Tuesday, May 31, 2011

தாகூர் இலக்கிய விருது - 2011

1861-ம் ஆண்டு பிறந்து 1941-ல் பூதவுடலைத் துறந்து இயற்கை எய்தினாலும், தன்னுடைய படைப்புகளின் மூலம் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

'ஜனகன மன' - என்ற பாடலின் மூலம் இந்தியர்களின் இரத்தத்தில் இரண்டறக் கலந்திருப்பவர். வங்காள தேசத்தின் தேசியப் பாடலிலும் இவருடைய பங்களிப்பு இருக்கிறது. இலங்கையின் தேசியப் பாடலை எழுதியவர் தாகூரின் கருத்துகளில் பற்றுடையவர் என்பதால் அங்கும் இவருடைய தழுவல் இருக்கிறது. தேசங்களைக் கடந்து உணர்ச்சிகரமான கவிதைகளின் மூலம் ஒலித்தவருக்கு 1913-ல் கீதாஞ்சலிக்காக நேபால் பரிசு கிடைத்தது. அதன் மூலம் நோபல் பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் படைப்பாளி என்ற பெருமையைப் பெற்றார். கவிஞர், நாடகாசிரியர், சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், கல்வியாளர், பதிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். தாகூரின் பன்முக பங்களிப்பைக் கருத்தில் கொண்ட வாங்க அரசு, தேசத்தில் துவங்கப்படும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு "ர" என்ற எழுத்தை திட்டப் பெயரின் முன்னாள் சேர்த்து மகாகவியைப் பெருமைப்படுத்துகிறார்கள். சாகித்ய அகாடமி, லலித்கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தாகூரின் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி வருகின்றன.

தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய விருதின் 2010-ற்கான பட்டியலை (Tagore Literature Award) அறிவித்திருக்கிறார்கள். விருதுக்கான பரிசீலனையில் 24 மொழிகளில் வெளியான இந்திய படைப்புகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் எஸ் ராமகிருஷ்ணனின் "யாமம்" இடம் பெற்றுள்ள மகிழ்ச்சியான செய்தியை நவீன படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இவருடன் சேர்ந்து எட்டு மொழியின் படைப்பாளிகள் இந்த விருதினைப் பெறுகிறார்கள். ஒரு தமிழ் படைப்பாளி இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்றாலும் விருதானது 2009-ல் தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெபாப்ரட்ட தாஸ் எழுதிய அசாமிய சிறுகதைத் தொகுப்பான "Nirabchita Galpa", சந்தோஷ் கஜுர்லவின் டோக்ரி மொழி கவிதை தொகுப்பான "Bandlondian Bahaaraan", விஜய் டான் தெத்தாவின் ராஜஸ்தானி சிறுகதைத் தொகுப்பான "Bataan Ri Fulwari", சிறுபான்மையினர் மொழியான சந்தளியில் 'சொமை கிஸ்கு' எழுதி வெளிவந்த நாவலான "Namalia", பேராசிரியர் RG ஜதவின் மராட்டிய விமர்சன நூலான "Nivadak samiksha", ப்ரஜ்னத் ரத் எழுதிய ஒரிய கவிதை நூல் "Samanya Asamanya", உருதுக் கவிஞர் சந்தர் பான் க்ஹயல் எழுதிய "Subah-e-Mashriq", எஸ் ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலையும் சேர்த்து மொத்தம் 8 படைப்புகள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எஸ்ராவின் படைப்புகள் மாய வசீகரம் கொண்டவை. வாசகனை உள்ளிழுத்து கற்பனைப் போர்வையில் உலாவச் செய்பவை. பனிக்கட்டியானது வெப்பத்தினால் உருகி, நீர்க் கட்டிகளாகச் சிதறி, நதியாக நகர்ந்து நீராகவே விரியும் இயல்புடையது எஸ்ரா-வின் எழுத்து. மையத்திலிருந்து விளிம்பு நோக்கி நகர்ந்து மீண்டும் மையமாக உருக்கொள்ளும் படிமங்களை இவருடைய எழுத்தில் நிறையவே காணலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய சிற்றிதழான "அட்சரம்" இவரைத் தீவிர இலக்கியவாதியாக அடையாளப்படுத்தியது. 2000-த்தில் வெளியான 'உபபாண்டவம்' தான் எஸ்ராவின் முதல் நாவல். இது மலையாளம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பே இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து இருந்தாலும் ஆனந்த விகடனில் வெளியான "துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி" போன்ற தொடர்கள் தான் எஸ்ராவை பரவலான வாசகர்களிடம் கொண்டு சென்றது. 'துணையெழுத்து' - அன்பும் அரவணைப்பும் கொண்ட முகம் தெரியாத மனிதர்களின் நெருக்கத்தைப் பற்றிக் கூறுகையில், 'தேசாந்திரி' - பயணத்தில் விருப்பமுள்ள தேசாந்திரியாக சுற்றி அலையும் இளைஞனின் பார்வையில் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி பேசியது.

இதுவரை வெளியான எஸ்ராவின் நாவல்களான "உபபாண்டவம், நெடுங்குருதி, உறுபசி, யாமம், துயில்" ஆகிய எதுவும் தொடராக பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. எல்லாமே புத்தக வடிவில் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றில் யாமம் என்ற நாவலுக்குத் தான் 2010-ஆம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

இது நிதர்சனத்திற்கும், மாயைக்கும் இடைப்பட்ட நாவல். இந்த நாவல் மூன்று நூற்றாண்டுகளின் கதையை விவரிக்கிறது. அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு பக்கீர் (அல் அசர் முசாபர்) ஞானியிடமிருந்து கனவின் மூலம் வரமாகப் பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் பத்துத் தலைமுறை வியாபாரக் கதையாக ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் ‘யாமம்’. முக்கியக் கதாப்பாத்திரங்கள் தொடர்பற்று தனித்து நின்றாலும், அத்தர் அவர்களுக்கிடையிலான இடைவெளியை காற்றில் கலந்து வாசனையால் நிரப்புகிறது. சமயத்தில் காமத்தின் குறியீடாக புடைத்தெழுகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்ற விழைந்த போது வாசனைத் திரவியமும், தானியமும், நெசவுத் துணிகளும் முக்கிய வியாபாரப் பொருட்களாகப் பயன்பட்டிருக்கிறது. இந்தியா மேற்கத்திய நவீனத்துவம் நோக்கி நகர்வதையும், மேற்கத்திய காலனியாதிக்க மனோபாவம் இந்தியாவில் காலூன்ற எத்தனிக்கும் தருணத்தையும் ஏராளமான உள்மடிப்புகளுடன் நகர்த்திச் செல்லும் நாவல். இரவானது உறக்கத்திலும், முழிப்பிலும் இருக்கும் மக்களைத் தாண்டி ஏராளமான ரகசியங்களை பூனையின் லாவகத்துடன் கவ்விச் செல்கிறது. இரவின் சுவாரஸ்யம் மிகுந்த உள்படிமங்களே கதைக் களன்களாக விரிகிறது. வித்யாசமான முயற்சிகாக எஸ்ரா விருது பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவல் ஏற்கனவே கனடாவின் இயல்விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


http://koodu.thamizhstudio.com/katturaigal_21.php
நன்றி: கூடு இணைய இதழ், 30-05-2011

Thursday, May 19, 2011

கலைஞருக்கு கடிதம்

பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்:

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். “எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.

உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய “டெசோ’ அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.

ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸூக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது “மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது. ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரஸையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?>கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, “அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக’ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? “மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்’ என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” என்று கூறியுள்ளார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Monday, May 2, 2011

கோடை திரைப்பட விழா - சென்னை

மேற்கத்திய மோகமும், இயந்திரத்தனமான நவீன வாழ்க்கையும் நிகழ்த்துக் கலைகளை நம்மிடமிருந்து விளிம்பின் நுனிக்கு நகர்த்திவிட்டன. அரிதாரம் பூசிய செயற்கை முகங்களின் வரவால், இரத்தமும் சதையுமான வட்டாரக் கலைஞர்களின் இருப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அழிந்து வரும் பழங்காலக் கலைகளை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்யவும், அதைச் சார்ந்த கலைஞர்களின் சமூகச் சிக்கலை ஆவணப்படுத்தவும் காப்பகம் ஒன்றை உருவாக்கி ஒளிப்படங்கள் மற்றும் நூலகம் அமைத்து 1997 முதல் தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் (NFSC) செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற இடங்களிலும், கேரளா, மத்தியபிரதேசம், ஓடிஸா, கர்நாடகா, ஜார்கண்ட் போன்ற இந்திய மாநிலங்களிலும் இவர்கள் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமன்றி அயல்நாட்டினர் பலரும் தமிழகத்தில் நாட்டுப்புற ஆய்வுகளை மேற்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்திலுள்ள NFSC அலுவலகத்தில் திரையிடலுடன் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள எல்லோருக்கும் அனுமதி இலவசம்.

தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையமும் (NFSC), இயக்குனர் அமுதனின் தலைமையில் மதுரையை களமாகக் கொண்டு செயல்படும் 'மறுபக்கம்' அமைப்பும் சேர்ந்து ஏப்ரல் 4 முதல் 8 வரை கோடை திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்காக National Institute Of Design (அகமதாபாத்), மறுபக்கம் (மதுரை), Burundi Film Centre (கனடா), Magic Lantern Foundation (புது தில்லி) ஆகிய நான்கு குழுக்கள் தயாரித்து இயக்கிய 25 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை திரையிடலுக்காக தேர்வு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை திரையிடலுடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது.


1. தட்டும் பொறத்தப்பன் (மலையாளம் - P. சுதேவன்)

சுதேவன் வளர்ந்து வரும் மலையாளக் குறும்பட இயக்குனர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இந்தப் படைப்பில் கேரள அரசியலின் போக்கையும், அரசியல் பிரஞையின்றி வாழும் மக்களின் போக்கையும் தொடர்புபடுத்தி குறும்படமாக எடுத்துள்ளார். மன வளர்ச்சி குன்றிய பிரம்மச்சாரி ஒருவன் உடல்நலம் குன்றி படுக்கையை விட்டு நகர முடியாத தாயுடன் ஒரு பழைய வீட்டில் வசிக்கிறான். அண்டை வீட்டாரின் சிறுசிறு உதவியின் மூலம் இருவரும் நாட்களைக் கடத்துகிறார்கள். அரசியல் காரணங்களால் போலீசாரால் துரத்தப்படும் குற்றவாளி அந்த வீட்டின் பாழடைந்த பரணில் ஒளிந்து கொள்கிறான். தொடர்ந்த மூன்று நாட்களுக்கு அங்கேயே இருக்க வேண்டிய சூழல் குற்றவாளிக்கு ஏற்படுகிறது. பசியையும், தாகத்தையும் போக்கிக்கொள்ள 'தட்டும்பொறத்தப்பன்' என்ற குறுஞ்சாமியாக பிரமச்சாரியுடன் பேசுகிறான். குறுஞ்சாமியின் குரலாக ஒலிக்கும் குற்றவாளியை பிரமச்சாரி முழுமையாக நம்புகிறான். தனது தாயின் உடல்நிலை சரியாகவேண்டி, குற்றவாளி கேட்கும் எல்லா வசதிகளையும் செய்து தருகிறான். பரணில் மலஜலம் கழிக்கும் சப்தத்தை படுத்த படுக்கையிலிருக்கும் தாய் லேசாக உணர்கிறாள். அதைப் பற்றிய சந்தேகத்தை அவள் எழுப்புகிறாள். குலதெய்வத்தை சந்தேக்கிக்கக் கூடாது என்று சீறுகிறான் பிரமச்சாரி. யாரும் பரணுக்கு செல்லக் கூடாது என்று கட்டளைப் பிறப்பித்து காவலுக்கு இருக்கிறான்.

விஷயம் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருகிறார்கள். வீட்டைச் சோதனை செய்யும் போது யாரும் அங்கு இல்லை என்பதால் போலீஸ் திரும்பிச் செல்கிறார்கள். பிரமச்சாரியுடன் சேர்ந்து ஊர் மக்களும் தட்டும்பொறத்தப்பனை நம்புவது போல படம் முடிகிறது.

Links:

Promo: http://www.youtube.com/watch?v=JeTm9I9wzWw

2. மை வில்லேஜ் இஸ் பம்பாய் (ஹிந்தி & தமிழ் - RV ரமணி)

வித்யாசமான முயற்சிகளின் மூலம் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டவர் RV ரமணி. இந்த ஆவணப்படம் பல்வேறு காரணங்களால் அரசு நடத்தும் "சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு" கொண்டுசெல்லப்படும் குழந்தைகள் பற்றியது. பயணச் சீட்டில்லாமல் வெளியூர் ரயில்களின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபடும் சிறுவர்கள், பேருந்து நிறுத்தங்களில் அலையும் சிறுவர்கள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரியும் குழந்தைகள் அனைவரையும் இந்தக் காப்பகத்தில் (Juvenile Homes) தங்க வைத்துப் பராமரிக்கிறார்கள். ராஜஸ்தான், அசாம், ஓடிஸா, கல்கத்தா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல இடங்களிலிருந்து வரும் சிறுவர்களும் இங்கு வைத்து கண்காணிக்கப் படுகிறார்கள். சில குழந்தைகளின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அழைத்துச் செல்கிறார்கள். குழந்தைகள் விரும்பினால் அங்கேயே தங்கியும் படிக்கலாம்.

பிடிபட்ட சிறுவர்கள், அவர்களை பராமரிக்கும் ஊழியர்கள், மீட்கவரும் உறவினர்கள் என்று நேர்முகத்திலேயே முழு ஆவணப்படமும் செல்கிறது. ஆங்காங்கு நகைச் சுவையுடன் எடுக்கப் பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேறி திக்குத் தெரியாமல் அலையும் குழந்தைகளைப் பற்றிய புரிதலை இந்த ஆவணப்படம் ஏற்படுத்துகிறது. கூடவே இனம்புரியாத மன அழுத்தத்தையும் இந்த ஆவணப்படம் படிமமாக விட்டுச் செல்கிறது.

Links:

Website: http://www.ramanifilms.com

3. அதா அஸ்மான் (ஹிந்தி & ஆங்கிலம் -சமினா மிஸ்ரா)

சமினா மிஸ்ரா புதுதில்லியை வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர். இந்திய முஸ்லிம்களின் நிலை, பெண்குழந்தைகள் மற்றும் பெண்களின் நலவாழ்வு குறித்த படைப்புகளில் விருப்பத்துடன் செயல்படுபவர்.

'அதா அஸ்மான்' - உத்திரப் பிரதேசத்திலுள்ள அல்மோரா மற்றும் சீத்தாப்பூர் மாவட்டத்தின் பின்தங்கிய மலை கிராமத்தில் வாழும் பெண்களின் நலவாழ்வை மையமாகக் கொண்ட ஆவணப்படம்.

பெண்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகரான உழவு, கால்நடை பராமரிப்பு போன்ற கடுமையான வேலைகளைச் செய்கிறார்கள். அது முடிந்ததும் வீட்டு வேலைகளையும் அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதற்குத் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வதில்லை. உடல் சுகவீனம் ஏற்பட்டாலும் வேலை செய்வதிலிருந்து அவர்கள் பின்வாங்குவதில்லை. நிலைமை மோசமானால் ஒழிய மருத்துவமனையை நாடுவதில்லை. ஆரம்ப சுகாதார மையம் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதால், உள்ளூரில் இருக்கும் ஒருவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அனுபவத்தின் அடிப்படையில் அவரும் ஊசி போட்டு, ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்கிறார். முறையாக மருத்துவம் பயின்றவர் இல்லையென்றாலும் நோயாளிகள் அவரை வீட்டிற்கே அழைத்து உதவி செய்யுமாறு கேட்கிறார்கள்.

பலவீனமாக உள்ளவர்கள் கருத்தரிக்கும் காலங்களின் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய முறையையும், கருத்தரிக்காமல் இருக்க காப்பர்டீ, ஆணுறை போன்றவற்றை பயன்படுத்துமாறு ஊரக மருத்துவ அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று ஆலோசனை கூறினாலும் வெட்கப்பட்டு மறுத்துவிடுகிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவையனைத்தும் அவர்களுக்குச் சென்று சேர்கிறதா? கிராம மக்களும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்பதும் ஆராயப்படவேண்டியது. ஒரு நாட்டின் வளர்ச்சியே மக்களின் கல்வி அறிவு மற்றும் அடிப்படை மருத்துவ வசதி பெறுவதிலும் தான் இருக்கிறது. நகரம் சார்ந்த வாழ்க்கை பெண்களுக்கான எவ்வளவோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், கிராமப்புறப் பெண்களின் நிலைமை மோசமான ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்திய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

Links:
http://www.youtube.com/watch?v=JNiigBYLtvc

4. ரேடியேஷன் ஸ்டோரிஸ் (தமிழ் - RP அமுதன்)

'பீ', 'செருப்பு' போன்ற குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அமுதன். 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் 'பீ' படத்திற்கு தேசிய ஜூரி விருது பெற்றிருக்கிறார். "இத்தாலி, சீனா, ஜெர்மனி" போன்ற நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் திரையிடப்பட்டு இருக்கின்றன. மதுரை குறும்பட மற்றும் ஆவணப்பட விழாவை 1998 முதல் நடத்திக் கொண்டு வருகிறார். சென்னை கோடைகால திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டவர்.

கதிரியக்கத் தனிமங்களின் இயல்புத் தன்மை பாதிக்கப்படாத வரையில், அபாயகரமான கதிரியக்கத்தை அவை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது வீரியம் மிக்க கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. சரியான முறையில் கழிவு நீக்கம் செய்யாமல் விடுவதன் காரணமாகத் தொழிலாளர்களும் சுற்றியுள்ள மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள்.

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் டைட்டானியம் ஆக்சைடு - இரும்பு, யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக் குறிச்சி என்ற இடத்தில் மிடாலம், பெரியவில்லை, சின்னவேலி ஆகிய கடற்கரை கிராமங்கள் இருக்கின்றன. மீன்பிடித் தொழில்தான் இங்கு பிரதானம். மோனோசைட், தோரியம் போன்ற கதிரியக்கத் தாதுக்கள் கடற்கரை மணலில் கணிசமாகக் கிடைப்பதால், அரசின் அனுமதி பெற்று IREL என்ற தனியார் நிறுவனத்தை அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். பாதுகாப்பற்ற முறையிலான மணல் சேகரிக்கும் பணியில் கிராம மக்கள் கூலித் தொழிலாளியாக ஈடுபடுத்தப்பட்டதால் கதிரியக்கத்தின் வீரியம் அவர்களை பாதித்திருக்கிறது. இதனால் புற்றுநூய், உடல் ஊனம், குறையுள்ள குழந்தைகள் என கிராம மக்களே அவதிப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் ஆவணப்படத்தில் எச்சரிக்கை மணி அடிப்பதுபோல இருக்கிறது.

டாக்டர் லால்மோகன் இதைப்பற்றிய ஆழமான, வலிமைமிக்க ஆதாரங்களை தனது ஆய்வறிக்கையில் முன்வைத்தும் அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. போராடிப்பார்த்து பொருமையிழந்தவர், ஒருநிலைக்கு மேல் இங்கிருக்கப் பிடிக்காமல் அமெரிக்க சென்றுவிட்டதாக அமுதன் தனது கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் சுனாமி போல எழுந்தாலும், அவற்றையும் மீறி பல வேதனைச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிக்கு கடிவாளம் போட அரசு முன்வர வேண்டும் என்பதை இதுபோன்ற ஆவணப்படங்கள் தான் உணர்த்துகின்றன.

Links:

http://magiclanternfoundation.org/blog/2010/08/radiation-stories-at-bangalore
http://www.thehindu.com/arts/cinema/article19223.ece

தொடர்புக்கு:

http://www.indianfolklore.org - 044 2822 9192, 044 4213 8410
மறுபக்கம் - 93444 79353

Thursday, April 14, 2011

கணையாழி திங்களிதழ் வெளியீடு

சிற்றிதழ் வரிசையில் முக்கிய இடம் வகிக்கும் கணையாழி கடந்த சில ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. மூத்த வாசகர்கள் பலருக்கும் இதில் வருத்தம். ஏனெனில் அதன் பாரம்பரியம் அந்த மாதிரி. சக்திகளை ஒன்று திரட்டி ஏசுநாதர் உயிர்த்தெழுந்தது போல கணையாழியும் மெருகேற்றப்பட்டு புதுப் பொலிவுடன் வெளிவருகிறது என்ற செய்தி பலரைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி அளித்தது. திங்களிதழின் வெளியீட்டு விழா தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14-04-2011) சென்னை தி நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது. இதழின் பிரதியை எழுத்தாளர் ஜெயகாந்தன் வெளியிட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்திரா பார்த்தசாரதியின் தலைமையில் விழா நடைபெற்றது. சுவாமிநாதன், தமன் பிரகாஷ், பாலகிருஷ்ணன் (Rtd I.A.S), ஓவியர் ட்ராஸ்கி மருது, நடிகர் நாசர், கவிஞர் நா.முத்துகுமார் மற்றும் குட்டி ரேவதி ஆகியோர் இதழின் சிறப்பு குறித்தும் தனித்தன்மை குறித்தும் உரையாற்றினார்கள்.

"தில்லியில் 1965-ல் கஸ்தூரிரங்கன் கணையாழியை தொடங்கும் போது அரசியல் இதழாகத்தான் இருந்தது. பிறகு நான், அசோகமித்ரன், சுஜாதா போன்றோர் சேர்ந்தபிறகு அது இலக்கிய இதழாக மாற்றம் அடைந்தது" என்று ஆரம்பம் முதல் இதழின் வளர்ச்சி பற்றியும், கை மாறியது பற்றியும் இந்திரா பார்த்தசாரதி சுருக்கமாகப் பேசினார். கடைசியாக "இப்போதுள்ள இதழ்களில் ஒரு சிறுகதைக்கு மேல் பிரசுரமாவதில்லை. குறுநாவல்களைப் பார்க்க முடிவதில்லை. நீண்ட நாவல்களுக்கான இடமும் இல்லாமலே இருக்கிறது. இது போன்ற குறைகளைப் போக்கும் வகையில் கணையாழி இதழ் இருக்கும். கணையாழிக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு" என்று பகிர்ந்துகொண்டார். அதுபோலவே புத்திதழின் பொறுப்பாசிரியராகவும் தனது பொறுப்பை ஏற்றுள்ளார்.

"கணையாழி என்பதை அணிகலன் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அது நம்பிக்கையின் அடையாளம் என்பதற்கான சான்றுகள் நிறையவே இருக்கிறது. கஸ்தூரி ரங்கன் இதழினை டெல்லியில் ஆரம்பித்தபோது இந்திரா பார்த்தசாரதி கணையாழியின் அடையாளமாக இருந்திருக்கிறார். தனது இல்லத்தின் முகவரியையே இதழின் அலுவலக முகவரியாக பயன்படுத்திக்கொள்ள சமதித்ததுடன், ஆசிரியராகவும் இருந்து சிறப்பித்திருக்கிறார். கணையாழியின் வளர்ச்சியில் இபா-வின் அக்கறை என்றுமே தனித் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கிறது என்பதை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த இதழின் மூலம் முகம் தெரியாத பலருக்கும் முகவரி கிடைத்திருக்கிறது. ஒருமுறை நடந்த கணையாழி ஆண்டுவிழாவில் சுஜாதா ஒரு கவிதையை வாசித்தார். இதை எழுதிய கவிஞர் இங்குகூட அமர்ந்திருக்கலாம் என்று சொல்லியபோது மெலிந்த தேகம் கொண்ட ஒருவர் எழுந்து நின்றார். உடனே அவரை மேடைக்கு அழைத்து ஆயிரம் ரூபாயை பரிசளித்தனர். பணத்தை வாங்கியவர் எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார். இதென்ன பரிசுத் தொகையைக் கூடவா ஏமாற்றுவார்கள்? இவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறாரே! என்று யோசனைகள் சென்ற பொழுது 500 ரூபாயை எண்ணி கணையாழிக்கே அன்பளிப்பாக திருப்பிக் கொடுத்து விட்டார். அவர்தான் நா முத்துக்குமார் என்றபோது கரகோஷம் அரங்கின் எட்டு திசையிலும் எதிரொலித்தது. கவிஞரும் இதயத்தில் கைவைத்து மரியாதையைப் பெற்றுக் கொண்டார். கணையாழி எப்போதும் ஒருவருடைய கைகளிலேயே இருப்பதில்லை. கை மாறிக்கொண்டே இருக்கும். இந்த இதழ் சரியானவர்களின் கைகளில் தான் சேர்ந்திருக்கிறது என்ற நிம்மதி எங்களுக்கிருக்கிறது. பல இதழ்கள் தமிழில் வெளிவருகின்றன. அவற்றுக்கு மத்தியில் தடைபட்டிருந்த கணையாழி மீண்டும் வெளிவருவது அவசியம்தானா? என்ற கேள்வி எழலாம். ஒரு விதையைப் போட்டவுடனே முளைத்து விடுவதில்லை. முளைவிட சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. அது போல்தான் இதுவும். கணையாழி விதையின் உறக்க காலத்தில் இருந்து இப்போது முளைத்திருக்கிறது. மீண்டும் விருட்சமாக வளரும்" என்று ம. ராஜேந்திரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக கமலஹாசனுக்கு முன்னோடி சகலகலா வல்லவரும், பல்துறை வித்தகருமான, சத்திய சீலர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. (இதனை ஹரன்பிரசன்னா படிக்க நேர்ந்தால் போராளி, மூதறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, எழுத்தாளர் இத்யாதி என்று சேர்த்துப் படிக்கவும்). ஓயாத தேர்தல் வேலைகளுக்கும், பாராட்டு நிகழ்ச்சிகளுக்கும் மத்தியில் இலக்கியத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். இலக்கிய நண்பர் ஜெயகாந்தனை மகிழ்விப்பதற்காக பாராட்டுக் கடிதத்தை அனுப்பியிருப்பாரோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. கலைஞரின் கரகரப்பில்லாத குரலாக ஒலித்தவர் நா சுவாமிநாதன் என்று நினைக்கிறேன்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ரெ பாலகிருஷ்ணன் I.A.S - கணையாழி குறித்தும், அதற்கு வாசகனாக இருந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார். "கணையாழியைக் கண்டெடுத்த நிர்வாகிகள், கைப்பிடித்த தாளாளர்கள், கண்டுபிடிக்கப்பட்ட படைப்பாளிகள் என மூன்று வகைகளில் கணையாழியைக் குறிப்பிடலாம். இடையில் வெளியீடு நின்றபோது எங்களுக்குள் ஒரு குற்றவுணர்வு எழுந்தது. அது இப்போது நிவர்த்தியாகி உள்ளது. இது போன்ற இதழுக்கு வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்" என்றார். மேலும் இணைய ஊடகத்தில் கணையாழியின் இருப்பை வளர்க்க வேண்டிய அவசியத்தை அழுத்தமாகப் பேசிவிட்டுச் சென்றார். சிறிது காலத்தில் கணையாழியின் இணையப் பக்கங்கள் வாசிக்கக் கிடைக்கலாம் என்று அவர் பேசியதிலிருந்து நம்புகிறேன்.

"பாம்பு தன்னுடைய தோலை உரிப்பதுபோல, மனிதனின் அதிகாரத்தையும், ஆளுமையையும் காலம் உரித்துவிடுகிறது. எஞ்சி இருப்பது மனிதனின் உணர்வு மட்டுமே. அவற்றின் சாரமாகத்தான் இதுபோன்ற சிற்றிதழ்களைப் பார்க்கத் தோன்றுகிறது." என்று கவிஞர் குட்டிரேவதியும் அவருடைய கருத்துக்களை முன்வைத்தார். மூத்த ஓவியர்களான தட்சிணா மூர்த்தி, ஆதி மூலம், பாஸ்கர் போன்றவர்களின் மூலம் கிடைத்த சிற்றிதழ் அறிமுகமும், முயற்சியின் அடிப்படையில் ஓவியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்தியதை பற்றியும் ட்ராஸ்கி மருது பகிர்ந்துகொண்டார். "ஆரம்ப நிலையில் இருந்த எனக்கு எப்படி வாய்ப்பளித்தார்களோ அதேபோல இளம் ஓவியர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமையை வெளிக்கொணரும் செயலை கணையாழி செய்யவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அடுத்ததாக நா முத்துக்குமார் சுஜாதாவை நன்றியுடன் நினைவுகூர்ந்து முகவரியையும், பரவலான கவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த கவிதையை வாசித்தார்.

தூர் - நா முத்துக்குமார்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

அடுத்ததாக நாசர் பேச அழைக்கப்பட்டபோது நேரம் கழித்து வந்ததற்கான வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். "விழா துவங்கி நன்றாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென வந்து சலசலப்பை ஏற்படுத்துவார்கள்" என்ற குற்றச்சாட்டு எப்பொழுதுமே நடிகர்கள் மீது இருக்கிறது. அந்த கெட்டப் பெயரை வாங்கக்கூடாது என்பதற்காகவே எந்த விழாவிற்கு அழைத்தாலும் சீக்கிரம் சென்றுவிடுவேன். இன்றுகூட சரியான நேரத்தில்தான் கிளம்பினேன். சென்னையின் Traffic பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னுடைய வீடு வளசரவாக்கத்தில் இருக்கிறது. சாலையின் ஒருபுறம் சுவர் வேறு எழுப்பி அடைத்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக அதற்கான காரணத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாலையை சுற்றிக் கொண்டு வந்ததில் கொஞ்சம் நேரமானது. மீண்டும் அந்த தடுப்புச் சுவரை கடக்கும்பொழுது காவி உடையில் ஒருவர் எகிறிக் குதித்தார். சிறிது நேரத்தில் வெள்ளை உடையணிந்த ஒருவரும் எகிறிக் குதித்தார். தலையில் குல்லாவேறு அணிந்திருந்தார். அவர்களின் மீது மோதிவிடக் கூடாது என்ற கவனுத்துடன் சென்றபோது ஒருவரின் இருசக்கர வாகனம் முன்னாள் வந்து நின்றது. என்மீது தவறில்லை என்றாலும் சண்டைக்கு வந்தார். அவரிடம் பேசியதில் கொஞ்ச நேரம் வீணானது. இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாளாம். அதன் காரணமாக ஆங்காங்கு கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அதுவும் வாகன நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது. இதுமாதிரி விழாக்கள் அம்பேத்கருக்கே பிடிக்குமா என்று தெரியவில்லை? இதற்கிடையில் தமிழ்ப் புத்தாண்டு குறித்த வாழ்த்துச் செய்திகளும் குறுஞ்செய்தியாக வந்துக் குவிகிறது. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழிகளில் இதுவும் ஒன்றா என்று தெரியவில்லை. அந்தக் குறுஞ்செய்திகளை யாருக்கு அனுப்புவது என்றும் தெரியவில்லை.

"டேய் பொய் சொல்லாதடா. பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காது" என்று அம்மா சொல்லிச் சொல்லி வளர்த்தாள். அப்பாவிற்கு சும்மா இருந்தால் பிடிக்காது. ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். "எரும்பப் பாருடா. கொஞ்ச நேரம் சும்மா இருக்குதா? அந்த மாதிரி இருக்கணும்" என்று ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார். அப்பா, நகைக்கு மெருகேற்றும் வேலையை செய்ததால் தண்ணீர் ஏராளமாகத் தேவைப்படும். எனவே தண்ணீர் சேகரிக்கும் வேலையைத் தான் கொடுப்பார். பள்ளியிலும் "டேய் நல்லா படிங்கடா. அப்பத்தான் வாழ்க்கையில முன்னுக்கு வர முடியும்" என்று ஆசிரியர்கள் வழிநடத்துவார்கள். இந்த ஒழுக்கத்திற்கு நிகரான பண்பை இலக்கியமும் எனக்கு கற்றுக் கொடுத்தது. சினிமாவில் வாய்ப்புத் தேடிய ஆரம்பத்தில், கையில் கணையாழியை சுற்றி வைத்துக்கொண்டு மேதாவி என்பதுபோல அலைந்திருக்கிறேன். படிப்பவர்களின் அடையாளமாக இதுபோன்ற சிற்றிதழ்கள் இருந்திருக்கிறது. நான் சார்ந்த சினிமாத் துறையிலுள்ள குறையையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

என்னிடம் வாய்ப்புகேட்டு வருபவர்களிடம் ஏதாவது புத்தகம் கொடுத்து, முழுவதும் படித்துவிட்டு ஒருவாரம் கழித்து வந்து சந்திக்குமாறு சொல்லுவேன். அப்படிதான் ஒருவருக்கு ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பையும், நாவலையும் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் சொல்லிய பதில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"இதெல்லாம் யாருசார் படிப்பாங்க. மைன்ட் மாறிடும் சார்" என்றார்.

"மைன்ட் மாறினா நல்லதுதானே. படிங்க"-ன்னு சொன்னேன்.

"போங்க சார். வேற ஏதாச்சும் புக்ஸ் இருந்தா கொடுங்க சார்" என்றார்.

"சரி... நாளைக்கு வந்து வாருங்கள்" என்று திருப்பி அனுப்பினேன். அதே புத்தகத்தின் முன் அட்டை, பின் அட்டை, பதிப்பகத்தின் முகவரி என்று எல்லாவற்றையும் நீக்கிவிட்டு அவரிடம் கொடுத்தனுப்பினேன். அந்த கால புத்தகங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தாளரின் பெயர் இருக்காது. ஒருவாரம் கொடுத்து படித்துவிட்டு வருமாறு சொல்லியிருந்தேன். ஐந்தே நாட்களில் அவரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.

"எவன் சார் இந்தக் கதைகளை எழுதியது. ஒவ்வொருக் கதையையும் ஒரு படமா எடுக்கலாம் போல" என்றார்.

"டேய்... நீ யாரப் படிச்சா மைன்ட் மாறிடும்னு சொன்னியோ அவரோட புத்தகங்கள் தான் அது" என்றேன். அது எப்படி காதால் கேட்கும் விஷயத்தை வைத்து, மற்றவர்கள் சொல்லுவதை வைத்து ஒரு புத்தகத்தை மதிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே இளைஞர் நிறைய வாசித்து, இன்றைக்கு சினிமா எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்பது வேறு விஷம். என்றாலும் சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள். எனவே மன மாற்றத்தைக் கொண்டு வர இது போன்ற இதழ்கள் அவசியம். வாய்ப்புத் தேடிய காலத்தில் கணையாழியை எப்படி சுருட்டி வைத்துக் கொண்டு சென்றேனோ, அதேபோல நாளைக்கு சூட்டிங்க்கிற்கு செல்லலாம்" என்று உரையை நிறைவு செய்தபோது உற்சாகமான கைதட்டலைப் பெற்றார்.

"கணையாழியில் நான் எழுதியது இல்லை. ஆனால், என்னைப் பற்றிகணையாழியில் எழுதி இருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் தொடாத விஷயமே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். பேசிப்பேசி அலுத்துவிட்டது. எனவே விலகி நின்று அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கத் தோன்றுகிறது. எழுதி எழுதியும் அலுத்துவிட்டது. எனவே அடுத்தவர்கள் எழுதுவதை வாசிப்பதில் விருப்பம் அதிகமாகிறது. தடைப்பட்டிருந்த கணையாழி இதழ் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியே. இதன் மூலம் பல வாசகர்களின் ஏக்கத்தை நண்பர்கள் தீர்த்துவிட்டனர். இதுவரை இல்லாத சிறப்பு கணையாழிக்கு வரும். இது என்னைக் கூட எழுத வைக்கும்" என்று சொல்லி ஜெயகாந்தன் நிறுத்தியபோது அரங்கம் அதிர்ந்தது.

கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் சேது சொக்கலிங்கம் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.

நீண்ட நாட்களுக்குப்பின் மலேசிய நண்பர் விக்னேஸ்வரன் gtalk-ல் பேசினார். அவரிடம் கணையாழி வருவது குறித்து தெரியப்படுத்தினேன்.

"மகிழ்ச்சியே... இருந்தாலும் கடைசி பக்கங்கள் இருக்காதே நண்பா" என்றார்.

அவரைப் போன்ற தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு கணையாழியானது, கடைசி பக்கத்திற்கு முன்பக்கத்துடன் முடிந்துவிடும் என்பதும் நிதர்சனமே...

சந்தா விவரம்:

ஆண்டு சந்தா - 220 ரூ (இந்தியா) - 30 யூ எஸ் டாலர் (வெளிநாடு)
இரண்டு ஆண்டு சந்தா - 440 ரூ (இந்தியா) - 50 யூ எஸ் டாலர் (வெளிநாடு)
ஆயுள் சந்தா - ரூ 5000 (இந்தியா) - 300 யூ எஸ் டாலர்.

தொடர்பிற்கு: kanaiyazhi2011@gmail.com

முகவரி:
கவிதா பப்ளிகேஷன்ஸ்,
மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,
தியாகராயநகர், சென்னை - 17
தொலைபேசி: 2436 4243, 2432 2177

Wednesday, April 13, 2011

சிறுகதைப் போட்டி - 2011

நெய்வேலி, ஏப். 12: தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறந்த சிறுகதைகள் சில விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் 14-வது ஆண்டு நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியை ஒட்டி, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்திவருகிறது. இதில் தமிழகம் முழுக்கவுள்ள எழுத்தாளர்கள் பலர் பங்கேற்று பரிசுகளை வென்றுவருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர் கீழ்கண்ட விதிகளுக்குள்பட்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி சிறுகதைகள் தமிழனின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகாதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

போட்டி முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் பிரசுரிக்கப்படும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்.

முதல் பரிசு - ரூ.10 ஆயிரம்
இரண்டாம் பரிசு - ரூ.5 ஆயிரம்
மூன்றாம் பரிசு - ரூ.2 500
ஆறுதல் பரிசுகள் - தலா ரூ.1,250 (5)

1)போட்டி தொடர்பாக கடிதப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
2) சிறுகதைகளை - "தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி, தினமணி நாளிதழ், எண்-29, 2-வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-600058 என்ற முகவரிக்கு ஜூன் 4-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்."

நன்றி: தினமணி நாளிதழ்

*****************************************************************************************************

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011

படைப்பாளிகளே, வாசக எழுத்தாளர்களே! நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி வந்தே விட்டது!

தவிர, பிரசுரத்துக்குத் தேர்வாகும் ஒவ்வொரு கதையும் ரூ 500 சன்மானம் பெறும். யார் வேண்டுமானாலும், எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். என்றாலும், எழுதுபவர் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவராகவோ அல்லது அறிமுக எழுத்தாளராகவோ இருந்தால் சிறப்புப் பரிசு உண்டு.

முதல் பரிசு : ரூ 10,000/-
இரண்டாம் பரிசு : ரூ 7,500/-
மூன்றாம் பரிசு: ரூ 5,000/-

விதிமுறைகள்:

* கல்கியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது.

* சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்படமாட்டா.

* அறிமுக எழுத்தாளர் எனில், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலும் எழுதியதில்லையென்றும், போட்டி முடிவு வெளியாகும் வரை எழுதுவதில்லை என்றும் உறுதிமொழி தர வேண்டும்.

* படைப்பாளி முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவராக இருந்தால், அதற்கான ஏதாவதொரு அத்தாட்சி (பத்தாம் வகுப்பு டி.சி. - ஜெராக்ஸ் போன்றவை. நகல் மட்டுமே அனுப்பவும்) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

* முழு வெள்ளைத்தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

* தேர்வாகாத கதைகளைத் திரும்பப்பெற, போதிய தபால்தலைகள் ஒட்டிய அஞ்சல் உறை இணைக்கப்பட வேண்டும். பின்னால் தனியே அனுப்பிப் பயனில்லை.

* போட்டிக்கு அனுப்பும் கதையை, முடிவுகள் வெளியாகும் வரை வேறு இதழுக்கோ, இணையதளத்துக்கோ, வலைப் பதிவுகளுக்கோ, போட்டிக்கோ அனுப்பக்கூடாது.

* மின்னஞ்சலில் கதைகளை அனுப்புவோர் சப்ஜெக்ட் லைனில் ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி-2011’ என்று குறிப்பிட்டு kalki@kalkiweekly.comக்கு அனுப்பலாம். கதைகள் இணைப்பாக (அட்டாச்மென்ட்) யுனிக்கோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.

* பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி.

* முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, இமெயில் விசாரிப்புகளோ கூடாது.

* ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி-2011’ என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு, அனுப்ப வேண்டிய முகவரி :

ஆசிரியர்,
கல்கி,
கல்கி பில்டிங்க்ஸ்,
47-NP, ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 600 032.

* கதைகள் வந்து சேரக் கடைசித் தேதி: ஜூன் 15, 2011

* போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் ஆகஸ்ட் 7, 2011 ஆண்டு மலரில் வெளியாகும்.

படைப்பாளிகள், வாசக எழுத்தாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.

- ஆசிரியர் - கல்கி

நன்றி: அகநாழிகை.

Tuesday, March 22, 2011

2011 - காடுகளின் ஆண்டு

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்கால சந்ததி பயனுரவும் சில சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் நான் முக்கியமாகக் கருதுவது உலக வனதினம் - மார்ச் 21 (World forest day), உலக தண்ணீர் தினம் மார்ச் 22 (World Water Day) மற்றும் உலக வானிலை தினம் - மார்ச் 23 (World Meteorological Day) ஆகியவைதான். வானிலை, நீர், காடு ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவை.

பூமியானது தட்டை என்பதால் இயற்கையிலேயே சில இடங்கள் பாலைவனமாகவும், சில இடங்கள் காடுகளாகவும் காணப்படுகிறது. பாலைவனத்தை ஒன்றும் செய்வதற்கில்லை என்பதால் அவற்றின் இயல்பிலேயே விட்டுவிடுகிறோம். காடுகலானது யொவனப் பெண்மாதிரி. வாய்ப்புக் கிடைக்கும்பொழுது அபகரிக்கத் தொடங்குகிறோம். துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவியது போல இயற்கை வளங்களை உருவிக்கொண்டிருக்கிறோம். அரசுகளும் கண்கள் பொசுங்கிய திருதுராஸ்டன் போல வேடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையுடன் ஆடும் காம விளையாட்டில் தோல்வி காண்பது மனிதர்களாகவும், பாதிப்புகளை பெருமளவு சந்திப்பது ஒன்று முதல் ஐந்தறிவு உயிர்களாகவும் அமைந்துவிடுகிறது. ஜப்பான் சுனாமியில் ஏற்பட்ட மனித இழப்புகளையும், ஃபுகுஷிமா தைச்சி அணு உலை வெடிப்பின் கதிர்வீச்சு சீற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மட்டுமே பேசுகிறோம். அங்கிருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சி, புழுக்கள் பற்றி யோசிக்கிறோமா? அவற்றின் அழிவும் நம்முடைய செயலால் தானே ஏற்பட்டது.

இந்த வருடத்தை (2011) காடுகளின் ஆண்டாக (International Year of Forests, 2011) அறிவித்திருக்கிறார்கள். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரித்து வருவதால், அதன் வெப்பக் கதிர்களின் வேகம் சற்று தணியும். அதனால் பனிப் பொழிவுகள், மழை அளவு அதிகரிக்கப் போகிறதாம். போதாக் குறைக்கு நிலவு வேறு இதுவரை இல்லாத கோணத்தில் சூரியனிடம் நெருங்கிச் செல்ல இருக்கிறதாம். மேற்கண்ட இரண்டு காரணங்களால் இந்த வருட மழையின் அளவு அதிகரித்து காடுகள் செழிப்பாக வளரும் என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள். ஆகவேதான் இந்த வருடம் காடுகள் ஆண்டாக முன்மொழிந்திருக்கிறார்கள். இதில் முரண் என்னவென்றால், ஒரு வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே மழை பொழிந்து, எந்த நாட்டில் புதிதாக காடுகள் வளந்துவிடப் போகிறது. மென்மேலும் உயரும் மக்கள் தொகையால் காடுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகளை உண்டாக்குகிறோம். தயவுசெய்து காடுகளை அழிக்காதீர்கள், நம் சந்ததிகளுக்காக இயற்கையைக் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி வன தினமாக கொண்டாடுமாறு அறிவித்திருக்கிறார்கள். கெஞ்சல்களுக்கு மனமிறங்கி மிச்சம் வைக்கும் காடுகள் வேண்டுமென்றால் ஓரளவிற்கு வளரலாம்.

3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”, சத்குரு வாசுதேவ், பாரம்பரிய விதைகளின் உரிமைக்காகப் போராடும் வந்தனா சிவா, வாழை மரபணு வங்கியை ஏற்படுத்தியுள்ள எஸ்.உமா போன்றவர்கள் முனைப்புடன் செயல்பட்டாலும் இந்த விஷயத்தில் ஒவ்வொரு தனிநபரும் அக்கறை எடுக்க வேண்டும். நம்முடைய வீட்டின் முற்றத்திலோ, தெருவிலோ, சுற்றத்திலோ மரம் வளர்த்து நம் சந்ததிகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவ வேண்டும். மரங்கள் இல்லையேல் வானமும் பூமியும் எப்படி குளிரும்?

"ஸ்சப்பா... நாளுக்கு நாள் இந்த வெயில் அதிகமாகிக்குனே போகுதே?" என்ற கிசுகிசுப்பை உலகின் பல பகுதிகளிலும், பல மொழிகளிலும் சரளமாகக் கேட்க முடியும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பூமியை நோக்கி சூரியக் கதிர்கள் எப்படி தவழ்ந்து வந்ததோ, அதே வீரியத்தோடுதான் இப்பொழுதும் வெயிலின் கற்றைகள் கசிந்தோடுகிறது. எனில் பூமியின் மனிதர்கள் நாளுக்கு நாள் வெயிலின் சூட்டை அதிகமாக உணர்வது ஏன்? வெக்கையில் சிணுங்குவது ஏன்?

காட்டுமிராண்டித் தனமாக இயற்கையை கபளீகரம் செய்கிறோம் என்பதுதான் முக்கியக் காரணம். வாகனங்களின் கரும்புகை, குளிர்பதனப் பெட்டிகளின் குளோரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீடு, தொழிற் சாலைகளின் வேதிப்புகை, போதைக்காக உறிஞ்சி வெளிவிடும் புகையிலை, கஞ்சா போன்றவற்றின் மதுப்புகை என்று மனிதர்களின் அன்றாட தேவைகளுக்காக ஒவ்வொரு நிமிடமும் சுற்றுச்சூழலை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, பிராண வாயுவான ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடும் ஒரு வகையில் பூமியின் உஷ்ணத்திற்குக் காரணம். இதனை சமநிலை செய்ய மரங்கள் இருந்தால் தானே உலக உயிர்கள் நீண்ட நாள் வாழ முடியும்.

நாம் காடுகளை அழிக்கும்போது வாயு மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கிறது. நவீன விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பராமரிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இதர முறையற்ற நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை வளிமண்டலத்தில் அதிகரிக்கச் செய்கின்றன. நவீன மின் சாதனங்களின் பயன்பாடு "க்ளோரோ ஃபுளூரோ கார்பன்"கள் போன்ற வேதிக் கூறுகளை வேளியேற்றுகின்றன. CFCக்கள் ஓசோனில் ஓட்டைகள் ஏற்படக் காரணமாகின்றன. அதிகரிக்கப்பட்டு வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. இதுவே சங்கிலித் தொடர்புபோல் தண்ணீர்ப் பிரச்சனைக்கும், பூமி வெப்பமடைவதற்கும் காரணமாக அமைகிறது.

உலகமே தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒரு சதவீத தண்ணீர் மட்டுமே உயிர் வளர்க்கப் பயன்படுகிறது. குட்டை, குளம், கிணறு, எரி, ஊற்று, அருவி, ஓடை, நதி, ஆறு, மழை, நிலத்தடி நீர் என பல வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. என்றாலும் துருவப் பகுதிகளில் பனிக் கட்டிகளாக உறைந்திருப்பதே அதிகம். உலகமே நீரால் சூழப்பட்டிருக்கிறது எனில் தண்ணீர்ப் பற்றாக்குறை எப்படி வருகிறது என்று நாம் யோசிக்க வேண்டும். பிரச்னையை ஆரம்பத்திலேயே வேரறுக்காமல் சமாளிக்கப் பார்க்கிறோம். அந்த சமாளிப்புகளில் ஒன்றுதான் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவு 5.5 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என்று 2004 ஆம் ஆண்டு தோராயமாக கணக்கு சொன்னார்கள். இன்றைய தேதியில் அதற்கும் அதிகமாக செலவாகலாம். இவ்வளவு பெரிய தொகையை ஒரு திட்டத்திற்கு பயன்படுத்துவதின் மூலம் தேசத்திற்கு ஏற்படும் எதிர்விளைவுகளையும், பாதிப்புகளையும் நாம் யோசிப்பதே இல்லை. சினிமா நடிகர் உண்ணாவிரதம் இருந்து, ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து துவக்கி வைத்தால், அதைவிடச் சிறந்த திட்டம் இல்லை என்ற மனநிலையில் தான் இருக்கிறோம். பத்திரிகைகளும் அவற்றை பெரிதுபடுத்தி நிபுணர்களின் கருத்தை ஆழப்புதைக்கும் செயலையே செய்கின்றன.

நீரின்றி அமையாது உலகு என்பதை கொஞ்சம் உற்று நோக்கினால் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். ஓர் ஏக்கர் நிலம் பயிர்செய்ய 2000 லிட்டர் தண்ணீர் பயன்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதே அளவு தண்ணீர் ஒரு காரினைத் (Car) தயாரிக்கவும் பயன்படுகிறது. மரப்பொருட்களைத் தவிர்த்து மற்ற எல்லா உற்பத்திக்கும் தண்ணீரின் பயன்பாடு அத்யாவசியமான ஒன்று. பன்னாட்டுத் தொழிற்ச் சாலைகளின் தயாரிப்புக் கிடங்குகள் இந்தியாவில் இருப்பதின் முக்கிய நோக்கமே இதுதான். இந்தியாவின் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக ஆரம்பம் முதல் இருந்துள்ளது. ஹீரோஹோண்டா, ஹுண்டாய், ஃபோர்ட், ரெனால்ட் நிஸ்ஸான் என்று எத்தனை தொழிற்ச்சாலைகள். ஒவ்வொரு நிறுவனமும் லட்சக் கணக்கான வாகனங்களை ஒவ்வொரு வருடமும் தயார் செய்து சந்தைக்கு அனுப்புகிறது. அவற்றில் இந்தியர்களின் வியர்வை மட்டுமில்லை, விலை மதிக்க முடியாத தண்ணீரும் உறைந்திருக்கிறது. ஒரு வருடத்தில் இவ்வளவு வாகனங்கள் தான் உற்பத்தி செய்யவேண்டும் என்ற விதியினை நிர்ணயிக்கலாம். அமேரிக்கா எவ்வளவு நிர்பந்தித்தாலும், பெட்ரோல் கொழிக்கும் நாடுகளின் அரசுகள் அதுபோன்ற விதிமுறைகளைத் தானே கடைபிடிக்கின்றன. இதுபோன்ற கடிவாளங்களைப் போடாமல் காலத்தையும், பணத்தையும் வீணாக்கும் செயலையே நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக, ஓர் ஊராட்சியில் தோராயமாக 60 கிராமங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவற்றில் 30 கிராமங்களில் கோவிலும், அதற்குச் சொந்தமான குளமும் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குளங்களைத் தூர் வாருவதற்காக, ஒவ்வொரு குளத்திற்கும் ரூபாய் 1 லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் ஓர் ஊராட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை சரியாகப் பயன்படுத்தினால் குளத்தை நல்ல முறையில் பராமரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யலாம். காய்ந்த ஆகாயத் தாமரையை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தவும், குளத்தின் கரையை ஒட்டி வளர்ந்த புல் பூண்டுச் செடிகளை வெட்டவும் மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுள் மழைநீர் சேகரிப்புத் திட்டம் ஆகச் சிறந்த ஒன்று. இவையிரண்டையும் சமரசமின்றி ஒழுங்காகச் செய்தாலே பாதி பிரச்சனையைத் தீர்கலாம். இதன் மூலம் இயந்திரங்களால் அளவுக்கதிகமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு ஏற்படும் வெற்றிடமும், நல்ல தண்ணீரில் கடல்நீர் கலப்பதையும் வெகுவாகக் குறைக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் கூட மனிதக் கழிவுகளையும், தொழிற்ச்சாலைகளின் நச்சுக் கழிவுகளையும் இட்டு நிரப்புகிறோம். உதாரணத்திற்கு அடையாறு, கூவம் போன்றவற்றை இங்குக் குறிப்பிடலாம். தோல் பதனிடுதல் மூலம் அபாயகரமான நச்சுக் கழிவு பாலாறில் சேர்வதை நாம் அறிந்ததே. ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் சாயக் கழிவுகளால் ஏற்படும் சிக்கல்களும் நமக்குத் தெரிந்ததே.

நல்ல இடங்களை மாசுபடுத்திவிட்டு, இனி ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுணர்ந்து, அதற்காக ஒரு 200 கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்தும் நடைமுறையில் தானே இருக்கிறோம். கோவில் குளத்தை சுரண்டுபவர்கள் கூவம் திட்டத்தையா விட்டுவைக்கப் போகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நதிநீர்த் திட்டம் அரசியல் செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

"இன்று வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடலோரப் பகுதிகளின் சில இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தெரியப்படுத்தினால் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறோம். அந்த கேலிப் புன்னகையின் அஸ்திவாரத்தை கட்டமைத்ததில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் பங்குண்டு. இயற்கை பல சாதங்கங்களை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. அவற்றை சரியாகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். காடுகளை வளர்த்து, தண்ணீரை சேமித்து உலகை ரட்சிப்பது நம் கையில் தான் உள்ளது. இதற்காக எந்தக் கடவுளும் பூமியில் இறங்கி வரப் போவதில்லை.

அடுத்ததாக, 2011ம் ஆண்டை சர்வதேச ரசாயன ஆண்டாகவும் (
International Year of Chemistry 2011) ஐ.நா. அறிவித்திருக்கிறது. வனப்பகுதிகளை அதிகரிக்கும் அதேநேரத்தில், பூமியை பாதுகாக்க ரசாயனங்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் உள்நோக்கம். மெழுகுப் பூச்சு, உலோகப்பூச்சுக் கொண்ட பாலித்தீன் பைகளையும், ரசாயன உரங்களையும், நச்சுக் கழிவுகளையும் குறைப்பதின் மூலம் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும் என்று நினைக்கிறேன்.

Sunday, March 20, 2011

சிட்டுக்குருவி தினம்

மார்ச் 20 - சிட்டுக்குருவி தினம் (House Sparrow) என்பதால் கவிஞர் ஆசைத்தம்பியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதன் தாக்கத்தில் தான் இந்தப் பதிவு. இந்தப் பறவையினத்தை சிட்டு, ஊர்க் குருவி, அடைக்கலாங் குருவி என்றும் கூட அழைக்கிறார்கள். "இந்தியாவில் அதிகமாகக் காணக் கிடைக்கும் பறவை எது?" என்று பறவையியல் அறிஞர் சலீம் அலியிடம் கேட்கப்பட்டதாம். காக்கையையும், சிட்டுக்குருவியையும் சொல்லலாம் என்று பதில் கூறினாராம். மனிதர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இவையிரண்டையும் காணமுடியும். ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் சிட்டுக் குருவிகளுக்கு வசதியான இருப்பிடங்கள். வீட்டின் எதோ ஒரு மூலையில் உத்திரத்திற்கு இடையில் கூடுகட்டி வாழப் பழகியவை. வீதிகளில் உள்ள மின்சாரக் கம்பிகளின் சட்டகத்தில் கூட இவற்றின் கூடுகளைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய தாய் வழிப் பாட்டி வீடு அந்த காலத்தில் கட்டப்பட்ட மூன்றடுக்கு சுண்ணாம்பு வீடு. கட்டடத்தைத் தாங்குவதற்காக நீண்ட மரச் சட்டங்களை உத்திரத்தில் ஆதாரமாகக் கொடுத்திருப்பார்கள். ஆங்காங்கு முற்றங்கள் இருக்கும் பெரிய வீடு. அந்த முற்றங்களில் நிமிர்ந்து பார்த்தால் சிட்டுக் குருவிகள் குதூகலத்துடன் கூட்டில் உறவாடும். ஒட்டடை அடிக்கும்பொழுது கூட பறவைகளின் கூடுகளை சிதைக்க மாட்டார்கள். "கூட்டக் கலச்சா குடும்பத்துக்கு ஆகாது" என்று சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மாட்டு வண்டிகளில் நெல்மூட்டைகள் ஏற்றும்பொழுது சிந்தும் நெல் பருக்கைகளையும், சாயந்திர நேரத்தில் தண்ணீர் தெளித்து போடும் வெள்ளைக் கோலங்களின் அரிசி மாவையும் சிறிய அலகால் கொத்தித் தின்பதைப் பார்த்திருக்கிறேன். நம்முடைய வீட்டின் கட்டுமானம் தற்போது முற்றிலும் மாறி இருக்கிறது. வீட்டின் வடிவமைப்பு நம்முடைய இருப்பிற்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். நம்மை ஒட்டி வாழும் பறவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதே வருத்தமான உண்மை.

நம்முடைய கலாச்சாரமும் வாழ்வியல் முறையும் மாறமாற, நம் சார்ந்த பூகோள உயிரினங்களின் வாழ்வியல் பிரச்சனையாக மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். இன்றும் என்னுடைய கிராமத்தில் மார்கழி மாத கோலம் போடுகிறார்கள். சாணியை கோலத்தின் நடுவில் வைத்து பூசணிப்பூவை நடுகிறார்கள். கோலத்தில் அரிசி மாவைவிட வேதிப் பொருளான வண்ணப் பொடிகளையே (Color Powder) அதிகம் இட்டு நிரப்புகிறார்கள். புகைபடிந்த பனியின் இருளில் இறங்கி நடந்தால் மஞ்சளும், சிவப்பும், பச்சையும், வெல்வெட்டும் தெறிக்கின்றன. முற்றத்தை அழகுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு மண்ணின் தரத்தை வேதிக் காரங்களும், அமிலங்களும் தின்னக் கொடுக்கிறோம். இன்னும் சிலர் கோலம் அழியாத வண்ணம் Paint-டால் கூட வரைந்துவிடுகிரார்கள். வீட்டின் சுவர்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ணப்பூச்சுகளின் உப பொருட்களான வார்னிஷ் போன்றவற்றின் பயன்பாட்டினால் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்கள். AC, Fridge போன்றவற்றின் க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் பற்றி எல்லோரும் பரவலாக அறிந்ததே. காற்றின் வெப்பநிலை உயர்வும் பறவைகளின் இயல்பான வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.

விவசாயப் புரட்சி என்ற அதி நவீனக் கொள்கையில் நச்சுத்தன்மை கொண்ட உரங்களையே நிலங்களில் பயன்படுத்துகிறோம். 65% விவசாய நிலங்கள் வேதி உரங்களால் தான் பயிராகிறது. பயிர்கள் வளர்ந்த பிறகும் பூச்சிக் கொல்லி அமிலங்களை இயந்திரத்தின் மூலம் தெளிக்கிறோம். வேதித் தன்மை அதிகமாகும் நிலங்களில் புழுக்கள் எப்படி வளரும். காற்றில் கலந்த அமிலத்தை மீறி பூச்சிகள் எப்படி வளரும். பின்னர் பறவைகளுக்கு எப்படி பசி தீரும். இதில் பிளாஸ்டிக், பாலித்தீன், உலோகப் பூச்சு மைக்காப் பைகளினால் வேறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். முன்பெல்லாம் கிராமத்திற்கு வருபவர்களை நிழல்தரும் மரங்களே வரவேற்கும். இப்பொழுதெல்லாம் மக்கா குப்பைகளே வரவேற்கின்றன. இதில் பாலித்தீன் கவர்களுக்கு தடைவிதித்த கேரளா அரசின் தைரியமான முடிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பசு, எருது போன்ற கால்நடை வளர்ப்பு இயற்கையை வளப்படுத்த பெரிதும் உதவும் என்கிறார்கள். குறிப்பாக பசுவின் சாணம் கிருமி நாசினியாக மட்டுமில்லாமல் அணுப் பிளவின் கதிர்வீச்சுத் தன்மையிலிருந்தும் பாதுகாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அடுத்த முக்கியமான பிரச்சனை பெட்ரோல் மற்றும் தொழிற்ச்சாலைகளால் ஏற்படும் கற்று மாசுபாடு. இந்த மாசுக் காரணிகளால் பாதிக்கப்படும் பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்பதில்லை. அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடும், முடுக்கிவிடப்படும் தொழில்மயமும் காற்றின் மாசுபாட்டை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யப்போகின்றன. அண்டார்ட்டிக்காவிலிருந்து திரும்பிய பனி மனிதனின் ஆங்கிலப் பேட்டி உறைய வைப்பதாகவே இருக்கிறது. இதே முறையில் மக்கள் வாழ்ந்தால், பெட்ரோலை அதிகமாகப் பயன்படுத்தினால் இன்னும் 80 முதல் 100 ஆண்டுகளில் சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்று ஆரூடம் சொல்கிறார். "ச்சே ச்சே இதெல்லாம் நடக்குமா என்ன?" என்ற சந்தேகம் வரலாம். கடலில் மூழ்கிய பூம்புகாரில் ஏராளமான தங்க வைர நகைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மாமல்லபுர அழகிய சிற்பங்களில் பலவும் கடலில்தான் மூழ்கி இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். அதுபோலவே சென்னையின் கோட்டையும், இதர நகரங்களின் சிம்மாசனங்களும் மூழ்கலாம் இல்லையா? சென்னையின் மக்களே உங்களின் பங்காக கடலன்னைக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்?.

நீர் மாசுபாட்டின் ஏகோபித்த பங்கு தொழிற்ச்சாலைகளையே சாரும். எனினும் ஆற்றில் நீர் இருந்தால் தானே நீர் மாசுபடுவதற்கு. மணல் திருடுவதற்கு நீர் இருந்தால் எப்படி?. நிலத்தடி நீர் மட்டும் என்ன வாழ்கிறது. இந்தியாவிலிருந்து சுரங்கப்பாதை தோண்டி அமெரிக்க, ஜப்பான், வளைகுடா போன்ற நாடுகளுக்குச் செல்ல ஆராய்ச்சி நடக்கிறது. இதைச் சொல்லும் என்னை பைத்தியக்காரன் என்று நீங்கள் சிரிக்கலாம். வானத்தில் பறக்க முடியும் என்று சொன்னபோது ரைட் சகோதரர்களைப் பார்த்து உலகமே சிரித்ததாம். இதைப்படிக்கும் தமிழ் சமூகம் ரொம்பக் குறைவு. அதிலும் சிவனைக் கூட பித்தன் என்று சொல்லும் மரபுதானே நம்முடையது. யதார்த்தமாக யோசித்தால், மழைநீர் சேமிப்பை செயல் திட்டமாகக் கொண்டுவரும் அரசை அடுத்த முறை வீட்டிற்கு அனுப்புவோம். நமக்கு கிரைண்டரும், மிக்ஸியும், டிவியும் தானே முக்கியம். மின்சாதனப் பொருட்களை மீறி யோசித்தால் மூலையில் ரத்தக் கசிவு அல்லவா ஏற்படும்.

கடைசியாக செல்போன் கோபுரங்களுக்கு வருவோம். வானுயர்ந்த கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு சிட்டுக் குருவியின் அழிவிற்கு முக்கியமான காரணம். இவற்றின் அருகில் குருவிகளின் கூடு இருந்தால் அவற்றின் வாழ்நாள் குறைகிறது. குருவிகளின் மலட்டுத் தன்மைக்கும், நாட்கடந்த குஞ்சு பொறித்தலுக்கும் இந்த அலைக்கற்றைகள் காரணமாக அமைகின்றன. பொதுவாக 10 முதல் 15 நாட்களில் குஞ்சு பொரிக்கும் இந்த பறவைகள், செல்போன் கோபுரங்களின் அருகில் குஞ்சு பொறிக்கும் காலங்களில் இருக்க நேர்ந்தால் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களை எடுத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். தெருவில் புணரும் நாயின் குறி மீது கல்லெறிவதும், அடைகாக்கும் பறவைக்கு சிக்கலை ஏற்படுத்துவதும் ஒன்றுதானே.

பூச்சி புழுக்களையும், பூவின் மொட்டுக்களையும், தானிய வகைகளையும் உண்டு வாழும் பறவைகளுக்காக கொஞ்சம் யோசிப்போம். எளிய வாழ்க்கை வாழும் அவைகளுக்காக நம்முடைய அதீதமான வசதிகளில் தேவையில்லாத கொஞ்சத்தைக் குறைத்துக் கொள்வோம். சிட்டுக் குருவிகளும் ஊரில் உலகத்தில் வாழட்டுமே.