Sunday, May 9, 2010

கேணி சந்திப்பு - எழுத்தாளர் பாமா

அரசு ஆரம்பப் பள்ளியில் தான் என்னுடைய படிப்பு தொடங்கியது. என்னுடைய வீட்டிற்கு ஐந்து மீட்டர் தொலைவிலேயே அந்த பள்ளி இருக்கும். ஒவ்வொரு இடைவெளியின் போதும் வீட்டிற்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வசதி கூட இருந்தது.

அப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை செருப்பும், டிரௌசரும்,சட்டையும், சில பாடப் புத்தகங்களும் எங்களுக்குக் கொடுப்பார்கள். யாரோ பரிசு தருகிறார்கள் என்ற களிப்பில், முண்டியடித்துக் கொண்டு அவைகளை மகிழ்ச்சியுடன் வாங்கியது கனவில் கண்டது போல் ஞாபகம் இருக்கிறது. வேடிக்கை என்னவெனில் ஒரு வாரத்தில் செருப்பு அறுந்துவிடும், ஒரு மாதத்தில் சட்டைக் கிழிந்துவிடும், அதற்கு முன் ட்ரௌசரில் உட்காரும் இடத்தில் ஓட்டை விழுந்துவிடும். சட்டையை கரிகந்தைக்கும், ட்ரௌசரை கால்மிதிக்கவும் வீட்டில் பயன்படுத்திக் கொள்வார்கள். என்னுடன் படித்த பலரும் (முக்கால் பங்கு) ஏழைகள் என்பதால் பள்ளியில் கொடுத்த உடைகளையே வருடம் முழுவதும் பத்திரமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதெல்லாம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தலித்துகளிக்கும் அரசு அளிக்கும் சலுகை என்பதை கல்லூரி வந்ததும் தான் தெரிந்துகொண்டேன்.

தலித்துகளுடன் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் தலித்துகளாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு அந்த அளவிற்குப் பரிச்சயம் இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் இன்றுவரை எனக்கு வாய்க்கவில்லை. ராஜ்கௌதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய புனைவுகள் தான் தலித்துகளின் இயல்பான வாழ்க்கையை எனக்கு அடையாளம் காட்டின. அவருடைய சகோதரி என்று தெரிய வந்ததும் தான் பாமாவின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

கேணியில் உரையாற்றுவதற்கு முன் பாமா-வைப் பார்த்து பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. ராஜ் கௌதமனின் புனைவுகளை சிலாகித்துப் பேசினேன். "ஓ நீங்க படிச்சிருக்கிங்களா! இதை எதற்கு எங்கிட்ட சொல்றீங்க? அவருக்கே லெட்டர் போடுங்கன்னு" சொல்லி சிரிச்சாங்க... அப்படியே பக்கத்தில் இருந்த மற்றொரு சகோதரரான மார்க்கை அறிமுகப் படுத்தினார்கள்.

)()(0)()(0)()(0)()(

கேணி கூட்டம் ஆரம்பித்து இன்றுடன் சரியாக ஒரு வருடம் ஆகிறது என்ற குதூகலத்துடன் இலக்கிய சந்திப்பை ஞாநி தொடங்கி வைத்தார். இந்த முறை சந்திப்பில் ஒரு புதுமையைச் செய்திருந்தார் ஞாநி. பாமாவின் 'சாமியாட்டம்' என்ற சிறுகதையை வினோதினி என்ற நாடகக் கலைஞர் (Trained Acting Professional) நடித்துக் காட்டினார். கதையில் நான்கு பாத்திரங்கள் வரும். அனைத்துப் பாத்திரங்களையும் அவரே ஏற்று நடித்தார் (Solo Performance). ஒவ்வொரு பாத்திரத்திற்கு ஏற்றார் போல அவர் வெளிப்படுத்திய முகபாவமும், உடல் மொழியும் எல்லோரையும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் நீண்ட நேரம், தொடர்ந்து கரவொலி கேட்டுக் கொண்டே இருந்தது. பாமா தாவிச் சென்று கலங்கிய கண்களுடன் விநோதிநியைத் தழுவிக் கொண்டார். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

கிராமத்தில் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இந்த பரபரப்பான சூழலுக்கு வருவது விநோதமாக இருக்கிறது. என்னுடைய படைப்புகளின் கருக்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்கை அனுபவத்திருந்து கிடைத்தவை தான். அதில் புனைவிற்காக சில விஷயங்களைச் சேர்ப்பேன். இதுவரை 50 சிறுகதைகள் எழுதிஇருக்கிறேன். சாமியாட்டமும் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் தான். பெண் ஆணைச் சார்ந்து வாழக்கூடிய உயிரியாக மட்டுமே பார்க்கப் படுகிறாள். 'அப்பா... கணவன்... மகன்...' என்று அவர்களுடைய வாழ்க்கை ஆண்களின் உலகைச் சார்ந்து மட்டுமே அமைகிறது. இங்குதான் பெண்ணின் வெளி, இடம், இருத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் அமைகிறது. பெண்களை பெண்களாகவே இருக்க விடுங்கள் அது போதும். அவர்களுடைய வாழ்க்கையை வாழ விடுங்கள்.

சில தாக்கங்கள் பல நாட்கள் என்னை முடக்கி வைக்கிறது. அவற்றைத்தான் என்னுடைய படைப்பில் கொண்டுவர முனைப்புடன் இருக்கிறேன். எனக்கு 50 வயசு ஆகுதுங்க. இப்பொழுதும் என்னுடைய வாழ்க்கையை ரசிக்கிறேன். நான் கஷ்டப்பட்ட காலங்களும் இருக்கிறது. அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தெருவில் நின்றிருக்கிறேன். அரசாங்க வேலையை விட்டுவிட்டு கன்னியர் மடத்தில் ஏழாண்டுகாலம் இருந்துவிட்டு, அதை உதறிவிட்டு வெளியில் வந்த பொழுது தீவிரமாக என்னை எதிர்த்தார்கள். 'கருக்கு' வெளிவந்த பொழுது கிராமமும், குடும்பமும் ஒன்றாக சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக நின்றார்கள். காலம் கடந்து என்னை புரிந்துகொண்ட அதே ஊர் மக்கள் என்னை அழைத்து மேடையில் ஏற்றி மாலை போட்டு கௌரவம் செய்திருக்கிறார்கள். என் ஊர் மக்களின் பாராட்டைத் தான் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.

நீங்கள் தலித்தியத்தை பற்றி மட்டும் ஏன் எழுதுகிறீர்கள் என்று பல இடங்களிலும் கேட்கிறார்கள். "அதை எழுத ஆட்கள் இல்லை என்பதால் தான் எழுதுகிறேன். அது என்னுடைய கடமையும் பொறுப்பும்" என்று நினைக்கிறேன். மனுஷனை மனுஷன் மதிக்கணும் அவ்வளவுதாங்க. மத்த எதுவுமே பெருசில்ல. இப்பொழுதுள்ள வாழ்க்கை பணம், பகட்டு பதவியை மட்டுமே கொண்டு அடுத்தவர்களின் மீதான மதிப்பை நிர்ணயிக்கிறது. பணமும் பகட்டுமே பாசத்தை நிர்ணயிக்கிறது. சுயநலம் தான் பிரதானமாக இருக்கிறது. உறவுகள் இருக்கமாகிக் கொண்டே போகிறது. பக்கத்து வீட்டு மனிதர்களுடன் கூட சகஜமாக பேசும் நிலை இன்று இருக்கவில்லை. இந்த மாதிரி சூழலில் தான் நான் கடந்துவந்த பழைய வாழ்க்கையை மெளனமாக தேடுகிறேன். மெளனமாக ரசிக்கிறேன்.

எனக்கு இலக்கியத்தில் பெரிதாக சாதிக்க வேண்டும், சாகித்ய அகாடமி வாங்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. என்னுடைய படைப்புகளை பாடத்திட்டத்தில் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இருந்துட்டுப் போகட்டும். சிலர் என்னுடைய படைப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்களாம். அவர்களும் ஆராய்ச்சி செய்து பெரியவர்களாக ஆகட்டும். எனக்கான முனைப்பு என்னவெனில் என்னுடைய மக்களின் அவலங்களைப் பதிவு செய்யவேண்டும். அவ்வளவுதான்.

கடைசியாக கலீல் ஜிப்ரானின் ஒரு கதையைச் சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.

ஒரு தோட்டத்தில் பல வண்ண பூக்கள் தரையோடு தரையாக இருந்தனவாம். அதே தோட்டத்தில் உயர வளர்ந்த ரோஜாச் செடியில், ஒரு ரோஜாப்பூ பூத்துக் குளிங்கியதாம். தரையோடு தரையாக இருந்த சிறு பூ ஒன்று சக பூக்களிடம் பேசியதாம்.

"நாமும் ரோஜா மாதிரி பெருசா மதில் சுவரைத் தாண்டி வளர்ந்தால் உலகத்தில் எல்லாவற்றையும் ரசிக்கலாம் இல்லையா?" என்று கேட்டதாம்.

"உனக்கு ஏன் இந்த நடக்காத ஆசை" என்று மற்ற பூக்கள் எல்லாம் அதனைப் பார்த்து சிரித்ததாம். மனவருத்தப் பட்ட சிறு பூ, இறைவனிடம் வேண்டிக் கொண்டதான். இறைவனும் இந்தப் பூவை ரோஜாவின் உயரத்திற்கு பெருசாக்கிட்டாராம். சிறு பூவும் மதில் சுவரைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்து ரசித்ததாம்.

எதிர்பாராத நாளில் புயல் காற்று அடித்து ரோஜாச்செடியும், உயரமாக வளர்ந்த சிறு பூச்செடியும் மண்ணோடு மண்ணாக விழுந்ததாம்.

"இது உனக்குத் தேவையா? எங்களை மாதிரியே மண்ணோடு மண்ணாக இருந்திருந்தால் மிதிபட்டாலும் உயிரோடு இருந்திருக்கலாம் இல்லையா?" என்று கேலி பேசி சிரித்துக்கொண்டதாம்.

மற்றவர்களால் மிதிபட்டு நூறாண்டுகாலம் வாழ்வதைவிட, ஒரு நாள் வாழ்ந்தாலும் சுதந்திரமாக உயரத்தில் வாழ்ந்தோம். அதுவே போதும் என்று ரோஜா சொல்லியதாம்.

ஆகவே "நாமும் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை. சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்" என்று தனது உரையை முடித்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குத் தொடர்புடைய, தொடர்பில்லாத பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறி பாமா கூட்டத்தை நிறைவு செய்தார்.

நண்பர் ஜாக்கி சேகரின் கேணி பற்றிய பதிவு: எழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•2010)

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அடுத்த மாதம் கேணிக்கு 'ஆய்வாளர் கீதா' வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொண்டு அவருடன் உரையாடலாம்.
3. பாமாவின் புத்தகங்கள் 'தழும்புகள் கயங்களாகி (கருக்கு, சங்கதி - நாவல்), கிசும்புக்காரன்,கொண்டாட்டம் (சிறுகதைகள்)' ஆகியவை விடியல் மற்றும் ஆழி பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது.

Tuesday, April 13, 2010

கேணி - ச. தமிழ்ச்செல்வன்

தாங்க முடியாத வெக்கையுடன் ஞானியின் வீட்டிற்குச் சென்றேன். முன்வாசலில் சிவராமன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் பேசிவிட்டு உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். மின்விசிறியிலிருந்து சுழன்று வந்த காற்று என் உடலில் பட்டுக் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகங்களை நண்பர்கள் மேசை மீது அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அனைத்துமே கதையல்லாத புத்தகங்களும், கட்டுரைகளுமாகவே இருந்தன. புத்தகங்களைக் கையிலெடுத்து ஒவ்வொன்றாகப் புரட்டிவிட்டு கேணிக்குச் சென்று அமர்ந்து கொண்டேன்.

ஞாநி, வழக்கத்தைவிட தாமதமாக கூட்டத்தைத் தொடங்கினார். வெயில் அதிகமாக இருப்பதால் நண்பர்களுக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து கூட்டத்தைத் தொடங்கியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் தனது சமவயது நண்பரான எழுத்தாளர் கேணியில் பங்கேற்பது தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி என்று தமிழ்ச்செல்வனைப் பேச அழைத்தார். மேலும் 'என் வாழ்க்கை என் எழுத்து' என்ற தலைப்பில் அவர் பேச இருப்பதாக அறிவித்தார்.

புனைவு எழுத ஆரம்பித்து, அதிலிருந்து விலகிச் சென்று அரசியல் மற்றும் சமகால நடப்புகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். 33 வருடத்தில் 32 புனைகதைகளை மட்டுமே எழுதி இருக்கிறேன். எண்ணிக்கைப் படி பார்த்தால் வருடத்திற்கு ஒன்று கூட எழுதவில்லை. 'எழுதினால் உலகத் தரத்தில் எழுத வேண்டும்' என்ற உந்துதல் கூட அதை மட்டுப்படுத்தியது என்று சொல்லலாம். பொதுவாக என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் எழுத்தாளராக வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏனெனில் குடும்பத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மதுரகவி பாஸ்கர்தாஸின் வழித்தோன்றலில் நானும் ஒருவன். என் அம்மா வழி தாத்தா தான் எழுத்தாளர். என்னுடைய வாழ்க்கையை நான் சொல்ல வேண்டியதே இல்லை. எல்லாவற்றையுமே எழுதிவிட்டேன். அப்பா வழி சொந்தங்கள் எல்லாம் பாமரர்கள். வாழ்க்கைச் சூழலில் எளிமையானவர்களும் கூட.

விருதுநகரில், சாத்தூர் வட்டத்தில் 'மேட்டுப்பட்டி' என்ற சிறு கிராமம் தான் எங்களுடைய ஊர். அப்பா திராவிட இயக்க ஆர்வலர். கிராம தலையாரியும் கூட. பள்ளி விடுமுறையில் என்னுடைய அம்மா வீட்டிற்கு போகும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். இரும்பாலான கல்லாப் பெட்டி, ரேடியோ போன்ற பல பொருட்கள் அங்கு இருக்கும். அந்த காலத்தில் பெரிய பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இவையெல்லாம் இருக்கும். புத்தகங்கள் வீடு முழுவதும் ஆங்காங்கு அடுக்காக இருக்கும். இவையெல்லாமே நாங்கள் ஏறி விளையாடக் கூடிய மற்றொரு பொருளாகவே பாவித்தோம். கிட்டப்பா மற்றும் சுந்தராம்பாளுடன் என்னுடைய தாத்தா எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை நடு ஹாலில் மாட்டியிருப்பார்கள். எவ்வளவுதான் பிரம்மிப்பாக இருந்தாலும் அது விருந்தாளி வீடுதான!. ஆகவே அந்நியமாகவே இருக்கும்.

மேட்டுப்பட்டி சூழலும், எனது குடும்ப வாழ்வும் எழுதுவதற்கான நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. அதில் முக்கியமானவன் சாத்தூரப்பன் என்ற இளவயது நண்பன். அவன் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவன். அவன மாதிரி ஒரு அறிவாளியை நான் பார்த்ததே இல்லை. என்னுடைய கற்பனைகளை விரித்தவன். அவனுக்குத் தெரியாத மரங்களின் பெயர்களே இல்லை. எல்லா மரத்தோட பெயரையும் சொல்லுவான். விளையாடிட்டே இருக்கும் பொழுது... "டேய் இன்னைக்கு மழை வரும்டான்னு" சொல்லுவான். அதே மாதிரி மழை வரும். இதெல்லாம் நாங்க ஒன்னாவது படிக்கும்போது நடந்தது. "டேய் நேத்து கனவுல பேயும் பிசாசும் சண்டை போட்டுக்குச்சிடா"-ன்னு சொல்ல ஆரம்பிப்பான்.

"நீ பயந்துட்டயாடான்னு?" கேட்போம்.

"தூக்கத்தைக் கெடுக்காதீங்க... த்த ச்சே ஓடிப்போங்கன்னு வெரட்டினேன்" என்பான். இதையெல்லாம் கேட்கும் எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும்.

"சரிடா... பேய்-ன்னா என்ன பிசாசு-ன்னா என்ன?"ன்னு கேட்போம்.

இதுகூட தெரியாதாடா!... பேயன்னா ஆம்பள, பிசாசுன்னா பொம்பள" ன்னு சொல்லுவான். இந்த மாதிரி எதையாவது சொல்லி எங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருப்பான். அவனைப் பற்றி நான் எங்கும் எழுதவில்லை. இனிமேல் தான் எழுதவேண்டும் என்று இருக்கிறேன்.

எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க. சின்ன வயசுலேயே விதவை ஆனவங்க. நான் பிறப்பதற்கு முன்பே அவங்களுடைய கணவன் தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்கப் போன இடத்துல வாந்திபேதி வந்து செத்துட்டாரு. அவங்க தன்னோட சோகக் கதைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி இருக்காங்க. அந்த அனுபவங்கள் கூட என்னுடைய படைப்பிற்கு தேவையான அனுபவங்களைக்கொடுத்திருக்கிறது.

அப்பா சர்வேயராக இருந்ததால் வேலை மாற்றலாகிக் கொண்டே இருக்கும். சண்முகம் என்ற பெயரில் சில புத்தகங்களைக் கூட எழுதியிருக்கிறார். எங்களுடைய படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தாத்தாவின் வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தாத்தாவிடம் எழுதிக் கொடுக்கச் சொல்வேன். போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளும் வாங்கி இருக்கிறேன். உண்மையில் பேச்சுப் போட்டிதான் என்னுடைய இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது. பள்ளி நாட்களில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஆங்கிலமும், கணக்கும் தான். இங்கிலீசுல பாஸ் பண்ணனும்னு வேண்டாத சாமி இல்ல. முதலில் வீரபத்திரன் கிட்ட வேண்டிக்கிட்டேன். அவரென்ன கத்திய வச்சிக்கிட்டு போஸ் கொடுக்கறாரு, அவரு சரிவர மாட்டாருன்னு விநாயகர் கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுவும் எப்படி... 108, 250-ன்னு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கிட்டேன். அப்பவும் ஃபெயில் ஆயிட்டேன். அப்புறமாதான் புரிஞ்சது விநாயகருக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு. பிறகு 3 மைல் தொலைவிலுள்ள நென்மேநி சர்ச்சுக்குச் போனேன். போனதுமே பள்ளிக் கூடம் மாதிரி முட்டிப் போட வச்சிட்டான். பரீச்சையைக் கண்டுபுடிச்சவன் கையிலக் கெடச்சா கொன்னுடணும்னு தோணும். ஏசுவிற்கும் இங்கிலீஷ் தெரியாது, ஹீப்ரு தான் தாய் மொழி என்பது வேறு விஷயம்.

மூணு வாரம் தொடர்ந்து போகவும், பாதிரியார் புதுசா இருக்கானேன்னு கண்டுபுடிச்சி சில புத்தகங்களை கொடுத்தாரு. அதுல ஆடு மேய்க்கிறத பத்தி விரிவா எழுதி இருந்தாங்க. இதத் தானடா ஊருக்காரப் பசங்க செய்யிறாங்கன்னு நெனச்சிக்கிட்டேன். பிறகு கடவுள் புண்ணியத்துல பக்கத்து வீட்டு அண்ணன் கூப்பிட்டு இங்லிஷும், கணக்கும் கற்றுக் கொடுத்து என்னைத் தேற்றினார். பொதுத் தேர்வுல என்னுடைய மாவட்டத்துலையே நாலாவதா வந்தேன்னா பார்த்துக்கோங்க. படிக்கிற பயலுன்னு பேரு கூட கெடச்சிடுச்சி. அதன் பிறகு கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நண்பர்கள் வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தேவதச்சன், அப்பாஸ், கௌரி ஷங்கர் போன்ற சீனியர் நண்பர்களும், கோ ராஜாராம் போன்ற ஆசிரியர்களும் எனக்கான முன்னோடிகளாக இருந்தார்கள்.

ஒரு வாசகனாக நா பார்த்தசாரதியின் தீவிர விசிறி நான். அவருடைய நாவலில் வரும் கதாப் பாத்திரங்களைப் போலவே உண்மை, நேர்மை, கண்ணியமாக வாழவேண்டும் என்று நினைப்பேன். கல்லூரி நாட்களில் நண்பர்களெல்லாம் குடிக்கும் பொழுது நான் மட்டும் நேராக வீட்டிற்குச் சென்று விடுவேன். அவருடைய படைப்புகள் என்னை தேச பக்தனாக மாற்றியது. அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்ந்தேன். சீன எல்லையில் வேலை. குளிரில் கை விரல்களெல்லாம் வீங்கியது. சமாளித்துக் கொண்டு காலம் தள்ளினேன். அப்போ லாண்டரியில் இருந்த ஒரு பொண்ணை வேறு லவ் பண்ணேன். வேலை பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே திரும்பினேன். லவ்வும் அதோட நின்னுடுச்சி.

பிறகு அறிவொளி இயக்கம், மக்கள் இயக்கம், தொழிற் சங்கம் என்று என்னுடைய களம் விரிந்தது. அறிவொளி இயக்கம் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று வேலை செய்யும் பொழுது கிடைத்த அனுபவங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. கிராமக் கல்வித் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சிறு கிராமம் ஒன்றிற்கு உரையாற்றச் சென்றிருந்தேன். "படிப்பது உங்களுக்கு நல்லதுதானே. உங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் நல்லா இருக்கும் இல்லையா?" என்று பேசி முடித்தேன்.

"அது சரி இவ்வளோ நாள் எங்க போயிருந்தீங்க"-ன்னு ஒரு பாட்டி எங்கிட்ட கேட்டாங்க. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். இந்த மாதிரி போன இடத்திலெல்லாம் கிராமத்திற்கு கிராமம் முகத்திலேயே அறைந்திருக்கிறார்கள். இப்போ உங்க முன்னாடி பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன கேள்வி கேட்கப் போறிங்களோ தெரியல.

களப்பனின்னு எங்கப் போனாலும் 'அடி' தான் கிடைத்தது. எங்க தப்பு நடக்குதுன்னே தெரியலை. மக்களைப் புரிஞ்சிக்கவே முடியலை. ஒரு முறை கிராமம் ஒன்றில் பேய்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "சரி... உனக்கு தைரியம் இருந்தா, வர வெள்ளிக் கிழமை தனியா வந்து, அந்த வேப்ப மரத்தடியில படுத்து தூங்கிட்டு காலைல உயிரோட போ. பேய் இல்லைன்னு ஒத்துக்கறேன். என்ன சொல்ற...!" என்று ஒரு பாட்டி சவால் விட்டாங்க.

"அது என்னமோ பாட்டி இந்த வேப்ப மரத்தடியில வேணும்னா பேயிருக்கலாம். எங்க ஊருல எல்லாம் இல்லை"-ன்னு சொன்னேன்.

தோழர்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் இதனால. என்ன இப்படி பண்ணிட்டிங்க. சவால் விட்டிருக்கலாம் இல்ல என்று கேட்டார்கள்.

நான் தனியா வரலாம், அங்க படுக்கலாம், எழுந்து போகலாம். ஆனா அந்த பாட்டி தோத்துடுவாங்க. நமக்கு என்ன முக்கியம் அவங்க ஜெயிக்கணும்.

அதன் பிறகு நாங்கள் அவர்களிடம் தோற்கத் துவங்கினோம். வேணுமுன்னே சில விடுகதைகளைப் போடுவாங்க. அவர்கள் பதில் சொல்லுவார்கள். பதிலுக்கு அவர்களும் விடுகதைப் போடுவார்கள். தோழர்களுக்கு விடை தெரிந்தாலும் தெரியாதுன்னு சொல்லி முழிப்பாங்க. எங்களைத் தோற்கடிக்கணும் என்றே அவர்களும் வரஆரம்பித்தார்கள். எங்களுடைய இலக்கை நேக்கி நாங்களும் செல்ல ஆரம்பித்தோம்.

வாழ்க்கையில் எது முக்கியம் என்று நினைக்கிறோமோ அது தான் நமக்குக் கிடைக்கும். அறிவொளி இயக்கம், சங்க வேலைகள் தான் முக்கியம் என்று சுற்றிக் கொண்டிருப்பதால் கதைகளை எழுத முடியவில்லை. என்னுடைய வீட்டிற்கு செல்லும் பொழுது கதைகள் எல்லாம் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, "என்ன கண்டுக்கவே மாட்டேங்குற" என்று என்னிடம் பேசுவது போல இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்தக் குரலுக்கு செவிசாய்க்கத் தானே வேண்டும்.

கிராம மக்களின் விவாதத்தின் போது தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றைச் சொல்லி உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் ஆரம்பமானது. இலக்கியம் தவிர்த்த நிறைய கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச்செல்வனும் சலிப்பில்லாமல் பதில் சொல்லி விவாதத்தைக் கொண்டு சென்றார். கூட்டம் முடிந்து கிளம்பும் போது கூட்டத்தில் பதிவர் மா சிவக்குமார் தென்பட்டார். சீன மொழி சமந்தமாக, நீண்ட நாட்களாக அவரைப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். "இப்போ நான் யாருக்கும் கற்றுத் தருவதில்லை" என்றார். நேரம் இருக்கும் பொழுது ஆபீசுக்கு வாங்க பேசலாம் என்று விசிடிங் கார்டை-ஐக் கொடுத்தார்.

அதன் பிறகு ஒருவரைச் சந்தித்தேன். பல முறை அவரைக் கேணியில் பார்த்திருக்கிறேன். தமிழ் இலக்கியம் படிப்பவராக இருக்கும் என்று நினைத்து பேச ஆரம்பித்தேன். madras university-ல் Phd (nanotechnology) படிக்கிறேன் என்றார். அவருடைய இலக்கிய ஆர்வம் ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ச்செல்வனை சந்தித்த ஆச்சர்யத்துடன் இது போன்ற ஆச்சர்யங்களையும் சேர்த்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தேன்.

கேணி சந்திப்பைப் பற்றிய ஊடகவியலாளர் பல பாரதியின் பதிவு:

கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது.
இடது சாரிகளைப் பற்றி நிறைய பேசினார். எனக்கு அரசியல் தெரியாததால் கவனமாக அதையெல்லாம் தவிர்த்திருக்கிறேன். ஆகவே நிறைய தகவல்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு.
3.
அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் பாமா வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Wednesday, April 7, 2010

அவசர உதவி தேவை

குறிப்பு: எழுத்தாளர் முகிலின் இணையத் தளத்திலிருந்து எடுத்தது.
***********************************

உதவி தேவை

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

Tuesday, March 16, 2010

நாஞ்சில் நாடன் - கேணி சந்திப்பு

ஞானியின் வீட்டில் நுழைந்தவுடன் நாஞ்சில் நாடன் இருக்கிறாரா என்று தேடினேன். உள் அறையில் பாரதி மணி மற்றும் ஞானியுடன் பேசிக் கொண்டிருந்தார். வெளி அறையில் அவருடைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படத்தின் ஆதாரக் கதை என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் 'தலைகீழ் விகிதங்கள்' வாங்கிக் கொண்டு கேணிக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.

3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். "சுதந்திரமாக பேசலாமா?" என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் அவர் என்ன பேசப்போகிறார் என்பது கூட எனக்குத் தெரியாது. படைப்புகளுக்கு வித்தியாசமான தலைப்புகளை பெயராக சூட்டுவதில் நாஞ்சில் நாடன் என்னை மிகவும் கவர்ந்தவர். எட்டுத் திக்கும் மதயானை, மாமிசப்படைப்பு என்று யோசிக்கும் போதெல்லாம் அவரது பெயரும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேச்சைத் துவக்கினார். தலைப்பாக எதையும் வைத்துக் கொள்ளாமல் மொழியின் கூறுகளைப் பற்றி பேசத் தொடங்கினார்

தேவை கருதியே சொற்கள் உருவாகிறது. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (லெக்சிகன்) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது. இவற்றையெல்லாம் அவனப்படுத்த வேண்டாமா?

ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அதுமட்டுமே பலவிதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ் தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும். அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!

ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண
பெயிட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிறமாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.

சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அதுபோலவே "அக பெருமாள், பெருமாள் முருகன், கிரா, பா சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன்" போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். "இதை யார் செய்ய வேண்டும்?". ஆராய்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள். "மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க" என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின் பொழுது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.

சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயபுத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கனும்னு நெனச்சிக்கினேன்.

இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.

"டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்...அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?" என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.

அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள் தானே மொழியை செம்மையாக்குகிறது. ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு 'தெரிவை' என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் 'நீலவேணி டீச்சர்' என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம் தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன். வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.

தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள் தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படிநடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக்கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் தானே இருக்கிறோம். மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள் தான் அதற்கு முன்வர வேண்டும். அதற்க்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து சில தேவையிலாத கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சூடான விவாதத்துடன் கேணி சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது.

இணைய தமிழ் அகராதி - http://wiki.senthamil.org

கேணி சந்திப்பு பற்றி நண்பர் பிரபாகரன் எழுதிய பதிவு: (http://tprabakaran.blogspot.com)

)()()()()()()()(

பெரியவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஞானியின் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்லும் முக்குச்சந்தை கடக்கும் பொழுது "ங்கோத்தா எனக்கு குடுக்க வேண்டிய பணத்தை என் ஊட்டாண்ட வந்து இன்னிக்குள்ள குடுக்குல நடக்கறதே வேற" - என்று ஓர் ஆட்டோக்காரன், எதிரில் இருப்பவனை கோபமாக திட்டிக் கொண்டிருந்தான். அந்த 'ங்' வார்த்தை என்னுள் ஓங்காரமாக ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னுடைய சிறு வயதில் வீட்டிற்குத் தெரியாமல் எத்தனை முறை சொல்லியிருப்பேன். வீட்டுக்குள் சென்ற பிறகு சாகடிச்சாலும் இந்த வார்த்தை என் வாயிலிருந்து வராது. இப்பொழுது அந்த வார்த்தை என்னுள் அடையாளமின்றி எங்கோ இருக்கிறது. அதுபோல இன்னும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ! முடிந்தால் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து மீட்டெடுக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையும் சேர்த்துத்தான்...

)()()()()()()()(

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2.
நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தின் வடிவத்தைப் பற்றியோ, ஒலி வடிவத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.
3. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
4.
அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வனும், அதையடுத்து எழுத்தாளர் பாமாவும் வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Monday, February 15, 2010

கேணி சந்திப்பு - ஜெயமோகன்

புத்தக வெளியீட்டிற்காக திருப்பூரிலிருந்து முரளியும், வெயிலானும் வந்திருந்ததால் அவர்களைச் சந்திக்க ஒரு மணி நேரம் முன்பாகவே கேணிக்குச் சென்றிருந்தேன். கேணியின் அருகில் ஞானியின் நாடக நண்பர்கள் கூட்டுவதும் பெருக்குவதுமாக இருந்தார்கள். ஜன்னலின் வழியாக உள்ளே பார்த்தேன். பரவலாக அடுக்கப்பட்ட புத்தக அட்டைகளின் வண்ணங்கள் தெறித்தன. ஓர் ஓரத்தில் ஜெயமோகன் சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தார். உள்ளே சென்று புத்தகங்களைக் கையிலெடுத்துப் புரட்டிக்கெண்டே ஓரக்கண்ணால் ஜெயமோகனைப் பார்த்தேன். கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூக்கம் வரவும் உள்ளே சென்று வசதியாகப் படுத்துக்கொண்டார். நானும் வெளியில் சென்று ஓரமாக அமர்ந்துகொண்டேன்.

நாடக நடிகர் பாரதி மணி, எழுத்தாளர் திலீப்குமார், பிரசன்னா என்று பலரும் வந்திருந்தார்கள். ஜெயமோகனும் ஞானியும் சரியான நேரத்தில் வந்து கூட்டத்தைத் தொடங்கினார்கள். சிறுகதை, நாவல், புனைவு என்று இலக்கியம் சார்ந்து ஜெயமோகன் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 'நம்மால் ஏன் விவாதிக்க முடிவதில்லை?' என்ற தலைப்பில் ஜெயமோகன் பேச இருப்பதாக ஞாநி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நேரடியாக ஜெயமோகன் உரையாடத் தொடங்கினார்.

பதினைந்து நிமிடங்களுக்கு முன்புதான் இந்த தலைப்பைப் பற்றி பேசலாம் என்று முடிவுசெய்தேன். நான் எழுத்தத் தொடங்கி ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகிறது. ஆரம்ப நாட்களில் ஆர்வமுடன் பழகிய பலரும் வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பழகிய நண்பர்களும் ஆர்வமுடன் வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவாதம் என்பது படைப்பாளியை முன்னகர்த்தக் கூடிய முக்கியமான விஷயம். தமிழ் சூழலில் விவாதங்கள் சரியான முறையில் நடக்கிறதா என்றால், திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலிலும் சரி, இதற்கு முன்பிருந்த வெங்கட் சுவாமிநாதன்-பிரமிள் சூழலிலும் சரி, அதற்கு முன்பும் சரி விவாதங்கள் சரியாக நடக்கவில்லை. விவாதம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல்கள் தான் அதிகமாக நடந்திருக்கிறது.

மலையாள இலக்கியத்தில் இருப்பது போன்ற விமர்சனங்களின் மீதான மிதமான சூழல் இங்கு இல்லை. பாலச்சந்திரன் சுள்ளிக்காடை - கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையாக விமர்சிக்கிறேன். ஆனாலும் அவருடைய இளைய சகோதரனாகத் தான் என்னைப் பாவிக்கிறார். ஒரு முறை இந்தியா டுடே-ல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடை அடக்கம் செய்தால் தான் மலையாள நவீனக் கவிதை பிழைக்கும் என்று எழுதியிருந்தேன். சுள்ளிக்காடான் எனக்கு ஃபோன் செய்து "மோகன், நான் நாகர்கோவில் வரலாம் என்றிருந்தேன். நீ அடக்கம் செய்திடுவியோன்னு பயமா இருந்தது. அதனால ட்ரிப் கேன்சல் பண்ணிட்டேன்"னு சொன்னாரு.

அதே மாதிரி ஷாஜி எழுதிய இளைய ராஜா பற்றிய கட்டுரையை மொழி பெயர்த்திருந்தேன். அதைப் பற்றிய விமர்சனக் கட்டுரையையும் நானே எழுதியிருந்தேன்.ஷாஜிக்கு ஃபோன் செய்து ஜெயமோகனை விடக் கூடாதுன்னு சிலர் சொன்னார்களாம். என்னுடைய பக்கம் சில பேரு இருக்காங்க. ஷாஜியை விடக் கூடாதுன்னு சொல்றாங்க. விவாதம் இளையராஜாவின் பங்களிப்பைப் பற்றியது. அது சமந்தமாக யாருமே பேசவில்லை.

இளைய ராஜாவின் ரீ-ரெகார்டிங் பங்களிப்பு மகத்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. 'சரத்பாபு Below Emotion நடிகர்' என்று இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார். அவர் தலையைத் தொங்கப் போட்டால் இளைய ராஜாவின் வயலின் தான் சோகமா இருக்காருன்னு சொல்லும். சினிமா என்பது கூட்டு முயற்சி, unit work. இளையராஜாவிற்கு முன்பு படப்பிடிப்பு பெரும்பாலும் உள்-அரங்கிலேயே நடக்கும். அவருடைய காலத்தில் வெளிப்புற படப்பிடிப்பு எளிமையானது. அந்தத் தொழில் நுட்பமும் இளையராஜாவின் இசைக்கு வலு சேர்த்திருக்கலாம் இல்லையா?. இதை ஒருவர் கூட சொல்லவில்லை. ஒரு நிலையில் நானே எனக்கு இந்த Point-ஐ பின்னூட்டம் அளித்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன்.

விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை.
ஒரு படைப்பாளியின் Frame of reference என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதற்குள் விவாதிக்க வேண்டும். அதற்கு வெளியிலுள்ள விஷயங்களை விவாதிக்கக் கூடாது. உதாரணமாக, சிவராமனின் (பைத்தியக்காரன்) பதிவை விவாதிக்கும் போது பதிவிற்கு பின்னூட்டம் அளித்தவரின் பதிவினை விவாதிக்கக் கூடாது. நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள். ஒரு படைப்பின் எல்லைகள் எந்த Frame of reference-ல் இருக்கிறதோ, அவற்றிலுள்ள விஷயங்களை விவாதிப்பது ஆரோக்கியமானது. அதில் சொல்லப்படாத விஷயங்களை 'ஏன் சொல்லவில்லை?' என்று விவாதிப்பதில்அர்த்தம் இல்லை.

விவாதங்களில் மிகச்சிறந்த விவாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாம் செழுமைப் படுத்திக்கொள்ள முடியும். மேலை நாடுகளில் பள்ளி நாட்களிலேயே விவாதங்களைத் தொடங்குகிறார்கள். அதனால் தான் அவர்கள் பள்ளி முடித்து வெளிவரும் போது தன்னம்பிக்கையுடன் வெளிவருகிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு கோனார் உரைக்கு அடுத்து எதுவும் தெரிவதில்லை. சமீபத்தில் என்னுடைய நண்பர் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். அதைப்பற்றிய எதிர்வினையை எல்லோரையும் எழுதச்சொல்லி இருக்கிறார். மாணவர்களின் கருத்துக்களைப் படிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். படித்து அதிர்ந்துவிட்டேன். முப்பது பேரில் ஒருவர் தான் ஓரளவிற்குப் பரவாயில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் காலம் கடந்து நிற்கும் ஆக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்மில் யாராவது 'ஆதி சங்கரின்' வரிகளை மேற்கோள் காட்டுகிறோமா?... 16-ஆம் நூற்றாண்டு வரை நம்மிடமும் செழுமையான விவாதங்கள் நடந்துள்ளது. உபநிஷத்துகள் கூட விவாத நடையில் தான் இருக்கிறது. விவாதத்தில் இரண்டு முறைகள் இருக்கிறது...

1. சந்தஸ் -
கொள்கையை முன்பே வகுத்துக் கொண்டு விவாதிப்பது.
2.
நியாயம் - ஒரு விஷயம் சரியான முறையில் பொய்ப்பிக்கப்பட்டு நியாயத்தை நிலைநாட்டுவது.

மேலைச் சிந்தனை, வேத சித்தாந்தங்கள் போன்ற Professional விவாதங்களில் நான் கலந்து கொள்வதுண்டு. ஆரம்பித்த பத்து நிமிடங்களில் விவாதம் சூடுபிடித்துவிடும். ஒவ்வொருவரும் அவர்களுக்கான நிலையிலுள்ள தன்மையான கருத்திக்களை முன்வைப்பார்கள். அதுபோன்ற விவாதங்களின் மூலம் தான் நம்மைக் கண்டடைய முடியும். அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த முடியும்.

சரியான அர்த்தத்தில் ஒரு விஷயம் மறுக்கப்படும் பொழுதுதான் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். இல்லையெனில் தேங்கிவிடுவோம்.
ஆகவே ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்வது அவசியம் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கேள்வி நேரத்தின்போது பல நண்பர்களும் ஆர்வமுடன் கேள்வி கேட்டார்கள். சிலர் 'உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. வாசகன் என்ற முறையில் கேட்கிறேன்' என்று தயங்கித் தயங்கி கேள்வி கேட்டார்கள். 'நீங்க அப்படி நினைக்கவே வேண்டாம். நான் மன வருத்தமே அடையமாட்டேன். தாராளமா கேளுங்க' என்று தட்டிக் கொடுத்து கேள்விகளை எதிர்கொண்டார். அதைப்பற்றி டோண்டு ராகவன் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.

கேணி சந்திப்பு - 14.02.2010

நிகழ்ச்சி முடிந்து ஞானி பேசும்போது 'ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10 சதவீத விற்பனைக் கழிவு உண்டு' என்றும் அறிவித்தார். கேணிக்கு வந்துவிட்டு எழுத்தாள நண்பரிடம் பேசாமலோ, கேள்வி கேட்காமலோ போனால் எப்படின்னு ரெண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஜெயமோகனிடம் சென்றேன்.

உங்களுடைய பெயர் என்ன?- ன்னு அவர் முந்திக்கொண்டார்.

கிருஷ்ண பிரபு... (புத்தகத்தில் என்னுடைய பெயரெழுதி அவருடைய கையொப்பத்தை இட்டுக்கொண்டிருந்தார்.)

"ஜெயமோகன்" என்றேன்.

"ம்...!?" என்று திரும்பிப் பார்த்தார்.

உங்களுடைய படைப்புகளிலேயே உங்களுக்கு பிடித்த படைப்பு எது?

புனைவா?... புனைவல்லாத புத்தகமா?...

எதாச்சும் மனசில் பட்டதை சொல்லுங்க...

"கொற்றவை" என்றார்.

என்னிடம் அந்தப் புத்தகமில்லை. ஆகவே இவ்வளவு நேரம் பேசியதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2.
கேணி சந்திப்பை வீடியோ எடுத்தார்கள். அதை வாங்க ஞானியிடம் கேட்டுப்பார்க்கலாம்.
3.
பிக்காசாவில் கேணி புகைப்படங்களைக் காண அழுத்தவும்.


Monday, February 8, 2010

லைப் ஸ்கில்ஸ் - புத்தக வெளியீடு

கேணியில் இதுவரை இலக்கிய சந்திப்புகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. முதன் முறையாக சென்ற வாரம் ஞாநி மற்றும் ஏ.எஸ்.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்ட லைப் ஸ்கில்ஸ்’ புத்தகம் வெளியிடப்பட்டது. குழந்தைப் பருவம் முதல் வயோதிகப் பருவம் வரை பல்வேறு துறையிலுள்ள அனைவருக்கும் பயன்படக் கூடிய வாழ்க்கை வழிகாட்டி நூல் இது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

'சுய முன்னேற்றம், வாழும் கலை' போன்ற விஷயங்களில் பிடிப்பிருந்தாலும், புத்தகங்களாக வாங்கிப் படிப்பது குறைவு தான். ஆகவே 'என் வாழ்க்கை என் கையில்' - புத்தக வெளியீட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு மனநிலைகளில் இருந்தேன். சென்று பார்ப்போம் பிடிக்கவில்லையெனில் திரும்பிவிடலாம் என்று தான் கேணிக்குச் சென்றிருந்தேன்.

டாக்டர் வசந்தி தேவி, ஸ்ரீராம், ராஜீவ்காந்தி யூத் ஃபவுண்டேஷன் உயர் அதிகாரி, நாசர், Life skills trainer ஒருவர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அவர்களைப் பற்றிய அறிமுக உரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து பத்மாவதி Life Skills பற்றி உரையாற்றினார்.

1. நான் யார் என்று உணர்
2. தன்னைப் போல் பிறரை நினை
3. உறவாட கற்றுக்கொள்
4. உரையாட கற்றுக்கொள்
5. எதையும் கேள்வி கேள்
6. எதற்கும் பதில் கண்டுபிடி
7. தெளிவான முடிவெடு
8. சிக்கல்களை அவிழ்
9. உணர்ச்சிகளை உணர்ந்துகொள்
10. அழுத்தங்களை லேசாக்கு

ஆரம்பத்தில் இந்தப் பத்து கட்டளைகளை பாலியல் தொழிளார்களுக்கு வகுப்பெடுக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அனால் இதையே குழந்தைக் குற்றவாளிகள், மன அழுத்தத்திலிருக்கும் பள்ளி சிறுவர்கள், இன்னும் சொல்லப் போனால் அனைத்து துறையினரும் பயன்படுத்தலாம் என்று கூறினார். தமிழ்நாடு AIDS கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளில் பயிற்சியாளராக தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒருசில நிறுவனங்கள் இவர்களை அழைத்து ஒரு நாளில் வகுப்பெடுத்து முடிக்கச் சொல்வார்களாம்.
பயிற்சியின் முழுப்பலன் கிடைக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிர்ச்சியாளர்கள் செல்வார்கள். ஒரே நாளில் எடுக்கும் பொழுது பல பயிற்சிகள் விடுபட்டுவிடும். சரியான கால அவகாசத்தில் இந்தப் பயிற்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பொழுது நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமாக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனை அளிக்கும் என்று தனது உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடைபெற்றது.

முதல் பிரதியை சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடுத்தார்கள். அதன் பிறகு ஞானியின் சகோதரிகள் இருவருக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்கும், கேணி வீட்டின் உரிமையாளர் திரு: புருஷோத்தமன் அவர்களுக்கும்
பிரதியை வழங்கினார்கள். புருஷோத்தமன் புத்தகத்தை பெற்றுக்கொள்ள வரும் பொழுது பலத்த கரகோஷம் வானைப் பிளந்தது. அண்ணார்ந்து பார்த்தேன். கேணியின் மாடியிலிருந்து வயதான பெண்மணி சந்தோஷமான முகத்துடன் புருஷோத்தமனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள். கடைசியாக, பள்ளிச் சிறுமியின் infatuation சமந்தமான பிரச்னை ஒன்றையும் லைஃப் ஸ்கில்ஸையும் இணைத்து ஞாநி இயக்கி, நாசர் மற்றும் துணை நடிகர்கள் நடித்த 'ஆனந்தி' என்ற குறும்படத்தைத் திரையிட்டார்கள். புத்தகத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் அனைவரும் இருந்து பார்த்தனர். படம் முடியும் பொழுது மணி 7.30 PM. ஆகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

இதே புத்தக வெளியீட்டைப் பற்றி நண்பர் ரவிபிரகாஷ் எழுதிய பதிவினைப் படிக்க கீழே அழுத்தவும்:


Tuesday, February 2, 2010

வம்சி - புத்தக வெளியீடு

ஞானியுடன் சேர்ந்து கேணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இலக்கிய ஆளுமைகளுடன் உரையாட வழி வகுத்தவர் என்ற முறையில் பாஸ்கர் சக்தியின் மேல் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. அவருடைய புத்தக வெளியீடு 'Book Point, Chennai'-ல் நடக்கவிருக்கும் தகவல் அறிந்து சந்தோஷப்பட்டேன். புத்தக வெளியீட்டிற்கு முந்தின தினம் இடம் மாற்றப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தீபிகா சென்டரில் இனிதே நடந்து முடிந்தது.

கேணி சந்திப்புக்கு முதன் முறையாக செல்லும் வரை பாஸ்கர் சக்தி எழுத்தாளர் என்பதே எனக்குத் தெரியாது. அதன் பிறகுதான் அவருடைய தொகுப்புகளை தேடித்தேடி வாங்கினேன்.

பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் வரும் சக்தியின் வார்த்தைகள்:

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." - எதோ ஒரு விஷயத்தை உணர்த்திவிட்டு காலம் சுவடில்லாமல் நகரும் பொழுது, சம்பவங்களைக் கோர்வையாக்கி சுவாரஸ்யமான கதைகளாக பாஸ்கர் நமக்குத் தருகிறார்.

'அழகர்சாமியின் குதிரை (வம்சி பதிப்பகம்), பழுப்பு நிற புகைப்படம் (தமிழினி பதிப்பகம்)' ஆகிய இரண்டு தொகுதிகளும் என்வசம் இருக்கின்றன. ஒன்றையும் முழுமையாகப் படித்ததில்லை. இந்தத் தொகுதிகள் தற்பொழுது கிடைக்கிறதா என்றும் தெரியவில்லை. இரண்டு விடுபட்ட சமீபத்திய படைப்புகளையும் கனக துர்காவில் சேர்த்து

விழா துவங்குவதற்கு முன்பே தீபிகா சென்டருக்கு சென்றுவிட்டேன். போகும் வழியில் கேணி நண்பர்கள் பிரபுவும், லிவிங் சன்னும் இணைந்து கொண்டார்கள். செல்லத்துரை, பாஸ்கர் ஷக்தி, க சீ சிவக்குமார்... இன்னும் பலரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள்.

கே.வி.ஷைலஜாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. திருவண்ணாமலைக்கு வெளியே நடக்கும் வம்சியின் முதல் நிகழ்ச்சி என்பதாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் யுகபாரதி, இயக்குனர் மகேந்திரன் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் முதல் அமர்வில் பாஸ்கர் சக்தியின் கனகதுர்காவை வெளியிட்டு பேசினார்கள்.

இயக்குனர் சிம்பு தேவன்:

பத்திரிகைத் துறையில் வேலை செய்த நாட்களிலிருந்தே பாஸ்கர் சக்தியை எனக்குத் தெரியும். அவருடைய கதைகள் பலவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, கனக துர்கா இன்னும் சில கதைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அவருடைய எழுத்தில் இருக்கும் நகைச்சுவை பிரதானமான ஒன்று. அவருடைய பாத்திரப் படைப்புகள் எல்லாம் சுவாரஸ்யம் நிறைந்தவை. ஒரு கார்டூனிஸ்டாக பார்க்கும் பொழுது அதில் நிறைய விஷயங்கள் இருக்கும். கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்து செய்திருப்பார். என்னைப் பொறுத்தவரை பாஸ்கர் சக்தி கார்டூனிஸ்டாக வந்திருந்தால், அவருடைய நுட்பமான கவனிப்புக்கு மிகப் பெரிய உட்சத்தைத் தொட்டிருப்பார். அவருடைய கதை ஒன்றை திரைப்படமாக எடுக்கும் ஆசை இருக்கிறது என்று பேசிமுடித்தார்.

கவிஞர் யுகபாரதி:

எனக்கு நடை போகும் பழக்கம் இருக்கிறது. அப்படி ஒருநாள் சென்றுகொண்டிருந்த பொழுது ஒருவர் என்னைப் பார்த்து சிரித்தார். "என்னைப் பார்த்து யார் சிரிக்கப் போகிறார்கள்?" என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. அவர் என்னைப் பார்த்து தினமும் சிரித்துக் கொண்டே இருந்தார். இப்படியே நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவரைப் பார்க்க முடியாமல் போனது. ஒருநாள் ஆனந்த விகடனில் ஒரு கதை பிரசுரமாகியிருந்தது. அடடே... நல்ல கதையாக இருக்கிறதே என்று விகடனில் பணிபுரியும் நண்பருக்கு தொலை பேசியிருந்தேன்.

நமக்குத் தெரிஞ்சவருதான். நல்லா எழுதுவாரு அவரோட நம்பர் கொடுக்கட்டுமான்னு கேட்டாரு.
சரின்னு வாங்கி உங்களுடைய கதை நன்றாக இருக்கிறதென்று....பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அவரைப் பற்றி விசாரித்தேன்.

"உங்களை எனக்குத் தெரியும், தினந்தோறும் பார்த்து சிரிப்பேனே" என்றார்.

அது வேறு யாருமில்லை பாஸ்கர் சக்திதான்.
இப்படி ஆரம்பித்ததுதான் எங்களுடைய நட்பு என்று அவருடைய சிறுகதைகளைப் பற்றி பேசினார்.

பவா புத்தக வெளியீடு என்று அழைத்ததும் நான் ஒரு கேள்வி கேட்டேன். பவா நீங்கள் மாத இதழைத் தொடங்க வேண்டி இருக்குமே என்று. இப்பொழுதெல்லாம் ஒரு பதிப்பகத்தின் மாத இதழில் அடுத்த பதிப்பகத்தின் புத்தகத்தை, நல்ல புத்தகமாகவே இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வது தானே கலாச்சாரம் என்று நகைச்சுவைகாச் சொன்னார்.

சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் மீது
எனக்கு விருப்பம் அதிகம். அதன் பிறகு என்னைக் கவர்ந்தது பாஸ்கர் சக்தி தான்... இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு அவரது உரையை முடித்தார்.

பத்திரிகையாளர் ஞாநி:

ஞாநி பேச வந்ததும் நீண்ட மைக்கை சிலம்பம் போல கையில் எடுத்துக் கொண்டார். பாஸ்கர் சக்தியின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடப் போறாருன்னு நெனைச்சேன். மக்கள் இந்தப் பக்கம் இருக்கும் போது, மைக் பொசிஷன் அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று சரி செய்தார்.

எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் இது என்னுடைய வேலை இல்லை என்று புறக்கணிக்கிறோம். எல்லாவற்றையும் தனித் தனியாகப் பிரித்து Specialist Specialist என்கிறோம். holistic View - யாருக்குமே இல்லை. இந்த இடத்தில் மட்டுமில்லை இந்தக் குறை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. இந்த அபாயகரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று எல்லா மேடைகளிலும் நான் வற்புறுத்துகிறேன்.

இளைஞர்கள்
சமுதாயத்தின் மீதும் பார்வையை செலுத்த வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து எதோ ஒரு வகையில் சமூகத்தின் குரலை அங்கதமாகக் கொண்டுள்ளன என்பதில் எனக்கு சந்தோஷமே. பத்து வருடங்களாக பாஸ்கர் சக்தி எனக்கு பழக்கம். இன்று குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத் தான் என்னால் கருத முடிகிறது. "உன்னைப் பார்க்கும் பொழுது சிறுவயதில் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது" என்று பாஸ்கரிடம் சொல்லி இருக்கிறேன்.

பாஸ்கர் நுழையும் துறைகளிலெல்லாம் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நாடு முழுவதும் ரூட் பஸ்களில் பயணம் செய்த அனுபவத்தை எழுதி வைத்துள்ளார். அவற்றையும் புத்தகமாக வெளியிடலாம். எழுத்தாகட்டும், தொலைக் கட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதுவதிலாகட்டும், திரைப்படமாகட்டும் அவருக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துக் கொண்டதுமகிழ்ச்சியளிக்கிறது. பாஸ்கரின் நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறது. அதை இங்கு போட்டு உடைக்கலாம் என்றிருக்கிறேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட கால விருப்பம். அதற்கான முயற்சிகளையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று உரையை நிறைவு செய்தார்.

இயக்குனர் மகேந்திரன்:

பத்து வருடங்களுக்கு முன்பு விகடனில் என்னுடைய பேட்டியைக் கேட்டிருந்தார்கள். சூட்டிங் வேலைகளுக்கு இடையில் ஒருநாள் காலையில் வரச்சொல்லி இருந்தேன். பாஸ்கர் சக்தி தான் நிருபராக வந்திருந்தார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. என்னால் முடிந்த அளவு அவருக்கு பதில் சொன்னேன். எனக்குத் திருப்தி இல்லாததால் மாலை ஒருமணி நேரம் கொடுக்கறேன்... வந்து முடிச்சிடுங்கன்னு சொல்லி இருந்தேன். அதே போல வந்து தொந்தரவு இல்லாம முடிச்சிட்டாரு. அந்தப் பேட்டி விகடனில் வந்ததும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்தன. உடனே மகிழ்ச்சியோட விகடனுக்கு பாஸ்கரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன்.

சமீபத்தில் அவருடைய சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அற்புதமான கதைகள். அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். திருவண்ணாமலையில் புத்தகப் பணியில் இருப்பதாகக் கூறினார். எல்லாக் கதைகளுமே அவ்வளவு நகைச்சுவை. நான் எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் படிப்பேன். ஆனால் சிலருக்கு மட்டுமே ஆஸ்தான இடம் கொடுப்பேன். பாஸ்கர் சக்தியும் அவர்களில் ஒருவர் என்று உரையை நிறைவு செய்தார்.

நன்றியுரை - பாஸ்கர் சக்தி:

என்ன பேசறதுன்னே தெரியல... புத்தக வெளியீட்டிற்கு இவர்கள் நால்வரையும் கூப்பிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் பத்திரிகையில் வேலை செய்தவர்கள்.

"மகேந்திரன் சார் என்னுடைய கதைகளைப் பாராட்டிப் பேசறாருன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. விகடனில் இருக்கும் போது அவர் அனுப்பிய கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. நான் ஒன்னும் பெருசா எழுதிடலை. அவர் சொன்னதைத் தான் எழுதினேன். அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதாரண நிருபரை மதித்து கடிதம் எழுதியதை நினைக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. சிம்பு தேவன் டென்ஷனோட இருக்காரு. அவருக்கு வேறொரு விருது நிகழ்ச்சி இருக்கு. நண்பர்கள் என்னோட சிறுகதைகளைப் பாராட்டி பேசியது மகிழ்ச்சியா இருக்கு" என்று வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன் பிறகு மேலும் இரண்டு புத்தகத்தின் வெளியீடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. திரும்புவதற்கு மனமில்லாமல் நண்பர்களிடம் விடைபெற்று வெளியில் வந்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனும், திலீப் குமாரும் பேசிக்கொண்டே என்னைக் கடந்து சென்றனர்.