எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. சரி நினைவில் உள்ள ஞாபகங்களிலிருந்து
இப்படித் தொடங்குகிறேன்.
பெங்களூரில் எழுத்தாளர் சுஜாதாவும் நடிகர் கமலஹாசனும் ஒரு காரில் அமர்ந்திருப்பதைப்
பார்த்துவிட்டு ஒடிசலான அந்த இளைஞன் அருகில் செல்கிறான்(ர்). சுஜாதாவைப்
பார்த்து மகிழ்ச்சியுடன் ‘எக்ஸ்யூஸ்’ கேட்டுவிட்டு,
“சார்... உங்க வாசகன் சார் நானு... ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருக்க முடியுமா?
என்னுடைய அறைக்குப் போய் உங்களோட புக் ஒன்னு எடுத்துட்டு வரேன். உங்க சைன்
போட்டுக் கொடுங்க...” எனச் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறான்.
திரும்பி வர அரைமணி நேரம் ஆகி விடுகிறது.
கமலஹாசனும் சுஜாதாவும் இருந்த இடத்திலேயே காத்திருக்கிறார்கள். வேர்த்து உடம்பெல்லாம்
வடிய புத்தகத்தை நீட்டுகிறான்(ர்) அந்த இளைஞன். அருகில் இருந்த கமல் சந்தோஷத்துடனும்
ஆச்சர்யத்துடனும் இந்தச் சம்பவத்தைப் பார்த்ததாக எஸ்.கே.பி கருணாவே தனது இணையப் பக்கத்தில்
பதிவிட்டிருக்கிறார்.
கருணாவை நெருக்கமாக ஒருசில சந்தர்ப்பங்களில் பார்த்ததுண்டு. அதில் வாஞ்சையுடன்
பார்த்த சந்தர்ப்பம் ஒன்றுண்டு. லெஸ்பியன், பை செக்சூவல் கண்டண்ட் உள்ள ‘ரமாவும்
உமாவும்’ கதையைப் பற்றி எழுத்தாளர் திலீப்குமாருடன் ஒருமுறை பேசிக்கொண்டு - சென்னை
புத்தகக் கண்காட்சியில் - வம்சி அரங்கைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தேன்.
“சார்... சார்...” என்ற குரல் கேட்டு இருவரும் அங்கேயே நின்றோம்.
‘எஸ். கே. பி’தான் ஓடி வந்துகொண்டிருந்தார். நான் ஒதுங்கி நின்றேன். அது
வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான அந்தரங்க நிமிடங்கள் என்றாலும் கருணா பேசியது
காதில் விழுந்தது.
“சார்... நான், உங்க வாசகன் சார்...” என்று ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ புத்தகத்தை திலீப்பிடம் கொடுத்தார்.
"தேங்க்யூ தேங்க்யூ..." என்றார் கூச்சத்துடன் சிரித்துக்கொண்டே திலீப்.
பெங்களூரில் இருந்த அதே ஆர்வமும் வாசகப் பிரியமும் கருணாவுக்கு
இன்றும் இருப்பது மகிழவேண்டிய ஒன்றுதான். பிரபஞ்சனிடமும் கருணா இதே
பிரியத்துடந்தான் இருக்கக்கூடும்.
இதைத்தவிர திருவண்ணாமலைக்கு சீனியுடன் சென்றிருந்த சமயங்களில்
ஓரிரு முறை தூர இருந்து, வம்சி பதிப்பகம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கருணா
பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மென்மையாகத் தனது கருத்துக்களை முன்வைப்பார்.
*****
-->
'இதுதமிழ்' தினேஷ் என்னைப் புனைவாக உலவ விட்ட பதிவில் பிரபஞ்சன் கதையைக்
குறித்தும், அதைப் படமாக்கியவர் குறித்தும் கருணா முன்வைத்த கருத்துக்குப் பிரபஞ்சன்
காட்டமாக மறுப்பு சொல்லி இருக்கிறார் போல. இதெல்லாம் இலக்கியத்தில் நடப்பதுதானே.
“சிறுகதையின்
இறுதி வரியைத் துண்டித்து முடிவை பார்வையாளன் வசமே விட்டுவிட்ட வகையில்
ஒளிப்படமாக்கியவர் வென்றுவிட்டார். அந்த இடத்தில் பிரபஞ்சன் தோற்றுவிட்டார்” எனச்
சொன்னது மட்டும் அரைகுறையாய்க் காதில் விழுந்தது என தினேஷ் பதிவு செய்திருக்கிறார்.
கருணா பேசியதை அரைகுரையாகக் கேட்டுவிட்டு
தினேஷ் அழுத்தமாகத் தனது பதிவை முன்னெடுத்தது சரியில்லை என்றே தோன்றுகிறது.
ஒருமுறை கேணி கூட்டத்தில் கி.
ராஜநாராயணனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்கள்:
“உங்களோட கதையின் சில பகுதிகளைச்
சினிமாவில் எடுத்திருக்கிறார். பாலு மகேந்திரா கூட ஒரு கதையைப் படமாக்கி
இருக்கிறார்... இதைப் பற்றி என்ன சொல்றீங்க?" எனக் கேணி கூட்டத்தில் கேட்கப்பட்டது.
“எழுத்து என்னோட இடம். படம் எடுக்கறது
அவங்களோட இடம். எழுத்து நின்னுச்சின்னா நான் ஜெயிச்சிட்டேன். என் எழுத்த விடப்
படம் நல்லா இருந்துச்சுன்னா படம் எடுத்தவனுக்கு ஜெயிப்பு. கடைசியில கலையம்சம்தானே
ஜெயிக்குது” என்று பதில் கூறினார்.
ஒரு கதை படமாக்கப்பட்ட விதம் குறித்து கருணா தனது கருத்தை ஒளிவு மறைவின்றி
முன்வைத்ததில் தவறென்ன இருக்கிறது. பிரபஞ்சனும் ஒரு படைப்பாளி. அவருக்கும் தனது
படைப்பு குறித்து பொசசிவ் இருக்கும்தானே. கருணாவுக்குக் காட்டமாகப் பதில் சொல்லி
இருக்கிறார்.
இதில் விஷயம் என்னவெனில் கூட்டம் முடிந்தவுடன் பிரபஞ்சனும் எஸ்.கே.பி
கருணாவும் வாத விவாதங்களை மறந்து எஸ்.கே.பி கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில்
ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்ததாக நண்பர்கள் தெரிவித்தார்கள். இதெல்லாம் இலக்கியக்
கூட்டத்தில் நடப்பதுதானே. இதுபோன்ற வாள்வீ ச்சுகள் இலக்கியத்தில் சாதாரணம்தானே.
இதில் கருணாவை அட்டாக் செய்வதில் என்ன இருக்கிறது.
மேலும், ‘அறம்’ புத்தகத்தையும், SKP கருணாவின் ‘கவர்னரின்
ஹெலிகாப்டர்’ தொகுப்பையும் SKP பொறியியல் கல்லூரியின்
ஊழியர்களுக்கு வலுக்கட்டாயமாகக் கொடுத்துவிட்டு சம்பளத்தில் பிடித்துக்கொண்டதாக
தினேஷ் - யாரோ ஒரு முன்னாள் SKP கல்லூரியின் துணைப் பேராசிரியர் - கூறியதாகக்
குற்றச்சாட்டை வைத்திருக்கிறான்.
திருவண்ணாமலையில்
ஒரு புத்தகக் கண்காட்சி போட்ட சமயத்தில் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும்
கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் - ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்கள் - புத்தகம் வாங்க ஊக்குவிக்கப்பட்டார்கள். கருணா இதுபோன்ற விஷயங்களில் மிக
உற்சாகத்துடன் செயல்படக் கூடியவர் என்பது இலக்கியச் சூழல் அறிந்த ஒரு விஷயம்தான்.
திருவண்ணாமலையிலும் புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். தனது
ஊழியர்களைப் புத்தகம் படிக்க வேண்டும், புத்தகம் வாங்க வேண்டும் என்று வலியுருத்தியது எந்த முறையில்
தவறாகும். இதை மற்ற கல்லூரிகள் எதுவும் செய்வதில்லை என்றுதானே நாமெல்லாம்
புலம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்ய முன்வரும் எஸ்.கே.பி போன்ற ஒன்றிரண்டு
கல்லூரிகளையும் விமர்சனம் செய்கிறேன் என்று தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவது எந்த
விதத்திலும் சரியில்லை.
தமிழ்
இலக்கியச் சூழல் கொண்டாடக் கூடிய பல எழுத்தாளர்கள் எழுத்துப் பணிக்காக எஸ்.கே.பி கல்லூரியின்
விருந்தினர் இல்லத்தைப் பயன்படுத்திக்கொண்டது எனக்கே தெரிந்த ஒன்றுதான்.
என்னுடைய
நண்பர் ஒருவர் எழுத்து சார்ந்து இயங்கிய போது ‘தேவைப்பட்டா எஸ்.கே.பி கஸ்ட் ஹவுஸ்ஸ
யூஸ் பண்ணிக்கோங்க. அண்ணக்கிட்ட சொல்லிட்டா கொடுத்துடுவாரு...’ என்று கருணாவின் நெருக்கமான
வட்டத்தில் இருக்கும் ஒருவர் எனது நண்பரிடம் தெரித்தபோது நான் பக்கத்தில்தான் இருந்தேன்.
இதையெல்லாம்
சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், ஆதாரமே
இல்லாமல் சக மனிதர் மீது அவதூரு கிளப்புவது தவறு. என் பெயரும் இதில் புனைவாகப் பயன்படுத்தப்பட்டு
இருப்பதால் எனக்குத் தெரிந்த விஷயங்களை முன்வைப்பது அவசியமாகிறது.
*******
கருணாவுக்கு
மன்னிப்பு கேட்டுப் பின்வருமாறு மின்னஞல் அனுப்பியிருந்தேன்:
Sub: ReG: கிருஷ்ண பிரபு - சென்னையிலிருந்து...
மை டியர் கருணா,
வணக்கம் நண்பரே. சங்கடத்துடனே இந்த மின்னஞ்சலைத் தட்டச்சு செய்கிறேன்.
உங்கள் கருத்துடன் நான் முரண்படும் இடங்கள் நிச்சயமாக உண்டு. எல்லாமும்
கருத்து சார்ந்து மட்டுமே. ஏற்கனவே உங்களை விமர்சித்தும் இருக்கிறேன். சேரனின் CH2 பற்றிய உங்கள்
கருத்துக்கு என்னுடைய விமர்சனப் பதிவு இது:
http://thittivaasal.blogspot. in/2014/07/c2h.html
http://thittivaasal.blogspot.
ஆனால், ஆதாரம் இல்லாத
தனிமனிதத் தாக்குதலுக்கு நான் முற்றிலும் எதிரானவன்.
‘இது தமிழ்’ தினேஷ் எனக்கு
நண்பர்தான். நல்ல பையனும் கூட. என்றாலும், அவன் உங்கள் சார்ந்து எழுதிய பதிவில்
எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இதை அவனிடமே சொல்லிவிட்டேன்.
திருவண்ணாமலைக்கு வந்திருந்தபோதும் உங்களிடம் நெருங்கி வந்து பேசியதில்லை.
உங்களின் செல்பேசி எண்ணும் என்னிடம் இல்லை. இருந்திருந்தால் உங்களை அழைத்து
மன்னிப்பு கேட்டிருப்பேன்.
ஆகவே, தினேஷ்
எழுதியதில் எனக்கு உடன்பாடு இல்லை என முகநூல் தகவலில் தெரிவித்து இருக்கிறேன்.
எனக்குக் கொஞ்சமும் சமந்தமே இல்லாத விஷயம் இது. சீனிவாசனிடமும், ஷபியிடமும் இது
பற்றிச் சொல்லி விளக்கம் அளித்திருக்கிறேன்.
சக வாசகராக உங்கள் மீது எனக்கு எப்போதும் பிரியம் உண்டு.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்பில் இருப்போம்.
தொடர்பில் இருப்போம்.
அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
கிருஷ்ண பிரபு,
சென்னை.
நண்பர் பிரபு,
டிவிட்டரில் அந்தக் கட்டுரையை அந்தத்
தளத்தை நடத்துபவரே (எழுதியவரும் அவரே என அறிகிறேன்) எனக்கு குறிப்பிட்டு
அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் தான் எனக்கு அந்தக் கட்டுரைக் குறித்து
தெரியும். இல்லையெனில், அது கண்ணில்
பட்டிருக்க வாய்ப்பில்லை.
எனது பண்பு நலன்கள் என்னை
அறிந்தோர்க்குத் தெரியும். நேரடியாக ஆயிரம் குடும்பங்களுக்கு சம்பளம் கொடுக்கும்
அளவில் தொழில்கள் நடத்தும் வாய்ப்புப் பெற்றவன் ஆதலால், எனக்கு அந்தக் கடமையும் பொறுப்புமே
முதன்மையானது.
வாசிப்பும், எழுத்தும் எனது தனிப்பட்ட ரசனைக்கானது.
இதில் நிகழும் சிக்கல்கள் அந்த ஆயிரம் குடும்பங்களை பாதித்து விடக்கூடாது என்பதில்
எப்போதுமே தெளிவாக இருப்பேன்.
புத்தாண்டு பரிசாக புத்தகம் அளிப்பவர்
அயோக்கியனாகவும், அறம் போன்ற
புத்தகத்தை (காசு கொடுத்தோ! பரிசாகவோ!) பரணில் போட்டு வைத்திருப்பவர் நண்பராகவும்
காணும் ஒரு கண்ணுக்கு நான் மட்டுமல்ல! எப்போதுமே, யாருமே நிஜத்தை உணரவைக்க முடியாது.
புத்தாண்டு பரிசு என அச்சிட்டு, முன்னுரையும் எழுதி, கூட்டம் அமைத்து எனது ஆசிரியர்களை
அழைத்து அறம் புத்தகம் பரிசளித்து விட்டு, பிறகு அதற்கான பணத்தை சம்பளத்தில் பிடித்தால் என்னைக்
குறித்து அவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கூச்சம் கூட இல்லாமல் தொழில்
நடத்துபவர் இலக்கியம் படித்து, எழுதி, உரையாடுவதில் எந்தப் பயனும் இல்லை.
எப்படியாகினும், எழுதியவர் கற்பனைப் பாத்திரத்தைக்
கொண்டோ, அல்லது பணியிழந்த
எதோ ஒரு ஆசிரியரின் பொய்யை நம்பியோ இதை எழுதியிருக்கலாம்.
ஆனால், எனது பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதால், குற்றச்சாட்டை நிரூபிக்கும்
முழு பொறுப்பும் அவருக்கே உண்டு.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க நண்பர்கள்
வலியுறுத்திகின்றனர். எழுதியவர் இளைஞர் என்பதால் அவர் எதிர்காலம் கருதி
தாமதிக்கிறேன். ஓரிருநாளில் முடிவெடுக்க உத்தேசம்.
எப்படியாகினும், நீங்கள் அதற்காக வருந்தும் அவசியம்
இருப்பதாக நான் கருதவில்லை. ஒரு நண்பராக, வாசகராக என்னைக் குறித்து கவலைப்பட்டதற்கும், அந்தத் தவறினை சரி செய்ய முயற்சி
எடுத்தமைக்கும் எனது நன்றி.
‘ஆதாரம் இல்லாத தனிமனிதத் தாக்குதல்’ என்ற புரிதல் உங்களை எனது மனதுக்கு
மேலும் நெருக்கமாக்குகிறது.
மகாத்மாவையே விமர்சனத்துக்கு உட்படுத்தும் நமது
ஜனநாயகத்தில் நான் உட்பட யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.
அதே நேரத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லாத பொய்க்
குற்றச்சாட்டும், பிரபஞ்சன் நிகழ்ச்சி நடந்த ஒரு வருடம்
கழித்து திசைத்திருப்பி எழுதும் உள்நோக்கமும் நிச்சயம் கண்டிக்கத் தக்கவை..
திருத்தத் தக்கவை.
சட்டப்படி திருத்துவோம்.
அன்பிற்கு நன்றி.
-->
எஸ்கேபி. கருணா
******
குறிப்பு: இப்பதிவுக்குப் பின்னூட்டமோ விவாதமோ தேவையில்லை. இப்பதிவு புரிதலுக்கு மட்டுமே. தெரிந்தோ தெரியாமலோ என் பெயரும் இந்த ஆதாரமற்ற தனிமனிதத் தாக்குதலில் அடிபட்டதால் கருணாவிடம் நான் மன்னிப்பு கேட்டதை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இப்பதிவு. அவரும் புரிந்துகொண்டார்.
கருணாவுக்கு அன்பும் நேசமும்.