Tuesday, October 19, 2010

அகநாழிகை புத்தக வெளியீடு

விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாவகே சாரு நிவேதிதா வந்திருந்தார். அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே CSK வந்துவிட்டார். எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்கிறேன் என்றால் CSK வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நான் அங்கு இருந்தேன். ஞாயிறன்று முரளி வருவதாகச் சொல்லி இருந்தான். அவனுக்கான புத்தகம் வாங்கவே கொஞ்சம் சீக்கிரம் சென்றிருந்தேன். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே அமைந்தது. புதுக்கவிதை எழுதும் 'சா முத்துவேல், யாத்ரா, வேல்கண்ணன், பெஸ்கி' என்று பல நண்பர்களையும் நீண்ட நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. சா முத்துவேலுக்கு இளமை திரும்பியிருந்தது. என்னுடைய பொறாமையை மறைக்காமல் அவரிடம் தெரியப்படுத்தினேன்.

குறித்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக விழா தொடங்கியது. சாரு பேச ஆரம்பித்தார். 'பரத்தை கூற்று' - புத்தகத்தை முதலில் சிறுகதைத் தொகுதி என்று நினைத்தாராம். கவிதை என்றதும் வருவதற்கு தயக்கமாக இருந்தது என்றார். என்னை வெளியிட அழைத்ததற்காக CSK-வைப் பாராட்டுகிறேன் என்றார். அதன் பிறகு உலக இலக்கியம், உலக எழுத்தாளர்கள், உலகக் கவிதை, உலகப் படம் என்று என்னென்னமோ பேசினார். அவற்றில் பதிவாகியிருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வலிகளை உணர்துவதற்காக பல மேற்கோள்களைக் காட்டினார். 'வைரமுத்து, இளையராஜா, கமல்ஹாசன்' போன்ற பிரபலமானவர்களைப் பற்றி ஏற்கனவே பல சந்தர்பங்களில் பகிர்ந்து கொண்ட அதே கருத்துக்களை இங்கும் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு வழங்கிவரும் அடைமொழி குறித்த தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் பேசியவர் கடைசி ஐந்து நிமிடங்கள் 'பரத்தை கூற்று' கவிதை புத்தகத்திற்காக எடுத்துக் கொண்டார். ஒருசில கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். "சுஜாதா இருந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இருப்பார். அப்படிப்பட்ட கவிதைகள் நிறைய இருக்கிறது. அவர் எவ்வளவோ கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மனுஷ்யபுத்ரனைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பரத்தைகளின் வலி கவிதைகளில் இல்லை" என்று அனைவருக்கும் நன்றி கூறி உரையை முடித்தார்.

70-ற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்ததால் நாங்கள் விட்ட மூச்சுக்காற்றே அறையை உஷ்ணமாக்கியது. சுற்றியிருந்த வெக்கையும், உள்ளிருந்த புழுக்கமும் வெளியில் வந்தவுடன் கரைந்து சென்றது போல இருந்தது. நண்பர்களிடம் விடைபெற்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். முன் பார்த்திராத நபரிடம் "இங்கு நிற்கும் வண்டிகள் உதயம் திரையரங்கு செல்லுமா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே அருகில் அழைத்து உட்காரச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இது போன்ற தருணங்களில் சொல்வதற்கென்றே தயார் செய்து வைத்திருந்த வரிகளை வார்த்தை பிறழாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு சில கேள்விகளைக் கேட்டார். அதற்கும் சலிக்காமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். ஒரு நிலையில் போதும் என்று நிறுத்திவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன்.

சென்னைவாசி. பெயர் பிரபா என்றார். மெட்ராஸ் பல்கலையில் 'சங்ககால இலக்கியம்' பற்றி Phd செய்து கொண்டிருக்கிறாராம். 'பரத்தை கூற்று' என்றதும் ஆவலுடன் வந்திருந்தேன். "எதிர்பார்த்த அளவிற்கு இல்லை" என்றார். இதற்குள் பேருந்து வரவும் உள்ளே சென்று கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டோம். மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஈரத்தரை நகர்ந்து கொண்டிருந்தது.

உங்களை புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்தேன். அதனால் தான் உங்களைப் பற்றி விசாரித்தேன் என்றார். அவரைப் பார்த்த ஞாபகம் எனக்குக் கொஞ்சமும் இல்லை.

"இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி விழாவிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. புத்தகம் படிக்கிறீங்க இல்ல... அதுவே போதும்..." என்று அவர் சொல்லியதும் நான் அதிர்ந்தேன்.

"நான் முண்டியடித்து எந்த ரிஸ்கும் எடுக்கலையே!" என்றேன்.

"இரண்டு மணி நேரம் பயணம் செய்து வரீங்க இல்ல... அதைச் சொன்னேன்..." என்றார்.

பிரபா எழுதி "கண்ணாடி" என்ற கவிதைப் புத்தகமும், "பல்பம், பிஞ்சுகள்" ஆகிய குறு நாவல்களும் வெளிவந்துள்ளதாம். NCBH - ல் கிடைக்கிறது என்றார். உதயம் திரையரங்கைப் பார்த்ததும் எழுந்து கொண்டேன். வண்டி நின்றதும் கீழே இறங்கி அவரைப் பார்த்துச் சிரித்தேன். என்னைப் பார்த்து கையசைத்தார். எந்திரன் படத்தின் போஸ்டரை சில நொடிகள் மறைத்தவாறு பேருந்து என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

Friday, October 15, 2010

அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

அமெரிக்காவில் இருக்கும் பொழுது aesthetic intelligence - சார்ந்த ஒரு புதிர் விளையாட்டில் அனில் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டாராம். அதனை கேணி உரையாடலின் இடையில் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இதற்கு ஒரு பேனாவும் காகிதமும் போதும் என்றார். வந்திருந்த 80-ற்கும் அதிகமான நண்பர்களில் 8-ற்கும் குறைவானவர்களே பேனா-பேப்பருடன் வந்திருந்தோம். அதில் நானும் ஒருவன். புதிரின் ஆரம்பமாக அவர் சொல்லும் பெயர்களை வரிசையாக எழுதச் சொன்னார். அவர் உதடசைத்து உச்சரித்த பெயர்கள்...

1) Gnani
2) Pushpa
3) Hari
4) Arivazhagan
5) Surya

"இந்தப் பெயர்களை உங்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றி வரிசைப் படுத்துங்கள்" என்றார்.

"எவ்வளவோ பண்றோம்... இதைப் பண்ண மாட்டோமா!" என்று வரிசையை '2 - 1 - 3 - 5 - 4' இப்படி மாற்றினேன்.

"நீங்கள் ஏன் இப்படி வரிசையை மாற்றினீர்கள்? காரணம் என்ன?" என்று முதல் வரிசையில் இருந்ததால் என்னிடமிருந்து உரையாட ஆரம்பித்தார்.

2) Pushpa - அம்மாவின் பெயர்
1) Gnani - பிடித்த எழுத்தாளர் மற்றும் கேணி நண்பர்
3) Hari - என்னுடைய பழைய கம்பெனியின் நிறுவனர். வேலை கொடுத்து உபசரித்த நண்பர்.
5) Surya - இந்த பெயரில் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
4) Arivazhagan - நல்ல தமிழ் பெயர். Out of fashion என்று சொல்லவில்லை. இந்தப் பெயரில் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை என்றேன்.

"நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்" என்றார்.

"யாராவது அகர வரிசைப்படி எழுதி இருக்கிறீர்களா?" என்றார்.
ஒரு சிலர் ஆம்... என்றனர்.

"யாராவது வரிசையை மாற்றாமல் அப்படியே இருக்கட்டும் என்று இருக்கிறீர்களா?".
ஒருவர் தலையசைத்தார்.

யாராவது வார்த்தையின் நீள அளவை கருத்தில் கொண்டு அடுக்கி இருக்கிறீர்களா?.
ஒருவர் மட்டுமே அதுபோல அடுக்கியிருந்தார். அதாவது,

3) Hari
1) Gnani
5) Surya
2) Pushpa
4) Arivazhagan

இந்த முறையில் யார் அடுக்கி இருக்கிறார்களோ, அவர்கள் மிகுந்த அறிவாளிகள், உலகின் ஒரு சதவிகித மனிதர்களுக்குத் தான் இந்த அழகியல் அறிவு இருக்கும். இசை அல்லது நுண்கலையைப் படித்திருந்தால் இந்த அறிவு அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று அந்த நண்பரைப் பார்த்து கேட்டார். அவரும் டிசைன் சமந்தப்பட்ட வேலையில் இருப்பதாகக் கூறினார்.

இது எதேர்ச்சையாக நடந்ததா அல்லது குறிவைத்துப் பழி வாங்கியதா என்று தெரியவில்லை. கொடுத்திருந்த பெயர்களில் நால்வர் எனக்கு நெருக்கமானவர்கள். அது மட்டுமில்லாமல் Keyboard 4 மாதமும், கிடார் - 8 மாதமும் பயின்றிருக்கிறேன். போலவே என்னுடைய மாமா வெங்கட் - ஆயில் பெயிண்டிங், அக்ராலிக் பெயிண்டிங் போன்றவற்றை செய்து உலக வங்கிக்கும், பல பெரிய நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடைசி நாள் வரை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். இது போதாதென்று ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று வெங்கட்டின் தனியறைகுச் சென்று அவர் வரைந்திருக்கும் வண்ண ஓவியங்களைப் பார்த்து "இந்த கலர் காம்பினேஷன் நல்லா இருக்கே, இந்த Brush Stroke நல்லா இருக்கே" என்று நுணுக்கமாகப் பாராட்டவும் செய்வேன். இருந்தும் அழகியல் அறிவு என் மூளைக்கு எட்டாதது என்? எதற்கும் மாமாவிடம் இதே விளையாட்டை விளையாடிப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்.

அழகியல் அறிவைத் தவிர்த்து இசையானது மருத்துவ ஆராய்ச்சியிலும் சில நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. லேண்ட் மார்க்கில் சென்று பார்க்க வேண்டுமே! Vedic mantras for Pregnancy ladies, Music for Kidneys, Heart, Stomach, Relax என்பது மட்டுமில்லாமல் Music for pregnancy ladies, Diabetics, Music for baby's sleep, Prenatal music என்று பல வகைகளில் இருக்கிறது. "இவையெல்லாம் உண்மையிலேயே பயனுள்ள இசைத்தானா அல்லது விற்பனை நோக்கில் செய்யப்படுகிறதா?" என்று கேட்டேன்.

மனித மூளையைத் தூண்டும் தன்மை இசைக்கு இருக்கிறது. ஆனால் இவர்கள் செய்வது வியாபார நிமித்தமாகத் தான். அதிகமாக நம்பாதீர்கள்.

சில இசை உங்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிடும். Mozart Effect - என்ற இசையியல் ஆராய்ச்சி கூட நடந்து கொண்டிருக்கிறது. Mozart-ன் இசையைக் கேட்கும் பொழுது மூளையின் சில பகுதிகள் பிரத்யோகமாகச் செயல்படுகிறது என்பதை நிறுபித்திருக்கிறார்கள். நல்ல உணர்வுகளைத் தூண்டுமாறு இசையைக் கேட்க வேண்டும். இரைச்சல் மிகுந்த பாடல்களை அதிகம் கேட்காதீர்கள். அது மூளைக்கு நல்லது அல்ல என்று அனில் பகிர்ந்து கொண்டார்.

"யுவன் இசையமைக்கும் பொழுது சில ஒலி அதிர்வுகளில் பாடல் பதிவு செய்யாதே என்று சொல்லிவிடுவேன். அப்படி இருந்தாலும் அதை நீக்கச் சொல்லுவேன். ஏனெனில் சில அதிர்வுகளில் பாடல்களைக் கேட்பது மனித மூளைக்கு நல்லதல்ல. அதுபோன்ற இசையைக் கொடுப்பது பாவம்" என்று இளையராஜா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. இதை மாஸ்ட்ரோ பகிர்ந்து கொண்ட பொழுது யுவன் அருகில் இருந்தார்.

தற்போது கேட்கக் கூடிய இசை எல்லாமே அதிகமான இரைச்சலைக் கொண்டுதான் வருகின்றன. அப்படியெனில் நம் மூளையைக் கெடுக்கக் கூடிய வேலையை தான் இசையமைப்பாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்களா?

அனில் ஸ்ரீநிவாஸ் - 2 - அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

Tuesday, October 12, 2010

கேணி இசை சந்திப்பு - அனில் ஸ்ரீநிவாஸ்

இசையை ரசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குழந்தையின் அழுகையைக் கூட தாயின் இதமான பேச்சைக் காட்டிலும், தாலாட்டுதானே சமாதானம் செய்கிறது. நண்பர்களுக்கு ஒரு கேள்வி... "உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?"

ரகுமானின் இசை, யுவனின் இசை, இளையராஜாவின் இசை, MSV-யின் இசை, வித்யாசாகர், GV பிரகாஷ், MSS அம்மா இசை, நித்யஸ்ரீ, சௌம்யா, SPB, ஜானகி, சுசீலா, TMS, ஜேசுதாஸ் என்று பட்டியல் நீண்டு யாராவது ஒருவரை உங்கள் மனம் இந்த நேரத்தில் தேர்வு செய்திருக்கும். அதற்கான காரணமும் இருக்கும்.அந்த நபரை மறந்துவிடாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கேணி இசைச் சந்திப்பைப் பற்றி பேசிவிட்டு இவர்களிடம் வரலாம்.

அனில் ஸ்ரீநிவாசன் - அமெரிக்காவில் MBA [மேனஜ்மென்ட் & எகனாமிக்ஸ்] முடித்துவிட்டு, அங்கேயே இரண்டு வருடம் வேலையும் பார்த்துவிட்டு, இசைதான் இனி வாழ்க்கையென வேலையை உதறிவிட்டு முழுநேர இசைக்கலைஞராக தன்னை மாற்றிக் கொண்டவர். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவர். மேற்கத்திய இசையை முறைப்படி பயின்றவர். இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிபவர். குருசரனுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள பாரதியார் பாடல்கள் ஆல்பம் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. உன்னி கிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து மேடை கச்சேரி செய்யக் கூடியவர். இவரைப் பற்றி பூரணமாகவும் இசை வாசிப்புகளைக் கேட்கவும் அவருடைய இணைய தளத்திற்குச் செல்லவும்: http://www.thisandtheother.com

அனில் பேச ஆரம்பிக்கும் பொழுது புழுக்கமாக இருந்தது. திருவாரூரிலுள்ள பள்ளியில் இசை விழிப்புணர்வு நேரத்தின் போது கிடைத்த அனுபவத்துடன் பேச ஆரம்பித்தார். இசை மும்மூர்த்திகளை மனதில் வைத்துக் கொண்டு 'ட்ரினிட்டி என்றால் என்ன?' - என்று மாணவர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

யாருமே பதில் சொல்லவில்லையாம். ஒரே ஒரு மாணவர் மட்டும் எழுந்து மூன்று நடிகைகளின் பெயரைக் கூறினானாம் [திரிஷா, நயன்தாரா, ****]. விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்து மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாராம். மாணவன் அதே பதிலைத் திரும்பவும் கூறினானாம். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து சிரித்தார்களாம். சிறுவர்களுக்குத் தெரியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. ஆசிரியர்களே இப்படி இருந்தால் எப்படி என்று அனிலுக்கு பயங்கரக் கோவம் வந்துவிட்டதாம். காரணம், அந்த பள்ளியின் இரண்டு தெருக்கள் தள்ளி இசை மும்மூர்த்திகள் [தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சதர்] பிறந்த தெரு இருக்கிறதாம்.

இன்றைய நிலையில் ஏதாவது ஒன்றை அடையும் வழியாகத் தான் இசையை பயன்படுத்துகிறார்கள். புகழ், பணம், சூப்பர் சிங்கர் ஷோ, 35 லட்ச ரூபாய் வீடு என்று இவற்றைக் கருத்தில் கொண்டுதான் இசையை பார்க்கிறார்கள். ஒரு நண்பர், ஒருநாள் காலையில் ஃபோன் செய்திருந்தார். அவருடைய மகன் எங்களுடைய இசைப்பள்ளியில் தான் படிக்கிறார். "என் மகன் டிவி போட்டியில கலந்துக்கப் போறான், அனுப்புறேன்... ஏதாவது டிப்ஸ் கொடுங்க" என்று சொன்னார்.

"சரிங்க இன்னைக்கு சாயந்திரம் அனுப்பி வைங்க" என்று சொன்னேன். "இல்லைங்க, அதுக்கெல்லாம் நேரம் இல்ல. இன்னைக்கு மதியம் அவன் போட்டியில கலந்துக்கனும்" என்று சொல்கிறார். பெற்றவர்கள் தான் நேரடியாக இம்சிக்கிறார்கள் என்றால் போட்டிக்கு வரும் நடுவர்கள் வேறு மாதிரி படுத்துகிறார்கள். பாடுபவர்கள் குழந்தைகள். பாடல்களோ Adult Expression Songs. அதில் இந்த உச்சரிப்பு சரியில்லை. பாவம் சரியில்லை என்று பார்க்கவே... கேட்கவே... சகிக்கவில்லை. போட்டி நடத்துவதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளும், அதில் வெற்றி பெறுவதும் தான் மேலானவை என்ற மாயையை ஊடகங்கள் ஏற்படுத்துவது சரியில்லை என்று அழுத்தமாகக் கூறினார்.

Mozart -ன் 12-வது வயதில் குழந்தைகளுக்கான ஓர் இசைப் போட்டி நடத்தியிருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பம் என்பதால் பரிசுக்காக வேண்டி மொசார்ட் கலந்துகொண்டாராம். போட்டியில் கலந்து கொண்டவர்களை தனியறையில் ஒரு பென்சிலும் காகிதமும் கொடுத்து உட்காரவைத்துவிட்டு Tune அமைக்கச் சொன்னார்களாம். இசைக் கருவியைப் பயன்படுத்தாமல் இரண்டு மணி நேரத்தில் "Twinkle Twinkle Little Star" என்ற பாடலின் 32 வகையான (Variations) இசைக் கோர்ப்புகளை தயார் செய்து வைத்திருந்தாராம். அவருக்குதான் முதல் பரிசும் கிடைத்ததாம். இவர் 35 வயதுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதற்குள் 6000 இசைக் கோர்ப்புகளை நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். Mozart Effect என்ற தனி மியூசிக் தெரஃபியே இருக்கிறதாம்.

பியானோ, வயலின் எல்லாம் மேற்கத்திய இசைக்கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பியானோ இரண்டு இந்திய இசைக் கருவிகளின் சேர்மானம் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. காஷ்மீரின் சந்தூர் என்ற இசைக்கருவியும், பண்டைய இந்தியாவின் யாழ் என்ற இசைக்கருவியும் சேர்ந்தது தான் பியானோ. அடுத்த நாட்டினர் முழுமை பெறாமல் செய்ததை எடுத்துக் கொண்டுபோய், மெருகேற்றி அதை தங்களுடையது என்று காப்புரிமை வாங்கிக் கொண்டு வியாபாரப் படுத்துவதில் மேற்கத்தியர்களை மிஞ்ச முடியாது. பியானோவும் அப்படித்தான் மேற்கத்தியர்கள் இசைக்கருவியானது என்றபொழுது, அனில் சொல்லியதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இடையில் காற்று குளிர்ச்சியைப் பரப்பியது. மழை வந்து பியானோ நனைந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே இருந்தார். மழையால் நனைத்துவிட முடியாத உறையைக் கொண்டு வந்ததும் தான் சமநிலைக்கு வந்தார். Music therophy மற்றும் மேல்நாட்டில் Btech architecture படிப்பில் இசையும் ஒரு பாடமாம். அதன் காரணங்களையும் சிறப்பையும் பற்றி விரிவாகப் பேசினார். இசை மற்றும் கலையைக் கற்பதால் aesthetic intelligence அதிகமாவதையும் சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார்.

அதே மாதிரி தான் 'மேற்கத்திய இசை மேல்நாட்டு இசையாக மாறி, அதுவே மேலான இசையாகவும் மெல்லிசையாகவும் அர்த்தம் கொல்லப்பட்டுவிட்டது'. எல்லா இசையும் ஒன்றுதான். யார் இசையமைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும். இசையை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இசை பொதுவானது. ஓர் இசைவடிவம், அடுத்த இசை வடிவத்தை ஏற்றுக்கொண்டு புதிதாகத் தோற்றமளிக்கும். அதனைக் குறை என்றும் சொல்ல முடியாது. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகூட ஈரான், பெர்சியா போன்ற நாடுகளின் ராகங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இந்திய திரையிசையைச் சொல்லலாம். 1950-களிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள் என்று MSV, மதன் மோகன் போன்றவர்களுடைய பாடல்களை வாசித்துக் காண்பித்தார். அதிலும் 198 0-களின் தொடக்கத்தில் இளையராஜா செய்த இசை உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக... (http://www.youtube.com/watch?v=A5-W9rYg0nw பாடல் ஆரம்பிக்கும் முன்பான காட்சிகளுடன் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது. re-recording வுடன் சேர்த்து இந்தப் பாடலைக் கேளுங்கள்.)

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் (2)
இருமனம் சுகம்பெரும்
வாழ்நாளே...(2)

பாடலை Jazz-ல் ஆரம்பித்து வெஸ்டேர்ன் சென்று, ஹிந்துஸ்தானி ராகம் தொட்டு பிறகு கர்னாடக ராகம், மீண்டும் வெஸ்டேர்ன் என்று எல்லாவற்றையும் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். இதனை நமக்கேற்ற வடிவத்தில் தந்திருப்பார். இந்த விளக்கம் முதல் நான்கு வரிகளுக்கு மட்டுமே என்றார்.... இதுபோல இளையராஜாவின் ஏராளமான பாடல்களைச் சொல்லலாம். எந்த தொழில் நிட்பமும் இல்லாமல் இவற்றையெல்லாம் இளையராஜா செய்திருக்கிறார். பழைய சவுண்ட் ரெக்கார்டிங் தியேட்டர்கள் எல்லாம் கால்பந்தாட்ட மைதானம் மாதிரி இருக்கும். ஒரு பாடல் பதிவாக்கப்பட்டால் எல்லா இசைக்கலைஞர்களும் அங்கு இருப்பார்கள். அவரிடம் சில முறை பணியாற்றியிருக்கிறேன். உன்னதமான இசையமைப்பாளர். வியாபர ரீதியாக தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியாதவர்.

ரகுமான் கூட தென்னாப்பரிக்க இசை, சூபி இசை, பாப், ஜாஸ் என்று ஏராளமான இசையைத் தனது படங்களில் பயன்படுத்துகிறார். அதனால்தான் நாடு கடந்தும் கூட அவருடைய இசை ரசிக்கப் படுகிறது என்றார். அதன் பிறகு பியானோ வாசித்துக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து வாசகர்கள் கேள்வி எழுப்பினார்கள். சந்திப்பின் முடிவாக ஹேராம் படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாடலை வாசித்து நிறைவு செய்தார்.

இனி ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுக்கு வருவோம். அதற்கு முன் என்னுடைய மருமகனுக்கு சொல்லிய சூஃபி கதையை உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன்...

RA புரம், பெலிசியா கட்டிடத்தின் எட்டாவது மாடியில் என்னுடைய மருமகனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். உடைந்த கையினை அசைத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இருப்பதை அவனுடைய நடையே உணர்த்தியது. அவனிடம் விபத்து நடந்ததைப் பற்றியும், அறுவை சிகிச்சை செய்ததது பற்றியும் கேள்விகள் கேட்டேன். ஒரு கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் அந்தக் கதையை சொல்லத் தொடங்கினேன். கதை என்றதும் மருமகன் சந்தோஷமானான்.

கதை கூட கேள்வியில் தான் ஆரம்பிக்கும். "மழை ஏன் பொழிகிறது?" என்பதுதான் அந்தக் கேள்வி.

முகம் சுளித்துக் கொண்டே "என்ன மாமா, சின்ன பசங்ககிட்ட கேக்குற மாதிரி கேக்குறீங்க? கதை தானே சொல்றேன்னு சொன்னீங்க?" என்றான்.

"பதில் சொன்னால் தான் கதையை ஆரம்பிக்க முடியும். சொல்லுடா" என்று அதட்டினேன்.

"மேகத்துல தண்ணி சேந்து கனமா ஆயிடும். மழையா வந்துடும். கடல் தண்ணியை காற்று உறிஞ்சி மேகத்துக்குக் கொடுக்கும். மேகம் கனமாக, கனமாக நெறைய மழையா வரும்" என்று ஆறாம் வகுப்பு மாணவன் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு பயந்துகொண்டே சொன்னான்.

எனக்கு என்னவோ அள்ளி எடுத்து அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. Corporate Office என்பதால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். நீ சொல்லியது சரியான பதிலாக இருக்கலாம் மருமகனே. என்றாலும் "எப்படி மழை பொழிகிறது? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வாய்" என்று தொடர்ச்சியாக இன்னொரு கேள்வியையும் கேட்டேன்.

"ஆமாம் இல்ல... மாமா..." என்று அசடு வழிந்தான். ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது, அலசி ஆராயாமல் நமக்குத் தெரிந்த பதிலை பொருத்திவிடுகிறோம். அதுதான் பிரச்சனையே. "எந்த மாதிரி..? என்ற வினா எழும் பொழுது "கிராமிய இசை, தாலாட்டு இசை, கர்நாடிக் இசை, ஹிந்துஸ்தானி இசை, திரை இசை, கருவி இசை" என்ற பட்டியலாக இல்லாமல் "யாருடைய...?" என்ற கேள்விக்கான பதிலைத் தான் பெரும்பாலும் பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் யாரோ ஒருவருடன் நம்மை இழந்துவிடுகிறோம். "இசை யார் வழியாகவும் நமக்குக் கிடைப்பதில்லை. இசைதான் சிலரின் வழியாக நமக்குக் கிடைக்கிறது" என்று அனில் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.



"உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?" என்ற கேள்விக்கு இனி பதில் சொல்லும் பொழுது யோசித்துவிட்டுத் தான் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன். உங்களிடம் கூட இந்தக் கேள்வியை ஆரம்பத்தில் கேட்டிருந்தேன் இல்லையா? நீங்கள் யோசித்த பதிலை பின்னூட்டத்தில் அளித்தால் நிச்சயம் மகிழ்வேன். ஆமாம், உங்களின் பதில் தான் என்ன?

Wednesday, September 22, 2010

கேணி சந்திப்பு - சேர்ந்திசை நிகழ்ச்சி

கடந்த வருடம் முழுவதும் எழுத்தாளர்களால் நிரம்பி வழிந்த கேணி சந்திப்பு, இந்த வருடம் இசைத் துறையில் பங்காற்றி வரும் முக்கியமானவர்களை சந்திக்க இருக்கிறது. அதன் தொடக்கமாக செப்டம்பர் 19-ஆம் தேதி சேர்ந்திசை நடத்துனர் திரு அகஸ்டின் பால் அவர்களும், Sep -19 MB ஸ்ரீநிவாஸ் அவர்களின் பிறந்த தினம் என்பதால் சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவினரும் கலந்து கொண்டார்கள். சேர்ந்திசையை இந்தியப் பாரம்பரிய இசையுடன் கலந்து வழங்கியவர்களில் MBS முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகஸ்டின் பால் உரையாடலைத் தொடங்கி வைத்தார். வந்திருந்த அனைவரையும் எழுந்து நின்று 'வணக்கம்... வணக்கம்...' என்று குழுவாகச் சொல்ல வைத்தார். எல்லோரும் சேர்ந்து எழுப்பிய ஒழுங்கில்லாத குரல்கள் இங்கும் அங்கும் ஒலித்தன. சேர்ந்திசைக் குழுவினரையும் எங்களுடன் சேர்ந்து கொள்ளச் சொன்னார். choir music-ல் பயிற்சி பெற்ற ஆண்களும் பெண்களும் தனித் தனியாகச் சேர்ந்து எங்களுடைய குரலுக்கு உயிரும் வடிவமும் கொடுத்தார்கள். 'வணக்கம்' என்ற சொல் தன்னுடைய உன்னத நிலையை அடைந்து நிலைபெற்று பின் தேய்ந்தது.

சேர்ந்திசை என்பது என்ன? - என்பதற்கு எளிமையான விளக்கம் கொடுத்தார்.

கோவிலில் இந்துக்கள் கூடுகிறார்கள். வேத ஸ்தோத்திரங்கள் பாடுகிறார்கள். மடாலயத்தில் கிருத்துவர்கள் கூடுகிறார்கள். வேதகாம தோத்திரங்களை பாடுகிறார்கள். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுகிறார்கள். மந்திரம் ஓதுகிறார்கள். வாழ்விடங்களுக்குத் திரும்பி அவர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் அல்லவா அதுபோலத் தான் சேர்ந்திசையும். ஒன்றுக்கும் மேற்பட்ட தனித் தன்மையான மனிதக் குரல்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியோ, ஒன்றின் இடையில் ஒன்றை ஊடுருவவிட்டோ, ஒரே நேரத்தில் சேர்த்தோ பயன்படுத்தி ஓர் இசை வடிவத்தை அமைப்பதுதான் சேர்ந்திசை. மேற்கத்திய சேர்ந்திசைத் தொகுப்புகளின் சிறு வடிவங்களை ஒவ்வொன்றாக ஒலிக்க வைத்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

சேர்ந்திசை என்பது கூட்டமாக கும்மியடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழ்ப் பாடல்களில் 'ஹம்மிங்'கிற்காக மட்டுமே பயன்படுத்தும் கூட்டு ஒலிகள் தனி வகையான செவ்வியல் என்று தெரிய வந்தபொழுது ஆச்சர்யமாக இருந்தது. அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிகழ்ச்சியைக் காண 60 டாலர் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்க வேண்டி இருக்குமாம். சென்னையில் மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடக்குமாம். அனுமதி இலவசம் என்பது கூடுதல் தகவல்.

மெலடி (Linear), ரிதம் (Cyclic), ஹார்மனி (Vertical) என்ற வடிவங்கள் இசையில் இருக்கிறது. சேர்ந்திசை ஹார்மனியைச் சார்ந்தது. இதில் பல டெக்னிக் இருக்கிறது. முக்கியமாக ஹோமொஃபோனிக் (எல்லோரும் சேர்ந்து பாடுவது) , போலிஃபோனிக் (குழுக் குழுவாக பிரிந்து பாடுவது) என்ற இரண்டைச் சொல்லலாம். அதிலும் S1, S2, S3, HT, MT என்று குழுக் குழுவாக பிரித்து பாடுகிறார்கள். குரல் தன்மையின் அடிப்படையில் இவர்களைப் பிரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த டெக்னிகலான விஷயத்தை விளக்கும் பொருட்டு அகஸ்டின் பால் ஒலிபரப்பிய பாடல்கள் மயிர்கூச்செறிய வைத்தது. ஒரு பெண்ணின் குரல் கருவியின் இசையிலும், பட்சியின் குரலிலும் கூர்மையாக வெளிப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை யூத் கோயர்ஸ் கலைஞர்களின் முகத்தைப் பார்த்தேன். விஸ்வரூபத்தைக் கண்ட அர்ஜுனன் போல பரவச நிலையில் இருந்தார்கள். இந்தக் கோடியில் உள்ள கலைஞர்கள் அந்தக் கோடியிலுள்ள கலைஞர்களுடன் சந்தோஷத்தைக் கண்களாலேயே பகிர்ந்துகொண்டார்கள்.


முன்னதாக ஸ்கார்ப் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நான்கு நண்பர்கள் சேர்ந்து சில லட்சங்களை நன்கொடையாக வழங்கினார்கள். அதன் தலைவர் டாக்டர் தாரா பெற்றுக்கொண்டு நிறுவனத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சேர்ந்திசை கலைஞர் MB ஸ்ரீநிவாஸ் பற்றியும், அவருடைய மகன் கபீர் ஸ்ரீனிவாஸ் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள். அகஸ்டின் பால் பேசியதின் தொடர்ச்சியாக MB ஸ்ரீநிவாஸ் தொடங்கி வைத்த Madras Youth Choir கலைஞர்களின் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அவர்கள் பாடிய பாடல் இனிமையாக இருந்தது. பாரதியார் பாடல்களையும், தேசபக்தி பாடல்களையும் அனுபவித்துப் பாடினார்கள்.

சென்னை சேர்ந்திசைக் கலைஞர்களின் இசைத்தகடு வெளியீடு சமந்தமான நிகழ்ச்சி:

பள்ளு பாடுவோமே

இந்த இசையைப் பற்றிய மற்றுமொரு பதிவு:

சுகானுபவம்

எழுத்தாளர் ச தமிழ்செல்வன் கேணி பற்றி எழுதிய பதிவு:

இசை என்னும் துன்ப வெள்ளம்

பாடியவர்களில் ஒருவரை எங்கோ பார்த்த ஞாபகம். மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன். "யாருங்க அது?" என்று உறுத்திய நபரைக் காண்பித்து கேணி நண்பர் சிவாவிடம் கேட்டேன்.

"மே மாதம் படத்துல ஹீரோயினிக்கு அப்பாவா நடிச்சாரே அவருங்க" என்றார்.

சினிமா இயக்குனர் வேலு பிரபாகரனிடம் துணை இயக்குனராக இருப்பவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். பதிவர் அ மு சையதின் திருமணத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே புறப்பட வேண்டி இருந்தது. அருகில் அமர்ந்திருந்த எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

Chennai Youth Choir - கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள். பொழுது சாய்வதைக் கண்டு காகங்கள் கரைந்து கொண்டிருந்தது. கேணி தொடங்கியதிலிருந்து பக்கத்து வீட்டுத் தண்ணீர் தொட்டி நிறைந்து அருவி போல கொட்டிக் கொண்டிருந்தது. அந்த சப்தமும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. ஓரிரு பட்சிகளும் தங்களுடைய பங்கிற்குக் குரலெழுப்பி குதூகலித்துக் கொண்டிருந்தன. அணில்கள் கிளைக்குக்கிளை தாவி விளையாடிக் கொண்டிருந்தன.

இசைக் கலைஞனின் வாசிப்புக்கு மயங்கி அவன் பின்னால் சென்று ஆற்றில் விழுந்த எலியைப் போல, சொந்த வேலைகளின் நெருக்குதலுக்கு உட்பட்டு சென்னை சாலையின் பரபரப்பில் விழுந்தேன். சீறிப் பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் செவிச் சவ்வைக் கவ்வியது.

Monday, August 9, 2010

கேணி இலக்கிய சந்திப்பு - ஷாஜி

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தொடரும் கூட்டம் என்பதால் எப்பொழுதும் வருவதை விடக் குறைவாகவே நண்பர்கள் வந்திருந்தார்கள்.

திரையிசை மீதான கவனத்தையும், ஆராய்ச்சியையும் பொருட்படுத்தி ஷாஜி பேச இருப்பதாக ஞானி அறிவித்தார். முக்கியமாக கவனம் செலுத்தப் பட வேண்டிய துறைகளில் இதுவும் ஒன்று என்பது உண்மையே. இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், அவர்களுடைய திறமை தனித்தன்மை என ஆங்காங்கு பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும் நடு நிலைமையோடு எழுதப்படுகிறதா? விமர்சிக்கப்படுகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாடல்களை ஒளிபரப்பும் எந்த வானொலியைத் திருப்பினாலும் ஓயாத பேச்சு. அவையெல்லாம் பாடல்களையும், இசையையும் தவிர்த்த மற்ற பேச்சுக்கள். பாட்டுப் போட்டியை நடத்தும் எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தாலும் ஆடுகிறார்கள். அது பாட்டுப் போட்டியா? நடனப் போட்டியா? இல்லை மாறுவேடப் போட்டியா என்று குழப்பமாக இருக்கிறது.

Jan 24 2007 - Maestro Illayaraja - Dasarathy தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் மூன்று பகுதிகளையும் தரவிறக்கிக் கேட்க முடியும் (http://www.itsdiff.com/Tamil2007.html). உங்களுக்குப் பிடிக்குமெனில் கேட்டுப் பாருங்கள். 4 வருடங்களுக்கு முன்பு கிடார் வாசிக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த நாட்களில் கேட்டது. இன்று கேட்டாலும் அந்தப் பாடல்களின் நுணுக்கம் ஆச்சர்யப் பட வைக்கும். இளையராஜாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் படிக்கக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். அவற்றைப் போக்கும் வகையில் தான் அகிலன் (http://meedpu.blogspot.com) மற்றும் ஷாஜியின் (http://www.musicshaji.blogspot.com) வலைப் பூக்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.

இருவருமே தங்களுக்கு இசையைப் பற்றிய இலக்கண வடிவங்கள் தெரியாது, இனிமையாகப் பாட வராது என்று சொல்லிவிட்டுத்தான் அதைப் பற்றி எழுதுகிறார்கள். ஆகவே அவர்களுடைய ரசனை சார்ந்தும், தொழில் நுட்ப அறிவு, வியாபார அனுபவம் சார்ந்தும் தான் திரையிசையை அணுகுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிலும் ஷாஜியின் திரையிசை அணுகு முறை கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், ஆளுமையையும் அலசுவதாக இருக்கிறது. அதற்கான எதிர்வினையையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை கேணியின் விவாதத்தின் பொழுது புரிந்துகொண்டேன்.

எப்பொழுது கேணிக்குச் சென்றாலும் பேப்பர், பென்சிலுடன் தான் உட்காருவேன். இந்த முறையும் அப்படித்தான் அமர்ந்திருந்தேன். கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் வந்த பத்ரி பாக்கட்டிலிருந்து எதையோ எடுத்து ஒலிப் பெருக்கியின் அருகில் தலை கீழாகத் தொங்கவிட்டார். கோடை தாகத்தில் நாவறண்ட ஜீவன் தண்ணீர் குடிப்பது போல அந்தக் கருவியும் எந்தொரு சப்தங்களையும் மிச்சம் வைக்காமல் முழுங்கி விட்டது. விமான சப்தம், ஷாஜியின் பேச்சு, இருமல், நாய்க்குரைப்பு என எல்லாவற்றையும் கேட்கலாம். பத்ரியின் வலைப் பூவிற்குச் செல்லுங்கள்.

கேணி இலக்கிய சந்திப்பின் முழு ஒலி ஓடையையும் பத்ரியின் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_9814.html

குறிப்பு:
1. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று நடைபெறும் கேணி சந்திப்பு, ஞாநியின் குடும்ப திருமணத்தை ஒட்டி செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்க இருக்கிறது.
2. ஷாஜியின் இரண்டு புத்தகங்கள் உயிர்மையில் வாங்கக் கிடைக்கிறது.

Sunday, August 1, 2010

நீரிழிவு கண்காட்சி 2010

ஏறக்குறைய முப்பது வயதைத் தொடும் சூழ்நிலையில் இருப்பதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் Full body check up-ற்குச் செய்திருந்தேன். எனக்கான குறைகளாக மூன்று விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். சாப்பிட்ட இரண்டு மணிநேரம் கழித்து உங்களுடைய இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. உடம்பில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பின் அளவு (HDL) மிகவும் குறைவாக இருக்கிறது. சிறுநீரகப்பை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்று அப்பல்லோ வைத்தியர்கள் ஆரூடம் சொன்னார்கள். கொழுப்பின் குறைபாட்டையும், சிறுநீரக பலவீனத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் சுலபமாக சரி செய்து விடலாம். நீரிழுவு மட்டும் மனிதனை மத்தளமாக மாற்றிவிடும். குறைந்தாலும் அடி, அதிகமானாலும் அடி என்று உயிரை எடுக்கும். ஆகவே சக்கரை சமந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனமாகவே இருக்கிறேன்.

இந்திய இளைஞர்களில் 18 முதல் 25 வயதுடைய 18 சதவீதத்தினருக்கு நீரிழிவு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. காரணம் நம்முடைய உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான். கிழங்கு, கார்போஹைட்றேட், இனிப்பு பானம் போன்றவற்றை அதிகமாக அன்றாட உணவில் பயன்படுத்துவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
தூங்கி எழுந்தும் எதுவும் சாப்பிடாமல் இரத்தத்தில் இருக்க வேண்டிய சக்கரையின் அளவு 70 முதல் 130 mg/dl. சாப்பிட்ட இரண்டுமணி நேரம் கழித்து இருக்க வேண்டிய அளவு 80 முதல் 140 mg/dl. குளுக்கோஸ் பானம் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எனக்கு இருப்பதோ 142 mg/dl. அதிகப்படியான 2mg/dl தான் என்னை இந்த பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றது.

ராணி மெய்யம்மை ஹாலில் 30-ற்கும் அதிகமான ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். சர்க்கரை குறைபாட்டைத் தடுக்கும் முறைகளையும், வந்துவிட்டால் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளையும் ஒவ்வொரு ஸ்டாலிலும் விளக்கப் படத்துடன் ஒட்டி இருந்தார்கள். அதில் குறிப்பிட்டிருந்த சில...

1. தினம் 30 முதல் 40 நிமிட நடை பயணம்.
2. சிரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல்
3. காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்
4. பழச்சாறு குடிக்காமல், முழு பழத்தையும் சாப்பிடுதல்
5. துரித உணவுகளைத் தவிர்த்தல்
6. சரியான இடைவெளியில் சாப்பிடுதல்
7. தினம் உடற்பயிற்சி செய்தல்
8. கீரை மற்றும் நார்சத்து உணவுகளை சாப்பிடுதல்

-என்று ஒரு பட்டியலையே சொல்கிறார்கள். வந்ததும் வருந்துவதைவிட, வருமுன் காப்பதே நல்லது என்பதால் அவர்கள் பரிந்துரைத்ததை அக்கறையுடன் பின்பற்றலாம் என்றிருக்கிறேன். நீரிழிவால் பதிக்கப்பட்ட கோரமான உடல்கூறு புகைப்படங்களை சில இடங்களில் ஒட்டி இருந்தார்கள். 'ஆவ்வ்வ்வவ் ...' என்றிருந்தது.

கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் 93 சதவீதத்தினர் முதியவர்கள். 7 சதவீதம் மட்டுமே இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களிலும் பாதி பேர் மருத்துவ மாணவிகள். சர்க்கரை குறைபாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களுக்கு இல்லையென்றே நினைக்கிறேன். அதனை சரிக்கட்ட இந்த மாதிரி கண்காட்சி அவசியம் தேவை. வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்..

Sunday, June 6, 2010

இந்திரா பார்த்தசாரதி புத்தக வெளியீடு

கோடைகாலத்தின் லேசான தூறல் அனுபவிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. மூத்த ஆளுமையின் புத்தக வெளியீடும் சேர்ந்து வரும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. அதிகாலை மட்டுமல்லாமல் விடுமுறை தினம் வேறு. ஆனந்தப்பட விஷயங்கள் இருந்தாலும், ஒரு பதற்றம் அடிவயிற்றில் உருண்டையாக ஓடிக்கொண்டிருந்தது. "காரணம் பாராவின் கண்களில் பட்டுவிடுவேனோ!" என்றுதான். அவர் ஒன்றும் மோசமானவர் இல்லைதான். என்றாலும் அவருடன் சேர்ந்து செய்வதாகச் சொல்லி இருந்த பணி, அலுவலக வேலையினால் தாமதமாவதைச் சுட்டிக் காட்டினால், அகத்தியர் காவிரியைக் கமண்டலத்தில் அடக்கியது போல என்னையும் எதிலாவது அடக்கிவிடுவார் என்ற பயம்தான்.

டேக் மையத்தில் நுழைந்தவுடன் காலை உணவு பரிமாறினார்கள். பாராவை நினைத்துக் கொண்டதால் வாயில் போட்ட எதுவும் தொண்டையில் இறங்கவில்லை. நெய்யில் செய்த ரவா கேசரியும் பொங்கலும், வடையும் இட்லியும் சுவையாக இருந்ததால், பாரா வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கஷ்டத்தைப் பார்க்காமல் சாப்பிட்டேன். அருகில் எழுத்தாளர் சங்கர் நாராயணன் அமர்ந்திருந்தார். தூரத்தில் லக்கிலுக், அதிஷா, ஷங்கர் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.


வெங்கட் ரமணனை முதன்முறையாகப் பார்ப்பதால் அவரைப் பற்றி விசாரித்தேன். கோவைக்காரர் என்றார். பல வருட சென்னை வாசம். பல படைப்பாளிகளின் விவரங்களை மனுஷன் விரல் நுனியில் வைத்திருக்கிறார். என்னுடைய அக்கா ஜெயாவுடன் வேலை செய்வதாகக் கூறினார். அவருடன் பேசிக்கொண்டே விழா நடக்கவிருக்கும் அரங்கின் முன் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.

பத்ரி கண்ணில் பட்டார். அவரிடம் சென்று "பாரா-வருவாரா?" என்று கேட்டேன்.


"இதுவரைக்கும் வரலை... வந்தால் தான் வருவார்."

"இல்லைங்க பத்ரி, அவருக்கு ஒரு வேலை செய்து கொடுக்கறதா சொல்லி சொதப்பிட்டு இருக்கேன்..."

"எங்க கொன்னுடப் போறாரோன்னு பயப்படுரின்களா!" -ன்னு சிரிச்சாரு.


அதற்குள் விழா ஆரம்பிக்கவும் என்னுடைய இடத்தில் சென்று அமர்ந்துகொண்டேன்.

எல்லாம் இன்பமயம். புவிமேல் இயற்கையினாலே - என்ற அருமையான பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

[கருப்பு வெள்ளைப் படம் பிடிக்காதவர்கள் அதே பாடலை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க இங்கே சொடுக்கவும்... ]

சாரி புத்தகத்த்தின் முதல் பிரதியை வெளியிட நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமாரைப் பேச அழைத்தார்கள். இபா-வின் ‘உச்சி வெயில்’ என்ற கதையை மூலமாகக் கொண்டு இயக்குனர் சேது மாதவனால் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்ட போது அதில் நாயகனாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் குமுதம் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபொழுது, இந்தப் படத்தின் புகைப்படத்தை முகப்பில் பயன்படுத்தியதை ஞாபகப்படுத்திக் கூறினார். இதழின் ஒரு பிரதியையும் கையுடன் கொண்டுவந்து காண்பித்தார். மேலும் கம்பராமாயணம் பற்றிப் பேசி, தனது கம்பராமாயணச் சொற்பொழிவுகளை இ.பா மிகவும் ரசித்ததைச் சுட்டிக்காட்டி தனது பேச்சை முடித்துக்கொண்டார். மகாத்மா காந்தியின் ஓவியத்தை இபாவிற்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

அடுத்ததாக 'திருப்பூர் கிருஷ்ணன் (பதி பஷி பாசம்), சுஜாதா விஜயராகவன் (நாயகன்), குடந்தை கீதப்பிரியன் (குருதட்சனை), ராமசாமி சுதர்சன் (அஸ்வத்தாமன்) ஆகியோர் இ.பா எழுதியிருந்த கதைகளை முறையே தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். இதில் 'திருப்பூர் கிருஷ்ணன்' எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட கதையும், குரல் ஏற்ற இறக்கங்களும், குறைந்த நேரமே இருப்பினும் சுற்றி வளைக்காமல் கதை சொல்லிய விதமும் அருமையிலும் அருமை.

கதைசொல்லிகள் தங்களுடைய பங்களிப்பை முடித்ததும் இந்திரா பார்த்தசாரதி பேச வந்தார். ரத்ன சுருக்கமாக பேசினார். இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு என்று பத்ரி சொல்லியிருக்கிறார். இனிமேல் கதை எழுதப்போவதில்லை என்றெல்லாம் அவரிடம் நான் சொல்லவே இல்லை. இனிமேலும் எழுதுவேன், அந்தத் தொகுப்பும் வெளிவரும். உங்களைத் தொல்லைப் படுத்தாமல் விடமாட்டேன். உச்சி வெயில் கதையை திரைப்படமாக்கிய சேதுமாதவனின் மகன் சந்தோஷ் 'நாயகன்' என்ற சிறுகதையை குறும்படமாக்கி தேசிய விருது பெற்றதை சுட்டிக் காட்டினார். முதல் புத்தக வெளியீடு 42 வருடங்களுக்கு முன்பு நடந்தது. தி.ஜா வெளியட நா.பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். அதன் பிறகு நடக்கும் என்னுடைய இரண்டாவது புத்தக வெளியீடு இதுதான் என்று கூறினார். பிறகு இந்த புத்தகம் வெளிவரக் காரணாமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டார்.

விழாவின் இறுதியில் 600/- ரூபாய் பெருமானமுள்ள புத்தகத்தை சலுகை விலையில் 150/- ரூபாய்க்குக் கொடுத்தார்கள். வந்திருந்த அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாங்கினோம். புத்தகத்துடன் வரிசையில் நின்ற அனைவருக்கும் இந்திரா பார்த்தசாரதி பொறுமையாக கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

டேக் மையத்தைவிட்டு வெளியில் வந்தேன். எழுத்தாளர் திலீப்குமார் நின்றுகொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு "உங்களுடைய முழுத்தொகுப்பு எப்பொழுது வெளிவரும்?" என்று கேட்டேன். "இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்..." என்றார்.

மழை காலத்திற்கான வெல்லக் கட்டிகளை எறும்புகள் சுமந்துகொண்டு போவதுபோல, இபாவின் சிறுகதைத் தொகுப்புகளைச் சுமந்துகொண்டு வாசகர்கள் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தனர். வெளியில் லேசான தூறல் விழுந்துகொண்டிருந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் சூழ்நிலையை அனுபவிக்கத் தொடங்கினேன்.

இந்தப் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கிறது. அதுவம் இந்த ஒரு வாரத்திற்கு மட்டுமே. தேவைப் படுகிறவர்கள் கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’

இதே நிகழ்வைப் பற்றிய பதிவுகள்:

1. பத்ரி - இந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி

2. ஹரன் பிரசன்னா - இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா - சிறுகுறிப்பு

3. அதிஷா - டிகிரி காப்பியுடன் ஒரு வாசிப்பனுபவம்!

பின் குறிப்பு:

1. டைம் டு கம், டைம் டு கோ - என்ற ரீதியில் விழாவை ஏற்பாடு செய்திருந்தது அருமை. பாராட்டப் படவேண்டிய ஒன்று.
2. ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமை (எந்த வாரமும் இருக்கலாம்) டேக் மையத்தில் இதே போல விழாக்கள் நடக்கிறது. அவையனைத்தும் கலை மற்றும் படைப்புகளுடன் சமந்தப்பட்டது. நிழைவு இலவசம். காலை உணவும் வழங்குகிறார்கள். ஆனால் ஒன்று சரியான நேரத்தில் செல்லவேண்டும்.