். சரி, ஒரு மூத்த பத்திரிகையாளனின் ஒருபக்கச் சாய்வு கட்டுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

எனக்கு மிகப் பிடித்த ஆளுமை ஒருவருடன் மத்திய கைலாஷ் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். பிரபல இதழ் ஒன்றில் வேலை பார்த்தவர். வைரமுத்துவும் இவரது நட்பு வட்டத்தில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்திருக்கிறார் போல. ஏன்? எப்படி? என்று ஞாபகம் இல்லை. வைரமுத்துவைப் பற்றிய பேச்சு வந்தது. நான் வைரமுத்துவைத் திட்டிக்கொண்டு தான் இருந்தேன். பேச்சு வாக்கில் அவர் உதிர்த்த வார்த்தையை இங்குப் பதிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

“எனக்கு வைரமுத்துவின் படைப்புகள் மேல பெரிய மரியாதை இல்லைங்க கிருஷ்ண பிரபு. ஆனா, அவருக்கு நான் ஒரு வகையில நன்றிக் கடன் பட்டவன்.” என்றார்.

“புரியலையே...” என்று, அவரைப் பார்த்தேன்.

“............. வேலை செய்த போது மிகுந்த மனக் கொந்தளிப்பில் இருந்தேன். சென்னையை விட்டுச் சென்றுவிடலாம் என்று கூட நினைத்திருந்த காலம். அப்பொழுதெல்லாம் வைரமுத்துவைச் சந்தித்துப் பேசிப் பழக்கும் வாய்ப்புகள் இருந்த காலம். அந்த நேரத்தில் வேலையை தக்கவைத்துக் கொள்ள அவசியமான உதவியை வைரமுத்து எனக்குத் தெரியாமலே செய்திருக்கிறார். என்னுடைய நிர்வாகத்துடன் பேசி இருப்பார் போல. அந்த வகையில் அவருக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.” என்றார்.

வேறு யாராவது இதனைச் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்ட நண்பர் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர்களுள் ஒருவர். என்னுடைய நண்பர் வேலை செய்த நிர்வாகம் அவருடைய நட்பு வட்டத்தில் இருந்ததால் பேசி நிலைமையைச் சரி செய்திருக்கிறார். இதனைச் செய்ய வேண்டிய அவசியம் வைரமுத்துவுக்கு இல்லையே. தன்னுடைய அளவிலான அக்கறையான நடவடிக்கையைத் தனது நண்பருக்குத் தேவைப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் அல்லவா?

இன்னொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது. வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த ஒருவரைச் சந்திக்க நேரம் கேட்டு – வைரமுத்துவின் அலுவலகம் இருக்கும் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.

“இந்த சினிமாகாரங்க எல்லாருமே தன்கீழ வேல செய்யிறவங்கள டார்ச்சர் பண்ணுவாங்கலாமே. வைரமுத்து அன்பா நடந்துக்குறாரா?” என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.

“அவரிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது... ஆனா, அவரோட விசாரிப்புல அக்கறை இருக்கும்... இப்படி இருந்துக்கோ. அப்படி இருந்துக்கோன்னு சிலமுறை கைட் பண்ணுவாரு” என்றார்.

வைரமுத்து காசு விஷயத்தில் கறார் பார்ட்டி என்று சினிமாக்கார நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு. தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தும் கடைந்தெடுத்த சுயநலவாதி என்பதும் ஊரறிந்த விஷயம். சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பிரபல எழுத்தாளர் ஒருவர் – தான் பார்த்து வரும் அரசு வேலைக்குப் போகாமல் சம்பளம் மட்டும் பெற்று வருகிறாராம். வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு எழுத்துப் பணி ஆற்ற வேண்டியது தானே. அந்த எழுத்தாளர் நீண்ட விடுப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். திரைப்படத்திலும் எழுத்தாளராகப் பணியாற்றுகிறாராம் அந்த நபர். இவரும் கூட வைரமுத்துவின் மீது தன்னால் முடிந்த மட்டும் விமர்சனக் கனையை வீசியிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடிக்கும் இவரைப் போன்றவர்கள் தான் நேர்மையைப் பற்றிப் பேசுகிறார்கள். (இந்த எழுத்தாளர் யார் என்று கேட்காதீர்கள். ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் என்று வேண்டுமெனில் கூட வைத்துக்கொள்ளுங்கள். ) யோசித்துப் பார்த்தால் எல்லோரும் சிறியார் தான்.

உடல்நிலை முடியாமல் இருந்த சமயத்தில் ஜெயகாந்தனிடம் முறையற்ற தன்மையில் கையொப்பம் பெற்று பாராட்டுக் கடிதத்தைப் பெற்றதற்காக வைரமுத்துவைத் தாளித்து எடுத்துவிட்டார்கள் நம்மவர்கள். உண்மையிலேயே தாளித்தெடுக்க வேண்டிய விஷயம் தான். ஆனால், அதற்கும் ஓர் எல்லை இருக்கிறதல்லாவா?

வைரமுத்துவைப் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும், மனிதத் தன்மையே அற்றவராகவும் சித்தரித்து பல்வேறு தன்மையிலான பதிவுகள் மற்றும் கட்டுரைகள். குறிப்பாக தேனி கண்ணன் எழுதிய கட்டுரை வைரமுத்துவின் அறியாத பக்கத்தை முன்வைப்பதாக இருந்தது. எனினும், அந்த அளவிற்கு வைரமுத்துவை இளையராஜாவுக்கு எதிராக வில்லன் போலச் சித்தரித்திருக்க வேண்டாம். ஒட்டு மொத்த சினிமா பாடலாசிரியர்களுக்கு எதிரான ஒரு நபராக சித்தரித்திருக்க வேண்டாம். விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வெறுமனே சலங்கையைக் கட்டிக்கொண்டு ஆடுவார்கள். ஜெயகாந்தனின் மகளே ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்தால் சும்மா இருப்பாரா? இதைவிட வைரமுத்துவுக்குப் போறாத காலம் வேறென்ன இருக்க வேண்டும்?

“பெயர், புகழ், பணம், செல்வாக்கு” – இவற்றையெல்லாம் விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? வைரமுத்துவுக்கு இவற்றிலெல்லாம் பிடிப்பு அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். பொன்மணியுடன் வைரமுத்துவின் உறவைப் பற்றிய சரடையும் இடையிடையே காண முடிகிறது. ஸ்ருதிஹாசனிடம், கமல்ஹாசன் – சரிகா விவாகரத்து பற்றிய கேள்வியை ஒருமுறை மீடியா எழுப்பியபோது “அவங்க ரெண்டு பேருமே மெச்சூர் ஆனவங்க. அவங்க பிரச்சனைகள அவங்களே பார்த்துப்பாங்க... என்னதான் பெற்றோர்களா இருந்தாலும் கூட அவங்களோட ப்ரைவசில மூக்கை நுழைப்பது சரியில்லை” என்றார்.

தனது பெற்றோரின் விஷயத்திலேயே மகள் ஒதுங்கி நிற்கிளாள். பொன்மணி அடிப்படையில் ஒரு பேராசிரியர். தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றையும் மீறி பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார் எனில் ஏதேனும் காரணம் இருக்கும். பொன்மணியே வாய் திறக்காமல் இருக்கும் பொழுது நாம் அவற்றைக் கிண்டிக் கிளறலாமா?

மதன் கார்க்கி & கபிலனுக்காக வாய்ப்பு கேட்கிறார் என்றும் தேனி கண்ணன் விமர்சனம் செய்திருக்கிறார். வைரமுத்துவின் அந்தப் பேட்டியை நான் படிக்கவில்லை. வீடியோவையும் பார்க்கவில்லை. எனினும், யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை என்ற கொள்கையில் உறுதியுடன் இருப்பவர் வைரமுத்து என்று கேள்விப் பட்டதுண்டு. மதன் கார்கிக்கும், கபிலனுக்கும் திறமை இல்லாமல், ‘வைரமுத்து’வின் மகன்கள் என்பதால் மட்டும் வாய்ப்பைப் பெற்று முன்னுக்கு வந்துவிட முடியுமா என்ன? அப்படியே சிபாரிசு செய்தாலும் என்ன தவறிருக்கிறது? எந்த தந்தை தான் தனது மகன்களுக்கு சிபாரிசு செய்யமாட்டான்? இதையெல்லாம் காரணம் காட்டி வைரமுத்துவை கோடம்பாக்கத்தின் ‘லிரிஸ்ட் வில்லன்’ போலச் சித்தரிக்க வேண்டுமா என்ன?

ஒரு மனிதனிடம் பலமும் இருக்கும், பலவீனமும் இருக்கும். வைரமுத்துவின் பலவீனம் அவருக்கு எதிராக இந்த அளவிற்குத் திரும்பும் என்று அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். (எனினும் இதுவரையிலும் வைரமுத்து நேரடியாக வாய்திறந்து எதையும் மீடியாவிற்குச் சொல்லவில்லை. அப்படியெனில் இந்த எதிர்மறை செய்திகளையும் தனது பப்ளிஸிடியாக எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ?) இளையராஜாவிடம் “தான்” என்ற அகங்காரம் இல்லையா? அதற்கு நேரெதிராகப் பிரவாகமெடுக்கும் ஆளை மயக்கும் இசையும், அரிதாக வெளிப்படும் குழந்தைத் தன்மையும் அவரிடம் இல்லையா? வைரமுத்து எல்லாவற்றையும் ஆதாயத்துடன் அணுகக் கூடியவர் என்கிறார்கள். அது தவறு. அடிப்படையில் மனிதர்களுக்கே இருக்கக் கூடிய பலவீனங்கள் அவரிடம் இருக்கலாம். நம்மைக் காட்டிலும் அதிகமாகவே கூட இருக்கலாம். எனினும் “வைரமுத்துவும் மனிதன் தான்” என்பதை நாம் மறக்கக் கூடாது. அவருக்குள்ளும் எங்கோ கொஞ்சம் ஈரம கசியத்தானே செய்யும். அதற்கான உதாரணங்கள் தான் மேற்கூறிய நண்பர்களுடனான உரையாடல்கள். இயக்குநர் சீனு ராமசாமிக்கு பிரஸ்மீட் ஏற்பாடு செய்து, அவரது முதல் படம் பெரிதாக வெளியில் தெரியக் காரணமாக இருந்தவர் வைரமுத்து. பாடல்கள் எழுதியதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. சீனு ராமசாமிக்கு இந்த அளவிற்கு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? சீனு ராமசாமியின் மேல் வைரமுத்துவுக்கு இருந்தது மனிதம் வெளிப்படக் கூடிய ஏதோ ஒன்று (அன்பு / அக்கறை) தானே!

இறுதியாக, “பத்திரிகையாளர்களைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப வைரமுத்து பயன்படுத்திக் கொண்டவர். தன்னைப் பற்றிய செய்தி எப்படி வர வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர் வைரமுத்து” என்ற தேனி கண்ணனின் விமர்சனத்தை நாம் கொஞ்சம் கூர்மையாக அவதானிக்க வேண்டும். இந்த இடத்தில் தேனி கண்ணன் சேம்சைட் கோல் போட்டிருக்கிறார். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறை புரையோடிப் போயிருப்பதையே இந்த வாக்கியம் சுட்டிக் காட்டுகிறது. அடுத்தவர்களின் அதிகாரத்தின் வழிகாட்டுதலில் செய்தியைப் பிரசுரிக்கும் இவர்களை நம்பியா நாம் எல்லாச் செய்திகளையும் தெரிந்துகொள்கிறோம். ஒரு சினிமா பாடலாசிரியனுக்கே சலாம் போடும் இவர்கள் – அரசியல் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் ஊதும் மகுடிக்கு மயங்காமல் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம். பெருவாரியான பத்திரிகையாளர்களும் நிருபர்களும் ஏதோ ஒன்றிற்கு விலை போகிறார்கள் என்று சொல்ல வருகிறாரா இவர்?

என்ன கொடுமைங்க ஃப்ரெண்ட்ஸ் இதெல்லாம்?

Friday, April 24, 2015

டிஸ்கவரி புக் பேலஸ் – இலக்கிய நிகழ்வுகள்

அன்பிற்கினிய நண்பர்களே...! எதிர்வரும் மே, ஜூன், ஜூலை (2015) ஆகிய மாதங்களின் ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை தினங்களிலும் - சென்னை - கே.கே நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் - சில எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பேச நிகழ்வினை ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறோம். இந்த இலக்கிய நிகழ்வில் “யுவன் சந்திரசேகர், வேல. ராமமூர்த்தி, இமையம், க. சீ. சிவக்குமார், அ. முத்துலிங்கம், இரா. முருகன், அம்பை” ஆகியோரது படைப்புகளைப் பற்றிப் பேச நண்பர்கள் இசைவு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜூலை மாதம் 05-ஆம் தேதி வைக்கம் முகமது பஷீரின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம். இந்நிகழ்வைப் பல்வேறு அமர்வுகள் கொண்டு சிறப்பிக்கலாம் என்று யோசித்து வைத்திருக்கிறோம். (கவிஞர் சுகுமாரனைப் பேசுவதற்கு வருமாறு அழைத்திருக்கிறோம். பஷீரின் ஜென்மதினம் சிறுகதையை நடிகர் மணிபாரதி அரங்கேற்றுவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். சினிமா விமர்சகர் சுரேஷ் கண்ணனும் இந்நிகழ்வில் பேசுவதற்கு வருவதாக இசைவு தெரிவித்திருக்கிறார். பஷீருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த ஒருசிலரை அழைக்கும் உத்தேசத்திலும் இருக்கிறோம். பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை.) பஷீர் – ஆவணப்படத் திரையிடலும் அதன் ஒரு பகுதியாக இருக்கும். எல்லாம் முடிவான பிறகு நிகழ்ச்சி நிரலைத் தெரியப்படுத்துகிறோம்.

போலவே, தன் வரலாறுகள் நிறையவே தமிழில் வெளிவருகின்றன. ஆங்கிலத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும், இதர இந்திய மொழிகளிலிருந்தும் நிறைய நூல்கள் வெளிவருகின்றன. அவற்றைப் பற்றிய பெரிதான விமர்சனக் கட்டுரைகளோ அல்லது கூட்டங்களோ நடைபெறுவதில்லை. போதுமான கவனிப்பும் இத்தைகைய புத்தகங்களுக்குக் கிடைப்பதில்லை. ஆகவே, நிர்பந்தத்தின் காரணமாக வேற்று தேசத்திற்கு அகதிகளாகச் செல்ல நேர்ந்த பதின்பருவத்து சிறுவர்களின் மனநிலையைப் பிரதிபலித்த, அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகளை முன்வைத்த “போரின் மறுபக்கம் (பத்தினாதன்)” மற்றும் “அப்பாவின் துப்பாக்கி (ஹெனர் சலீம்)” ஆகிய இரண்டு நூல்களையும் பற்றிப் பேசுவதற்கு ஜூன் 28-ஆம் தேதி ஒரு நிகழ்வினை ஒருங்கிணைக்கலாம் என்றிருக்கிறோம். இதே நிகழ்வில் போபடி ஷிரானந்தானியின் தன்வரலாறு - சாகித்ய அகாடமி வெளியிட்ட - “எனது நினைவலைகள்” புத்தகத்தையும் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறோம்.

இம்மூன்று புத்தகங்களும் “ஒரு சாமானியன், ஓர் எழுத்தாளர், ஒரு திரைப்பட இயக்குனர்” என வெவ்வேறு தளத்தில் அகதியாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பதிவுகள். இந்தியப் பிரிவினைக்குப் பின் ஷிரானந்தானி – இந்தியப் பிரஜையாக இங்கு வாழ்ந்தாலும் – சிந்தி மொழி பேசும் சிறுபான்மை அகதியைப் போலவே தான் உணர்வதாகத் தன்னுடைய புத்தகத்தில் சொல்லியிருப்பார்.

இந்நிகழ்வில் “செந்தூரன் (உதவி ஆசிரியர் – காலச்சுவடு), ஜெனி (நாடகக்காரர், உதவி இயக்குனர், மொழிபெயர்ப்பாளர்)” ஆகியோர் பேசுவதற்குத் தயார் செய்துகொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சோமீதரன் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் இன்னொருவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் உறுதி செய்த பிறகு இந்நிகழ்வு நடைபெறும் நேரத்தை உறுதி செய்கிறோம்.

இத்தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வாக யுவன் சந்திர சேகரின் படைப்புகள் குறித்த விமர்சனக் கூட்டம் மே மாதம் 17-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ஏற்பாடாகி இருக்கிறது. இந்த விமர்சனக் கூட்டத்திற்கு யுவன் சந்திரசேகரும் வருவதாகச் சொல்லி இருக்கிறார். நிகழ்வில் பேச இருப்போர்: 


1. யுவன் சந்திரசேகர் படைப்புகள்:

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் – தேதி: மே, 17 - நேரம்: மாலை 4.30

கவிதைகள் – கங்காதரன் (கவிஞர், முதுகலை மாணவர் - MCC கல்லூரி, தாம்பரம்)
சிறுகதைகள் – அ. மு. செய்யது (எழுத்தாளர்)
நாவல்கள் – சுரேஷ் கண்ணன் (விமர்சகர், எழுத்தாளர்)
மொழிபெயர்ப்புகள் – கவிதா முரளிதரன் (பத்திரிகையாளர், எழுத்தாளர்)

2. க. சீ. சிவக்குமார் படைப்புகள்:

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் – தேதி: மே, 31 - நேரம்: மாலை 4.30

பாஸ்கர் சக்தி (எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குநர்)
கவிதா பாரதி (கவிஞர், இயக்குநர்)
யுவ கிருஷ்ணா (பத்திரிகையாளர், எழுத்தாளர்)
பத்மஜா நாராயணன் (கவிஞர், மொழிபெயர்ப்பாளர்)

இதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளிலும் பேசுவதற்கு நண்பர்கள் இசைவு தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். நேரமும், தேதியும் இனிமேல் தான் உறுதி செய்யப்பட வேண்டும்.

சிறுவர் இலக்கியம் சார்ந்த கூட்டம் ஒன்றை நடத்திப் பார்க்க வேண்டும் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் ஆசைகளில் ஒன்று. டிஸ்கவரி வேடியப்பனும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். யூமா வாசுகி - தொடர்ந்து அயல்மொழி சிறுவர் இலக்கிய வரிசையைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரா. நடராசன் போன்றவர்களும் தொடர் பங்களிப்பு செய்கிறார்கள். விழியன், விஷ்ணுபுரம் சரவணன் வரை சிறுவர் இலக்கியப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. குழந்தைகள் இலக்கியம் என்ற பிரிவையும் சேர்த்தே சிறுவர் இலக்கியம் என்று இங்கு நான் சுட்டுகிறேன். என்னுடைய நட்பு வட்டத்தில் இது சார்ந்து இயங்கும் நண்பர்களை யோசித்தால் - யூமா வாசுகி, முரளீதரன் (சுட்டி விகடன் கதைகள்), விழியன், விஷ்ணுபுரம் சரவணன் போன்ற பெயர்கள் தான் வரிசைப்படுத்த வருகின்றன. கடந்த புத்தகக் கண்காட்சியில் பாலு சத்யாவின் சிறுவர் நாவல் ஒன்று வெளியீடு கண்டது. சிறுவர் இலக்கியம் சார்ந்து பெண்கள் யாரேனும் சமீப காலத்தில் பங்களிப்பு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்து யாரேனும் இருந்தால் சொல்லுங்களேன்.

சிறுவர் இலக்கிய உரையாடல் நிகழ்வு:

குமார் ஷா (கதை சொல்லி, அறம் ஃபவுண்டேஷன்)
தம்பிச்சோழன் (நடிகர், எழுத்தாளர்)
பால பாரதி (எழுத்தாளர், ஊடகவியலாளர்)
– இவர்கள் மூவரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். பேரா. வளர்மதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த போது – “தமிழில் குழந்தைகள் இலக்கிய நூற்தொகை” ஒன்றிற்காக வேலை செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவரையும் கூடத்திற்கு அழைத்து, அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்யலாம் என்று நினைத்து செல்பேசியில் அழைத்தேன். இப்பொழுது சேலத்தில் மாற்றலாகிச் சென்றுவிட்டதாகக் கூறினார். குழந்தைகள் இலக்கியம் சார்ந்து கல்விப் புல ஆராய்ச்சியில் இருக்கும் ஒருவரைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். கிடைத்ததுமே “சிறுவர் இலக்கிய கூட்டம்” ஒன்றை நடத்திப் பார்த்து விட வேண்டியது தான்.

இதர எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பேசுபவர்கள் உறுதிப் பட்டிருந்தாலும், இதுவரை மூன்று கூட்டங்களுக்கான தேதிதான் முடிவாகி இருக்கின்றன. எனினும் அதைப்பற்றிய தகவல்கள் கீழே. 

3. வேல. ராமமூர்த்தியின் படைப்புகள்:

பகவதி பெருமாள் (இயக்குனர் & நடிகர்)
சுகந்தி நாச்சியாள் (ஊடகவியலாளர்)
வேல் கண்ணன் (கவிஞர், எழுத்தாளர்)

4. அம்பையின் படைப்புகள்:

சித்ரா (அம்பையின் படைப்புகளை எம்.ஃபில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டவர்.)
அதிஷா (எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர்)
ப்ரியதர்ஷனி (வாசகர்)

5. இமையம் படைப்புகள்:

(ஜூன் 21 – மாலை 4.30 மணிக்கு மேல்...)

அரவிந்தன் (பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
பரமேஸ்வரி (கவிஞர், எழுத்தாளர்)
கதிர் பாரதி (கவிஞர், பத்திரிகையாளர்)

6. அ. முத்துலிங்கம் படைப்புகள்:

மாலன் (எழுத்தாளர், பத்திரிகையாளர், ஊடகவியலாளர்)
உமா ஷக்தி (கவிஞர், பத்திரிகையாளர்)
விக்னேஷ்வரன் (உதவி இயக்குநர்)

ஆய்வு நூல்கள் – உரையாடல்

தொ. பரமசிவம் ஆய்வுகள் – சௌந்தரி (SRM கல்லூரி)
பொ. வேல்சாமி ஆய்வுகள் – காமராசு (மாநிலக் கல்லூரி)
பாலுச்சாமி ஆய்வுகள் – ஜீவ கரிகாலன் (எழுத்தாளர், ‘யாவரும். காம்’ பதிப்பாளர்)

“கவிஞர் சுகுமாரன், தமிழ்ச்செல்வன், திலீப்குமார், ராஜ் கெளதமன், யூமா வாசுகி, கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், பாவண்ணன், கீரனூர் ஜகீர்ராஜா, எஸ். சங்கர் நாராயணன், மனுஷ்ய புத்திரன், தேவி பாரதி, ஜே.பி. சாணக்யா, பாலு சத்யா, மீரான் மைதீன், பால பாரதி, தமயந்தி, சு. தமிழ்ச்செல்வி, இரா. முருகன்” என்று கலந்துகட்டி ஒரு ரவுண்டு அடிக்கலாம் என்று இருக்கிறோம். “தொ. பரமசிவம், பாலுச்சாமி” போன்ற ஆய்வாளர்களின் நூலகையும், “யூமா சாசுகி, ஜி. குப்புசாமி, கே.வி. ஷைலஜா, குளச்சல். மு. யூசுப், பாவண்ணன்” போன்றவர்கள் மொழிபெயர்ப்பு செய்த படைப்புகள் பற்றியும் கூட பேசலாம் என்றிருக்கிறோம். எழுத்தாளர்களிடமும், படைப்புகள் குறித்துப் பேச வரும் நண்பர்களிடமும் உறுதி செய்து கொண்டு ஏனைய நிகழ்வுகள் குறித்த சரியான விவரங்களைத் தெரியப் படுத்துகிறோம்.

ஏற்கனவே இந்த படைப்பாளிகளைப் பலரும் வாசித்து இருக்கலாம். வாசிக்காதவர்கள், ஒருமுறை புரட்டி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கிளம்பி வாருங்கள். இடையிடையே அந்தந்த கூட்டங்களில் – அந்தந்த படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்து ஒரு சிறு பகுதியை அல்லது நல்லதொரு சிறுகதை அல்லது கவிதையையும் வாசிக்க இருக்கிறோம்.

தயாராக இருக்குங்கள், கூடிய சீக்கிரமே... நாம் எல்லோரும் ஒன்று கூடி இவர்களது படைப்புகளைப் பற்றி நல்லதொரு மாலை நேரத்தில் உரையாடலாம்.

Tuesday, April 14, 2015

பொருந்தாக் காமம்

சில ஆண்டுகளுக்கு முன்பு - தமிழகக் காவல் துறையில் எஸ்.பி கேடரில் இருந்த ஒரு பெண் அதிகாரி – தனக்குக் கார் ஒட்டிய கடைநிலைக் காவல் அதிகாரியை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். பத்திரிகைகள் இந்தத் திருமணத்தை ஏதோ அவர்கள் இருவரும் ஓடிவிட்டார்கள் என்று கிசுகிசுத் தன்மையில் எழுதுவதைப் போல செய்தி வெளியிட்டிருந்தார்கள். இரண்டு பெரும் பக்குவம் அடைந்தவர்கள். திருமணம் செய்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பத்திரிகைகள் இதனை ஏதோ நடக்கக் கூடாத காரியம் நடந்து விட்டதுபோல செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆண் – வயதிலும் சமூகத்திலும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். பெண் – அவனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என்ற ஆணாதிக்க புத்தியில் உதிக்கும் மனோநிலைதான் இந்தச் சம்பவத்தை நாளேட்டின் செய்தியாகும் அளவிற்கு முக்கியத்துவம் அடைய வைக்கிறதோ?

இதே... எஸ்.பி ஆணாக இருந்து, கடைநிலை ஊழியராகப் பெண் இருந்திருந்தால் – ஒன்று, அந்த ஆண் எஸ்.பியை வீரதீரச் செயல் புரிந்ததாகப் பாராட்டி எழுதியிருப்பார்கள். இல்லையேல், இதெல்லாம் ஒரு மேட்டரா? என்பது போலக் கண்டும் காணாதது போல பத்திரிகையாளர்கள் நழுவி இருப்பார்கள்.

ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளியின் மாணவிகள் கற்பம் அடைந்ததைப் பற்றிய செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கும் பொழுது அதற்குக் காரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் 45 வயதைக் கடந்த அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாகப் பாடம் கற்பித்த ஆசிரியருடன் தலை மறைவாகும் மாணவர்கள் – பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களாக இருக்கிறார்கள். இந்த முரணை நாம் கொஞ்சம் நுட்பமாக அலசிப் பார்க்கவேண்டும்.

கடந்த ஆண்டு குமுதினி என்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தனது பள்ளி மாணவன் ஒருவருடன் ஓடிவிட்டார் என்பதை எல்லா பத்திரிகைகளும் கவர் ஸ்டோரியாக எழுதியிருந்தனர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் 16 வயது மாணவன் 26 வயது ஆசிரியருடன் ஓடிவிட்டான். “வாழ்ந்தா... எங்க டீச்சரோடதான் வாழுவேன்...” என்று அந்த மாணவரும் பிடிவாதம் பிடித்தார். இந்த வருடமும் இரண்டு மாணவர்கள் தனது பள்ளி ஆசிரியருடன் தலைமறைவு என்பதை சுவாரஸ்யமாக எல்லோரும் சமூக இணைய தளங்களில் பகிர்கின்றனர். இந்த மாணவர்களும் ஆசிரியர்களுக்கும் கூட ஏறக்குறைய பத்து வயது வித்தியாசம் இருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலுமே கள்ளத் தொடர்புகள் இருக்கின்றன. நம்முடைய ரத்த உறவுகள், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தொடர்பில் இருப்பவர்கள் என்று எல்லா வட்டத்திலும் கள்ளத் தொடர்புகளில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். இதில் பொருந்தாக் காமமும் – முறையற்ற காமமும் அடக்கம். இவற்றைக் கண்டும் காணாமல் செல்லும் நாம், நமக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் பொதுவில் சிக்கும்பொழுது புகைப்படங்களைப் பகிர்ந்து இதுபோன்று கும்மியடிப்பது ஞாயமா? அவர்களது புகைப்படத்தையும் செய்திகளையும் உடனுக்குடன் பகிர்வது அடுக்குமா?

திருமணத்திற்கு முன் – திருமணத்திற்குப் பின் என எப்படி பிரித்துப் பார்த்தாலும் இதனை நல்ல உறவாக ஏற்றுக்கொள்ள முடியது தான். ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது இயற்கை. இது வயதுக்கு வந்தவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று பல கோணங்களில் வாதாடலாம். பாலியல் உறவில் ஈடுபடுவது அவர்களது உரிமையும் கூட. ஆனால், நம்முடைய கலாச்சாரப் பின்புலம் சற்றே வித்தியாசப்பட்டது. ஏராளமான ஒழுக்க வரையறைகளுக்கு உட்பட்டுத்தான் நாம் வாழ வேண்டி இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் பள்ளிச் சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்களின் மேல் கடுமையான சட்டம் பாயும். நம்முடைய சட்டத்தில் ஓட்டைகள் அதிகம், ஆகவே தப்பித்து விடுகிறார்கள். பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலையும் இங்கிருக்கிறது.

இன்று நடக்கும் பல கொலைகளுக்குக் காரணம் கள்ளத்தொடர்பாகத் தான் இருக்கிறது. இங்கு எல்லாமே சுலபமாகக் கிடைக்கிறது. தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிறது. ஹான்ஸ், பான் பராக், கஞ்சா, அபின், ப்ரௌன் சுகர்... எல்லாமே எல்லோருக்கும் சுலபமாகக் கிடைக்கிறது. நான் சந்திக்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் பலரும் ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாகத் தான் இருக்கிறார்கள். அதற்காகத் தனியார் பள்ளி மாணவர்கள் சொக்கத் தங்கம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலுள்ள தனியார் பள்ளி மாணவருக்குப் பாடம் எடுக்கச் சென்று கொண்டிருந்தார். அந்த மாணவனுடைய பெற்றோர்கள் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுபவர்கள். தாயும் தந்தையும் பிசினஸ் விஷயமாக அடிக்கடி வெளியில் செல்பவர்கள். காலையில் வீட்டைவிட்டுச் சென்றால் இரவில் தான் திரும்புவார்கள். பையன் வெளியில் சென்று கெட்டுவிடக் கூடாதே என்று சிறப்பு ஆசிரியர்களை வீட்டிற்கு வரவழைத்து பாடம் எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். பையன் சிறுகுழந்தை என்ற நினைப்பு அவர்களுக்கு. விடுமுறை நாட்களில் சிறப்புப் பாடங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மாணவனைப் பற்றி என்னுடைய நண்பர் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். ஒருநாள், “அவனுக்கு டியூஷன் எடுக்கறத நான் நிறுத்திட்டேன்” என்றார். “நல்ல வருமானத்தை ஏன் எட்டி ஒதைக்கிற?” என்றேன்.

“அந்தப் பையனோட கேரக்டர் சரியில்ல. அவனுக்கு ஹிந்தி பாடம் எடுக்க ஒரு லேடிய அரேஞ் பண்ணி இருக்குறாங்க. அந்த டீச்சர் கூட பையனுக்கு கனெக்ஷன் உண்டாகிடுச்சி. பையன்கிட்ட இருந்து எக்கச்சக்க பணத்தை அந்த டீச்சர் கரந்துட்டு இருக்கா... அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சி – அந்த பொம்பளைக்கு மேல கொஞ்சம் பணத்தக் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பிச்சி இருக்காங்க. இந்த விஷயம் என்னோட காதுக்கு வந்துச்சி. எதுக்கு வம்புன்னு நான் போறது இல்ல. ஒடம்பு சரியில்லன்னு காரணத்த சொல்லி நின்னுட்டேன்” என்றார்.

முறையற்ற காமம் எல்லா எடத்துலையுமே இருக்குது. ஒரு ஈஸ்ட்ரீமுக்கு செல்பவர்களை மீடியா வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரச்சனையாக நினைக்கும் இந்தக் காதலில் தொடர்புடைய மூன்று மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நேர்மாறாக ஒரே பள்ளியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவிகள் கருவுற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு – கருக்கலைப்புச் செய்த சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்திரவை ஒட்டியுள்ள அரசாங்கப் பள்ளியில் நடந்தது. இந்த எல்லை மீறல்களை – வாழும் தலைமுறை – சிக்கலாகப் பார்க்கும் தன்மையைத் தவிர்க்க முடியாது. காலம் இந்தச் செயல்களைச் சாதாரணமானதாக மாற்றிவிடும். மேற்கத்திய கலாச்சாரத்தை அடியொற்றி - வளர்ந்துவரும் தேசங்கள் இந்தச் சிக்கல்களைச் சமாளித்தே ஆகவேண்டும்.

சமீபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். கிராமப் புறதிலிருந்து சென்னைக்கு வந்து படிக்கும் மாணவர். நானும் சென்று அவரைச் சந்தித்தேன். “அண்ணா... ஒரு விஷயம் சொல்லணும் தப்பா நெனச்சுக்க மாட்டிங்களே...?” என்றார்.

“பாரு... எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்குது. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்னை பார்க்க வந்திருக்கேன்... நேரா விஷயத்துக்கு வா...” என்றேன்.

“நேத்தைக்கு ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருந்தேன்... ஃபிரண்ட்ஸ் எல்லாரும் இருந்தாங்க... என்னோட கேர்ள் பிரண்ட் அதுக்கு வான்னு யாருக்கும் தெரியாம அப்ரோச் பண்ணினா... நான் பயந்துட்டேன்... ஒரே கன்ஃபியூஷனா இருக்குது... ஒரே படபடப்பா இருக்குது...” என்றார்.

இதுபோன்று இன்னும் ஒரு நான்கைந்து சம்பவங்கள் நண்பருக்குக் கிடைத்தால் சென்னையில் நீந்தப் பழகிக் கொள்வார் என்று நினைத்தேன். பெண்களை ஏமாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டாம் என்பதற்காகத் தான் இதனைக் கூறினேன். இதேபோல், எனக்குத் தெரிந்த ஒரு விளையாட்டு வீரர் தமிழக அளவில் முக்கியமான இடத்தினைப் பெற்று முத்திரைப் பதித்திருக்க வேண்டும். அவருக்கு ப்ரொஃபஷனல் கோர்ஸ் படிக்கும் மாணவி காதல் வலை வீசினார். நண்பருடைய வேண்டாத நேரம் வலையில் சிக்கிவிட்டார். அந்த மாணவியுடன் நண்பரும் வெளியூருக்கெல்லாம் சென்று ரூம் எடுத்துத் தங்கியிருக்கிறார். எல்லாமே நடந்துவிட்டது. ஆனால், நண்பர் உண்மையிலேயே உயிருக்குயிராக அந்த மாணவியைக் காதலித்தார். கடைசியில் தான் தெரியவந்தது – ஒரே நேரத்தில் அந்த மாணவி பலருக்கும் காதல் வலை வீசியக் கதை. இப்படி என்னைச் சுற்றி நடக்கும் கதைகளைச் சொல்லத் தொடங்கினால் நான் வசிக்கும் ஊரில் நிம்மதியாக நான் வாழ முடியாது.

என்னுடைய சிறுவயதில் டிவியில் பார்த்திருக்கிறேன். லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவர்களை நியூசில் பார்க்கும் பொழுது முகத்தை மூடிக்கொண்டு காட்சி தருவார்கள். ஊழலில் சிக்கிய அரசியல் வாதிகளும் முகத்தை மூடிக்கொண்டு தான் தோன்றுவார்கள். இன்றைய நாளேடுகளில் ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் குரூப் ஃபோட்டோவைப் பார்க்கக் கிடைக்கிறது. “கள்ளக் கடத்தல், பலாத்காரம், கற்பழிப்பு, வழிப்பறி, விபச்சாரம், பொது வாழ்வில் ஊழல்” என எந்தக் குற்றமாக இருந்தாலும் உதட்டில் மாறாத புன்னகையுடன் நாளேட்டின் செய்திகளில் குற்றவாளிகள் காணக் கிடைக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபட்டுச் சிறை செல்வது சாதாரணமாகி விட்டது. “எது உனக்குத் தேவையோ அதுவே தர்மம்” என்ற நிலைக்கு நாம் நகர்ந்துவிட்டோம். இதெல்லாம் காலத்தின் குறியீடு.

மகாபாரதக் கிளைக் கதைகளில் ஒன்றுண்டு. சூரிய உதயம் பளிச்சென வந்த பிறகு யுதிஷ்டிரனாகிய தருமன் பல்குச்சியை வைத்துக்கொண்டு பல் தேய்த்துக் கொண்டிருந்தானாம். அதைப் பார்த்த அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்டானாம்:

“இதென்ன வாசுதேவா? ஊரே விழித்துக்கொண்ட பிறகு தருமர் பல் தேய்க்கிறார்?”

“பார்த்தா... இது தர்மனின் பிழையல்ல... யுகம் மாறிவிட்டது... கலிகாலம் பிறந்து விட்டது” என்றாராம் கிருஷ்ணன்.

ஒருசில விஷயங்கள் காலத்தின் குறியீடு. பத்தாண்டுகளுக்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை மூடிக்கொண்டு மீடியாவில் தோன்றினார்கள். மான அவமானங்களுக்கும் அஞ்சினார்கள். இன்றைய தேதியில் “காசு... பணம்... துட்டு... மணி மணி...” என்ற நலன் குமரசாமியின் வரிகளுக்கு, சந்தோஷ் நாராயணின் மெட்டுக்குத் தகுந்தபடி - படல்பாடி ஆடுகிறார்கள். வரம்பை மீறும் அந்தரங்கத் தொடர்புகள் எல்லா இடங்களிலும் – எல்லாக் காலங்களிலும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. வெளியில் தெரியாமல் இருந்ததை இன்றைக்கு மீடியா பகிரங்கப் படுத்துகிறார்கள்.

ஒரு புள்ளி விவரத்தை சமீபத்தில் இணையத்தில் எங்கோ ஒரு மூலையில் படித்த ஞாபகம். இளம் வயதினர் காமம் சார்ந்த அதிகப் படங்களையும், வீடியோக்களையும் தேடுகிறார்கள். அதிலும் வீடியோ சார்ந்து தேடுபவர்கள் பெரும்பாலும் “மாலு (மல்லு) ஆண்டி செக்ஸ் வீடியோஸ்” என்று தேடுகிறார்கள். இப்படித் தேடுபவர்கள் பலரும் 13 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள். எவ்வளவு நாள் தான் திரையில் மட்டுமே பார்த்துத் தினவுகளைத் தீர்த்துக்கொள்வது. ஆகவே பலரும் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

நான் அடிக்கடி செல்லும் ஒரு ப்ரௌசிங் சென்டரில் – அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஒரு மறைமுக ஆய்வில் ஈடுபட்டேன். ஸ்கூல் யூனிபார்மில் வருபர்கள் எதைத் தேடுவதற்காக வருகிறார்கள் என்று ஆய்வு செய்தோம். குழுவாக வரும் மாணவர்கள் கேம்ஸ் விளையாடுவதாகச் சொல்லிவிட்டு ஆபாசப் படம் தான் பார்த்தார்கள். பலரும் தரவிறக்கம் செய்தது ஆபாச வீடியோக்களாகத் தான் இருந்தன. சிலர் செல்பேசியிலும் மெமரி கார்டிலும் பதிந்து கொண்டு சென்றார்கள். இவர்கள் எல்லோரும் 7-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிப்பவர்கள். அரசுப்பள்ளி முதல் பல்வேறு உயர்தரத் தனியார் பள்ளி மாணவர்கள் வரை எல்லோரும் இதில் அடக்கம்.

மாணவருக்குப் பதினாறு வயது... அவருடன் ஓர் ஆசிரியர் பாலியல் உறவில் ஈடுபடுவது தவறு என்று விவாதம் செய்கிறோம். இரண்டு வருடங்கள், சரியாக 730 நாட்கள் கழித்து இதே வேலையை அந்த மாணவர் செய்தால் நாம் எப்படி விவாதிப்போம் என்று யோசிக்கிறேன். சரி போகட்டும் ஒரு கல்லூரி மாணவன் 18 வயதினைப் பூர்த்தி செய்த மாணவன் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியரைத் திருமணம் செய்கிறான். சட்டப்படி அவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. இப்பொழுது நாம் இந்த விஷயத்தை எப்படிப் பார்ப்போம்?. சிக்கல் தீர்க்க முடியாத புதிர்கள் இவையெல்லாம். பத்திரிகைகளுக்குத் தீனி வேண்டும் என்பதால் இதையெல்லாம் பரபரப்புப் செய்தியாக்கி விடுகிறார்கள். நம்முடைய வாய்க்கும் அவள் கிடைத்து விடுகிறது. இதனினும் கொடுமை என்னவெனில், ஓடிச்சென்ற ஆசிரியரையும் மாணவரையும் கண்ட பொதுமக்கள் அடித்துத் துவைத்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படிருக்கிறார்கள். இந்த அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தது என்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையிலும் சரி, கும்பல் மனோநிலையிலும் சரி தமிழக மக்கள் தரம் கெட்டவர்களாக மாறிக்கொண்டு வருகிறார்களோ?

வளிரிளம் பருவம் சுகத்தைத் தேடி அனுபவிக்க விழையும் பருவம். தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் வளர்ந்து சிகரத்தைத் தொடும் இக் காலகட்டத்தில் - அவர்களுக்கு எல்லா விதமான சுகத்தையும் கண்டு துய்க்கும் வசதியை அது ஏற்படுத்திக் கொடுக்கிறது. மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கருவாட்டுத் துண்டையும், மசால் வடையையும் பொறியில் வைத்துவிட்டு மாட்டிக்கொண்ட எலியைக் குற்றம் சொன்னால் எப்படி?

இதனை நாம் என்று உணர்வோமோ தெரியவில்லை...!

Sunday, April 12, 2015

ஓவியராய் நடிகராய் சிவக்குமார்


சிலபல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை டேக் சென்டரில் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டார்கள். நடிகர் சிவக்குமார் தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார். முதன் முதலாக அங்கு தான் அவரை நேரில் கண்டேன். முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட அவர் இபா-வின் கைகளில் ஐநூறு ரூபாய்த் தாளினைத் திணித்தார். இபா – பணத்தினைப் பெற்றுக்கொள்ள மறுத்தார். “புத்தகத்த சும்மா வாங்கிட்டு போகக் கூடாது...” என்று வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்தார். வேறுவழியில்லாமல் ரூபாயைப் பெற்றுக்கொண்ட இபா, அதனை பக்கத்திலிருந்த கிழக்கு பதிப்பாளர் பதிரியிடம் கொடுத்தார். பின்னர் நாடகத்தில் பர்ஃபார்ம் செய்வது போல ஏற்ற இறக்கத்துடன் ஒலிப்பெருக்கியின் முன்பு சிவக்குமார் பேசினார். ‘உச்சி வெயில்’ நாவல் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டதையும், அது தொடர்பான சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார். இரண்டாவது முறையாக சாகித்ய அகாதமி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவரைச் சந்தித்தேன். அந்நிகழ்விலும் வெளுத்து வாங்கினார். கேணி சந்திப்பிலும் ஏதேனும் சுவாரஸ்யத்தினை அள்ளி வீசுவார் என்ற எண்ணங்களுடன் தான் சென்றிருந்தேன். என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. 

பொதுவாகவே கேணி சந்திப்பில் – ஏதாவதொரு தலைப்பை ஒட்டி சிறப்பு விருந்தினர் தனது அனுபவங்களைப் பேசுவார், அதைத் தொடர்ந்து கேள்வி-பதில் உரையாடல் பகுதி இடம்பெறும். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசக்கூடிய சிவக்குமார் நேரடியாகவே உரையாடல் பகுதியாக தனது சந்திப்பை அமைத்துக் கொண்டார். ஒருவகையில் அதுவும் நல்லதாகத் தான் போனது. ஓரிடத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டால் குறித்த நேரத்தில் வந்து சேர்வதில் சிவக்குமாரை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்பது சினிமா இன்டஸ்ட்ரியில் லீக்கான அரதப் பழசான விஷயம். எனினும் இதனைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை – 4.30 மணிக்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்விற்கு 4 மணிக்கெல்லாம் அவர் வந்து சேர்ந்துவிட்டார். சிவக்குமார் வந்து சேர்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு மூன்று சமையல் கலைஞர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். சந்திப்பு துவங்குவதற்கு முன்பு வந்திருந்த எல்லோருக்கும் ஜாங்கிரி, போண்டா, டிகிரி காஃபி ஆகியவற்றை சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். வயிற்றை நிரப்பிக்கொண்டு தான் பேசுவதற்கு உட்கார்ந்தோம்.

ஞாநி சந்திப்பைத் துவக்கி வைத்தார். சிவக்குமாரின் பத்து நிமிட வீடியோ முதலில் ஒளிபரப்பப்பட்டது. அந்த அசையும் படத்தில் “ஓவியன், யோகா விரும்பி, நடிகன்” என்ற வரிசையில் அவருடைய ப்ரொஃபைல் அமைந்திருந்தது. ஓர் ஓவியனாக சிவக்குமார் திறமைசாலியாகத் தான் இருக்கிறார். காணக்கிடைத்த ஓவியங்கள் நுட்பமாகத் தான் வரையப்பட்டிருந்தன. அவர் கையால் வரைந்து ஞாநிக்கு ஏற்கனவே பரிசளித்த காந்தி ஓவியமும் நன்றாகவே இருந்தது. நடிகர் நாகேஷ், ஜெமினி கணேசன் ஆகியோரது ஓவியங்களும் தத்ரூபமாகவே இருந்தது. தத்துவமேதை ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து அப்படத்தில் அவரிடமே கையொப்பம் பெற்றிருக்கிறார். வேறுசில ஓவியங்கள் கூட வீடியோவில் காணக் கிடைத்தன.

ஓவியக் கல்லூரியில் மாணவனாய்ச் சேருவதற்கு வண்டியேறிய சிவக்குமார் எந்தப் புள்ளியில் நடிகனாக ஆசைப்பட்டிருப்பார் என்று தெரியவில்லை. ஒருவேளை சென்னையின் நெருக்கடியான வாழ்க்கையும் கூட அவரை மாற்றியிருக்கலாம். எது எப்படியோ...!? அறுபதாண்டு காலதிற்கும் மேலாக சினிமாத் துறையில் ‘எதிர் நீச்சல், உள் நீச்சல், மல்லாந்த நீச்சல், பக்கவாட்டு நீச்சல்’ என இருக்கும் எல்லா மோடிமஸ்தான் வித்தைகளையும் காண்பித்து உச்சத்திற்கு வந்திருக்கிறார். அந்த வகையில் அவரைப் பாராட்ட வேண்டும்.

வெள்ளந்தியாக கொங்குத் தமிழ் பேசிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தவர் சாதாரணமாகத் திரையில் ஜொலித்திருக்க முடியுமா என்ன? எத்தனை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பார். வாசகர் கேட்ட முதல் கேள்வி பெண்களைப் பற்றியதாக இருந்தது. இக்கேள்விக்குத் தான் சிறுவயதில் கடந்து வந்த ஏழ்மை நிலையை மறைக்காமல் பகிர்ந்துகொண்டார். இவர் பிறந்த போது அப்பா இறந்திருக்கிறார். உடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக மரணம் அடைந்திருக்கிறார்கள். கணவனை இழந்த நிலையிலும் சிவக்குமாரின் தாயார் தனது ஒரே மகனான இவரைப் பொறுப்புடன் வளர்த்திருக்கிறார். அவரது அன்னையின் முகம் ஓரிரு நிமிடங்கள் நினைவுக்கு வந்து சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறன். பேசிக்கொண்டே இருந்தபோது ஓரிடத்தில் தொண்டை அடைத்துக்கொண்டு கண்கள் கலங்கினார். உருவங்களையும் முகங்களையும் நினைவு கூர்வதில் ஓவியர்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன? யானையின் ஞாபகத்தைத் தராசில் வைத்தால், ஓவியர்களின் ஞாபகம் கனமானதாகவே இருக்கும். மேலும், ஏழ்மையில் வெளிப்படும் தாயன்புக்கு நிகராக வேறெதைச் சொல்ல முடியும்?

ஆரம்பகால இந்திய தமிழ் சினிமாவும், நாடகச் சூழலும் இவருக்குத் தங்குதடையற்ற தமிழை வாரி வழங்கி இருக்கிறது. எப்பொழுதோ படித்த நாடக வசனங்களையும், கம்ப ராமாயணப் பாடல்களையும் தங்கு தடையின்றி எடுத்து விடுகிறார். பொத்தான் தட்டியதும் துடிப்புடன் இயங்கும் மெஷின் போலச் சரளமாக வரிகள் வந்துக் கொட்டுகின்றன. நாடக அனுபவங்களைப் பற்றி நிறையவே பேசினார். மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக் குழுவில் இவர் பிரதானமாக இருந்திருக்கிறார். இந்தியா முழுவதிலும் பயணம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர்கள் அரங்கேற்றி இருப்பார்கள் போல. கல்லூரிகளுக்குச் சென்று அரங்கேற்றிய நாடக அனுபவங்களையும் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்துகொண்டார்.

நாடகமானாலும் சரி, சினிமாவானாலும் சரி - சிவாஜி கணேசனை மானசீக குருவாக ஏற்றுகொண்டிருப்பார் போல. சிவாஜியை ரொம்பவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசினார். சிவாஜிக்கு நிகரான நடிகர்கள் இனி பிறக்கவே முடியாது என்றும் தனது பேச்சில் பதிவு செய்தார். “சிவாஜிக்குப் பிறகு வந்த சிறந்த நடிகர் என்று யாராவது ஒருவரைக் கூற முடியுமா?” என்று ஞாநி கேட்டபோது கூட, “மொத்தல்ல யாராச்சும் நல்லா நடிக்கட்டும். அப்புறமா சொல்றேன்” என்றார். மேலும் தொடர்ந்து “கமலஹாசனை சிவாஜிக்குப் பிறகு வந்த நல்ல நடிகர்களில் ஒருவராகக் கூறலாம். நிறைய மெனக்கெட்டு நடிக்கிராரு” என்றார். சிவாஜி நடித்த ஆரம்ப காலங்களில் சினிமா தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளரவில்லை. மேக்கப் துறை கூட அந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் சிவாஜி எந்த மாதிரி எல்லாம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்பதை ஒரு நடிகனாக என்னால் பூரணமாக உணர முடியும். குறைந்த பட்ச மேக்கப் வசதியில் சிவாஜி அதிகப்படியான சாத்தியங்களைச் செய்திருக்கிறார். நடிப்புக்காக சிவாஜி மெனக்கெட்டது அதிகம். அந்த வகையில் சிவாஜிக்கு நிகராக ஒருவரைக் கூற முடியாது என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்தார்.

சினிமாவைப் பொறுத்த வரையில் மலையாள நடிகர்களுக்கு நிகராகப் பங்களிப்பு செய்பவர்கள் தென்னிந்தியாவில் மிகக் குறைவு. மலையாள சினிமாவைப் பொருத்த வரை அந்தந்த காலங்களில், அந்தந்த தலைமுறையினர் வெளுத்து வாங்குவார்கள். இப்போது ஃபஹத் ஃபாஸில் பட்டையைக் கிளப்புகிறார்கள் அல்லவா? அதுபோல... பொம்மக்குட்டி அம்மாவுக்கு படத்தில் நடித்த திலீபுக்கு அந்த வருடத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கும் போல. சிவக்குமாருக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கும் போல, அதனைத் தெளிவாகவே பதிவு செய்தார். எனினும் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இலக்கியமாகட்டும் சினிமாவாகட்டும் நவீன கலைப் பங்களிப்பில் மலையாளிகள் என்றுமே தனித்து நிற்கக் கூடியவர்கள். எடுத்து வைத்துப் பேச நிறையவே அவர்களிடம் இருக்கிறது. நம் வசதிக்காக அவற்றையெல்லாம் மறந்துவிடுகிறோம்.

குமுதமாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடிகர் பிரபு உச்சத்தில் இருந்த காலத்தில் சிவாஜியிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்: “நடிப்பில் பிரபுவை உங்களது வாரிசு என்று சொல்லலாமா?”

“மோகன்லால் எப்பிடி நடிக்கிறான் பாருங்க. அவன் தான் என்னோட வாரிசு...” என்று சிவாஜி பதில் சொல்லியிருந்தார். அந்த நேரத்தில் மோகன்லாலுடன் ஒரு மலையாளப் படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். இளைய தளபதி விஜய் நடித்த ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் அந்த நேர்முகத்தைக் கொடுத்திருந்தார் என்று நினைக்கிறேன். மணி ரத்னம் இயக்கத்தில் இருவர் வெளிவந்த காலகட்டம், உலக அழகி ஐஸ்வர்யா ராயிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள்:

“உங்களுடன் நடித்தவர்களில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?” என்று கேட்டிருந்தார்கள்.

“மோகன்லாலைத் தான் சொல்லத் தோன்றுகிறது... எந்த ஒரு கஷ்டமான சீன்லையும் அனாவசியமா நடிச்சிட்டுப் போயிட்ராரு. அவரோட நடிப்பு பிரம்மிக்க வெக்குது” என்று இப்போதையை பியூட்டி குயின் ஐஸ்வர்யா பச்சன் அந்த நேரத்தில் பதில் சொல்லியிருந்தார். மம்முட்டி, திலீப், ஜெயராம், நெடுமுடி வேணு, சீனிவாசன் என்று ஒரு பெரிய லிஸ்டையே சொல்லலாம். பெண் நடிகர்களை எடுத்துக்கொண்டாலும் ஒரு பெரிய லிஸ்டையே கொடுக்கலாம். தமிழ் சினிமாவில் பொம்மை போலப் பயன்படுத்தப்படும் நடிகைகளைக் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்துமாறு மலையாளத் திரையுலகைப் பயன்படுத்தி இருப்பார்கள்.

சரி... எல்லோருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும் இல்லையா? சிவக்குமாரின் நிலைப்பாடு அவருக்கு என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். “இப்போதுள்ள நடிகர்களுக்கு எதையாவது சொல்ல நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“ஆய்... ஊய்-ன்னு சப்தம் போட்டு நடிக்க மட்டும் நடிச்சிடாதீங்க... எல்லாத்துக்கும் சாதாரணமா மொகத்த வச்சிக்கோங்க...” என்று சொல்லியதும் அரங்கமே அதிர்ந்தது. அடிவயிற்றிலிருந்து கத்திப் பேசி கேமராவிற்கு முன்னால் நடித்ததிலிருந்து, இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய தன்மையின் பின்னணிகளை மிகுந்த நகைச்சுவையுடன், ஷூட்டிங்கில் அனுபவங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்டார். கடவுளாகவும் தேவர்களாகவும் நடிப்பதிலுள்ள சிரமத்தையும் எடுத்துக் கூறினார். போலவே, நடிப்பிற்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டதையும் அதிலுள்ள சிரமங்களையும் கூட நகைச்சுவையுடன் பகிந்துகொண்டார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை...!

“காலைல மட்டும் சாப்பிடாம வீட்ட விட்டுக் கெளம்பிடாதீங்க. மீந்துபோன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க இல்ல. அந்த பழைய கஞ்சியாவது குடிச்சிட்டுப் போங்க. மூணு வேல சாப்பிடுறோம். ஒரு வேலைதான் டாய்லெட் போறோம்... ஒருநாளைக்கு ரெண்டு முறை டாய்லெட் பொங்க... ஒடம்ப பார்த்துக்கோங்க...” என்ற ஆலோசனையை எல்லோருக்குமே பரிந்துரைத்தார். இடையில் அவரது இளையமகன் கார்த்தியின் ஃபோன் கால் வந்தது. “எங்கப்பா இருக்க...?” இருக்க என்று அவர் கேட்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறன்.

“உன்ன மாதிரி புத்திசாலிங்கக் கூட பேசிட்டு இருக்குறேன். ஷூட்டிங் ஒழுங்கா போகுதா? சாப்பாடு ஆச்சா?” என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு “ஒரு மணி நேரம் கழிச்சி உன்னக் கூப்பிடுறேன்” என்று சொல்பேசியைத் துண்டித்துவிட்டு மீண்டும் பேசத் துவங்கினார்.

சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், எம். ஜி. ஆர், முத்துராமன், ஜெயலலிதா என்று எல்லா முக்கியமான நடிகர்களுடன் சேர்ந்தும் நடித்ததை நல்லதொரு அனுபவமாக அமைந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டார். பேச்சை ஆரம்பிக்கும் முன்பே “இங்க பாருங்க, நீங்க எல்லாம் புத்திசாலிங்க... நான் முட்டாள். கேள்வி கேட்டு எதிராளியைத் திணரடிப்பது சுலபம். அத ஞாபகம் வச்சிட்டு – எந்தக் கேள்வியைக் கேட்டால் பயனுள்ளதா இருக்குமோ... அந்த கேள்விய மட்டும் கேளுங்க...” என்பதைத் தெள்வாக டிக்ளேர் செய்திருந்தார். கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானதாகவே அமைந்தது. நடிகர் சிவக்குமார் சொல்லிய பதில்களும் ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது. போலவே, ஒலிப்பெருக்கியும் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டே வாசகர்களுடன் பேசினார். கம்ப ராமாயணத்தை ஒருமணி நேரத்திற்குச் சற்றுக் கூடுதலான நேரங்கள் பேசி ஒலி-ஒளி வடிவாக ஏற்கனவே சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதன் விற்பனை சக்கைபோடு போட்டன. இப்பொழுது மகாபாரதத்தைக் கைகளில் எடுத்திருக்கிறாராம். அதன் வெளியீடு கூடிய சீக்கிரம் சந்தையில் கிடைக்கலாம். அது வெளிவந்ததும் இன்னொருமுறை வேண்டுமெனில் நாம் இதுபோல உரையாடலாம் என்றார்.

கம்ப ராமாயணம் வெளிவந்ததும் நிறைய இடங்களில் அதைப் பற்றிப் பேசக் கூப்பிட்டிருக்கிறார்கள். கம்பன் கழகத்தில் கூட பேசுவதற்குக் கூபிட்டார்களாம். எல்லா அழைப்புகளையும் மறுத்துவிட்டாராம். ஆனால், மகாபாரதம் வெளிவந்ததும் நானே இங்கு வந்து - கேணி இலக்கிய சந்திப்பு - பேசுகிறேன் என்று அவர் கூறியதும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஹூம்... அந்த நாளும் வராமலா போகும் சிவக்குமாரை அப்பொழுது மறுபடியும் சந்தித்து உரையாடலாம். பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இவரிடம் இருக்கிறது. கேட்பதற்கு நமக்குத்தான் பொறுமை வேண்டும். பொறுமையுடன் காத்திருங்கள். மீண்டும் சந்திக்கலாம்.

Saturday, April 11, 2015

நடிகர் சிவக்குமார் - சந்திப்பு


நான் வாழ்நாளிலேயே எப்போதும், எதற்கும் ஆசைப்பட்டு வளர்ந்தவனில்லை. ஏனெனில் நம்முடைய தாயின் கருவறையிலேயே எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி ஒரு அல்ப்ப ஆசை இருக்கிறதில்லையா? 

சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்த “இலக்கியமும் சினிமாவும்” - இரண்டுநாள் கருத்தரங்கில் நடிகர் சிவக்குமார் இப்படிச் சொன்னார். காரணம்...

இந்திரா பார்த்தசாரதியின் ‘உச்சிவெயில்’ நாவல், ‘மறுபக்கம்’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது. அதில் சிவக்குமார் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த வருடத்தின் சிறந்த படமாக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட படம் அது. அப்படத்தில் நடித்ததற்காக, அவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிவக்குமாரின் பெயர் கடைசி வரையிலும் தேசியவிருதுக்கு (சிறந்த நடிகர்) முன்னிலையில் இருந்திருக்கிறது.

காலை 7. 00 மணிக்குக் கூட சிறந்த படம்: மறுபக்கம், சிறந்த நடிகர்: சிவக்குமார்.

7.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் சமயத்தில் சிறந்த படம்: மறுபக்கம், சிறந்த நடிகர்: ........................... - இன்னொருவரின் பெயர் இருக்கிறது.

அது வேறு யாருமில்லை ‘அமிதாபச்சன்’.

“... ச்சே.. நம்ம எதுக்குமே ஆசைப் பட்டதில்லையே... இதுக்குப் போயி அல்பத்தனமா ஆசைப் பட்டுட்டோமே... இனிமே இந்தமாதிரி எதுக்கும் ஆசைப் படக்கூடாது என்ற முடிவிற்கு வந்தேன்.” என்றார்.

விருதுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலும், அசிங்கங்களும் திரைபோட்டு மறைக்கப்பாட்டலும் என்றேனும் ஒருநாளில் வெளிவந்துதானே ஆக வேண்டும்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை “தனுஷ்” பெற்றார் என்று நாம் வேண்டுமெனில் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதே வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருதை “அப்புக்குட்டி” அழகர்சாமி குதிரை என்ற படத்தில் நடித்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆடுகளத்தில் ‘தனுஷ்’ முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கிறார் எனில், அழகர்சாமி குதிரையில் ‘அப்புக்குட்டி’ கதாநாயகன்.

இந்த விருது அறிவிப்பின் பின்னாலுள்ள உடல் அரசியல் மிக நுட்பமாக அவதானிக்க வேண்டிய ஒன்று. இங்குதான் அங்கீகரிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அல்லது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். நடிகராக சிவக்குமாருக்கு நிகழ்ந்ததும் அதுதான். தேசிய விருதுக் குழுவில் நடைபெறும் கூத்துக்களை நண்பர் பாரதி மணி (பல நேரங்களில் பல மனிதர்கள்) தன்னுடைய கட்டுரை ஒன்றில் எள்ளல் தன்மையில் பதிவு செய்திருப்பார். ‘பாரத ரத்னா’ விருது சிவாஜிக்குக் கிடைக்க வேண்டியது. எம்.ஜி.ஆருக்கு எப்படிக் கிடைத்தது என்பதின் ஆதாரமற்ற தகவலை நண்பர் தமிழ்மகன் தன்னுடைய கட்டுரை ஒன்றில் பகிர்ந்திருப்பார். நடிகர் முத்துராமனுக்குக் கிடைக்க வேண்டிய விருதினை – நடிகர் சிவாஜி தட்டிச் செல்ல எப்படிக் காய் நகர்த்தினார் என்பதை இயக்குனர் ஜெயபாரதி சமீபத்தில் வெளியிட்ட நூலொன்றில் குறிப்பிட்டுச் செல்கிறார்.

இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுவதும், காலம் கடந்து அங்கீகரிக்கப்படுவதும் ஏறக்குறைய ஒன்றுதான். பாடகி எஸ். ஜானகிக்கான பத்ம விருதினை அறிவித்தபோது, எஸ். ஜானகி ஏற்காமல் மறுத்தது மிக முக்கிய புத்திசாலித்தனமான செயல்பாடு. சமீபத்தில் ஓவியர் சீனிவாசனை சந்தித்தபோது சென்னை கவின்கலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர் தனது ஓவியப் படைப்பிற்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் என்ற விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் அவருக்கான வாழ்த்து தட்டியொன்றை வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த விருது இலக்கியத்திற்கான சாகித்ய அகாதமி விருதுக்கு நிகரான விருது. ஒரு நாளிதழாவது இதைப் பற்றி எழுதினார்களா தெரியவில்லை. சிவக்குமார் அடிப்படையில் ஓவியர் என்பதால் இந்த விஷயம் வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.

ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' வெளியானபோது போட்டோகிராஃபி மிக மோசம் என்று போகிறபோக்கில் ஆனந்த விகடன் இதழில் விமர்சனம் எழுதியிருந்தார்கள் என்பதை ஒளிப்பதிவாளர் நல்லுசாமி தெரியப்படுத்தினார். தேசிய விருதுக்கு இந்தப்படம் அனுப்பப் பட்டுள்ளது. விருதுக் குழுவில் இருந்தவருக்கு, அவள் அப்படித்தான் திரைப்படத்தைத் தவிர மற்ற எல்லா படத்தையும் போட்டுக் காண்பித்து இருக்கிறார்கள். எதேர்ச்சையாக இந்தப்படத்தைப் பத்தோடு பதின்னொன்றாக திரையிட்டபோது அந்த முக்கியமான மனிதர் வந்திருக்கிறார். "அடடே... இவ்வளோ நல்ல படமா இருக்குதே? இத எனக்கு ஏன் போட்டுக் காமிக்கல? கேமரா நல்லா வந்திருக்குதே... இதுக்கு அவர்ட் கொடுத்தா நல்லா இருக்குமே?" என்றாராம்.

ஏற்கனவே ஒருவரை சிறந்த போட்டோகிராஃபிக்காகத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளதை அவரிடம் தெரிவித்தார்களாம். "அப்படியெனில்... பிளாக் & வொய்ட் பிரிவுல - அந்த போட்டோகிராஃபருக்கு விருது கொடுத்துடலாம்னு..." சொல்லி, அந்த வருடத்திலிருந்து இரண்டு பிரிவுகளில் போட்டோகிராஃபிக்கான தேசிய விருது அறிவிக்கப்படுகிறதாம். ரொம்ப நாள் கழித்து இந்த விஷயத்தை யாரோ ஜூரிக் குழுவில் இருந்தவர் பின்னாளில் நல்லுசாமியிடம் தெரிவித்திருக்கிறார்.

"இன்னிக்கிதான் நேஷனல் அவர்ட் உண்மையிலேயே வாங்கினா போல இருக்குது..." என்றாராம் நல்லுசாமி.

பாருங்க, நம்மளோட மீடியா "பூர் போட்டோகிராஃபி" என்று எழுதிய படத்திற்கு, போடோகிராஃபிக்கான தேசிய விருது அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தான் ஒவ்வொருவருடமும் விகடன் மேடையில் சமூகத்தில் சிறந்த மாணிக்கங்களைத் தேர்ந்தெடுத்து "விகடன் விருது" கொடுக்கிறார்கள். இவர்கள் மாணி(க்கத்தில்)யில் எட்டி உதைக்க...

ஒருமுறை மிரணால் சென் சென்னை வந்திருக்கிறார். அவர் தங்கிய ஓட்டலில் இருந்த பணியாளரிடம் (வெயிட்டர்) கேட்டிருக்கிறார்: "சும்மா இருக்க வெறுப்பா இருக்குது... பக்கத்துல எதாச்சும் தியேட்டர்ல நல்ல படம் ஓடுதா?"

மிருணாள் சென்னைத் தெரிந்து கொண்டு சொன்னாரா? தெரியாமல் சொன்னாரா? என்று தெரியவில்லை "அவள் அப்படித்தான்னு ஒரு படம் வந்திருக்கு... ரொம்ப நல்லா இருக்கு..." என்றாராம்.

தியேட்டரில் கூட்டமே இல்லையாம். நம்முடைய பத்திரிகைகள் அப்படி விமர்சனம் எழுதி இருப்பார்கள் போல. மிருணாள் சென் முழுப்படத்தையும் பார்த்திருக்கிறார். மறுநாள் காலையில் பிரஸ்ஸை அழைத்திருக்கிறார். என்னவோ? ஏதோ? என்று இவர்களும் எல்லோரும் ஓடியிருக்கிறார்கள்.

"அவள் அப்படித்தான் - தமிழில் வந்துள்ள முக்கியமான படம். சத்யா ஜித்ரேயும், நானும் முயற்சி செய்வதை, இங்கும் முயற்சி செய்து பார்க்க ஆட்கள் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது." என்றாராம். நம்முடைய ஜனரஞ்சக ஊடக நண்பர்களுக்கு மெல்லுவதற்கு அவள் கிடைத்துவிட்டது. மிருணாள் சொல்லிவிட்டார் என்று "அவள் அப்படித்தான்" படக்குழுவினரைத் தேடி ஓடியிருக்கிறார்கள். ருத்ரையாவைத் துரத்து, நல்லுசாமியைத் துரத்து என்று ஓட்டப்பந்தையம் விளையாடி, முழுநீளப் பேட்டியை பிரசுரித்தார்களாம்.

அதன் பிறகு அவள் அப்படித்தான் நன்றாக ஓடி கல்லா கட்டியது வரலாறு. "அவள் அப்படித்தான்" படத்திற்கு நடந்தது, நல்லுசாமிக்கு நடந்தது எல்லோருக்கும் நடந்துவிடுமா என்ன? இங்கு எல்லாமே அரசியலாகவும் அழிச்சாட்டியங்களாகவும் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை, நடிகர் சிவக்குமார் கேணிக்கு வருகிறார் என்றதும் சாகித்ய அகாடமி நிகழ்வில் பகிர்ந்துகொண்ட போது வெளிப்படுத்திய அவரது ஆதங்கம் - பசுமரத்தாணி போல ஞாபகம் வருகிறது.

தங்கமீன்கள் படத்திற்கான ‘விஜய் (டிவி) அவார்ட்’ பெற்றுக்கொண்டு ‘இயக்குனர் ராம்’ ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். “ஒரு படம் சிறந்த படத்திற்கான விருதினைப் பெறுகிறது எனில், அதுலுள்ள எல்லாமே சிறப்பாகத் தானே இருக்க வேண்டும். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு, இசையமைப்பு என எல்லாமே சிறப்பாகத் தானே இருக்க வேண்டும். அப்படியெனில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்படும் படத்தில் வேலை செய்த மற்றவர்களுக்கு விருதுகள் ஏன் செல்வதில்லை. மற்ற பிரிவுகளின் விருதுகளானது வேறு படத்தில் வேலை செய்தவர்களுக்குக் கிடைக்கிறது. இதனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.” என்பதுபோல ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். நாம் என்ன செய்கிறோம்...? இந்தக் கேள்வியை எழுப்பிய ராமை வாட்ஸ் ஆப்பிலும், சமூக இணைய தளங்களிலும் துரத்து துரத்து என துரத்துகிறோம். “ஆமா... புத்திசாலி பெருசா கேக்க வந்துட்டாரு...” என்று நக்கல் அடிக்கிறோம். ‘தங்க மீன்கள்’ பற்றிய மாற்றுக் கருத்து நமக்கு இருக்கலாம். அந்தப் படைத்தைக் குப்பை என்று கூட விமர்சனம் செய்யலாம். ஆனால், ராம் எழுப்பிய கேள்வியை நாம் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். ராமிற்கு நாம் காது கொடுத்திருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிந்தே இந்த விஷயத்தை நாம் மழுங்கடித்து விட்டோம். தன்னுடைய பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வளர்ந்துவரும் எல்லா கலைஞர்களுக்கும், மக்களால் கவனிக்கப்படும் எல்லா கலைஞர்களுக்கும் விஜய் தொலைக்காட்சி ஏதேனும் ஒரு பிரிவில் விருது வழங்குகிறது என்பது கண்கூடான விஷயம்.

நடிகர் சிவக்குமார் நடிகர் மட்டும் இல்லையே. அடிப்படையில் ஓவியர். யோகாசனப் பிரியர், மேடை நாடக நடிகர். சினிமா நட்சத்திரம். பேச்சாளர், பிரபல ஹீரோக்களின் தந்தை. ‘அகரம்’ அறக்கட்டளையின் ஆலோசகர். கடந்த 60 ஆண்டுகால தமிழக நிகழ்வுகளை தெரிந்து வைத்திருப்பவர். நாளை நடக்கும் கேணி இலக்கிய சந்திப்பில் இவர் எதைப் பற்றி பேசக் கூடும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

எதைப் பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யமாகப் பேசக் கூடியவர். கேணி நிகழ்விற்கு அவசியம் வாருங்கள். சிவக்குமாருடன் உரையாடலாம். இளமையைத் தக்கவைக்கத் தெரிந்த மார்கண்டேயன் என்பதும், மனிதத்துடன் பழக்கக்கூடிய, அடுத்தவர்களை மதிக்கத்தெரிந்த அற்புதப் பிறவி என்றும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லையே...!

கேணி சந்திப்பு – ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று பத்திர்கையாளர் ஞாநி-யின் வீட்டில் ஏற்பாடாகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் யார் வேண்டுமேனிலும் வரலாம். அனுமதி இலவசம்.

முகவரி:

39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78.

அன்புடன் அழைப்பது - ஞாநி & பாஸ்கர் சக்தி.

Monday, April 6, 2015

நிசப்தம் டிரஸ்ட்


நம்மால் செய்ய முடியாத ஒன்றை - நாம் நேசிக்கும் ஒருவர் செய்யும் பொழுது அல்லது அவர்களைச் செய்ய வைத்துப் பார்த்து சந்தோஷப் படுவதை ‘விகாராஸ் பிளஷர் (vigorous pleasure)’ என்பார்கள். அந்த வகையில் வா. மணிகண்டனைப் பார்த்து நிறையவே சந்தோஷப்படலாம். அதற்கான காரணங்களும் நிறையவே இருக்கிறது. நிசப்தம் வாசகர்களாக வா. மணிகண்டனுடன் கைகோர்க்கும் தோழர்களும் இந்த ‘விகாராஸ் பிளஷர்’-ஐத் தான் அடைகிறார்களோ...! அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

எழுத்தாளர் அம்பை 25 வருடங்களுக்கும் மேலாக ‘ஸ்பாரோ’ என்ற தன்னார்வ அமைப்பை நண்பர்களின் மூலம் செய்து கொண்டிருக்கிறார். இந்திய அளவில் பெண்கள் சார்ந்த முக்கியமான – அரசியல் மற்றும் இதர சார்புகளற்ற ஆவணக் காப்பகம் இது. இங்கு சினிமாவில் குத்துச் சண்டை போடுபவர்களுக்கும், தகுடுத் தனம் செய்பவர்களுக்கும் தேசிய விருதுகளும் சமூக கவனங்களும் கிடைக்கிறது. ஆனால் உண்மையான சமூக அக்கறையுடன் இயங்கும் செயற்படுபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அம்பையிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன்:

“நீங்க தமிழ்ல முக்கியமான எழுத்தாளர் உங்களோட ‘ஸ்பாரோ’ அமைப்பிற்குத் தமிழகத்தில் இருந்து போதிய கவனம் கிடைத்ததா? இப்போது கிடைக்கிறதா?”

“அப்படியெல்லாம் குறிப்பிட்டு எந்த உதவியும் பெருசா தமிழர்களிடம் இருந்து கெடைக்கறது இல்ல...” என்றார்.

பெண்ணியம் பேசக்கூடியவர்கள் கூட கவனத்துடன் ‘ஸ்பாரோ’ அமைப்பை அனுகுகிறார்களா என்று தெரியவில்லை. அம்பை இயங்கத் துவங்கிய காலத்தில் இணையம் இல்லை. அனால் வா. மணிகண்டனுக்கு இணைய வசதி ஒரு வரப்பிரசாதம். மீடியாவின் உதவியோ, பத்திரிகையின் உதவியோ இல்லாமலேயே நங்கூரம் வீசி நிற்கிறார் மணி. ‘நிசப்தம் டிரஸ்ட்’ ஓசையின்றி வளர்ந்து வருகிறது.

முதன் முறையாக வா. மணிகண்டனை உயிர்மை பதிப்பகத்தின் அரங்கில் தான் சந்தித்தேன். எந்த வருடம் என்று சரியாக ஞாபகம் இல்லை. கத்துக்குட்டியாக நான் சுற்றிக் கொண்டிருந்த காலம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் ஏற்பாடாகியிருந்த ‘சென்னை புத்தகக் கண்காட்சி’யின் ஒருநாளில் தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இன்றைய தேதியிலாவது விரல்விட்டு எண்ணக் கூடிய எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் நல்லது-கெட்டதே தெரியாது. யாரிடம் எப்படிப் பேசுவது என்று கூட தெரியாது. பேசிய கொஞ்ச நேரத்தில் “நீங்க யாரு? நீங்க என்ன செய்யுறீங்க? நீங்க ரைட்டரா?” என்று நேர்முகம் செய்வது போலக் கேள்விகள் தெறிக்கும்.

உயிர்மையில் அந்த வருடம் வெளியாகியிருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதேர்சையாகக் ‘கவிதைத் தொகுப்புகள்’ அடுக்கப்பட்டிருந்த ரேக்கில் - சில புத்தகங்களின் அட்டை வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னருகில் யாரோ ஓர் அன்னிய மனிதர் (மணி) நீண்ட நேரமாக நின்றுகொண்டிருப்பது போலப் பட்டது. எப்படிப் பேசத் துவங்கினேன்? என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

“ஆமா... ரொம்ப நேரமா ஒரே எடத்துல நின்னுட்டு இருக்கிங்களே? எதாச்சும் ஹெல்ப் வேணுங்களா?” என்று தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

“இல்ல... இல்ல... இந்தக் கவிதைத் தொகுப்பு என்னோடது... பொதுவாகவே கவிதையைத் தேடி யாரெல்லாம் வராங்கன்னு பார்க்கத் தான் இங்க இருக்குறேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஒரு ரெண்டுமூனு நாளுக்கு இந்த மாதிரி சும்மா நின்னு வாச் பண்ணுவேன்...” என்றார் மணி.

“அடக் கடவுளே... அப்படியா சங்கதி... உங்களோட கவிதைத் தொகுப்பை அவசியம் நான் எடுத்துக்குறேன்...” என்றேன். சொல்லியது போலவே வாங்கிக்கொண்டும் சென்றேன். ஒரு சின்ன உரையாடல் எனக்கும் மணிக்கும் அன்று நிகழ்ந்தது. அதன்பிறகு நீண்ட நாட்கள் என்னுடைய அலமாரியில் அந்தக் கவிதைப் புத்தகம் வாசிக்கப்படாமலே இருந்தது. கிஃப்டாகக் கிடைத்த இன்னும் சில கவிதைகளும் வாசிக்கப் படாமலேயே அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்தது. சென்ற ஆண்டில் தான் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போய் பொன்னேரி கிளை நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் கொடுத்த புத்தகங்கள் ஒன்று கூட நூலகத்தில் இல்லை. என் கண்ணெதிரே ஒரு புதுக் கவிஞர் எல்லா கவிதைகளையும் நூலகரிடம் கேட்டுவாங்கி லவட்டிக்கொண்டு சென்றார். இன்னும் கொடுத்த பாடில்லை.

பிறகு மணியும் நானும் அவசியம் எனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். கண்ணுக்குத் தெரிந்தார்போல மணியின் வளர்ச்சியைப் பார்ப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது.

கடந்த 2013 புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் நின்றிருந்த போது - நாகேஸ்வரன் என்ற சீனியர் சிட்டிசன் புத்தகத்தைத் தேடிக்கொண்டு வந்திருந்தார். (கவனிக்க ஒரேயொரு புத்தகத்தை மட்டும் தேடிக்கொண்டு வந்திருந்தார்.) ஏதாவது கிளாசிக் எழுத்தாளரின் புத்தகங்களைத் தேடிக்கொண்டுதான் வந்திருப்பார் என்று தான் நினைத்திருந்தேன். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு தான் கண்காட்சிக்கு வந்திருந்தார்.

“வா. மணிகண்டன் புத்தகம் இருக்கா?” என்று கேட்டார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “யாரோட புத்தகம்?” என்று மறுபடியும் கேட்டேன்.

“வா. மணிகண்டன் புத்தகம். லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்” என்றார் அழுத்தந் திருத்தமாக. கடந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் காலச்சுவடு அரங்கிற்கு அருகிலேயே “டிஸ்கவரி புக் பேலஸ்” அரங்கும் வந்துவிடுவதால் பல விஷயங்களிலும் வசதியாகவே இருக்கிறது. நண்பர் நாகேஸ்வரனை அழைத்துக்கொண்டு டிஸ்கவரிக்குச் சென்றதாக ஞாபகம். அவரிடம் சொன்னேன்:

“நேத்தைக்கு பூரா மணி இங்க தான் சுத்திட்டு இருந்தான். ரொம்ப சிரமப்பட்டு வேற வந்திருக்கிங்க. நான் வேணும்னா ஃபோன் பண்ணி அவன இங்க வரச் சொல்லட்டுமா? கொஞ்ச நேரம் பேசிட்டுப் போங்களேன்” என்றேன் அக்கறையுடன்.

“நீங்க நிசப்தம் வாசிக்கிறது இல்லையா? அவர் பொங்களூருக்கு ரிட்டர்ன் ஆயிட்டதா நேத்திக்கே பிளாக் போட்டுட்டாரே...” என்று பல்ப் கொடுத்தார் அந்த நண்பர்.

“ஓ... சரி சரி... மணிக்கு கால் பண்ணா உங்களைப் பத்தி அவசியம் சொல்றேன்...” என்றேன். உண்மையில் அன்றைக்கு வீடு திரும்பியதும் மணியை செல்பேசியில் அழைத்து சந்தித்த நண்பரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டேன். கல்லூரி மாணவர்களிலிருந்து, சீனியர் சிட்டிசன் வரை எல்லா அளவிலும் மணிக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இணையத்தைப் பொறுத்த வரை மணியின் பலம். டிஸ்கவரி புக் பேலஸில் – ஏப்ரல் 05, காலை ஏற்பாடாகியிருந்த – வா. மணிகண்டனுடனான வாசக சந்திப்பு அதனை உறுதி செய்வது போல இருந்தது. நாகேஸ்வரன் உட்பட மணியின் தீவிர வாசகர்கள் பலரும் வந்திருந்தனர்.

அருமைத் தோழர் கவிதா பாரதியின் (எழுத்தாளர், நடிகர், இயக்குனர்) உரையினைத் தவற விட்டுவிடுவேனோ என்று பயந்துகொண்டு ஓடினேன். நல்ல வேளை, சரியாக கவிதா பாரதி பேசத் துவங்கும் போது அரங்கிற்குச் சென்றிருந்தேன். கவிதாவின் பேச்சு எடுப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. மணியின் எழுத்துக்களைத் தம்பிச்சோழன் (நடிகர், எழுத்தாளர்) விமர்சன கோணத்தில் பேசி இருப்பார் போல. வீடியோ வந்ததும் தான் பார்க்க வேண்டும். பேச்சில் ஹாஸ்யத்தை நிரப்பி ‘ஹை ஸ்கோர்’ செய்தது நாகேஸ்வரன் தான். மனிதர் தோனி போல ஹெலிகாப்டர் ஷார்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தார். இவர் தெரிவித்த ‘இலங்கைத் தமிழர் போராட்டம், ஆங்கிலத்தின் அவசியம்’ போன்ற கருத்துக்கள் – நம்முடைய சகாக்களின் வாயில் மெல்லுவதற்கு அவலினைப் போடுவதுபோல இருந்தது. (வீடியோ வந்ததும் பாருங்கள்). 


உயிர்மையில் சந்தித்த - தீவிர இலக்கிய சூழலில் இயங்கிய மணியிலிருந்து, நிசப்தம்.காம் மணியாக இவர் எப்படி நகர்ந்தார் என்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. சென்னை சங்கமத்தில் 100 கவிஞர்கள் கவிதை வாசிப்பில் மணிகண்டனும் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதிருந்த திமுக-வின் அரசியல் நிலைப்பாட்டினைக் காரணம் காட்டி – “கவிதை வாசிப்பைப் புறக்கணிக்கிறேன்” என்று மணி பகிர்ந்திருந்தார். அதனைச் சுட்டிக்காட்டி ஞாநி தன்னுடைய பத்தியில் எழுதி அந்த வார பூச்செண்டை மணிக்குக் கொடுத்தார். பின்னர் காலச்சுவடு கண்ணனும் கூட மணியின் இந்த எதிர்வினையைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். ஆங்கில நாளிதழ் கூட – டைம்ஸ் ஆப் இந்தியா என்று நினைக்கிறன் – மணியின் புறக்கணிப்பை எழுதியிருந்ததாக ஞாபகம். தண்டவாளம் போல அதே சமயத்தில் “ஜெ.மோ, எஸ்.ரா” போன்ற பலருக்கும் காட்டமாக எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தார் மணி. இதற்காகவெல்லாம் மணி கவனிக்கப்பட்டாரா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. 

எது எப்படியோ!? கால இடைவெளியில் இணையத்தில் ஒரு சிலரின் மீது “லைம் லைட்” விழுவது வாடிக்கை தான். “கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், லக்கி லுக், அதிஷா, நர்சிம்” – இவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 5000 ஹிட்ஸ் வந்திருந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை. இப்போதைய “லைம் லைட்”டின் கீற்று வா.மணிகண்டன் மீது விழுகிறது. மணிக்கென தனியான வாசக நண்பர்களின் வட்டம் உருவாகி இருக்கிறது. நாளுக்கு நாள் நிசப்தம் வாசகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது.

மேலே பட்டியலிட்ட நன்கறிந்த நண்பர்கள் இணையத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார்களோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. எழுதுவதின் கூடவே “நிசப்தம் டிரஸ்டின்” மூலம் மணி செய்துகொண்டிருக்கும் செயல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. பல்வேறு தளத்திலுள்ளவர்களுக்கும் தனது வாசக நண்பர்களின் துணைகொண்டு உதவிக்கொண்டு இருக்கிறார். எல்லாவற்றையும் பளிங்கு போலத் தெளிவாக நிர்வகித்துக் கொண்டு வருகிறார். டிரஸ்டின் பொருளாதார நகர்வுகள் ஒவ்வொன்றையும், உள்ளது உள்ள படியே எல்லோருக்கும் தெரியப்படுத்தி விடுகிறார். இதில் மணியைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லா டிரஸ்டுகளுமே இதனைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் செய்வதில்லை.

கடந்த பதினைந்து வாரங்களாக – வார விடுமுறைகளில் - மணி வீடே தங்குவதில்லையாம். டிரஸ்டின் மூலம் உதவி கேட்பவர்களை நேரில் சென்று பார்த்து, உண்மை நிலவரம் தெரிந்த பின்னர் தான் உதவி செய்கிறாராம். இதற்காக மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்கிறாராம். இந்த மெனக்கெடலுக்காகத் தான் மணியைப் பாராட்டத் தோன்றுகிறது. நன்கொடையாகக் கிடைக்கும் பண விஷயத்தில் ட்ரான்ஸ்பரன்ட்டாக இருப்பதாலும் - ப்ராசஸ் & ரிசல்ட் ஒரியென்ட்டேடாக இருப்பதாலும் மணியை நம்பி பாழுங் கிணற்றில் கூட விழலாம். “நான் வடித்தெடுத்த கஞ்சப் பயல்” என்று வேறு மணிகண்டன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விடுகிறாராம். டீ-டோட்டலராக இருக்கும் ஒருவர் கஞ்சப் பயலாகவும், ஒரு டிரஸ்டின் முக்கிய நிர்வாகியாகவும் இருப்பது சாலச் சிறந்தது. ஆராய்ந்து அறியாமல் எது ஒன்றிலும் கால் வைக்காத இவரது குணமும் நம்பிக்கை அளிக்கும்படி இருக்கிறது.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் தொகுப்பில் பல கதைகளும் செயற்கையான திருப்பங்களுடன் முடிந்திருக்கும். மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்திய தொகுப்பு. படித்து முடித்ததும் யாவரும் பப்ளிஷர்களில் ஒருவரான ‘ஜீவ கரிகால’னிடம் – “ஏன்டா, இந்த மாதிரி கதைய தொகுத்து புத்தகமா போடனுமா? மணியோட பேர கெடுக்கனும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கிங்களா நீயும் வேல்கண்ணனும்... ரொம்ப சுமாரான கதைகளா தான் தேர்ந்தெடுத்து இருக்கிங்க...” என்றேன்.

“அட... நீங்க வேற அந்த புத்தகம் 1000 பிரதிகளுக்கு மேல வித்துடுச்சி...” என்றான் ஜீவ கரிகாலன்.

“அப்படியா...” என்று வாயைப் பிளந்தேன். எனினும் இங்கொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று வரையிலும் இந்தத் தொகுப்பு விற்றுத் தீர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. இத்தொகுப்பின் முதல் பிரதியை 5000 ரூபாய்க்கு நிசப்தம் வாசகர் ஏலத்தில் எடுத்தார். இது போன்ற செயல்களாலும் மணி அதிகம் கவனம் பெற்றார். புத்தகம் விற்று கிடைக்கும் பணத்தைக் கூட, ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்து விடுகிறார் மணி. நிசப்தம் வாசகர்களுக்காக வா. மணிகண்டன் எழுதுவது சுற்றறிக்கைக்கு ஒப்பானது. மணி எழுதக்கூடிய எல்லாவற்றையும் அவர்கள் சிலாகிப்பார்கள். தேர்ந்தெடுத்த பதிவுகள் அச்சேறி புத்தகமாக வெளியிடும் பொழுது அதன் தன்மையே வேறு. பல்வேறு தளத்திலிருந்து விமர்சனக் குரல்கள் எழும். இணையக் காழ்ப்புகளினால் எழும் கூச்சல்களிலிருந்து மாறுபட்ட குரல்கள் இவை. “லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்” – நிறைய பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கலாம். எனினும் அதில் விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல கதைகள் கூட இல்லை. 


“மசால் தோசை 38 ரூபாய்” பல விதங்களிலும் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. சுவாரஸ்யமான தொகுப்பும் கூட. ஒருவேளை அதிக ஹிட்ஸ் வந்த கட்டுரைகளிலிருந்து ஆகச் சிறந்த கட்டுரைகளைக் கூட இவர்கள் தொகுத்திருக்கலாம். இந்தத் தொகுப்பைப் பாராட்டிப் பேச நிறையவே இருக்கிறது. (ஒற்றுப் பிழைகளையும், இன்ன பிற அச்சுக் கோர்ப்புப் பிழைகளையும் தவிர்த்து). பெங்களூர் நகரத்தைக் களமாகக் கொண்டு வா. மணிகண்டன் நாவல் எழுதும் முயற்சியில் இருக்கிறாராம். (பெங்களூர் சிறுகதைகள் என்று காவ்யா பதிப்பகம் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் புத்தகம் தான் ஞாபகம் வருகிறது.) மணியின் இந்நாவல் சிறப்பாக வரும் என்றே எதிர்பார்கிறேன். “மசால் தோசை 38 ரூபாய்” அந்த நம்பிக்கையைக் கொடுக்கிறது.

ஒருமுறை எழுத்தாளர் கே.என். செந்தில் ‘சென்னை புத்தகக் கண்காட்சி’யைப் பற்றிய எண்ணங்களைக் காலச்சுவடு இதழில் பதிவு செய்த போது – மணியின் இணையச் செயல்பாடுகளைப் பதிவு செய்த போது, “ஒருசிலர் தான் புகழ் வெளிச்சத்தின் பின்னால் செல்கிறார்கள். வா. மணிகண்டனுமா இப்படி இருக்க வேண்டும்? மணிகண்டன் நன்றாக எழுதக் கூடியவராயிற்றே...” என்பது போலச் சொல்லி இருந்தார். மணிகண்டன் டெம்ப்லேட் ரைட்டிங்கில் மாட்டிக்கிட்டாரோ என்ற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. அந்த எண்ணம் எனக்கும் கூட இருக்கிறது.

“நீ எப்படி டெய்லி எழுதுற?” என்று மணியிடமே கூட நேரில் சந்தித்த போது கேட்டதுண்டு. இது போன்று ஒவ்வொருவரும் கேட்கக் கூடும். மணிகண்டனின் ஊரைச் சேர்ந்த சிறுகதையாளர் ‘கே.என். செந்தில்’ போல ஆதங்கப் படக் கூடும். ஒன்றை மட்டும் கவனியுங்கள். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நிசப்தம் டிரஸ்டிற்கு, இந்தியாவிலிருந்து மட்டும் (இணைய வங்கிப் பரிவர்தனையின் மூலம்) 5 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறதாம். இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளிலிருந்தும் நேரடியாகப் பணம் செலுத்தும் வசதியைப் பெற்று விடுவார்களாம். நன்கொடை இன்னும் கூட அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மணிக்கான சவாலும், உழைப்பும் அதிகரிக்கக் கூடும் என்றே நினைக்கிறன்.

உரையாடலின் போது மணியிடம் கேட்கப்பட்ட “பிரபல எழுத்தாளர்கள் போல நீங்கள் குருபீடத்தை நோக்கிப் போகிறீர்களா? அரசியலுக்கு வருவீர்களா? உங்களோட அடுத்த பிளான் என்ன?” போன்ற கேள்விகள் எல்லாம் மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்தின. “சும்மா இருக்கவங்கள சொறிஞ்சி விடுறதுல நம்ம ஆளுங்கள தட்டிக்க யாரு இருக்கா?” இறுதியாக, “ஆமா... எவ்வளோ பேரு எழுதுறாங்க... ஆனா, என்னத்த காண்கிறார்கள்... எழுத்தின் மூலம் கிடைக்கும் வாசகத் தோழர்கள் மூலம் ஒருவனால் எளிய மனிதர்களுக்கு உதவ முடிகிறது எனில் இப்படியே எழுதிவிட்டுத் தான் போகட்டுமே? என்ன குறைந்துவிடப் போகிறது? அந்த ஒருவன் மணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே...” என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த எண்ணமே மணியை நினைத்து சந்தோஷப் படப் போதுமானதாகவும் இருக்கிறது. அந்த சந்தோசம் கொடுக்கும் மன நிறைவின் நிசப்தத்தில் நாமும் கொஞ்சம் உறையலாமே.

இப்படியே எழுதி, இப்படியே பயணித்து, இப்படியே சந்தோஷித்து என்றென்றைக்கும் மணி தனது எழுத்துப் பணியின் மூலம் ஜீவித்திருக்கட்டும்.

ஆமென்.