Thursday, December 20, 2012

பனித்திரை – குறும்படம்


ஒளிக்கற்றையின் பாதையில் அலையும் தூசித் துகள்கலென, பாதை நெடுக காற்றின் திசையில் மூடுபனிக் குவியல்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஜன்னலின் வழி முகத்தில் அறையும் காற்றின் மூலம் மூடுபனி திட்டுக்கள் முத்தமிட்டன. பிரசித்தி பெற்ற நிருத்தத்தினுள் நின்றிருந்த பேருந்தில் அமர்ந்திருந்தேன். எதிர்படும் நபர்களின் முகத்தில் சந்தம் வழிவது போல இருந்தது. பக்கத்துப் பேருந்திலும் பச்சிளம் குழந்தையை துணியால் சுருட்டியவாறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். குழந்தையின் துள்ளலைக் கண்டும் அவளது முகம் சலனமற்றிருந்தது. நடுத்தர வயது தான் அவளுக்கு. அருகில் சுமாரான தோற்றத்தில் ஓர் இளைஞனும் அமர்ந்திருந்தார். ஒரு போலீஸ் வாகனம் நிருத்தத்தினுள் வந்து நின்றது. காவலர்கள் சிலர் நேராக அந்தப் பெண்மணியிடம் சென்றனர். அவளிடம் ஏதோ பேசினார். அதனைத் தொடர்ந்து மறுப்பேதும் சொல்லாமல் காவலர்களைப் பின் தொடர்ந்து சென்றவள் ஜீப்பில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். கச்சிதமாக நெறியாள்கை செய்த நாடகம் போல எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

“குழந்தைத் திருட்டாக இருக்குமோ!? கணவனுடன் முரண்பட்டு கோவத்தில் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வந்திருப்பாளோ!? மாமியார், நாத்தனார் போன்றவர்களின் கொடுமையாக இருக்குமோ!?” என எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.

நண்பர் சக்கரவர்த்தி ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று அதன் குறுந்தகடு வெளியீடு ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்காகத் தான் பேருந்தில் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் நடந்த களேபரத்தில் பேருந்திலிருந்து இறங்கி, “என்ன தான் நடக்கிறது?” என்று நோட்டம் விட்டேன். சற்று நேரத்தில் போலீஸ் ஜீப் சடாரென நழுவிச் சென்றது. கூடவே, திரட்ட நினைத்த தகவலும் தான். பாரதிய வித்யா பவனில் நுழைந்த போது விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ஹமீது தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அதற்கு முன் ஒரு விஷயத்தை பகிர வேண்டும். கடந்த 2012-ல் நடந்த புத்தகக் கண்காட்சியின் ஒரு நாள், அரங்கிலிருந்த கேண்டினுக்குச் சென்றிருந்தேன். உருண்டு உப்பிய செந்நிற போண்டாக்களை வைத்துக்கொண்டு சக்கரவர்த்தி தின்று கொண்டிருந்தார். அருகில் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரும் அமர்ந்திருந்தார். மருத்துவரை பார்பதற்கு ஃபாரின் ரிடர்ன் அமெரிக்க மாப்பிளை போல இருந்தார். உண்மையில் அவர் அமெரிக்காவில் தங்கி ஆஸ்துமா பற்றி படித்திருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா, பாஸ்கர் சக்தி போன்ற பல பிரபலங்களுக்கு இவர் தான் ஆஸ்தான மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னமோ சீரியஸ் டிஸ்கஷன் போயிட்டு இருக்கு போல” என சக்ரவர்த்தியிடம் யதார்த்தமாகக் கேட்டேன். “சார் ஒரு குறும்படம் எடுக்கப் போறாரு... அதை நான் தான் இயக்கப் போறேன்” என பதார்தமாக பதில் தந்தார் சக்ரவர்த்தி. (அருகில் இருந்த மருத்துவர் பவ்யத்துடன் சிரித்தவாறு என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டார்). கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பில் எடுக்கப்பட்ட குறும்படம் தான் இது. சமகாலத்தில் டாக்டர்கள் படம் எடுக்க முன் வருவது, ஒருவித கிலியை ஏற்படுத்துகிறது. அது போன்ற கிலியுடன் தான், நிகழ்ச்சி நடக்கும் விழா அரங்கினுள் சென்று அமர்ந்திருந்தேன். “பனித்திரை” - என்ற குறும்படம் திரையிடப்பட்டது. சினிமாவின் மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பவர் அல்ல இவரென்பதை புரிந்துகொண்டேன். போலவே குரும்படத்தைப் பற்றிய பாராட்டு உரைகளும் பின்னர் அரங்கேரியது.

சக்ரவர்த்தியின் ஆஸ்தான குருவான இயக்குனர் வசந்த் நடுநாயகனாக அமர்ந்திருந்தார். விழா நாயகன் மருத்துவர் ஸ்ரீதரும் இருந்தார். சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் எஸ்ரா, குணசித்திர நடிகர் – திரைப்பட வசனகர்த்தா – பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி (இயக்குனர்), தமிழ் ஸ்டுடியோ அருண் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எல்லோரும் குரும்படத்தைப் பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக பாஸ்கர் சக்தி பேசும்போது, சிறுவயதில் ஆஸ்துமாவால் தான் பட்ட அவதியையும், அதிலிருந்து வெளிவர மலையில் அலையும் கருங்குரங்கின் ரத்தத்தை விஸ்கியில் வடித்தெடுத்துக் குடித்ததையும் பகிர்ந்துகொண்டார். போதாததற்கு கருங்குரங்கின் மாமிசத்தை பதப்படுத்து வேறு சாப்பிட்டிருக்கிறாராம். அசைவப் பிரியன் தான் என்றாலும் குமட்டிக் கொண்டு வந்தது. இதுபோன்ற ரத்தவாடை பத்தியங்கள் தான் ஆஸ்துமாவிற்கு வாழையடி வாழையாக நம்மவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. புறாவின் ரத்தத்தையும் சிலர் பரிந்துரைப்பர். அதெல்லாம் தேவையில்லை, ஆங்கில மருத்துவத்தின் மூலமே இதனை சரி செய்யலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வைத் தான் மருத்துவர் ஸ்ரீதர் பல்வேறு வடிவங்களில் ஏற்படுத்தி வருகிறார். ஆஸ்துமாவைப் பற்றி இவர் எழுதிய புத்தகம் ஏற்கனவே விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று பல தகவல்களை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறார். அதன் அடுத்த கட்ட முயற்சியாகத் தான் இந்தக் குறும்பட வெளியீடு.

ஆஸ்துமாவை ஒழித்துக்கட்ட இவர் ஏன் தன்னை நேந்துவிட்டுக் கொள்ள வேண்டும்? இதன் பின்னர் ஒரு ருசிகரத் தகவல் இருக்கிறது. உண்மையில் மருத்துவரின் மனதில் வடுவாக பதிந்திருக்கும் இளமைக்கால நினைவுகள் என்று தான் அதனைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீதரின் அம்மா & அப்பா இருவருக்கும் ஆஸ்துமா இருந்ததாம். சில சமயம் அவருடைய தாயாருக்கு திடீரென மூச்சிறைப்பு ஏற்படுமாம். ஒருமுறை சமையலறையின் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, முகம் கோநியவாறு சிரமப்பட்டு மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாராம். அதனைக் கண்ட பத்துவயது சிறுவன் ஸ்ரீதர் மிகுந்த துயரம் அடைந்து, ஆஸ்துமாவை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாராம். அந்த காலத்தில் மருத்துவர்கள் பொறுப்புணர்ந்து சேவை செய்து கொண்டிருந்தார்கள். இக்கட்டான நேரங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பிரதிபலன் பார்க்காமல் மருத்துவ சேவை செய்வார்கள். நாம்முடைய சக்திக்கு ஏற்றவாறு கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்வார்கள். இப்போதைய மருத்துவர்களுக்கு அந்த குணம் இருப்பதில்லை என்ற உண்மைத் தகவலை மருத்துவராக இருந்துகொண்டே பணப பேய்களாகத் திகழும் மருத்துவர்களை இடித்துரைத்தார்.

வறுமையில் இருக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மருத்துவர் ஸ்ரீதர் இலவச சிகிச்சை அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம்களையும் நடத்திக் கொண்டு வருகிறார். மருத்துவர் ஸ்ரீதர் மருத்துவத்தில் சிறக்கவும், நண்பர் சக்கரவர்த்தி திரைத்துறையில் மின்னவும் வாழ்த்துக்கள். மற்றபடி வேறென்ன சொல்ல முடியும் எந்த எளியவனால்...