Saturday, November 27, 2010

கேணி - ஓவியர் சந்திப்பு

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லரின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்பதை மனோகர் தேவதாஸின் கேணி சந்திப்பில் உணர்ந்தேன்.

நாம் உண்ணும் உணவின் சக்தியில் நிறைய கலோரியை கண்பார்வைக்குத் தான் செலவிடுகிறோம். இருந்தும் நம்முடைய பார்வைத் திறன் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் அவற்றை நிவர்த்தி செய்தாலும், மனிதனுடைய கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடக்கூடிய குறைபாடுகளும் இருக்கத்தானே செய்கிறது. அவற்றில் ஒன்று தான் "ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா (Retinitis pigmentosa)". தீர்க்க முடியாத இந்த பார்வைக் குறைபாட்டிற்குச் சொந்தக்காரர் மனோகர் தேவதாஸ். அதனை பொருட்படுத்தாமல் அவர் நம் சமூகத்திற்கும், பாரம்பரியத்திற்கும் - ஓவியமாக, புத்தகமாக, கலை வடிவாக செய்திருப்பது ஏராளாம். அந்த பணிகளின் மூலம் சாதித்ததும், கொடுத்ததும், கொடுத்துக் கொண்டிருப்பதும் ஏராளம்... ஏராளம்...

30 வயது வரை கண் பார்வை இருந்து, அதன் பிறகு இல்லாமல் போவது சகிக்க முடியாதது. அதுவும் ஓர் ஓவியனுக்கு இந்த நிலைமை என்பது கொடூரமானது. அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை இல்லாதவர்களின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மனோகருடன் கைகோர்ப்பது நல்லது.

இருளில் - அ முத்துலிங்கம்

தந்தையின் மருத்துவ வேலை காரணமாக மனோகரின் பால்ய வயதில் மதுரைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அவருடைய சிறுவயது மதுரை அனுபவங்கள் அழகியல் நிரம்பியது. 50 வருடங்களுக்கு முந்தைய மதுரையை அவர் ஓவியமாக வரைந்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பவை. முறையாக யாரிடமும் ஓவிய கலையைக் கற்று கொண்டதாக அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

அவருடைய நண்பர்களுக்கும் ஓவிய நுணுக்கம் என்பது சிறு வயதிலேயே சுயமாக அமைந்திருக்கிறது. கல்லூரி பேராசிரியராக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் மனோகரின் இளவயது ஆசை. புற்று நோயால் தந்தை இறக்கவும், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக சேர்ந்திருக்கிறார். நிறுவன மேலாளர்களுக்கு மனோகரைப் பிடித்துவிடவும், கம்பெனியே ஆறு மாத பயிற்சிக்காக மனோகரை மேல் நாட்டிற்கு அனுப்பி இருக்கிறது. கல்யாண சந்தையில் அவருடைய மதிப்பு உயர்ந்து மஹிமா கிடைக்க அதுவே காரணமாக அமைந்திருக்கிறது. நுண்கலை படித்த மஹிமா வாழ்க்கை துணையாகக் கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். கல்யாணத்திற்குப் பிறகு வேலையை உதறிவிட்டு படிப்பதற்காக சில ஆண்டுகள் வெளிநாடு சென்றிருக்கிறார். அவருடன் சென்ற மஹிமா 'கலை மற்றும் கலாச்சார மைய'-த்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பல நாட்டு நண்பர்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். இடையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. சொந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றவே நண்பர்களின் வற்புறுத்தலையும் மீறி வாய்ப்புகள் இருந்தும் இந்தியாவிற்குத் திரும்பி இருக்கிறார்கள். வேலை செய்த பழைய நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

நாட்கள் மகிழ்ச்சியாக சென்றிருக்கிறது. சென்னையிலுள்ள மஹிமாவின் வீட்டிலிருந்து மதுரைக்கு மனோகர், அவருடைய அம்மா, மகள் சென்றிருக்கிறார்கள். மஹிமாவே கார் ஓட்டியிருக்கிறார். எதிர்பாராமல் நடந்த விபத்து அவர்களுடைய வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் என்றாலும் மஹிமாவின் முதுகுத்தண்டில் அடிபட்டு கழுத்துக்குக் கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாத நிலை. ஓரிரு வருடத்தில் மனோகருக்கும் வலக் கண் மையப் பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பார்வைக் குறைபாடு வேகமாக அதிகரித்திருக்கிறது.

மஹிமாவோ படுக்கையை விட்டு நகர முடியாத நிலை. மனோகருக்கோ தீர்க்க முடியாத பார்வைக் குறைபாடு. அது அடுத்த கண்ணிலும் பரவக் கூடிய அபாயம் இருக்கிறது. அதற்குள் தங்களது வாழ்நாளுக்குத் தேவையான பொருளினை ஈட்ட வேண்டிய கட்டாயம்.

பார்வையை முழுவதும் இழப்பதற்கு முன்பு, மதுரையை பற்றிய நினைவுகளை புத்தகமாகவும், மதுரை வீதிகளையும், கோவில் மற்றும் கட்டடங்களை கருப்பு வெள்ளை ஓவியமாகவும் வரையுமாறு மஹிமா கேட்டிருக்கிறார். வரைந்த படங்களை மகிமாவே படுக்கையில் இருந்தவாறு வியாரம் செய்திருக்கிறார். பார்வை நன்றாக இருந்த பொழுது வரைந்ததைக் காட்டிலும், கண்ணில் கோலாரினை வைத்துக் கொண்டு மகிமாவுன் பேசிக்கொண்டே வரைந்த ஓவியங்கள் அதிகம், தரமும் முன்பிருந்ததை விட அதிகம் என்று சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது. ஆதர்ஷ்ய தம்பதிகள் என்ற வார்த்தையின் அர்த்தமும் உரைத்தது.

30 வருடம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெரும் பொழுது கிடைத்த ரொக்கம் 3.5 லட்சம். மஹிமாவுன் இருக்க நேர்ந்த ஓய்வு காலத்தில் வரைந்த ஓவியம் மூலமாகவும், எழுதிய புத்தகம் மூலமாகவும் கிடைத்த பணம் 38 லட்ச ரூபாய் என்றார். அந்த பணம் முழுவதும் சங்கர நேத்ராலயா, ஸ்ரீ அரவிந்தர் கண் மருத்துவமனை போன்ற அறக்கட்டளைக்கு ஏழை மக்கள் பயனடையுமாறு மனோகர் தம்பதியினர் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். (நீங்கள் வாங்கும் மனோகரின் ஓவியமோ, வாழ்த்து அட்டையோ, புத்தகமோ எதுவாக இருப்பினும் அதன் மூலம் கிடைக்கும் பணம் நேரடியாக ஏழை மக்களுக்குச் செல்கிறது. அதற்காக நிச்சயம் வாங்க வேண்டும் என்று கோஷம் போடவில்லை). மஹிமாவின் மீதான மனோகரின் காதல் பரவசமானது. சலித்துப் பார்த்தால், அவர் பேசிய கோர்வையான வாக்கியங்களின் தொடக்கத்திலும், முடிவிலும் மஹிமா என்ற பெயர் இருக்கும். ஒரு வட்டத்தின் மையம் போல அவருடைய மனைவியின் ஞாபகத்தை அழுத்தமாக இருத்தி முழு உரையைப் பேசி முடித்தார்.

கேணியில் அவர் பேசிய 3 மணி நேரத்தில் 'மஹிமா' என்ற பெயரை நூறு முறைக்கு மேல் உச்சரித்திருப்பார். கல்யாண நிச்சயம் ஆனது முதல், மஹிமா இறந்தது வரை வரையப்பட்ட பல ஓவியங்களையும் காண்பித்தார். தொடர்புடைய பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தேவையான பொழுது ஞாநியிடன் உதவி கேட்டு, மடிக்கணினியை அவர் உபயோகித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு கேள்விக்கான பதில் எனக்கு சுவாரஸ்யம் நிரம்பியதாக இருந்தது. ஒவ்வொரு உலகியல் அனுபவத்திலும் அவருடைய மனைவியை எப்படி நினைவு கூர்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் பதிலாகவும் அது அமைந்தது.

புழு, பட்டாம் பூச்சியாக மாறும் விதத்தை குழந்தைகளுக்கு அனுபவபூர்வமாக கற்பிப்பதர்க்காக அவருடைய மகள், தேவையான இலைகளுடன் ஒரு பட்டாம் பூச்சி முட்டையிலிருந்து வெளியில் வந்த புழுவை பாட்டலில் வளர்த்தாராம். இலைகளை சாப்பிட்டு வளர்ந்த கூட்டுப் புழு முழுமையான வடிவம் பெற்று ஒரு நாள் வெளிச்சத்தை நோக்கிப் பறந்து சென்றதாம். என்னுடைய மஹிமாவும் அப்படித்தான். படுத்த படுக்கையில் சுமக்க முடியாத பாரங்களை சுமந்தாள். அவளுக்கான நேரம் வந்ததும் ஒரு பட்டாம் பூச்சியைப் போல வெளிச்சத்தை நோக்கி பறந்து விட்டாள் என்ற போது அவருடைய முகம் பூவைப் போல மலந்தது. அவருடைய உதடசைவில் மீசை கூட பறக்கத் துடிக்கும் பட்டாம் பூச்சி போலவே இருந்தது.

'இருட்டு என்பதே குறைந்த வெளிச்சம்' என்று எங்கோ படித்த ஞாபகம். குறைந்த வெளிச்சத்தையும் காண முடியாத நிலையிலுள்ள ஓர் ஓவியனை சந்திக்க இருப்பது பரிதாபத்திற்குரியது என்ற எண்ணங்களுடனே மனோகரை சந்திக்க கேணிக்குச் சென்றிருந்தேன். திரும்பும் பொழுது மனோகரின் 'எனது மதுரை நினைவுகள்' நாவலில் வரும் ஜித்தன் சாட்டர்ஜியின் மனநிலையுடன் எனது மனநிலை ஒத்திருந்தது. நாவலில் சாட்டர்ஜி சொல்லியவை...

"மிஸ்டர் மனோகர், நான் உங்களைப் பார்த்துப் பரிதாபப் படவே இல்லே. ஒரு விதத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படறேன்னு சொல்லலாம்."

நீங்கள் கூட மனோகருடன் உரையாட நேர்ந்தால் நிச்சயம் பொறாமைப்படுவீர்கள். பொறாமை என்பது இத்தனை சந்தோஷத்தைத் தரக்கூடிய சிறந்த, அழகான விஷயம் என்பதை முதன் முறையாக, அந்த அழகான மாலையில் உணர்ந்தேன். அப்பொழுது ஹெலன் கெல்லரின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - Helen Keller

மனோகர் தேவதாசைப் பற்றிய இதர பதிவுகள்:
1. வாழ்க்கையல்ல... வேதம்! - எழுத்தாளர் ரவிபிரகாஷ்
3. எனது மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ்
4.
கேணி சந்திப்பு - பிரபாகரன்

கேணியின் அடுத்தடுத்த சந்திப்புகள் பற்றிய விவரம்:

டிசம்பர் - எழுத்தாளர் வண்ணதாசன்.
ஜனவரி - தமிழிசை மற்றும் தமிழிசை மரபு பற்றி
பிப்ரவரி - கர்னாடக சங்கீதக் கலைஞர் TM கிருஷ்ணா

பின் குறிப்பு:
1. நீண்ட நாள் கழித்து எழுதுவதால் ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.,
2. Multiple Facets Of My Madurai, Green Well Years, A Poem To Courage, Dreams, Seasons And Promises, எனது மதுரை நினைவுகள் போன்ற புத்தகங்கள் விலைக்குக் கிடைக்கிறது.
3. புத்தக விற்பனையில் கிடைக்கும் பணம் கண்மருத்துவ மனைகளுக்கு நன்கொடையாக அளிக்கப் படுகிறது.
4. East West Books (madras) Pvt Ltd மற்றும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இவருடைய புத்தகங்கள் கிடைக்கிறது.

Tuesday, November 9, 2010

திருவடிசூலம் to திருக்கழுக்குன்றம்

ஜில் புயலின் மூர்க்கம் தணிந்து காலநிலை சாதகமாக இருந்ததால், பால்ய நண்பன் வில்சன்ராஜின் திருமணத்திற்கு திருக்கழுக்குன்றம் கிளம்பினேன். மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும் திருமண வரவேற்பிற்கு காலை பத்து மணிக்கே 10 நண்பர்களுடன் கிளம்பிவிட்டேன். முதலில் திருவடிசூலம் என்ற மலை கிராமத்திற்கு செல்வதாக முடிவானது. செங்கல்பட்டு - திருபோரூர் செல்லும் வழியில் இருக்கிறது. பனைமர உயர அம்மன் சிலையை நிர்மாணித்து இந்த ஊரில் கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.எங்களுடைய குலசாமி முனீஸ்வரன். என்னுடைய தம்பிக்கு இந்த அம்மன் தான் குலசாமி மாதிரி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சிலையை கிராமத்தில் எடுத்து வந்து சேர்க்க ஏதோ ஒரு ஷிப்பிங் கம்பெனியை அணுகினார்களாம். பல லட்சம் தரவேண்டியிருக்கும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கம்பெனி முதலாளிக்கு நீண்ட நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வேறொரு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்ததாம். இந்த சிலை வந்த நேரம் தான் அதிர்ஷ்டம் கொட்டுகிறது என்று இலவசமாகவே சிலையை கிராமத்திற்கு எடுத்து வந்து கொடுக்கச் சொன்னாராம். L&T கூட இலவசமாகவே சிலையை பூப்போல எடுத்து நிமிர்த்தினார்கலாம். அதுமட்டுமில்லாமல் இரண்டு நிறுவனமும் ஏதோ நன்கொடை வேறு வழங்கி இருக்கிறார்கள்.

"இதையெல்லாம் யாரும் சும்மா செய்யமாட்டாங்கடா...! ஏதோ சக்தி இருக்குது...! நீ வேணும்னா பாரு, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடம் பெரியப்பாளையம் மாதிரி, திருவேற்காடு மாதிரி... பிரபலம் ஆயிடும்" என்று தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். சிலையின் பிரம்னாண்டத்தைப் பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

திருபோரூர் செல்லும் பிராதான சாலையில் திருவடிசூலம் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான கிராமம். பிரதான சாலைகள் கூட வளைந்து நெளிந்துதான் செல்கிறது. அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையின் 3 கி மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அம்மன் கோவில் செல்லும் வழியில் பழமைமிக்க சிவஸ்தலம் அமைந்துள்ளது. (ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்) அதனைக் கடந்து சென்றால் 'ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்' பிரமாண்டத்துடன் நம்மை வரவேற்கிறது.

நாங்கள் சென்ற நேரத்தில் ஜோடியாக இரண்டு தம்பதியினர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி சென்றதும் பூசாரி எங்களை வரவேற்று தீப ஆராதனை காண்பித்தார். போலவே ரவா கேசரியை தொன்னையில் வைத்துக் கொடுத்தார். நாங்களும் பிரசாதம் சாப்பிட உட்கார்ந்தோம். இலவச பிரசாதம் சுவையாக இருந்தது.

கோவில் கோபுரங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்கான பணிகளை நன்கொடையின் மூலம் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் முடிந்ததும், பிரம்மாண்ட அளவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக பூசாரி பகிர்ந்துகொண்டார். கோபுரவிழா விரைவில் நடக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்,
ஸ்ரீ கோவில்புரம், திருவடி சூலம்,
செங்கல்பட்டு தாலுகா - 603108

(அல்லது)

9/13, முதல் மேற்கு தெரு,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை - 41

ஒருவழிச் சாலையாக இருக்கும் திருபோரூர் சாலையை அகலப்படுத்த மக்கள் - சாலை மறியல் செய்ததாக நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அவர்களுக்கு சாதகமாக விஷயம் நடக்குமெனில் இயற்கை அன்னை கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளவேண்டும். சிவன் கோவில் மூடி இருந்ததால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

திருக்கழுக்குன்றம் - http://thirukalukundram.blogspot.com

மலைக்கோவிலுக்குச் செல்ல சாதாரணமாகவும், செங்குத்தாகவும் செல்லும் படிகளில் ஏறினோம். மூச்சுவாங்க கோவிலுக்குள் நுழையும் பொழுது அபிஷேகம் ஆரம்பமாகியிருந்தது. சிவனும், அம்மனும் அமிஷேகம் முடிந்து பிரகாசமாக காட்சி தந்தார்கள். கலை நயமிக்க தூண்களும், சித்திர வேலைப்பாடுகளும் மனத்தைக் கொள்ளை கொண்டது. எண்ணை விளக்கின் மனமும், ஒளியும் மனதிற்கு புத்துணர்வை அளித்தது. மலையின் மேலிருந்து ஊரினைப் பார்க்கும் பொழுது தெரியும் பெரிய கோவிலும், தெப்பக்குளமும், வயல் வெளியும் தேர்ந்த கலைஞனின் ஓவியம் போல தெரிந்தது. பூஜை முடிந்ததும் வேறு பதை வழியாக கீழே இறங்கினோம். அங்கிருந்து பெரிய கோவிலுக்கு சென்றோம்.


பெரிய கோவிலைச் சுற்றி வீடுகளும், கடைகளும் இருப்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மழைக் கோவிலின் அமைதி இங்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிவனும் அம்மனும் அலங்காரமாக வீற்றிருக்கிறார்கள். முருகர், விநாயகர் என்று பல கடவுளுக்கும் சிறிய அளவில் கோவில்களும் உள்ளே இருக்கின்றன. வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு திருமண வரவேற்பிற்குச் சென்றோம்.

நண்பன் அவனுடைய துணையுடன் மேடையில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பிரியாணி வேட்டையில் இறங்கினோம். பிரியாணியில் பீஸ் கம்மி, குஸ்கா அதிகம். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இருண்ட சாலையில் ஹெட் லைட் வெளிச்சத்தில் செங்கல்பட்டிலிருந்து வண்டலூர் வழியாக அம்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பயணமானோம். சில இடங்களில் பாலியல் தொழிலாளிகள் கையசைத்து நின்று கொண்டிருந்தனர். இந்த மாதிரி நபர்கள் சபலப்பட்டு நிற்பவர்களிடம் கொள்ளை அடிப்பது பரவலாக நடப்பதாக நாளேடுகளில் படித்தது ஞாபகம் வந்தது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான். கூடவே தடிமாடு மாதிரி வாலிபர்கள் பக்கத்தில் இருந்ததால் வண்டியை நிறுத்துமாறு தம்பியிடம் கூறினேன். "நல்லபடியா போறது உனக்கு புடிக்கலையா? அதுவும் இல்லாம பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க?" என்று தம்பி இடித்துரைத்தான்.

"அவர்களிடம் 10 நிமிடம் நேர்முகம் செய்வதில் நீ ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை" என்று குரலை உயர்த்தியதும் நிறுத்த சம்மதித்தான்.

"என்னமோ கடவுள் விட்ட வழி... டேய் கழுத்துல நகை இருந்தா மறச்சிக்கன்கடா.." என்று பின்னால் குரல் கொடுத்தான்.

"வண்டியிலிருந்து இறங்கி ஹாய்..." என்றதும் பாலியல் தொழிலாளிகள் ஓடி விட்டார்கள்.

"நீ ரம்பம்னு அவங்களுக்கு எப்படிடா பேசாமலேயே தெரிஞ்சிது" என்று தம்பி வண்டியுடன் சேர்த்து என்னையும் ஒட்டிக் கொண்டு ஊரை நோக்கி பயணமானான். என்னுடைய மனமோ தப்பித்து எதிர்திசையில் ஓடியவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தது.

Monday, November 1, 2010

உலகத் திரைப்பட விழா - சென்னை

சென்னையில் மழைக்காலம் ஆரம்பித்து ஓடுகிறது. பாதுகாப்பிற்கு குடையுடன் தான் அலைகிறேன். இருந்தாலும் செவந்த் சேனல் சினிமா தயாரிப்பு நிறுவனமும், இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியும் இணைந்து 28.10.2010 முதல் 31.10.2010 வரை ஏற்பாடு செய்திருந்த சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு திட்டமிட்டு (மழைக்காக) ஒதுங்கினேன்.

முதல் நாளில், 20 நிமிடம் தாமதமாக விழா துவங்கியது. சாருவுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணன் துவக்க உரையாற்றி விழாவைத் துவங்கி வைத்தார். எந்தவித லாப நோக்கும் இன்றி தனது கைக்காசைப் போட்டு இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார். சாருவுக்கும் மிஷ்கினுக்கும் நன்றி கூறிய பொழுது சாதாரணமாகப் பேசியவர், பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி கூறிய பொழுது நிறையவே உணர்ச்சி வசப்பட்டார். சமாளித்துக் கொண்டு சாருவை பேச வருமாறு அழைத்தார்.

மிருதுவான நடையில் துருதுரு பார்வையுடன் சாரு பேச வந்தார். ஏற்கனவே எழுதியிருந்த சினிமா கட்டுரைகளை புத்தகத்திற்காக தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த பணியின் காரணமாக 10 நிமிட தாமதமாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் 'நண்பன் மிஷ்கினுக்கு' என்று எழுதி விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேச ஆரம்பித்தார்.

நானும் ஒரு தயாரிப்பாளரும் மதுவினை குடித்துக் கொண்டிருந்தோம். வேறொரு முக்கியமான சினிமா நண்பர் அப்பொழுது வந்தார். எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்றோம். 'இன்று மட்டும் குடிக்க மாட்டேன்' என்றார். காரணத்தை ஆவலுடன் கேட்டோம்.

'இப்பதான் சார், எந்திரன் பாத்துட்டு வரேன். குடிச்சேன்னா எங்கிட்ட இருக்குற சினிமா நண்பர்களுக்கு ஃபோன் போட்டு, மனசு தீர படம் எடுத்தவங்களை திட்டிடுவேன். அப்புறம் நான் சினிமாத் துறையிலையே இருக்க முடியாது... என்னை விட்டுடுங்க..' என்றார்.

எனக்குக் கூட 50 வயசு ஆள் 25 வயசு பையன் மாதிரி காலேஜ் ஸ்டுடென்ட் வேஷம் போட்டுக் கொண்டு மரத்தை சுற்றி ஆடுவதைப் பார்க்கும் பொழுது கரப்பான் பூச்சி உடம்பில் ஊறுவது போல இருக்கிறது. இதற்கு சுவிசர்லாந்து வேறு செல்கிறார்கள். அமிதாபச்சன் 56 வயது கிழவனாக 25 வயது பெண்ணைக் காதலிப்பது போல நடிக்கிறார். எந்த பந்தாவும் இல்லாமல் 25 வயது பையனின் காலில் விழுகிறார். Black, Paa போன்ற வித்யாசமான முயற்சிகளின் மூலம் சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறார். அந்த துணிச்சல் ரஜினி போன்ற நடிகர்களுக்கு இல்லை. ரஜினி இது போன்ற விழாக்களுக்கு வந்து ஊக்கப்படுத்த வேண்டும். திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச பட விழாக்களுக்கு நான் செல்லுவதே இல்லை. கடைசி வரை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். சென்னையிலும் அது போன்ற ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும். அதற்கு ரஜினி போன்றவர்கள் முன்வர வேண்டும். இது ஒரு கோரிக்கை மட்டுமே என்று உரையை முடித்தார்.

அழுவது மாதிரியான சுகம் வேறெதுவும் இல்லை. என்னுடைய துணை இயக்குனர்களிடம் 'அழுங்கடான்னு' சொல்லுவேன் என்று பத்திரிகை நண்பர்களைப் பற்றி பேசியபொழுது மாணிக்கம் நாராயணன் சிந்தாத கண்ணீருக்கு கனத்தை ஏற்றினார் இயக்குனர் மிஷ்கின். அவருடைய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும்போது ஓர் இடத்தில் அடக்க மாட்டாமல் அழுதாராம். அந்த நேரத்தில் சுகமாக இருந்தது என்றார். அவருடைய அம்மாவுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்து 13 வருடங்கள் ஆகிறதாம். மறுபடியும் வீட்டிற்கு திரும்பவே இல்லை என்றார். இது வரை 22 வேலைகள் பார்த்திருக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. லேண்ட்மார்க்கில் இருந்த பொழுது நிறைய புத்தகங்கள் வாசித்தேன். மணிரத்னம் போன்ற மனிதர்களை சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. அதன் பிறகு சினிமாவில் இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

சினிமாவைத் திரையிடும் இருட்டறையில் இருக்கும் பொழுது, தாயின் கருவறையில் மீண்டும் சென்றது போல இருக்கிறது என்று இரண்டு கைகளையும் அகலமாக விறித்து நின்றார். டைடானிக் ஹீரோ கெட்டப்பில் மாடியின் உச்சியில் நின்றுகொண்டு கூவம் நதியைச் சுட்டிக் காட்டும் கவுண்டமணியின் பிம்பம் என் கண்களுக்குள் தோன்றி மறைந்தது. போலவே விறித்த கைகளை விறித்தவாறு மிஷ்கின் சுகமாக நின்று கொண்டிருந்தார்.

நல்ல படங்களை எடுக்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' இரண்டும் மட்டமான படங்கள். ஆனால் ஹிட். நந்தலாலா அருமையான படம். வெளியிடுவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு வெளியில் செல்ல இருந்தாராம். இந்த விழாவுக்கு அழைத்ததால் அதையும் பொருட்படுத்தாமல் வந்தாராம். ஹிந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், நந்தலாலா தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தில் இளையராஜா அருமையான குத்துப்பாடல் ஒன்றை அமைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

வேறு யாரையோ வைத்து இந்த குத்துப் பாடலை இசையமைத்து இளையராஜாவைக் கேட்காமல் படத்தில் சேர்த்து விட்டதால் மிஷ்கினுடன் கருத்து வேறுபாடு என்ற செய்தியை நாளேடுகளில் படித்த ஞாபகம். கிக்கிஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் தான் நந்தலாலா என்று சினிமா நண்பர்கள் சொல்லக் கேட்டதும் ஞாபகம் இருக்கிறது.

மிஷ்கின் தனது உரையை நிறைவு செய்த பொழுது 'ஜாக்கிசேகர்' அருகில் வந்து அமர்ந்தார். அடுத்து டாக்டர் க்ளோரியானா G செல்வநாதன் பேச வந்தார். இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் (மீடியா) பெற்றவர். தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் நிருபராக வேலை பார்த்தவர். ஒரு TV சேனலையும் நடத்திய அனுபவம் உண்டு. குறும்படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பங்களித்த குறும்படம் பரிசைப் பெற்றதால் பரவலாக அறியப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் திரைப்பட விழாவின் இயக்குனராக இருந்திருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மன், லண்டன் போன்ற இடங்களில் திரைப்பட விழாக்கள் நடத்துகிறார்.

உலகப் பட விழாக்களில் ஆங்கிலத்தில் பேசிப்பேசி அலுத்துவிட்டது. இங்கு தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. செவந்த் சேனல் நிறுவனம் மற்றும் இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியுடன் இணைந்து இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையிடப் போகும் படங்கள் எல்லாம் சர்வதேச விழாக்களில் ஒரு முறையாவது பங்குபெற்ற திரையிடப்பட்ட படங்கள். எனவே வடிகட்டப்பட்ட படங்களிலும் வடிகட்டப்பட்ட முக்கியமான படங்கள் தான் காண்பிக்க இருக்கிறோம். எதிர் வரும் நான்கு நாட்களும் நான் உங்களுடனே இருப்பேன். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் உரையாடலாம் என்று உரையை முடித்தார்.

முதல் படம் திரையிடப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் சிணுங்காத தொலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு ஜாக்கிசேகர் வெளியில் சென்றார். அரங்கில் இருந்தவர்களில் பலரும் தெறித்து ஓடினார்கள். அப்பொழுதேசுதாரித்து இருக்க வேண்டும். எல்லாம் என்னுடைய நேரம், வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை. அரை மணி நேரம் கழித்து வெளியில் சென்றேன். "என்னங்க தலையும் புரியல... காலும் புரியல... ஒன்னும் சரியில்லையே" என்று ஜாக்கியிடம் கேட்டேன்.

"அது முன்னாடியே தெரிஞ்சதாலதான் எழுந்து வந்துட்டேன்" என்று கூலாக பதில் சொன்னார். முதல் நாளை அப்படியே முடித்துக் கொண்டு ஜாக்கிக்கு டாட்டா காட்டினேன். எதிர் டாட்டா காட்டியவர் இருட்டறையில் மறைந்து போனார்.

இரண்டாவது நாள் வேலை இருந்ததால் செல்லவில்லை. ஆகவே மூன்றாம் நாள் சென்றிருந்தேன். பத்து நிமிடம் தான் அரங்கில் படம் பார்த்தேன். பாலுமகேந்திரா திரைப் பட்டறையில் படித்த அனந்துவை சந்தித்தேன். சுரேஷ் கண்ணனின் சினிமா கட்டுரைகளை வெகுவாகப் புகழ்ந்தார். அண்ணா சாலையில் நடந்தவாறே 'ஆதவன், இபா, எஸ்ரா, ஜெமோ, கோபி கிருஷ்ணா, கோணங்கி, லாசாரா' என்று பலரது நாவல்களையும் பற்றி பேசிக் கொண்டே ஒரு தூதரகத்தின் அருகில் சென்று நின்றார். அங்கு வேலை செய்யும் அவருடைய நண்பரான கணேஷை அறிமுகப் படுத்தினார்.

அலுவலகத்தில் நான் வேலை செய்வதைப் பார்த்து 'உன் வாழ்க்கை யாருக்குடா வரும்' என்று உடன் வேலை செய்த பலரும் பொறாமைப் பட்டதுண்டு. வாழ்க்கையில் முதன் முதலில் ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன் என்றால் அது கணேஷாகத் தான் இருக்கும். அவர்களுடன் உரையாடியே விழாவின் மூன்றாவது நாளைக் கழித்தேன்.

விழா நடத்துனர் க்ளோரியானாவிடம் உரையாடும் சந்தர்ப்பம் கடைசி நாளன்று கிடைத்தது.

கேள்வி 1: விழாவுக்கான படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

சர்வதேச பட விழாக்களில் ஒரு முறையாவது பங்கு பெற்ற படங்களைத் தான் தேர்வு செய்கிறோம். தேர்வு நாட்டிற்கு நாடு வேறுபாடும். திரையிடப் போகும் நாடுகளின் அரசியல், மதம், கலாச்சாரம், வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப படங்களைத் தேர்வு செய்து தணிக்கைத் துறைக்கு அனுப்புவோம். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இங்கு திரையிடப் படுகிறது. சில படங்களை தணிக்கைத் துறையினர் நிராகரித்து விடுவார்கள்.

கேள்வி 2: விழாவின் துவக்கத்தில் திரையிடப்பட்ட படத்தினை எதன் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

ஒன்றிணைந்த ரஷ்யா சிதறியபொழுது உருவான சிறிய தேசம் தயாரித்து இயக்கிய முதல் படம் என்பதால் இந்தப் படத்தை தெரிவு செய்தேன். புதியவர்களை அறிமுகம் செய்வதும் நமது பணி தானே. (http://www.sweatybeards.com)

கேள்வி 3: தமிழ் ஃபில்ம் அகாதமி இணைந்து நடத்தும் விழாவில் ஒரேயொரு தமிழ்ப் படம் கூட திரையிடப் படவில்லையே - ஏன்?

தமிழ் படங்கள் இங்கு ஏற்கனவே திரையிடப்படுகின்றன. குறும்படங்களையும் சில தொலைக்கட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. அதே படங்களை மறுபடியும் ஒளிபரப்ப வேண்டாமே என்று தான் கருதினோம். மற்றபடி தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாடுகளில் விழாவை நடத்தி இருந்தால் கண்டிப்பாக தமிழ்ப் படமும் காண்பித்திருப்போம்.

கேள்வி 4: திரையிடப்படும் படங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?

ஒரு முறை திரையிடுவதற்கு 100 EURO முதல் 1200 EURO வரை படத்தினை வாங்கிய கம்பெனிக்குக் கொடுக்க வேண்டும். குறும்படத்திற்கு 50 EURO வரை கொடுக்கிறோம். அவர்களுக்கு இதுதானே வருமானம்.

இரண்டாவது கேள்வியை மனதில் வைத்துதான் அவருடனான உரையாடலை ஆரம்பித்தேன். அதற்கான பதில் கிடைத்துவிட்டதால் நேரம் எடுத்து உரையாடியதற்கு நன்றி கூறி விடை பெற்றேன்.

28-ஆம் தேதி காலையில் தினத்தந்தி வாசித்த பொழுது என்னுடைய ராசிக்கு 'புதிதாக நல்ல அறிமுகம் கிடைக்கும்' என்றிருந்தது. நாளிதழை வைத்துவிட்டு செல்பேசியைக் கையில் எடுத்தேன். 29-ஆம் தேதி வளைகாப்பு ஏற்பாடாகி இருந்த தங்கைக்கு, முந்திய நாள் அதிகாலை 1.50-க்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஹேம்நாத்திடமிருந்து தகவல் வந்திருந்தது. இந்த நான்கு நாட்களில் எத்தனையோ நண்பர்கள் அறிமுகமானார்கள். இருந்தாலும் தோளில் ஏறி தலையில் ஒன்னுக்கடிக்கப் போகிறவன் போல வருமா? விழா முடிந்ததும் அவனைப் பார்ப்பதற்கு தான் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு சுட்டிப் பையனும் என்னுடன் வருவான்.

Thursday, October 21, 2010

அவள் அப்படித்தான் - ருத்ரையா

வரலாற்று சிறப்புமிக்க, தொழில் நுட்பத்தை அதீதமாகப் பயன்படுத்தப்பட்ட, இந்தியாவிலேயே முதன் முறையாக அதிக செலவில் எடுக்கப்பட்ட, ஹாலிவுட்டுக்கு நிகரான, தரமான சினிமாவைப் பற்றி பேசுவதற்காக நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு தொலைபேசி இருந்தேன். அப்பொழுது அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி குறைபட்டுக் கொண்டேன்.

"சுகா, என்னால் ஐந்து நிமிடம்கூட பார்க்க முடியாத வேற்று மொழிப் படத்தை நீங்கள் ஐம்பது முறையேனும் பார்க்கிறீர்கள். உங்களுடைய பொறுமைக்கு வானத்தைக் கூட ஒப்பிட முடியாது. நல்ல தமிழ்ப் படங்கள் எவ்வளவு இருக்கின்றன. அவற்றை பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை? என்றேன்.

அதற்காக, நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியிருந்த 'அவள் அப்படித்தான்' பதிவினை படிப்பதற்காக பகிர்ந்திருந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய வேலையை ராஜினாமா செய்ததும், முதல் வேலையாக பாரிமுனை சென்று 70-ற்கும் மேற்பட்ட குறும்படங்களும் திரைப்படங்களும் சேகரித்தேன். ஒன்றைக் கூட இதுவரைப் பிரிக்காமல் வைத்திருந்தேன். அவற்றில் 'அவள் அப்படித்தான்' படமும் ஒன்று. எவ்வளவு நாள் தான் கொலுவைக் கலைக்காமல் இருப்பது. அதற்கான நேரம் சென்ற வாரத்தில் கிடைத்தது.

பிராந்திய மொழிப் படங்களில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக என்று வெவ்வேறு தளங்களில் தனது பங்களிப்பை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகர் கமலஹாசனின் நெருங்கிய நண்பர் 'ஆனந்து'-வுக்காக என்ற எழுத்துக்களுடன் படம் ஆரம்பிக்கிறது.

'முழு வானில் ஒரு பாதை' - என்று பெண்களின் பிரச்சனைகளை ஆவணப் படம் எடுக்க நினைக்கும் அருண் (கமல்), அவனுக்கு உதவ நினைக்கும் தியாகு (ரஜினி), தியாகுவின் அலுவலக ஊழியர் மஞ்சு (ஸ்ரீபிரியா) ஆகியோரைக் கொண்டு கதை நகர்ந்தாலும், மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடுதான் சினிமாவின் மையக்கரு. (Dating, outing, live-in relationship, Car key change culture எல்லாம் இன்று சாதாரணமாக இருக்கக் கூடிய காலம். எனவே 25 வருடத்திற்கு முந்தைய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்திற்கு நம்மை ஒன்ற வைத்துக் கொள்வது முக்கியம்.)

அருணின் கேமராக் கண்கள் காபரே நடனக்காரியின் இடை அசைவுகளை படமாக்குகிறது. அதனைத் தொடர்ந்து படமாக்குவதற்கு தியாகுவின் நிர்பந்தத்துடன் மஞ்சு துணைக்கு வருகிறாள். அருணின் மென்மையான ஆண்மை குணம் மஞ்சுவிற்குப் பிடித்திருக்கிறது. இருந்தாலும் அவனிடம் கடுமையாகப் பேசுகிறாள். பாறை போன்ற மனதில் வேர்விடத் துடிக்கும் அருணை ஜாக்கிரதையாகத் தவிர்க்கப் பார்க்கிறாள்.

அருணின் வீட்டிற்குச் செல்லும் மஞ்சு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து "நீங்க கம்யுனிஸ்டா?" என்று கேட்கிறாள்.

"இல்லையே...! எல்லாத்தையும் தெரிஞ்சிக்கத் தான் படிக்கிறேன். அப்படியே இருந்தாத் தான் என்ன?" என்று அருண் சொல்கிறான்.

கேள்விக்கான பதிலைச் சீண்டாமல் "எனக்கு செகப்பக் கண்டாலே எரிச்சல்" என்று எங்கோ நகர்ந்து செல்கிறாள். புரட்சிக்கான அதே நிறம் தானே விளக்குடன் தொடர்புபடுத்தி விபச்சாரத்தின் இடத்தை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. அந்த முரண்பாடுகளே மஞ்சுவின் வாழ்விலும் பேச்சிலும் வெளிப்படுகிறது.

சிறுவயதில் நேரடியாகக் கண்ட அம்மாவின் கள்ளத் தொடர்பு மஞ்சுவின் மனதை வெகுவாக பாதிக்கிறது. தனது அம்மா சோரம்போனதை நினைத்து தனிமையில் வாடுகிறாள். தனிமை அவள் மீதான பாலியல் பலாத்காரத்தை நிகழ்த்துகிறது. வாழ்க்கையின் தொடர்ச்சியான மனச் சிக்கல்களுடன் கல்லூரியில் நுழைகிறாள். கல்லூரிப் பருவம் க்ருபா என்ற தோழனுடன் காதலை அரும்பச் செய்கிறது. சந்தர்ப வசத்தால் அவனைப் பிரிய நேர்கிறது. காதல் உதிர்கிறது. கசப்பான நினைவுகள் துளிர்க்கிறது. அதன் பின் மனோ என்பவனுடன் காதல் கொள்கிறாள். அவனோ மஞ்சுவைப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிகிறான். வாழ்வின் சூதாட்டத்தில் அவள் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறாள். தோல்வியின் வலி சமூகத்தின் மீதான, குறிப்பாக ஆண்களின் மீதான வெறுப்பாக மாறுகிறது.

பெண்களை நிர்வாணக் கண்களில் மட்டுமே பார்க்கும் தியாகுவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறாள் மஞ்சு. வியாபார சினிமா முற்றிலும் ஜீரணித்த ரஜினியின் ஆரம்பகால அசத்தலான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுகிறது. ரஜினியிடம் இருக்கும் நடிப்புத் திறமை உண்மையிலேயே உயர்ந்தது. அவரும் சவாலான பாத்திரங்களையே விரும்புவார் என்று நினைக்கிறேன். இன்றைய திரைப்படங்களில் அவர் செய்யக் கூடிய கதாப்பாத்திரங்கள் எதிர்காலத்தில் அவரை நகையாடப்போகிறது. அந்த நகைப்பில் இது போன்ற பங்களிப்புகள் மறையத்தான் போகிறது.

கடுமையான வார்த்தைகளையும், நடத்தைகளையும் தன்னைச் சுற்றி சுவராக எழுப்பிக் கொண்டு சமூகத்திடமிருந்து தப்பிக்கப் பார்க்கும் மஞ்சு, அந்த போக்கினாலேயே அருணை இழக்கிறாள். அருவியில் நழுவவிட்டதை கடலில் தேடுவதைப் போல அருணைத் தேடி தியாகுவிடம் செல்கிறாள். கோயம்புத்தூரிலிருந்து மனைவியுடன் சென்னைக்கு வரும் அருணை வரவேற்பதுடன் படம் முடிகிறது.

கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, உடன் நடித்த அனைவரும் கதாப் பாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பைக் கூட்டியோ குறைத்தோ வழங்காமல் சரியாகச் செய்திருக்கிறார்கள். அதற்கான அச்சாணியாய் இருந்த ருத்ரையாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். படத்தின் வசனத்தை பிரபல எழுத்தாளர் வண்ணநிலவன், சோமசுந்தரம், ருத்ரையா மூவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். பல இடங்களில் வசனம் 'நறுக்' என்று இருக்கிறது. பின்னணி இசையிலும், பாடல்களிலும் இளையராஜாவின் தனித்தன்மை ஒ(லி)ளி வீசுகிறது. படத்திலுள்ள மூன்று பாடல்களுமே அருமையான பாடல்கள் தான். கீழுள்ள பாடல்களை YouTube-ல் கேட்கலாம்.

1. உறவுகள் தொடர்கதை - K.J. யேசுதாஸ்
2. பன்னீர் புஷ்பங்களே - கமல்ஹாசன்
3. வாழ்க்கை ஓடம் செல்ல - S.ஜானகி

ஜானகி அம்மா பாடிய பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை. கர்னாடக இசையின் ஒரு ராகத்தைப் பாடினால் மழை வரும் என்று நம்பப்படுகிறது. அந்த ராகத்தில் அமைந்தது இந்தப் பாடல்.

"வாழ்க்கை ஓடம் செல்ல
வாழ்வில் நீரோட்டம் இல்லை...
யாரும் தேரில் செல்ல
ஊரில் தீரும் இல்லை...
எங்கோ ஏதோ யாரோ...ஓஓஓ"

- என்ற பாடலை ஸ்டுடியோவில் பாடிவிட்டு வீட்டிற்கு சென்றார்களாம். வழியில் தூறல் விழுந்ததற்கான ஈர அடையாளம் இருந்ததாம். இதனை தொலைகாட்சியில் பேசும் பொழுது பகிர்ந்து கொண்டார்கள். நேரில் சந்தித்த பொழுது அதைப்பற்றி விசாரித்தேன். கண்கள் விரிய அந்த நிகழ்வை பசுமை மாறாமல் பகிர்ந்து கொண்டார்கள்.

திரைப்படத்தின் ஆரம்ப 14 நிமிடங்களை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்:
Aval Apadithaan 1/10

"குப்பை மாதிரி வேகமா வளரனும், அப்பத்தான் கோபுரமா உசர முடியும்னு" என்னோட தோழி அடிக்கடி சொல்லுவாள். கோபுரமாக உயர்வதின் ரகசியம் இதுதானோ என்னவோ. அதனால் தான் உச்ச நடிகர்கள் தங்களுக்கான குப்பைகளை கால இடைவெளியில் சேர்த்துக் கொண்டே வேகமாக வளர்கிறார்களோ என்னவோ. அதனால் தானே மகுடத்தின் மணியாகவும், கழுத்தின் ஆபரணமாகவும் உச்ச நட்சத்திரங்கள் வைரமாக ஜொலிக்கிறார்கள்.

வைரம் மண்ணில் இருந்து மட்டும் எடுக்கப் படுவதில்லையே. பாம்பின் விஷமாகக் கூட நம்பப்படுகிறதே. அதனால் தானே வைரம் உயிரை எடுக்கும் விஷமாகவும் பயன்படுகிறது. தற்போதைய சினிமா - தயாரிப்பாளர்கள் சமூகத்தின் மீது உமிழும் விஷமாகத் தானே இருக்கிறது. விஷத்தைத் தானே நாசூக்காக வியாபாரம் செய்கிறார்கள். உண்மையான கலை வடிவம் குழி தோண்டி புதைக்கப் படுகிறது. காலம் ஒருநாள் அவற்றை உண்மையான வைரமாக மாற்றும்.

அவள் அப்படித்தான் - எதிர்காலம் கண்டெடுக்க வேண்டிய அற்புத வைரம்.

Tuesday, October 19, 2010

அகநாழிகை புத்தக வெளியீடு

விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாவகே சாரு நிவேதிதா வந்திருந்தார். அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே CSK வந்துவிட்டார். எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்கிறேன் என்றால் CSK வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நான் அங்கு இருந்தேன். ஞாயிறன்று முரளி வருவதாகச் சொல்லி இருந்தான். அவனுக்கான புத்தகம் வாங்கவே கொஞ்சம் சீக்கிரம் சென்றிருந்தேன். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே அமைந்தது. புதுக்கவிதை எழுதும் 'சா முத்துவேல், யாத்ரா, வேல்கண்ணன், பெஸ்கி' என்று பல நண்பர்களையும் நீண்ட நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. சா முத்துவேலுக்கு இளமை திரும்பியிருந்தது. என்னுடைய பொறாமையை மறைக்காமல் அவரிடம் தெரியப்படுத்தினேன்.

குறித்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக விழா தொடங்கியது. சாரு பேச ஆரம்பித்தார். 'பரத்தை கூற்று' - புத்தகத்தை முதலில் சிறுகதைத் தொகுதி என்று நினைத்தாராம். கவிதை என்றதும் வருவதற்கு தயக்கமாக இருந்தது என்றார். என்னை வெளியிட அழைத்ததற்காக CSK-வைப் பாராட்டுகிறேன் என்றார். அதன் பிறகு உலக இலக்கியம், உலக எழுத்தாளர்கள், உலகக் கவிதை, உலகப் படம் என்று என்னென்னமோ பேசினார். அவற்றில் பதிவாகியிருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வலிகளை உணர்துவதற்காக பல மேற்கோள்களைக் காட்டினார். 'வைரமுத்து, இளையராஜா, கமல்ஹாசன்' போன்ற பிரபலமானவர்களைப் பற்றி ஏற்கனவே பல சந்தர்பங்களில் பகிர்ந்து கொண்ட அதே கருத்துக்களை இங்கும் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு வழங்கிவரும் அடைமொழி குறித்த தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் பேசியவர் கடைசி ஐந்து நிமிடங்கள் 'பரத்தை கூற்று' கவிதை புத்தகத்திற்காக எடுத்துக் கொண்டார். ஒருசில கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். "சுஜாதா இருந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இருப்பார். அப்படிப்பட்ட கவிதைகள் நிறைய இருக்கிறது. அவர் எவ்வளவோ கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மனுஷ்யபுத்ரனைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பரத்தைகளின் வலி கவிதைகளில் இல்லை" என்று அனைவருக்கும் நன்றி கூறி உரையை முடித்தார்.

70-ற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்ததால் நாங்கள் விட்ட மூச்சுக்காற்றே அறையை உஷ்ணமாக்கியது. சுற்றியிருந்த வெக்கையும், உள்ளிருந்த புழுக்கமும் வெளியில் வந்தவுடன் கரைந்து சென்றது போல இருந்தது. நண்பர்களிடம் விடைபெற்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். முன் பார்த்திராத நபரிடம் "இங்கு நிற்கும் வண்டிகள் உதயம் திரையரங்கு செல்லுமா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே அருகில் அழைத்து உட்காரச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இது போன்ற தருணங்களில் சொல்வதற்கென்றே தயார் செய்து வைத்திருந்த வரிகளை வார்த்தை பிறழாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு சில கேள்விகளைக் கேட்டார். அதற்கும் சலிக்காமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். ஒரு நிலையில் போதும் என்று நிறுத்திவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன்.

சென்னைவாசி. பெயர் பிரபா என்றார். மெட்ராஸ் பல்கலையில் 'சங்ககால இலக்கியம்' பற்றி Phd செய்து கொண்டிருக்கிறாராம். 'பரத்தை கூற்று' என்றதும் ஆவலுடன் வந்திருந்தேன். "எதிர்பார்த்த அளவிற்கு இல்லை" என்றார். இதற்குள் பேருந்து வரவும் உள்ளே சென்று கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டோம். மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஈரத்தரை நகர்ந்து கொண்டிருந்தது.

உங்களை புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்தேன். அதனால் தான் உங்களைப் பற்றி விசாரித்தேன் என்றார். அவரைப் பார்த்த ஞாபகம் எனக்குக் கொஞ்சமும் இல்லை.

"இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி விழாவிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. புத்தகம் படிக்கிறீங்க இல்ல... அதுவே போதும்..." என்று அவர் சொல்லியதும் நான் அதிர்ந்தேன்.

"நான் முண்டியடித்து எந்த ரிஸ்கும் எடுக்கலையே!" என்றேன்.

"இரண்டு மணி நேரம் பயணம் செய்து வரீங்க இல்ல... அதைச் சொன்னேன்..." என்றார்.

பிரபா எழுதி "கண்ணாடி" என்ற கவிதைப் புத்தகமும், "பல்பம், பிஞ்சுகள்" ஆகிய குறு நாவல்களும் வெளிவந்துள்ளதாம். NCBH - ல் கிடைக்கிறது என்றார். உதயம் திரையரங்கைப் பார்த்ததும் எழுந்து கொண்டேன். வண்டி நின்றதும் கீழே இறங்கி அவரைப் பார்த்துச் சிரித்தேன். என்னைப் பார்த்து கையசைத்தார். எந்திரன் படத்தின் போஸ்டரை சில நொடிகள் மறைத்தவாறு பேருந்து என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

Friday, October 15, 2010

அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

அமெரிக்காவில் இருக்கும் பொழுது aesthetic intelligence - சார்ந்த ஒரு புதிர் விளையாட்டில் அனில் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டாராம். அதனை கேணி உரையாடலின் இடையில் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இதற்கு ஒரு பேனாவும் காகிதமும் போதும் என்றார். வந்திருந்த 80-ற்கும் அதிகமான நண்பர்களில் 8-ற்கும் குறைவானவர்களே பேனா-பேப்பருடன் வந்திருந்தோம். அதில் நானும் ஒருவன். புதிரின் ஆரம்பமாக அவர் சொல்லும் பெயர்களை வரிசையாக எழுதச் சொன்னார். அவர் உதடசைத்து உச்சரித்த பெயர்கள்...

1) Gnani
2) Pushpa
3) Hari
4) Arivazhagan
5) Surya

"இந்தப் பெயர்களை உங்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றி வரிசைப் படுத்துங்கள்" என்றார்.

"எவ்வளவோ பண்றோம்... இதைப் பண்ண மாட்டோமா!" என்று வரிசையை '2 - 1 - 3 - 5 - 4' இப்படி மாற்றினேன்.

"நீங்கள் ஏன் இப்படி வரிசையை மாற்றினீர்கள்? காரணம் என்ன?" என்று முதல் வரிசையில் இருந்ததால் என்னிடமிருந்து உரையாட ஆரம்பித்தார்.

2) Pushpa - அம்மாவின் பெயர்
1) Gnani - பிடித்த எழுத்தாளர் மற்றும் கேணி நண்பர்
3) Hari - என்னுடைய பழைய கம்பெனியின் நிறுவனர். வேலை கொடுத்து உபசரித்த நண்பர்.
5) Surya - இந்த பெயரில் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
4) Arivazhagan - நல்ல தமிழ் பெயர். Out of fashion என்று சொல்லவில்லை. இந்தப் பெயரில் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை என்றேன்.

"நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்" என்றார்.

"யாராவது அகர வரிசைப்படி எழுதி இருக்கிறீர்களா?" என்றார்.
ஒரு சிலர் ஆம்... என்றனர்.

"யாராவது வரிசையை மாற்றாமல் அப்படியே இருக்கட்டும் என்று இருக்கிறீர்களா?".
ஒருவர் தலையசைத்தார்.

யாராவது வார்த்தையின் நீள அளவை கருத்தில் கொண்டு அடுக்கி இருக்கிறீர்களா?.
ஒருவர் மட்டுமே அதுபோல அடுக்கியிருந்தார். அதாவது,

3) Hari
1) Gnani
5) Surya
2) Pushpa
4) Arivazhagan

இந்த முறையில் யார் அடுக்கி இருக்கிறார்களோ, அவர்கள் மிகுந்த அறிவாளிகள், உலகின் ஒரு சதவிகித மனிதர்களுக்குத் தான் இந்த அழகியல் அறிவு இருக்கும். இசை அல்லது நுண்கலையைப் படித்திருந்தால் இந்த அறிவு அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று அந்த நண்பரைப் பார்த்து கேட்டார். அவரும் டிசைன் சமந்தப்பட்ட வேலையில் இருப்பதாகக் கூறினார்.

இது எதேர்ச்சையாக நடந்ததா அல்லது குறிவைத்துப் பழி வாங்கியதா என்று தெரியவில்லை. கொடுத்திருந்த பெயர்களில் நால்வர் எனக்கு நெருக்கமானவர்கள். அது மட்டுமில்லாமல் Keyboard 4 மாதமும், கிடார் - 8 மாதமும் பயின்றிருக்கிறேன். போலவே என்னுடைய மாமா வெங்கட் - ஆயில் பெயிண்டிங், அக்ராலிக் பெயிண்டிங் போன்றவற்றை செய்து உலக வங்கிக்கும், பல பெரிய நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடைசி நாள் வரை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். இது போதாதென்று ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று வெங்கட்டின் தனியறைகுச் சென்று அவர் வரைந்திருக்கும் வண்ண ஓவியங்களைப் பார்த்து "இந்த கலர் காம்பினேஷன் நல்லா இருக்கே, இந்த Brush Stroke நல்லா இருக்கே" என்று நுணுக்கமாகப் பாராட்டவும் செய்வேன். இருந்தும் அழகியல் அறிவு என் மூளைக்கு எட்டாதது என்? எதற்கும் மாமாவிடம் இதே விளையாட்டை விளையாடிப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்.

அழகியல் அறிவைத் தவிர்த்து இசையானது மருத்துவ ஆராய்ச்சியிலும் சில நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. லேண்ட் மார்க்கில் சென்று பார்க்க வேண்டுமே! Vedic mantras for Pregnancy ladies, Music for Kidneys, Heart, Stomach, Relax என்பது மட்டுமில்லாமல் Music for pregnancy ladies, Diabetics, Music for baby's sleep, Prenatal music என்று பல வகைகளில் இருக்கிறது. "இவையெல்லாம் உண்மையிலேயே பயனுள்ள இசைத்தானா அல்லது விற்பனை நோக்கில் செய்யப்படுகிறதா?" என்று கேட்டேன்.

மனித மூளையைத் தூண்டும் தன்மை இசைக்கு இருக்கிறது. ஆனால் இவர்கள் செய்வது வியாபார நிமித்தமாகத் தான். அதிகமாக நம்பாதீர்கள்.

சில இசை உங்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிடும். Mozart Effect - என்ற இசையியல் ஆராய்ச்சி கூட நடந்து கொண்டிருக்கிறது. Mozart-ன் இசையைக் கேட்கும் பொழுது மூளையின் சில பகுதிகள் பிரத்யோகமாகச் செயல்படுகிறது என்பதை நிறுபித்திருக்கிறார்கள். நல்ல உணர்வுகளைத் தூண்டுமாறு இசையைக் கேட்க வேண்டும். இரைச்சல் மிகுந்த பாடல்களை அதிகம் கேட்காதீர்கள். அது மூளைக்கு நல்லது அல்ல என்று அனில் பகிர்ந்து கொண்டார்.

"யுவன் இசையமைக்கும் பொழுது சில ஒலி அதிர்வுகளில் பாடல் பதிவு செய்யாதே என்று சொல்லிவிடுவேன். அப்படி இருந்தாலும் அதை நீக்கச் சொல்லுவேன். ஏனெனில் சில அதிர்வுகளில் பாடல்களைக் கேட்பது மனித மூளைக்கு நல்லதல்ல. அதுபோன்ற இசையைக் கொடுப்பது பாவம்" என்று இளையராஜா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. இதை மாஸ்ட்ரோ பகிர்ந்து கொண்ட பொழுது யுவன் அருகில் இருந்தார்.

தற்போது கேட்கக் கூடிய இசை எல்லாமே அதிகமான இரைச்சலைக் கொண்டுதான் வருகின்றன. அப்படியெனில் நம் மூளையைக் கெடுக்கக் கூடிய வேலையை தான் இசையமைப்பாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்களா?

அனில் ஸ்ரீநிவாஸ் - 2 - அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

Tuesday, October 12, 2010

கேணி இசை சந்திப்பு - அனில் ஸ்ரீநிவாஸ்

இசையை ரசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குழந்தையின் அழுகையைக் கூட தாயின் இதமான பேச்சைக் காட்டிலும், தாலாட்டுதானே சமாதானம் செய்கிறது. நண்பர்களுக்கு ஒரு கேள்வி... "உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?"

ரகுமானின் இசை, யுவனின் இசை, இளையராஜாவின் இசை, MSV-யின் இசை, வித்யாசாகர், GV பிரகாஷ், MSS அம்மா இசை, நித்யஸ்ரீ, சௌம்யா, SPB, ஜானகி, சுசீலா, TMS, ஜேசுதாஸ் என்று பட்டியல் நீண்டு யாராவது ஒருவரை உங்கள் மனம் இந்த நேரத்தில் தேர்வு செய்திருக்கும். அதற்கான காரணமும் இருக்கும்.அந்த நபரை மறந்துவிடாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கேணி இசைச் சந்திப்பைப் பற்றி பேசிவிட்டு இவர்களிடம் வரலாம்.

அனில் ஸ்ரீநிவாசன் - அமெரிக்காவில் MBA [மேனஜ்மென்ட் & எகனாமிக்ஸ்] முடித்துவிட்டு, அங்கேயே இரண்டு வருடம் வேலையும் பார்த்துவிட்டு, இசைதான் இனி வாழ்க்கையென வேலையை உதறிவிட்டு முழுநேர இசைக்கலைஞராக தன்னை மாற்றிக் கொண்டவர். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவர். மேற்கத்திய இசையை முறைப்படி பயின்றவர். இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிபவர். குருசரனுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள பாரதியார் பாடல்கள் ஆல்பம் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. உன்னி கிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து மேடை கச்சேரி செய்யக் கூடியவர். இவரைப் பற்றி பூரணமாகவும் இசை வாசிப்புகளைக் கேட்கவும் அவருடைய இணைய தளத்திற்குச் செல்லவும்: http://www.thisandtheother.com

அனில் பேச ஆரம்பிக்கும் பொழுது புழுக்கமாக இருந்தது. திருவாரூரிலுள்ள பள்ளியில் இசை விழிப்புணர்வு நேரத்தின் போது கிடைத்த அனுபவத்துடன் பேச ஆரம்பித்தார். இசை மும்மூர்த்திகளை மனதில் வைத்துக் கொண்டு 'ட்ரினிட்டி என்றால் என்ன?' - என்று மாணவர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

யாருமே பதில் சொல்லவில்லையாம். ஒரே ஒரு மாணவர் மட்டும் எழுந்து மூன்று நடிகைகளின் பெயரைக் கூறினானாம் [திரிஷா, நயன்தாரா, ****]. விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்து மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாராம். மாணவன் அதே பதிலைத் திரும்பவும் கூறினானாம். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து சிரித்தார்களாம். சிறுவர்களுக்குத் தெரியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. ஆசிரியர்களே இப்படி இருந்தால் எப்படி என்று அனிலுக்கு பயங்கரக் கோவம் வந்துவிட்டதாம். காரணம், அந்த பள்ளியின் இரண்டு தெருக்கள் தள்ளி இசை மும்மூர்த்திகள் [தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சதர்] பிறந்த தெரு இருக்கிறதாம்.

இன்றைய நிலையில் ஏதாவது ஒன்றை அடையும் வழியாகத் தான் இசையை பயன்படுத்துகிறார்கள். புகழ், பணம், சூப்பர் சிங்கர் ஷோ, 35 லட்ச ரூபாய் வீடு என்று இவற்றைக் கருத்தில் கொண்டுதான் இசையை பார்க்கிறார்கள். ஒரு நண்பர், ஒருநாள் காலையில் ஃபோன் செய்திருந்தார். அவருடைய மகன் எங்களுடைய இசைப்பள்ளியில் தான் படிக்கிறார். "என் மகன் டிவி போட்டியில கலந்துக்கப் போறான், அனுப்புறேன்... ஏதாவது டிப்ஸ் கொடுங்க" என்று சொன்னார்.

"சரிங்க இன்னைக்கு சாயந்திரம் அனுப்பி வைங்க" என்று சொன்னேன். "இல்லைங்க, அதுக்கெல்லாம் நேரம் இல்ல. இன்னைக்கு மதியம் அவன் போட்டியில கலந்துக்கனும்" என்று சொல்கிறார். பெற்றவர்கள் தான் நேரடியாக இம்சிக்கிறார்கள் என்றால் போட்டிக்கு வரும் நடுவர்கள் வேறு மாதிரி படுத்துகிறார்கள். பாடுபவர்கள் குழந்தைகள். பாடல்களோ Adult Expression Songs. அதில் இந்த உச்சரிப்பு சரியில்லை. பாவம் சரியில்லை என்று பார்க்கவே... கேட்கவே... சகிக்கவில்லை. போட்டி நடத்துவதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளும், அதில் வெற்றி பெறுவதும் தான் மேலானவை என்ற மாயையை ஊடகங்கள் ஏற்படுத்துவது சரியில்லை என்று அழுத்தமாகக் கூறினார்.

Mozart -ன் 12-வது வயதில் குழந்தைகளுக்கான ஓர் இசைப் போட்டி நடத்தியிருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பம் என்பதால் பரிசுக்காக வேண்டி மொசார்ட் கலந்துகொண்டாராம். போட்டியில் கலந்து கொண்டவர்களை தனியறையில் ஒரு பென்சிலும் காகிதமும் கொடுத்து உட்காரவைத்துவிட்டு Tune அமைக்கச் சொன்னார்களாம். இசைக் கருவியைப் பயன்படுத்தாமல் இரண்டு மணி நேரத்தில் "Twinkle Twinkle Little Star" என்ற பாடலின் 32 வகையான (Variations) இசைக் கோர்ப்புகளை தயார் செய்து வைத்திருந்தாராம். அவருக்குதான் முதல் பரிசும் கிடைத்ததாம். இவர் 35 வயதுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதற்குள் 6000 இசைக் கோர்ப்புகளை நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். Mozart Effect என்ற தனி மியூசிக் தெரஃபியே இருக்கிறதாம்.

பியானோ, வயலின் எல்லாம் மேற்கத்திய இசைக்கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பியானோ இரண்டு இந்திய இசைக் கருவிகளின் சேர்மானம் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. காஷ்மீரின் சந்தூர் என்ற இசைக்கருவியும், பண்டைய இந்தியாவின் யாழ் என்ற இசைக்கருவியும் சேர்ந்தது தான் பியானோ. அடுத்த நாட்டினர் முழுமை பெறாமல் செய்ததை எடுத்துக் கொண்டுபோய், மெருகேற்றி அதை தங்களுடையது என்று காப்புரிமை வாங்கிக் கொண்டு வியாபாரப் படுத்துவதில் மேற்கத்தியர்களை மிஞ்ச முடியாது. பியானோவும் அப்படித்தான் மேற்கத்தியர்கள் இசைக்கருவியானது என்றபொழுது, அனில் சொல்லியதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இடையில் காற்று குளிர்ச்சியைப் பரப்பியது. மழை வந்து பியானோ நனைந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே இருந்தார். மழையால் நனைத்துவிட முடியாத உறையைக் கொண்டு வந்ததும் தான் சமநிலைக்கு வந்தார். Music therophy மற்றும் மேல்நாட்டில் Btech architecture படிப்பில் இசையும் ஒரு பாடமாம். அதன் காரணங்களையும் சிறப்பையும் பற்றி விரிவாகப் பேசினார். இசை மற்றும் கலையைக் கற்பதால் aesthetic intelligence அதிகமாவதையும் சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார்.

அதே மாதிரி தான் 'மேற்கத்திய இசை மேல்நாட்டு இசையாக மாறி, அதுவே மேலான இசையாகவும் மெல்லிசையாகவும் அர்த்தம் கொல்லப்பட்டுவிட்டது'. எல்லா இசையும் ஒன்றுதான். யார் இசையமைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும். இசையை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இசை பொதுவானது. ஓர் இசைவடிவம், அடுத்த இசை வடிவத்தை ஏற்றுக்கொண்டு புதிதாகத் தோற்றமளிக்கும். அதனைக் குறை என்றும் சொல்ல முடியாது. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகூட ஈரான், பெர்சியா போன்ற நாடுகளின் ராகங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இந்திய திரையிசையைச் சொல்லலாம். 1950-களிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள் என்று MSV, மதன் மோகன் போன்றவர்களுடைய பாடல்களை வாசித்துக் காண்பித்தார். அதிலும் 198 0-களின் தொடக்கத்தில் இளையராஜா செய்த இசை உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக... (http://www.youtube.com/watch?v=A5-W9rYg0nw பாடல் ஆரம்பிக்கும் முன்பான காட்சிகளுடன் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது. re-recording வுடன் சேர்த்து இந்தப் பாடலைக் கேளுங்கள்.)

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் (2)
இருமனம் சுகம்பெரும்
வாழ்நாளே...(2)

பாடலை Jazz-ல் ஆரம்பித்து வெஸ்டேர்ன் சென்று, ஹிந்துஸ்தானி ராகம் தொட்டு பிறகு கர்னாடக ராகம், மீண்டும் வெஸ்டேர்ன் என்று எல்லாவற்றையும் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். இதனை நமக்கேற்ற வடிவத்தில் தந்திருப்பார். இந்த விளக்கம் முதல் நான்கு வரிகளுக்கு மட்டுமே என்றார்.... இதுபோல இளையராஜாவின் ஏராளமான பாடல்களைச் சொல்லலாம். எந்த தொழில் நிட்பமும் இல்லாமல் இவற்றையெல்லாம் இளையராஜா செய்திருக்கிறார். பழைய சவுண்ட் ரெக்கார்டிங் தியேட்டர்கள் எல்லாம் கால்பந்தாட்ட மைதானம் மாதிரி இருக்கும். ஒரு பாடல் பதிவாக்கப்பட்டால் எல்லா இசைக்கலைஞர்களும் அங்கு இருப்பார்கள். அவரிடம் சில முறை பணியாற்றியிருக்கிறேன். உன்னதமான இசையமைப்பாளர். வியாபர ரீதியாக தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியாதவர்.

ரகுமான் கூட தென்னாப்பரிக்க இசை, சூபி இசை, பாப், ஜாஸ் என்று ஏராளமான இசையைத் தனது படங்களில் பயன்படுத்துகிறார். அதனால்தான் நாடு கடந்தும் கூட அவருடைய இசை ரசிக்கப் படுகிறது என்றார். அதன் பிறகு பியானோ வாசித்துக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து வாசகர்கள் கேள்வி எழுப்பினார்கள். சந்திப்பின் முடிவாக ஹேராம் படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாடலை வாசித்து நிறைவு செய்தார்.

இனி ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுக்கு வருவோம். அதற்கு முன் என்னுடைய மருமகனுக்கு சொல்லிய சூஃபி கதையை உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன்...

RA புரம், பெலிசியா கட்டிடத்தின் எட்டாவது மாடியில் என்னுடைய மருமகனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். உடைந்த கையினை அசைத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இருப்பதை அவனுடைய நடையே உணர்த்தியது. அவனிடம் விபத்து நடந்ததைப் பற்றியும், அறுவை சிகிச்சை செய்ததது பற்றியும் கேள்விகள் கேட்டேன். ஒரு கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் அந்தக் கதையை சொல்லத் தொடங்கினேன். கதை என்றதும் மருமகன் சந்தோஷமானான்.

கதை கூட கேள்வியில் தான் ஆரம்பிக்கும். "மழை ஏன் பொழிகிறது?" என்பதுதான் அந்தக் கேள்வி.

முகம் சுளித்துக் கொண்டே "என்ன மாமா, சின்ன பசங்ககிட்ட கேக்குற மாதிரி கேக்குறீங்க? கதை தானே சொல்றேன்னு சொன்னீங்க?" என்றான்.

"பதில் சொன்னால் தான் கதையை ஆரம்பிக்க முடியும். சொல்லுடா" என்று அதட்டினேன்.

"மேகத்துல தண்ணி சேந்து கனமா ஆயிடும். மழையா வந்துடும். கடல் தண்ணியை காற்று உறிஞ்சி மேகத்துக்குக் கொடுக்கும். மேகம் கனமாக, கனமாக நெறைய மழையா வரும்" என்று ஆறாம் வகுப்பு மாணவன் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு பயந்துகொண்டே சொன்னான்.

எனக்கு என்னவோ அள்ளி எடுத்து அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. Corporate Office என்பதால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். நீ சொல்லியது சரியான பதிலாக இருக்கலாம் மருமகனே. என்றாலும் "எப்படி மழை பொழிகிறது? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வாய்" என்று தொடர்ச்சியாக இன்னொரு கேள்வியையும் கேட்டேன்.

"ஆமாம் இல்ல... மாமா..." என்று அசடு வழிந்தான். ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது, அலசி ஆராயாமல் நமக்குத் தெரிந்த பதிலை பொருத்திவிடுகிறோம். அதுதான் பிரச்சனையே. "எந்த மாதிரி..? என்ற வினா எழும் பொழுது "கிராமிய இசை, தாலாட்டு இசை, கர்நாடிக் இசை, ஹிந்துஸ்தானி இசை, திரை இசை, கருவி இசை" என்ற பட்டியலாக இல்லாமல் "யாருடைய...?" என்ற கேள்விக்கான பதிலைத் தான் பெரும்பாலும் பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் யாரோ ஒருவருடன் நம்மை இழந்துவிடுகிறோம். "இசை யார் வழியாகவும் நமக்குக் கிடைப்பதில்லை. இசைதான் சிலரின் வழியாக நமக்குக் கிடைக்கிறது" என்று அனில் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.



"உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?" என்ற கேள்விக்கு இனி பதில் சொல்லும் பொழுது யோசித்துவிட்டுத் தான் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன். உங்களிடம் கூட இந்தக் கேள்வியை ஆரம்பத்தில் கேட்டிருந்தேன் இல்லையா? நீங்கள் யோசித்த பதிலை பின்னூட்டத்தில் அளித்தால் நிச்சயம் மகிழ்வேன். ஆமாம், உங்களின் பதில் தான் என்ன?