Monday, September 14, 2009

சென்னை சிறுகதைப் பட்டறை

நினைத்துப் பார்த்தால் எல்லாமே கனவு போல் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பன் கிறிஸ்டோஃபருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பசியுடன் அலைந்து திரிந்த நாட்கள் ஞாபகம் வருகின்றன. அப்பொழுதெல்லாம் "அல்ஜீப்ரா, ரியல் அனாலிசிஸ், டிரிக்நோமேத்ரி" என தொல்லைகளின் மொத்த உருவங்கள் அவனுடைய கைகளில் இருக்கும். என்னிடமோ "காலச்சுவடு, தீராநதி, உயிர்மை" போன்ற இலக்கிய இதழ்கள் இருக்கும். இதென்ன விந்தை! இந்த இதழ்களில் எழுதுபவர்கள் எல்லோரும் புது உலகின் வாசல்களைத் திறக்கிறார்களே என்று வியப்பாகவும் பரவசமாகவும் இருக்கும். சிற்றிதழ்களுக்கு எழுதுபவர்கள் எங்கு சென்று கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வியும் உடன் எழும். அதைப்பற்றி பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் விடுதியில் நண்பர்களுடன் பேசி இருக்கிறேன்.

"டேய் எக்ஸாம் வருதுடா... உருப்புடற வழியைப் பாருடா...இப்படியே பேசிட்டு இருந்த நாசமா போயிடுவ" என்று கிறிஸ்டி தலையில் கொட்டுவான். அவனுடைய அக்கறையினால் சில பாடங்களில் தேறினேன் என்பது உண்மை.

கல்லூரி முடித்து (வருடங்கள் மட்டுமே கடந்தது) வேலையைத் தேடவேண்டிய நிர்பந்தம். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சொந்தக் காலில் நிற்கப் பிரயத்தனப்பட்டேன். என்னுடைய அக்காவின் மூலம் நல்ல வேலையும் கிடைத்து, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கையில் சிவராமனின் "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு - சிறுகதைப் பட்டறை" பதிவு கண்ணில் படுமா...!?.

அதுமட்டுமில்லாமல் பதிவெழுதும் நண்பர்கள் முரளி, சேரல், விஷ்ணு மற்றும் அமித்துவின் அம்மா (சாரதா) ஆகியோரும் கலந்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். "ஈஸ்வரா... தமிழ் கூறும் நல்லுலகை என்னிடமிருந்து காப்பாற்று" என்று நானும் மனுச்செய்திருந்தேன்.

Sep 13, 2009 - 9 மணிக்கு முன்பே கதைப் பட்டறை நடக்கும் அரங்கிற்குச் சென்றுவிட்டேன். யுவன் சந்திரசேகரும், பாஸ்கர் சக்தியும் சீக்கிரம் வந்திருந்தார்கள்.

யுவனுடன் இதற்குமுன் பரிச்சயம் இல்லை. பாஸ்கர் சக்தியை யாரென்றே தெரியாமல் அவருடன் பேசியிருக்கிறேன். அது ஒரு வித்யாசமான அனுபவம். பாலு மகேந்திரா பங்கு பெற்ற கேணி சந்திப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாகச் சென்றிருந்தேன். ஒருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். அவரைக் கூப்பிட்டு நீங்கள் யார்? ஞானியுடைய நண்பரா? இங்கிருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களா? என்பது போன்ற தொடர் கேள்விகளைக் கேட்டேன்.

"நான் ஞானியின் நண்பன் தான். ஏதோ கொஞ்சம் எழுதுகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு, செய்து கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தினார். இந்த சிங்காரச் சென்னையில் முகம் கொடுத்து பேசுவதற்கு ஆளில்லாத போது, வலிய வந்து பேசுபவனை நிராகரித்து வேலை செய்கிறாரே...என்ன ஜென்மமோ என்று மனதிற்குள் குறைபட்டுக் கொண்டேன். நான் கேள்வி கேட்டுத் துளைத்தவர் தான் பாஸ்கர் சக்தி என்பது நிகழ்ச்சி முடியும் தருணத்தில் தான் தெரியவந்தது.

சிறுகதைப் பட்டறைக்கு வந்திருந்த அவரின் அருகில் சென்று அனைத்தையும் ஞாபகப்படுத்தினேன். "ஓ... அது நீங்கள் தானா" என்று சிரித்தார்.

பிறகு அவரிடமிருந்து பா. ராகவனிடம் சென்றேன். அலகிலா விளையாட்டு நாவலைப் பற்றி எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். அவருக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்த மின்னஞ்சலை ஞாபகப்படுத்தினேன். "படிச்சேன்...படிச்சேன்... புத்தகம் கெடச்சுதா" என்று சிரித்தார். இதுவரை அந்த நாவலை ஏழு பேர் வாங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறேன் என்றதும் சிரித்தார். வேதங்கள் பற்றி நிறைய இடங்களில் வருகிறதே...பாட சாலையில் படித்தவரா என்றதற்கு "ஆம்" என்றார். அப்பொழுது பார்த்து செல்பேசியில் அழைப்பு வர அவரிடமிருந்து விலகிச் செல்லும் படி நேர்ந்தது.

அடுத்தது யுவனிடம் பேசினேன். பழகிய நண்பரைப் போல் விருப்பத்துடன் பேசினார். ஒளிவிலகல் புத்தக முன்னுரையில் "இரண்டு கவிதைத் தொகுப்பு வெளிவந்தும் கவிதைகள் மீதான தெளிவிற்குப் பதிலாக குழப்பமே அதிகமாகி இருக்கிறது. இப்பொழுது சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் சமயத்திலும் சிறுகதைகள் மீதான சிடுக்குகள் அதிகமாகிறது. ஆனால் அதைக் கண்டு தீர்ப்பது வாசகர்களின் வேலை" என்று சொல்லியிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்தேன். ஏற்புடைய சில மறுமொழிகளைக் கூறினார்.

அவரிடம் பேசிவிட்டுத் திரும்பும் சமயத்தில் பத்ரி எதிரில் வந்தார். அவருடைய கணக்கு பதிவின் சில பகுதிகள் படிக்கக் கிடைக்கவில்லை அதுபற்றி அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.

கி பி: Good Morning பத்ரி. உங்களுடைய கணக்குப் பதிவு...
பத்ரி: மெயில் பார்த்தேன். அதில் சில பிரச்சனை இருக்கு. சீக்கிரமே சரி செய்துவிடுகிறேன்.
கி பி: என்னுடைய பல நண்பர்களுக்கு அந்தப் பதிவினை பரிந்துரை செய்திருக்கிறேன்.
பத்ரி: இல்ல... இல்ல... இப்போ வேணாம். Word Press-ல மாத்திட்டு சொல்றேன். பிறகு Recommend பண்ணுங்கோ.
கி பி: நீங்கள் ஏன் அதை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது?
பத்ரி: அப்படி செய்ய முடியாது. யோசிக்கலாம்...
நான்: தயவு செய்து புத்தகமாகக் கொண்டு வாருங்கள். கிழக்கின் நிறுவனர்... நீங்களே இப்படிச் சொல்லலாமா?"
பத்ரி:"Publisher என்பதால் தான் அப்படிச் சொல்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

வெளியூரிலிருந்து வரும் நண்பர்களுக்காக சிறிது நேரம் காத்திருந்துவிட்டு சிவராமனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதலில் பேசினார். தனது வாழ்வியல் அனுபவங்களை எப்படி கதைகளுக்கான கருவாக பாவிக்கிறார் என்று நீண்ட உரையாற்றினார். இவர் பேசிக்கொண்டே இருந்தபோது மின்சாரத் தடை ஏற்பட்டது. குறைந்த வெளிச்சத்தின் கருமையான இருளில் ஒரு நிமிடம் ஆழ்ந்திருந்தோம். எங்கும் அமைதி பரவிக்கிடந்தது. பிறகு தடையில்லா மின்சாரம் பாயவும் நிகழ்ச்சி தொடர்ந்தது. அவருடைய கிராமம் சார்ந்த அனுபவங்களையும், அதன் தாக்கத்தில் எழுதிய கதைகளையும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.

கதையில் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் ஆனால் படிப்பினை (Message) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று உரையை முடித்தார். அதன் பிறகு கேள்வி நேரம் ஆரம்பமானது. அனைவருடைய கேள்விகளுக்கும் நிதானமாக பதில்கள் கூறி அவருடைய பகுதியை நிறைவு செய்தார்.

இரண்டாம் பகுதியாக "Magical Realism" பற்றி யுவன் சந்திரசேகர் அருமையாக உரையாற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவிடம் பேச்சு மற்றும் இலக்கியம் கற்றது, புனைவுக் கதைகளின் களம், அதைக் கண்டடையும் விதம், கவிதை, சாருவினுடனான மோதல் என பல விஷயங்களைத் தொட்டுச் சென்றார்.

ஒருவனுடைய கவிதை இன்னொருவனுக்குப் புரியாது எழுதியவர்களுக்கு மட்டுமே புரியும் என்று சொல்லியது என்னை வெகுவாக தேற்றியது போல் இருந்தது. ஏனெனில் கவிதைகளின் மீதான வாசிப்பில் ஆகச்சிறந்த வெகுளி நான்.

யுவனிடம் எனக்குப் பிடித்தது மற்ற படைப்பாளிகள்(பாஸ்கர், தேவதாஸ், பா ரா) பேசும் பொழுது தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து செல்வது போல் அனைவரையும் நோட்டம் விட்டார். கேள்வி கேட்பவர்களின் கண்களைக் கூர்ந்து கவனித்தார். அனைவரிடமும் இயல்பாகப் பழகினார்.

மதிய உணவிற்குப் பிறகு மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி உரையாட திரு: தேவதாஸ் முன்வந்தார். பல ரஷ்ய, ஜப்பானிய, ஜெர்மானிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தார். மொழிபெயர்ப்பிலுள்ள கடினங்களும், மெத்தனங்களும் இந்தப் பகுதியில் தெரியவந்தது.

கேள்வி நேரத்தின்போது பல மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வரும் படைப்புகளின் தரம் பற்றி அனைவரும் விவாதம் செய்தார்கள். தேவையில்லாத பல கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்களோ என்று சலிப்பு ஏற்படும்படி இருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யுவன் அளித்த மறுமொழி விவாதத்தை சுவாரஸ்யமாக்கியது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, இறுதி பகுதியாக "பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுதுவது எப்படி?" என்பதை விளக்க கிழக்கின் முதன்மை ஆசிரியர் பா. ராகவன் முன்வந்தார். உதவி ஆசிரியராக தனக்கு நேர்ந்த படிப்பினைகள், அனுபவங்கள் என அனைத்தையும் நகைச்சுவை இழையோட அனைவரிடமும் பகிர்ந்து கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது. பலருக்கும் அறிமுகமான பிரபல எழுத்தாளர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினார். அவரை நெருங்கி கேட்டக் கேள்விகளுக்குப் பணிவுடன் பதில் கூறினார்.

பைத்தியக்காரன் (சிவராமன்) தனது நன்றியுரையில் பாஸ்கர், யுவன், தேவதாஸ், பா ராகவன், பத்ரி, நர்சிம் ஆகியோருக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழகத்தின் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருந்த பல பதிவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரிந்து சென்ற கல்லூரித் தோழர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்வதைப் போல் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். எவ்வளவு வாஞ்சையுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அனைவருடைய கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. படைப்பில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தப் பட்டறை தீனி போட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் சிறக்க வாழ்த்துக்கள்.

"முரளி" மற்றும் "சேரல்" எனக்காக வாங்கிவந்திருந்த பல புத்தகங்களை அன்புடன் தந்தார்கள். நானும் சில புத்தகங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டம் தொடங்குவதற்கு கால்மணி நேரம் முன்னதாக வருகிறேன் என்றால், கூட்டம் முடிந்த ஒருநிமிட நேரத்தில் கிளம்ப்பும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதன்படி புறப்படத் தயாரானேன். எனக்குத் தெரிந்த சிலரிடம் கைகுலுக்கி விடைபெற்று சிவராமனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாலையில் இறங்கி நடந்தேன். கல்லூரி நாட்களில் படித்த ஆங்கில வரிகள் ஞாபகம் வந்தன.

எல்லா சாலைகளுக்கும் முடிவுண்டு
பயணங்கள் எல்லாம் சாலையில் தான்
பயணங்கள் முடிவுக்கு வரலாம். சில நாட்களில்
மீண்டும் தொடரலாம் - அப்பொழுது நீ
பிரபஞ்சத்தையே கண்டடையலாம், ஒரு நாள்
பிரமஞ்சம் உனக்குள் இருக்கும் - யாரோ மகராஜ்

Tuesday, September 8, 2009

இலக்கியபீடம் கலைமாமணி விக்கிரமனுடன்

(07-09-2009) சொந்த வேலை காரணமாக அலுவலகம் செல்லாததால் சித்தப்பாவையும், அக்காவின் மகன் அகிலையும் பார்பதற்காக கொட்டிவாக்கத்திற்குச் சென்றிருந்தேன்.

எதிர்பாராத விதமாக அங்கு கெளதம் மேனனின் தெலுங்கு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நாகார்ஜூனின் மகனும், நடிகை ராதாவின் மகளும் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே காட்சியை எத்தனை முறை படம் எடுக்கிறார்கள். சிறிது நேரம் பார்ப்பதற்குள் வெறுத்துவிட்டது. வினோத்தும், முத்துவும் தான் ஞாபகம் வந்தார்கள். "இதையாடா நாய்களே விரும்புகிறீர்கள்" -என்று முத்துவிற்கு ஃபோன் செய்துத் திட்டினேன்.

"அப்படி இல்லைங்க மாமா, அதெல்லாம் ஒரு Perfection-னுக்காகத் தான். ஒரு கதை எழுதும் போது, 4 பேப்பர் கசக்கிப் போட்டுவிட்டு 5-வது பேப்பரில் எழுதுவது இல்லையா? அந்த மாதிரி தான்... சுவாரஸ்யமா இருக்கும் மாமா" என்று சமாதானம் கூறினான்.

பிறகு, அக்காவின் வீட்டிலிருந்து புறப்பட்டு காலச்சுவடு மற்றும் எனி இந்தியனுக்குச் சென்று சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அப்படியே நண்பர் முரளிக்கும், சேரலுக்கும் - பா.ராகவன் எழுதிய "அலகிலா விளையாட்டு" நாவலை வாங்குவதற்காக மேற்கு மாம்பலத்திலுள்ள "இலக்கிய பீடம்" செல்ல ஆயத்தமானேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே புத்தகத்தை பொன்னேரி நூலகத்திற்காக வாங்கச் சென்றிருந்ததால் சிரமமின்றி செல்ல முடிந்தது.

முன்பு மதிய நேரத்தில் சென்றிருந்ததால் கலைமாமணி விக்ரமன் உறங்கிக் கொண்டிருந்தார். ஆகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க அவருடைய பேத்திதான் உதவி செய்தார்கள். இந்த முறை மாலை 6 மணிக்குச் சென்றிருந்ததால் அவரே எனக்கு உதவி செய்ய முன்வந்தார்.

வி: இந்த மாதிரி புத்தகங்களை யாரும் விரும்பி வாங்குவது இல்லையே?
கி-பி: இந்த நாவல் தொடராக வந்த போது பொன்னேரி நூலகத்தில் படித்திருக்கிறேன். நூலகருக்குத் தெரியாமல் திருடி, பைண்டிங் செய்து என்னுடைய சொந்த நூலகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நீண்ட நாட்களாக இந்த நாவலை கடைகளில் தேடி, எங்குமே கிடைக்காததால் பா. ராகவனிடம் இ-மெயில் விசாரித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களிடம் வாங்கியிருக்கிறேன்.

இப்பொழுது என்னுடைய நண்பர்களுக்காக அதே புத்தகத்தை வாங்க வந்திருக்கிறேன் ஐயா.

வி: ஓ... அப்படியா. இங்க பாருங்கோ புத்தகத்தை மட்டும் திருடலாம், படிப்பதற்காக கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காம இருக்கலாம் தப்பே இல்லை. [இதற்கும் மேல் புரிய வேண்டுமெனில் இங்கு படியுங்கள்:
எங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்]
கி-பி: இல்லங்க ஐயா, பொன்னேரி நூலகத்திற்கு அந்த நாவலை வாங்கிக் கொடுத்துவிட்டேன். அப்படியே, நான் திருடியதால் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்ற விஷயத்தையும் சொல்லிவிட்டேன்.

வி: நல்லது நல்லது... (சிரித்துக் கொண்டே சொல்கிறார்), உங்களுடைய ஊர் எது?
கி-பி: கும்மிடிப்பூண்டி போகும் வழியில், பொன்னேரி அருகிலுள்ள சிறிய கிராமம்.

வி: அப்படியா... முந்தியெல்லாம் அங்க தான் கேம்ப் போடுவாங்கோ. சென்னைக்கு அங்க இருந்துதான் குடிதண்ணீர் கூட வருது இல்லையா?
கி-பி: இப்போ எங்களுக்கே குடிக்கத் தண்ணி இல்ல, அதனால சென்னைக்கு அனுப்புறது ரொம்பவும் குறைவுதான் ஐயா.

வி: சரி, நீங்க எங்க வேலை செய்யுரிங்க?
கி-பி: சென்னைல தான் ஐயா. ஒரு சின்ன கம்பெனியில வேலை செய்யுறேன்.

வி: வெளிநாட்டு கம்பெனியில வேலை செஞ்சா நிறைய சம்பளம் கொடுக்கறதா சொல்றாங்க. என்னுடைய பேத்தி கூட பெங்களூர்ல இருக்குற IBM-ல வேலை செய்யறா. நெறைய சம்பளம் வாங்குறதா சொல்றா.
கி-பி: ஆமாங்க ஐயா. அவங்க சொல்றது உண்மைதான். அந்த மாதிரி கம்பெனிகளில் வேலை செய்தால் சில நேரங்களில் வெளி ஊருக்கு அனுப்புவாங்க. நைட் ஷிபிட் வேலை வரும். அதெல்லாம் எனக்கு சரிவராது. அதனால்தான் எனக்கு சரிவரும் கம்பெனிகளில் வேலை செய்கிறேன். ...

வி: "சரி இருங்க... புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று குனிந்து நிமிர்ந்து அலமாரியிலுள்ள புத்தகத்தைத் தேடுகிறார்.
கி-பி: ஐயா நீங்க உட்காருங்கள். நான் தேடி எடுத்துக் கொள்கிறேன்.

வி: "இருப்பா, இங்க தான் இருக்கும்..." என்று இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். (மேலும் சில புத்தகங்களையும், இரண்டு இதழையும் கையில் கொடுத்தார்.) இதெல்லாம் கூட நல்லா இருக்கும் படிச்சிப் பாருங்க.
கி-பி: உங்க கையில இருக்குற எல்லா புத்தகத்தையும் எடுத்துக்குறேன். பில் போட்டுடுங்க.

**********

கி-பி: சரிங்க ஐயா, நீங்க இதழ் நடந்துறீங்க இல்ல. யாரு Proof Read பாக்குறது?
வி: நான் தான் பார்க்கிறேன். ஒரு Assistant இருக்காங்க.

கி-பி: இந்த வயசுல உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?
வி: பிடிச்ச வேலைதான அதுல என்ன கஷ்டம். ஆனால் Proof Read பண்ணுறத ஆங்கிலத்தில் "Devil"-னு சொல்லுவாங்க. அதுக்கு "Ghost"-ன்னு அர்த்தம் இல்ல. எழுத்துப் பிழை மோகினி மாதிரி மயக்கிடும். ஒருத்தர் கண்ணுக்கு மட்டுமே தெரியாது. சின்ன தப்பு வந்தாலும் போச்சு. அமுத சுரபியில 52 வருஷம் வேலை செய்திருக்கிறேன். 'மு'-னாவுக்கு பதில் 'லு'-னா தெரியாம வந்தாலும் போச்சு. "அலுத சுரபின்னு" ஆயிடும். அந்த அனுபவம் கைகொடுக்கிறது. அப்போ எல்லாம் அச்சுல கோர்த்து பிரிண்ட் பண்ணனும். ரொம்ப கவனம் தேவைப்படும். இப்போதான் பிரிண்டிங் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதே. கடந்த பல வருஷங்களா "இலக்கிய பீடம்" நடத்திட்டு இருக்கேன். ஒரு சில படைப்பாளிகள் அறிமுகம் ஆகி இருக்காங்க. அதில் பா. ராகவனும் ஒருவர்.

கி-பி: இலக்கிய பீடத்தில் அவர் பரிசு பெற்ற நாவல் ஏன் சந்தையில் பரவலாக கிடைக்கவில்லை? அவருக்கு தான் சந்தையில் நல்ல பெயர் இருக்கிறதே?
வி: பரிசு கொடுக்கும் போதே நாவலின் முதல் பதிப்பு இலக்கிய பீடத்தில் தான் வெளிவர வேண்டும் என்று கையொப்பம் வாங்கி விடுவோம். அவர் பரிசு பெற்ற இரண்டு வருடம் கழித்துத்தான் அந்த நாவலை புத்தகமாகப் போட முடிந்தது. நாவல்கள் விற்றுத் தீர்ந்ததும் அவர் விரும்பும் பதிப்பகத்தின் மூலம் நாவல் சந்தையில் கிடைக்கலாம்.

இன்னுமா புத்தகம் விற்றுத் தீரவில்லை. நான் புத்தகமாகப் போட்டுக் கொள்ளட்டுமா என்று ராகவன் கடிதம் எழுதியிருந்தார். நான் கூடாது என்று சொல்லிவிட்டேன். என்னிடம் இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அது தீர்ந்ததும் அவரிடம் சொல்லிவிடுவேன். பிறகு அவரின் மூலம் சந்தையில் கிடைக்கும்.

கி-பி: உங்களுடைய இலக்கிய இதழ் நிறைய பேருக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மார்க்கெட்டிங் செய்யவில்லை?
வி: நாங்கள் நூலகங்களுக்கு கொடுக்கிறோம் மற்றபடி வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. ஆகவே மார்க்கெட்டிங் தேவையில்லை.

கி-பி: ஏன் ஐயா இப்படி சொல்கிறீர்கள். காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய பத்திரிகைகளுக்கு ஆர்வலர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறதே. நீங்களும் அவர்களைப் போல் ஓரளவிற்கு வெகுஜனப்படுத்தி இருக்கலாமே? நிறைய படைப்பாளிகள் வெளியில் வருவார்கள் இல்லையா?
வி: நீங்கள் சுட்டிய இதழ்களை இலக்கிய இதழ்கள் என்று சொல்லாதீர்கள். அவற்றில் படைப்பாளிகளின் பேட்டி வருகிறது. வேறு என்ன இருக்கிறது? ஏன் தொடர் கதைகள் வருவதில்லை? நல்ல தரமான சிறுகதைகள் வருவதில்லை? இப்போ இருக்கறவங்க Internet-ல என்ன கிடைக்குதோ அதை மொழி பெயர்ப்பு என்ற பெயரில் தமிழில் எழுதறாங்க. யாராவது நாவல் அல்லது தொடர் கதை எழுதறாங்களா?

கி-பி: நீங்கள் கூட நாவல்கள் எழுதி இருக்கிறீர்களே...
வி: ஆமாம்...ஆமாம்... கிட்டத்தட்ட 60 நாவல்கள். அதில் நான்கு சமூக நாவல்கள் மற்றவை அனைத்தும் வரலாற்று நாவல்கள்.

கி-பி: வரலாற்று நாவல் எழுதுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?
வி: அதற்கு முதலில் வரலாற்று பரிச்சயம் வேண்டும். கூடவே அதிகமான கற்பனை இருக்க வேண்டும். நாவலுக்கு வடிவம் இருக்கிறது அதனையும் கவத்தில் கொள்ளவேண்டும். இல்லையெனில் நாவல் வெற்றி பெறாது.

கி-பி: நீங்கள் தான் வருட வருடம் ஒரு நாவலைத் தேர்வு செய்து பரிசு வழங்குகிறீர்களே.
வி: கடந்த ரெண்டு வருஷமா கொடுக்கறது இல்லை. எனென்றால் நல்ல படைப்புகள் எங்களுக்கு வரவில்லை. கொடுக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த வருடம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீண்ட காலம் கழித்து இரண்டு நாவல்கள் தேர்வாகி இருக்கின்றன. நவம்பரில் வெளிவரும்.

நான் கண்டிப்பாக நவம்பரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருத்து கிளம்பினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "இந்தாங்க இந்த புத்தகம் உங்களுக்குத் தான் வச்சுக்கோங்க" என்று அவருடைய சிறுகதைப் புத்தகம் ஒன்றைக் கையில் கொடுத்தார்.

"ஐயா நான் இதுக்கும் காசு கொடுத்துடரேனே...."என்று கூறினேன். "இல்ல நீங்க வச்சுக்கோங்க" என்று அன்புடன் கொடுத்தார்.

என்னுடைய வயது போல் இரண்டு மடங்கு பத்திரிகைத் துறை அனுபவம் இருக்கிறது. கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஆனால் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவருடனிருந்த அத்தனை நேரமும் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

யாருக்கேனும் நாவல் எழுதும் திறமை இருந்து அதனைப் பதிப்பகங்களுக்கு அனுப்ப விரும்பினால் தவறாமல் இலக்கிய பீடத்திற்கு அனுப்பலாம். அவர்களுடைய முகவரி...

இலக்கியபீடம் - மாத இதழ்
கலைமாமணி விக்ரமன்
3,3, ஜயசங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033

தொலைபேசி : 9144-23712485