Tuesday, August 21, 2012

அகில இந்திய வானொலி

செல்ஃபோனுக்கு சிக்னல் கிடைக்காமல் முக்கியமான நேரங்களில் தவிக்க வேண்டி இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் பாதியில் சிக்னல் ஜேம்-ஆகி பேச்சு தடைபடுகிறது. செல்பேசியில் வந்த நண்பர்களை மீண்டும் அழைக்கும்போது "எங்கு விட்டோம்? எதில் விட்டோம்?" -என்று யோசிப்பதற்குள் பேச வந்த விஷயம் மறந்து பிரக்ஞையானது அந்தரத்தில் தொங்குகிறது. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வதென்றும் புரிவதில்லை!. மெசேஜ் அனுப்பலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஐந்து குறுந்தகவலுக்கு மேல் (குறிப்பிட்ட காலம் வரை) அனுப்ப இயலாது என அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று, All India Radio வழங்கும் "மாத்தியோசி" நிகழ்ச்சியில் "நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" என்பது பற்றி ஐந்து நிமிடங்கள் வருமாறு, உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அதற்கு முந்தைய நாளே கவிஞர் ஆசைத்தம்பி சொல்லியிருந்தார்.

என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, "நேராக ஸ்டுடியோ வந்துட்றேன் ஆசை. ஐந்து நிமிடம் என்ன? அரைமணி நேரம் வேண்டுமானாலும் பேசத் தயார். அதுதான் நல்லதும் கூட. பாருங்கள்... இந்த ஐந்து நிமிட சம்பாஷணைக்குள் இரண்டுமுறை பேச்சு அறுபட்டுவிட்டது" என்றேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. சுதந்திர தினத்துக்கு லீவ் என்பதால் நாளைக்கு யாரும் ஆபீஸ் வரமாட்டாங்க. ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்க முடியுமா?" என்றார். அதன் பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை, தனது நண்பர் குழாமுடன் ஜெயா கிராமத்திற்கு வந்திருந்தாள். விடுமுறை தினம் என்பதால் ஆந்திர எல்லைக்குச் சென்றுவர கிளம்பியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மழை பெய்ய வேண்டிய காலத்தில் தகிக்கும் வெயிலை இதற்கு முன் கண்டதில்லை. வந்தவர்களை வழியனுப்பிவிட்டு, பத்தரை மணிவாக்கில் தகிப்பின் அசதியைப் போக்க குட்டித் தூக்கம் போடச் சென்றேன். சரியாக ஒரு மணிக்கு செல்பேசி அதிர்ந்தது. அவர்களே தான்....

"வணக்கம். நான் கிருஷ்ணபிரபு. மைன்ட் ஃபிரஷ் - என்ற கம்பெனியின் relationship Manager ஆக பதவி வகிக்கிறேன்." என்று ஆரம்பிப்பதற்குள் "உங்களின் பேச்சு உடைகிறது" என்றார் எதிர் முனையில் தொடர்பு கொண்ட நண்பர். முத்திரை மோதிரத்தை வைத்துக்கொண்டு சீதையைத் தேடியலைந்த அனுமன் போல - மொபைல் ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு சிக்னல் சரியுமிடம் தேடி அலைய நேர்ந்தது. மூன்று அடுக்குகள் கொண்ட கான்கிரீட் கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் சென்று ஓர் ஓரத்தில் ஒதுங்கினேன். வெயில் மண்டையைப் பிளந்தது.
"நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" - என்றவுடன் கல்யாண்ஜியின் கவிதையொன்று தான் நினைவிற்கு வருகிறது...

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி முளைத்தன?
எதற்கு முளைத்தன?
"சிறகுகள்"

- என்று ஆரம்பித்துப் பேசினேன். காய், கனிகளை கல்லில் உடைத்து, தரையில் அடித்து சாப்பிட்ட காலம் மறைந்து, கத்தியால் அறுத்து சாப்பிட ஆரம்பித்ததே தொழில் நுட்பத்தின் வளர்ச்சி தான். ஒரு முனையில் இணையத்தின் மூலம் புரட்சி வெடிக்கிறது, அடுத்த முனையில் வெகுளிப் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஆகவே அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித வாழ்வின் இன்றியமையாத அம்சம் என்ற சாதக, பாதக புரிதலுடனே அது சார்ந்த மாற்றுக் கருத்தையும் அணுக வேண்டியிருக்கிறது.

ரயில் பயணமா? பேருந்துப் பயணமா? விமானப் பயணமா? - எதுவாக இருப்பினும் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே முன்பதிவு செய்துவிடலாம். வார விடுமுறையில் சினிமா பார்க்க விரும்புகிறீர்களா அதையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்துவிடலாம். பணப் பரிமாற்றங்கள் கூட இணையத்தின் மூலமே நடந்துவிடுகிறது. எதற்கும் சக மனிதர்களின் பிரயாசை தேவையில்லை. கடந்த இருபது ஆண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களை ஓர் இயந்திர கதியில் தான் நகர்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதன் சதவிகிதம் அதிகமோ அதிகம்.

ஏதேனும் ஓர் அலுவலகத்தில் நுழைய நேர்ந்தால், சுற்றிலும் கணினிகள். திரும்பும் இடமெல்லாம் மானிட்டர்கள். வேலை முடிந்து வெளியில் வந்தால் செல்ஃபோன். அதில் 'Texting, Radio Tuning, Listening songs, watching videos (Porn - என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை)' என செயல்படத் துவங்குகிறோம். பணத்தேவை எனில் ATM செல்கிறோம். திரையைத் தொட்டுத்தடவி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி என சட்டகத்தின் ஒளிரும் திரையில் (Monitor Screen) தான் நம்முடைய காலம் கழிகிறது. யாரும் பார்க்கவில்லை என்றாலும் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் நம்மவர்களின் விசேஷம் குணம். பெரியவர்கள் போலவே குழந்தைகளும் 'கம்பியூட்டர் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்ஸ்' என டிஜிட்டல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவது இன்றுள்ள நிலையில் எல்லோர்க்கும் இரண்டாம் பட்சம் என்றாகிவிட்டது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தரும் சிறப்பு வசதிகளை (Comfortable) பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. பணத்தையும் நேரத்தையும் அதன் மூலம் சேமிக்க முடியும் என்பதும் உண்மையே. ஆனால் மேலதிக சாதகமாகப் (advantage) பயன்படுத்தும் போதுதான் பிரச்சனை எழுகிறது. அந்தப் புள்ளியில் தான் அடிமைத்தனம் தொடங்குகிறது. "Internet, Mobile Phone, Digital video" போன்றவை நம்மைச் சிறைபடுத்தி வைத்திருக்கின்றது என்பது தான் உண்மை. சக மனிதர்களைக் காட்டிலும் சாதனங்களுடன் அதிகம் உறவாடுகிறோம். புன்சிரிப்பைக் காட்டிலும், ஸ்மைலியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

கட்டற சுதந்திரத்தில் வாழ்வதாக நினைத்துக் கொண்டாலும், நவீன தொழில்நுட்ப சாதனங்களால் நாம் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம். கூண்டுக் கிளிகளுக்குப் பிறந்த பட்சியைப் போல. ஆகவே தான் கல்யாண்ஜியின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது என்று பேசி இருக்க வேண்டும். என முடிப்பதாக எண்ணம். உறக்கத்தில் இருந்து எழுந்ததால் யோசித்ததில் பாதியைத்தான் பேச முடிந்தது. மறுநாள் நிகழ்ச்சியைக் கேட்டபோது, சவுன்ட் எஞ்சினியர் நான் உளறியிருந்ததை - கத்தரித்து, வெட்டி, ஒட்டி ஒருவாறு சரி செய்திருந்தார். வெட்டுப்பட்டதில் தவறாக வாசித்த கல்யாண்ஜியின் கவிதையும் அடக்கம்.

டிஸ்கி: கவிதையை தப்பாக வாசித்தது, நண்பருடன் உரையாடி இணைப்பைத் துண்டித்த பிறகுதான் நினைவிற்கு வந்தது. அதற்குள் இரண்டுமுறை இணைப்பு துண்டித்தும், தடங்கல் ஏற்பட்டும் பேச நினைத்த விஷயத்தில் பாதிகூட பகிரவில்லை என்பது என்னளவில் வருத்தமே.

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி வந்தன?
எதற்கு வந்தன?
"சிறகுகள்"

No comments:

Post a Comment