ஏறக்குறைய முப்பது வயதைத் தொடும் சூழ்நிலையில் இருப்பதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் Full body check up-ற்குச் செய்திருந்தேன். எனக்கான குறைகளாக மூன்று விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். சாப்பிட்ட இரண்டு மணிநேரம் கழித்து உங்களுடைய இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. உடம்பில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பின் அளவு (HDL) மிகவும் குறைவாக இருக்கிறது. சிறுநீரகப்பை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்று அப்பல்லோ வைத்தியர்கள் ஆரூடம் சொன்னார்கள். கொழுப்பின் குறைபாட்டையும், சிறுநீரக பலவீனத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் சுலபமாக சரி செய்து விடலாம். நீரிழுவு மட்டும் மனிதனை மத்தளமாக மாற்றிவிடும். குறைந்தாலும் அடி, அதிகமானாலும் அடி என்று உயிரை எடுக்கும். ஆகவே சக்கரை சமந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனமாகவே இருக்கிறேன். Sunday, August 1, 2010
நீரிழிவு கண்காட்சி 2010
ஏறக்குறைய முப்பது வயதைத் தொடும் சூழ்நிலையில் இருப்பதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் Full body check up-ற்குச் செய்திருந்தேன். எனக்கான குறைகளாக மூன்று விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். சாப்பிட்ட இரண்டு மணிநேரம் கழித்து உங்களுடைய இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. உடம்பில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பின் அளவு (HDL) மிகவும் குறைவாக இருக்கிறது. சிறுநீரகப்பை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்று அப்பல்லோ வைத்தியர்கள் ஆரூடம் சொன்னார்கள். கொழுப்பின் குறைபாட்டையும், சிறுநீரக பலவீனத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் சுலபமாக சரி செய்து விடலாம். நீரிழுவு மட்டும் மனிதனை மத்தளமாக மாற்றிவிடும். குறைந்தாலும் அடி, அதிகமானாலும் அடி என்று உயிரை எடுக்கும். ஆகவே சக்கரை சமந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனமாகவே இருக்கிறேன். Sunday, June 6, 2010
இந்திரா பார்த்தசாரதி புத்தக வெளியீடு
டேக் மையத்தில் நுழைந்தவுடன் காலை உணவு பரிமாறினார்கள். பாராவை நினைத்துக் கொண்டதால் வாயில் போட்ட எதுவும் தொண்டையில் இறங்கவில்லை. நெய்யில் செய்த ரவா கேசரியும் பொங்கலும், வடையும் இட்லியும் சுவையாக இருந்ததால், பாரா வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கஷ்டத்தைப் பார்க்காமல் சாப்பிட்டேன். அருகில் எழுத்தாளர் சங்கர் நாராயணன் அமர்ந்திருந்தார். தூரத்தில் லக்கிலுக், அதிஷா, ஷங்கர் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.
வெங்கட் ரமணனை முதன்முறையாகப் பார்ப்பதால் அவரைப் பற்றி விசாரித்தேன். கோவைக்காரர் என்றார். பல வருட சென்னை வாசம். பல படைப்பாளிகளின் விவரங்களை மனுஷன் விரல் நுனியில் வைத்திருக்கிறார். என்னுடைய அக்கா ஜெயாவுடன் வேலை செய்வதாகக் கூறினார். அவருடன் பேசிக்கொண்டே விழா நடக்கவிருக்கும் அரங்கின் முன் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.
பத்ரி கண்ணில் பட்டார். அவரிடம் சென்று "பாரா-வருவாரா?" என்று கேட்டேன்.
"இதுவரைக்கும் வரலை... வந்தால் தான் வருவார்."
"இல்லைங்க பத்ரி, அவருக்கு ஒரு வேலை செய்து கொடுக்கறதா சொல்லி சொதப்பிட்டு இருக்கேன்..."
"எங்க கொன்னுடப் போறாரோன்னு பயப்படுரின்களா!" -ன்னு சிரிச்சாரு.
அதற்குள் விழா ஆரம்பிக்கவும் என்னுடைய இடத்தில் சென்று அமர்ந்துகொண்டேன்.
எல்லாம் இன்பமயம். புவிமேல் இயற்கையினாலே - என்ற அருமையான பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.
[கருப்பு வெள்ளைப் படம் பிடிக்காதவர்கள் அதே பாடலை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க இங்கே சொடுக்கவும்... ]
சாரி புத்தகத்த்தின் முதல் பிரதியை வெளியிட நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமாரைப் பேச அழைத்தார்கள். இபா-வின் ‘உச்சி வெயில்’ என்ற கதையை மூலமாகக் கொண்டு இயக்குனர் சேது மாதவனால் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்ட போது அதில் நாயகனாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் குமுதம் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபொழுது, இந்தப் படத்தின் புகைப்படத்தை முகப்பில் பயன்படுத்தியதை ஞாபகப்படுத்திக் கூறினார். இதழின் ஒரு பிரதியையும் கையுடன் கொண்டுவந்து காண்பித்தார். மேலும் கம்பராமாயணம் பற்றிப் பேசி, தனது கம்பராமாயணச் சொற்பொழிவுகளை இ.பா மிகவும் ரசித்ததைச் சுட்டிக்காட்டி தனது பேச்சை முடித்துக்கொண்டார். மகாத்மா காந்தியின் ஓவியத்தை இபாவிற்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.அடுத்ததாக 'திருப்பூர் கிருஷ்ணன் (பதி பஷி பாசம்), சுஜாதா விஜயராகவன் (நாயகன்), குடந்தை கீதப்பிரியன் (குருதட்சனை), ராமசாமி சுதர்சன் (அஸ்வத்தாமன்) ஆகியோர் இ.பா எழுதியிருந்த கதைகளை முறையே தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். இதில் 'திருப்பூர் கிருஷ்ணன்' எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட கதையும், குரல் ஏற்ற இறக்கங்களும், குறைந்த நேரமே இருப்பினும் சுற்றி வளைக்காமல் கதை சொல்லிய விதமும் அருமையிலும் அருமை.
கதைசொல்லிகள் தங்களுடைய பங்களிப்பை முடித்ததும் இந்திரா பார்த்தசாரதி பேச வந்தார். ரத்ன சுருக்கமாக பேசினார். இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு என்று பத்ரி சொல்லியிருக்கிறார். இனிமேல் கதை எழுதப்போவதில்லை என்றெல்லாம் அவரிடம் நான் சொல்லவே இல்லை. இனிமேலும் எழுதுவேன், அந்தத் தொகுப்பும் வெளிவரும். உங்களைத் தொல்லைப் படுத்தாமல் விடமாட்டேன். உச்சி வெயில் கதையை திரைப்படமாக்கிய சேதுமாதவனின் மகன் சந்தோஷ் 'நாயகன்' என்ற சிறுகதையை குறும்படமாக்கி தேசிய விருது பெற்றதை சுட்டிக் காட்டினார். முதல் புத்தக வெளியீடு 42 வருடங்களுக்கு முன்பு நடந்தது. தி.ஜா வெளியட நா.பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். அதன் பிறகு நடக்கும் என்னுடைய இரண்டாவது புத்தக வெளியீடு இதுதான் என்று கூறினார். பிறகு இந்த புத்தகம் வெளிவரக் காரணாமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டார்.
விழாவின் இறுதியில் 600/- ரூபாய் பெருமானமுள்ள புத்தகத்தை சலுகை விலையில் 150/- ரூபாய்க்குக் கொடுத்தார்கள். வந்திருந்த அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாங்கினோம். புத்தகத்துடன் வரிசையில் நின்ற அனைவருக்கும் இந்திரா பார்த்தசாரதி பொறுமையாக கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
டேக் மையத்தைவிட்டு வெளியில் வந்தேன். எழுத்தாளர் திலீப்குமார் நின்றுகொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு "உங்களுடைய முழுத்தொகுப்பு எப்பொழுது வெளிவரும்?" என்று கேட்டேன். "இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்..." என்றார்.
மழை காலத்திற்கான வெல்லக் கட்டிகளை எறும்புகள் சுமந்துகொண்டு போவதுபோல, இபாவின் சிறுகதைத் தொகுப்புகளைச் சுமந்துகொண்டு வாசகர்கள் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தனர். வெளியில் லேசான தூறல் விழுந்துகொண்டிருந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் சூழ்நிலையை அனுபவிக்கத் தொடங்கினேன்.
இந்தப் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கிறது. அதுவம் இந்த ஒரு வாரத்திற்கு மட்டுமே. தேவைப் படுகிறவர்கள் கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’
இதே நிகழ்வைப் பற்றிய பதிவுகள்:
1. பத்ரி - இந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி
2. ஹரன் பிரசன்னா - இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா - சிறுகுறிப்பு
3. அதிஷா - டிகிரி காப்பியுடன் ஒரு வாசிப்பனுபவம்!
பின் குறிப்பு:
1. டைம் டு கம், டைம் டு கோ - என்ற ரீதியில் விழாவை ஏற்பாடு செய்திருந்தது அருமை. பாராட்டப் படவேண்டிய ஒன்று.
2. ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமை (எந்த வாரமும் இருக்கலாம்) டேக் மையத்தில் இதே போல விழாக்கள் நடக்கிறது. அவையனைத்தும் கலை மற்றும் படைப்புகளுடன் சமந்தப்பட்டது. நிழைவு இலவசம். காலை உணவும் வழங்குகிறார்கள். ஆனால் ஒன்று சரியான நேரத்தில் செல்லவேண்டும்.
Monday, May 24, 2010
தி வே ஹோம்
ஜிபுரோ (கொரியப் படம்) - இயற்கையின் சூழலில் அமைந்த மலை கிராமத்தில் எளிமையாக வாழும் பாட்டிக்கும், நகரச் சூழலின் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட பேரனுக்கும் இடையிலான முரண்பட்ட வாழ்க்கை எங்கு சங்கமிக்கிறது என்பது தான் கதை. எளிமையான கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதையை பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். மொத்தப் பட வசனத்தையும் இரண்டு பக்க வெள்ளைத் தாளில் எழுதி விடலாம். ஆகவே திரையில் தென்படும் ஒவ்வொரு காட்சிகளும், ஒளிப்பதிவும், இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகர்களும் தங்களது அருமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமக்கான பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நடித்திருக்கும் பலருக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி, பள்ளி விடுமுறையில் இருக்கும் தன் மகனான ஏழு வயது சிறுவனை (சாங் வூ - 7 வயது) மலை கிராமத்தில் தனிமையில் வசிக்கும் தன் அம்மாவின் (கிம்- யூல்-பூ - 77 வயது) வீட்டிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்கிறாள். அந்த பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. குக்-கிராமத்திற்குச் செல்லும் பேருந்துப் பயணமே அவனுக்கு அலுப்பூட்டுவதாக அமைகிறது. உடன் பயணிக்கும் வெள்ளந்தியான மனிதர்களின் பேச்சும், உடல் மொழியும் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாதியிலேயே திரும்பிவிடலாம் என்று அம்மாவுடன் சண்டை போடுகிறான்.
சிறுவனை அடித்து இழுத்துக்கொண்டு பாட்டியிடம் செல்கிறாள். கணவனைப் பிரிந்து வாழும் அவள், தனக்கொரு வேலை கிடைக்கும் வரை அவனை பார்த்துக்கொள்ளுமாறு பாட்டியிடம் கூறிவிட்டு கடைசிப் பேருந்தைப் பிடிக்கப் புறப்பட்டுவிடுகிறாள்.
மலையின் மேலுள்ள குடிசை வீட்டில் பாட்டியும் பேரனும் தனியாக வசிக்கிறார்கள். தனது குறும்புத்தனத்தால் ஏகப்பட்ட இடைஞ்சல்களை சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்கிறான். சுவையான உணவிற்காகவும், விளையாட்டுப் பெருட்களுக்காகவும் சிறுவன் கொடுக்கும் தொல்லைகளை துறவியின் அமைதியுடன் முதியவள் எதிர்கொள்கிறாள்.அன்பான பணிவிடைகளும், எளிமையான தியாகமும் மூதாட்டியின் மீதான அன்பை சிறுவனுக்கு ஏற்படுத்துகிறது. அழுக்கானவள் என்றும், பைத்தியக்கார ஊமை என்றும் ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கிய பாட்டியை பிரிய மனமில்லாமல் கடைசியில் சிறுவன் தவிக்கிறான். சில வார்த்தைகளை எழுதி தபாலில் அனுப்ப அவளுக்குக் கற்றுத் தருகிறான். முடிவில் பேரனை வழியனுப்பிவிட்டு சோகம் ததும்ப அந்த மலைப்பாதை வழியே தனிமையுடன் கூன் முதுகிட்டு பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய 'எல்லா பாட்டிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்' எனும் எழுத்துக்களுடன் படம் முடிகிறது.
பாட்டிகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்குமான உறவு மாதிரியான பலமான விஷயம் வேறெதுவும் இல்லை. நாள் முழுவதும், வருடம் முழுவதும் பெற்றவர்களுடன் இருந்தாலும் விடுமுறையின் சில தினங்களில் பகிரக் கிடைக்கும் தாத்தா பாட்டியின் அன்பு வருடம் முழுவதற்குமான உற்சாக ஆற்றல் தரும் விஷயமாக சிறுவர்களுக்கு இருக்கிறது.
எல்லாருமே வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் தான்... திரையில் பார்க்கும் பொழுது இழந்துவிட்ட எதையோ ஞாபகப்படுத்துவதை உள்ளுணர்வு ஏற்படுகிறது. மொத்தப் படமும் ஆங்கில வரிகளுடன் யூட்யுப்-ல் காணக் கிடைக்கிறது.
Youtube Link:
The Way Home - Part 1
The Way Home - Part 2
The Way Home - Part 3
The Way Home - Part 4
The Way Home - Part 5
The Way Home - Part 6
The Way Home - Part 7
The Way Home - Part 8
The Way Home - Part 9
The Way Home - Part 10
இந்தப் படத்தைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் விமர்சனம்: பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்
Sunday, May 9, 2010
கேணி சந்திப்பு - எழுத்தாளர் பாமா
அப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை செருப்பும், டிரௌசரும்,சட்டையும், சில பாடப் புத்தகங்களும் எங்களுக்குக் கொடுப்பார்கள். யாரோ பரிசு தருகிறார்கள் என்ற களிப்பில், முண்டியடித்துக் கொண்டு அவைகளை மகிழ்ச்சியுடன் வாங்கியது கனவில் கண்டது போல் ஞாபகம் இருக்கிறது. வேடிக்கை என்னவெனில் ஒரு வாரத்தில் செருப்பு அறுந்துவிடும், ஒரு மாதத்தில் சட்டைக் கிழிந்துவிடும், அதற்கு முன் ட்ரௌசரில் உட்காரும் இடத்தில் ஓட்டை விழுந்துவிடும். சட்டையை கரிகந்தைக்கும், ட்ரௌசரை கால்மிதிக்கவும் வீட்டில் பயன்படுத்திக் கொள்வார்கள். என்னுடன் படித்த பலரும் (முக்கால் பங்கு) ஏழைகள் என்பதால் பள்ளியில் கொடுத்த உடைகளையே வருடம் முழுவதும் பத்திரமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதெல்லாம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தலித்துகளிக்கும் அரசு அளிக்கும் சலுகை என்பதை கல்லூரி வந்ததும் தான் தெரிந்துகொண்டேன்.
தலித்துகளுடன் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் தலித்துகளாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு அந்த அளவிற்குப் பரிச்சயம் இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் இன்றுவரை எனக்கு வாய்க்கவில்லை. ராஜ்கௌதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய புனைவுகள் தான் தலித்துகளின் இயல்பான வாழ்க்கையை எனக்கு அடையாளம் காட்டின. அவருடைய சகோதரி என்று தெரிய வந்ததும் தான் பாமாவின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன்.
கேணியில் உரையாற்றுவதற்கு முன் பாமா-வைப் பார்த்து பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. ராஜ் கௌதமனின் புனைவுகளை சிலாகித்துப் பேசினேன். "ஓ நீங்க படிச்சிருக்கிங்களா! இதை எதற்கு எங்கிட்ட சொல்றீங்க? அவருக்கே லெட்டர் போடுங்கன்னு" சொல்லி சிரிச்சாங்க... அப்படியே பக்கத்தில் இருந்த மற்றொரு சகோதரரான மார்க்கை அறிமுகப் படுத்தினார்கள்.
)()(0)()(0)()(0)()(
கேணி கூட்டம் ஆரம்பித்து இன்றுடன் சரியாக ஒரு வருடம் ஆகிறது என்ற குதூகலத்துடன் இலக்கிய சந்திப்பை ஞாநி தொடங்கி வைத்தார். இந்த முறை சந்திப்பில் ஒரு புதுமையைச் செய்திருந்தார் ஞாநி. பாமாவின் 'சாமியாட்டம்' என்ற சிறுகதையை வினோதினி என்ற நாடகக் கலைஞர் (Trained Acting Professional) நடித்துக் காட்டினார். கதையில் நான்கு பாத்திரங்கள் வரும். அனைத்துப் பாத்திரங்களையும் அவரே ஏற்று நடித்தார் (Solo Performance). ஒவ்வொரு பாத்திரத்திற்கு ஏற்றார் போல அவர் வெளிப்படுத்திய முகபாவமும், உடல் மொழியும் எல்லோரையும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் நீண்ட நேரம், தொடர்ந்து கரவொலி கேட்டுக் கொண்டே இருந்தது. பாமா தாவிச் சென்று கலங்கிய கண்களுடன் விநோதிநியைத் தழுவிக் கொண்டார். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.கிராமத்தில் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இந்த பரபரப்பான சூழலுக்கு வருவது விநோதமாக இருக்கிறது. என்னுடைய படைப்புகளின் கருக்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்கை அனுபவத்திருந்து கிடைத்தவை தான். அதில் புனைவிற்காக சில விஷயங்களைச் சேர்ப்பேன். இதுவரை 50 சிறுகதைகள் எழுதிஇருக்கிறேன். சாமியாட்டமும் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் தான். பெண் ஆணைச் சார்ந்து வாழக்கூடிய உயிரியாக மட்டுமே பார்க்கப் படுகிறாள். 'அப்பா... கணவன்... மகன்...' என்று அவர்களுடைய வாழ்க்கை ஆண்களின் உலகைச் சார்ந்து மட்டுமே அமைகிறது. இங்குதான் பெண்ணின் வெளி, இடம், இருத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் அமைகிறது. பெண்களை பெண்களாகவே இருக்க விடுங்கள் அது போதும். அவர்களுடைய வாழ்க்கையை வாழ விடுங்கள்.
சில தாக்கங்கள் பல நாட்கள் என்னை முடக்கி வைக்கிறது. அவற்றைத்தான் என்னுடைய படைப்பில் கொண்டுவர முனைப்புடன் இருக்கிறேன். எனக்கு 50 வயசு ஆகுதுங்க. இப்பொழுதும் என்னுடைய வாழ்க்கையை ரசிக்கிறேன். நான் கஷ்டப்பட்ட காலங்களும் இருக்கிறது. அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தெருவில் நின்றிருக்கிறேன். அரசாங்க வேலையை விட்டுவிட்டு கன்னியர் மடத்தில் ஏழாண்டுகாலம் இருந்துவிட்டு, அதை உதறிவிட்டு வெளியில் வந்த பொழுது தீவிரமாக என்னை எதிர்த்தார்கள். 'கருக்கு' வெளிவந்த பொழுது கிராமமும், குடும்பமும் ஒன்றாக சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக நின்றார்கள். காலம் கடந்து என்னை புரிந்துகொண்ட அதே ஊர் மக்கள் என்னை அழைத்து மேடையில் ஏற்றி மாலை போட்டு கௌரவம் செய்திருக்கிறார்கள். என் ஊர் மக்களின் பாராட்டைத் தான் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.
நீங்கள் தலித்தியத்தை பற்றி மட்டும் ஏன் எழுதுகிறீர்கள் என்று பல இடங்களிலும் கேட்கிறார்கள். "அதை எழுத ஆட்கள் இல்லை என்பதால் தான் எழுதுகிறேன். அது என்னுடைய கடமையும் பொறுப்பும்" என்று நினைக்கிறேன். மனுஷனை மனுஷன் மதிக்கணும் அவ்வளவுதாங்க. மத்த எதுவுமே பெருசில்ல. இப்பொழுதுள்ள வாழ்க்கை பணம், பகட்டு பதவியை மட்டுமே கொண்டு அடுத்தவர்களின் மீதான மதிப்பை நிர்ணயிக்கிறது. பணமும் பகட்டுமே பாசத்தை நிர்ணயிக்கிறது. சுயநலம் தான் பிரதானமாக இருக்கிறது. உறவுகள் இருக்கமாகிக் கொண்டே போகிறது. பக்கத்து வீட்டு மனிதர்களுடன் கூட சகஜமாக பேசும் நிலை இன்று இருக்கவில்லை. இந்த மாதிரி சூழலில் தான் நான் கடந்துவந்த பழைய வாழ்க்கையை மெளனமாக தேடுகிறேன். மெளனமாக ரசிக்கிறேன்.
எனக்கு இலக்கியத்தில் பெரிதாக சாதிக்க வேண்டும், சாகித்ய அகாடமி வாங்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. என்னுடைய படைப்புகளை பாடத்திட்டத்தில் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இருந்துட்டுப் போகட்டும். சிலர் என்னுடைய படைப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்களாம். அவர்களும் ஆராய்ச்சி செய்து பெரியவர்களாக ஆகட்டும். எனக்கான முனைப்பு என்னவெனில் என்னுடைய மக்களின் அவலங்களைப் பதிவு செய்யவேண்டும். அவ்வளவுதான்.
கடைசியாக கலீல் ஜிப்ரானின் ஒரு கதையைச் சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.
ஒரு தோட்டத்தில் பல வண்ண பூக்கள் தரையோடு தரையாக இருந்தனவாம். அதே தோட்டத்தில் உயர வளர்ந்த ரோஜாச் செடியில், ஒரு ரோஜாப்பூ பூத்துக் குளிங்கியதாம். தரையோடு தரையாக இருந்த சிறு பூ ஒன்று சக பூக்களிடம் பேசியதாம்.
"நாமும் ரோஜா மாதிரி பெருசா மதில் சுவரைத் தாண்டி வளர்ந்தால் உலகத்தில் எல்லாவற்றையும் ரசிக்கலாம் இல்லையா?" என்று கேட்டதாம்.
"உனக்கு ஏன் இந்த நடக்காத ஆசை" என்று மற்ற பூக்கள் எல்லாம் அதனைப் பார்த்து சிரித்ததாம். மனவருத்தப் பட்ட சிறு பூ, இறைவனிடம் வேண்டிக் கொண்டதான். இறைவனும் இந்தப் பூவை ரோஜாவின் உயரத்திற்கு பெருசாக்கிட்டாராம். சிறு பூவும் மதில் சுவரைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்து ரசித்ததாம்.
எதிர்பாராத நாளில் புயல் காற்று அடித்து ரோஜாச்செடியும், உயரமாக வளர்ந்த சிறு பூச்செடியும் மண்ணோடு மண்ணாக விழுந்ததாம்.
"இது உனக்குத் தேவையா? எங்களை மாதிரியே மண்ணோடு மண்ணாக இருந்திருந்தால் மிதிபட்டாலும் உயிரோடு இருந்திருக்கலாம் இல்லையா?" என்று கேலி பேசி சிரித்துக்கொண்டதாம்.
மற்றவர்களால் மிதிபட்டு நூறாண்டுகாலம் வாழ்வதைவிட, ஒரு நாள் வாழ்ந்தாலும் சுதந்திரமாக உயரத்தில் வாழ்ந்தோம். அதுவே போதும் என்று ரோஜா சொல்லியதாம்.
ஆகவே "நாமும் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை. சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்" என்று தனது உரையை முடித்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குத் தொடர்புடைய, தொடர்பில்லாத பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறி பாமா கூட்டத்தை நிறைவு செய்தார்.
நண்பர் ஜாக்கி சேகரின் கேணி பற்றிய பதிவு: எழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•2010)
பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அடுத்த மாதம் கேணிக்கு 'ஆய்வாளர் கீதா' வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொண்டு அவருடன் உரையாடலாம்.
3. பாமாவின் புத்தகங்கள் 'தழும்புகள் கயங்களாகி (கருக்கு, சங்கதி - நாவல்), கிசும்புக்காரன்,கொண்டாட்டம் (சிறுகதைகள்)' ஆகியவை விடியல் மற்றும் ஆழி பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது.
Tuesday, April 13, 2010
கேணி - ச. தமிழ்ச்செல்வன்
தாங்க முடியாத வெக்கையுடன் ஞானியின் வீட்டிற்குச் சென்றேன். முன்வாசலில் சிவராமன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் பேசிவிட்டு உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். மின்விசிறியிலிருந்து சுழன்று வந்த காற்று என் உடலில் பட்டுக் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகங்களை நண்பர்கள் மேசை மீது அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அனைத்துமே கதையல்லாத புத்தகங்களும், கட்டுரைகளுமாகவே இருந்தன. புத்தகங்களைக் கையிலெடுத்து ஒவ்வொன்றாகப் புரட்டிவிட்டு கேணிக்குச் சென்று அமர்ந்து கொண்டேன்.ஞாநி, வழக்கத்தைவிட தாமதமாக கூட்டத்தைத் தொடங்கினார். வெயில் அதிகமாக இருப்பதால் நண்பர்களுக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து கூட்டத்தைத் தொடங்கியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் தனது சமவயது நண்பரான எழுத்தாளர் கேணியில் பங்கேற்பது தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி என்று தமிழ்ச்செல்வனைப் பேச அழைத்தார். மேலும் 'என் வாழ்க்கை என் எழுத்து' என்ற தலைப்பில் அவர் பேச இருப்பதாக அறிவித்தார்.
புனைவு எழுத ஆரம்பித்து, அதிலிருந்து விலகிச் சென்று அரசியல் மற்றும் சமகால நடப்புகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். 33 வருடத்தில் 32 புனைகதைகளை மட்டுமே எழுதி இருக்கிறேன். எண்ணிக்கைப் படி பார்த்தால் வருடத்திற்கு ஒன்று கூட எழுதவில்லை. 'எழுதினால் உலகத் தரத்தில் எழுத வேண்டும்' என்ற உந்துதல் கூட அதை மட்டுப்படுத்தியது என்று சொல்லலாம். பொதுவாக என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் எழுத்தாளராக வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏனெனில் குடும்பத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மதுரகவி பாஸ்கர்தாஸின் வழித்தோன்றலில் நானும் ஒருவன். என் அம்மா வழி தாத்தா தான் எழுத்தாளர். என்னுடைய வாழ்க்கையை நான் சொல்ல வேண்டியதே இல்லை. எல்லாவற்றையுமே எழுதிவிட்டேன். அப்பா வழி சொந்தங்கள் எல்லாம் பாமரர்கள். வாழ்க்கைச் சூழலில் எளிமையானவர்களும் கூட.
விருதுநகரில், சாத்தூர் வட்டத்தில் 'மேட்டுப்பட்டி' என்ற சிறு கிராமம் தான் எங்களுடைய ஊர். அப்பா திராவிட இயக்க ஆர்வலர். கிராம தலையாரியும் கூட. பள்ளி விடுமுறையில் என்னுடைய அம்மா வீட்டிற்கு போகும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். இரும்பாலான கல்லாப் பெட்டி, ரேடியோ போன்ற பல பொருட்கள் அங்கு இருக்கும். அந்த காலத்தில் பெரிய பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இவையெல்லாம் இருக்கும். புத்தகங்கள் வீடு முழுவதும் ஆங்காங்கு அடுக்காக இருக்கும். இவையெல்லாமே நாங்கள் ஏறி விளையாடக் கூடிய மற்றொரு பொருளாகவே பாவித்தோம். கிட்டப்பா மற்றும் சுந்தராம்பாளுடன் என்னுடைய தாத்தா எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை நடு ஹாலில் மாட்டியிருப்பார்கள். எவ்வளவுதான் பிரம்மிப்பாக இருந்தாலும் அது விருந்தாளி வீடுதான!. ஆகவே அந்நியமாகவே இருக்கும்.
மேட்டுப்பட்டி சூழலும், எனது குடும்ப வாழ்வும் எழுதுவதற்கான நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. அதில் முக்கியமானவன் சாத்தூரப்பன் என்ற இளவயது நண்பன். அவன் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவன். அவன மாதிரி ஒரு அறிவாளியை நான் பார்த்ததே இல்லை. என்னுடைய கற்பனைகளை விரித்தவன். அவனுக்குத் தெரியாத மரங்களின் பெயர்களே இல்லை. எல்லா மரத்தோட பெயரையும் சொல்லுவான். விளையாடிட்டே இருக்கும் பொழுது... "டேய் இன்னைக்கு மழை வரும்டான்னு" சொல்லுவான். அதே மாதிரி மழை வரும். இதெல்லாம் நாங்க ஒன்னாவது படிக்கும்போது நடந்தது. "டேய் நேத்து கனவுல பேயும் பிசாசும் சண்டை போட்டுக்குச்சிடா"-ன்னு சொல்ல ஆரம்பிப்பான்.
"நீ பயந்துட்டயாடான்னு?" கேட்போம்.
"தூக்கத்தைக் கெடுக்காதீங்க... த்த ச்சே ஓடிப்போங்கன்னு வெரட்டினேன்" என்பான். இதையெல்லாம் கேட்கும் எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
"சரிடா... பேய்-ன்னா என்ன பிசாசு-ன்னா என்ன?"ன்னு கேட்போம்.
இதுகூட தெரியாதாடா!... பேயன்னா ஆம்பள, பிசாசுன்னா பொம்பள" ன்னு சொல்லுவான். இந்த மாதிரி எதையாவது சொல்லி எங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருப்பான். அவனைப் பற்றி நான் எங்கும் எழுதவில்லை. இனிமேல் தான் எழுதவேண்டும் என்று இருக்கிறேன்.
எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க. சின்ன வயசுலேயே விதவை ஆனவங்க. நான் பிறப்பதற்கு முன்பே அவங்களுடைய கணவன் தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்கப் போன இடத்துல வாந்திபேதி வந்து செத்துட்டாரு. அவங்க தன்னோட சோகக் கதைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி இருக்காங்க. அந்த அனுபவங்கள் கூட என்னுடைய படைப்பிற்கு தேவையான அனுபவங்களைக்கொடுத்திருக்கிறது.
அப்பா சர்வேயராக இருந்ததால் வேலை மாற்றலாகிக் கொண்டே இருக்கும். சண்முகம் என்ற பெயரில் சில புத்தகங்களைக் கூட எழுதியிருக்கிறார். எங்களுடைய படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தாத்தாவின் வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தாத்தாவிடம் எழுதிக் கொடுக்கச் சொல்வேன். போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளும் வாங்கி இருக்கிறேன். உண்மையில் பேச்சுப் போட்டிதான் என்னுடைய இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது. பள்ளி நாட்களில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஆங்கிலமும், கணக்கும் தான். இங்கிலீசுல பாஸ் பண்ணனும்னு வேண்டாத சாமி இல்ல. முதலில் வீரபத்திரன் கிட்ட வேண்டிக்கிட்டேன். அவரென்ன கத்திய வச்சிக்கிட்டு போஸ் கொடுக்கறாரு, அவரு சரிவர மாட்டாருன்னு விநாயகர் கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுவும் எப்படி... 108, 250-ன்னு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கிட்டேன். அப்பவும் ஃபெயில் ஆயிட்டேன். அப்புறமாதான் புரிஞ்சது விநாயகருக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு. பிறகு 3 மைல் தொலைவிலுள்ள நென்மேநி சர்ச்சுக்குச் போனேன். போனதுமே பள்ளிக் கூடம் மாதிரி முட்டிப் போட வச்சிட்டான். பரீச்சையைக் கண்டுபுடிச்சவன் கையிலக் கெடச்சா கொன்னுடணும்னு தோணும். ஏசுவிற்கும் இங்கிலீஷ் தெரியாது, ஹீப்ரு தான் தாய் மொழி என்பது வேறு விஷயம்.
மூணு வாரம் தொடர்ந்து போகவும், பாதிரியார் புதுசா இருக்கானேன்னு கண்டுபுடிச்சி சில புத்தகங்களை கொடுத்தாரு. அதுல ஆடு மேய்க்கிறத பத்தி விரிவா எழுதி இருந்தாங்க. இதத் தானடா ஊருக்காரப் பசங்க செய்யிறாங்கன்னு நெனச்சிக்கிட்டேன். பிறகு கடவுள் புண்ணியத்துல பக்கத்து வீட்டு அண்ணன் கூப்பிட்டு இங்லிஷும், கணக்கும் கற்றுக் கொடுத்து என்னைத் தேற்றினார். பொதுத் தேர்வுல என்னுடைய மாவட்டத்துலையே நாலாவதா வந்தேன்னா பார்த்துக்கோங்க. படிக்கிற பயலுன்னு பேரு கூட கெடச்சிடுச்சி. அதன் பிறகு கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நண்பர்கள் வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தேவதச்சன், அப்பாஸ், கௌரி ஷங்கர் போன்ற சீனியர் நண்பர்களும், கோ ராஜாராம் போன்ற ஆசிரியர்களும் எனக்கான முன்னோடிகளாக இருந்தார்கள்.
ஒரு வாசகனாக நா பார்த்தசாரதியின் தீவிர விசிறி நான். அவருடைய நாவலில் வரும் கதாப் பாத்திரங்களைப் போலவே உண்மை, நேர்மை, கண்ணியமாக வாழவேண்டும் என்று நினைப்பேன். கல்லூரி நாட்களில் நண்பர்களெல்லாம் குடிக்கும் பொழுது நான் மட்டும் நேராக வீட்டிற்குச் சென்று விடுவேன். அவருடைய படைப்புகள் என்னை தேச பக்தனாக மாற்றியது. அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்ந்தேன். சீன எல்லையில் வேலை. குளிரில் கை விரல்களெல்லாம் வீங்கியது. சமாளித்துக் கொண்டு காலம் தள்ளினேன். அப்போ லாண்டரியில் இருந்த ஒரு பொண்ணை வேறு லவ் பண்ணேன். வேலை பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே திரும்பினேன். லவ்வும் அதோட நின்னுடுச்சி.
பிறகு அறிவொளி இயக்கம், மக்கள் இயக்கம், தொழிற் சங்கம் என்று என்னுடைய களம் விரிந்தது. அறிவொளி இயக்கம் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று வேலை செய்யும் பொழுது கிடைத்த அனுபவங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. கிராமக் கல்வித் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சிறு கிராமம் ஒன்றிற்கு உரையாற்றச் சென்றிருந்தேன். "படிப்பது உங்களுக்கு நல்லதுதானே. உங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் நல்லா இருக்கும் இல்லையா?" என்று பேசி முடித்தேன்.
"அது சரி இவ்வளோ நாள் எங்க போயிருந்தீங்க"-ன்னு ஒரு பாட்டி எங்கிட்ட கேட்டாங்க. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். இந்த மாதிரி போன இடத்திலெல்லாம் கிராமத்திற்கு கிராமம் முகத்திலேயே அறைந்திருக்கிறார்கள். இப்போ உங்க முன்னாடி பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன கேள்வி கேட்கப் போறிங்களோ தெரியல.
களப்பனின்னு எங்கப் போனாலும் 'அடி' தான் கிடைத்தது. எங்க தப்பு நடக்குதுன்னே தெரியலை. மக்களைப் புரிஞ்சிக்கவே முடியலை. ஒரு முறை கிராமம் ஒன்றில் பேய்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "சரி... உனக்கு தைரியம் இருந்தா, வர வெள்ளிக் கிழமை தனியா வந்து, அந்த வேப்ப மரத்தடியில படுத்து தூங்கிட்டு காலைல உயிரோட போ. பேய் இல்லைன்னு ஒத்துக்கறேன். என்ன சொல்ற...!" என்று ஒரு பாட்டி சவால் விட்டாங்க.
"அது என்னமோ பாட்டி இந்த வேப்ப மரத்தடியில வேணும்னா பேயிருக்கலாம். எங்க ஊருல எல்லாம் இல்லை"-ன்னு சொன்னேன்.
தோழர்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் இதனால. என்ன இப்படி பண்ணிட்டிங்க. சவால் விட்டிருக்கலாம் இல்ல என்று கேட்டார்கள்.
நான் தனியா வரலாம், அங்க படுக்கலாம், எழுந்து போகலாம். ஆனா அந்த பாட்டி தோத்துடுவாங்க. நமக்கு என்ன முக்கியம் அவங்க ஜெயிக்கணும்.
அதன் பிறகு நாங்கள் அவர்களிடம் தோற்கத் துவங்கினோம். வேணுமுன்னே சில விடுகதைகளைப் போடுவாங்க. அவர்கள் பதில் சொல்லுவார்கள். பதிலுக்கு அவர்களும் விடுகதைப் போடுவார்கள். தோழர்களுக்கு விடை தெரிந்தாலும் தெரியாதுன்னு சொல்லி முழிப்பாங்க. எங்களைத் தோற்கடிக்கணும் என்றே அவர்களும் வரஆரம்பித்தார்கள். எங்களுடைய இலக்கை நேக்கி நாங்களும் செல்ல ஆரம்பித்தோம்.
வாழ்க்கையில் எது முக்கியம் என்று நினைக்கிறோமோ அது தான் நமக்குக் கிடைக்கும். அறிவொளி இயக்கம், சங்க வேலைகள் தான் முக்கியம் என்று சுற்றிக் கொண்டிருப்பதால் கதைகளை எழுத முடியவில்லை. என்னுடைய வீட்டிற்கு செல்லும் பொழுது கதைகள் எல்லாம் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, "என்ன கண்டுக்கவே மாட்டேங்குற" என்று என்னிடம் பேசுவது போல இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்தக் குரலுக்கு செவிசாய்க்கத் தானே வேண்டும்.
கிராம மக்களின் விவாதத்தின் போது தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றைச் சொல்லி உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் ஆரம்பமானது. இலக்கியம் தவிர்த்த நிறைய கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச்செல்வனும் சலிப்பில்லாமல் பதில் சொல்லி விவாதத்தைக் கொண்டு சென்றார். கூட்டம் முடிந்து கிளம்பும் போது கூட்டத்தில் பதிவர் மா சிவக்குமார் தென்பட்டார். சீன மொழி சமந்தமாக, நீண்ட நாட்களாக அவரைப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். "இப்போ நான் யாருக்கும் கற்றுத் தருவதில்லை" என்றார். நேரம் இருக்கும் பொழுது ஆபீசுக்கு வாங்க பேசலாம் என்று விசிடிங் கார்டை-ஐக் கொடுத்தார்.
அதன் பிறகு ஒருவரைச் சந்தித்தேன். பல முறை அவரைக் கேணியில் பார்த்திருக்கிறேன். தமிழ் இலக்கியம் படிப்பவராக இருக்கும் என்று நினைத்து பேச ஆரம்பித்தேன். madras university-ல் Phd (nanotechnology) படிக்கிறேன் என்றார். அவருடைய இலக்கிய ஆர்வம் ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ச்செல்வனை சந்தித்த ஆச்சர்யத்துடன் இது போன்ற ஆச்சர்யங்களையும் சேர்த்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தேன்.
கேணி சந்திப்பைப் பற்றிய ஊடகவியலாளர் பல பாரதியின் பதிவு:
கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்
பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. இடது சாரிகளைப் பற்றி நிறைய பேசினார். எனக்கு அரசியல் தெரியாததால் கவனமாக அதையெல்லாம் தவிர்த்திருக்கிறேன். ஆகவே நிறைய தகவல்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு.
3. அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் பாமா வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Wednesday, April 7, 2010
அவசர உதவி தேவை
***********************************
உதவி தேவை
முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.
அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.
அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :
ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com
அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.
முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.
Tuesday, March 16, 2010
நாஞ்சில் நாடன் - கேணி சந்திப்பு
ஞானியின் வீட்டில் நுழைந்தவுடன் நாஞ்சில் நாடன் இருக்கிறாரா என்று தேடினேன். உள் அறையில் பாரதி மணி மற்றும் ஞானியுடன் பேசிக் கொண்டிருந்தார். வெளி அறையில் அவருடைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படத்தின் ஆதாரக் கதை என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் 'தலைகீழ் விகிதங்கள்' வாங்கிக் கொண்டு கேணிக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். "சுதந்திரமாக பேசலாமா?" என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் அவர் என்ன பேசப்போகிறார் என்பது கூட எனக்குத் தெரியாது. படைப்புகளுக்கு வித்தியாசமான தலைப்புகளை பெயராக சூட்டுவதில் நாஞ்சில் நாடன் என்னை மிகவும் கவர்ந்தவர். எட்டுத் திக்கும் மதயானை, மாமிசப்படைப்பு என்று யோசிக்கும் போதெல்லாம் அவரது பெயரும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேச்சைத் துவக்கினார். தலைப்பாக எதையும் வைத்துக் கொள்ளாமல் மொழியின் கூறுகளைப் பற்றி பேசத் தொடங்கினார்
தேவை கருதியே சொற்கள் உருவாகிறது. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (லெக்சிகன்) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது. இவற்றையெல்லாம் அவனப்படுத்த வேண்டாமா?
ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அதுமட்டுமே பலவிதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ் தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும். அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!
ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண பெயிட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிறமாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.
சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அதுபோலவே "அக பெருமாள், பெருமாள் முருகன், கிரா, பா சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன்" போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். "இதை யார் செய்ய வேண்டும்?". ஆராய்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள். "மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க" என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின் பொழுது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.
சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயபுத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கனும்னு நெனச்சிக்கினேன்.
இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.
"டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்...அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?" என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.
அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள் தானே மொழியை செம்மையாக்குகிறது. ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு 'தெரிவை' என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் 'நீலவேணி டீச்சர்' என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம் தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன். வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.
தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள் தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படிநடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக்கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் தானே இருக்கிறோம். மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள் தான் அதற்கு முன்வர வேண்டும். அதற்க்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து சில தேவையிலாத கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சூடான விவாதத்துடன் கேணி சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது.
இணைய தமிழ் அகராதி - http://wiki.senthamil.org
கேணி சந்திப்பு பற்றி நண்பர் பிரபாகரன் எழுதிய பதிவு: (http://tprabakaran.blogspot.com)
)()()()()()()()(
பெரியவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஞானியின் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்லும் முக்குச்சந்தை கடக்கும் பொழுது "ங்கோத்தா எனக்கு குடுக்க வேண்டிய பணத்தை என் ஊட்டாண்ட வந்து இன்னிக்குள்ள குடுக்குல நடக்கறதே வேற" - என்று ஓர் ஆட்டோக்காரன், எதிரில் இருப்பவனை கோபமாக திட்டிக் கொண்டிருந்தான். அந்த 'ங்' வார்த்தை என்னுள் ஓங்காரமாக ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னுடைய சிறு வயதில் வீட்டிற்குத் தெரியாமல் எத்தனை முறை சொல்லியிருப்பேன். வீட்டுக்குள் சென்ற பிறகு சாகடிச்சாலும் இந்த வார்த்தை என் வாயிலிருந்து வராது. இப்பொழுது அந்த வார்த்தை என்னுள் அடையாளமின்றி எங்கோ இருக்கிறது. அதுபோல இன்னும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ! முடிந்தால் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து மீட்டெடுக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையும் சேர்த்துத்தான்...
)()()()()()()()(
பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தின் வடிவத்தைப் பற்றியோ, ஒலி வடிவத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.
3. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
4. அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வனும், அதையடுத்து எழுத்தாளர் பாமாவும் வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
