Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - அபிலாஷ் சந்திரன்

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சை
(முகநூல் பதிவு - ஆகஸ்ட் 26 - 2016,  நேரம்: 10.28 PM)

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு வருகிறேன். இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?

கல்யாணராமன் காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதினார்: “சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி”. இது பிரம்மராஜனின் தொகுப்பு முறை பற்றியது. இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவரது எடிட்டிங் பற்றியது. அவர் எவ்வாறு ஆத்மாநாமின் கவிதைகளை நூலாக தொகுக்கும் போது அவற்றை பல இடங்களில் மூலத்தில் இருந்து மாற்றி இருக்கிறார் என கல்யாணராமன் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். எனக்கு இதில் வரும் மூலக் கவிதை வரிகளையும் மாற்றப்பட்ட வரிகளையும் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட வரிகளே மேல் எனப் பட்டது.
“கூர்மையான பக்கங்களைக்கொண்ட, புற்கள் தாறுமாறாய்ச், சிதறிக் காத்தன, ஏரியை”
என்கிற ஒரு கவிதை வரியில் ”புற்கள்” பிரம்மராஜனின் தொகுப்பில் “பற்கள்” ஆகி விட்டன. எனக்கு தாறுமாறாய் சிதறிக் கிடக்கும் பற்கள் கொண்ட ஏரிக்கரை என்பது இன்னும் அழகான, வித்தியாசமான, சர்ரியல் தன்மை கொண்ட சித்திரமாய் படுகிறது. இது எதேச்சையாய் நடந்த தவறு என்றாலும் கூட நல்ல தவறு தான்.
ஆத்மாநாமின் “ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை” என்ற வரியை தொகுப்பாளர் பிரம்மராஜன் “ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை” என்று மாற்றி இருக்கிறார். நுணுகவில்லை என்பது ஒரு உருவகம். அது அவ்வரியை பாரமாக்கி விடுகிறது. ”அணுகவில்லை” இன்னும் நேரடியாய் மென்மையாய் இருக்கிறது. (நவீன கவிதையில் உருவகங்களை தவிர்ப்பதே நல்லது என்பது என் நம்பிக்கை) இதுவும் நல்ல மாற்றமே.
“இப்பரந்த உலகின் தூசி முனையில்” என்பதை “இப்பரந்த உலகின் ஊசி முனையில்” என மாற்றுகிறார். இதுவும் சிறப்பே. தூசிக்கு முனை உண்டா? தூசி உருளை வடிவென்றால் எப்படி அதற்கு முனை சாத்தியமாகும்? ஊசி முனை எனும் போது உடனே நமக்குள் ஒரு சித்திரம் எழுகிறது. பிரம்மராஜனின் மாற்றம் இவ்வரியை இன்னும் விஷுவலாக மாற்றி இருக்கிறது.
‘மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்து’ – ஆத்மாநாம் வரி
”‘மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்து’ – பிரம்மராஜன் திருத்திய ஆத்மாநாம் வரி
மற்றவரை விட மாற்றான் என்பதே இன்னும் ஆற்றல் மிக்கதாக எனக்கு படுகிறது. மற்றவர் என்பதை இன்னொருவர் என ஆத்மாநாம் கண்டிருக்க இயலாது. அரசியல் பொருளில் படிக்கையில் குறிப்பாய் மாற்றான் எனும் சொல்லே எனக்கு இன்னும் பிடித்தமாய் இருக்கிறது. எதிர்தரப்பு என்பதை விட மாற்று நிலை கொண்டவன் என்றே நான் மாற்றானை பார்க்கிறேன்.
இதே “சுதந்திரம்” எனும் எமெர்ஜன்ஸி பற்றின கவிதையில் வரும் மற்றொரு வரியான “உனதுயிர்மீது ஆசை இருந்தால்” எனபதை ““உன் மீது ஆசை இருந்தால்” என்று பிரம்மராஜன் மாற்றுகிறார். எமெர்ஜென்ஸி உயிர் மீதான ஒடுக்குமுறை அல்ல. சர்வாதிகாரத்தை ஆத்மாநாம் நம் இருப்பு சம்மந்தமான பிரச்சனையாகவும் தான் பார்த்தார். அப்படி இருக்கையில் “உன்” எனும் சொல் தான் “சுயம்” என்கிற பொருளில் பொருத்தமாய் இருக்கிறது. “உன் உயிர்” என்பது சற்றே பௌதிகமாக அதில் பேசப்படும் மனிதனை அர்த்தப்படுத்தி விடுகிறது.
“அருகில் கேட்கும், குழாயின் ஒழுகல்”
என்பதை
“இருளில் கேட்கும், குழாயின் ஒழுகல்” என பிரம்மராஜன் மாற்றியிருக்கிறார். இந்த திருத்தமும் அதிக விஷுவல் தன்மை கொண்டதே. ஒரு நல்ல மாற்றம் தான். அருகில் கேட்கும் குழாயின் ஒலியை விட இருளில் கேட்கும் ஒலியை கற்பனை செய்ய இன்னும் அணுக்கமாய் தீவிரமாய் அழகாய் உள்ளது.
”காலம் கடந்த” கவிதையின் இறுதி வரிகள் சிலவற்றை பிரம்மராஜன் நீக்கியிருக்கிறார்.
அக்கவிதை, “என் காலடியில், கொஞ்சும் நாய்க்குட்டிக்காக, இன்னும் எனது நம்பிக்கை, நசித்துப்போகவில்லை, இன்னமும் கொஞ்சம், அன்பு மீதமிருக்கிறது” என்று முடிகிறது.

ஆனால் உண்மையில் அது
“இது ஏசுவோ புத்தரோ
ஆதி சங்கரரோ
‘மகாத்மா’ காந்தியோ
பிரச்சாரம் செய்த
அன்பு அல்ல
நானே
ஆகிய
அன்பு”

என்று தான் முடிந்திருக்க வேண்டும். நீக்கப்பட்ட வரிகள் ஒரு statement என்பதை படிக்கும் எந்த வாசகனாலும் புரிந்து கொள்ள முடியும். கவிதை ஒரு அறிவிப்புடன், கவிஞனின் அறிவுறுத்தலுடன் முடிய வேண்டாம் என நினைத்து பிரம்மராஜன் நீக்கியிருக்க கூடும். இங்கும் அவர் எடிட்டிங் ஆத்மாநாமின் கவிதையை மேம்படுத்தி இருப்பதாகவே நினைக்கிறேன். முக்கியமான எந்த கூடுதல் பொருளும் தராத வரிகளை ஏன் நீக்கக் கூடாது?
‘டெலெக்ஸ்’ என்பதை ‘டெலக்ஸ்’ என்பதாக்கியது ஒரு பெரும் தவறு அல்ல. “1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்ற வரியில் 74,000 என்பதை பிரம்மராஜன் 75,000 என்று தவறாக மாற்றி இருக்கிறார். இது கவிதையின் அர்த்தத்தை மாற்றாது என்பதால் மன்னித்து விடலாம்.

சில கவிதைகளில் “ஒரு” என்பதை “ஓர்” என மாற்றுகிறார். ”சுவற்றில்” “சுவரில்” ஆகி விட்டது. இது போல் வேறு பல தொந்தரவு இல்லாத சிறு மாற்றங்கள். ஆத்மாநாமின் சில கவிதைகளின் தலைப்புகளை பிரம்மராஜன் மாற்றியதையும் கல்யாணராமன் குறிப்பிடுகிறார். இந்த இடங்களில் கவிதைகளை அத்தலைப்பு மாற்றங்கள் சீரழித்தன என்பதை விட ஆத்மாநாமின் சம்மதத்தை பெற்றாரா இல்லையா என்பதே கேள்வி.
ஒட்டுமொத்தமாய், பிரம்மராஜன் இந்த creative editing மூலமாய் ஆத்மாநாமுக்கு நல்லது பண்ணியிருப்பதாகவே நான் நம்புகிறேன். இதன் அறம் மட்டுமே பிரச்சனை. இதனை ஆத்மாநாம் ஏற்றிருப்பாரா இல்லையா? நமக்குத் தெரியாது.

இன்னொரு கேள்வி: ஒரு படைப்பை நாம் அதை எழுதிய படைப்பாளியின் சொத்தாக, அவனுக்கு மட்டுமே முழு உரிமை கொண்ட பொருளாக ஏன் பாவிக்க வேண்டும்? எனக்கு கடந்த மாத உயிர்மையில் வெளியான மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றை படிக்கையில் இறுதி சில வரிகளை கத்தரித்திருக்கலாமே என தோன்றியது. என் மனதுக்குள் அவ்வாறு எடிட் செய்து படித்து ரசித்தேன். நாளை நான் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை என் பாணியில் எடிட் செய்து பிரசுரிக்கலாமா? ஏன் கூடாது? ஒரு வாசகனாய் எனக்கு அந்த உரிமை, சுதந்திரம் நிச்சயம் உள்ளது.

ஒரு சிறு குறிப்பை மட்டும் இறுதியில் சேர்க்க வேண்டும்: “இது ஆசிரியரின் அனுமதி இன்றி சில மாறுதல்கள் செய்யப்பட்ட கவிதை”.
பிரம்மராஜன் இப்படியான குறிப்பை சேர்க்காதது தான் ஒரே தப்பு. அவர் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவ்வாறே கூட குறிப்பை இணைத்திருக்கலாம். இதற்கு போய் அவரை ஏன் அடித்து துவைக்க வேண்டும் என எனக்கு சத்தியமாய் புரியவில்லை.

நான் குமுதம் கிரிக்கெட்டோகிராபியில் 3000 ரன்களை 4000 என எழுதியதற்காய் ஒருவர் ”என் கட்டுரையை படித்தால் தற்கொலை புரியும் எண்ணம் வருகிறது” என பேஸ்புக்கில் எழுதினார். இன்னொருவர் என்னை பேஸ்புக் முட்டுச்சந்துக்குள் வீச்சருவாளோடு விரட்டினார். பாவம் பிரம்மராஜன், அவரை ஆட்டோவில் ஆளுக்கு ஒரு கத்தியை சுழற்றியபடி வந்து துரத்துகிறார்கள்!

பின்னூட்டம்:

Saravanakarthikeyan Chinnadurai: சிறுகுறிப்பாக மட்டுமல்லாமல் புத்தகத்தின் தலைப்பிலேயே, அட்டையிலேயே கொட்டை எழுத்தில் தெளிவாய் இது இப்படி இன்னாரின் மாற்றத்திற்குட்பட்ட அன்னார் கவிதைகளின் தொகுப்பு எனக் குறிப்பிடப்பட வேண்டும். வாசகனுக்கு அதை அறியும் உரிமை இருக்கிறது. அவன் அதைக் கொண்டு நூலை வாங்கலாமா வேண்டாமா எனத் தன் ரசனையின் அடிப்படையில் தீர்மானிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை அந்த 'இன்னார்' அவனுக்கு உவப்பற்றவர் என்றால் அவன் அதைத் தவிர்க்கலாம். அல்லது அவர் (உங்களைப் போல்) இம்மாற்றங்களை விரும்புபவராக அல்லாமல், (என் போல்) "கோணலா இருந்தாலும் ஒரிஜினலாக்கும்" என்ற கருத்துடையவன் எனில் அதைத் தவிர்க்கலாம். ஆக, அதை மிக மிக வெளிப்படையாய் முன்வைப்பதே அறம். அன்றேல் சிட்னி ஷெல்டன் நாவல்களை ரா.கி.ரா. மொழிபெயர்த்ததை அட்டையில் அது பற்றி ஒரு குறிப்புமின்றி ரா.கி.ரா.வின் ஒரிஜினல் நாவல் போல் அச்சடித்து விற்கிறார்களே, அது போன்ற அயோக்கியத்தனமாகி விடும்.


அபிலாஷின் நிலைத்தகவலுக்கு கே.என். சிவராமனின் எதிர் விமர்சனம்:(முகநூல் பதிவு - ஆகஸ்ட் 27 - 2016,  நேரம்: 2.13 PM)

ஆத்மாநாம் - பிரம்மராஜன் Brammarajan Rajaram - 'காலச்சுவடு’ தொடர்பான ஆர்.அபிலாஷின் நிலைத்தகவல் விஷமத்தனமானது. ஏனெனில் அந்த ஸ்டேட்டஸ் முழுக்க முழுக்க பேராசிரியர் கல்யாணராமனின் கட்டுரையை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. அதாவது ‘மூலத்தில்’ இப்படி உள்ளது... அதற்கு பிரம்மராஜன் செய்திருக்கும் மாற்றங்கள் இப்படி இப்படி... என பேராசிரியர் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அப்படியே ஏற்று, தன் தரப்பை அபிலாஷ் முன்வைத்திருக்கிறார்.

அதாவது, பிரம்மராஜனின் எடிட்டிங் சென்ஸ் சரியாக இருக்கிறதாம். அட்டையில் அதை குறிப்பிடாதது மட்டுமே தவறாம்.

//“இது ஆசிரியரின் அனுமதி இன்றி சில மாறுதல்கள் செய்யப்பட்ட கவிதை”.
பிரம்மராஜன் இப்படியான குறிப்பை சேர்க்காததுதான் ஒரே தப்பு. அவர் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவ்வாறே கூட குறிப்பை இணைத்திருக்கலாம்.//

தீர்ப்பு எழுதியிருக்கிறார். Reading in between linesல் அவர் குறிப்பிடுவது, ‘காலச்சுவடு’ வெளியிட்ட கட்டுரை சரியானது என்பதே. ஒரேயொரு கேள்வி.

தனது நிலைத்தகவலின் ஆரம்ப வரிகளாக நடைபெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பான அனைத்தையும் வாசித்து வருகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். எனில் லதா ராமகிருஷ்ணன் Anaamikaa Rishi பதிவிட்ட நிலைத்தகவலையும் பார்த்திருக்க வேண்டும்... நண்பர் Pradhaba Rudhran ‘மீட்சி’ இதழை ஸ்கேன் செய்து போட்டு ‘மூலம்‘ என்று கல்யாணராமன் குறிப்பிட்டிருக்கும் வரிகளே பொய்யானதுதான் என அம்பலப்படுத்தி இருப்பதை வாசித்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் நட்புப் பட்டியலில் இல்லாவிட்டாலும் பிரம்மராஜன் உட்பட பலரும் இவற்றை ஷேர் செய்திருக்கிறார்கள்.

எனவே சிறுபத்திரிகை சூழலில் புழங்கும் - முகநூலில் இருக்கும் - அனைவரது டைம் லைனிலும் ஏதோ ஒரு வடிவத்தில் இவை காட்சித் தந்திருக்கும். அதை எல்லாம் படித்துவிட்டுதான் தன் தீர்ப்பை - பிரம்மராஜன் செய்த ஒரே தப்பு!!! - அபிலாஷ் எழுதியிருக்கிறாரா? முதலில் கல்யாணராமன் சுட்டிக்காட்டியிருக்கிறாரே... ‘மூலம்’, ‘மூலம்’ என்று...

அவை எல்லாம் நிஜமாகவே ‘மூலம்’தானா என்பதை ஒருவராவது ஆராய்ந்து பார்த்தார்களா?
‘காலச்சுவடு’ இதழே அதை செய்யவில்லை என்பதைத்தானே ‘மீட்சி’ இதழின் ஸ்கேன் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன?

அட, இது போன்ற கட்டுரைகளை பிரசுரம் செய்யும் ஓர் இதழ், சாம்பிளுக்கு ‘மூல’ படைப்பில் ஒன்றையாவது ஸ்கேன் செய்து - ஒரிஜினல்; மாற்றப்பட்டது - என இரண்டும் பளிச்சென்று தெரியும் வகையில் லே அவுட் செய்யும் - வாசகர்களின் நம்பகத்தன்மைக்காக. 
இது போன்ற எதுவும் ‘ஆகஸ்ட் 2016’ ‘காலச்சுவடு’ இதழில் இல்லை.
பிரம்மராஜனை டி கிரேட் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அக்கட்டுரை எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதைதானே கேள்வி கேட்கிறோம்? பிறகு பிரம்மராஜன் விஷயத்தை சாதி சார்ந்து திசை திருப்பியவர் சாட்சாத் நண்பர்Krishna Prabhu கிருஷ்ண பிரபுதான்.

இதை ஒட்டுமொத்த முகநூல் நண்பர்களும் புரிந்து கொள்வது நல்லது. இது குறித்த சிறு குறிப்பு / கண்டனம் கூட அபிலாஷ் கட்டுரையில் இல்லை. மாறாக //இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?// என ஆரம்பிக்கிறார்.
ஒருவேளை ‘காலச்சுவடு’ நோக்கி இவரும் நகர ஆரம்பிக்கிறாரோ... அல்லது அப்பதிப்பகத்தில் தன் நூல் வர துண்டு போட்டு இடம் பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிலைத்தகவலை பதிவிட்டிருக்கிறாரோ...
அப்படியானால், மனமார்ந்த வாழ்த்துகள் அபிலாஷ்.
#காலச்சுவடுஅரசியல் #isupportbrammarajan #isupportbrammarajanrajaram#wesupportbrammarajan

கிருஷ்ண பிரபு: முகநூலில் சிவராமன் எழுதியிருந்ததைப் பகிரும்போது "ஒருவேளை இவரும் 'காலச்சுவடு' நோக்கி" என்பதை "ஒருவேளை இருவரும் (கிருஷ்ண பிரபு, அபிலாஷ்)..." என்று தவறுதலாகப் புரிந்துகொண்டு கீழ்கண்ட குறிப்பை எழுதியிருந்தேன்:

 சாதி சார்ந்து திசை திருப்பியது நானல்ல. சாட்சாத் கே. என். சிவராமனின் உசுப்பலின் பேரில்தான்.
பிரம்மராஜன் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் என்றார் சிவராமன். தேடியதில் ஜெமோவின் பதிவு கிடைத்தது. நான்காம் படி இதழ் அதே காலகட்டத்தில் வந்துள்ளது என்பதையும் தெரிவித்தேன். உண்மையில் சிவராமனின் குருபீடம் ஜெமோ என்பது ஊரறிந்த விஷயம். ஜோமோ சொல்லியிருப்பது சார்ந்து மூச்சு விடாத சிவராமன் என்மீது பழியைத் தூக்கிப் போடுகிறார்.
காலச்சுசடில் புத்தகம் வர துண்டு போடுகிறேன் என்கிறார்.
இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஜீவகரிகாலன், கண்ணன், சிவசெந்தில்நாதன் எனப் பலரும் கேட்டுள்ளனர். இனிமேல்தான் முயற்சித்துத் துண்டு போட வேண்டும் என்பதில்லை. விவாதத்தை நுட்பமாக திசை திருப்பும் செயல் இது. அசிங்கமும் கூட.
என்னுடைய தவறினை யுவ கிருஷ்ணாவும் சிவராமனும் சுட்டிக்காட்டினார்கள். அதற்கு நான் எழுதிய முகநூல் பதிவு:

அபிலாஷ் குறித்த கே. என். சிவராமனின் சமீபத்திய பதிவைப் பகிரும் பொழுது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. அதை கவனத்திற்க்குக் கொண்டுவந்த யுவா & சிவராமன் ஆகியோருக்கு நன்றிகள்.
/இவரும் காலச்சுவடு நோக்கி நகர்கிறாரோ.../ என்று அபியை சிவராமன் குறிப்பிட்டிருக்கிறார். தவறுதலாக, 'இவரும்' என்பதை ஒரு 'ரு' சேர்த்து 'இருவரும்' என்று புரிந்துகொண்டு ஷேர் செய்துவிட்டேன்.
ஒரு வார்த்தை இடைச்செருகல் எவ்வளவு அபத்தப் புரிதலை உண்டாக்குகிறது பாருங்கள்.
தவறாகப் பகிர்ந்ததற்கு சிவராமனிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தும், வார்த்தையும் அர்த்தத்தை மாற்றுவது கண்கூடு. இது ஆத்மாநாம் கவிதைக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் பொருந்தும் போல.

அபிலாஷின் நிலைத்தகவலுக்கு கே.என். சிவராமன் எதிர் விமர்சனம் செய்திருந்ததற்குக் காலச்சுவடு பதிப்பகம் சார்ந்து வா. மனிகண்டனின் தன்னிலை விளக்கம்: (முகநூல் பதிவு - ஆகஸ்ட் 27 - 2016,  நேரம்: .......)



காலச்சுவடு பதிப்பகத்தை நோக்கி ஆர்.அபிலாஷ் நகர்கிறாரோ என்று கே.என்.சிவராமன் எழுதியிருக்கிறார். பிரச்சினையின் அடிநாதம் ஒரு இலக்கியச் சண்டை. அதனுள் நுழைகிற அளவுக்கு ஆர்வமில்லை. ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக புத்தகம் வெளியிடுவதில் என்ன தவறு என்று தெரியவில்லை. என்னுடைய ஒரேயொரு புத்தகம் காலச்சுவடில் வெளி வந்திருக்கிறது. அதன் பிறகு நான்கு புத்தகங்கள் வேறு பதிப்பகங்கள் வழியாகத்தான் வெளியாகின. இவன் வேறு பதிப்பகத்துக்கு மாறிவிட்டான் என்று காலச்சுவடு இதுவரைக்கும் எந்தப் பாராமுகமும் காட்டியதில்லை. எவ்வளவு புத்தகங்கள் விற்றிருக்கின்றன, எவ்வளவு கணக்கு வழக்கு என்று துல்லியமாகத் தகவல் சொல்லிவிடுகிறார்கள். ஏதாவது கருத்தரங்குகள், விவாதங்கள் நிகழ்ந்தால் என்னுடையை பெயரையும் பரிந்துரை செய்யத் தயங்குவதேயில்லை. இந்த வருடம் கூட பப்ளிஷிங் நெக்ஸ்ட் கருத்தரங்கில் ஒரு போட்டிக்கான நடுவர் குழுவில் இடம் பெற்றிருக்கிறேன். இன்னமும் காலச்சுவடு பதிப்பகத்தில் எந்தப் புத்தகம் வாங்கினாலும் ‘நம்ம எழுத்தாளர்’ என்ற அடிப்படையில் இருபத்தைந்து முதல் முப்பது சதவீதம் கழிவு தருகிறார்கள். முந்நூறு பிரதிகள் கூட விற்காத ஒரேயொரு கவிதைத் தொகுப்பை அந்தப் பதிப்பகத்தில் கொடுத்துவிட்டு காலச்சுவடு பதிப்பகத்தில் தொடர்ச்சியாக புத்தகங்கள் வெளியிடும் பிற எழுத்தாளர்களுக்குரிய அத்தனை மரியாதையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் கண்ணன், சுகுமாரன் உள்ளிட்டவர்களோடு பேசுவது கூட இல்லை. ஒரு பதிப்பகமாக காலச்சுவடு எனக்கு எவ்வளவோ செய்கிறது. எழுத்தாளனாக காலச்சுவடுக்காக இந்த ஸ்டேட்டஸையாவது எழுதி வைக்கிறேன்! நியோ பார்ப்பான், பார்ப்பனீயம், பதிப்பக அரசியல் என்றெல்லாம் வம்பிழுக்காமல் மேற்சொன்ன விளக்கத்தில் எந்தக் கேள்வி கேட்டாலும் அது குறித்து பதில் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். தனிப்பட்ட அனுபவத்திலிருந்து... 

பரஸ்பரப் புரிதலில் பயணிக்கும் பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் கே.என். சிவராமன் அரசியல் உருவாக்குவதைக் கண்டித்து அபிலாஷ் எழுதிய பதிவு:



ஆத்மாநாம் சர்ச்சை - கே. என். சிவராமன்

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 22 - 2016, நேரம்: 1.13 PM

பதிவு: 01

‘காலச்சுவடு அரசியல்’ என்ற ‘#’ தலைப்பில் ஒரு நிலைத்தகவலை எழுதியிருந்தேன். அதற்கு நண்பர் கிருஷ்ண பிரபு Krishna Prabhu நீண்ட மறுப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்.

எப்படி என் தரப்பை எழுதவும் பேசவும் எனக்கு உரிமை இருக்கிறதோ, அப்படி கிருஷ்ண பிரபுவுக்கும் இருக்கிறது. என்றாலும் தனது வலைத்தளத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவுக்கு சில விளக்கங்களை தர வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்னதாக நடைபெற்று வரும் உரையாடலை சுருக்கமாக தொகுத்து விடுகிறேன். மறைந்த கவிஞர் ஆத்மாநாமின் மொத்த கவிதைகளையும் தேடிப் பிடித்து தொகுத்து 1989ம் ஆண்டு தனது பதிப்பகம் வழியாக பிரம்மராஜன் கொண்டு வந்தார். இதன் இரண்டாவது பதிப்பை 2002ல் ‘காலச்சுவடு’ பதிப்பகம் கொண்டு வந்தது. தொகுப்பாசிரியர் பிரம்மராஜன்தான்.

அந்த வகையில் இதுவரை ‘காலச்சுவடு பதிப்பகம்’ வழியே - பிரம்மராஜன் தொகுத்த - ‘ஆத்மாநாம் கவிதைகள்’ நான்கைந்து பதிப்புகள் வந்திருக்கின்றன. இந்நிலையில் ஆகஸ்ட், 2016 ‘காலச்சுவடு’ இதழில் ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை பேராசிரியர் கல்யாண ராமன் எழுதியிருக்கிறார்.

அதில் பிரம்மராஜன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவை எல்லாம் என்னென்ன என்பதை ‘காலச்சுவடு’ தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் கல்யாண ராமனின் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதை மறுத்தே சென்ற வாரம் முகநூலில் #காலச்சுவடுஅரசியல் என்ற நிலைத்தகவலை எழுதினேன்.

இந்த மறுப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையி்லேயே கிருஷ்ண பிரபு கட்டுரை எழுதியிருக்கிறார். முன்னுரை போதும். விஷயத்துக்கு வருவோம்.

கிபி (கிருஷ்ண பிரபு) கேட்டிருக்கும் கேள்விகளில் முதன்மையானது பிரம்மராஜன்Brammarajan Rajaram தொடர்பானது.

எதற்காக தன் தரப்பை பிரம்மராஜன் எழுதாமல் மற்றவர் எழுதுவதை share செய்கிறார்?
கிபி-யின் இந்தக் கேள்வியை புறம்தள்ளாமல் பதில் அளிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில், இது தனிப்பட்ட கிபி-யின் வினா மட்டுமல்ல. முகநூலில் புழங்கும் பலரது மனதில் எழுந்திருக்கும் கேள்வியும் கூட.
ஓர் உதாரணம் வழியே இதை பார்க்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசாங்கங்கள் ஒரு சிலரை ‘தீவிரவாதி’, ‘திருடன்’ என முத்திரை குத்தி சிறையில் அடைக்கிறது. தண்டனையை வழங்குகிறது.
இதுபோன்ற சூழலில், ‘தான் தீவிரவாதி அல்லது திருடன் அல்ல’ என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் தள்ளப்படுகிறார்களே தவிர, குற்றம் சாட்டியவர்கள் அல்ல.
இதற்கு பெயர்தான் ‘பாசிசம்’. இன்று அமெரிக்கா அதைத்தான் செய்கிறது. பொதுப்புத்தியில் உறைந்து போன இதே வழிமுறையைதான் இலக்கியத்தின் பக்கமும் திருப்புகிறார்கள்.

போகிறபோக்கில் யார் வேண்டுமானாலும் புழுதிவாரி தூற்றிவிட்டு செல்வார்கள்... ‘அச்சோ... நான் அப்படியில்லை....’ என விளக்கம் அளிக்க வேண்டுமா?

எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்... என்ற கேள்வியை - குற்றம்சாட்டுபவர்களை நோக்கி நாம் ஏன் எழுப்புவதில்லை? எனில், நம்மையும் அறியாமல் நமக்குள்ளும் பாசிசம் ஊடுருவியிருக்கிறது என்றுதானே இதற்குப் பொருள்?
அடுத்து sharing.

பிரம்மராஜனை அறியாதவர்கள்தான் இதை தலையாய கேள்வியாக முன் வைப்பார்கள். கிருஷ்ண பிரபு குளோபலைசேஷன் அமலுக்கு வந்த பிறகு நினைவு தெரிந்த வயதுக்கு வந்தவர். எனவே பிரம்மராஜன் குறித்து நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே எனது புரிதலில் இருந்து ‘யார் இந்த பிரம்மராஜன்’ என்று விளக்கி விடுகிறேன்.

1970கள் முதல் சிறுபத்திரிகை சார்ந்த சூழலில் தீவிரமாக இயங்கி வருபவர்தான் பிரம்மராஜன்.அறிவியல் பட்டதாரி. கல்லூரி பேராசிரியர். உலகளவில் இலக்கியத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன... எந்தெந்த மொழி படைப்பாளிகள், தங்கள் படைப்புகளின் வழியே என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்... என்பதையெல்லாம் தேடித் தேடி அறிபவர்; கற்பவர். தமிழுக்கு அறிமுகப்படுத்துபவர்.

‘படிகள்’, ‘கசடதபற’, ‘ழ’ இதழ்களில் எழுத ஆரம்பித்தாலும் - ‘மீட்சி’ என்ற சொந்த பத்திரிகையின் வழியே அழுத்தமான தடங்களை பதித்தவர். உலக கவிஞர்களை எல்லாம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இன்று பரவலாக பேசப்படும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை எல்லாம் கையைப் பிடித்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தவர் சாட்சாத் பிரம்மராஜன்தான்.

இன்று வரை மறுபதிப்பு காணாத இவரது மொழியாக்கத்தில் வந்த ‘போர்ஹே சிறுகதைகள்’, ஆர்.சிவகுமார் உள்ளிட்ட சிலரது தமிழாக்கங்களுடன் வெளிவந்த ‘லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்...’ உள்ளிட்ட - 1980களில் வெளியான நூல்களை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள். பிரம்மராஜன் யார் என்று புரியும்.

போலவே லதா ராமகிருஷ்ணன் Anaamikaa Rishi மொழிபெயர்த்த ‘பிரைமோ லெவி’, ‘ஜேம்ஸ் ஜாய்ஸ்’ நூல்களுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரைகளையும்.

இதுதான் பிரம்மராஜன். தனது செயல்பாடுகளை - செயல் தளத்தை கறாராக வரையறுத்திருக்கிறார்.
அதுதான் literary vanguard movement.

மூன்றே இதழ்களுடன் நின்றுவிட்ட அவரது ‘நான்காம் பாதை’ சிறுபத்திரிகையின் முதல் இதழ் தலையங்கமே இந்த வாசகத்துடன்தான் தொடங்கும்.

இதற்கு என்ன அர்த்தம் - literary vanguard movement - என்பதை அகராதியை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

(சிறுபத்திரிகை) இலக்கியத்தை இப்படித்தான் பிரம்மராஜன் நினைக்கிறார்; வரையறுக்கிறார்; அதன்படியே வாழவும் செய்கிறார். இதே தீவிரத்துடன் செய்ல்படுபவர்கள் மட்டுமே பிரம்மராஜனுடன் இணைந்து பணியாற்ற முடியும். சமரசவாதிகளுக்கு அங்கு இடமில்லை.

ஆரம்பக்கால கோணங்கி, நாகார்ஜுனன், சாரு நிவேதிதா, சத்யன்... என நீளும் படைப்பாளிகளின் தொடக்கக்கால படைப்புகள் அனைத்தும் உக்கிரத்துடன் இருக்க, பிரம்மராஜனுடன் அவர்கள் பழகியதே காரணம். இவர்களது படைப்புகளை பிரம்மராஜன் செப்பனிட்டதே காரணம்.

ரீல் விடவில்லை. கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’க்கு ‘மீட்சி’யில் நாகார்ஜுனன் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். கோணங்கியின் இலக்கிய வகைமை எந்த வகையை சேர்ந்தது என்பதை அந்த விமர்சனம் அடிக்கோடிட்டு காண்பித்திருக்கும். இதன் பிறகே கோணங்கியும் நாகார்ஜுனனும் நண்பர்களானார்கள் என்பது வரலாறு.

தீவிர இலக்கிய வாசகர்கள் அனைவரும் கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’; ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள்’ தொகுப்புகளை சிலாகிப்பார்கள். இவ்விரு தொகுப்புகளும் எழுதப்பட்ட காலத்தில் கோணங்கிக்கு god father ஆக பிரம்மராஜன் இருந்தார் என்பது தற்செயலல்ல. இப்படி தீவிரத்துடனும் உக்கிரத்துடனும் - பெரும் பத்திரிகைகளுக்கு யார் யார் காம்ப்ரமைஸ் ஆகாமல் இருக்கிறார்களோ - அவர்களை எல்லாம் உயர உயர அழைத்துச் செல்ல பிரம்மராஜன் தயங்கியதே இல்லை.

‘மீட்சி’ காலத்தில் பூக்கோவை நாகார்ஜுனனுக்கு அறிமுகப்படுத்தினார் என்றால் - ‘நான்காம் பாதை’ காலத்தில் முத்துக்குமார் என்பவரை சூழல் முன் நிறுத்தினார். பூக்கோ, தெல்யூஸ் - கத்தாரிக்கு பிறகான சிந்தனையாளர்களை இந்த முத்துக்குமாரை வைத்து ‘நான்காம் பாதை’யில் ஆங்கில பரீட்சயம் இல்லாத தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறுபத்திரிகை வட்டாரங்கள் தவிர வேறு எங்கும் பிரம்மராஜன் எழுத மாட்டார்; புழங்க மாட்டார். அவருக்கு 300 பேர் கூட வேண்டாம். 30 பேர் போதும். அந்த 30 பேரும் தீவிரமானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் ஒரே கண்டிஷன்.

அறிந்த வரை ‘சுபமங்களா’வில் கோமல் சுவாமிநாதனுக்காக பத்தி ஒன்றை எழுதினார். பிறகு ஆரம்பக்கால ‘உயிர்மை’யில் சில கட்டுரைகள்; மொழியாக்கங்கள்.

இதைத்தாண்டி இடைநிலை இதழ்களில் கூட பிரம்மராஜன் எழுதியதில்லை. இப்படிப்பட்ட ஒரு தீவிர நபர் எப்படி முகநூலில் ஸ்டேட்ட்ஸ் ஆக போட்டுத் தள்ளுவார்? இந்த மீடியத்தில் அவர் இருப்பது ஜஸ்ட் பார்வையாளராகத்தான். எப்படி ‘விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’ போன்ற வெகுஜன இதழ்களை நேரம் கிடைக்கும்போது புரட்டிப் பார்க்கிறாரோ... அப்படி இணையத்துக்கு வரும்போது ஸ்டேட்டஸை மேய்கிறார். அவ்வளவே. அவரது டைம் லைனுக்கு சென்று யார் பார்த்தாலும் தெரியும். 99% sharingதான். தப்பித்தவறி எதையாவது எழுத நேர்ந்தாலும் நான்கைந்து வாக்கியங்களுக்கு மேல் பதிவு செய்ததில்லை.

அவ்வளவு ஏன்... தனது வலைத்தளத்தில் கூட அவர் புதியதாக எந்தக் கட்டுரையும் எழுதவில்லை. முன்பு, தான் எழுதியதை எடுத்துப் போட்டிருக்கிறார். தட்ஸ் ஆல். காரணம், இலக்கியம் தொடர்பான - கறாரான - உக்கிரமான அவரது பார்வைதான்.

ஏதோ முகநூலில் அவரது நட்புப் பட்டியலில் நாமும் இருக்கிறோம் என்பதாலேயே நம்மைப் போல் அவரும் ஸ்டேட்டஸ் ஆக போட்டுத் தள்ள வேண்டும்.. சகட்டுமேனிக்கு நாம் வீசும் அவதூறுகளுக்கு எல்லாம் அவர் பதில் அளிக்க வேண்டும்... என்று எதிர்பார்ப்பது சரியல்ல.

அதேபோல் ‘ஆத்மாநாம் கவிதைகள்’ தொகுப்பு சார்ந்து அவருக்கு ஆதரவாக எழுதப்பட்ட நிலைத்தகவல்களை அவர் ஷேர் செய்யும் ஒரே காரணத்துக்காக அவர்கள் எழுதுவதை எல்லாம் ஏற்கிறார் என்றும் அர்த்தமல்ல.

என்னையே எடுத்துக்காட்டுக்கு எடுத்துக் கொள்கிறேன். எனது ஸ்டேட்டஸை ஷேர் செய்தார். ஆனால், ஒருபோதும் இலக்கியம் சார்ந்த எனது நடவடிக்கைகள் / செயல்களை அவர் ஆதரிக்க மாட்டார். சொல்லப்போனால் மற்றவர்களை விட கடுமையாக எதிர்க்கவே செய்வார்.

ஏனெனில் அவர் எப்போதும் ஏற்காத வெகுஜன தளத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறேன். முழ நீளத்துக்கு இவ்வளவும் எழுத காரணம் - பிரம்மராஜன் யார்... எப்படிப்பட்டவர் என்பதை 2000ம் ஆண்டுக்கு பிறகு சிறுபத்திரிகை இலக்கியங்களை படிக்க ஆரம்பித்தவர்களுக்கு - அதுவும் ஃபேஸ்புக்கில் இருப்பவர்களுக்கு - புரிய வைக்கத்தான். மற்றபடி வெறும் கிருஷ்ண பிரபுவுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. நடந்திருப்பது அநியாயம். ‘காலச்சுவடு’ செய்திருப்பது நமது முன்னோடிகளில் ஒருவரான பிரம்மராஜனை இழிவுப்படுத்தும் / அழிக்க நினைக்கும் செயல். இதை தட்டிக் கேட்கும் உரிமை ஒரு வாசகராக நம் அனைவருக்கும் இருக்கிறது.
‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை எழுதியிருக்கும் கல்யாணராமன் - நாற்பது வயதுக்குள் இருப்பவர். நந்தனம் கல்லூரி தமிழ் பேராசிரியர். இவரது இலக்கிய ஆர்வம் போற்றத்தக்கது. ஆனால், அது அரைவேக்காடுத்தனமாக முடிந்து விடக் கூடாது. இவருக்கு வயதும் காலமும் இருக்கிறது. அரசியலுக்கு பலியாகி தன்னைத்தானே இழிவு படுத்திக் கொள்ளக் கூடாது.
‘ஆத்மாநாம் கவிதைகள்’ தொடர்பாக சில ஆண்டுகளாகவே கல்யாணராமன் பல பதிப்பகங்களை தொடர்பு கொண்டு வந்திருக்கிறார்.
அதில் இருவர், பிரம்மராஜனிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பதிப்பிக்க மறுத்துவிட்டார்கள்.
கடைசியாக தனது சொந்த பதிப்பகம் வழியாக, விற்பனை உரிமையை இன்னொருவருக்கு கொடுத்துவிட்டு, நூலாக கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக DTP, Layout... உள்ளிட்ட வேலைகள் நடந்திருக்கின்றன. இவை எல்லாம் முடிந்து ஸ்பைரல் பைண்டிங் போட்டு பிழைதிருத்தம் செய்ய கொண்டு சென்றிருக்கிறார்.
இதற்கு முன்னுரை வாங்க இன்னொரு பேராசிரியரிடம் கொடுத்திருக்கிறார். அந்த பேராசிரியர் ‘காலச்சுவடு’ பதிப்பகத்துடன் தொடர்புடையவர்.
அவர், முன்னுரை எழுதிக் கொடுப்பதற்கு பதிலாக அப்படியே அந்த நூலை ‘காலச்சுவடு பதிப்பக’த்துக்கு கொண்டு சென்று விட்டார்.
வருடம்தோறும் காலம் சென்ற படைப்பாளிகளுக்கு திவசம் செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கும் அந்தப் பதிப்பகம் - இம்முறை எள்ளுத் தண்ணீர் ஊற்ற ‘ஆத்மாநாமை’ தேர்வு செய்திருக்கிறது. இதுதான் நடந்த விஷயம். கிசுகிசு எல்லாம் அல்ல. வேண்டுமானால் கல்யாண ராமனிடமே யார் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். இது நேர்மையற்ற செயல் என்று கூறி எந்தெந்த பதிப்பகங்கள் இதை பதிப்பிக்க மறுத்தன என்பது உட்பட.
ஆக - ‘பிரம்மராஜனிடம் பேசுங்கள்’ என்று சொன்ன முந்தைய இரு பதிப்பகங்களின் அடிப்படை அறம் கூட ‘காலச்சுவடு பதிப்பக’த்துக்கு இல்லை என்பது கவலையளிக்கும் விஷயம். இத்தனைக்கும் பிரம்மராஜனின் கைபேசி எண்ணும், லேண்ட் லைன் நம்பரும் ‘காலச்சுவடு பதிப்பக’த்துக்கு தெரியும். ‘ஆத்மாநாம் கவிதைகள்’ நூலை இதுவரை பதிப்பித்து வருபவர்களும் இவர்களே. அப்படியிருந்தும் பிரம்மராஜனை தொடர்பு கொண்டு கேட்காமல் -
அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் கட்டுரையை தங்களது ‘200வது இதழில்’ வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுதான் பத்திரிகை தர்மம் என்றால் - இதுதான் பதிப்பக அறம் என்றால் - இதை எதிர்க்கவே செய்வேன். இது தொடர்பாக பிரம்மராஜன் என்ன முடிவு எடுத்தாலும் அவருக்கு உறுதுணையாக நிற்பேன்.

மற்றவர்களையும் இந்தப் போராட்டத்தில் இணையும்படி பிரசாரம் மேற்கொள்வேன்.

#ISUPPORTBRAMMARAJANRAJARAM


பதிவு: 02

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 23 - 2016, நேரம்: 10.26 AM

(இதுதான் முடிவு என்றால் எதிர்கொள்வோம் . தகவல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பிரம்மராஜனிடம் ஒப்புதல் வாங்கவில்லை.)

ஆத்மாநாம் கவிதைகள்: தொகுப்பு பிரம்மராஜன் Brammarajan Rajaram. விலை: ரூ.49 அல்லது ரூ.99. வழு வழு தாள். வெளியீடு: தன்யா & பிரம்மா பப்ளிஷர்ஸ். (ஆத்மாநாமின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் ஸ்கேன் செய்து பின்னிணைப்பாக இணைக்கப்படும். சாம்பிளுக்கு இந்த நிலைத்தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும் மூன்று படங்களை பார்க்கவும்)
இலக்கிய ஆர்வமுள்ள முகநூல் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை முதலில் நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். இறுதி வரை பெருமாள் முருகன் பக்கம் நின்று அவருக்கு நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ‘காலச்சுவடு பதிப்பக’த்தை பாராட்டுவோம்.

அதேநேரம் பெருமாள் முருகனுக்கு எந்த வகையான அநீதி ஏற்பட்டதோ - அதே அளவுக்கான அநீதி கவிஞர் பிரம்மராஜனுக்கு Brammarajan Rajaramஇழைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருபோதும் நாம் மறக்க வேண்டாம்.
இம்முறை நம் முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் பிரம்மராஜன் மீது தாக்குதல் தொடுத்து அவரை முடக்க / அழிக்க நினைப்பவர்கள் சாதி சங்கங்களை சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக சிறுமை கண்டு பொங்கி எழுவதாக தன்னை அறிவித்துக் கொள்ளும் ‘காலச்சுவடு பதிப்பக’மேதான் என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

பெருமாள் முருகனுக்கு ஒரு நியாயம்... பிரம்மராஜனுக்கு ஒரு நியாயம் என்பது எந்த விதத்தில் சரி?

இதை ‘காலச்சுவடு’ பதிப்பகமும்; அப்பதிப்பகத்தின் நலம் விரும்பிகளும் தயவுசெய்து யோசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நடந்தது என்ன என்பதை கடந்த நிலைத்தகவலிலேயே பார்த்துவிட்டோம்.
எனவே நேரடியாக விஷயத்துக்கு வருவோம். ஒருவேளை பேராசிரியர் கல்யாணராமனை தொகுப்பாசிரியராக கொண்டு ‘ஆத்மாநாம் கவிதைகள்’ என்ற புதிய பதிப்பை கொண்டு வர ‘காலச்சுவடு பதிப்பகம்’ நினைத்தால் -
பிரம்மராஜனின் ‘தன்யா & பிரம்மா பப்ளிஷர்ஸ்’ சார்பில் அவர் தேடிப் பிடித்து தொகுத்த ‘ஆத்மாநாம் கவிதைகள்’ புதிய பதிப்பை - அதுவும் செம்பதிப்பாக... ஆத்மாநாமின் கையெழுத்து பிரதிகளுடன் வழு வழு தாளில் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வோம்.
இதற்கு முதலில் பிரம்மராஜன் சம்மதிக்க வேண்டும். அவரை இணங்க வைக்க வேண்டியது நம் அனைவரது பொறுப்பு. மாறாத மரியாதை கலந்த அன்புடன் அவரை நாம் அனைவரும் தொந்தரவு செய்வோம்.

அத்துடன் மீண்டும் ‘மீட்சி’ இதழை அவரது நேரடிப் பொறுப்பில் அவர் கொண்டு வர வேண்டும் - காலாண்டு இதழாக.
இவ்விரு கோரிக்கைகளுக்காக நாம் அவரை உறங்கவிடாமல் இம்சிப்பதில் தவறொன்றும் இல்லை.

ஒருவேளை ‘ஆத்மாநாம் கவிதைகள்’ பிரம்மராஜனின் பதிப்பகம் சார்பில் மீண்டும் வர வேண்டிய சூழலை ‘காலச்சுவடு பதிப்பகம்’ ஏற்படுத்தினால் - இந்த தொகுப்புக்காக ஆகும் செலவில் ஒரு பகுதியை தனிப்பட்ட முறையில் நான் ஏற்கிறேன். இதன் மூலம் வாசகர்கள் வாங்கும் தொகையில் கணிசமான அளவு குறையும். குறைக்கப்பட்ட புத்தக விலையை கணக்கில் கொள்ளாமல் கணிசமான ஒரு தொகை உரியவர்களுக்கு ராயலடியாக கொடுக்கப்படும். பொருளாதார ரீதியில் அப்படியொன்றும் நான் தன்னிறைவு பெறவில்லை. இன்னமும் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைதான். என்றாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் என் பங்குக்கு அணிலை போல் உதவ தயாராக இருக்கிறேன்.

பேராசிரியர் கல்யாணராமனுக்கு ஒரு வேண்டுகோள்...

ஆத்மாநாமை மூலத்துடன் படிக்க வேண்டும் என்று நீங்கள் தேடித் தேடி அலைந்தது போற்றத்தக்க விஷயம். இதுபோன்ற தீவிர வாசகர்களை நம்பியே சிறுபத்திரிகை சூழல் இயங்கி வருகிறது.
உங்கள் தேடலும் ஆராய்ச்சியும் மெச்சத்தக்கது. ஆனால், ஏற்கனவே தொகுத்தவர் எப்படிப்பட்டவர்... எந்த வகையில் தொகுப்புப் பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார்... மூலத்துடன் தொகுப்பு ஏன் வேறுபடுகிறது (வேறுபடுவதாக நினைக்கும் பட்சத்தில்)... தொகுப்பாசிரியர் ஏன் இப்படி / அப்படி மாற்றினார்... என்பதை எல்லாம் சம்பந்தப்பட்ட தொகுப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டு அறிவதே அழகு. தேடலும் ஆராய்ச்சியும் கொண்ட நீங்கள் - உங்கள் உழைப்பை நல்லவிதமாக செலவிடுங்கள். உங்கள் மூலம் ஒருவேளை தமிழ்ச் சூழலுக்கு பொக்கிஷங்கள் கிடைக்கலாம். இங்கு வெளியாகியிருக்கும் மூன்று படங்களும் பிரம்மராஜனின் பக்கத்தில் இருந்து ‘சுடப்பட்டவை’.
பட விளக்கம்:
1. Aathmanam's poem written on a torn sheet (chosen by himself) from a ruled notebook
As usual you don'f find any dates.
2. Athmanam's instructions to the printer for the 8th issue of Zha.
3. Poem by Athmanam
Drawing by Achyathan Koodaloor
(Like any other Athmanam manuscript it is undated).
ஆர்வமுள்ள அனைத்து இலக்கிய நண்பர்களையும் இருகரம் கூப்பி அழைக்கிறேன்...

வாருங்கள்... பிரம்மராஜனை தொந்தரவு செய்வோம்... பழைய பன்னீர் செல்வமாக அவர் சிலிர்த்து எழ உடுக்கை அடிப்போம்...

ஆத்மாநாம் சர்ச்சை - கால பைரவன்

கால பைரவன் - முகநூல் பதிவு (தேதி: ஆகஸ்டு 25, 2016 - நேரம்: 11.00 AM)

சு.ரா.வுக்கு ஈடான ஒரு பங்களிப்பை தமிழ் நவீன இலக்கியத்துக்கு செய்திருப்பவர் பிரம்மராஜன்.
-ஜீ.முருகன் தன் நிலைத்தகவலில்.
சுந்தர ராமசாமியுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு தமிழ் நவீன இலக்கியத்துக்கு பிரம்மராஜன் பெரியதாக எதுவும் செய்துவிடவில்லை ஜீ. முருகன்.
பி.கு. விசிலடிச்சான் குஞ்சுகள் என்னை குறிவைப்பதைவிட்டு கட்சிக்கு ஆட்கள் சேர்க்கும் பயனுள்ள வேலையை பார்க்கவும்.

ஓவியம்: ஆதிமூலம்

பின்னூட்டங்கள்:

Lakshmi Manivannan: உளறுவதற்கெல்லாம் விவஸ்தை கொஞ்சமும் தேவைப்படாது போலிருக்கிறது.நோயுற்றாலும் , பாடுற்றாலும் தங்கள் பொய்யில் தெளிவாக இருக்கிறார்போலுமே ஜி .முருகன் ? தவறில் ஒருநாளும் திருந்தார் தன்மையற்றோர்.பாவம்தான்.

கோணங்கி கல்குதிரைக்காக இவரிடம் ஒரு நேர்காணல் செய்த
ு வைத்திருந்தார் .படித்துப் பார்த்தேன்.சிறப்பாக இருந்தது அதற்குள் இப்படியொரு அத்தர் பல்ட்டியா?கடவுள் காப்பாற்றட்டும்.பிரம்மராஜனை படைப்பாளியாக கருதுபவர்களைப் பார்த்து உள்ளத்தில் சிரிக்கக் கூடியவர் சுந்தர ராமசாமி.அந்த சிரிப்பிற்கு பத்துப் பதினைந்து அர்த்தம் உண்டு.

சூரர்பதி: உண்மைதான்.பிரம்மராஜனுக்கு இணையான கவிதைகள் சுந்தரசாமி ஏதும் படைத்துவிடவில்ல.

Palani Vell: கால பைரவர் நீவிர் அன்பிரண்ட் செய்த பின்னும் ஒரு பின்னூட்டம் 
மணிவன்னா இலக்கிய மேதாவியே சுந்தர ராமசாமி ஒன்றும் கிழிக்கவில்லை உன்னை போன்ற உதாவாக்கறைகளுக்கு வழி செய்ததை தவிர
தில்லோடு நேர் விவாதம் செய்வோம் 


ஆமாம் கால பைரவரே காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றும்


எஸ்.செந்தில் குமார்: சுராவின் பங்களிப்பின் பகுதிகள் முக்கியத்துவமானது. பிரம்மராஜன் கவிஞர் என்கிற அளவில் தனது தீவரத்தை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய கவிதைகள் பிரபல்யமாகதவையாக இருந்த போதிலும் தன்னை அவர் ஒரு கவிஞர் எ்னறு ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. சுரா உரைநடைக்காரர். அவருடைய நவீன கதை சொல்கிற உத்தியை பலரும் கையாண்டு வெற்றிகரமான சிறுகதையாளராக இருக்கிறார்கள். அவருடையகட்டுரை அவருடைய ரசனை சார்ந்த கட்டுரை அல்ல. பதிலாக ஒரு காலத்தின் மதிப்பீடு என்று சொல்லவேண்டும். காலச்சுவடு கண்ணன் என்பதல்லாம் தாண்டி சுரா என்கிற எழுத்தாளனை பின்வரும் யாருடனும் ஒப்பிடுவது முறையல்ல. சுரா பிரம்மராஜன் இரு தனித்தனி உலகங்கள். ஆளுமைகள்.

Peer Mohamed Syed Mohamed: கம்பனைவிட இளங்கோ
தமிழுக்குசுய வரலாறு காவியம் படைத்துள்ளார்.
ஒட்டக்கூத்தனே

இராமணியத்தை நிறைவு செய்தார். இப்படி ஒரு விவாதத்தை ஆரம்பித்து பொழுது போக்கலாமே? தமிழ் நாட்டு படைப்பாளர்களை நினைத்தால் பின்புறமாக சிரிக்கலாம் போல் இருக்கிறது. பிரம்மராஜனின் கவிதைக்கு 
ஈடாக சு.ரா கவிதை இல்லையென்று ஒருவர் நாதஸ்வரம் ...வாசிக்கிறார்.
சு.ரா வின் ஜே.ஜே சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை போல 
பிரம்மராஜன் ஒரு நாவலாவது எழுதியுள்ளாரா? இன்னொருவர் கேட்டால் எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்.?
எதற்கு இந்த ஒப்பீடு? ஒரு திருவள்ளுவர் போலும் ஒரு கம்பனைப்போலும் இன்னொருவர் மேம்பட்டு வரலாம். ஆனால் அவரைப்போல நகல் எடுக்க
முடியுமா? எந்த வகையில் யாரோடு ஒப்பிடலாமென்று யோசிக்கலாமா? கீழ்ப்பாக்கம் என்று ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருப்பதாகக்
கேள்விபட்டுள்ளேன். அங்கே
தேடுவோமா?

ஆத்மாநாம் சர்ச்சை - சமயவேல் கருப்புசாமி

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 26, 2016 - நேரம்: 3.02 PM

ஆத்மாநாம் கவிதைகளின் பிரசுரிப்பின் பாடபேதங்கள் மற்றும் பிழைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பது தமிழின் மிக முக்கியமான கவிஞர் பிரம்மராஜன்.இது குறித்து என்னுடைய நிலை:

1. பாடபேதங்கள் பற்றிய கட்டுரை இவ்வளவு தாமதமாக வருவது ஏன்?
2. பிரம்மராஜனைத் தொடர்பு கொண்டு அவரோடு இணைந்து ஒரு திருத்திய பதிப்பு கொண்டு வரலாமே. பிரம்மராஜன் தமிழ் கவிதைகளுக்கோ ஆத்மாநாமுக்கோ எதிரி இல்லையே.
3. இந்தப் பிரச்னையில் சில நண்பர்கள் அநாகரிகமான மொழியில் பதிவிடுதல் தேவையில்லை.
4. பாடபேதங்கள் என்பது எல்லா மொழிகளிலும் இருக்கும் சர்வ சாதாரணமான விஷயம். அதற்காக பிரம்மராஜன் போன்ற முக்கியமான படைப்பாளியை மட்டம்தட்டும் கட்டுரையாளரின் குரல் அதிர்ச்சியளிக்கிறது.
5. 90களில் யவனிகா ஶ்ரீராம் தொடங்கி சபரிநாதன் வரை எழுதும் கவிதைகளின் மொழியில், பிரம்மராஜன் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மொழியின் தாக்கம் மிக அதிகம். அவ்வளவு முக்கியமான கவிஞர் பிரம்மராஜன்.
6. லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் உழைப்பு மிகு பதிவுகளை மதிக்கிறேன். உணர்ச்சிவசப்படத் தேவையில்லாத ஒரு அற்ப விஷயம் இது.

பின்னூட்டங்கள்:

Riyas Qurana: இந்த அணுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கிறது. மிக்க அன்பு தோழர்.

Tk Kalapria: 2. பிரம்மராஜனைத் தொடர்பு கொண்டு அவரோடு இணைந்து ஒரு திருத்திய பதிப்பு கொண்டு வரலாமே. பிரம்மராஜன் தமிழ் கவிதைகளுக்கோ ஆத்மாநாமுக்கோ எதிரி இல்லையே.// இப்போதைய பதிப்பினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதற்கு addenda/ erratum இணைத்துக் கொள்ளலாம்.இது தவிர்த்தும் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் சரிதான்

அ. ராமசாமி: காலச்சுவடு ஆதரவாளர்கள் போலக்காட்டிக்கொண்டு பதிவு எழுதுபவர்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு காலச்சுவடு பதிப்பகம் மற்றும் இதழுக்கு உண்டு. அதன்சார்பில் ஒருவர் பேசியாகவேண்டும். தவறும்போது தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றும்

கவிஞர் ஜெயதேவன்: எனக்கு சற்று தூரமான விவாதம் என்றாலும் அனைவர் பதிவுகளை வாசித்தேன்..பாரதி முதல் பல முன்னோர் படைப்புத் தொகுப்பில் இது மாதிரி குறை நேர்ந்தது உண்டு..அடுத்த பதிப பில் குறையை சுட்டி திருத்தி. வெளியிடுவர்..இது நடைமுறை..இந்த அளவு விவாதம் போவது என்ன ஆரோக்கியம்.

Perundevi Perundevi: இந்தக் கட்டுரையை வெளியிடும்போதே பிரம்மராஜனின் கருத்துகளையும் கேட்டு வெளியிட்டிருக்கலாம் காலச்சுவடு என்பது என் தாழ்மையான கருத்து. பிரம்மராஜன் தொகுத்த நூல் காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பதால் பதிப்பாளராக ஒரு பொறுப்பு அதற்குண்டு.

              Samayavel Karuppasamy: சரி தான். விரோதங்களின்றி இதை சரி செய்துவிடலாம். காலச்சுவடு சிற்றிதழ்
              பண்பாட்டைக் காப்பாற்றும் என நம்புகிறேன்.


Sudheer Sendhil: இது ஆத்மநாம் கவிதைகள் குறித்த அக்கரையோடு மட்டும் நிற்காமல் சாதிமோதல் போன்று நடத்தப்படும் உரையாடல்களை நண்பர்கள் தவிர்க்க வேண்டும். அ.ராமசாமி கலாப்ரியா சமயவேல் ஆகியோர் கருத்துகளோடு உடன்படுகிறேன்.

அ. வெற்றிவேல்: காலச்சுவடு சார்பில் official யா யாராவது பேசணும்.

S Sankaranarayanan: பாயிண்ட் 6 - அற்ப விஷயம் என முடிப்பது தான் சரியாகப் படவில்லை...அப்பன்னா நீங்களே விட்டிருக்கலாமே? அற்பர்களின் விஷயம் என்று சொல்ல வந்தீர்களா!

                   Samayavel Karuppasamy: கொந்தளிப்பான சில பதிவுகளை சாந்தப் படுத்தும் சொற்கள் இவை. இதழ்களில் வந்த
                  கவிதைகளைத் தொகுப்பாக கொண்டுவரும்போது கவிஞர்கள் சில திருத்தங்களை மேற்கொள்வது இயற்கை. நானே
                  என்னுடைய தொகுப்புகளில் செய்திருக்கிறேன். பிற்கால ஆய்வாளர்கள் கவிஞனை நம்பாமல் இதழ்களை நம்பினால்
                  என்ன ஆகும்? ஆத்மாநாம் நான் நேரடியாகப் பழ்கிய நண்பர். அவரது நோய் பற்றி எல்லாம் இந்த ஆய்வாளர் சந்தேகம்
                  எழுப்புகிறார்.


                   S Sankaranarayanan: இது அற்ப விஷயம் அல்ல... என்பது தான். அப்படித்தான் நீங்கள் வாதிடுகிறீர்கள் என்கிறேன்
                   நான் . அவ்வளவே...


                 Samayavel Karuppasamy: கவிஞர் ஜெயதேவன் பதிலை நான் ஒத்துக்கொள்கிறேன்.

Raja Frames ஒரு அற்ப விஷயம் இது... ! நன்றி சார் !